எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 01

அத்தியாயம் 01

வானம் முழுவதும் கருமேகங்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. இரவு அடித்து பெய்த மழை இப்பொழுது தூறலாக மாறியிருந்த போதிலும் நிலத்தை உலர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டது இயற்கை.

இந்த ரம்யமான பொழுதில் பாடத்திட்டத்துக்கான குறிப்புகளை எடுத்து முடித்த சுதா ப்ரியா மடிக்கணினியை மூடி வைத்தாள்.

வெள்ளை நிற ஷர்ட் மற்றும் சாம்பல் நிற ஆபீஸ் பான்ட் அணிந்து இருந்தவள் கூந்தலை கொண்டை போட்டு இருந்தாள். காதுகளிள் சின்ன தோடுகளுடன் கையில் சாதாரண கைகடிகாரம் அவ்வளவே அவளது அலங்காரம்.

சில்லென்ற காற்று அவள் முகத்தில் பட ஜன்னலை நோக்கி சென்றவளின் பார்வைக்கு கீழ்தளத்தில் இருக்கும் நீச்சல் தடாகமும் அதன் அருகில் இருக்கும் கல்லிருக்கைகளும் கண்ணில் பட பழைய நினைவுகள் வந்து நிழலாடியது.

மூன்று வருடங்களுக்கு முன் இதே கல்லூரியின் கடைசி நாளில் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அடிக்கடி அவளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் அருணை வட்டமிட்டது.

அருணை தவிர மற்ற அனைவருக்கும் அவளுக்கு அவன் மேல் பிடித்தம் இருப்பது தெரியும்.

இந்தக் காட்சியை கவனித்த பரத் “உனக்கு தான் அவன புடிச்சி இருக்குல்ல. போய் சொல்லு, இதுக்கு அப்புறம் எப்போ மீட் பண்ணுவோம்னு யாருக்குமே தெரியாது. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாத ப்ரியா” என்று நண்பியின் மனதை புரிந்த நண்பனாக கூறினான்.

அவளுடைய உடல் மொழியிலேயே அவளின் தயக்கம் வெளிப்பட அதைக் கண்டுக்கொண்டவன் “என்னமோ பண்ணு” என்று கோபித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டான்.

நண்பனின் கோபம் புரிந்தாலும் அமைதியாக இருந்தவளை மற்ற நண்பர்களும் தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்றனர்.

தலையை கவிழ்ந்து கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் காதுகளில் கேட்டது அவள் மனம் கவர்ந்தவனின் குரல்.

“ஹே ப்ரியா, ஏதோ பேசணும்னு சொன்னியாமே?” என்று அவன் சொன்னதும் கண்ணிரண்டும் வெளியே வரும் அளவுக்கு பயத்தோடு நண்பர்களைத் தேட அவர்களோ தூரத்தில் நின்று நடப்பதை கவனித்தனர்.

பரத்தை வாய்க்கு வந்தக் கெட்ட வார்த்தையால் மனதுக்குள் திட்டிக் கொண்டவள் அருணை எப்படி சமாளிப்பது என்று விளங்காமல் முழித்தாள்.

“ப்ரியா என்ன ஆச்சு?” என்று அவன் கேட்டதும் முதலில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டவள் தன் அருகில் இருக்கும் இடத்தைக் காட்டி அமரும்படி கூறினாள்.

அருண் அமர்ந்ததும் அவன் முகம் பார்த்தவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க தொடங்கியது.

மனதை ஒருநிலைப்படுத்தியவள் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறிவிட முடிவெடுத்தாள்.

“அருண் ஐ ஹேவ் எ கிரஷ் ஓன் யூ (i have a crush on you)” என்று அவள் கூறியதும் அவளை பார்த்து முறுவல் பூத்தவன், “ஆக்சுவலி ப்ரியா… ஐ ஹேவ் கிரஷ் ஓன் சம்வன் எல்ஸ். வேறொரு பொண்ண புடிச்சிருக்கு” என அவன் கூறிட உள்ளே வருத்தமாக இருந்தாலும் அதை வெளியே காட்டாது சிரித்துக்கொண்டே “சாரி எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா இப்படி சொல்லி இருக்க மாட்டேன்” என்று அவள் விளக்க முற்பட அவளை பேசவிடாமல் இடைமறித்தவன் “இல்ல பரவால்ல இதெல்லாம் நினைச்சு நீ ஆக்குவடா ஃபீல் பண்ணிக்காத. லெட்ஸ் கன்டினியூ டு பி குட் ஃப்ரண்ட்ஸ் (lets continue to be good friends)” என்று அவளிடம் கூறி எழுந்து சென்றுவிட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன் நடந்ததெல்லாம் யோசித்து பார்த்தவளுக்கு இப்பொழுது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பாக இருந்தது.

படிப்பு முடிய அதே கல்லூரியில் துணை ஆசிரியராக சேர்ந்தவள் கடந்த ஒரு வருடமாக பேராசிரியராக பணிப்புரிகிறாள்.

ப்ரியா ஜன்னல் வழியாக நீச்சல் தடாகத்தை பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட ஆர்த்தி அவள் தோள் மேல் கை வைக்க திரும்பினாள்.

“என்ன மேடம் பழைய நினைவுகளா?”என்று ப்ரியாவை கலாய்க்க, “ம்” என்று கூறினாள் அவள்.

ஆர்த்தியும் ப்ரியாவும் ஒன்றாக படித்து ஒன்றாக வேலை செய்வதால் இருவருக்கும் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரியும்.

ஆர்த்தி நண்பியின் முகத்தை ஆவலாக பார்த்து, “கேஸ் வாட்… நம்ம பேச்சுக்கு (batch) ரியூனியன் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள் உற்சாகமாக.

“ரியூனியனா இன்னும் ஃபோர் இயர்ஸ் கூட கம்ப்ளீட் ஆகல. இதுல எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?” என கேட்டாள் ப்ரியா.

“தெரியல மேனேஜ்மென்ட் ஏதோ பேசிட்டு இருந்தது மட்டும் கேட்டேன். சரி சரி எனக்கு கிளாஸ்க்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன் பாய்” என்று கிளம்பினாள் ஆர்த்தி.

ஆர்த்தி கிளம்பியதும் மேசை மேல் கலைந்துக் கிடந்த காகிதங்களை ஒழுங்குப் படுத்தி வைத்துக்கொண்டிருந்தவளுக்கு அழைப்பு வருவதை ஓசையால் தெரியப்படுத்திய கைபேசி தன் இருப்பைக் காட்டியது.

இணைப்பை இணைத்ததும், “ப்ரியா ஜோசியர் கிட்ட போயிட்டு வந்துட்டோம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடலான்னு சொன்னாரு” என்று அவளின் தாய் கூறவும் அதற்கு அவள் சரி என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தாள்.

“என்னடி நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன் அமைதியா இருக்க” என்று கேட்க, “வேற என்ன சொல்லணும்” என்று கேட்ட மகளை என்ன செய்தால் தகும் என்று தோன்றியது அவருக்கு.

“உன்ன வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. இந்த வார கடைசியில் உன் பெரியப்பாவுக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை யாரோ இருக்காராம். உன்ன பாக்க வரலாமான்னு கேட்டாரு. நீ என்ன சொல்ற?“ என்று அவர் சொல்ல அதற்கும் சரி என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

கடிகாரத்தில் மணி 11 என்று காட்டவும் மற்ற நினைவுகள் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வகுப்பை நோக்கி சென்றாள்.

*****

“கௌதம் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. இன்னும் மூணு வாரத்துல கல்யாணம். நீ கோர்ட்டுக்கு மெஷர்மெண்ட் கூட கொடுக்கல. என்ன நெனச்சிட்டு இருக்க? நீ பண்றது எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல அவ்வளவு தான் சொல்லுவேன்” என்று காணொளி அழைப்பில் இருந்த மகனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

கௌதம் வீட்டுக்கு செல்ல பிள்ளை. ஆறடி உயரம் வளர்ந்தவன் என்றாலும் அவன் அன்னைக்கு எப்பொழுதும் அவன் கைக்குழந்தையே.

“அம்மா தயவு செஞ்சு இப்படி கத்தாதிங்க. நான் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல வீட்டுக்கு வந்த பிறகு பாத்துக்கலாம்” கௌதம் தன்மையாக கூற அவர் கோபத் தீயில் எண்ணெய் ஊற்றியது போல மேலும் பொங்க ஆரம்பித்தார்.

“ஹாஸ்பிட்டல் முடித்து வீட்டுக்கு வந்த உடனே உன் பிரெண்ட்ஸ் பாக்க போற. நைட் ரொம்ப லேட்டா தான் வருவ, அப்புறம் காலைல நான் எழுந்துக்கறதுக்கு முன்னாடியே ஹாஸ்பிடல் ஓடிடுற. இதுல நீ என்கிட்ட வீட்ல பேசிக்கலாமுன்னு சொல்றியா?” என்று அவர் கூற அருகில் இருந்த அவரது தங்கை மகள் ஆராதனா அண்ணன் திட்டு வாங்குவதை ரசித்து கொண்டு இருந்தாள்.

ஈஸ்வரிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால்தனது தங்கை மகளை கூடவே வைத்திருப்பார். அதனால் பார்ப்போருக்கு எப்போதுமே ஆராதனா அந்த வீட்டின் கடைக்குட்டியாகத் தான் தெரிவாள்.

“ஏய் நீதானே அம்மா கிட்ட நான் இன்னும் கோர்ட்டுக்கு மெஷர்மென்ட் கொடுக்கலைன்னு மாட்டி விட்ட?” என்று தங்கையிடம் அவன் பாய, “அவளை ஏன் திட்டுற உண்மையை தானே சொன்னா” என்றார் ஈஸ்வரி.

“அண்ணா நீ ரொம்ப மோசம். இப்போ எல்லாம் நீ நாங்க சொல்ற எதையுமே கேக்குற இல்ல. காலைல கூட நீ சரியாவே சாப்பிடல. பெரியம்மா எவ்வளவு ஃபீல் பண்றாங்க தெரியுமா? கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்னை பாக்க வருவியோ என்னவோ?” என்று தங்கையும் சேர்ந்து குறை பாட, இருவரையும் பார்த்து முறைக்க முயற்சி செய்தவன் சிரித்துக்கொண்டே, “சரி இன்னைக்கு மெஷர்மெண்ட் கொடுத்துடறேன் போதுமா?” என்று கூறியவன் காணொளி அழைப்பை நிறுத்திவிட்டு நோயாளிகளை பார்க்க தயாராகினான்.

மதிய உணவை சாப்பிட கேன்டீன் சென்றுக்கொண்டிருந்த கெளதம் நார்மல் வார்டு கடந்து செல்லும் போது, தன் அன்னையை மாதிரியே அவரது மகளை திட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தான்.

“இப்பதான் உனக்கு கல்யாண யோகம் வந்திருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. அதுக்குள்ள இப்படி போய் காலை ஒடச்சிட்டு வந்து நிப்பியா?” மாப்பிள்ளை வீட்டினர் நாளை பார்க்க வரும்போது இப்படி காலை உடைத்துக் கொண்டாளே மகள் என்ற வருத்தத்தில் அவளைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார் தாரணி.

“அம்மா ஸ்கூட்டில வரும்போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான். பெரிய அடி எல்லாம் இல்ல. டாக்டர் கட்டுப் போடும் போது கொஞ்சம் பெருசா போட்டு விட்டுட்டாரு. நாளைக்கு வீட்டுக்கு போயிடலாம்னு கூட சொல்லிட்டாரு. சோ தயவு செஞ்சு கத்தாதிங்க மா” என்று தாயிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

“அத நீ சொல்லாத. டாக்டர் சொல்லட்டும் அப்ப நம்புறேன்” என்று மகளிடம் கூறியவர் டம்ளரில் ஜூசை ஊற்றி மகளிடம் கொடுத்தார்.

இவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த கௌதம் ப்ரியாவின் கட்டில் அருகே வந்தவன் அவளின் டைக்னோசிஸ்(diagnosis) ரிப்போர்ட்டை எடுத்து பார்வையிட்டான்.

கௌதம் அணிந்திருந்த வெள்ளை கோர்ட்டை பார்த்ததுமே அவன் வைத்தியன் என்று விளங்க ப்ரியாவை பரிசோதிக்க வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார் தாரணி.

உண்மையில் ப்ரியா கூறுவது போல் அவளுக்கு பெரிதாக அடிபட்டிருக்கவில்லை என்று தெரிந்ததும் அவள் அன்னையை பார்த்து “உங்க பொண்ணுக்கு கால்ல சின்ன அடி தான் பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல. நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு போயிடலாம்” என்று அவன் கூற மகளின் உடல் நிலை குறித்து கலக்கமாக இருந்தவரின் முகம் கௌதம் சொன்னதை கேட்டு தெளிவு பெற்றது.

தக்க சமயத்தில் வந்து தன் அன்னையின் வசுவுகள் இருந்து காப்பாற்றிய கௌதமை பார்த்து சத்தம் வராமல் இதழ் அசைத்து அவள் நன்றி சொல்ல கண்ணை முடி திறந்தவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.


தொடரும்...
 
Last edited:
Top