எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 07

அத்தியாயம் 07

பெண் பார்த்து உறுதி செய்த பின் ப்ரியா கௌதம் இருவரும் அலைபேசியில் அவர்களின் உறவை வளர்த்துக் கொண்டனர்.

சங்கீத ஸ்வரங்கள் பாட்டில் வருவது போல் விடிய விடிய பேசவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டனர்.

அவள் என்னவள், அவன் என்னவன் எனும் எண்ணம் இருவர் மனதிலும் துளிர்க்கத் தொடங்கியது.

இருவருமே திருமணத்துக்கு விடுப்பு எடுக்க வேண்டிய காரணத்தால் அன்றாட அலுவலக வேலைகளை சொன்ன நேரத்தில் முடித்து திருமணத்துக்கு தேவையான விடுப்பை இப்பொழுதே விண்ணப்பித்திருந்தனர்.

அருணாவும் ஈஸ்வரியும் காலில் சக்கரத்தை கட்டாத குறையாக கல்யாண ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தனர்.

ஒரு வாரம் கழித்து ஸ்ரேயா ஆண் குழந்தையை ஈன்றெடுக்க மருத்துவமனையில் வாசம் செய்தனர் சக்கரவர்த்தியின் குடும்பம்.

நடு இரவில் குழந்தை பிறந்திட, இந்த சந்தோஷமான செய்தியை ப்ரியாவிடம் சொல்ல நடு சாமம் என்றும் பாராமல் அவளுக்கு அழைத்திருந்தான் கௌதம்.

ஹலோ என்ற அவள் குரலிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

இருந்தும் தங்கள் வீட்டில் ஒருத்தியாகப் போகும் தன் வருங்கால மனைவியிடம் தான் சித்தப்பா ஆகிவிட்ட சந்தோஷ செய்தியை கூறி விட வேண்டும் என்ற ஆவலில் அவளுக்கு அழைத்திருந்தான்.

“நல்ல தூக்கத்திலிருந்தியா ப்ரியா? ரியலி சாரி. ஆனா இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம என்னாலஇருக்க முடியல” என்று அவன் உற்சாகமாக பேச,

கனவில் அவனோடு ரொமான்ஸ் டூயட் ஆடி கொண்டிருந்தவளுக்கு அவன் அர்த்த ராத்திரியில் அழைத்து பேச, ‘ஏன் இப்படி பேசுகிறான். ஒருவேளை தன்னை காதலிப்பதாக கூற போகிறானோ’ என்ற எதிர்பார்ப்பில் கண்ணை கசக்கி தேய்த்து கொண்டு தூக்கத்தை தூரத் தள்ளி வைத்தவள், “சொல்லுங்க” என்றாள் எதிர்பார்ப்போடு.

“நான்... நான் சித்தப்பா ஆகிட்டேன். நீ சித்தி ஆகிட்ட ” என்றான் குதூகலமாக.

ஏமாற்றத்தை மறைத்து கொண்டு “இத சொல்லவா இவ்ளோ எக்சைட் ஆனிங்க” என்றாள் சாதாரணமாக,

அவள் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவனின் சந்தோஷ மனநிலை கொஞ்சம் மட்டு பட, “ஏன் உனக்கு எக்சைட்டிங்கா இல்லையா?” என்று கேட்டான்.

ஆராதனா பிறந்த பின்பு பல வருடம் கழித்து அவர்கள் வீட்டில் பிறந்திருக்கும் குழந்தைக்காக இரவிரவாய் விழித்து இருந்த தன் வீட்டு பெரியவர்களை பார்த்து அதே உற்சாகத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு ப்ரியாவின் கூற்று ஏமாற்றமே. அதை மறைக்காமல் நேரடியாக அவளிடமே கேட்டு விட்டான்.

“அப்படி சொல்லல கௌதம். நம்மள பத்தி ஏதோ சொல்ல வரீங்கன்னு நினைச்சேன். சரி அதை விடுங்க. குழந்தையோட போட்டோ அனுப்புங்க” என்றாள் ப்ரியா.

“குழந்தை போட்டோ அனுப்புறது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சித்தி நீங்க வந்து குழந்தையை பார்க்க மாட்டீங்களா என்ன? நாளைக்கு வேற எனக்கு ஆஃப். நானும் அஸ்வின் கூட ஹாஸ்பிட்டல்ல தான் இருப்பேன். நீயும் வா” என்று ஆசையாய் அழைத்தான்.

“நானா… நான் எப்படி வர முடியும். நாளைக்கு காலேஜ்ல நாலு கிளாஸ் இருக்கு. அதுவும் இல்லாம அம்மா தனியா விட மாட்டாங்க கௌதம். புரிஞ்சுக்கோங்க” என அவள் கூறியதும் சினத்தோடு, “ஏன் உங்க அம்மா விட மாட்டாங்க. நான்தானே கூப்பிடுறேன். அதெல்லாம் விடுவாங்க. ஒழுங்கா நாளைக்கு வந்துரு” என்று காறாராக கூறி விட்டு வைத்தான்.

தன் நிலைமையை எடுத்து சொல்லுயும் புரிந்துக்கொள்ளாமல் நடக்கின்றானே இவன் என்ற சலிப்பில் பெருமூச்சு விட்டவள் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை கையில் வைத்து திறப்பதும் மூடுவதுமாக இருக்கும் மகளை கண்ட தாரணி அவள் அருகில் வந்தார்.

“என்ன டிபன் பாக்ஸ் பேக்ல வைக்காம கையில வச்சுக்கிட்டு இருக்க. ஏதாச்சு வேணுமா? இல்ல சாப்பாடு பிடிக்கலையா?” என்று கேட்டார்.

“அதில்லம்மா…நைட்டு கௌதம் கால் பண்ணாரு. அவங்க அண்ணாவுக்கு பையன் பிறந்திருக்காம்.இன்னைக்கு பார்க்க ஹாஸ்பிடல் வர சொன்னாரு” என்று ஆரம்பித்தவள் அவள் கைபேசியில் அவன் அனுப்பியிருந்த குழந்தையின் புகைப்படத்தை எடுத்துக்காட்டினாள்.

“உனக்கு தான் இன்னைக்கு ஃபுல்லா கிளாஸ் இருக்குல்ல. அப்புறம் எப்படி போக முடியும்” என்று மகளிடம் வினவினார்.

“அது ஆர்த்தி கிட்ட கிளாசு…” என்று அவள் முழுதாய் கூறி முடிக்கும் முன்னமே முறைத்துக் கொண்டிருந்தார் தாரணி.

“அதெல்லாம் நீ ஒன்னும் உன் கிளாஸ் மாத்தி கொடுத்துட்டு போகணும்னு இல்ல. அவங்க வீட்டுக்கு குழந்தை அழைச்சிட்டு வந்ததும் எல்லாரும் சேர்ந்து போய் பாத்துக்கலாம்” என்றார்.

எப்படியும் அன்னை மருத்துவமனைக்கு செல்ல விடமாட்டார் என்று தெளிவாக தெரிந்ததும் நேரத்தை கடத்தாமல் கல்லூரிக்கு கிளம்பினாள் அவள்.

பாட வகுப்புகளின் போது அலைபேசியை அணைத்து வைத்திருப்பது ப்ரியாவின் வழக்கம். அன்றைய நாள் முழுவதும் வகுப்புகள் தொடர்ந்து இருந்ததால் அவள் வீடு வந்து சேரும் வரை அலைபேசியை உயிர்ப்பிக்கவில்லை.

வீட்டுக்கு வந்ததும் கௌதமின் நினைவு அழையா விருந்தாளியாக வர அவனுக்கு அழைப்பதற்கு என்றே அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

கௌதமிடம் இருந்து மட்டும் 20 மிஸ் கால்கள் வந்திருந்தன. கூடவே மகேஷ், ஆராதனா ஈஸ்வரி மற்றும் ஸ்ரேயா என்று அனைவரிடம் இருந்தும் மிஸ் கால்களை கண்டதும் யோசனையாக கௌதமின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

ப்ரியாவின் மேல் கடும் கோபத்தில் இருந்தவன் அழைப்பை ஏற்காமல், “என்ன?” என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“ஐ அம் சாரி” என்று அவள் கூறி குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தானே தவிர பதில் ஏதும் அனுப்பவில்லை.

விடாமல் அவள் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க, 20 கால்களுக்கு பிறகு அழைப்பை ஏற்றான் கௌதம்.

அழைப்பை ஏற்றும் அவன் அமைதியாக இருக்க, “சாரி நான் வந்து இருக்கணும். நான் நாளைக்கு கண்டிப்பா வரேன்” என்றாள் ப்ரியா.

“நாளைக்கு தானே தாராளமா வந்து பாத்துட்டு போ குழந்தையை. எனக்கு வேலை இருக்கு”என்றவனை சமாளிக்க முடியாமல் தவித்தாள் பேதை பெண்.

“இப்ப நான் என்ன பண்ணா கோபம் குறையும்?”என்று அவனிடமே கேட்டாள்.

அவர்களுக்கு இடையே வரும் முதல் சண்டை. அதுவும் தவறு தன் பக்கம் உள்ளதால் எப்படி கௌதமை கையாள்வது என்று தெரியாமல் சோர்ந்து போனாள்.

பதிலே சொல்லாமல் அவன் அழைப்பை துண்டிக்க, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

அவள் அறையில் இருந்து பேசியதால் வீட்டினர் யாருக்கும் இவர்களின் ஊடல் தெரியவில்லை.

ஐந்து நிமிடம் கழித்து கௌதமிடமிருந்து அழைப்பு வரவும் அலைபேசியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அழைப்பு துண்டிக்கபடுவதற்கு முன் கடைசி ரிங்கில் எடுத்திருந்தாள்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுகையும் கோபமுமாக, “என்ன?” என்று கௌதமிடம் கேட்டாள்.

அவள் அழுது இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை அழ வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், “அழுதியா….ஏன்?” என்று அக்கறையாக அவன் வினவ

“என்னத்துக்கோ அழுறேன். உனக்கு என்ன வந்துச்சு. நீ போய் உன் மருமகன பாரு” என்றாள்.

அவள் கூறிய விதத்தில் கௌதமுக்கு சிரிப்பு வர அவனின் சிரிப்பு சத்தம் கேட்டது, “நான் அழுதது உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றாள் கோபத்தோடு.

“என்ன சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க, நீ பண்றத யாரவது பார்த்தா சிரிக்க போறாங்க” என்று கூறி அவள் கோவத்துக்கு தூபம் போட்டான் அவன்.

“உன்ன மாதிரி யாரும் சிரிக்க மாட்டாங்க. உனக்கு நான் முக்கியமே இல்ல. ஹாஸ்பிடல்லையும் வீட்டையும் கட்டிக்கிட்டு அழு. எனக்கு நீ வேணாம்” என்று கூறியவள் போனை அணைக்க செல்ல,

“அப்ப நான் உனக்கு வேணாமா?” என்று அவன் ஆழ்ந்த குரலில் கூறுவதை கேட்டவளுக்கு கோபத்தை மீறி வெட்கம் வர, கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் கைவிட்டாள்.

“என்ன சத்தத்தையே காணோம். நான் வேணுமா? வேணாமா?” என்று மறுபடியும் கேட்டு அவளை வம்புக்கிழுக்க,

“வேணும் வாழ்க்கை ஃபுல்லா எனக்கே எனக்கென மட்டும் எப்பவும் வேணும். தருவியா?” என்று கேட்டாள்.

“நீ கேட்டா நான் உயிரையே தருவேன்” என்று அவன் சினிமா டயலாக் போல் கூற,

“பார்க்கலாம்” என்று கூறினாள்.

“அண்ணிய நாளைக்கு டிஸ்ச்சார்ச் பண்ணிடுவாங்க. இன்னும் மூணு வாரத்துல தொட்டில போட்டு பெயர் வைக்கிறதா பேசிகிட்டு இருந்தாங்க. அவனுக்கு என்ன கிப்ட் வாங்கலாம்?” என்று கௌதம் கேட்க,

“நீங்க தானே குடுக்க போறீங்க. உங்களுக்கு என்ன புடிச்சிருக்கோ அதே கொடுங்க” என்றாள்.

“நான் குடுக்கறதுக்கு எதுக்கு உன்கிட்ட கேட்கணும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்க தான் கேட்கிறேன்”

”செயின் போடலாமா?“ என்றாள் யோசனையாக,

“ஓகே… ஆனா செயின் வாங்க போகும்போது நீயும் வரணும்” என்று கூறினான்.

“இந்த வீக் எண்டு போய் வாங்கிட்டு வரலாமா?” என்று கேட்டாள் அவள்.

“ஓகே” என்று அவன் சம்மதித்திருக்க இன்பமான மனநிலையோடு அலைபேசியை துண்டித்தனர் இருவரும்.

கொஞ்ச நேரம் அவளை தவிர்த்து பாராமுகம் காட்டினால் கலங்குகிறாளே, இனி விளையாட்டுக்கு கூட அவளோடு சண்டை போட கூடாது என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை
முக்கியமான தருணத்தில் ‘நான் உனக்கு வேண்டாமா?’என்று அவன் கேட்கும் போது ‘வாழ்க்கை முழுதும் நீ வேண்டும்’ என்று கூறிய அதே வாயால் ‘எனக்கு நீ வேண்டாம்’ என கூற போகிறாள் என்று.

தொடரும்...
 
Top