சாத்வி அவனைக் கூர்ந்து பார்க்க, அவன் விழிகளில் அவள் விழிகளை கூர்ந்து நோக்கவே, தயக்கம் கொட்டிக் கிடந்தது. அதை உணர்ந்தவள் அவனை முறைத்துப் பார்த்து,
‘உன் கர்வத்தை தொலைக்காதே! அந்த கர்வத்துக்குள் என் காதல் உண்டு!’ என்று விழிகளால் பதில் சொல்ல, கண்களை மூடித் திறந்து அவளுக்கு சம்மதம் கூறினான்.
மீண்டும் ரகுவரன் புறம் திரும்பி, “ஓவ்! இதான் உங்க பிராப்ளமா?”
தொலைக்காத நிதானத்தோடு கேட்க, அதில் சற்றே குதூகலமானவன், “இல்ல... இன்னொன்னு இருக்கு”
புலி பதுங்குவதால் பயந்து விடுவதில்லை என்பதை மறந்து போனான் போலும், சர்வேஷ் புறம் விரல் நீட்டி பயத்தில் அதிகமாக சுரந்த எச்சிலை விளங்கி விட்டு,
“இ.. இவர், இவருக்கு”
“சும்மா தயங்காமச் சொல்லுங்க சார். அவருக்கு என்ன?”
“இவரோட டிவோஸ்க்கு ஒரு காரணம், என்னன்னு தெரியுமா?”
சற்றே சாய்ந்து அமர்ந்து விட்டு,
“சர்வேஷ் அக்கண்யன், ஆண்மை இல்லாதவர். ஹூம்.. அதையும் விட ஹீ இஸ் அ கே(He is a gay). அதைச் சொன்னது நான் இல்ல இவங்களோட வாழ்ந்த இவங்க எக்ஸ் ஒய்ஃப் சயத்தா அரவிந்தன். தானே நேரில் பார்த்ததா, அவங்களே ஒரு பேட்டில சொல்லி இருக்காங்க. அந்தப் பீரியட்ல ரொம்ப கான்ட்ரவசியான டாபிக்கே, மிஸ்டர் சர்வேஷ் அக்கண்யன் தான்!”
ரகுவரன் வன்மத்தோடு கூறவே, இங்கே ஒரு ஆறடி மனிதன் அரை அடி நிலத்துக்குள் புதைந்தால் என்னவென்று மனதாலே செத்துக் கொண்டிருந்தான். ஒரு முறையா, இருமுறையா மூன்று வருடங்கள் அவனைச் சுற்றும் ஆண்மை இல்லாதவன், கே என்ற அவச்சொற்களில் தன் ஆணுறுப்பை வெட்டி வீசினால் என்னவென்று எத்தனையோ முறை முயன்றிருக்கிறான். அந்த அளவுக்கு இந்த வார்த்தையும், இந்த வார்த்தைக்கு பின் இருக்கும் வன்மமும், அவனை மன ரீதியாக சிதைத்த காலங்கள் ஏராளமே.
அதிலிருந்து எல்லாம் மீண்டு வந்தவனுக்கு, தான் நேசிக்கும் பெண்ணின் முன் அவளை நேசித்த இன்னொரு ஆண்மகன் அதை சொல்லக் கேட்க, செத்தே விட்டால் என்னவென்று தோன்றிற்று. கூனிக்குறுகி அவமானத்தில் அவன் தலை குனிய எத்தனிக்க,
“பளார்” என்ற அறை விழ, அந்த சத்தத்தில் சர்வேஷ் நிமிர்ந்து பார்த்தான். அறை வாங்கிய ரகுவரனோ, கன்னத்தைப் பிடித்து அதிர்ந்து போயிருந்தான். முற்றிலும் எதிர்பார்க்காத இந்த அறையில் இருந்து ரகுவரன் மீள்வதற்குள், மீண்டும் ஒரு அறை “பளார்” என அவன் அடுத்த கன்னத்தில் அறைந்தவள், சர்வேஷை நோக்கி,
“யோவ் ராவணா! தல குனிஞ்ச! இதே அறை அங்க விழும். அத்தனை வேதனையிலும் அவன் முகத்தில் சிறு ஒளி. இதழ்களில் துளி வளைவு. சாத்வியோ குறையாத ஆங்காரத்தோடு, ரகுவரனை நோக்கித் திரும்பியவள்
“யார் ஆம்பள? எது ஆம்பளத்தனம்? முதல்ல ஆண்மைக்கு அர்த்தம் தெரியுமா? பெண்ணின் மார்பு காமத்தின் பார்வையில் பார்க்கப்பட வேண்டியது இல்லை பரிசுத்தம் ஆனதுன்னு சொல்ற அத்தனை ராமன்களும், அவங்க வீட்டு பொம்பளையோட மூனு நாள் வலியக் கூட தாங்க மாட்டானுங்க. அந்த மூனு நாளும் பொம்பளைய தீட்டா, தீண்டாமையா பார்க்கிறவன் ஆம்பளையா? இல்ல.. காசு கொடுத்து போற விபச்சாரிக்கும், மனசு இருக்குன்னு பாரக்கிறவன் ஆம்பளையா?
ஒரு தாயோட மார்பு காம்புல ஒட்டிட்டு நிக்கிற ஒரு துளி பாலையும் காமத்தோடு பார்க்கிறவன் ஆம்பளையா? இல்லை... பஸ் ஸ்டாண்ட்ல நின்னு பசிக்கிற குழந்தைக்கு பால் கொடுக்கிற தாய்க்கு தன் அழுக்கு வேஷ்டியை கழட்டி போத்தி விடுற, சாதாரண மூட்டை தூக்கிற தொழிலாளி ஆம்பளையா? ஒரு பொம்பளையோட படுக்கையில் புரள்றவனும், வத, வதனு புள்ள பெத்துக்கிறவனும் ஆம்பளையும் இல்ல, ஆம்பளத் தனம் உள்ளவனும் இல்ல.
நாய் கூட தான் குட்டி போடுது சார். நீங்க சொல்ற பல ஆம்பள ராமன்கள் தான் வெளியே ஏக பத்தினி விரதனுங்கிற போர்வைக்குள்ள இருந்துட்டு, கட்டிக்கிட்ட பொண்டாட்டியை படுக்கையில விபச்சாரிய விட கேவலமா நடத்துற கொடுமைகளும் இருக்கு. தாய் தகப்பன் பார்த்து திருமணம் பண்ணி வைச்ச பொண்ணத் தவிர வேற பொண்ண நிமிர்ந்து பார்க்காத எத்தனையோ ஆம்பளைங்க, பொண்டாட்டி பெண் குழந்தை பெத்துட்டாலே, அவள அடிச்சு துன்புறுத்துற ஆண்மையும் இருக்கு. அதே நேரம் பெத்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊத்தி கொல்ற ஆம்பளத்தனமும் இருக்கு.
இப்படி கூட படுகிறவனும், பிறப்புக்கு காரணமாக இருந்தவனெல்லாம் ஆம்பள இல்ல. அவரோட ஆண்மையை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அந்த பொண்ணு.. என்ன பேர் சொன்னீங்க? சயாத்தா! அவ இவரோட வாழலைனா, குறை அவ மனசுல இருக்குன்னு நான் அடிச்சு சொல்லுவேன்!” என்று விட்டு துளி மௌனம் காத்தவள்,
“நீங்க ராமன்னு சொல்றீங்க தானே? ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம அவளை கத்தி முனையில் வைத்து அடைய நினைக்கிறீங்களே! நீங்க ராமனா? இல்லை, அவர எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்ச அவர் நினைச்சிருந்தா என்னைக்கோ உடலால அவருக்கு நான் மனைவியாகி இருக்கலாம். அந்த மனுஷனோட ஒத்த தொடுகைல, நான் உருகி கரைஞ்சுருவேனு தெரிஞ்சும் கண்ணியம் காத்த என்னோட ராவணன் ராமனா? அண்ட் அவர் ஆம்பளையா? ஆம்பள இல்லையா? அப்படிங்கறத அவரோட வாழ்ந்து பார்த்து நான் தெரிஞ்சுக்கிறேன். எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உங்களைப் பார்க்க வந்தது ஒரு மனிதாபிமானத்துக்காக மட்டும் தான் சார். மற்றபடி வேற எதுக்காகவும் இல்லை.
வாழ்க்கையில இனிமே உங்கள பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். நான் லேசா கண்ணசைச்சா போதும், இந்த இடத்துல உங்கள காணாமப் பண்ணிருப்பார்! அப்படி செஞ்சுட்டா வார்த்தையில வன்மம் வச்சிட்டு இருக்க உங்களுக்கும், மனசுல ஒழுக்கத்தை வச்சுட்டு இருக்க அவருக்கும், வித்தியாசம் இல்லாமப் போயிரும்.”
குறையா நிமிர்வோடு பேசியவள், அது வரையிலும் இறுகிப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த சர்வேஷ் புறம் சென்று,
“வாங்க புருஷ், போகலாம்.”
அவனை வலுக்கட்டாயமாக இழுக்க, அவன் வலுவுக்கு முன் அவள் ஒன்றும் இல்லை என அறிந்தும், அந்த முயலின் பிடிக்குள் சிங்கம் விரும்பியே தன்னைக் கொடுத்தது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு ரகுவரனை கடக்க முனைந்தவள், நின்று திரும்பி அவனைப் பார்த்து.
“அஞ்சு கணவர்களை கொண்ட பாஞ்சாலி அஸ்தினாபுர சபையில வஸ்திரம் உரிய மானபங்கப் படுத்தப்பட்டா, அதே கெட்டவன்னு சொல்லப்பட்ட துரியோதனன், தன் மனைவியை பார்த்து எடுக்கவா, கோர்க்கவான்னு கேட்டான்.
இதயத்தில் சீதையை மட்டும் சிறை வைத்து வாழ்ந்த ராமன், உலகத்துக்கு முன் சீதையை தீக்குளிக்கச் சொன்னாரு, ஆனால், சீதையை சிறை எடுத்த ராவணன், தன் மனைவி உயிரோடு இருக்கிற வரைக்கும் சிதையில இறங்க விடல. எனக்கு இலக்கியத்துல ராமனை ரொம்ப, ரொம்ப பிடிக்கும் தான். ஆனால், வாழ்க்கையோட இலக்கண விதிப்படி, இந்த ராவணனைத் தான் பிடிக்கும்!”
என்றவள் மேலும், மேலும் விளக்கம் கொடுக்கவோ, கேட்கவோ விரும்பாதவளாக இறுக்கிப் பிடித்த சர்வேஷ் கையை விடாதவாறு அவனோடு கார்பாக்கிங் செல்ல, தங்கள் காரில் ஏறி கொண்டனர்.
இப்படியே அவர்கள் பயணம் ஹாஸ்டல் நோக்கிச் செல்ல, சர்வேஷ் அந்தப் பயணம் முழுவதிலும் மௌனியானான். அவன் மௌனங்களுக்குள் மறைய நினைக்காத ரணங்கள் வலிக்கத் தொடங்கியது. இறுகிப் போயிருந்த முகத்தில், அடர்ந்த கடுமையும் தெரிந்த ஆங்காரமும், அவன் தன்னை எத்தனை அடக்கி ஆள்கிறான் என்பதற்கு சாட்சி ஆகியது. ஹாஸ்டலில் கார் நிற்கவும், கார் கதவை திறக்கப் போனவள் நின்று சர்வேஷ் டி-ஷர்ட் காலரைப் பிடித்து நிறுத்தி, அவன் இரு கன்னத்திலும் மாற்றி, மாற்றி முத்தமிட்டவள்,
“சரினா, அங்க விழுந்த அறை இங்கே விழுந்திருக்கணும். அவன் பேசுனா தலையக் குனியப் போவீங்களா நீங்க? அடிச்சு இருப்பேன், பட் மனசு கேட்கல. சந்தர்ப்பம் அமையும் போது கண்டிப்பா தாரேன்.”
அவனின் பார்வையில் துளியும் மாற்றம் இல்லை. அதைப் பெரிதாய் எண்ணாதவள்,
“ரகு சார் சொல்லுறாரு. நான் முன்ன ரொம்ப பேச மாட்டேனாம். இப்போ நிறைய பேசுறனாம். ஏன்னா, முன்ன என் பேச்சை உரிமையா கேட்கவும், நான் உரிமையா பேசவும் யாரும் இல்லை. இப்போ நீங்க இருக்கிறீங்க. இப்படி என்னை நிறையவே தாங்க வேண்டி இருக்கும். இதுக்கே மூஞ்சி தேஞ்சு போயிட்டா எப்படி? இந்த உணர்வு தொலைத்த விழிகள் வேணாம். இறுகிப்போன இந்த உருவமும் வேண்டாம். கண்ணுல கர்வத்தோட உடல் மொழிகள்ல திமிரோட, நான் சர்வேஷ் அக்கண்யன்னு சொல்லுவிங்க பார்த்தீர்களா? அந்த சர்வேஷ் தான் வேணும். நாளைக்கு என் கழுத்துல தாலி கட்டுவது, அந்த சர்வேஷா தான் இருக்கணும்.”
அவன் பதிலை எதிர்பாராது இறங்கிப் போனாள்.
இங்கே அதே இறுகிய முகத்தில் பழைய கடுமையோடு இறங்கி வந்த மகனைக் கவனித்த அக்கண்யன், அவன் எங்கு சென்று வந்தான் என்பதை அறிந்து கொண்டு,
“சர்வா!” அழுத்தமாக அழைக்க, அதை விட அழுத்தமாக மகனும் தந்தையை பார்த்து வைத்தான்.
ரகுவரனை சாத்வி பார்க்கச் சென்று வந்ததால், தவறாகப் புரிந்து கொண்டு சாத்வியை கோபிக்கிறான் என்றெண்ணி,
“சந்தேகப்படுறியா சர்வா!”
“என்னை நானே சந்தேகப்பட மாட்டேன் டாட்!”
தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே,
“நான் ஒன்னும் அக்கண்யன் இல்லை. நான் சர்வேஷ். அது போல அவளும் தழைந்து போக ஜனனி இல்ல, சாத்விகா. நான் சந்தேகப்பட்டா, சந்தேகப்படுவியானு கேட்டு வாய் மேலயே ரெண்டு போடுவாளே ஒழிய, நம்ம புருஷன் தானேனு என்னை மன்னிக்க மாட்டாள்!”
என்றவன் விறுவிறு என அந்த இடம் விட்டு அகல, தான் ஒரு காலத்தில் விட்ட பிழையை, மகன் குத்தி காட்டியதில் வலித்தாலும், மகனின் புரிதலில் அவன் இதழ்கள் மென்மையாக விரிந்தன.
“பெரியவா காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கோ!”
அது வரையிலும் ஆண் அகலிகை சிலைக்கு உயிர் இல்லை போலும். நேற்றைய தாக்கமா? இல்லை, முதல் திருமண நினைவுகளா? ஏதோ ஒன்றில் வெந்து கொண்டிருந்தவன், உயிர் மட்டும் பிழைக்க உணர்வுகள் மௌனியாகின.
ஐயர் குரலில் தன்னவன் எஃகு போல இருக்க, மணமேடை வந்தது முதல் இந்த நொடி வரை அவனை, அவன் சிறு பார்வையை, துளி தீண்டலை எதிர்பார்த்து ஏமாந்தவள், சினம் எல்லையை நெருங்கவே, எரிமலை வெடிக்கத் தயாராகியது. அவனை லேசாக அசைத்தவள், அவனை நோக்கி சரிந்து,
“ஐயர் ஆசீர்வாதம் வாங்கச் சொல்றாங்க, புருஷ்”
“ஹ்ம்” என்றவன் தாய், தந்தை மற்றும் அண்ணனிடம் ஆசி பெற்றான். மறந்தும் அரவிந்தன் புறம் செல்லவில்லை. அதில் அரவிந்தனுக்கு வேதனை உண்டு. ஆனால், அதை தன்னில் புதைத்துக் கொண்டான். அதுவரையிலும் சாத்விக்கு அவன் கடுமையை, வானிலை மாற்றம் போல நிகழும் அவன் மனநிலையை பொறுத்தவளுக்கு, அவன் தன்னை சிறு பார்வையால் கூட தீண்டாத ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை.
‘பொறு மனமே! பொறு! நீ அவனை தென்றல் என்று நினைத்தால், அவனோ புயல். நீ ஒரு துளி என்றெண்ணினால், அவன் பெரும் வெள்ளம். மாறும் மனநிலையும் அவன் மூர்க்கமும் கையாள்வது அத்தனை எளிதல்ல!’ மனமோ முணுமுணுக்க.. அவள் மனதில் இன்னோர் குரல்,
‘இன்றைய நாள் எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சும் சிலையான அவரை சும்மா விடச் சொல்லுறியா?’ மௌனம் காத்த அவள் உள்ளம் திடீரென குரல் கொடுத்தது. ‘செஞ்சிரு..’ அதன் பின்னே மௌனமானாள்.
இவள் இரு கன்னத்திலும் கை வைத்து ஜனனி முத்தமிட்ட தொடு உணர்வில், நினைவில் மீண்டவள் மலர்ந்து சிரித்தாள்.
“சந்தோஷமா இருக்குடா. என் வீட்டுக்கு இன்னோரு மகாலஷ்மி. எனக்கு உன்னை சர்வாக்கு கட்டி வைக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா.. அவங்க அப்பா தான் ஒத்துவரலை.”
‘அச்சோ! அக்கண்யன் சார்க்கு நம்மளை பிடிக்காதா?’ அவள் அதிர்ந்து நோக்க,
அதைக் கண்ட அக்கண்யன் தன் நெற்றியில் தட்டிக்கொண்டே,
“ஏன் பேபி? சொல்றதை ஒழுங்காச் சொல்லேன். சும்மாவே சாத்வி என்னோட பேசமாட்டா, பயப்படுவா. இப்போ இது வேறு. அதெல்லாம் பிடிக்காம இல்லம்மா. சர்வேஷோட முடிவு என்னன்னு தெரியாம, ஜனனியை டிசைட் பண்ண வேணாம்னு சொன்னேன். அதைவிட என்னோட மகனோ மாமிச மலை, நீயோ அழகான பூச்செடி. அவன் முரட்டு குணத்த உன்னால தாக்கு பிடிக்க முடியுமான்ற ஒரு யோசனை இருந்துச்சு. வேற ஒன்னும் இல்ல.”
என்றவனின் குரலில் தெறித்த நக்கல், விழிகளில் தொக்கி இதழ்களில் வெளிப்பட, இறுகி இருந்தவன், அதில் பல்லைக் கடித்தான்.
இதையெல்லாம் கண்டும் கவனியாத சாத்வி, அவளுக்கான நேரம் வரும்வரை பொறுமை காத்தாள்.
அப்போது அவனை நெருங்கிய அரவிந்தன்,
“கங்கிராஜுலேசன், போர்த் ஆப் யூ!”
இருவர் தலையிலும் கை வைத்து ஆசீர்வதித்தவன்,
“இட்ஸ் அ நியூ பிகினிங். சர்வா கண்ணா! நீ நல்லா இருப்ப. நல்லதே நடக்கும். இனி உனக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்.”
என்னதான் சர்வா ஒதுங்கிப் போனாலும், அரவிந்தனால் அப்படி ஒதுங்கி விட முடியுமா என்ன? அவன் ஆருயிர் தோழன் அக்கண்யனின் செல்ல மகனாயிற்றே. ஆனால் கணவனுக்கு உள்ள இங்கிதம், மனைவிக்கு இல்லை போலும். இடம் பொருள் மறந்த கவிதா, கண்ணுக்குள் அவள் மகள் மட்டுமே வலம் வந்தாள். மகள், மகளின் வாழ்க்கை, அவள் எதிர்காலம் இதை சுற்றியே அவள் எண்ணங்கள் சுழன்றன.
அதை வார்த்தையாகக் கோர்க்க நினைத்த அவள், “உனக்கென்ன நல்லா இருமா. சாதாரண வீட்டுக்கா மருமகளாப் போற. அதுவும் உன் தகுதிக்கு உலக சாம்பியன் புருஷனா கிடைக்கிறது எல்லாம் வரம் தானே. புடிச்சாலும் புளியங்கொம்ப தான் புடிச்சு இருக்க. என் மகளுக்கு தான் வாழக் கொடுத்து வைக்கல. நீயாவது நல்லபடியா வாழு!”
அந்த வாழ்த்தில் தான், எத்தனை வன்மம். இதுவரையிலும் கவிதா ஆதங்கத்தில் நடந்து கொள்கிறார் என்று நினைத்தவர்கள், உள்ளத்தில் அவர் தரம் மிகவும் தாழ்ந்து போனது.
கைகளை முறுக்கிக் கொண்டு சர்வேஷ் சண்டைக்குக் கிளம்பும் முன்..
“கவிதா!” அதட்டிய அரவிந்தன், “கிளம்பலாம்!” என்று அக்கண்யனிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற, இப்போது தனக்குள் இறுகிப் போவது சாத்வியின் முறையானது.
அதுவரையிலும் தன் எண்ணங்களில் சுழன்றவன், பட்டென்று சாத்வியை நெருங்கி அவள் கையைப் பிடிக்க, அவன் பிடித்த அதே வேகத்தில் உதறித் தள்ளியவள் குரலைத் தாழ்த்தி,
“என்ன எக்ஸ் மாமியாருக்கு சப்போர்ட்டா?”
“என்ன வாய்டி இது? என்ன பேச்சு பேசுற?”
“ஓவ்! இப்போ தான் தெரியுதா? இத்தனை நேரம், ஏனோ தானோன்னு இருந்துட்டு, இப்போ அவங்க என்னைப் பேசவும் கொஞ்சுறதுக்கு வாறீங்களா?”
“சாத்விகா!” அவன் கடுமையில் அவளுக்கோ, கோபத்தில் மூக்கு நுனி சிவந்து விட்டது.
“பொண்டாட்டி போஸ்டிங் கிடைச்சிட்டாலே, பொண்ணுங்க எல்லாம் ட்ராஜிட்டியா மாறிருவீங்கடி!”
அவள் முகம் திருப்பி மௌனம் சாதிக்க. சாத்வியின் கையை நெறித்தவன்,
“பேசுடி!”
“ஸ்.. ஆஆ.. வலிக்குது.”
“புருஷ்.. சொல்லுடி!” மௌனம்..
“நேத்து கேட்காமச் சொல்லத் தெரிஞ்சவளுக்கு இப்போ சொல்றதுக்கு என்னவாம். புருஷ் சொல்லுடி!”
அவள் மௌனம் அவன் மூர்க்கத்தைக் கூட்டியது.
“நான் அப்படி சொல்லுற மாதிரி, நீங்க நடந்துக்கலை!”
“என்னடி நடந்துக்கலை?” கைப் பிடியை அழுத்த, வலித்தாலும் பொறுத்துக்கொண்டே,
“என் திருமணம் எதிர்பார்ப்பு இல்லாதது தான். பட், என் புருஷன் அட்லீஸ் என் முகத்தையாவது பார்க்கணும்னு நினைச்சேன். ஏமாத்திட்டீங்கல்ல?”
“ஏய் மண்டோதரி!” அவள் கையை பட்டென்று விட்டுவிட்டு, அவளை லேசாக அணைத்துக் கொள்ள,
“ஒன்னும் வேணாம் போயா!” அவள் முகம் திருப்பவே, சர்வேஷ் சன்னமான புன்னகையோடு,
“திட்டிக்கோ, திட்டிக்கோ!”
அவள் விழிகள் இரண்டிலும் விழி நீர் தேங்கி நிற்க, தன்னை நிமிர்ந்து பார்த்தவளை..
“ஐ ஆம் ஸ்ட்டக்டி. என்னால ஜென் நிலையிலோ, ஸ்டேபலாவோ இருக்க முடியாதுடி. நான் காட்டான்! இப்படியே பழகிட்டேன்.”
இன்னும் அவளை நெருங்கி,
“ரூம்ல வச்சு வேணுனா, தனியா அடிச்சுக்கோடி. இங்க சுத்தி கேமரா இருக்கு.”
“ரொம்ப தான்.”
இன்னும் அவளை நெருங்கியவன்...
“உன் உதட்டால அடிச்சா ஆயுசுக்கும் வாங்கிக்கிறேன். கடிச்சா கூட ஓகே!”
சாத்வியின் முகமோ வெட்கத்தில் சிவந்தது. அவள் அந்தரங்கம் அறியப் போகும் முதல் ஆண் அவன். கலவி, காமம் இரண்டுக்கும் துளி அறிவு இல்லாதவளுக்கு, அவனது சிறு, சிறு ஸ்பரிசமும் மயக்கத்தைத் தந்தது.
“க்கும்” குரலைச் செருமிய ஆத்விக், “போதும் கிளம்பலாம் சர்வா. வாமா போகலாம். ராகவி கூட்டிட்டு வா”
எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிச் செல்ல. அந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தவள், சர்வா வாழ்க்கைக்குள்ளும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டாள். இப்படியே சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து, முதல் இரவு அறைக்குள் அவளை அழைத்து வந்த ஜனனி, சாத்வியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு.
“ரொம்பவே வலியை என் மகன் அனுபவிச்சுடான்டா. மத்தவங்க பார்வைக்கு ஆச்சரியமா, பிரமிப்பா, பலசாலியா தெரியிற என்னோட பையன் சர்வேஷ் அக்கண்யன், அவமானத்தில் கூனிக்குறுகி நின்னதை இந்தக் கண்ணால பார்த்திருக்கேன். பெரிய இடத்துப் பிள்ளைகிட்டவும் நல்லது இருக்கும்னு யாரும் நினைக்கிறது கம்மி. ஏன்னா பணம் இருக்கே, என்ன வேணும்னாலும் பண்ணிடுவாங்க அப்படிங்கிற ஒரு எண்ணம், நம்ம சமுதாயத்துல ஆழமா பதிந்து போச்சு. அவனுக்குள்ள இருந்த நல்ல மனுஷனை மைக் போட்டு பேசி, பேசியே கொன்னுட்டாங்க.
மூனு வருஷம் ஆச்சு சாத்விமா. என் சர்வா இந்த வீட்டுக்குள்ள வர. மூனு வருஷம் ஆச்சு என் புள்ள என்னை அம்மான்னு கூப்பிட. என் கண்ணீர் கரைக்கல, என் வேதனை கரைக்கல, ஏன் என் யாசகம் கூட அவனைக் கரைக்கலை.
ஆனா... உன்னோட ஒத்த பார்வையில அவன் கட்டுப்பட்டு நிற்கிறான். உன்னோட விழி அசைவு தடம் பிடித்து நடக்கிறான். இதெல்லாம் என் சர்வாவான்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கும். யாருக்குமே அடங்காத மூர்க்கன்னு பேர் வாங்குன என் புள்ள, அன்னைக்கு ஆஃபீஸ்ல வச்சு, உனக்காக சேவகம் செய்ததை கண்ணால பார்த்தேன். சத்தியமா சொல்றேன்மா, பெத்த வயிறு குளிர்ந்து போச்சு.
என் மத்த புள்ளைங்க எல்லாம் வாழ்க்கையில செட்டில் ஆயிட்டாங்க. இவன் ஒருத்தன் தான் வாழ்க்கையை தொலைச்சிட்டு நின்னான். ஆனால் இப்போ நான் செத்தாலும் கவலை இல்லடா. அவன நீ பாத்துப்பனு நம்பிக்கை இருக்கு”
“என்ன ஜனனிமா ஏன் இப்படி பேசுறீங்க? நான் இந்த வீட்டுக்குள்ள அவருக்காக மட்டுமே வரல. உங்களோட இருக்க போறேன்னு ரொம்ப சந்தோஷமா வந்து இருக்கேன். இந்த மாதிரி அபசகுணமா பேசாதீங்க.”
இல்லடா இது அபசகுணமில்ல. ஒரு தாயோட மிதமிஞ்சிய சந்தோஷம். தன்னோட குஞ்சி எல்லாம் வயிறு நிரம்ப சாப்பிட்டாலும், குறை வயிரா இருக்க அந்த ஒத்த குஞ்சு மேல தான் தாயோட பார்வை அதிகமாக படியுமாம், அப்படித்தான் எனக்கும். என் பிள்ளை எப்படின்னு இன்னும் வர எனக்குமே புரிஞ்சுக்க முடியல. அவங்க அப்பாவை தவிர அதிகமா யாரையும் பக்கத்துல சேர்க்க மாட்டான். அவனை புரிஞ்சுக்கிட்ட அவருமே அவன் விஷயத்துல என்கிட்ட வாய் திறக்க மாட்டாரு. நீயாவது புரிஞ்சுக்கோ. சர்வேஷ்க்கு யாருக்கும் தெரியாத மறுபக்கம் ஒன்னு இருக்கு, அந்தப் பக்கத்தை உன்னோடு இருக்கும் போது நீயாவது நேசிடா!”
என்றவள் சாத்வியின் நெற்றியில் முத்தமிட்டு விலகிச் செல்ல, விஸ்தீரமான அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமுக்கு இணையான அந்த ரூமுக்குள் அத்தனை வசதிகளும் கச்சிதமாக இருந்தது. பெயிண்டிங் அண்ட் ஆன்டிக் திங்ஸ் என மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையைப் பார்த்தவள் அப்படியே பெட்டில் அமர்ந்தாள்.
அலைபேசியில் வந்த அழைப்பில் மூழ்கியவன், எத்தனை நேரம் பால்கனியில் நின்று இருந்தானோ அறியவில்லை. சற்று நேரத்துக்கு முன் வந்த அழைப்பில் பேசிய அவன் தொழில்துறை எதிரி ஒருவன்,