ஜீயோனா
Moderator
அத்தியாயம் 05
வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தான் கௌதம்.
பாதி வழியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் அன்னையிடமிருந்து அலைபேசி அழைப்பு வர எடுத்துப் பேசினான்.
குரலில் கனிவோடு, “கண்ணா அம்மாவோட சுகர் டேப்லெட் மறக்காமல் வாங்கிட்டு வரியா?” என்று மகனிடம் கேட்டார் ஈஸ்வரி.
அன்று காலையில் தான் வைத்தியரை கண்டு விட்டு வந்திருந்தார் ஈஸ்வரி. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அதற்காக வைத்தியரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்று பார்ப்பது வழக்கம். அப்படி சென்றிருந்த வேளையில் மருத்துவமனையில் மருந்தை வாங்காமல் மறந்து வீடு திரும்பி இருந்தார்.
காலையில் இருந்து மருத்துவமனையில் வேலை புரிந்த களைப்பிலிருந்தவனுக்கு அன்னையின் கவனக்குறைவான செயல் கோவத்தை கிளப்பியது. இருந்தும் கோவத்தை அடக்கிக் கொண்டு, “சரி பிரிஸ்கிரிப்ஷன் அனுப்புங்க வாங்கிட்டு வரேன்”என்றான்.
கடந்த ஒரு வாரமாகவே வீட்டில் வேலை அதிகம் ஈஸ்வரிக்கு. நான்கு நாட்களுக்கு முன் தான் வீட்டில் ஸ்ரேயாவுக்கு வளைகாப்பு நடத்தி அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். அது முடியவும் வீட்டின் தினசரி வேலைகளும் உடல் உபாதைகளும் சேர்ந்துக்கொள்ள எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தார் அவர். இப்பொழுது மகன் வைத்தியர் தந்த மருந்து சீட்டை கேட்கவும் எங்கே வைத்தோம் என்று கூட அவருக்கு நினைவில்லை.
இதை சொன்னால் மகன் திட்டுவான் என தெரிந்தும்வேறு வழி இல்லாமல், “அது எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லையே” என்றார் அப்பாவியாக.
அடக்கி வைத்திருந்த கோவம் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “சரி வாங்கிட்டு வந்துடறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
காரின் டேஷ்போர்டில் இருந்த அவனுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை (prescription pad) எடுத்தவன் அன்னையின் மாத்திரையை எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த மருந்து கடையில் நிறுத்தினான்.
கடையனுள்ளே நுழையும் போதே ப்ரியா அவள் அன்னையோடு நிற்பதை கண்டவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க அவர்கள் அருகே சென்றான்.
அரவிந்த் பெரியப்பாவை ஞாயிறு வரவழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் அண்ணனிடம் அடுத்த வாரம் வர சொல்லி கூறியிருந்தார் சிவகுமார்.
ப்ரியாவுக்கு வரன் பார்ப்பதில் தாரணி ஆர்வமாக இருப்பதால் அப்பாவும் மகனும் ஒரு அளவுக்கு மேல் அதை எதிர்ப்பது இல்லை.
மகளுக்கு வரன் பேசி நிச்சயதார்த்தம் செய்த பின் ஒரு இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறி தாரணி இருவரையும் சம்மதிக்க வைத்திருந்தார்.
ஒரு வாரம் கழித்து ஊரிலிருந்து வந்த சிவகுமாரின் அண்ணன் கஜேந்திரன் அவர்கள் வீட்டிலே தங்கிவிட்டார். மாலையில் கஜேந்திரனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கவும் அவருக்கு தேவையான மருந்தை வாங்குவதற்காக வந்திருந்தார்கள் தாரணியும் ப்ரியாவும்.
ப்ரியா தன் கையில் வைத்திருந்த மருந்து சீட்டை வழியில் எங்கோ தவற விட்டிருக்க அதற்கும் அன்னையிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள்.
இருவரையும் நெருங்கியவனுக்கு நிலைமை புரிந்தது.
அவள் மருந்து சீட்டை தொலைத்து விட்டாள் என்று தெரிந்ததும், ‘என் அம்மாவுக்கு ஏத்த மருமக நீ தான்’ என்று மனதுக்குள் கூறிக்கொண்டபடி, “ஹாய்” என்று ப்ரியாவை பார்த்து கூறியவன் தாரணியிடம் திரும்பி உங்களுக்கு ஏதாவது “உதவி வேண்டுமா?” என்றான்.
அவர்களும் மருந்து சீட்டு தொலைந்த கதையை கூற, “உங்களுக்கு மருந்து பேர் ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்.
மருந்து பேர் ஞாபகம் இல்ல ஆனா “பெரியப்பாக்கு கால் பண்ணி கேட்கலாம்” என்று கூறிய ப்ரியா பெரியப்பாவுக்கு அழைத்து வழக்கமாக அவர் பயன்படுத்தும் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தின் பெயரை கேட்டு தெரிந்துக்கொண்டாள்.
மருந்தின் பெயரை கூறியதும் தன்னிடமிருந்த சீட்டில் அதை எழுதியவன் கடைக்காரரிடம் சீட்டையும் பணத்தையும் கொடுத்து மருந்தை பெற்றுக் கொண்டான்.
தாரணியின் கையில் கஜேந்திரனின் மருந்தை கொடுத்தவன் அவர்கள் வற்புறுத்தியும் பணத்தை வாங்காமல் ஒரு புன்னகையோடு இருவரிடமிருந்து விடை பெற்று காரின் அருகே சென்றான்.
காரின் இருக்கையில் அமர்ந்து கௌதம் வண்டியை ஸ்டார்ட் செய்ய காரின் கதவைத் தட்டினாள் ப்ரியா.
அவளுக்குப் பின் தூரத்தில் தாரணி நின்று கொண்டிருக்க கார் கண்ணாடியை கீழ் இறக்கியவன் புருவத்தை ஏற்றி இறக்கி “என்ன” என்று கேட்டான்.
மெல்லிய குரலில் அன்னைக்கு கேட்காத வன்னம், “கல்யாணத்தை பத்தி கேட்டீங்க இல்ல. வீட்ல மாப்பிள பாக்குறாங்க” என்று நாணத்தோடு கூறியவள் கையில் இருந்த காசை அவன் கையில் வைத்து விட்டு கிளம்பினாள்.
அவள் பேச்சில் ஸ்தம்பித்து போய் நின்றவன் அவள் காசை கையில் திணித்துவிட்டு செல்லவும் குழம்பிப்போனான்.
வீட்டுக்கு வந்ததிலிருந்து உடனே மாப்பிள்ளை வீட்டில் பேசி பெண் பார்க்க அழைக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தார் கஜேந்திரன்.
வீட்டில் பெரியப்பா பார்க்கும் மாப்பிள்ளையை விட கௌதமை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற முடிவில் இருந்தாள் ப்ரியா.
சொல்லி வைத்தாற் போல் கௌதமை மருந்து கடையில் கண்டதும் அவனிடம் பேச வேண்டும் என முடிவு செய்துக்கொண்டாள்.
பணத்தை வாங்காமல் அவன் மருந்தை கொடுத்து விட்டு சென்றதும் அன்னையின் கையில் இருந்த பணத்தை வாங்கியவள் அதை அவனிடம் கொடுத்துவிட்டு வருவதாக கூறி அவன் கார் அருகே சென்றாள். தாய்க்கு கேட்கக்கூடாது என்று குரலை தாழ்த்தி விஷயத்தை கூறிவிட்டு வந்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரியிடம் மருந்தை கொடுத்தவன் குளிக்க சென்று விட்டான்.
ப்ரியா பேசிவிட்டு சென்ற அர்த்தம் புரிந்ததும் மனசுக்குள் குத்தாட்டம் போட்டவன் குளிக்கும்போது கூட அன்னையை எப்படி தானாகவே மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு செல்ல வைப்பது என யோசித்தான்.
சாப்பாடு மேசையில் சக்கரவர்த்தியும் அஸ்வினும் அமர்ந்திருக்க அவர்களுடன் கௌதமும் இணைந்ததும் அனைவருக்கும் பரிமாற தொடங்கினார் ஈஸ்வரி.
தாயின் மூலமாகவே மறுபடியும் தன் திருமண பேச்சைஎப்படி ஆரம்பிப்பது என்று சிந்தித்து கொண்டு இருந்தான் கௌதம்.
மூளைக்குள் பல்ப் எரியவும், “அம்மா இன்னைக்கு அந்த பொண்ணை பார்த்தேன்”என்றான் மொட்டையாக,
“எந்த பொண்ணு?” என்றார் அவர்.
“அதுதான் எனக்கு பொண்ணு கிட்ட போனீங்களே அந்த பொண்ணு” என்றவன் தன் வேலை முடிந்தது என்பது போல உணவில் கவனமாக தொடங்கினான்.
மகன் தானே வந்து வம்படியாக அந்த பெண்ணை பற்றி பேசியும் சந்தேகம் கொள்ளாத அப்பாவி தாய், “ஆமாங்க நானும் மறந்தே போயிட்டேன். இவன் சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது. அந்த பொண்ணோட அப்பா நம்பர் என்கிட்ட இருக்கு. நீங்க ஒருவாட்டி பேசி பார்க்கிறீங்களா?” என்று கணவரிடம் கேட்டார் ஈஸ்வரி.
”சரி நீ நம்பர் கொடு நான் பேசி பார்க்கிறேன்“ என்றவர் உடனே சிவகுமாருக்கு அழைத்தார்.
”வணக்கம், நான் சக்கரவர்த்தி எஜி கன்ஸ்ட்ரக்ஷன் (AG constructions) கம்பெனி ஓனர் பேசுறேன். பேங்க் மேனேஜர் சிவகுமாருங்களா“ என்று கேட்டவரின் குரலில் தற்பெருமை ஜாஸ்தியாக இருந்தாலும் அதே நேரம் மரியாதையும் இருந்தது.
அந்தப் பக்கம் இருந்த சிவகுமார், ”நானே உங்களுக்கு கூப்பிடலாம்னு இருந்தேன். ஆனா நம்பர் எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன்” என்றார் தன்மையாக.
சிவகுமார் தன்மையாக பேசியதும், “அதனால என்ன. என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சக்கரவர்த்தி.
முதல்வாட்டி அண்ணன் மகளுக்கு வரன் பார்க்கும் நேரமே மகளுக்கு காலில் அடிபட்டது. இப்பொழுது மறுபடியும் அதே போல் அண்ணனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் சிவகுமாருக்கு அபசகுணமாக தோன்றியது. அதனாலேயே அந்த வரனை கைவிட சொல்லி கஜேந்திரனிடம் அவர் பேசிக் கொண்டிருக்க சரியாக அந்நேரத்தில் அழைத்திருந்தார் சக்கரவர்த்தி.
தானாக தேடி வரும் வரனை கைவிட விரும்பாமல், “அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொண்ணு பாக்க வர தோதுப்பாடுங்களா?” என்று சிவகுமார் கூற,
மனைவியிடம் கேட்டுவிட்டு சக்கரவர்த்தியும் சரி என்று கூறினார்.
நடப்பது அனைத்தையும் ஒரு நமட்டு சிரிப்போடு பார்த்த கௌதம் மனதுக்குள், ‘பிளான் சக்சஸ்’ என கூறிக்கொண்டான்.
தம்பியின் சிரிப்பை கண்டு சந்தேகப் பார்வையை அஸ்வின் வீச, கௌதம் முகத்தை சகஜமாகவைத்துக்கொண்டான்.
இரவு 9:00 மணிக்கு அவரவர் அறைகளில் அடுத்த நாள் வேலைக்கு செல்வதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்ததால் சக்கரவர்த்தி அழைத்ததை அறையில் இருந்த மனைவியிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டார் சிவக்குமார்.
ஒரு வாரம் நேரம் இருப்பதால் பொறுமையாகவே பெண் பார்க்கும் நிகழ்வுக்கான வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் மனைவியிடம் சேர்த்து சொன்னார்.
மருந்து கடையில் கௌதமை சந்தித்ததும் இப்பொழுது அவனின் பெற்றோர் அழைத்து பெண் கேட்பதும் வைத்து கௌதமிற்கு மகளைப் பிடித்திருக்கின்றது என்று புரிந்து கொண்டார் தாரணி.
காலையில் விஷயத்தை பிள்ளைகளுக்கு கூறலாம் என முடிவு செய்து இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.
விடிந்ததும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த மகளை பிடித்து அவர் விஷயத்தை கூற தாயிடம் முகத்தில் எந்த பாவனையும் காட்டாது அமைதியாக இருந்தாள்.
அவர் அந்த பக்கம் சென்றதும் கௌதமின் எண்ணை முதல்முறையாக பூரிப்போடு சேமித்து வைத்தவள் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.
விஷயம் கேள்விப்பட்ட கஜேந்திரனுக்கு தம்பியின் செயல் வருத்தத்தை அளித்தாலும் ப்ரியாவுக்கு தான் பார்த்த வரனை விட வசதியான குடும்பம் அமைந்து இருக்கிறது என்று தெரிந்ததும் சந்தோஷத்தோடு ஊருக்கு கிளம்பினார்.
நாட்கள் வேகமாக நகர்ந்து பெண் பார்க்கும் நாளும் வந்து சேர்ந்தது.
தொடரும்...