அத்தியாயம் - 10
சாத்விகாவுக்கு கால்கள் இரண்டும் லேசாக வலித்தது. எங்கே அசைந்தால் சர்வேஷ் எழும்பி விடுவானோ என்று அமைதி காத்தாள். கீழே அமர்ந்தவாறு, பின் புறம் அப்படியே சாய்ந்தவள், எண்ணமெல்லாம் சற்று நேரத்திற்கு முன் இவள் அடியை அவன் வாங்கியதிலிருந்து சுழன்றது..
அடித்தவள் துடித்தாள். ஆனால் வாங்கியவன் அவளிடமிருந்து ஏதோ ஒன்று, வலிக்க வேண்டும் என்று நினைத்தான் போலும். அந்த அடி அவனது இதயத்தின் அடி வரை இனித்தது.
“நீ தானே அடிச்ச. ஆறுதலையும் நீயே சொல்லு!"
அவளைத் தன் இறுக்கமான அணைப்பில் அடக்க, முதலில் திமிறியவள், பிறகு தடுத்தாள், தன்னிலிருந்து அவனைப் பிரிக்க நினைத்தாள், அசைந்தான் இல்லை அவன்.
“விடுங்க! காட்டான்! ஹல்க்! மேல வந்து விழுகிறது நீங்க, ஆனா குறை மட்டும் பொம்பளைங்களச் சொல்றது. ஆம்பளைங்க எப்பவுமே சரியா இருக்காங்கனு நினைப்பு தானே?"
“என்ன ரிவெஞ்சாடி. பரவால்ல எடுத்துக்கோ, எடுத்துக்கோ!" என்றவன் தன் அணைப்பை இறுக்க,
வலுக்கட்டாயமாக, அவனைத் தன்னில் இருந்து பிரித்தாள். அவளும் அறிவாள். அவன் ஓங்கு தாங்கான உருவத்தை அத்தனை எளிதில் அசைத்து விட முடியாது என்று. இருப்பினும் அவள் அசைக்க முற்படுகிறாள் எனும் போதே, சர்வேஷ் இசைந்து கொடுத்தான்.
சாத்வி அப்படியே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுவற்றோரம் சரிந்து அமர்ந்தவள், விழிகளை மூடிக் கொண்டு நடந்த நிகழ்வின் தாக்கத்தின் விளைவில், ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.
எத்தனை நேரம் சர்வா அவளை இமை சிமிட்டாது பார்த்தான் என்று அவனே அறியான். பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான். ‘கண்கள் இதயத்தின் வாசல்!' என்று கவிஞர் பாடி வைத்ததை உண்மையாக்கினான். ஆடம்பர நங்கைகளில் காணாத அழகை, கலைந்த அந்த அஜந்தா ஓவியத்தில் அணு அணுவாக ரசித்தான். தன்னுள் அவள் வரி வடிவத்தை பொக்கிஷமாக அடக்கி வைத்துக் கொண்டான்.
அவனுக்கும் தெரியும்! கொட்டும் மழையாக அடித்துச் சாய்த்து விடும் தன் மூர்க்கமும், உணர்வுகளின் போராட்டத்தில் வாள் ஏந்தும் தன் வார்த்தைகளும், அவனை மட்டுமல்ல அவளையும் வதைக்கின்றன.
ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் கர்வமும், திமிரும் கட்டுப்படவும் விரும்ப வில்லை. அவன் நீண்ட கழுத்து லேசாக வலிக்க, அதை தடவிக்கொண்ட அவனுக்குமே தலை சாய்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்ற, அந்த ஆறடி உயர மாமிச தோற்றத்தை எதில் சாய்ப்பது. அங்கிருந்த நீள் வடிவ சோபாவில் தலை சாய்த்துப் பார்த்தான் முடியவில்லை. அவன் உயரம் தடைக்கல்லாக இருக்க, எழுந்தவன் கால் நீட்டிப் படுத்திருந்த சாத்வியின் அருகே சென்று, அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள, தளர்ந்த அவன் உடலும் அவள் கால்களுக்குள் விழுந்த வழுவும், உறக்கத்தை கலைக்க எழுந்தவள், தன் மடியில் குழந்தையாக சுருண்டு இருந்தவனை கண்டு திகைப்புற்று,
“எ..ன்ன என்ன.. பண்றீங்க?"
அவளுக்கோ மிகுந்த பதற்றம். என்னதான் நேசம் இருந்தாலும், அவன் உயரத்தை அறியாதவள் இல்லயே! தொட முடியா சிகரத்தில் இருப்பவன், அவளோடு தரையில் உறவாடுவதை காதல் கொண்ட மனம் ஏற்கவில்லை.
“ம்ச்! என்னடி? சும்மா இரு."
“என்னங்க நீங்க கீழ படுத்துட்டு? உங்க ரெஸ்ட் ரூம்லயாவது போய் தூங்குங்க. அப்படி இல்லையா அந்த சோபால போய் படுத்துக்கோங்க!"
அவள் விழிகளுக்குள் ஊடுருவி,
“படுத்ததும் தூக்கம் வாரது வரம்டி. அது எல்லாருக்கும் எல்லா இடத்திலும் கிடைத்து விடாது!"
துளி மௌனத்துக்குப் பின்,
“எனக்கு இதோ இங்க.." அவள் மடியை விழிகளால் உணர்த்தி,
“இங்கே தான் கிடைக்குது. கிடைக்கிறத அனுபவிக்க விடேன்டி!"
“என்னங்க நீங்க..?"
படபடப்பு, கூச்சம் தன்னோடு சரிசமமாக தரையோடு அவனும் சயனித்திருப்பதால் ஏற்பட்ட திகைப்பு என, அவள் ஒரு மாதிரி நிலையில்லாது தவிக்க, சாத்வியின் வயிற்றுப்புறம் முகத்தை சரித்த சர்வேஷ், ஒரு கையால் அவள் தொடையை இறுக்கிப் பிடித்தான். அவள் நெளியவும்,
“அசையாம இரேன்டி!"
“அசையாமனா எப்படி?"
அவள் திணறவும்,
“அப்படி நீ அசையிறப்போ தான், உன்னை ஏதாவது செஞ்சா என்னன்னு தோனுது"
அவன் நிமிர்ந்து சாத்வியின் பால் முகம் நோக்க, லேசான திகைப்போடு..
“என்ன என்ன?"
அவள் திக்கவே..
“ஹா.. ஹா.." வாய்விட்டே நகைத்தான். அந்த அவன் சிரிப்பை விட, சாத்வியின் கண்களில் தான் எத்தனை ரசனை. பெண் மனம் பாகாக உருகியது. அந்த ஒற்றைப் புன்னகை நிலவோடு உறவாடும் அந்த இராப் பொழுதில், அவள் உயிரோடு உறவாடியது.
“என்னடி பார்க்கிற?"
அவன் குரல் மிக, மிக மெதுவாக மயிலிறகால் வருடுவதைப் போல் இதமாக வர, அந்தக் குரலின் ஸ்பரிசம் ஏதோ ஒரு மாய மயக்கத்தை சாத்விக்கு கொடுக்கவும், அதை ஒரு கணம் கண்மூடி ரசித்தவள், மயக்கம் துஞ்சிய விழிகளோடு..
“இல்ல... நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.."
வெண்பற்கள் மின்ன புன்னகைத்தவன்,
“நான் சிரிப்பேங்கிறது நீ சொல்லி தான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா எனக்கே தெரியுது!"
ஒரு வார்த்தை உயிரை அசைக்குமா? அந்த ஒற்றை வார்த்தையில் புதைந்திருந்த மர்மம் மட்டுமல்ல. ஏதோ அவன் வாழ்வில் இருந்த தீரா வேதனையும் அவள் உயிரை அசைத்தது.
தன்னால், அவள் விரல்கள் அடர்ந்த அவன் கேசத்தை வருடிக் கொடுக்க,
“எதுனாலும் சிரிக்காம இருக்கணுமா என்ன?"
அவள் விழிகளை பார்த்துக்கொண்டே,
“தெரியலை. சிரிக்கப் பிடிக்கல. சிரிக்கவும் தோனல. அந்த சிரிப்பு வலிக்கச் செய்யும்கிற நினைப்புல சிரிப்பு வரல."
அவள் ஒற்றை விரல் மட்டும் உயர்ந்து, அவன் கூர் மூக்கை மேலிருந்து நுனி வரை மெதுவாக வருடிக் கொடுத்தபடி,
“இனி சிரிங்க! எனக்காக, எனக்காக மட்டும் சிரிங்க. அந்த சிரிப்பு என்னைக்கும் என்னைச் சொல்லிட்டே இருக்கணும்."
அவள் ஸ்பரிசத்தில், அவன் செத்த உயிரணுவெல்லாம் உயிர் பெற, உடம்பெல்லாம் மயிர்கூச்செறிந்து சிலிர்த்துப் போனான். முதல் முறை, வாழ்க்கையில் முதல் முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உயிர் ஆழம் வரை உயிர்ப்போடு அனுபவிக்கிறான். ஒரு பெண்ணிடம் இவன் சுகம் பெற்றதை விட, இவன் சுகம் கொடுத்தது தான் அதிகம். முதல் முறை வெறும் தொடு உணர்வில் அந்த சுகத்தைப் பெறுகிறான். அவன் கடந்த காலத்தில் புணர்ச்சியின் சுகத்தை கடைசி துளி வரை சுவைத்தவன். அப்படிப்பட்டவனோ ஒரு சிறு பெண்ணின் தொடுகையில் சிலிர்த்து நிற்கிறான். அவன் விழிகளில் கோடி மின்னல்கள். அந்த விழிகளிலிருந்து பார்வையை அசைக்காதவள்,
“ஏன் அப்படி பார்க்கிறீங்க?”
மெல்லிய வீணையின் மீட்டலைப் போல் அவள் குரல் அவனுக்குள் சுருதி மீட்ட,
“ஏன், நான் பார்க்கக் கூடாதா?"
இருளை கிழித்த அவன் காந்தக் குரலில்..
“நான் எப்போ அப்படி சொன்னேன்? ஆனா.. நீங்க பார்க்கிறது ஒரு மாதிரி இருக்கு."
அவளை மென்மையாகப் பார்த்தவன்,
“தோனுது சாத்வி! முதல் முறை எனக்கே எனக்காக ஒரு வாழ்க்கையை இந்தக் கண்களை பார்த்துக்கிட்டே வாழ்ந்து பார்த்துடணும்னு தோனுது. நான் வாழ உன்னை பார்த்துகிட்டே இருக்கணும் போலத் தோனுது. உன்னோட அந்த கண்ணோரத்திலயாவது உனக்குள்ள தொலைஞ்சு போகணும்னு தோனுது. இப்படி நான் தொலைஞ்சு போக நினைக்கிற ஒருத்தி, தன் ஒத்த விரல எடுத்து என் உடம்புல லேசா, ரொம்ப லேசா ஒரு கீறு கீறினாலும், அது தருகிற சொகத்துல உயிரையே விட்டுறலாம்னு தோனுது. இந்த கண்களுக்குள்ள எனக்காக இருக்க பெயர் தெரியாத அந்த ஒன்னுல, கரைந்து காணாமப் போகணும்னு தோனுது.
தூக்கத்தை தேடி பல இரவுகள் அலைஞ்சும், என் தூக்கம் இங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி அதை அடைய முடியாதபடி, சதி செஞ்ச என் அதிர்ஷ்டத்தை சவுக்கால அடிக்கணும்னு தோனுது.
ராத்திரிகளை வெறுத்த என் பார்வைக்குள்ள பவளமல்லியா, மின்னலா, தூய்மையான நதியா, பாவம் கழுவுற தீர்த்தக்கரையா இரவும் நிலவும் சாட்சியா ஒரு ஜனனம் வேணும்னு தோனுது. இது எல்லாம் நான் பார்க்க நினைக்கிற ஒருத்திக்கிட்ட அவளோட அந்த ஒத்த பார்வையில அவ கண்ணுக்குள்ள இருக்க நிமிர்வுல, எனக்கான மோட்சம் கிடைக்கும்னா, இந்தப் பார்வையை சாகும் வரைக்கும் விடாம பார்த்துக்கிட்டு இருக்கத் தோனுது.."
என்றதும் துடித்தவள், தன் கையால் அவன் வாயை மூடி “ஹூம்.." மறுப்பாக தலையசைத்தவள்
“இப்படி நீங்க அபசகுணமாப் பேசினா, என் ஆவி உங்களுக்கு முன்ன கரைஞ்சு போயிருமோனு தோனுது. பேசாதீங்க!"
என்றதும், அவள் இடைச் சேலையை லேசாக விலக்கியவன், அவள் வயிற்றில் தாடியடர்ந்த தன் முகத்தை ஆழமாக அழுத்தமாக பிணைத்துக் கொண்டான். இப்படி ஒரு மோன நிலையில் இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாமலேயே, சொர்க்கம் சேர்ந்ததை உணர்ந்தனர்.
என்ன பேசினார்கள் என்று கேட்டால், ஒற்றை பதில் நேசம், நேசம் மட்டுமே. அவள் இடையில் முகம் புதைத்தவன் இதழ்கள், பெண்ணின் நாபியில் அழுத்த முத்தமிட்டது. ஏனோ வருங்காலத்தில் தன்மகவுகளை தாங்கி தங்க வைக்கப் போகும் பெண்மையின் தாய்மைக்கு, இப்போதே மரியாதை செலுத்த எண்ணினான்!
மீண்டும், மீண்டும் அவள் நாபியில் முத்தமிட பெண்ணுக்குள் தோன்றிய வெளிப்பூச்சி இல்லாத அந்த இயற்கை மணத்தை நேசமாய், ஆசையாய் சுவாசித்துக் கொண்டே, நீண்ட நெடிய வருடங்களாக அவனை அண்டாத தூக்கத்தை அவள் இடையை இறுக்கி வளைத்துக் கொண்டு துயில் கொண்டான். பெண்ணுக்கோ அந்த புயலின் பிடி வலிக்கத்தான் செய்தது. ஆனால் வெறுக்க நினைக்கவில்லை. நேசமாகப் பார்த்தாள்.
அவள் அறிவாள்! அவன் அன்போ கடினமானது. அவன் சொல்லோ வன்மையானது. இந்த சில நாளில் அதை துல்லியமாகக் கணித்து விட்டாள். அப்படியே இருந்தவள், லேசாக கால் வலி எடுக்கவும் தூக்கத்தில் கலைந்து, தன் நினைவுகளில் மீண்டவள், இதழ்களில் வாடாத மோகனப் புன்னகை. தன் இடைச் சேலைக்குள் முகம் புதைத்து இறுகிப் போய் தூங்கும் ஆறடி உருவத்தை, தன் கை கொள்ளும் மட்டும் அணைத்துக் கொண்டவள், மீண்டும் நித்திரைக்குச் சென்றாள்.
இங்கே இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, நாட்டின் நிலமை ராணுவத்தால் மட்டுப் படத்தப்படவும், ஸ்பெஷல் பர்மிஷனை பெற்றுக் கொண்ட அக்கண்யன், ஆத்விக், ஜனனி மூவரும் ஆஃபீஸை நோக்கி வர..
“என்னங்க?"
“என்ன பேபி?"
“சர்வா ஃபோன் ஆன்சர் பண்றான் இல்லங்க. சாத்வி ஃபோனும் ஆஃப்ல இருக்கு"
“ஜனனி எதுக்கு இப்ப பதட்டப்படுற. அவ தனியா இருந்தா தானே பிரச்சனை. கூடவே சர்வேஷ் இருக்கானே!"
இதில் எல்லாம் அக்கண்யணுக்கு மகனில் நம்பிக்கை உண்டு. மகன் விரும்பாத பெண்ணை தீண்ட மாட்டான். அதே நேரம் இலங்கைக்கு வந்து தான் சந்தித்த அன்றோடு, அவன் பெண்கள் சகவாசத்தை முடித்துக் கொண்டதையும் நன்கு அறிவான்.
இங்கு ஆத்விக்கின் மனமோ ஏதோ ஒன்று நடக்கப் போகிறது, அதுவும் நல்லதாக நடக்கப் போகிறது என்றே அறிவுறுத்த மனம் சொல்லும் வேதவாக்கை அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தான்.
அப்படியே அவர்கள் மூவரும் ஆஃபீஸுக்குள் நுழைந்து எம்டி கேபினுக்குள் போக, அங்கே கண்ட காட்சியில், பார்த்த விழி பார்த்தபடி சமைந்து இருந்தனர்.
அவர்கள் மூவருமே கண்டது, சாத்வி தரையில் நன்றாக சாய்ந்தவாறு அமர்ந்திருக்க அவள் இடைச்சேலைக்குள் முகம் புதைத்து தன்னை மறைத்துக் கொண்டு, ஆழ்ந்த தூக்கத்தில் சர்வேஷ் இருக்க, அந்த உறக்கத்திலும் லேசாக அவன் தலையைக் கோதிய வண்ணம் அறை மயக்க நிலையிலிருந்த சாத்வியையும் சர்வேஷையும். அக்கண்யணும், ஆத்வீக்கும் ஒருவரை ஒருவர் யோசனையாக பார்த்துக்கொள்ள, ஜனனியோ கண்களில் பூத்த மின்னலை கணவனுக்கு தெரியாது மறைக்க பெரும்பாடுபட்டாள்.
மூவரும் ஒரு, ஒரு வகையில் அதிர்ந்திருக்க இதோட விட்டேனா பார் என்பதை போல் சர்வேஷ்..
“சாத்வி! சாத்வி!"
தூக்கத்தோட லேசாக அவளை அசைக்கவும்,
“ஹம்ச்.. ராட்சச ராவணா! தூங்க விட்டா தான் என்னவாம்?" தலையை கோதுவதை நிறுத்தாமல் தூக்கத்தோடு அவள் பதில் கொடுக்கவே.
“நேத்து பிராக்டீஸ் பண்ணும் போது கழுத்துல லேசா வலிடி. நீ கழுத்த லேசா தடவிக் கொடு. லெஃப்ட் அண்ட் ரைட் இரண்டு பக்கமும் வலிக்குது. அப்படியே பிடிச்சு விடு!"
தூக்கத்தில் குரல் குழைந்து வர,
“ராவணா!" அவள் வஞ்சக புகழ்ச்சியோடு அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தவள், தன்விரல் கொண்டு அவன் கழுத்தை குறை தூக்கத்திலும் தடவிக் கொடுத்தாள்.
இங்கு மூவரும் சொல்ல வார்த்தைகள் இன்றி திகைத்து நிற்க, இரண்டு முறை மடியில் அங்கும் இங்கும் அவன் புரண்டு, புரண்டு படுக்க, சர்வேஷ் முதுகில் மீண்டும் ஒரு அடி வைத்தவள்..
“ஒரு பக்கமா படுத்தா தான் என்னவாம்? ராத்திரில இருந்து மடிய விடாம பிடிச்சிட்டு தொங்குறீங்க."
அவள் தூக்கம் கெட்ட கடுப்பில் திட்டவும்
“ஹம்.. என்னை சுமக்கிறது அவ்வளவு கஷ்டமா இருக்குதா என்ன?"
“பேச்சு, பேச்சு, இந்த பேச்சு மட்டும் இல்லைனா"
“இல்லனா?"
“ஹம்.. எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்னு தோணுது."
அதில் அவன் லேசாகப் புன்னகைத்துக் கொண்டே, “கழுத்தை அழுத்தி பிடி..டி வலிக்குது."
தூக்கம் கலைந்தும் கலையாத நிலையில் இருந்தவள், லேசாக அவன் கழுத்தை அழுத்திப் பிடிக்க,
“ஒரு கை சும்மா தானே இருக்கு, அப்படியே தலையை கோதிக் கொடு" அவள் இதமாக கோதிக் கொடுக்கவே..
“ஹெவன்!" அவன் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.
அவன் இட்ட கட்டளையை செயல்படுத்திய பெண்ணின் இதழ்கள் மீண்டும் “ராட்சச ராவணன்!" மெதுவாக வசை பாட,
“ஹம்.. ராவணனின் மண்டோதரி!"