‘சமுத்திர விளையாட்டு பெட்டி எங்க போச்சு? யார் அதை எடுத்தது?’ என்று பல கேள்விகள் அனைவருக்கும் எழுந்தது. “நான் டைஸை போட்டுட்டு அதை என்னோட கையோடவே தான் எடுத்துட்டு வந்தேன். மழைக்கு நாம இங்க நிக்குறப்ப, இங்க நம்ம பக்கத்துல தான் பத்திரமா வெச்சிருந்தேன். ஆனா இப்ப காணோமே..” என்று அங்குமிங்கும் பார்த்த ஷிவன்யா அந்த கடற்கன்னியை நோட்டம் விட்டப்படியே சொன்னாள்.
“அதுக்கு எதுக்கு அவளை பார்க்கிற? அவ வந்ததுல இருந்து அங்க தான் இருக்கா..” என்று ப்ரதீப் கடற்கன்னிக்கு ஆதரவாக சொல்ல, “சரி விடுங்க பக்கத்துல நல்லா தேடிப்பாருங்க” என்ற ரங்கா அவனும் தேட தொடங்கினான். ஆனால் அந்த இருளில், மழையின் வேகத்திலும் சக்தியின் கையில் இருந்த டார்ச் வெளிச்சத்திலும் அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை.
அவ்வளவு நேரம் அடித்துக் கொண்டிருந்த புயல் காற்று சற்றே வலுவிழக்க தொடங்கியது. காற்று மிதமான வேகத்தில் வீச தொடங்கினாலும் மழை விடாமல் பெய்துக் கொண்டு தான் இருந்தது. அந்த நீச்சல் குளத்தின் கைப்பிடியில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் சௌந்தர்யம் என்னும் கடற்கன்னி.
“தேடுங்க.. தேடுங்கன்னா? இங்க ஒரு வெளிச்சமும் இல்ல..” என்று புலம்பியபடியே அங்கிருந்த மதுவால் நிறைந்த அட்டை பெட்டிகளை நகர்த்தியபடி ப்ரதீப் தேடினான்.
“நீ தான இந்த கருமத்தையெல்லாம் இங்க வர வெச்ச?” என்று அந்த அட்டை பெட்டிகளை சுட்டிக்காட்டியவள், “உன்னால தான் இப்ப தேடுற வேலையும் அதிகமாயிருக்கு” என்று விலோ மேலே பேசும் முன், “ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க!” என்ற அமரனின் அதட்டலில் இருவரும் முறைத்தப்படி நகர்ந்தனர்.
நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து மார்ட்டின் மற்றும் விக்டரும் கூட அந்த விளையாட்டு போர்டை தான் தேடிக்கொண்டிருந்தனர்.
**********
இங்கு கப்பலின் அடித்தளத்தில், ரிச்சார்டும் டேனியலும் ஜெனெரேட்டரின் அறையை வந்தடைந்தனர். ஆனால் அவர்களால் அங்கிருந்த ஜெனெரேட்டர் அறையை திறக்க முடியவில்லை. “இது லாக் ஆகியிருக்கு. இதோட கீ மாஸ்டர்(மார்ட்டின்) கிட்ட தான் இருக்கும். இவ்ளோ தூரம் வந்துட்டோம். எதையாவது பண்ணி திறக்கலாம்..” என்று சொன்ன டேனியல், ரிச்சார்டுடன் சேர்ந்து அந்த கதவை உடைக்க முயன்றான்.
எவ்வளவு முயன்றும் அவர்கள் இருவராலும் அதனை உடைக்க முடியவில்லை. எனவே, அந்த இருட்டில் அருகில் இருந்த அறையில் ஏதேனும் பொருள் கிடைக்குமா என இருட்டில் மெல்ல கைகளால் துழாவி பார்த்தனர். அங்கே அவர்களின் கைக்கு ஒரு தீயணைப்பு சிலிண்டர் தென்பட்டது. உடனே அதனை அங்கிருந்து கழட்டி அதனின் மூலம் ஜெனேரேடர் அறையின் கதவை திறக்க முயற்சித்தனர்.
வெகு நேர போராட்டத்திற்கு பின், அவர்கள் இருவரும் அந்த கதவை உடைத்து திறந்தார்கள். “ஒருவழியா திறந்துட்டோம்!” என்ற மகிழ்ச்சியுடன் இருவரும் அந்த அறைக்குள் மெல்ல நுழைந்தனர். அந்த அறை அவர்களுக்கு பரீட்சியமானது தான் என்பதால் இருட்டில் துழாவி பார்த்து யூகத்தின் அடிப்படையில் அனைத்து ஜெனரேட்டரையும் இயக்கிவிட்டனர். உடனே, அவ்வளவு நேரம் இருளில் மூழ்கியிருந்த கப்பல் கண்கூசும் வண்ணம் விளக்கொளியில் ஜொலித்தது.
**********
இங்கு மேலே திடீரென வந்த விளிச்சத்தில் அனைவரின் கண்களும் கூச, “யார் லையிட்ஸை போட்டது?” என கண்ணை தேய்த்தபடியே கேட்ட ஷிவன்யாவின் கேள்விக்கு, “யார் போட்டா என்ன? அந்த போர்ட்டை இப்ப ஈஸியா தேடலாம்” என்ற ப்ரதீப் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, “அதோ.. அங்க இருக்கே!” என்று நீச்சல் குளத்தின் பக்கத்தில் இருந்த சமுத்திரா பெட்டியை கைகாட்டினான்.
அதை பார்த்த அனைவரும் சற்று ஆசுவாசம் அடைந்தனர். “உஃப். கப்பல் ஆடுனதுல அங்க போயிருக்கும் போல. நான் போய் எடுத்துக்கிட்டு வரேன்” என மழை தண்ணீரால் சூழ்ந்திருந்த தலத்தில் நடந்து சென்றான் ரங்கா.
அந்த விளையாட்டு பெட்டியின் பக்கத்தில் சென்ற ரங்கா அதனை கையில் எடுத்ததும், அவன் நின்ற இடத்திலிருந்த மழை நீரால் அப்படியே ரங்கா உள்ளிழுக்கப்பட்டான். சுருக்கமாக சொல்லப்போனால் ரங்கா நின்ற இடம் புதைக்குழியாக மாறியிருந்தது. ‘இந்த இடம் மட்டும் எப்படி இப்படி மாறுச்சு?’ என்று திகைத்தவன் நண்பர்களை அதிர்ந்து பார்த்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,
அவனின் நிலையை பார்த்து பதறி அவனிடம் ஓடி வந்தனர். “எல்லாரும் அங்கேயே நில்லுங்க! இது உள்ள இழுக்குது. யாரும் கிட்ட வராதீங்க” என்று அடிக்குறளில் கத்திய ரங்கா அவனின் கையில் இருந்த பெட்டியை நண்பர்களை நோக்கி தூக்கிப்போட அதனை அப்படியே பிடித்த ஷிவன்யா ஓரமாக வைத்துக்கொண்டாள்.
அமர், ப்ரதீப், சக்தி மூவரும் சேர்ந்து ரங்காவிற்கு ஒருப்புறம் கைகொடுக்க முயன்றனர். மற்றொரு பக்கம் மார்ட்டினும், விக்டரும் கைகொடுத்தனர். ஆனால் ரங்காவால் அவர்களின் கரங்களை பற்ற முடியவில்லை. “கையை புடி ரங்ஸ். எப்படியாவது மேல வர ட்ரை பண்ணு..” என விலோ விசும்பியபடி சொன்னாள்.
அந்த குழி ரங்காவை கீழே இழுக்க, மேலே வர முயற்சி செய்துக்கொண்டிருந்த ரங்கா மூச்சு வாங்கியபடியே, “நானும் அதுக்கு தான டி ட்ரை பண்ணுற..” என்றான்.
“இது எப்படி இங்க வந்துச்சுன்னு தெரியல. கையை நல்லா நீட்டு டா எருமை” என்ற அமர் ரங்காவின் கையை பற்ற முயன்றான். ஆனால் யாராலும் ரங்காவின் கையை பற்ற முடியவில்லை.
மேலே வர முயன்ற ரங்காவால் இப்பொழுது சிறிதும் அசைய முடியவில்லை. அவனின் இடுப்பு வரை இறங்கிவிட இயலாமையுடன் அனைவரையும் பார்த்தான். “டேய் கையை நல்லா நீட்டு டா. டோன்ட் கிவ் அப் மேன்” என்ற அமர் தொடர்ந்து அவனின் கையை பிடிக்க முயன்றான்.
“இல்ல அமர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அந்த பாய்மரத்துல இருக்க கயிற எடுத்துட்டு வாங்க” என்று சக்தி சொன்னதும் விலோவும் ஷிவன்யாவும் வேகமாக சென்று அதனை எடுத்து வந்தனர்.
பின் அனைவரும் சேர்ந்து கயிறை ரங்காவிடம் போட்டனர். ரங்கா அதனை பற்றியவுடன் அவனை மேலிழுக்க முயன்றனர். ஆனால், அவர்களால் அவனை மேலே இழுக்க முடியவில்லை. இதிலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். இப்பொழுது ரங்காவின் நெஞ்சு வரை அந்த புதைகுளிக்குள் சென்றுவிட அனைவரும் கண்கள் கலங்க பதட்டத்துடனும் பயத்துடனும் அவனையே பார்த்தனர்.
அந்நேரம் யாரும் எதிர்பாராத வண்ணம் நீச்சல் குளத்தில் இருந்த கடற்கன்னி இரு கைகளை மட்டுமே ஊன்றி அங்கு வந்தாள். அவள் அந்த புதைக்குழியிலே இறங்க அவளை தடித்து பிடித்தான் ப்ரதீப். அவனை திரும்பி ஒரு பார்வை பார்க்க, பிரதீப் தானாகவே கைகளை விலக்கி கொண்டான்.
பின் அந்த புதைகுழியினுள் இறங்கிய கடற்கன்னி கைபிடித்து ஒரே இழுவையில் ரங்காவை இழுத்து மேலே போட்டாள். அதன் பின் அவள் மீண்டும் நீச்சல் குளத்தின் மேலே சென்று சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
அங்கு நடந்ததை அனைவரும் திகைப்புடன் பார்த்தனர். மேலே வந்த ரங்கா மூச்சு வங்கியபடியே அனைவரையும் பார்க்க, “ரங்ஸ்..” என்று அழுகையுடன் அவனை பாய்ந்தணைத்து கொண்டாள் விலோ.
“போதும் போதும்” என்று அவளை ரங்கவிடமிருந்து விலக்கினான் ப்ரதீப். “டேய் ரங்கா! உனக்கு ஒன்னுமில்லை தான?” என அனைவரும் அவனை நலம் விசாரித்தனர். ஒரு நொடி கண்ணை மூடி தன்னிலைக்கு வந்த ரங்கா, “ஒண்ணுமில்லை” என்றான் பதட்டம் நீங்கிய குரலில்.
“என்ன இருந்தாலும் ஏஞ்சல். ஏஞ்சல் தான். முதல்ல சக்தியை காப்பாத்தினாள். இப்ப ரங்கா. இந்த செயலை தான் செய்ய வந்திருக்குன்னு க்ளுல போட்டிருக்கும் போல..” என்று ப்ரதீப் யோசனையுடன் சொன்னான்.
பின் அனைவரும் ரங்கா விழுந்த இடத்தை பார்த்தனர். இப்பொழுது அது சாதாரண ஈரம் நிறைந்த இடமாகவே காட்சியளித்தது. அத்துடன் மழையும் படிப்படியாக குறைய தொடங்கியது. இருண்ட வானத்தையும் அந்த இடத்தையும் பார்த்த ஷிவன்யா, “மூழ்கவைக்கும் வல்லவன்னு அந்த குறிப்புல கடைசி லைன் வந்துச்சு. அது இதுதான் போல..” என்றாள்.
“அத்தாடி! அதுக்காக இப்படியா ஒரு குழியையா பறிக்கணும். அடுத்து ஆடலாம் வாங்க..” என்றபடி அமரன் எழுந்துகொள்ள, “பார்த்து வாங்கப்பா கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கு..” என்று சொல்லிக்கொண்டே எழுந்த ப்ரதீப் பின்னாடி பார்த்துவிட்டு, “இதோ அடுத்து ஒன்னு கிளம்பிடுச்சு” என்றான் தந்தியடிக்கும் குரலில்.
ப்ரதீப் கூறியதை கேட்டு திரும்பிய அனைவரும் திடுக்கிட்டனர். அங்கே அவர்கள் அனைவருக்கும் முன்பே ஒரு பெரிய முதலை வாயை பிளந்தபடி இருந்தது.
“முதலையோட வேலை முதல்லையே முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சா, மறுபடியும் அது என்ட்ரி கொடுக்குதே..” என்று விலோ கூற, அந்த முதலை அனைவரையும் நெருங்கிய படி ஊர்ந்து வந்தது.
அவர்கள் நின்றிருந்த மேல் தலத்தை அடுத்து கப்பலின் இரு முனைகளிலும் மேலே ஒரு தலம் இருந்தது. அதற்கு செல்ல படிகளும் இருந்தன. ஆனால் அதில் இத்தனை நபர்கள் இருக்குமளவு இடமில்லை. எனவே, இதற்கு மேல ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! என்ற நிலைக்கு வந்தனர். முதலையிடமிருந்து தப்பிக்க பின்னே சென்றுக் கொண்டே, “என்ன செய்வது?” என ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்தனர்.
ரங்காவை மேலெழுப்ப உபயோகித்த கயிற்றை பார்த்த ரங்காவிற்கு யோசனை ஒன்று வர மெல்ல அனைவரிடமும் சொன்னான். “டேய் பார்த்து டா. அதுகிட்ட மாட்டுனோம். நாம காலி..” என்ற ராங்க அந்த கயிறை எடுத்து அமரனிடம் கொடுத்தான்.
அமரன் அந்த கயிறை சுருக்கு கயிறாக மாற்றி, கோர பற்களால் நிறைந்திருந்த வாயை பிளந்தபடி நிமிர்ந்து ஊர்ந்தபடி அவர்களை நெருங்கிய முதலையின் வாய் அந்த கயிற்றில் அடங்குமாறு போட்டவன் அதனின் முடிச்சினை சுருக்கி கட்டிவிட்டான். அந்த கயிற்றின் மூடிச்சியினால் பிளந்திருந்த முதலையின் வாய் பசைத்தடவியது போல் மூடிக்கொண்டது.
முதலையின் பலமே அதன் வாய் தான். அதனின் வாயை மூடிவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அதனால் திறக்க முடியாது. அதனின் வாயை கயிற்றில் கட்டி வைத்ததனால், “இப்பொழுது ஆபத்தில்லை..” என அதனை நெருங்கிய அமரனும் ரங்காவும் சேர்ந்து தூக்கி கடலில் போட்டனர். ‘தொப்!’ என்ற சத்தத்துடன் கடலுக்குள் விழுந்த முதலை மெல்ல மெல்ல கடலின் உள்ளே அமிழ தொடங்கியது.
அதனை பார்த்துவிட்டு அப்படியே அந்த கைப்பிடியில் சாய்ந்து அமர்ந்தான் ரங்கா. அவனின் அருகே அனைவரும் கலக்கமாக அமர்ந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அனைவரும் சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்வினால் மேலும் சோர்வுற்றனர்.
இப்பொழுது மழை மொத்தமாக விடைபெற்றிருந்தது. அப்படியே கப்பலின் நிலையை சுற்றி பார்த்தனர், மழை நன்றாக அந்த கப்பலை கழுவி சென்றிருந்தது. மழை நின்ற பின்னும் அங்கங்கே சொட்டு சொட்டாக துளிகள் விழுந்தபடி இருந்தது. ஒரு மூலையில் “சமுத்திரா” விளையாட்டு பெட்டி இருந்தது.
அந்த கடற்கன்னியும் அவர்களை தான் பார்த்தது. மழையில் நனைந்ததனால் பெண்கள் இருவரின் உடையும் உடலோடு ஒட்டி இருக்க அதில் அவர்களுக்கு சற்று சங்கடமாகவும் இருந்தது. இருளில் ஒன்றும் தெரியாது இப்பொழுது வெளிச்சத்தில் சங்கடமாக இருந்தது. விலோவாவது கழுத்தை சுற்றி ஸ்கார்ஃ போட்டிருக்க ஷிவன்யா அணிந்திருந்த வேலை நிற உடை அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.
இருட்டாக இருந்தால் எதுவும் தெரியாது என்றெண்ணிய ஷிவன்யா, “இந்த லைட் இருக்கட்டுமா அமர்? இந்த வெளிச்சத்தை வெச்சி கடற்கொள்ளைக்காரங்க நம்மளை பின் தொடர்ந்து வந்தா என்ன பண்ணுறது?” என எப்படி சொல்வது என்று தெரியாமல் கேட்டாள்.
“இப்ப இந்த வெளிச்சம் இல்லனா, நம்மளால அந்த போர்டு எடுத்திருக்க முடியாது; ரங்காவையும் காப்பாதிருக்க முடியாது; எல்லாத்துக்கும் மேல அந்த முதலை வந்ததும் நமக்கு தெரிய வந்திருக்காது. சோ, இது இப்படியே இருக்கட்டும் ஷிவ்” என்றான் அமரன். இதற்கு மேல் எப்படி சொல்வது என ஷிவன்யா கைகளை கட்டியபடி அமைதியாகிவிட்டாள்.
ஆனால் பெண்களின் நிலையை புரிந்துக்கொண்ட ரங்கா அவனின் சட்டையை கழட்டி விலோவிற்கு கொடுக்க, விலோ அவளின் ஸ்கார்ஃபை ஷிவன்யாவிற்கு போர்த்தி விட்டாள். ‘இதுக்கு தான் ஷிவ் லைட்டை ஆப் பண்ண சொன்னாளா?’ என்றெண்ணிய அமர் மானசீகமாக கொட்டிக் கொண்டான்.
அனைத்தையும் கவனித்த ப்ரதீப், தனியுலகில் யோசனையுடன் இருந்த சக்தியை பார்த்துவிட்டு, “நீ என்ன சக்தி யோசிக்கிற?” என்றான் சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு.
“நாம தாமதிக்க கூடாதுன்னு இந்த கடற்கன்னி நம்மகிட்ட சொன்னா தான? நாம இன்னும் லேட் பண்ண பண்ண, ஏற்கனவே க்ளுல வந்தது எல்லாம் மறுபடியும் ஒன்னொன்னா வர தொடங்கும் போல..” என தெளிவான குரலில் கூறினான்.
“ஐயோ! அந்த வௌவால்லாம் மறுபடி வருமா?” என்று ப்ரதீப் அலற தொடங்கியதும்,
“இப்படி பேசி பேசி தான் நேரம் போகுது. கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க” என்று ப்ரதீப்பிடம் ஷிவன்யா சொல்ல,
ப்ரதீப் சிரிப்புடன், “நீ அந்த ஏஞ்சலை பற்றி தப்பா சொன்னதை நாங்க நம்பலனு கடுப்புல இருக்க தான?” என்றவன்
மீண்டும் அந்த கடற்கன்னியை ஒரு பார்வை பார்த்த ஷிவன்யா, “இப்பவும் எனக்கு அவங்க மேல சுத்தமா நம்பிக்கை இல்லை” என்றவள், “அடுத்து ஏதாவது வரதுக்குள்ள சீக்கிரமா போடு விலோ..” என்று விலோவின் கையை பிடித்து அந்த போர்ட் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.
“சும்மா இரு டா” என்று ப்ரதீப்பை கடிந்துக்கொண்ட அமரன் மற்றவர்களையும் பெண்களிடம் அழைத்துச் சென்றான்.
போர்டை இரண்டாக விரித்து வைத்த ஷிவன்யா விலோவின் கையில் பகடையை திணித்தாள். அதனை பதட்டத்துடன் வாங்கிய விலோ, அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்தாள்.
“என்ன விலோ? ரொம்ப பீல் பண்ணுற?” என்ற ப்ரதீப்பின் குரலில் பதில் கூட சொல்ல முடியாமல் தவிப்புடன் அதனை கையிலிருந்து உருட்டினாள். அது உருண்டு நான்கு என்று விழ, விலோவின் சிவப்பு நிற காயின் நான்கு கட்டங்களை தாண்டி எட்டில் சென்று நின்றது.
நானே பெரிய விளையாட்டு!
என்னிடமே உன்னுடைய விளையாட்டை காட்டுகிறாயா?
இதற்கான விளைவை நிச்சயம் நீ சந்திப்பாய்!
என்ற குறிப்பு குமிழுக்குள் மின்னி மறைந்தது. அதனை படித்த அனைவரும் விலோவை தான் கேள்வியாய் பார்த்தனர். ஆனால் பதில் கூற வேண்டிய மங்கையவளோ தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“இப்படி தான் வரும்னு உனக்கு முன்னாடியே தெரியுமா விலோ? அதுக்கு தான் டைஸை போடாம எங்க முகத்தையே பார்த்துட்டு இருந்தியா?” என்று ரங்கா சற்று சத்தமாகவே கேட்டான்.
“என்ன பண்ண விலோ?”
“நிமிர்ந்து பார்த்து சொல்லு?”
என்று ஆடவர்கள் அனைவரும் கேட்க, கலங்கிய கண்களால் அவர்களை பார்க்க முடியாமல் குனிந்தே இருந்தவளிடம் சென்ற ஷிவன்யா, “கொஞ்சம் அமைதியா இருங்க. விலோ என்னை பாரு..” என்று தோழியின் நாடியை பிடித்து நிமிர்த்தினாள். “என்ன பண்ணனு சொல்லு விலோ..” என்று மென்மையாக கேட்டாள்.
அவளின் கையை இறுக்கி பிடித்துக்கொண்ட விலோ, “ச..சக்திக்கு அடிப்பட்டப்ப நான் அந்த போர்டுல இருக்க காயின்ஸை எடுத்து விளையாட்டை கலைச்சு விட ட்ரை பண்ணேன். அப்படி பண்ணா விளையாட வேணாமேன்னு பண்ணிட்டேன். ஆனா அந்த காயின்ஸை என்னால போர்டுல இருந்து நகர்த்தவே முடியல. அப்பறம் அதை அப்படியே விட்டுட்டேன்” என்று கூறிவிட்டு நிமிர்ந்தவள் அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.
“அதுக்கு இப்படி பண்ணுவியா? எல்லாத்துலயும் நேர்மை வேணும் விலோ..” என்று ரங்கா விசாரணை கைதியை விசாரிப்பது போல் உருமினான்.
“போதும் விடு ரங்கா, இது ஒன்னும் உன்னோட போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இந்த விளையாட்டு இப்படி ஒரு வினையா மாறும்னு அவளுக்கு தெரியுமா என்ன?” என அமர் விலோவிற்கு ஆதரவாக பேசினான்.
அவளின் சூழ்நிலையை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடிந்தது. “தன்னால் தான் என்ற எண்ணம் மேலோங்கவே அப்படி செய்திருக்கிறாள்” என்று உணர்ந்தனர். ஆனால் இப்பொழுது அவளின் நிலையை கண்டு தவிக்கவும் செய்தனர்.
“இப்ப உனக்கு ஏதாவது ஆகிட்டா.. நாங்க என்ன பண்ணுவோம் விலோ?” என்று ஷிவன்யா கேட்டாள். அதற்கும் அமைதியாக இருந்தவளை தனியாக அழைத்து சென்றான் ரங்கா.
ரங்கா, விலோவை தன் கைவளைவிலே வைத்துக்கொண்டு, “இங்க பாரு விலோ..” என அவளின் கண்ணை பார்க்க முயன்றான். விளக்கின் வெளிச்சத்தில் கண்ணீர் நிறைந்த நங்கையவளின் விழிகள் பளபளத்தது.
“எதுக்கு இப்படி பண்ணனு கேட்க மாட்டேன். ஏதோ ஒரு விசை தான் நம்மள நகர்த்திட்டு இருக்குனு எனக்கு புரியுது. ஆனா, இது மாதிரி எடக்கு மடக்கா மறுபடியும் பண்ணாத டி. இது நம்ம பிரச்சனையை பெருசாக்க தான் செய்யும்” என அவளின் கன்னம் வருடி சொன்னான்.
“ஹ்ம்ம்..” என்று கண்கலங்க தலையசைத்து அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை அணைத்தபடி, “உனக்கு வித்தியாசமா எதாவது தெரிஞ்சா என்கிட்ட உடனே சொல்லணும்” என்றபடி அவளின் முதுகை வருடியவன், பெண்ணவளின் நுதலில் இதழ் பதித்தான்.
“மம்க்கும்..” என்று கனைத்தப்படியே அவர்களை நெருங்கிய ப்ரதீப், “போதும் சமாதான படுத்தினது. அடுத்து நான் போட போறேன் வாங்க..” என்று இருவரையும் அழைத்துவிட்டு அவர்களுக்கு முன்னாக நடந்து சென்றான். “வா போகலாம்” என விலோவை அழைத்துக்கொண்டு ப்ரதீப்பை பின் தொடர்ந்தான் ரங்கா. “கரடி..!” என்று ப்ரதீப்பின் முதுகை பார்த்தபடியே விலோ சத்தமாகவே முணுமுணுத்தாள்.
அதில் முன்னே சென்றுகொண்டிருந்த ப்ரதீப் நின்று திரும்பி, “நீ கரடினு சொன்னது எனக்கு கேட்டுடுச்சு..” என்று சொல்ல, “கேட்கணும்னு தான் சத்தமா சொன்னேன்..” என்ற விலோவிடம் மேலும் எதோ சொல்ல வந்த ப்ரதீப்பை தடுத்த ரங்கா, “டேய் போடா..” என்று அவனை முதுகைபிடித்து முன்னே தள்ளிவிட்டான்.
விலோவிடம் வந்த சக்தி அவளின் கையை பிடித்து, “உனக்கு எதாவது சின்னதா வித்தியாசமா தெரிஞ்சாலும் எங்ககிட்ட மறைக்காம சொல்லிடனும் விலோ” என்று அக்கறையை கண்டிப்புடனே வெளிப்படுத்தினான்.
அதற்கு சரி என்று தலையசைத்தவள் கண்களை துடைத்தப்படி ஷிவன்யாவின் அருகில் சென்று அமர, ஷிவன்யா அவளை அணைத்து விடுவித்தாள்.
**********
“இங்க எப்படி ரிசார்ட் இவ்வளவு தண்ணி வருது?” என மழையால் கப்பலின் கீழ் தலத்திற்குள் வந்துக் கொண்டிருந்த தண்ணீரை கடந்தபடியே மேல் தலத்திற்கு செல்லும் வழியில் வந்துக் கொண்டிருந்தார்கள் ரிச்சார்ட் மற்றும் டேனியல்.
“எதுவா இருந்தாலும் மேலே போனா தான் டேனி நமக்கு தெரியும்” என்று ரிச்சார்ட் பதில் கொடுத்தான்.
*********
அடுத்து விளையாடுவதற்கு பகடையை கையில் எடுத்தான் ப்ரதீப். எதோ மனதிற்குள் நெருடலாக தோன்ற அவனின் கைகள் நடுங்க தொடங்கியது. நண்பர்களின் முகத்தை பார்த்தவன் அந்த கடற்கன்னியையும் பார்த்துவிட்டு, “டேய் இது போட்டதும் எனக்கு என்ன ஆனாலும் விட்றாதீங்க டா..” என்று அச்சம் நிறைந்த குரலில் சொன்னான்.
அவன் குரலின் பயத்தை உணர்ந்த அமரன், அவனின் தேவையில்லாத பயத்தை போக்கும் பொருட்டு, “சென்டிமென்ட்டா பேசி கேவலமா நடிக்காத. ஒழுங்கா போடு..” என்று கூறியதும் கையில் இருந்த பகடையை உருட்டிவிட்டான் ப்ரதீப்.
இம்முறையும் ப்ரதீப்பிற்கு ஆறு என்றே பகடையில் விழ ஆறில் இருந்த ப்ரதீப்பின் பிங்க் நிற காயின் பன்னிரண்டில் சென்று நின்றது. அதனை பார்த்த விலோ, “ப்ரதீப், உனக்கு மறுபடியும் ஆறு வந்திருக்கு! அடுத்து நீ மூணு போட்டா நம்ம கேமே முடிஞ்சிடும். நாமலும் நம்ம உலகத்துக்கு போய்டலாம். என்ன க்ளூ வந்திருக்குன்னு படி” என்று குஷியாக சொல்லிவிட்டு நிமிர்ந்தவள் ப்ரதீப்பை காணாமல் திகைத்து விழித்தாள்.
ஏனெனில், பகடையில் ஆறென்று விழுந்த அடுத்த நொடியே காற்றில் காணாமல் மாயமாய் மறைந்திருந்தான் ப்ரதீப்!