எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 06

அத்தியாயம் 06

சக்கரவர்த்தியின் குடும்பத்தார் சிவகுமாரின் வீட்டின் எட்டு பேர் அமரக்கூடிய சோபாவை நிறைத்தும் இடம் பற்றாமல் டைனிங் டேபிள் கதிரைகளிலும் அமர்ந்திருந்தனர்.

சக்கரவர்த்தி குடும்பம் மற்றும் அவரின் தம்பியின் குடும்பம், மகேஷ் உட்பட மேலும் சில சொந்தக்காரர்கள் அவர்களுடன் வந்திருந்தனர்.

பச்சை வண்ண சேலை உடுத்தி கை நிறைய தங்க வளையல்களுடன் கழுத்தில் அவள் எப்போதும் அணியும் மெல்லிய சங்கிலியும் அதனோடு பெரிய அட்டிகையும் அணிந்து இருந்தாள். அவள் அசையும் போதெல்லாம் அவள் காதில் இருந்த லோலாக்கும் சேர்ந்து அசைந்தாடியது. கண்களுக்கு மை தீட்டி. நெற்றியில் சின்ன சிவப்பு பொட்டிட்டு கூந்தலை பின்னி இருந்தாள்பெண்.

பார்ப்பவர்களுக்கு தான் ஒரு ஷோகேஸ் பொம்மை போல் காட்சியளிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு எப்போதடா நாம் இந்த அலங்காரத்தை கலைப்போம் என்று இருந்தது.

வந்தது முதல் தன்னை பார்வையால் கூட தீண்டாமல் இருந்த ப்ரியாவை கண்டு கௌதமின் புருவங்கள் சுருங்கின. அவள் எவ்வளவு மறைத்தும் அவன் கண்களுக்கு மட்டும் அவளின் எரிச்சலான முகபாவனை தென்பட்டது.

அவளின் முக அலங்காரத்தை கண்டதுமே தெரிந்துவிட்டது யாரோ ஒரு ஒப்பனை கலைஞர் மூலமாகத்தான் அலங்காரம் செய்து இருக்கிறாள் என்பது.

இயற்கையிலேயே அழகான பெண்ணை மெருகேற்றுகின்றேன் என்ற பெயரில் மேக்கப்பை அள்ளி அப்பிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

சமையலறையில் இருந்து தட்டில் அனைவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்த சைலஜா அதை ப்ரியாவிடம் கொடுத்தார்.

ஊருக்குச் சென்ற கஜேந்திரன் தம்பியின் மகளுக்கு வரன் அமைந்துவிட்டது என்று அவர் மனைவி சைலஜாவிடம் கூற அடுத்த பஸ்ஸிலேயே கணவரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு கூட மாட ஒத்தாசையாக இருப்பதற்கு வந்துவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்கும் வைபவத்திற்கு வெள்ளிக்கிழமையே பலகாரம் செய்ய தொடங்கிவிட்டார்.

தாரணி கூட, “அவள பொண்ணு பாக்க தான் வராங்க அக்கா… கல்யாணம் இல்லை” என்று கூறி கிண்டல் அடித்து விட்டார்.

அவர்களின் பிள்ளைகள் இருவரும் படித்து திருமணம் முடித்து வெவ்வேறு நகரங்களில் வசிப்பதால் தனிமையில் இருக்கும் கஜேந்திரனுக்கும் சைலஜாவுக்கும் சிவகுமாரின் பிள்ளைகள் மேல் எப்பொழுதுமே ஒரு தனி அன்பும் அக்கறையும் இருந்தது.

ப்ரியாவும் அரவிந்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை அடிக்கடி ஊருக்கு சென்று பார்த்து வருவதும் உண்டு.

பெரியம்மா கையில் இருந்து தட்டை வாங்கிய ப்ரியா வெளியே சிரித்தபடி இருந்தாலும் உள்ளே சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

முதலில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தியிடம் காப்பியை நீட்ட அவரும் பிரியாவை பார்த்து சிரித்த முகத்துடனே பெற்றுக்கொண்டார்.

அடுத்து அவரின் அருகில் கௌதம் அமர்ந்து இருந்தான். வெள்ளை நிற ஷர்ட் மற்றம் அதற்கு பொருத்தமாக பேஜ் கலர் பேண்ட் அணிந்து தாடி ட்ரிம் செய்திருந்தான்.

அவனின் அருகே வந்த ப்ரியா அவன் முன்னே தட்டை நீட்ட தட்டை கையோடு எடுத்தவன், அனைவருக்கும் அவனே காப்பியை கொடுக்க தொடங்கினான்.

அவன் செயலில் பதட்டமான தாரணி, “தம்பி நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?” என்றார்.

“இதுல என்ன இருக்கு ஆன்டி. என் வீட்டு ஆட்களுக்கு தானே கொடுக்கிறேன்” என்றவன் வெறும் தட்டை அவனுக்கு முன் இருந்த மேசையில் வைத்து விட்டு அமர்ந்து விட்டார்.

அவன் தட்டை வாங்கியதுமே குழப்பத்தில் சிலை போல் நின்றவள் அவன் அனைவருக்கும் காப்பி கொடுப்பதை பார்த்து அவளின் பெரியம்மாவின் அருகே வந்து நின்று கொண்டாள்.

கௌதமின் நடவடிக்கையில் அசந்து போன சைலஜா, “மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவரா இருக்காரு. நம்ம ப்ரியா கொடுத்து வைச்சவள்”என்று தாரணியிடம் அவர் கூறுவது ப்ரியாவுக்கு நன்றாகவே கேட்டுவிட சந்தோஷமும் வெட்கமும் சேர்ந்து தலையை குனிந்து கொண்டாள்.

காபி பருகி முடித்ததும் ஈஸ்வரி, “நானே என் பையன பத்தி பெருமையா சொல்ல கூடாது. இந்த காலத்து பசங்க எல்லாம் காதலுன்னு சுத்தும்போது அதெல்லாம் பண்ணாம நல்லா படிச்சு சிட்டில பெஸ்ட் ஹாஸ்பிடல்ல கார்டியாலஜிஸ்டா இருக்கான்” என்று அவன் பெருமை கூற,

அவர் சொன்னதை கேட்டதும் தன்னிடம் அவன் தன் காதல் கதைகளை கூறியது நினைவு வர பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினாள் ப்ரியா.

குனிந்து நின்று கொண்டிருந்தவள் இப்பொழுது நிமிர்ந்து கௌதமை கடைக் கண்ணால் பார்க்க அவனுக்கோ சங்கடமாக இருந்தது.

தாயைப் பார்த்து, “அம்மா ப்ளீஸ்” என்றான் அவன்.

“ஏன்டா வெட்கப்படுற உண்மைய தானே சொன்னேன்” என்றார் அவர்.

“எங்க பொண்ணும் தங்கமான பொண்ணு தான். அவளுக்கு இந்த லவ் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அம்மா அப்பா காட்டுற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லுவா” என்றார் சைலஜா.

இதைக் கேட்டதும் இவ்வளவு நேரம் மனதுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தவள் அதிர்ச்சியாக பெரியம்மாவை திரும்பி பார்த்துவிட்டு கௌதமை காண அவனோ கைக்குட்டை பயன்படுத்தி இருமி சிரிப்பை மறைத்து கொண்டிருந்தான்.

சக்கரவர்த்திக்கு நேரத்தை விரையம் செய்வது பிடிக்காது.

அதனால் நேராக விஷயத்துக்கு வந்தவர், “எனக்கு ரெண்டு பசங்க. அஸ்வின் என்கூடவே என்னோட பிசினஸ பார்த்துக்கிறான். கௌதம் கார்டியாலஜிஸ்டா ஹெல்த் கேர் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணி கை நிறைய சம்பாதிக்கிறான். அது மட்டும் இல்லாம என்னோட கம்பெனியில் அவனுக்கான ஷேர்ஸ் இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட ஷேர் பாதி உங்க பொண்ணு பேருக்கு வந்துரும். என்னோட மூத்த மருமக ஸ்ரேயா, விஷ்வாவின் மருமகன் மகேஷுக்கும் அப்படிதான் பண்ணியிருக்கேன். மூத்தவனுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல குழந்தை பிறக்கப் போகுது. அது முடிய ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க“ என்று கேட்டார்.

ரெண்டு மாதம் என்று அவர் சொன்னதும் அரவிந்த் மற்றும் சிவகுமார் இருவரும் யோசனையில் முகம் சுருங்க,

“என்ன ஆச்சு சிவகுமார் ஏதாச்சும் பிரச்சனையா அமைதியா இருக்கீங்க?” என்றார் கௌதமின் சித்தப்பா விஷ்வா.

“அது ரெண்டு மாசம்னு சொன்னிங்களா…அதுக்குள்ள எப்படி என்று தான் யோசிக்கிறோம்” என்று தயக்கத்தோடு கூறினார் தாரணி.

விஷ்வாவின் அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவி அருணா, “அதுக்கு என்னங்க வேலை அண்ட் செலவு இரண்டையும் பாதியா பிரிச்சுப்போம். உங்க பொண்ணுக்கு உங்களுக்கு என்ன போடணும்னு தோணுதோ அதை மட்டும் போட்டு அனுப்புங்க. வரதட்சணை என்று சொல்லி எதுவும் வாங்குற நிலைமையில நாங்க இல்ல. அப்படித்தானே அக்கா”என்று அவர் ஈஸ்வரிடம் கேட்க,

”ஆமா நீங்க செலவு பற்றி யோசிக்காதீங்க” என்று கூறி எல்லோரும் அவர்கள் பணத்தைப் பற்றி யோசித்து கூறுவதாக நினைத்தனர்.

மௌனத்தை கலைத்த சிவகுமார், ”பணத்தை பத்தி எல்லாம் பிரச்சனை இல்லைங்க. என் பொண்ணுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையுமே சிறப்பாக தான் செஞ்சிருக்கேன் இனிமேலும் செய்வேன். எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவளை இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுக்கணுமா என்றுதான் யோசனையா இருக்கு” என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

“ஒரு பொண்ண பெத்தவறா நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுதுங்க. என் பொண்ணுக்கும் உங்க பொண்ணு வயசு தான் இருக்கும். நம்பி எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க. நாங்க நல்லா பாத்துக்குவோம்” என்று பக்குவமாக எடுத்து கூறினார் அருணா.

தங்கையை தொடர்ந்து ஈஸ்வரியும், “அது மட்டும் இல்ல கௌதமுக்கு இந்த ஆடி வந்தா 30 வயசு. உங்க பொண்ணு ஜாதகத்தை நீங்க அனுப்புனப்போ ஜோசியர் கிட்ட காட்டினோம் பத்துல ஏழு பொருத்தம் இருக்கு. உடனே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டாரு” என்று எந்தவித ஒளிவு மறைவும் இன்றி பேசினார் அவர்.

வீட்டின் பெரிய மனுசனான கஜேந்திரன், “அவங்க தான் இவ்வளவு தூரம் சொல்றாங்களே ப்பா. நாம என்ன தூரத்திலா கட்டி கொடுக்க போறோம். ஒரே ஊர்ல தானே இருக்க போறீங்க. தோணுற நேரம் ஒரு எட்டு போய் பாத்துட்டு வர்றதுல என்ன இருக்க போகுது. அப்பாவும் பையனும் நல்ல முடிவா சொல்லுங்க” என்று கூறி அவர் தன் சம்மதத்தையும் தெரிவிக்க,

சிவகுமார் அவரின் மனைவி மற்றும் மகனின் முகத்தை கேள்வியாக பார்க்க அவர்களும் சம்மதமாக தலையசைக்க மகளை பார்த்து, “நீ சொல்லுமா என்ன முடிவு பண்ணி இருக்க?உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.

என்னதான் கௌதமை பிடித்து இருந்தாலும் 'வாழ்நாள் பூராக இவரோடு நான் சந்தோஷமாக வாழ்வேனா?' என்று தன்னிடமே கேள்வி கேட்டு பதில் தேடிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

கௌதம் இருந்த திசையில் அவள் பார்வையை செலுத்த, அவனோ இவளின் முகத்தை சந்தோஷமாக பார்க்க அந்தப் பார்வை தந்த நம்பிக்கையில் சம்மதம் என்று அவள் கூறிட அனைவருமே சந்தோஷத்தில் கொண்டாடி தீர்த்தனர்.

ஈஸ்வரி ஆராதனாவின் கையில் பூவை கொடுத்து அவளின் வருங்கால அண்ணிக்கு வைக்க சொல்ல, அவளும் சந்தோஷமாக பூவை ப்ரியாவிற்கு வைத்துவிட்டு அவளை தன் அருகில் அமர்த்திகொண்டாள்.

அவளுக்கு பூ வைப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர் அஸ்வினும் அரவிந்தும்.

பெரியவர்கள் அனைவரும் ஜோசியருக்கு அழைத்து திருமண நாளை குறித்துக் கொண்டு ஒரு பக்கம் இருக்க,

இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து கதையடித்துக் கொண்டு இருந்தனர்.

“அதுதான் கல்யாணம் முடிவாகிருச்சே ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க போட்டோ எடுப்போம்” என்று கூறி இருவரையும் அருகில் நிக்க வைத்து படத்தை எடுத்து தள்ளினான் மகேஷ்.

புகைப்படம் எடுக்கும் போது அவளின் தோள் அவன் நெஞ்சில் உரசிட இருவருக்குமே ஒருவித சிலிர்ப்பாக இருந்தது.

வெட்கத்தோடு ப்ரியா கௌதமை நிமிர்ந்து பார்க்க அவனும் வசீகரமாக சிரித்தது அவளுக்கு மேலும் கூச்சத்தை கூட்டியது.

அஸ்வின் கைபேசியில் காணொளி அழைப்பில் வந்த ஸ்ரேயா, ப்ரியாவோடு பேசி ஐக்கியமாகி கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர்.

கௌதம் உரிமையோடு ப்ரியாவின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பெரியோர்கள் இவர்களை மனநிறையோடு பார்த்தனர்.

தொடரும்...
 
Top