எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 02

அத்தியாயம் 02

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் மணப்பெண் அலங்காரத்தில் தயாராகிக் கொண்டிருந்தாள் ஆராதனா.


ஒப்பனை அலங்காரம் செய்பவர், “மேடம் ரெட் ஷேட் லிப்ஸ்டிக் போடலாமா? இல்ல நுயுட் ஷேட் லிப்ஸ்டிக் போடலாமா?” என்று அவள் விருப்பத்தை கேட்டு அதற்கேற்ப நடந்து கொண்டிருந்தார்.

தங்கை மகளைக் காண அறைக்குள் கௌதமோடு வந்த ஈஸ்வரி அவள் அலங்காரத்தை பார்த்து ஒப்பனை கலைஞரை பாராட்டிக் கொண்டிருக்க, ஆராதனா அவள் அண்ணன் அருகில் வந்து அவனுடைய கோர்ட்டை சரியாய் இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தாள்.

கோர்ட் சூட் திருப்தியாக இருக்கவும், “பாத்தியா அண்ணா இதுக்கு தான் நான் அப்பவே உன்ன டைலர் கிட்ட போக சொன்னேன். இவ்ளோ பெர்பெக்ட் ஆன கோர்ட் போய் மெசர்மென்ட் குடுத்தா தான் கிடைக்கும்” என்று கூறினாள்.

அறையின் கதவைத் திறந்துக்கொண்டு வந்த அஸ்வின் ஈஸ்வரியின் மூத்த மகன், “கல்யாணம் உனக்கு, இவனுக்கு இல்லை முதல்ல போய் உன்னோட அலங்காரத்தை முடிச்சிட்டு வா. மகேஷ் அங்க ரெடி ஆகிட்டார்” என்று ஆராதனாவிடம் கூறியவன் கையோடு கௌதமை அழைத்துச் சென்றான்.

ஹாலின் அலங்காரங்களும் மின்விளக்குகளும் மணமக்கள் குடும்பத்தின் செல்வ செழிப்பை எடுத்துக்காட்டியது.

ஈஸ்வரியும் அவர்களின் தங்கை அருணாவும் அண்ணன் தம்பியான சக்கரவர்த்தி மற்றும் விஷ்வாவை திருமணம் செய்து கொண்டனர்.

ஈஸ்வரிக்கும் சக்கரவர்த்திக்கும் இரண்டு மகன்கள் அஸ்வின் மற்றும் கௌதம். அருணாவுக்கும் விஷ்வாவுக்கும் ஒரே ஒரு மகள் ஆராதனா.

அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரி படித்து முடிந்ததும் அஸ்வினும் இவர்களோடு இணைந்து கொள்ள, கௌதம் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவன் விருப்பப்படியே மருத்துவம் படிக்க வைத்தனர். இப்பொழுது தனியார் மருத்துவமனையில் வைத்தியனாக பணிபுரிகிறான்.

பணத்துக்கு குறைவே இல்லாததால் அவர்கள் வீட்டு இளவரசியின் திருமணத்துக்கு அனைத்துமே பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தனர்.

தங்கையின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த விருந்தினர்களை கவனித்துக்கொண்டு அவர்களுக்கான மதிய உணவு தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தனர் அண்ணன்கள் இருவரும்.

ஆராதனாவின் அம்மா அருணா பம்பரம் போல் ஹாலை சுற்றியவர் ஓய்வு இல்லாமல் வேலையாட்களிடம் வேலை ஏவி கொண்டிருந்தார்.

வயலட் நிற புடவை அணிந்து காதில் பெரிய ஜிமிக்கி மிதமான ஒப்பனையில் அழகாய் மங்கை ஒருத்தி ஒரு ஓரமாக தனியாக அமர்ந்திருந்ததைக் கண்டதும் அவள் அருகில் சென்றார்.

“வணக்கம் மா. நீங்க மாப்பிள்ளை வீடா? பொண்ணு வீடா?” என்று அவர் கேட்க, “ஹலோ ஆண்டி, நான் மாப்பிள்ளையோட ஸ்கூல் ஃப்ரெண்ட்” என்று தன்னை அறிமுகப் படுத்தினாள் அவள்.

தனியாக இருப்பதால் அவள் பேச்சுத் துணைக்கு யாராவது கிடைப்பார்களா என்று ஹாலை சுற்றி தேடியவர் கண்களுக்கு அகப்பட்டான் கௌதம்.

நேராக கௌதமிடம் சென்றவர், “கௌதம் அந்த வயலட் சாரி கட்டி இருக்க பொண்ணு இருக்கா இல்ல… அந்த பொண்ணுக்கு வெல்கம் ஜூஸ் கொடுத்துட்டு பேசிட்டு இரு. நான் மாப்பிள்ளையையும் ஆராதனாவையும் மேடைக்கு அழைச்சிட்டு வர போறேன்” என்றவர் அங்கிருந்து கிளம்பிட சித்திசொன்ன வயலட் நிற புடவை அணிந்தப் பெண்ணை கண்டதும் ஆச்சரியத்தோடு அவள் அருகில் சென்றான்.

தன் எதிரே ஆறடியில் கருப்பு நிற கோட் சூட் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து தலை முடிக்கு ஜெல் தடவி பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கும் கௌதமை பார்த்தாள் ப்ரியா. பார்த்ததும் ஹாஸ்பிடலில் தன் அன்னையின் திட்டில் இருந்து காப்பாற்றிய வைத்தியன் என்று புரிந்ததும் அவனைப் பார்த்து பொன்சிரிப்பை உதிர்த்தாள்.

“நீங்க ஆராதனா ஃப்ரெண்டா?” என்று கேட்டவன் அவள் அருகே அமர்ந்து கொண்டான். அவள் இல்லை என தலையாட்ட, “அப்போ விஷ்வா சித்தப்பாக்கு (அருணாவின் கணவர்) தெரிந்தவர்களா ?” என்று கேட்டான்.

மறுபடியும் இல்லை என்று தலை ஆட்டியவள் “நான் மாப்பிள்ளையோட ஸ்கூல் ஃப்ரெண்ட்” என்றாள்.

“ஓ அப்படியா... சித்தி வந்து என்னை உங்களை கவனிக்க சொன்னதும் நான் பொண்ணு வீடுன்னு நினைச்சிட்டேன்” என்றவன் வெயிட்டர் ஒருவரை அழைத்து அவளுக்கு பழச்சாறு கொண்டு வருமாறு பணித்தான்.

பழச்சாறு வந்ததும் அதை அவள் பக்கம் நகர்த்தியவன், “இப்போ கால் எப்படி இருக்கு?” என்று நலம் விசாரித்தான்.

“இப்ப கால் ஓகே தான். வர்க் கூட போக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்யூ நல்ல நேரம் அன்னக்கி நீங்க வந்து என்னை எங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்தினிங்க” என்று மனதார நன்றி கூறினாள்.

“ஒரு சின்ன உதவிக்கு எல்லாம் எதுக்கு தேங்க்யூ சொல்றீங்க. அப்ப நீங்க ரொம்ப திட்டு வாங்கிட்டு இருந்தீங்க. அதுதான் என்னால முடிஞ்ச உதவியைசெஞ்சேன். நீங்க எங்க வர்க் பண்றீங்க?” என்று கேட்டு பேச்சை வளர்க்க தொடங்கினான்.

கௌதமுக்கு இயல்பாகவே அந்நியர்களிடம் அதிகம் பேசும் பழக்கமில்லை கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு அமைதியாகி விடுவான். ஆனால் இன்றோ தன்னுடைய இயல்புக்கு மாறாக அவளுடன் பேச்சை வளர்த்து கொண்டு இருந்தான்.

இருவரும் ஒரு கட்டத்துக்கு மேல் பொது விஷயங்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் பற்றி பேச அரை மணி நேரம் அவர்களுக்கு தெரியாமலே கழிந்தது.

தங்கை மேடைக்கு வந்ததை கூட கவனிக்காமல் ப்ரியாவிடம் உரையாடிக் கொண்டிருந்த மகனை கண்ட ஈஸ்வரி தன் தங்கை அருணாவிடம் ப்ரியாவை சுட்டிக்காட்டி யார் என்று விசாரித்தார்.

மாப்பிள்ளை பெண்ணை கவனிப்பதில் கௌதமை மறந்த அருணா அவன் இன்னும் அவள் அருகே இருந்து பேசிக் கொண்டிருப்பதை உலக அதிசயமாக கருதியவர், “என்னக்கா இது நம்ம கௌதமா? நான் ஏதோ பேச்சுக்கு அந்த பொண்ணு கிட்ட பேச சொன்னா. இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு இருக்கான். இவன் யார்கிட்டயும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச மாட்டானே” என்று அக்காவிடம் வினவினார்.

“அது தான் எனக்கும் புரியல. அந்த பொண்ணு நம்ம மாப்பிள்ளை மகேஷ் பிரண்ட் னு தானே சொன்ன?” என்று மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டவர் மனதில் குறித்துக் வைத்து கொண்டார்.

பஃபே ஆரம்பித்ததும் ப்ரியாவுக்கு துணையாக சேர்ந்து சென்று உணவருந்தினான் கௌதம்.

இந்தக் காட்சியை கௌதமின் தந்தை சக்கரவர்த்தியும் அண்ணி ஸ்ரேயாவும் நம்ப முடியாமல் பார்த்தனர்.

கர்ப்பிணியான ஸ்ரேயா அவளின் மாமியாரை தேடிப்பிடித்து தான் கண்ட காட்சியை விவரிக்க, ஈஸ்வரி அவரும் தன் பங்குக்கு தான் கண்டவற்றை கூறினார்.

இப்படி தன்னை கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரியாமல் ப்ரியாவோடு சுவாரசியமாக உரையாடி கொண்டிருந்தான் கௌதம்.

உணவருந்தி முடிந்ததும் நேரமாவதாக கூறிய ப்ரியா மணமக்களோடு புகைப்படம் எடுக்க சென்றபோது அவளுடனே வந்த கௌதம் மேடையிலே ஏறாமல் கீழே நின்று கொள்ள, புகைப்பட கலைஞர் மூவராக புகைப்படத்துக்கு நிற்பது நன்றாக இருக்காது என்று பேசிக்கொண்டு புகைப்படம் எடுக்க மகேஷ் மேடையில் நின்ற வண்ணம் கௌதமை மேடைக்கு வருமாறு செய்கை செய்ய அவனும் மேடை ஏறினான்.

கௌதம் தங்கையின் அருகே நின்று கொள்ள, நண்பன் மகேஷின் அருகில் ப்ரியா நிற்க புகைப்படம் எடுக்கப்பட்டது.

*************************************

“அக்கா நம்ம அவசரப்படுறோமோன்னு தோணுது. கௌதம் கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே. அந்த பொண்ணு வீட்ல இன்ஃபார்ம் பண்ணாம போறோம் ஏதாவது தப்பா நினைச்சுட்டாங்கனா?” என்று அருணா ஈஸ்வரியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

ஆராதனாவின் திருமணம் முடிந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தங்கைக்கு அழைத்து மகேஷின் மூலம் ப்ரியாவின் விலாசத்தை தெரிந்து கொண்டார்.

காலையில் தங்கையை அவர் வீட்டுக்கு சென்று சம்பந்தம் பேசுவதற்கு அழைத்து வந்து விட்டார்.

“இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அந்தப் பொண்ணு மகேஷ் கிளாஸ்மெட்டுனு சொன்ன. எப்படியும் அந்த பொண்ணுக்கு வரன் பாக்காம இருக்கமாட்டாங்க. நம்ம லேட்டா போய் மிஸ் பண்ணிடக் கூடாது இல்ல. அதனால ரொம்ப யோசிக்காம வா” என்று கூறிய ஈஸ்வரி வாங்கி வைத்த பழங்களையும் இனிப்பு வகைகளையும் எடுத்துக்கொண்டு இருவரும் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர்.

இட்லிக்கு மாவரைத்துக் கொண்டிருந்த தாரணி வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டதும் கையை கழுவி துண்டால் துடைத்துக் கொண்டு வந்து கதவை திறந்தார்.

வாசலில் நின்ற புதியவர்களை யார் என்று புரியாமல், “யார் நீங்க?” என்று கேட்டார்.

“நாங்க உங்க பொண்ணு பிரியாவை பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” என்று அவர்கள் கூறியதும் தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

இருவரையும் உள்ளே அழைத்து காபி கொடுத்து உபசரித்தவர் நேராக சென்று மகளுடைய அறையைத் தட்டினார்.

கல்லூரியில் இன்று வகுப்புகள் இல்லை என்பதால் வீட்டில் தான் இருந்தாள் ப்ரியா. ஓய்வு நாள் என்றதும் நல்ல உறக்கத்தில் இருந்தவள் அன்னை கதவு தட்டும் சத்தத்தில் எழுந்து வந்தாள்.

“என்னம்மா இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ். இன்னைக்கு வந்து தூங்கவிடாமல் கதவைத் தட்டுறியே…” என்று தூக்கத்தை கலைத்த ஆதங்கத்தில் கூறினாள்.

“நான் ஒன்னும் பண்ணல. நீ தான் ஏதோ பண்ணி வச்சிருக்க. உன்ன தான் பொண்ணு பாக்க வந்திருக்காங்க” என்று தாரணி கூறியதும் அன்னையிடம் எரிந்து விழத் தொடங்கினாள், “ஏன்மா இப்படி சொல்லாம கொள்ளாம பொண்ணு பார்க்க கூப்பிட்டு இருக்கீங்க. கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” என்று கத்தினாள் அவள்.

“வேணாம் ப்ரியா நானும் வயசு பொண்ணை திட்டக் கூடாது என்று பார்க்கிறேன். நீயே உன்னை பொண்ணு பார்க்க கூப்பிட்டு இப்ப என்னை புடிச்சு திட்டுறியா?” என்று அவள் தாய் கூறவும் தான் இது அவருடைய வேலை இல்லை என்று புரிந்தது அவளுக்கு.

“அம்மா சத்தியமா நான் யாரையும் வர சொல்லலம்மா.” என அன்னையிடம் சரணடைந்தாள்.

“சரி யாருன்னு தெரியல. நீ முதல்ல டிரஸ் மாத்திட்டு கீழ வா” என்றவர் மகளை மேலிருந்து கீழ் வரை பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

வீட்டுக்கு போடும் உடையிலிருந்து சுடிதாருக்கு மாரியவள், தலையை இழுத்துப் பிண்ணிக்கொண்டு கீழே சென்றாள்.

ஒப்பனை ஏதும் இல்லாமலே மகாலட்சுமி போல் காட்சியளித்த ப்ரியாவை அருணா மற்றும் ஈஸ்வரிக்கு மிகவும் பிடித்து விட இந்த சம்மதத்தை விடவே கூடாது என்று மனதுக்குள் முடிவு செய்தார் ஈஸ்வரி.

ஆராதனாவின் திருமண வரவேற்பில் ப்ரியாவை பார்த்தது, கௌதம் பிரியாவும் சிரித்து பேசியது, ஒன்றாக உணவருந்தியது என்று எல்லாவற்றையும் கூறி பெண் கேட்க, கணவரும் மகனும் வீட்டில் இல்லை வீட்டில் இருக்கும் அனைவரிடம் கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறி இருவரையும் வழி அனுப்பி வைத்தார் தாரணி.

தொடரும்...
 
Top