ஜீயோனா
Moderator
அத்தியாயம் 03
பல்கனியில் நின்று வீதியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் யோசனை வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.
ஈஸ்வரியும் அருணாவும் கிளம்பியதும் தாயின் அர்ச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்த்தியின் வீட்டுக்கு வந்து விட்டாள்.
கையில் காபி கப்புகளோடு வந்த ஆர்த்தி ஒன்றை தோழியிடம் கொடுத்துவிட்டு அவளும் காபியை பருகத் தொடங்கினாள்.
“இப்படியே இங்கே நின்னுட்டு இருக்க போறியா…வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?” என்று கேட்டாள் ஆர்த்தி.
“எனக்குன்னு தான் எங்கிருந்து வர்றாங்களோ தெரியல ஆர்த்தி. சும்மா ஒரு பையன் கிட்ட பேசுனதுக்கு கல்யாணம் பண்ணிக்க கேட்டு வந்திருக்காங்க. அவங்க போனதுமே அம்மா முகத்தை நீ பார்க்கணுமே. நான் சொன்னத நம்பினாங்களா இல்லையான்னு கூட எனக்கு தெரியல. நான் பேசாம நைட் இங்க தங்கிக்கட்டுமா?“ என்றாள் ப்ரியா.
ப்ரியாவை பார்க்க ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் மற்றொருபுறம் பாவமாக இருந்தது ஆர்த்திக்கு.
“நீ வீட்ல தங்குறதெல்லாம் பிரச்சனை கிடையாது. ரகு ஆபீஸ் முடிஞ்சு வந்துருவாரு. இன்னைக்கு நைட் ரெண்டு பேரும் ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணினோம். அதுதான் யோசிக்கிறேன்“ என்று ஆர்த்தி கூறியதும் தோழியை கஷ்டப்படுத்துகிறோமோ என்று யோசித்தவள் பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே நுழைந்ததுமே அவள் கைப்பேசி சினுங்க அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ஹலோ ப்ரியா, கெளதம் பேசுறேன்.ஐ அம் ரியலி சாரி வீட்ல ஒரு சின்ன கன்ஃபியூஷன் ஆயிடுச்சு. எனக்கு சொல்லாமலே அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. நாளைக்கு உங்கள மீட் பண்ணலாமா,ஆர் யூ ப்ரீ?” என்றான் கௌதம்.
கௌதம் சந்திக்க கேட்டதும் என்ன சொல்வது என்றே அவளுக்கு புரியவில்லை. ஒருமுறை அவனை சந்தித்ததற்கே பெண் கேட்டு வந்து விட்டார்கள். இன்னொரு முறை சந்தித்தால் என்ன ஆகுமோ. என்று அவள் மூளை அவளுக்கு எச்சரிக்கை செய்ய. மனமோ என்னதான் சொல்கிறான் என்று கேட்போம் என்று நினைத்தது.
அவனிடம் சந்திப்பிற்கான நேரத்தையும் இடத்தையும் கூறிவிட்டு அலைபேசி அழைப்பை துண்டித்தாள்.
“யாரடி அது போன்ல?” என்று கேட்டவாறு வந்து சோபாவில் அமர்ந்தாள் ஆர்த்தி.
“கௌதம்”
“என்ன சொல்றாரு சார்?”
“மீட் பண்ணனும்னு கேக்குறான்”.
“பார்த்து டி ஒரு வாட்டி மீட் பண்ணதுக்கே அவங்க அம்மா கல்யாணம் பேச வந்துட்டாங்க”
“நீ வேற என்னை பயமுறுத்தாதடி”
“உன்ன பயமுறுத்தணும்னு சொல்லல. எதுக்கும் ஜாக்கிரதையா இருக்க சொல்றேன். நல்ல பையனா இருந்து பேசி பிடிச்சிருந்தா நல்லது தான்”
“அவன் பேசி கூப்பிட்டது பார்த்தா கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு கூப்பிட்ட மாதிரி இல்ல. ஜஸ்ட் ஒரு சாரி மீட் அப் மாதிரி தான் தெரியுது”
“அதை போன்லயே சொல்லலாமே... எனக்கு என்னமோ அவனுக்கு உன்ன புடிச்சிருக்கு நினைக்கிறேன்”
“அத பத்தி எல்லாம் இப்ப எனக்கு யோசிக்க டைம் இல்ல. நான் வீட்டுக்கு கிளம்புறேன்”
“நல்ல முடிவு, வீட்டுக்கு போ. நான் ஒரு ஒன் வீக் இருக்க மாட்டேன். எனக்கு ஒரு டெக்ஸ்ட் அனுப்பு” என்று ஆர்த்தி கூற வீட்டுக்கு கிளம்பினாள் ப்ரியா.
வீட்டுக்கு வந்ததுமே அறைக்கு சென்று அமைதியாக இருந்து கொண்டாள்.
தாரணி இரவு உணவை சாப்பிடுவதற்காக வீட்டினரை அழைக்க அனைவரும் சாப்பாடு மேசையில் கூடினர்.
சிவகுமார் வங்கி மேனேஜராக பணிபுரிகிறார். தாரணி மற்றும் சிவகுமார் 27 வருட திருமண வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள் தான் அரவிந்த் மற்றும் ப்ரியா. அரவிந்த் ப்ரியாவை விட ஒரு வயது மூத்தவன். நண்பர்களோடு சேர்ந்து கார் ஷோரூம் ஒன்று இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறான். சிவகுமார் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அவர்களுக்கு ஒன்று என்றாள் தாங்க மாட்டார். தாரணிக்கும் குழந்தைகள் மேல் பாசம் உள்ளது ஆனால் அதை வெளிப்படையாக காட்டி செல்லம் கொடுத்து கெடுக்க கூடாது என்று நினைப்பார்.
சாப்பாடு மேசையில் உணவுப் பதார்த்தங்களை திறந்து பார்த்த அரவிந்தன் முகம் சுருங்கியது.
“என்னம்மா இன்னைக்கும் பூரியா? நான் உங்களை இட்லி தானே செய்ய சொன்னேன்” என்று சினுங்கினான்.
“நேத்து தானடா உனக்கு இட்லி செய்தேன். இன்னைக்கு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி செய்தேன்” என்று தாரணி கூறியவும் உதட்டை குவித்து அம்மாவுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிய ப்ரியா பூரியையும் கிழங்கு மசாலாவையும் ரசித்து உண்ண தொடங்கினாள்.
“ஆமா உனக்கு உன் பொண்ணு தான் ஒசத்தி” என்று தங்கையை பார்த்து முறைத்துக் கொண்டு கூறியவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இருந்தான்.
“உனக்காக தாண்டா காலையில் இட்லி மாவு அரைத்தேன். நாளை காலையில் இட்லி தான் சரியா?இப்ப சாப்பிடு” என்று மகனுக்கு பரிமாறினார்.
உணவை பரிமாறிக் கொண்டிருந்தவரின் கையைப் பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார் சிவகுமார்.
“எல்லாருக்கும் அவங்களுக்கு என்னென்ன வேணுமோ அதை நாங்களே எடுத்து போட்டு சாப்பிட்டுப்போம். நீயும் எங்களோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு” என்று மனைவியை அதட்டி சாப்பிட வைத்தார் அந்த பாசமான கணவர்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “இன்னைக்கு காலைல ரெண்டு பேர் வந்து ப்ரியாவ பொண்ணு கேட்டுட்டு போனாங்க” என்று கணவர் மற்றும் மகனின் முகத்தை பார்த்துக்கொண்டு கூறினார்.
அன்னை திடீரென்று விஷயத்தை போட்டு உடைப்பார் என்ற எதிர்பார்க்காதவள் தலையை நிமிர்த்தாமலே சாப்பிட்டு முடித்தாள்.
“அவ சின்ன பொண்ணு” என்றார் சிவகுமார்.
“ஜோசியர் மட்டும் இவளுக்கு கல்யாணம் யோகம் போன வருஷமே இருக்குன்னு சொல்லி இருந்தா இந்த நேரம் ஒரு குழந்தைக்கு அம்மாவாவே இருந்திருப்பா இவ உங்களுக்கு சின்ன குழந்தையா? நீங்க வேணா பாருங்க இவளுக்கு கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் இயர் அனிவர்சரி கைல குழந்தையோடு தான் இருக்கப் போறா” என்றார் தாரணி.
அவர் காலையில் நடந்து முடிந்ததை பற்றி முழுதாக கூறியதும். சிவகுமாரின் முகத்தையே அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். எந்தவிதமான முக பாவத்தையும் வெளிப்படுத்தாமல், “பொண்ணு ஒன்னு வீட்ல இருந்தா நாலு பேர் வந்து கேட்க தான் செய்வாங்க. நீ அவங்க ஹஸ்பண்ட் ஓட நம்பர் குடு அவங்க ஃபேமிலி பத்தி விசாரிச்சு பார்த்து முடிவு பண்ணுவோம்“ என்றவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கழுவ சென்றார்.
தந்தையின் பின்னாலே சென்ற ப்ரியா, “அப்பா என் மேல எந்த தப்பும் இல்லை. அவங்க தான் நான் அந்த பையன் கூட ஃப்ரென்ட்லியா பேசுனதை தப்பா நினைச்சுட்டு...” என்று தந்தைக்கு விளக்கம் அளிக்க முயற்சித்தவளை பார்த்து சிரித்தார் சிவகுமார்.
“எனக்கு என் பொண்ணு மேல நிறையவே நம்பிக்கை இருக்கு. அவ என்னை எப்பவுமே தலை குனிய விட மாட்டா” என்று கூறியவர் கையை கழுவி துண்டால் துடைத்தவர் மகளின் தலையை பாசமாகக் கோதினார்.
பேச்சை மாற்றுவதற்காக, “சரி அப்பாவோட புது ஹேர் ஸ்டைல் பத்தி சொல்லவே இல்ல?” என்று தன்னுடைய புது ஹேர்க்கட்டை காட்டிக் கேட்டார்.
சிவகுமாருக்கு எப்பொழுதும் தன்னை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். காலையிலே தவறாமல் உடற்பயிற்சி செய்பவர். உணவில் கூட கடுப்பாடாக இருப்பார். வெளியில் அவ்வளவாக வாங்கி உண்ணும் பழக்கம் அவருக்கு கிடையாது. அரவிந்தும் சிவகுமாரும் ஒன்றாக தெருவில் நடந்தால் அண்ணன் தம்பியா என்று கேட்கும் அளவுக்கு அவர் இளமையாக தெரிவார்.
சூப்பரா இருக்கு என்று கூறியவள் அன்றைய நாள் எப்படி சென்றது என்று உரையாடிவிட்டு அறைக்கு தூங்க சென்றாள் ப்ரியா.
சிவக்குமார் வீட்டில் எப்போதுமே 7 மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டு 10 மணிக்கெல்லாம் உறங்கி விட வேண்டும். அதற்கு நேர் மாறாக இருந்தது சக்ரவர்த்தியின் குடும்பம்.
வீட்டுக்கு ஏழு மணிக்கு வந்த கௌதம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.
ஸ்ரேயா இரவு உணவை உண்டு விட்டு வெட்டி வைத்த ஆப்பிள் துண்டுகளை மாமியாரின் அன்பு மிரட்டலின் காரணமாக கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அண்ணியின் அருகே வந்து அமர்ந்தவன் ஆப்பிள் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். கொழுந்தன் வந்ததும் நிம்மதி அடைந்த அண்ணி ஆப்பிள் தட்டை அவன் பக்கம் நகர்த்தி வைத்துவிட்டு பாலை எடுத்து குடித்தாள்.
எட்டு மணிக்கு சரியாக வீட்டுக்குள் நுழைந்தனர் சக்கரவர்த்தியும் அஸ்வினும். அவர்கள் உடை மாற்றி வந்ததும் சக்கரவர்த்தி, அஸ்வின் மற்றும் கௌதம் மூவரும் ஒன்றாக உணவருந்தினர்.
மருமகளை உன்ன வைப்பதற்காகவே அவளுடன் சேர்ந்தே சாப்பிடுவார் ஈஸ்வரி. வேலைக்காரர்கள் இருந்தாலும் கூட கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தானே பரிமாற வேண்டும் என்று நினைப்பார் ஈஸ்வரி.
சாப்பிடும்போது அன்னையை முறைத்துப் பார்த்துக் கொண்டே உணவருந்தினான் கௌதம்.
அஸ்வினும் சக்கரவர்த்தியும் பிசினஸ் விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“இருந்தாலும் அஸ்வின் நீ அவசரப்பட்டு இருக்க கூடாது. உன்கிட்ட எவ்வளவு திறமை இருந்தாலும் உன்னோட அவசரம் அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம பண்ணிடுது. எந்த விஷயம் பண்ணும் போதும் பொறுமையா பண்ண கத்துக்கோ” என்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து மகனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.
தந்தை சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டு இருந்தான் அஸ்வின்.
இது வழமையாக நடப்பது தான்.
“டேட், அம்மா இன்னைக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?” என்று கௌதம் ஆரம்பித்ததும் மனைவியின் முகத்தையே கவனித்தார் சக்கரவர்த்தி.
ஈஸ்வரி அமைதியாக இருக்கவும் தொடர்ந்து கௌதமே, “அன்னைக்கு நான் ரிசப்ஷன்ல பேசிகிட்டு இருந்த பொண்ணு வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டிருக்காங்க” என்று அவன் அன்னையை மாட்டி விட,
அவரோ, “வெரி குட் ஈஸ்வரி. நானே உன் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்” என்று மனைவியை பாராட்டினார் அவர்.
ஒன்றுமே புரியாமல் அவன் தந்தையை பார்க்க, “பின்ன என்னடா நீ வாழ்க்கையில அஞ்சு நிமிஷத்துக்கு மேல யார்கிட்டயுமே பேசி நாங்க யாருமே பார்த்ததில்லை. அப்படின்னா உனக்கு அந்த பொண்ணைபுடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்” என்று அவன் தந்தை கூறவும் அப்பொழுதுதான் அவனுக்கே அந்த விஷயம் உறுத்தியது.
தந்தை கூறியது வைத்துப் பார்த்தால் தனக்கும் அந்த பெண்ணை பிடித்திருக்கின்றதா என்ற யோசனையோடே உறங்கச் சென்றான் கௌதம்.
தொடரும்...