எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 11

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 11​

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக தாஜ் ரெசிடெண்டல் ஏரியாவில் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அதிலும் கண்ணிமைகள் தடித்து, முகம் வீங்கி, மூக்கெல்லாம் சிவந்து, கண்களிலும் ஏகத்துக்கு சிவப்பு கோடுகளுடன், உடலில் ஒருவித தளர்ச்சி என சாத்வி அமர்ந்திருக்கும் தோற்றம் சொல்லி மாளாது.​

இந்த மூன்று நாட்களாக அவன் அலுவலகத்திற்கு செல்லவில்லை, அவளை ஆஃபீஸில் சந்திக்கவில்லை. தொலைபேசியில் அழைக்க வில்லை. மறைந்து இருந்து அவளைப் பார்க்கவும் முற்படவில்லை. ஏனோ இந்தப் பிரிவு வலித்தது. வலிக்க வேண்டும் என்று நினைத்தான். அவளும் அவ்வாறே! அதை ஏன் என்று அவன் ஆராயவில்லை.​

மூன்று நாட்களுக்கு பின் இன்று காலை அழைத்தவன்,​

“உன்னை மீட் பண்ணனும். நான் கார் அனுப்புறேன், டிரைவரோட வா. ஆஃபீஸ் போக தேவையில்லை. லீவுக்கு நான் சொல்லிட்டேன்.”​

என்ற செய்தியோடு அவன் தொலைபேசியை கட் செய்ய, அவளும் சென்றாள்.​

தூரத்திலிருந்து அவள் வருவதைக் கண்டவன் அணிந்திருந்த மைக்கேல் க்ரூக்ஸ் கண்ணாடி வழியாக அவளை கவனித்தவன், அவள் நெருங்க, நெருங்க தாடை இறுக, உடல் விறைக்க அமர்ந்திருந்தான். அவர்களுக்கான அந்த தாஜ் ரெசிடெண்டல் ஏரியாவுக்குள் வர யாருக்கும் உத்தரவு இல்லை. அழைத்தால் ஒழிய உணவுக்காக கூட யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.​

அவள் தோற்றம் கொடுத்த கோபத்தையும் ஆதங்கத்தையும் கட்டுப்படுத்த முடியாதவன்,​

“ஏய் என்ன? என்ன ஆச்சுடி? என்ன கோலம் இது?”​

அவள் இரு கன்னத்தில் கை வைத்து கோபத்தில் நரம்புகள் புடைக்க, வெறிப் பிடித்து கத்தும் அவனை பார்த்தாள், பார்த்துக் கொண்டே இருந்தாள். பதில் பேசவில்லை. ஆனால் மனம் மட்டும் அடித்துக் கொண்டது. ‘இந்த நேசம் உனக்கானது. உனக்காகத் துடிக்கிறான்’​

அவள் இன்னொரு மனமோ மிக சுயநலமாக, ‘பிடிக்கவில்லையா? அவன் உனக்காக துடிப்பது பிடிக்கவில்லையா? உனக்காக இன்னும் துடிக்க விடு. அவன் துடிப்பு உனக்கானது என்பதை நீ துளித்துளியாக அனுபவித்து ருசிக்கும் வரை, அவனை துடிக்க விடு!’ குரூரமாகக் கூற, அந்த மனம் சொன்ன பேச்சை கேட்டாள். யோசிக்காமல் துடிக்க விட்டாள்.​

“பதில் சொல்லு சாத்வி”​

கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்க கத்தி அவளை உலுக்க, பதில் சொல்லவில்லை. ஆனால்.. உடல் மட்டும் ஒரு நொடி தூக்கிப் போட்டது. அதற்கும் கோபம் கொண்டவன், அவள் இரு தோள்களை பிடித்து மீண்டும் உலுக்கி,​

“பதில் சொல்லுனு சொல்றேன் கேட்கலையா. இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? இந்த பொம்பளைங்க இப்படி தான்டி. ஒன்னு பேசிக் கொல்லுவீங்க! இல்ல.. பேசாம கொல்லுவீங்க. சொல்லுடி! ஏன் அழுதனு கேட்கிறேன் தானே? வாயத் திறந்து பதில சொல்லு!”​

அவன் அதட்டலுக்கும் பதில் இல்லை. ஆனால் கண்ணுக்குள் அவன் உருவத்தை, கோபத்தில் புடைத்துக் கொண்டிருக்கும் நரம்புகளை, அதீத ரௌத்திரத்தில் துடித்த அவன் காதை, சிவந்து நின்ற நுனி மூக்கை, தூக்கி வாரிப் போட்ட பிடரி முடியை, அடர்ந்த தாடியை, முறுக்கிய புஜங்களை, அணிந்திருந்த பிராண்டட் உடைகளை இப்படி அவனை அணுவணுவாக நோட்டமிட்டாள்.​

அவள் பார்வையிலோ இவன் ஆண்மை மிக்கவன் என்ற ரசிப்பு, இந்த ராட்சச உருவமும் அடங்காத திமிரும், என்னிடம் மண்டியிடும் என்ற கர்வம், நெறித்த புருவங்களும் புடைத்த நரம்புகளும் விறைத்த அசுர தேகமும் என் நிழலைக்கூட கடுமையாக தீண்டத் துணியாது என்ற அகங்காரம் என அவள் கண்களில் அத்தனை உணர்வு பிரவாகம் மின்னியது. ஆனால் அடர்த்தியாக ஒரு கோபமும் அந்த இரு விழிகளில் தென்பட்டதை அவன் கூர்விழிகள் கண்டு கொண்டது. அவளை உலுக்கியவன்,​

“ஆன்சர் மீ சாத்விகா. என்னனு கேட்கிறேன் இல்ல? வாயை திறந்து பதில் சொல்லு!”​

நீண்ட மௌனம்! அதில் கோபம் கொண்டவன் தன் கையை முறுக்கி தன் தொடையில் குத்திக் கொண்டான். தலையை அழுந்தக் கோதி டென்சனை குறைக்க நினைத்தவன்,​

“போடி!”​

ஒற்றை சொல்லோடு போய் அமர்ந்து விட, அவளும் அவனுக்கு முன் எதிரே அமர்ந்து விட்டாள். ஆனால் பதில் பேச வாய் திறக்கவில்லை.​

அந்த ஒற்றைச் செயல், அவனை மௌனமாகக் கொன்றது. வதைத்தது. அவன் அருவருக்கும் பக்கங்களை மீட்டி எங்கே தன்னை அவள் வெறுத்து விடுவாளோ என்று துடித்தான். அவனால் நிலையாக அமர்ந்திருக்க முடியவில்லை. உடைந்திருக்கும் உணர்வுகள் மாறி மாறி அவனைக் குதற அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டான். ஒன்றரை மணி நேரம் நீடித்த நெடிய மௌனம்.​

கலையா மௌனம், கலைத்தாள், அம்பென பாய்ந்த ஒற்றை வார்த்தையில்.​

“தெரிஞ்சுக்கிட்டேன்!” உணர்வு தொலைத்த பதிலொன்று அவன் செவியை தீண்ட, சர்வேஷ் திடுக்கிட்டு நிமிர்ந்து,​

“எஎ.. என்ன?”​

“தெரிஞ்சுக்க சொன்னீங்க இல்லையா? அதான் தெரிஞ்சுக்கிட்டேன்.”​

என்றவள் தன் இரு கைகளால் முகத்தை மூடி. “ஆஆஆ!” என வெடித்துக் கதறவும், அவள் கதறலை காதுகள் கேட்டதே ஒழிய, உணர்வுகள் செத்துக் கொண்டிருந்தன. வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான்.​

‘அவள் அருகில் செல்லவோ, ஆறுதல் அளிக்கவோ தனக்கென்ன தகுதி உண்டு?’ இது மட்டுமே அவன் நெஞ்சமெல்லாம் உழன்ற ஒன்று.​

“தெரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ என்று சொன்னீங்க. ஆனா.. இப்படி மரண வலி வலிக்கும்னு சொல்லலையே. தெரிஞ்சுக்கிட்ட விஷயம் என்னைக் கொல்லாமல் கொல்லும்னு சொல்லலையே! தெரிஞ்சுக்கிட்ட நிமிசத்துல இருந்து என் நிம்மதி போயிடும்னு சொல்லலையே! நான் ஆராதிக்க நினைக்கிற இந்த ஆறடி உருவம்..”​

என்றவள் கண்ணில் வடிந்த கண்ணீரை கூடத் துடைக்காது, அவன் புறம் ஒற்றை விரல் நீட்டி அவனை மேலிருந்து கீழாக காட்டியவள்,​

“இந்த உருவமும் உறவும் எனக்கே எனக்குனு நினைச்சேன். ஆனா.. முதல் முறை இதை அனுபவிக்கிற உரிமையும் கொடுப்பனையும் எனக்கு இல்லாமல் போய்டும்னு சொல்லலையே!”​

அவன் முகமோ அவமானத்தில் கருஞ் சாந்தைப் பூசிக் கொண்டது என்றால், மனமோ கூனிக் குறுக உடல் விறைத்துப் போனது. மூன்று வருடங்களுக்கு முன் எப்படி தன் உடலை வெறுத்தானோ, இன்றும் அதே போல தன் உடலை வெறுத்தான். எதையாவது கொண்டு தன் உடலை கூறு கூறாக கீறி காயப்படுத்திக் கொள்வோமா என்ற வெறியை அடக்கப் படாத பாடுபட்டான். அவன் கோபமும், கூனிக் குறுகிய அவன் தோற்றமும், அவமானத்தில் கன்றிய முகமும், அவள் அடி நெஞ்சை பற்றி எரியச் செய்ய, நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,​

“பேசு, பேசுனு சொன்னீங்க! இதுக்காக தான் பேசாம இருந்தேன். நான் பேசினா இதோ இப்படி நீங்க உடைஞ்சு போவீங்க.​

எனக்கு, எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரியலனா, வேற யாருக்கு தெரிய போகுது?”​

அவள் பதிலில் கர்வம் தூக்கலாக இருந்தது. அதே வெறித்த பார்வையோடு, அவன் அவளை உறுத்து நோக்க,​

“எஎ..ன்..ன, என்ன பார்வை? இந்த ஆறு அடி உருவத்தில் இருக்க அரக்கனை மட்டும் தான் மத்தவங்களுக்கு தெரியும். அதுக்குள்ள இருக்க மனுஷனை அவனோட குணத்தை என்னைத் தவிர வேறு யாருக்கு தெரியும்?” அவள் குரல் மெது மெதுவாக உயர்ந்து,​

“ஏன் சொல்லாம விட்டீங்க, ஏன் இப்படி ஒரு பக்கம் உங்களுக்கு இருக்குன்னு சொல்லாம விட்டீங்க?”​

அவள் பெரிய குரலில் கதறவும், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவன், அவள் கால் அருகே மண்டியிட்டு, சாத்வியின் இடையில் முகம் புதைத்து, தன்னோடு அவளை இறுக்கிக் கொள்ள; திமிரவில்லை, அவனை விலக்கவில்லை, ஆனால் அணைக்கவும் இல்லை.​

அழுதாள் என்றால் அப்படி ஒரு அழுகை. அவள் கண்ணீர், தலைகுப்புற படுத்திருந்தவன் சிகைக்குள் துளித்துளியாக இறங்கத் தொடங்கியது. அவள் முகம் நோக்கி நிமிர்ந்தவன்,​

“அழாதடி! நீ அழுதா, என்னால என் உணர்வுகளை தாங்கிப் பிடிக்க முடியல.”​

சாத்வியோ முன்னிலும் ஆக்ரோஷமாக, “தெரிஞ்சுக்க, தெரிஞ்சுக்கனு சொன்னீங்க தெரிஞ்சுக்கிட்டா என்னை நான் தொலைச்சி விடுவேன்னு ஏன் சொல்லாம விட்டீங்க? அப்போ நீங்க எனக்கே எனக்காக இல்லையா?”​

அவள் இடையை இறுக்கிக் கொண்டு, அவள் முகம் நோக்கியவன்,​

“எஸ்! என் வாழ்வில் நீ முதல் பெண் இல்ல. நான் பெண்களை அறியாதவன் இல்லை. ஒரு பெண்ணோடு வாழாதவன் இல்லை. ஒரு பெண்ணோட தாம்பத்தியத்தை பகிர்ந்து கொள்ளாதவனும் இல்லை. என் ஆண்மையை முதன் முதல் பரிசோதனையா, பரவசமா, பரிசுத்தமா ஒரு பெண்ணிடம் கொடுக்காதவனும் இல்லை.​

அந்த ஒரு நொடிப் பொழுதும் என்னை நான் இழந்தது நேசத்தின் பொருட்டு தான், அதுக்கு பொய் முகம் காட்ட விரும்பவில்லை. ஆனால் நேசம் மட்டும் தான், அந்த நேசமும் எனக்கே, எனக்கு மட்டுமே சொந்தமானது. அதை நான் பகிர்ந்துக்க நினைச்ச அண்ட் பகிர்ந்து கிட்ட நபர் உண்மையானவ இல்லை!”​

“தெரியும், தெரிஞ்சுகிட்டேன்.”​

அவள் முகத்தை மூடிக்கொண்டு,​

“ஆஆ.. ஐயோ! முடியல என்னால கேட்க முடியல. வலிக்குதுங்க, உயிர் போகிற மாதிரி வலிக்குது. நெஞ்ச அப்படியே கசக்கிப் பிழியிற மாதிரி வலிக்குது. எப்படி இப்படி தடம் மாறிப் போனீங்க? எப்படி போற இடமெல்லாம் சாக்கடையில உங்களால கை வைக்க முடிந்தது?”​

என்றவள் அவன் முதுகு, கை, கன்னம் என சரமாரியாக தாக்கத் தொடங்கினாள். அவன் உணர்வுகளை அடக்கி இறுகிப் போயிருந்தான் என்றால், அவள் தன் உணர்வுகளை கதறலாக, கத்தலாக, அடியாக காட்டத் தொடங்கினாள்.​

ரிங்குக்குள் எத்தனையோ பஞ்ச்களை பெற்று முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, கால் என பல காயங்களை வாங்கியவனுக்கு, அவள் அடி உடலில் வலிக்கவில்லை. ஆனால் அவள் கண்ணீர் நெஞ்சுக்குள் வலித்தது. தான் செய்த குற்றங்களுக்கும், இழைத்த தவறுகளுக்கும் சாத்விகா கண்ணீரில், அவள் ஆதங்கத்தில், அவள் அடிகளில் பாவ விமோசனம் அடைந்து கொண்டிருந்தான்.​

“இப்படி கல்லு மாதிரி இருக்கீங்களே! எப்படி உங்களால மற்றவங்கள தொட முடிஞ்சது? ஏன் என்னை நினைக்காம விட்டீங்க? ஏன் நினைக்காம விட்டீங்க, சொல்லுங்க? உங்களுக்காக ஒரு வாழ்க்கை இருக்குனு ஏன் நினைக்காம விட்டீங்க?”​

“ஏன்னா எனக்காக இப்படி ஒரு தேவதை பொண்ணு வரம் தர காத்திருப்பானு, தெரியாம போச்சே”​

அழுகையோடே,​

“என்னால எப்படி இதை ஏத்துக்க முடியும்? நெஞ்செல்லாம் ரணமா இருக்குதுங்க. நீங்க இன்னொரு பெண்ணை திருமணம் செய்தவர். இன்னொரு பெண்ணோட கணவன். அவளோடு தாம்பத்தியத்தை பகிர்ந்துகிட்டவர், இதெல்லாம் இறந்தகாலமா நினைச்சு மறக்க முடியும். ஆனா இந்த..”​

அவன் நெஞ்சில் தன்விரலை வைத்து குத்திக் காட்டியவள்,​

“இந்த இதயம் இருக்கே, அதுல அவளுக்கு உங்க இறந்த காலத்துல ஒரு இடம் கொடுத்து தானே இருந்து இருக்கிறீங்க! அதை மட்டும் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க செஞ்சது ஒன்னும் அவ்வளவு பெரிய மன்னிக்கக் கூடிய விஷயம் இல்லை. முதல் வாழ்க்கை தவறிப் போச்சு, அந்த முதல் வாழ்க்கை உங்களுக்கு மறக்க முடியாத கருப்பு பக்கங்களை தந்திருக்கு, அதுக்காக நீங்க அதை மறக்க இன்னொரு போதைல மூழ்கி இருந்தது சரியா? சொல்லுங்க, சரியா?”​

கை வலிக்கும் மட்டும் அவனை அடித்து,​

“இப்படி பார்க்காதீங்க! இந்தக் கண்களில் இருக்க வேதனை என்னை வேரோடு அடிச்சு சாச்சுருமோனு பயமா இருக்கு!”​

“ஆனா... உன் கண்ணுல இருக்க மரண வேதனை என்னை அணுவணுவா கொல்லுதடி!”​

“முடியலங்க! உங்கள மன்னிக்க முடியல. மன்னிச்சா ஏத்துக்க முடியல. ஏத்துக்கிட்டா அதை சகிச்சுக்க முடியல. அப்படியே சகிச்சுக்கிட்டா என்னால மூச்சுவிடவே முடியல.​

 

admin

Administrator
Staff member

மூச்சு முட்டுதுங்க. ஏன் இப்படி வலி தவறிப் போனீங்க?”​

“நீ பேசுனா உன் உணர்வுகள் வெடிச்சிருமோன்னு சொன்ன, ஒரு வேளை நான் பேசாம இதுவரை மௌனம் சாதிச்ச விஷயங்களை நீ உன் உணர்வுகளுக்குப் பதில், உன் இதயமே வெடிச்சிருமேடி!”​

அதில் திடுக்கிட்டவள்..​

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” ஒரு வலி நிறைந்த புன்னகையோடு,​

“பெண்ணோட கண்ணீரை பார்த்து வளர்ந்த சமூகத்தை சேர்ந்தவ நீ, அதனால் ஒரு ஆணோட கண்ணீரை பார்த்திருக்கமாட்ட. ஒரு ஆணோட அவமானங்களை பார்த்திருக்கமாட்ட. ஒரு ஆணோட உணர்வுகளின் நிர்வாண நிலையை அனுபவித்து இருக்கமாட்ட. ஒரு ஆணோட வாழ்க்கையில நடந்த அருவருப்பான பக்கத்தை சகிச்சுக்கிட்டு கடந்து இருக்கமாட்ட. ஆனா... நான் அந்த அருவருப்புல தினமும் குளிச்சவன்.​

நான் எப்படி என்னோட மணவாழ்க்கையில ட்ரீட் செய்யப்பட்டேன்னு தெரியுமா? தெரிஞ்சுக்க விரும்புறியா? என்னோட மணவாழ்க்கை எனக்கு தந்த காயங்கள தெரிஞ்சுக்க விரும்புகிறாயா? அதை விட அசிங்கமான நினைவுகளை தெரிஞ்சுக்க விரும்புறியா? நான் என்னவா இருந்தேன்னு தெரிஞ்சுக்க விரும்புறியா?”​

என்றவன் மூச்சுக்குத் தவிக்க, உடலெல்லாம் அப்படியே வியர்த்து நடுங்கத் தொடங்கியது.​

அவன் கன்னத்தில் பலமாகத் தட்டியவள்,​

“ஏன்? ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க? ப்ளீஸ் வேணாங்க, விட்ருங்க எனக்கு தெரிஞ்சுக்க வேணாம். தெரிஞ்சிட்ட வரைக்கும் போதும். நார்மல் ஆகுங்கள், நார்மல் ஆகுங்க..”​

அவனை தட்டி, தட்டி ஆசுவாசப்படுத்தினாள். சர்வேஷோ, சாத்வி கண்களில் தென்பட்ட பதட்டத்தை இனிப்பாக தன் எண்ணங்களில் நிரப்பினான். தன்னை என்ன தான் ஆசுவாசப் படுத்திக் கொண்டாலும், அவன் கையின் நடுக்கம் மனதின் நடுக்கத்தை அப்பட்டமாகக் காட்டியது.​

“ப்ளீஸ்.. எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். தெரிஞ்சுக்கிட்டேன், வலிக்க வலிக்க தெரிஞ்சிக்கிட்டேன். மூனு நாள் முழுக்க அழுதேன். ஜீரணிக்க முடியாத அளவு பசி தூக்கம் மறந்து அழுதேன். அதுவரைக்கும் போதும். இனி தெரிந்து கொள்வதை காலம் எனக்கு தெரியப் படுத்தட்டும்.”​

என்றவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். அணைத்தவாறு சர்வேஷ் முதுகை வருடிக் கொடுப்பதை நிறுத்தவே இல்லை.​

நடுங்கிய அவன் உடல் மெதுமெதுவாக ஆசுவாசப்படும் என்று பார்த்தால் மீண்டும் கோபத்தில் இறுகியது, மூர்க்கத்தில் விறைத்தது, அருவருப்பில் கூனிக் குறுகியது. அவளிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்தவன், எழுந்து நின்று ஆழ்ந்த மூச்செடுத்துப் பார்த்தான். முடியவில்லை.​

அங்கு டேபிளில் இருந்த தண்ணீரை தலைவழியே ஊத்திக் கொண்டவன், தன்னை நிதானப்படுத்த முயன்றான். உடலில் நீர் பட்டதும், வெடித்த உணர்வுகள் மெதுமெதுவாக நிதானமாகத் தொடங்கியது. அவனுக்கோ பயம் வந்து விட்டது, எங்கே ஏதேனும் கோபத்தில் எதையேனும் அடித்து உடைத்து விடுவோமோ என்று.​

அவன் நிலையை உணர்ந்தவள்,​

“ஏங்க ப்ளீஸ்....” அவன் முதுகில் கை வைக்க பலம் கொண்ட மட்டும் அவளை உதறித் தள்ளினான். அதில் அதிர்ந்து விழப்போனவளை, பட்டென்று ஒரு கரம் நீட்டி இழுத்து மீண்டும் அணைத்தவன்.​

“நீ வேணும்னு நினைக்கிறேன்டி வாழ்க்கை முழுக்க வேணும்னு நினைக்கிறேன்டி. வாழ்வோ சாவோ உன்னோட வாழ்ந்து பார்த்துடணும்னு நினைக்கிறேன். ஆனா, என்னோட மூர்க்கம், என்னோட கோபம், எனக்குள்ள அணையாம இருக்க வெறி, என் வாழ்க்கையை வாழ விடுமான்னு தெரியலடி. இதுதான் நான். எனக்கு மென்மையா பேசத் தெரியாது. நிதானமா நடந்துக்கத் தெரியாது. என்கிட்ட பொறுமையே இல்லடி. பயமா இருக்குடி!”​

அவன் அணைப்பில் அடங்கியவள், அவனை நோக்கி முகம் நிமிர்த்தி, “அன்னைக்கு சொன்னீங்க. என்னமோ சொன்னீங்களே? உன்னோட கண்ணோரச் சுருக்கம் கூட நான் வேணும்னு எனக்கு சொன்னுச்சுன்னா, எவன் தடுத்தாலும், உன்னை உனக்காகக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்னு. ஏன் இப்போ தெரியலையா?”​

மதம் பிடித்த யானை போல் ரௌத்திரத்தில் சிலிர்த்துக் கொண்டிருந்த அவனின் உணர்வுகளில் ஒரு அமைதி தென்பட்டது. அவன் முகத்தில் மெதுமெதுவாக மென்மையின் சாயல்.​

“என்ன சொல்ற?”​

“நான் சொல்ல என்ன இருக்குங்க? நீங்க தான் சொல்லணும். என் கண்ணோர சுருக்கம் மட்டும் தான் சொல்லணுமா? இந்த கண்களுக்குள் இருக்க கருவிழிகள் சொல்லக் கூடாதா?”​

“சாத்வி!”​

“ஹூம்.. ஹூம்..! நான் இந்த ராட்சச ராவணனோட மண்டோதரி. என்னை சிறை எடுத்தது ராவணன் தான். ஆனால், அந்த ராவணனோட இதயத்துக்குள்ள சிறைப்பட்ட நான், ராமனோட சீதையில்லை, இந்த ராவணனோட மண்டோதரி!”​

இதோ தனக்குள் துடித்துக் கொண்டிருந்த அவனின் உணர்வுகளை ஒற்றை விரலில் ஆட்டி வைக்கத் தொடங்கி விட்டாள். அவன் வாழ்வின் பாவங்களை துடைத்து, புது வேதம் படைக்கத் தொடங்கி விட்டாள்.​

தன் காதல் தேவதையிடம் கர்வம் தொலைக்க சித்தம் கொண்டவன்,​

“நீ நிஜமாத்தான் சொல்றியா?”​

“ஹம்.. நிஜந்தான்”​

“என் தவறுகளை நீ மன்னிச்சுட்டியானு தெரியணும். இல்லை, என் கடந்த காலத்தை நீ சகிச்சுக்கிட்டியானு தெரியணும்”​

அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “உங்க தவறுகளை மன்னிக்கத் தோனல தண்டிக்கத் தோனுது. உங்க கடந்த காலத்தை சகிக்கத் தோனல, முழுமையா உங்க நிழலில் இருந்து ஒதுக்கணும்னு தோனுது. மறுபடியும் நீங்க பிழை செஞ்சா, வலிக்க வலிக்க உங்கள அடிக்கணும்னு தோனுது. ஆனா எதுக்காகவும் உங்களை விலக்கணும்னு தோனல!”​

“இது, இது போதுமேடி!”​

“ஆனால், எனக்கு போதாது. உங்களை நிறைய வலிக்க விடணும். அப்போதெல்லாம் சாத்வி, சாத்வின்னு என் பேர நீங்க நினைக்கிற மாதிரி, உங்க வலிகளில் கூட நான் இருக்கிற மாதிரி செய்யனும். என்னை நிறைய நீங்க நேசிக்கனும். அப்படி நேசிக்கும் போது, உங்க எண்ணத்துல மட்டும் இல்ல, சுவாசத்திலும் நான் மட்டும் தான் இருக்கணும். என்னோட இமை அசைவுக்காகக் கூட, உங்களை காத்திருக்க விடணும்னு தோனுது. அந்த ஒத்த அசைவுல, இந்த கெத்து மனுஷன் தலைகுப்புற விழணும்!”​

அவளை ரசனையாகப் பார்த்தவன்,​

“சரி” அவன் பதிலில்,​

“என்ன சரி?”​

“என்னோட கர்வம் தொலையப் போறது சாத்வி கிட்டயா இருந்தா, நான் என் கர்வம் தொலைக்க சம்மதம். என்னோட ஆண்மையை நிறைக்கப் போவது சாத்வீனா, என்னோட அகம் திறக்கச் சம்மதம். என்னோட திமிரை ஆளப்போறது சாத்வீனா, இந்த சர்வேஷோட சர்வமும் சாத்வியா மாறச் சம்மதம்!”​

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.​

“எப்படி தெரிஞ்சுகிட்ட?”​

“உங்க கண்ணுல இருந்த ஏதோ ஒன்னு என்னை உங்கள தொரிஞ்சுக்கச் சொல்லி, பாடா படுத்துனுச்சு. அதுதான் வருண் அண்ணா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.”​

அதில் அவன் உடல் ஒரு கணம் இறுகி இயல்பாக,​

“அவர் சொல்ல மாட்டேன்னு தான் சொன்னாரு ஆனா எனக்கு உங்கள பிடிச்சி இருக்குன்னு சொன்னேன். உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னேன். உங்களோட கடந்த காலத்தை அவருக்கு தெரிந்த அளவு சொல்லச் சொன்னேன். அப்பவும் அவர் சொல்லல. என்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு, நான் சொல்லுவேன், ஆனா எதுக்காகவும் அவரை விட்டு நீ போகக்கூடாதுனு சொன்னாரு. அவருக்கே அவ்வளவு இருக்கும் போது, உங்கள இங்க, இங்க..”​

என்றவள் தன் நெஞ்சில் கை வைத்துக் காட்டி,​

“சுமக்கிற எனக்கு உங்க மேல எவ்வளவு வெறி இருக்கும். விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னேன். அப்போ தான் உங்களுக்கு திருமணமானது சொன்னார். அது அவரு தங்கச்சினு சொன்னாரு. உங்களுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னாரு. நீங்க அதுக்கப்புறம் பாதை மாறிப் போயிட்டிங்கன்னு சொன்னாரு.”​

அவள் கண்கள் கண்ணீர் வடிக்க..​

“அழாதடி! நீ அழுதா என் இதயத்தை பிச்சு எறியணும்னு தோனுதுடி!”​

“எப்படி அழாம இருக்க முடியும்? சந்தோஷப் படுற விஷயமா இது? தான் நேசிக்கிற ஒருத்தர், இன்னொருத்திக்கு சொந்தமானவரா பார்க்கும் வலி இருக்கே, அதை அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும்!”​

அந்த வார்த்தையில் அவன் மனம் செத்து மடிந்தது. சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் ஏராளம் உண்டு. தொண்டையை செறுமிக் கொண்டு,​

“நீ தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆனால், அந்தத் திருமணம் ஏன் தோல்வியில முடிந்ததுனு தெரியுமா? என்னோட திருமண வாழ்க்கை தந்த பரிசு என்னன்னு தெரியுமா? என்னோட கருப்பு பக்கங்கள் என்னன்னு தெரியுமா?”​

என்றவன் வேதனையை எச்சிலோடு சேர்த்து விழுங்க,​

ஏறி இறங்கிய அவன் தொண்டைக் குழியும், இறுகிய கை முஷ்டியும் ஏதோ பயங்கரமான ஒன்று இருப்பதை அறிவுறுத்த, அவள் மனம் அடித்துக் கொண்டது.​

“இல்ல வேணாம். நான் தெரிஞ்சுக்கிட்ட வரைக்கும் போதும். ஆனால், அந்த ரகசியம் எப்ப எனக்கு தெரியணும்னு நான் நினைக்கிறேனோ நான் அப்ப தெரிஞ்சுக்கிறேன். அதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சுக்க வேணாம். எனக்கு நீங்க வேணும், உங்களோட ஒரு வாழ்க்கை வேணும். அதுக்காக எல்லாம் மறந்துட்டு ஒரு நார்மல் பொண்டாட்டியா இருப்பேன்னு கேட்டா பதில் இல்ல. படுக்கையப் பகிர்ந்து கொள்ள அருவருப்பு படாமல் இருப்பனானு கேட்டா, என்கிட்ட பதில் இல்லை. என்னைத் தொடும் போது மத்த பொண்ணுங்களை தொட்ட கை தானேனு நான் நினைக்காம இருப்பேனானு கேட்டா என்கிட்ட பதில் இல்ல. இந்த நெஞ்சில் சாய்ந்திருக்கும் போது, இதுக்கு முன்ன ஒருத்திக்கு இங்கே இடம் கொடுத்து இருப்பார் தானேனு நினைக்காமல் இருப்பனானு கேட்டா அதுக்கும் பதில் இல்ல!”​

ஒவ்வொரு வார்த்தையும் அர்ஜுனன் தொடுத்த அம்புகளாக அவனை வதம் செய்தது. ஆனால், தான் சரிந்து விட்டால், அவள் செத்து விடுவாள் என்பதை அறியாதவனா அவன்!​

“நீ பதில் சொல்லாத, ஆனா.. உன்னை நான் தொடும் போது, என்னை எனக்காக மட்டும் நினைக்க வைக்க எனக்குத் தெரியும். நான் அருகில் இருந்தா, என்னை எனக்காக மட்டும் உன்னை சுவாசிக்க வைக்க எனக்குத் தெரியும். இந்த நெஞ்சில் இப்படி உரிமையா சாஞ்சுகிட்டவ நீ ஒருத்தி தான்னு புரிய வைக்க எனக்குத் தெரியும். வாழ்க்க முழுக்க இந்த கையப் புடிச்சுகிட்டு வா, உன்னை விடாம கூட்டிட்டுப் போறேன்.”​

அவன் உருக்கமாகக் கூற, மறைக்கப்பட்ட பக்கங்கள் மறைக்கப்பட்டதாக ஆயிற்று. அவர்கள் காதல் காயங்களைக் கடந்து மேலே வந்தது.​

“சொல்லு! என்னோட வாழத் தயாரா? என்னை கல்யாணம் கட்டிக்கிறியா?”​

“கட்டிக்கிறேன். ஆனா எப்ப எல்லாம் தோனுதோ அப்போலாம் சண்டை பிடிப்பேன், அடிப்பேன்! உங்களுக்கு வலிக்கலைன்னாலும் வாங்கிக்கணும்.”​

“வாங்கிப்பேன்” பிரிந்த புன்னகையோடு.​

“நான் ரொம்ப சென்சிடிவ்! உங்க மூர்க்கத்தை எவ்வளவு தாங்குவேன்னு தெரியாது. தாங்க முடியாதப்போ அழுவேன், திட்டுவேன். அதை தாங்கிப்பீங்களா?”​

அவன் முகம் நோக்கிக் கேட்க, “சந்தோஷமா” என்றான் ஒற்றைச் சொல்லாக.​

திடீரென அடிபட்ட குழந்தையின் சாயலை அவள் முகத்தில் கண்டவன்.​

“என்னடா?”​

“என்னை விட்டுர மாட்டீங்களே...?”​

“செத்தாலும் கூட்டிட்டு தாண்டி போவேன். இந்தத் தனிமை வலிக்குது. வேதனையா இருக்கு. பயமாவும் இருக்குடி!”​

விழிகளில் விழி நீர் வடிந்தாலும், அவள் இதழ்கள் புன்னகைத்தன. அவள் முக வடிவத்தை விரலால் அளந்தவன்.​

“என் தொடுகை அருவருப்பா இருக்குமா? பட்.. உன் ஒவ்வொரு அசைவிலும் நான் என் சுயம் தொலைக்கணும். என்னை மறக்கணும். ஒரு பெண்ணோட தொடுகை காமத்தின் வாசலை மட்டும் இல்லை, ஆணோட ஆன்மாவின் வாசலையும் திறக்கும். அதை இது வரை நான் உணர்ந்ததில்லை! இனி உணரனும்டி. எங்க அம்மா அப்பா மாதிரி நிறைய குழந்தைகள பெத்துக்கணும். ஐ லவ் கிட்ஸ். சம்மதமா?”​

“ஹூம்” மறுப்பாக தலையாட்டியவள் இதழ்களோ,​

“கொஞ்சம் கஷ்டமெல்லாம் இல்ல. ரொம்பவே கஷ்டப்படணும். உங்களுக்கு சம்பந்தமா?”​

“எஸ்.. எஸ் ஐ ஆம் ரெடி. ஐ அம் ரெடி டு பிகம் மிஸ்டர் சாத்வி!”​

இருவர் உள்ளத்திலும் தீராத வலிகளுண்டு, காயங்களுண்டு, கடந்த காலம் தந்த சுவடுகளுண்டு. ஆனால், அதை எல்லாம் மறக்க வைக்கும் காதல் உண்டு. அந்தக் காதல், அவளை அவனுக்காக சுயம் தொலைக்க வைக்கும் என்றால், அவனுக்கோ அவளுக்காக அடி பணிந்து போக வைக்கும்.​

தன் திமிரை அவளுக்குத் தாரை வார்த்தான். தெரிந்தே அவன் கர்வத்தின் தலையை, தன் பிடிக்குள் கொண்டு வந்தாள்.​

“ஆமாம் இப்படி அழுது இருக்கியே! உன் ஃப்ரெண்ட் என்னனு கேட்கலையா?”​

“இல்ல... அவ ஊருக்குப் போயிட்டா.”​

“இனி அழாத..”​

“அதெப்படி, தோனும் போது எல்லாம் அழுவேன்.”​

அவளை முறைத்தவள்,​

“மூச்! அழுத தொலைச்சிடுவேன்!”​

“ராட்சச ராவணன் இஸ் பேக்.”​

“எப்பவும் உனக்கு ராட்சச ராவணனா இருக்கிறதத் தான்டி விருப்புறேன். அதுல ஒரு தனி கிக் இருக்குடி!”​

அவள் கண்களை அழுந்தத் துடைத்து, சாத்வியின் இதழ்களை நோக்கிக் குனிந்தவன், அவள் இதழ் மீது தன் இதழ் உரசும்படி சென்று,​

“இப்போ இல்ல. இந்த இதழ் முத்தம் என்னை மட்டுமே நினைக்கிற மாதிரி, கண்டிப்பா கொடுப்பேன்!”​

என்றவன் அவள் காதோரம் நெருங்கி,​

“இன்னும் நாலு நாள்ல நமக்கு மேரேஜ். வீட்ல பேசிட்டேன். ரெடியாகிரு.”​

அவனைத் தள்ளி விட்டு, விழிகள் பெரிதாக விரிய, அதிர்ந்து அவன் முகம் நோக்கியவள்.​

“எஎ.. என்ன சொல்றீங்க. வீட்ல பேசிட்டீங்களா? என்ன சொன்னாங்க?” பரிதவிப்போடு கேட்கவும்,​

“அவங்களுக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும். இதுல யாரு என்ன சொல்ல இருக்கு? உனக்கான எதுவும், அதை நான் தான் சொல்லணும். உனக்காக எதுவும்..” அழுத்திக் கூறியவன்,​

“அது என்னோடதா மட்டும் தான் இருக்கும். அது முடிவா இருந்தாலும் சரி, உனக்கான அன்பா இருந்தாலும் சரி!”​

அவள் கண்களில் தோன்றிய ஒளியை ரசனையோடு பார்த்துக்கொண்டே, சாத்வியின் இரு இமை மீதும் முத்தமிட்டவன்,​

“இந்தக் கண்கள்ல கண்ணீரையோ பயத்தையோ பார்க்கக் கூடாது. அதை பார்க்கிறதுல எனக்கு விருப்பமும் இல்லை. இப்ப மனசுக்குள்ள வந்துட்ட, இன்னும் நாலு நாள்ல.. எனக்கே எனக்குனு முழுசா எனக்குள் நீ வந்துடணும். வரவச்சுடுவேன்!”​

அழுத்தமாக நெற்றி முத்தமிட்டவன், அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டல் நோக்கிச் சென்றான். இருவரின் பயணமும் மௌனத் துளிகளில் மூழ்கி இருக்க, கண்களோ நேசத்தின் சாயலில் மூழ்கி விரிந்தன.​

ஹாஸ்டல் வரவே சிறு தலையசைப்போடு அவனிடம் விடை பெறவும்,​

அவன் கார் நேராகச் சென்று நின்ற இடம் ஜனனி பேலஸ்.​

“சர்வா! இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? என்னதான் நடந்துச்சு?”​

அவனிடம் நீண்ட மௌனம்.​

“கண்ணா! கேட்கிறேன்ல, ஏதாவது சொல்லேன்.”​

அவனிடம் மீண்டும் மௌனம்.​

“கண்ணா!” ஜனனி குரல் உயரவும். அக்கண்யனின் “ஜனனி!” என்ற அழுத்தமான அழைப்பு கண்டிக்கவே,​

“இல்லங்க.. சர்வா”​

“தெரியும், அவனே சொல்லட்டும்.” மகனை உறுத்து விழிக்க,​

“அழுவுறா அப்பா! ரொம்ப அழுவுறா. அவ அழும் போது ஐ எம் கெட்டிங் ஸ்ட்ரெஸ். அவளோட கண்ணீரைப் பார்க்க முடியல. டைஜஸ்ட் பண்ணிக்க முடியல. கோவமா வருது. என்னை நானே ஏதாவது பண்ணிட்டா, என்னனு தோனுது.”​

“சர்வேஷ்!” அதட்டலாக அழைத்த அக்கண்யன்.​

“இதுவரைக்கும் எப்படியோ இனி உன்னோட கோபம் ஒவ்வொரு துளியும் சாத்விய பாதிக்கும். சாத்விய மட்டும் தான் பாதிக்கும். யூ அண்டர்ஸ்டாண்ட், ரைட்!”​

பெருமூச்சோடு எழுந்தவன்,​

 

admin

Administrator
Staff member

“ஓகே! கெட் ரெடி டு தி மேரேஜ். என் பையனாவும் இல்ல, சாம்பியனாவும் இல்ல. சாத்வியோட சர்வாவா ரெடியாகு.”​

அவன் பதிலை காலத்தின் கையில் கொடுக்க, காலம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றது. அன்றிலிருந்து தடபுடலாக ஆரம்பித்தது சர்வேஷ் சாத்வின் திருமணம்.​

பிறப்பில் பெயருக்கு பின்னிருக்கும் முகவரியைத் தொலைத்தவள் வாழ்வில், ஒரு அகம் பிடித்தவனின் பெயரை தன்னோடு பிணைத்துக் கொள்ளத் தயாரானாள்.​

அவர்கள் திருமண விஷயம் கேள்விப்பட்ட முழு ஆஃபீஸும் சொன்ன ஒரே விஷயம்...​

“எங்களுக்கு அப்பவே தெரியும். சார் உன்னப் பார்க்கிறதாக இருக்கட்டும், அப்பப்போ நீங்க ரெண்டு பேரும் சேம் கலர்ல ட்ரெஸ் பண்றதா இருக்கட்டும், எங்க யாருகிட்டயுமே முகம் கொடுத்து பேசாத மனுஷன், உன்ன மட்டும் ஆஃபீஸ் ரூம்ல கூப்பிட்டு பேசுவதாக இருக்கட்டும், உன்னத் திட்டிட்டு நீ ரொம்ப அப்செட்டா இருக்குற டைம், அவர் உன்னை நிறைய முறை கிராஸ் பண்ணி போறதா இருக்கட்டும், இதையெல்லாம் நாங்க நிறைய கவனிச்சு இருக்கோம்.​

எங்களுக்கு தெரியும். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஏதோ ஒன்னு இருக்குன்னு. ஆனா இப்படி ஒன்னு எதிர்பார்க்கலையே. எனிவே கங்கிராட்ஸ்!”​

அத்தனை பேரும் அவளை வாழ்த்து மழையில் நனைய வைக்க, ரம்யா சாத்வியிடம்​

“ஆர் யூ ஓகே? முழு மனசா, நீ இந்த ரிலேஷன்ஷிப்க்கு தயாரா இருக்கியா?”​

அவளை குழப்பத்தோடு பார்க்க,​

“இல்ல.. நான் அன்னைக்கு சார் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கோனு சொன்னேனே!”​

மென்மையாகப் புன்னகைத்தவள்,​

“தெரியும். எல்லாமே தெரியும்.”​

என்றாளே ஒழிய, அவர்களுக்குள் இருக்கும் எந்த ஒரு ரகசியத்தையும் ரம்யாவுடன் பகிர விரும்பவில்லை.​

ஜனனியோ வீட்டையே தலைகீழாக்கிக் கொண்டிருந்தாள்.​

“என்னங்க ஏற்பாடு எல்லாம் ரெடியா. ஃபுட் எல்லாம் ஒருக்கா நீங்களே பர்சனலா டேஸ்ட் பார்த்து செக் பண்ணிடுங்க. எந்தக் குறையும் இருக்கக் கூடாது.”​

அக்கண்யன் ஜனனியை மௌனமாகப் பார்ப்பானே ஒழிய, ஆதரிக்கவோ, எதிர்க்கவோ மாட்டான். ஆத்வீக் மிக உற்சாகமாக தமையனின் திருமணத்திற்கு உழைத்துக் கொண்டிருந்தான்.​

எதிர்பாராத விதமாக மற்ற மூன்று சகோதரர்களும் வர முடியாத நிலையில் சிக்கிக் கொள்ள, அவர்கள் திருமணத்தை ஆன்லைனில் பார்ப்பதற்கான அத்தனை ஏற்பாட்டையும் சித்தமாய் செய்து முடித்தான். அவன் ஆர்ப்பாட்டத்தில் சர்வேஷ்..​

“எதுக்கு ஆதுண்ணா இவ்வளவு எக்சைட்மென்ட்? சிம்பிளா தானே மேரேஜ் நடக்கப் போகுது. சோ.. பெரிசா ஏதும் ப்ளான் பண்ணாதீங்க!”​

“எப்படி நடந்தாலும், என் தம்பி மேரேஜ். நான் செய்யாமல் யார் செய்வது?” என்பான்.​

இங்கு அரவிந்தன் இல்லத்திலோ, கவிதா குமைந்து கொண்டிருந்தாள். இந்தத் திருமணத்தை நிறுத்துவேன் என்ற ஆங்காரம், அவரைப் பிடித்து ஆட்டியது..​

“எத்தனை முறை, எத்தனை முறை அர்வி சொல்லி இருப்பேன், நம்ம பொண்ணுக்காக சர்வேஷ் கிட்ட பேசுங்கன்னு. அவன் நம்ம பொண்ணோட புருஷங்க.”​

“கவிதா இந்தப் பேச்சு வேணாம். நம்ம பொண்ணோட புருஷனா இருந்தானே ஒழிய, இப்ப நம்ம பொண்ணோட புருஷன் இல்ல. ஏன்னா அதற்கான தகுதியை உன் மகளும், உங்க ரெண்டு பேரோட பொய்யும் பித்தலாட்டமும் என்னைக்கோ இழந்திருச்சு. அவனோட வாழ்க்கையில இனிமே நீ தலையிட்டா, சர்வேஷோட கோபம் எரிமலைக்கு இணையானது. ஐ எம் டேம் சூர். அதுல நீ சாம்பல் ஆக்கிருவ. நானும் தடுக்க மாட்டேன். ஒருமுறை உன் மேல உள்ள காதலுக்காக, உன் பாவத்துல அமைதியா பங்கெடுத்தேன். மீண்டும் ஒருமுறை பங்கெடுக்க மாட்டேன்.”​

என்று நறுக்கென முடித்துக் கொண்டான். அப்படியே ஆர்ப்பாட்டமாக, அவர்கள் திருமண வேலை நடந்து கொண்டிருக்க, மணமக்களுக்கு ஆடை நகை முதல் அத்தனையும் அதன் பாட்டுக்குத் தயாராகின. சரியாக நாளை திருமணம் என்ற நிலையில், முதல் நாள் இரவு சர்வேஷை சாத்வி ஃபோனில் அழைத்தாள். அழைத்தவள் மறுபுற மௌனம் காக்க, அவள் மௌனத்தில் புருவம் நெறிய..​

“என்னடி என்னாச்சு?”​

“அவசரமா... ஹாஸ்ப்பிடலுக்குப் போகணும், வாங்க.”​

அவள் குரலில் இருந்த பதட்டத்தில், இவன் பதறவில்லை வெகு நிதானமாக,​

“ஏன்?”​

“ரகுவரன் விஷம் குடிச்சிட்டாரு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க.”​

“சோ?” என்றான் எரிச்சல் மண்டிய குரலில்.​

“சோன்னா? நான் போகணும்.”​

“இஸ் இட்? போயேன்.”​

“நீங்க வாங்க..”​

“ஐ அம் சாரி. நான் கல்யாண வேலையில பிஸியா இருக்கேன்.”​

“அப்படி என்ன திமிரு உங்களுக்கு?”​

“ஏன் இவ்வளவு நாள் என்னைக் கூப்பிடனும், பேசணும்னு தோனாதவளுக்கு, எவனோ ஒரு டேஷ் விஷம் குடிச்சுட்டானு தெரிஞ்சதும், கூப்பிட தோனுதா?”​

“சந்தேகப்படுறீங்களா என்னை?”​

“என்னை நானே சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஒன்னும் கிறுக்கு பிடிக்கல!”​

அதில் அந்தப் புறம் இருந்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய,​

“அப்போ என்னவாம்...”​

“வர முடியாதாம்.”​

“ஹூம்.. வந்து தான் ஆகணுமாம். வர்றீங்க!”​

அவள் அழைப்பை துண்டிக்க, இங்கு இருவரின் முகங்களிலும் புன்னகை என்றால்,. அங்கே ஒருவன்,​

“எனக்கு தெரியும் சாத்வி ஒருத்தர அழிச்சிட்டு நீ வாழ மாட்ட. அவரு பெரிய ஆளா இருக்கலாம். ஆனா.. நீ எனக்கு தான்”​

என்றவன் கண்களில் பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும் பேராசை. காதல் வேதம் சிற்றின்பங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை அவனுக்கு யார் சொல்வது? காலம் உணர்த்தும்.​

 

santhinagaraj

Well-known member
சாத்வியோட அழுகையும் எமோஷனலும் ப்பா வேற லெவல்.
இந்த ரகு உண்மையிலேயே விஷம் குடிச்சானா இல்ல சாத்விய வரவைக்க நாடகம் போட்டுக்கிட்டு இருக்கானா?
 

admin

Administrator
Staff member
சாத்வியோட அழுகையும் எமோஷனலும் ப்பா வேற லெவல்.
இந்த ரகு உண்மையிலேயே விஷம் குடிச்சானா இல்ல சாத்விய வரவைக்க நாடகம் போட்டுக்கிட்டு இருக்கானா?
குடிச்சிட்டான் அவன் ஒரு ஆர்வ கோளாறு..
 
Top