எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 4

Geethasuba

New member
4

வர்ணங்கள் 4



காலை எழுந்த சுபாவுக்கு அவ்வளவு உற்சாகமெல்லாம் இல்லை. தியாதான் குதித்துக்கொண்டிருந்தாள் .ஓரளவு வேலைகள் முடிந்து விட்டது. மலேசிய பயணத்தை மனதுள் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் தான் சுபா ஏற்றுக்கொண்டாள் இந்த பயிற்சி முடிந்து இந்தியா செல்லவேண்டும் என்றால் அவள் மனது அதை வெகுவாக எதிர்பார்க்கிறது.
எங்காவது கணவன் தனது கண்களில் படமாட்டானா என்ற ஏக்கம் உண்டு.



அவ்வளவு பரந்த பாரத தேசத்தில் அவனை எங்கே பார்க்கப் போகிறேன் என்றெல்லாம் அவளுக்குத் தோன்றவே இல்லை.
கூகுளை கேட்கலாம் என்று மட்டும் ஒருமுறை எப்போதோ யோசித்தவள் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டாள் .



அவன் மனது இன்னும் முழுவதுமாக சரியாக இருந்தாலோ,இல்லை ஜெயந்தன் தொழிலை ஏற்காமல் வேறேதும் செய்து கொண்டிருந்தாலோ அவனை கூகிள் எப்படி கண்டுபிடிக்கும்?அத்துடன் அவனது வதனத்திலும் கூட எவ்வளவு வேறுபாடு இருக்கும்?நேரில் பார்த்தால் தன்னால் அவனை கண்டு பிடிக்க இயலுமா எனும் சந்தேகம் கூட அவளுக்கு உண்டு.



முக்கியமான விஷயங்களை அம்மாவுடன் சேர்ந்து முடித்தவள் அன்று மாலை விமானத்தில் தனது அம்மா,மற்றும் மகளுடன் மலேசியா நோக்கி தனது பயணத்தை தொடங்கினாள்.



விமானம் சரியான நேரத்தில் மலேசிய மண்ணை தொட,அங்கே விமான நிலையத்தில் அவர்களை அழைத்து செல்லவென அலுவலக வாகனம் தயாராக இருந்தது. இவளுடன் இன்னும் இருவர் பயிற்சிக்கு தெரிவாகி இருந்தார்கள். அவர்கள் இருவரும் முதல் நாளே வந்தாயிற்று.இவள் மட்டும் தானே குடும்பத்துடன் வருகிறாள். அதனால் ஒருநாள் தாமதமாக கிளம்பினாள்.



அன்று இரவு அலுவலக டாமெட்ரியில் தங்கிக்கொண்டார்கள். புது இடத்தில சுபாவின் அம்மாவுக்கு தூக்கம் வரவில்லை. சிங்கப்பூருக்கு வந்த புதிதில் இருந்த கவலைகள் இப்போது இல்லைதான். தியாவும் சுபாவும் நன்றாகவே உறங்கிவிட்டார்கள்.
இரண்டு நாட்களாக அதிக நேரம் வேலை செய்து தயாராகி வந்த களைப்பில் சுபா எளிதாகவே உறங்கிவிட்டாள் .



மூவருக்கும் ஒரே அறைதான். அவ்வறை மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தது.இரண்டு அறைகளில் படுக்கும் வசதியும் ஒரு அறை வெகுவான புழக்கத்திற்க்குமாக அமையப் பெற்றிருந்தது.ஒரு படுக்கை அறையில் சுபாவும் தியாவும்.மற்றொன்றில் சுபாவின் அம்மா. உறக்கம் வராமல் எழுந்து வந்த சுபாவின் அம்மா ,சுபாவின் அருகே ஜெயந்தனின் பழைய புகைப்படம் சிரித்துக்கொண்டு இருப்பதை பார்த்தாள் .



மனம் கனத்துப் போனது. என்ன ஆனாலும் தனது பெண் திருமணம் ஆனவள்,இப்படி தனித்து இருக்கலாமா...
எப்படி அவர்கள் சொன்னவற்றிற்கெல்லாம் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டுக்கொடுத்தோம்?



இதோ இங்கே அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கும் எனது மகள் உண்மையாகவே அமைதியாகத்தான் இருக்கிறாளா? அந்த ஒன்றுக்கும் உதவாத திருமணத்தால் கிடைத்தது தியா மட்டும் தான்.அதுவும் எனது மகளை இன்னொரு திருமணத்திற்கு தயாராக விடாமல் தடுக்கும் முள் போலத்தான் என்று எண்ணம் போன போக்கில் யோசித்தவர் திடுக்கிட்டார்.



‘தியா வயிற்றில் இருக்கிறாள்’ என்று தெரிந்த பிறகுதானே மகளின் கண்களில் ஜீவனே வந்தது.வாழும் ஆசை சிறிதும் இல்லாமல் விரக்தியை குத்தகை எடுத்தவளாக வந்தவள் இன்று உயிர்ப்போடு இருக்கக் காரணமே எனது பேத்தி தானே..
அவள் இந்த பூமியில் இறங்கி வந்திருக்கும் தேவதை.எனது மகளை வாழ வைக்கும் ஜீவநதி.



‘ச்சை ..என்னவெல்லாம் யோசித்துவிட்டேன்’ என்று தன்னையே கடிந்து கொண்டு மீண்டும் தனது அறைக்கே சென்றவருக்கு உறக்கம் வருவதற்கு வெகுவாக நேரமாகிப்போனது.



காலையில் எழுந்த சுபாவுக்கு மனம் உற்சாகமாக இருந்தது.எதனால் என்று அவளால் அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் ,அவளது நடையில் கூட ஒரு துள்ளல் இருப்பதை அவளாலேயே உணர முடிந்தது. தியா இன்னமும் எழுந்திருக்கவில்லை. ரூம் சர்விஸ் பணியாளர் வந்து ஒரு பிளாஸ்கில் தேநீரும் ,ஒரு பிளாஸ்கில் குழந்தைக்கு பாலும் காலை சிற்றுண்டியும் கொணர்ந்து கொடுத்துவிட்டுப் போனார்.



அலுவலகம் செல்ல சுபா தயாராகி வந்த பிறகும் கூட பாட்டியும் பேத்தியும் எழுந்திருந்திருக்கவில்லை. சிரித்துக்கொண்டே ஒரு காகிதத்தில் குறிப்பு எழுதிவிட்டு அதை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினாள் . அவளது அலைபேசி இனிமையாக அவளை அழைத்தது.



எடுத்துப் பார்த்தால் பிரணவ் அழைத்திருந்தான்.சற்றே எரிச்சல் பரவினாலும்,தனது உற்சாகத்தை குறைத்துக்கொள்ள விரும்பாமல் அவனது அழைப்பை ஏற்றுப் பேசினாள் .அவனும்,அலுவலக விஷயங்கள் மட்டும் பேசிவிட்டு வைத்துவிட்டான்.



மலேசிய அலுவலக கட்டிடம் அவளை பிரமிக்க செய்தது. சிவில் படித்திருந்தவளுக்கு கட்டிடத்தின் கட்டுமான விஷயங்கள் ஆச்சர்யம் கொள்ள வைத்தது . மதிய உணவு இடைவேளை வரை வகுப்பறையிலும், மதியத்திலிருந்தது மாலை நேரம் வரை அவர்கள் கட்டும் கட்டுமானங்களை நேரில் பார்த்துக் கற்றுக்கொள்ளவுமாக பிரித்திருந்தனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் பயிற்சிக்கென ஒதுங்கியிருந்த நேரம் போதவில்லை. இவளுடன் வந்திருந்த மற்றவர்களுக்கும் அதே உணர்வுதான்.



அன்று மாலை அவள் கிளம்பும் முன் எங்கேயோ கேட்ட குரல் அவளை வேரோடி நிற்க செய்தது. கான்பிரன்ஸ் அறையிலிருந்து வந்தது அந்த குரல். திட்ட இயக்குனரிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதற்காக அவளும் அவளுடன் பயிற்சிக்கு வந்திருந்தவர்களும் லேசாக கதவை தட்டிவிட்டு உள்ளே நுழையும் சமயமும், அங்கே அவ்வளவு நேரமாக ஆன்லைன் வழியாக நடந்த உரையாடல் முடியும் சமயமும் ஒன்றாகிப் போக,அவள் இந்த ஜென்மத்தில் கேட்கவே முடியாது என்று ஏங்கிய அவனது குரல் அவளை நிலைகுலைய செய்தது.



அவன்,அவளது காதல் தலைவன் ஜெயந்தன்.அவனது குரல் இங்கே மலேசிய மண்ணில் கேட்கிறது என்றால், அவனுக்கும் இந்த நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறதா.. தொழில் முறை தொடர்பு? அவளால் அங்கே நிற்க கூட முடியாமல் கால்கள் தள்ளாட,அங்கே இருந்த ஒரு கதிரையை பிடித்துக்கொண்டாள். அவளுக்கு குரல் எழும்பவில்லை. அவளுடன் வந்தவர்கள் திட்ட இயக்குனரிடம் அன்றைய வேலைகளை பற்றி ரிப்போர்ட் செய்துவிட்டு கிளம்பிவிட ,இவளும்கூட ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறினாள் .



அங்கிருந்த அவர்களது திட்ட இயக்குனர் இவளை ஒரு யோசனையுடனே பார்த்துக்கொண்டிருந்ததை பெண் அறியவில்லை. மனம் முழுவதும் சொல்ல முடியா உணர்வுக்குவியலாக அறைக்கு வந்து சேர்ந்தாள் சுபா.



மாலை நேரம் தனது அம்மா மற்றும் மகளுடன் வாசலில் இருந்த காஃபீட்ரியாவில் சற்று நேரத்தை செலவழித்தவள் நிதானமாய் தனது நிலைக்கு திரும்பினாள். அந்த குரல் அது தனது கணவனது தான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவர் தானா!என்று அவள் மனம் மீண்டும் அவளை கேட்டது.அவளுக்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.



தன்னை மீட்டுக்கொண்டவள், "எனக்கு இன்னைக்கு போயிட்டு வந்த ட்ரைனிங் சம்மந்தமா கொஞ்சம் படிக்கணும். நா ரூமுக்கு கிளம்புறேன்.இங்கே கேம்பஸ் உள்ளேயே பவுண்டைன் இருக்கு.நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அங்கே இருந்துட்டு வாங்க" என்றுவிட்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு கிளம்பினாள்.மற்றவர்கள் எல்லோரும் தனியாக வந்திருப்பதால் ஒருவருக்கொருவர் நேரம் செலவழித்துக்கொண்டிருக்க எப்போதுமே எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் பெண் இப்போதும் தனது குடும்பத் துடன் மட்டும் நேரத்தை செலவழித்துவிட்டு வேலையை தொடர கிளம்பிவிட்டாள்.



மகளுக்கு வேலை செய்ய ஏதுவாக பேத்தியை பவுண்டைன் பார்க்கவென அழைத்துக் கொண்டு சென்றாள் சுபாவின் அம்மா. அதை பார்த்துக்கொண்டு சந்தோஷமாக நேரத்தை கழித்துவிட்டு வந்தாள் தியா. அவர்கள் இருவரும் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.அதற்குள் படிக்க வேண்டியவற்றை முடித்துவிட்டு,தனது சந்தேகங்களை குறிப்பும் எடுத்து வைத்துவிட்டாள் சுபா.



சென்னை அலுவலகத்தில் தேநீரை மெள்ளவே அருந்திக் கொண்டிருந்த ஜெயந்தனின் மனம் அமைதி குறைந்து தவித்தது. தன்னிடம் தொலைந்து போன ஏதோ ஒன்று தன்னருகே இருப்பதை போலவும்,கண்களில் அது படாமல் கண்ணாமூச்சி ஆடுவது போலவும் உணர்வு அவனை குழப்பியது.



எது என்னை விட்டுப் போனது? அல்லது எதை நான் தொலைத்துவிட்டு நிற்கிறேன்? எனது நினைவு தெரிந்து என்னை விடுத்து போனது எனது மனைவி கன்யா. அவளைத் தவிர வேறு எதுவும் இல்லையே..என்றெல்லாம் யோசித்தவனுக்கு மிஞ்சியது வெறும் தலைவலிதான். ஜெயந்தனால் ஒரு நிலைமையில் அமைதியாய் இருக்க முடியாமல் தனது இருப்பிடம் நோக்கி கிளம்பிவிட்டான்.



அவன் தங்கியிருப்பது பெசன்ட் நகரில் . கடற்கரை ஓரமாக கம்பீர பங்களா மன அமைதிக்காவே அவன் சென்னை வருவதற்கு முன்பாக வாங்கப்பட்டது. பழைய விஷயங்கள் எதுவும் அவனது நினைவுகளை தாக்கக் கூடாது என்பதற்கவே அவனது அம்மா பார்த்து பார்த்து தயார் செய்திருந்தாள் .



வீட்டுக்கு செல்வதற்கு கொஞ்சமும் பிடிக்காதவனாக கடற்கரையில் வெகுநேரம் அமர்ந்திருந்தவனுக்கு, முழுநிலவு பார்க்கும் ஆசை முகிழ்க்க கைகளை தலையணையாக்கி கால்களை நீட்டி படுத்து விட்டான். கண்கள் சொருக ,எழுந்து கொள்ளும் எண்ணமே அவனிடம் இல்லை.



அவனைத் தழுவிச் சென்ற மென்மையான காற்று, அவனை ஆசையாய் தழுவிக்கொண்ட மங்கையை அவனுக்கு ஞாபகம் செய்ய, தொலைந்த அந்த முகத்தை மீண்டும் தேடினான். அவள்,ம்ஹும்..நிச்சயம் கன்யா கிடையாது. இவள் வேறொருத்தி.யார் அவள்? என்னை இவ்வளவு தவிக்க விடும் பெண் யார்?



ஒருவேளை பூர்வ ஜென்மத்தில் இருந்த பந்தமோ?எண்டு கூட அவனுக்கு தோன்றிவிட, சுற்றுப்புறம் மறந்து பெரியதாக சிரிக்கத் தொடங்கிவிட்டான். அவனது மனம் லேசாகியது. தனது காரை கிளப்பிக்கொண்டு பங்களாவுக்கு சென்றுவிட்டான்.



ஜெயந்தன் கட்டிக்கொண்டிருக்கும் இரண்டாயிரம் குடியிருப்புகள் கொண்ட மேற்தட்டு மக்களுக்கான லக்ஸுரியஸ் அடுக்ககத்தின் கட்டுமான பணி சுபா வேலை செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. ஏறத்தாழ நானூறு ஏக்கர்கள் நிலம் மஹாபலிபுரம்-பாண்டிச்சேரி வழியில் .அதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்து, நிலங்களைக்கூட பதிவு செய்தாகிவிட்டது.



இன்னமும் மூன்று மாதங்களில் கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கவேண்டும். கட்டப்போகும் அந்த அடுக்ககத்தில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருபத்து நான்கு மணிநேர இணைய இணைப்பு வசதி, பிரபல நிறுவனங்களுடன் மளிகை மற்றும் காய்கறிகளுக்கான கடைகளுக்கான ஒப்பந்தம், உள்ளேயே இரண்டு பெரிய மால்கள், தனியாக மூன்று பிரபல துணிக்கடைகள் ,தங்கமும்,வைரமும் விற்பனை செய்யவென்று பிரபல நகைக்கடைகள், தியேட்டர்கள் என ஒப்பந்தங்கள் போடுவதும்,அது சம்மந்தமான வேலைகளை செய்வதுமாக நேரம் போதாமல் சுற்றிக்கொண்டிருந்தான் ஜெயந்தன்.



அவ்வப்பொழுது உள்ளுணர்வு மட்டும் ஏதோ அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாலும்,அதை நோக்கி அவன் செல்லவில்லை. ஆனால் அவனையும் அறியாமல் சோர்வென்பதே தெரியாமல் உழைத்துக்கொண்டிருந்தான். அவனது அம்மாவும் அப்பாவும் அவ்வப்பொழுது அவனைக் காண வருவதும்,அவனுக்கு திருமணம் செய்துகொள்ளும் முடிவை சீக்கிரம் எடுக்குமாறு அறிவுறுத்துவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. அவனது உற்சாகம் மட்டும் குறையவில்லை.
 
Top