ஜீயோனா
Moderator
அத்தியாயம் 09
“வாவ் ரொம்ப அழகா இருக்குடி. நீ ரொம்ப லக்கி” என்று பிரியாவின் விரல்களில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்து கூறினாள் ஆர்த்தி.
ஆர்த்தியின் கணவர் ரகுவிற்கு இன்று இரவு நேர வேலை என்பதால் தனியாக அவள் வீட்டில் அங்கே இருக்க வேண்டாம் என கையோடு தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் ப்ரியா.
“ஆன்ட்டிக்கு தெரியாம இது எப்படி மறைச்சு வைக்கிற” என்று மோதிரத்தை காட்டி கேட்டாள் ஆர்த்தி.
“வாங்கி ரெண்டு நாள் தானே ஆச்சு. அவங்க இருக்கும்போது கையில போட்டுக்க மாட்டேன். அம்மா இப்போதைக்கு வீட்டுக்கு வர மாட்டாங்க அதனால் தான் இப்போ உன்கிட்ட காட்டலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றாள் ப்ரியா.
“பரவாயில்லையே கல்யாணத்துக்கு முன்னாடியே டைமண்ட் ரிங்? பேசாம ரகுவ கௌதம் கிட்ட கிளாஸ் போக சொல்லலாம்னு இருக்கேன். பொண்டாட்டிக்கு புடிச்சது எப்படி வாங்கி தரணும்னு கௌதமை பார்த்து தான் கத்துக்கணும்” என்று தனது கணவரை குறை கூறி பேச, “அண்ணன் ஒன்னும் அவ்ளோ மோசம் இல்லடி. நீ என்ன கேட்டாலும் மறக்காம வாங்கி தந்து இருக்காருல” என்று தோழியின் கணவருக்கு பரிந்து பேசினாள் ப்ரியா.
“அதுதான் பிரச்சினையே. நானா என்ன கேட்டாலும் வாங்கி தராரு. ஆனா அவருக்கா எதுவுமே எனக்கு வாங்கி தரணும்னு ஒரு வாட்டி கூட தோனுனதில்லை தெரியுமா? அவர் பணத்தை மட்டும் தான்டி தராரு. எனக்கு என்ன வேணும்னு அவருக்கு புரிய மாட்டேங்குது. ஒரு வாட்டியாவது அவரா என்னை எங்கேயுமே கூட்டிட்டு போனதில்லை. நானா எல்லாமே கேட்கணும். எனக்கு இப்ப அதெல்லாம் கேட்க கூட தோன மாட்டேங்குது. கேட்டா சண்டை வந்துருமோன்னு பயமா இருக்கு” என தன் மன கஷ்டத்தை தோழியிடம் பகிர்ந்து கொண்டாள்.
“இதுக்கெல்லாம் ஏன் பீல் பண்ற. அண்ணா கிட்ட இத பத்தி பேசு கண்டிப்பா புரிஞ்சு பாரு”
“தெரியல ப்ரியா. இத பத்தி நான் ஆரம்பத்திலேயே பேசி இருக்கணும். அவரா புரிஞ்சுப்பாருன்னு நெனச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். நீயாவது என்ன மாதிரி இல்லாம தெளிவா இருந்துக்கோ” என்று கூறி விட்டு ப்ரியாவின் அறைக்குள் இருக்கும் ஓய்வறையில் முகத்தை கழுவச் சென்றாள் ஆர்த்தி.
வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது எழுந்து வாசலுக்கு சென்றாள் ப்ரியா.
தோளில் லேப்டாப் பை மற்றும் கையில் சிலகோப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தார் சிவகுமார்.
எப்பொழுதும் உற்சாகமாக காட்சியளிப்பவர் இன்று கொஞ்சம் களைப்பாக தெரிய தந்தையின் கையில் இருந்த கோப்புகளையும் பையையும் வாங்கி பெற்றோரின் அறையில் வைத்தாள்.
சோர்வாக அவர் சோபாவில் அமர்ந்திட அவருக்கு சுட சுட இஞ்சி டீ தயார் செய்து வந்து கொடுத்தாள்.
மகள் தந்த இஞ்சி டீ குடித்ததில் களைப்பாய் இருந்த அவரின் முகம் மெல்ல மலரத் தொடங்கியது.
“டீ எப்படிப்பா இருக்கு” என்று கேட்டுக்கொண்டே தந்தையின் அருகில் அமர்ந்தாள்.
“ஃபர்ஸ்ட் கிளாஸ் மா. உன் டீ மாதிரி யாராலுமே போட முடியாது” அவர் பாராட்டும் வேளையில், “இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் அங்கிள். அதுக்கப்புறம் மேடம் புருஷன் வீட்டுக்கு போயிடுவாங்க” என்று ஆர்த்தி கூறிட ப்ரியாவின் முகம் சோகத்தில் சுருங்கியது.
மகளின் வாடிய முகத்தை கண்டு மனம் கேட்காமல் “அதுக்கு என்னம்மா எப்போ எல்லாம் எனக்கு தோணுதோ அப்போ எல்லாம் பொண்ணு வீட்டுக்கு போய் டீ குடிக்க போறேன் அவ்ளோதானே” இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல பேசினார் அவர்.
தந்தையின் கூற்றில் ஆனந்தமாய் அவரின் தோளில் சாய்ந்தாள் ப்ரியா.
“நீங்க சூப்பர் அங்கிள். சும்மா பேச்சுக்கு பேசுற மனுஷன் நீங்க இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். உண்மையாவே நாளைக்கு உங்க பொண்ணு உங்கள மிஸ் பண்றேன்னு ஒரு கால் அடிச்சுட்டா அடுத்த நிமிஷம் அவ முன்னாடி நிக்க கூடிய ஆள் தான் நீங்க” என்றாள் ஆர்த்தி.
அவரின் கம்பீரமான மீசையின் கீழ் உள்ள உதடுகள் தாராளமாக விரிந்து சிரித்தது.
தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தவள் மெல்ல எழுந்து, “அப்பா வீட்டுக்கு வரும்போது ஏன் அப்செட்டா வந்தீங்க? பேங்க்ல ஏதாவது பிரச்சனையா?” என்று அவரிடம் கேட்டாள்.
மகளின் கன்னத்தை தட்டி, “அது ஒன்னும் இல்ல. பேங்க்ல ஒரு சின்ன பிரச்சனை. கேஷியர் கோபால் இருக்காருல்ல அவர் கவன குறைவா காசு எங்கயோ மாத்தி வைச்சுட்டார். பெரிய அமௌன்ட் என்றதால கொஞ்சம் பிரச்சனையாச்சு. டென்ஷன்ல அவர கொஞ்சம் அதிகமாவே திட்டிட்டேன் அதுதான் ஒரு மாதிரி இருந்துச்சு. நவ் ஐ அம் பைன்” என்று கூறினார்.
“அம்மா எங்க ப்ரியா. வீட்ல ஆள் இருக்கிற மாதிரியே தெரியலையே” என்று மனைவியைப் பற்றி விசாரித்தார்.
ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பாவின் கண்கள் முதலில் அம்மாவை தான் தேடும் என்று ப்ரியாவுக்கு நன்றாகவே தெரியும்.
“நைட்டுக்கு சமைக்க திங்ஸ் வாங்க போனாங்கப்பா. ரொம்ப நாள் கழிச்சு ஆர்த்தி நம்ம வீட்டுக்கு வந்து இருக்கால. அதுதான் அவளுக்கு ஸ்பெஷல் டின்னர்” என்றாள் ப்ரியா.
“ஆர்த்தி ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கா” ஆர்த்தியை பார்த்து, “ சொல்லுமா ஆர்த்தி நைட்டு உனக்கு என்ன சாப்பிட வேண்டும்” என்றார்.
ஆர்த்தி ப்ரியாவின் தோழி என்பதையும் தாண்டி அவர்கள் வீட்டில் அவளும் ஒரு உறுப்பினர் என்பது போல் நடத்துவார்கள். சில நேரங்களில் ஆர்த்திக்குமே அது ஆச்சரியத்தை கொடுக்கும். ஆரம்பத்தில் தயங்கியவள் பின் எந்த தயக்கமும் இன்றி அவர்களோடு பழகத் தொடங்கி விட்டாள்.
“அங்கிள் உங்களோட மட்டன் பிரியாணி தானே அங்கிள் ஸ்பெஷல்” என்று கூறினாள்.
“பண்ணிட்டா போச்சு” என்றவர் அலுவலக உடையிலிருந்து சாதாரண உடையை மாற்றி சமையலறையில் நுழைந்து மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்களை வெட்ட தொடங்கினார்.
கையில் பைகளோடு தாரணி வீட்டுக்குள் நுழைய மனைவியின் கையில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு நேராக சமையல் அறைக்கு தூக்கி சென்றார் சிவகுமார்.
கேள்வியாக தாரணி மகளைப் பார்க்க, “ஆர்த்திக்கு அப்பாவே சமைக்கிறேன்னு சொல்லிட்டாரு அம்மா” என்று கூறவும்,
“அப்போ இன்னைக்கு எனக்கு லீவு” என்று கூறி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்க்க தொடங்கினார் தாரணி.
சிறிது நேரத்திலேயே அரவிந்தும் வந்துவிட அவனும் தந்தையோடு சேர்ந்து சமைக்க தொடங்கி விட்டான்.
ஒரு மணி நேரம் கழித்து அனைவரும் சாப்பாடு மேசையில் அமர்ந்திருக்க சிவகுமார் தானே எல்லோருக்கும் பரிமாறினார்.
அவரின் சமையலுக்கு மயங்காத நபர்கள் இல்லை. தாரணிக்குமே கணவர் சமைத்தால் வழமையாக உண்பதை விட கொஞ்சம் அதிகமாகவே உண்பார்.
அனைவரும் உணவினை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து உண்டு முடித்ததும். பட்டர் ஸ்காட்ச் சௌபல் இனிப்பை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வந்தான் அரவிந்த்.
சிவக்குமார் பிரியாணி செய்த சமயம் அரவிந்த் இந்த இனிப்பை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தான்.
தங்கைக்கு பிடித்த இனிப்பு என்பதால் முதலில் அவளுக்கே கொடுத்து, ஊட்டியும் விட்டான்.
இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தி மனதுக்குள் ப்ரியா இப்படி அன்பான அண்ணன் அப்பா மற்றும் வருங்கால கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவள் கடவுளிடம் இப்படியே சந்தோஷமாக அவள் கடைசி வரை இருக்க வேண்டும் என வேண்டுதலையும் வைத்தாள்.
ஆர்த்தியின் வேண்டுதலை கடவுள் செவிமடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தான் கௌதம்.
வாசலில் அவன் அறுவை சிகிச்சை செய்த நபரின் மகளும் அவரின் குடும்பத்தாரும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை நெருங்கியவன், “கவலைப்படறதுக்கு ஒன்னுமில்ல. உங்க அப்பாவுக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சுது. இன்னும் ஒரு மாசத்துல அவர் நார்மல் லைஃப் லீட் பண்ண ஆரம்பிச்சிருவாரு. இருந்தாலும் நீங்க அவரை கொஞ்சம் கவனமா பாத்துக்கணும்” என்று கூற,
“ரொம்ப நன்றி டாக்டர். கடவுள் மாறி எங்க அப்பாவ காப்பாத்திட்டீங்க” என்று கௌதமின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் அந்த ஐம்பது வயது பெண்.
அந்த நேரம் இவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார் விஸ்வநாத். கௌதம் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர்.
அவர்களை கடந்து செல்லும்போது கௌதமை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
கௌதம் அவனின் அறைக்குள் வந்து அமர்ந்ததும் தாதி ஒருவர், “டாக்டர், விஸ்வநாதன் சார் உங்களை கூப்பிட்டாரு” என்று கூறிவிட்டு செல்ல அவரின் அறையை தேடி சென்றான்.
கதவை தட்டி விட்டு கௌதம் உள்ளே நுழைய, “வா கௌதம் உட்காரு. உன்ன பார்க்கும்போது எனக்கு ரொம்ப ப்ரௌடா ஃபீல் ஆகுது. இதே ஹாஸ்பிடல்ல நீ ஒரு இன்டர்னா சேர்ந்து இப்போ ஒரு கார்டியாலஜி சர்ஜனா இருக்கன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு” என்றார்.
விஸ்வநாதன் யாரையும் எளிதில் பாராட்டக் கூடிய மனிதர் கிடையாது. அவர் பாராட்டுக்கள் எல்லாம் வேர்ல்ட் கப் போல் அதிர்ஷ்டமும் திறமையும் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
தொடர்ந்து அவரே பேசத் தொடங்கினார், “டாக்டர் ராஜன் ஒரு பர்சனல் வேலையா த்ரி மந்த்ஸ் அப்ராட் போறாரு. சோ, இனிமேல் கொஞ்ச நாளைக்கு நீ தான் அவர் பேஷண்ட்ஸ் பாத்துக்குறது போல இருக்கும். உனக்கு அதுல எந்த ஆட்சேபனையும் இல்லையே” என்று கேட்டார்.
வேலை என்று வந்தால் அதில் எந்தக் குறையும் இல்லாமல் திறம்பட முடிப்பவன் தான் கௌதம். இது அவருக்கும் தெரியும் என்பதால் மற்ற மருத்துவர்களை விட வயது அனுபவம் கம்மியாக இருந்தாலும் திறமைக்கு மதிப்பளித்து அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.
“தேங்க்யூ சார். என்னை நம்பி இவ்வளோ பெரிய பொறுப்பு கொடுத்து இருக்கீங்க உங்க நம்பிக்கை நான் கண்டிப்பாக காப்பாத்துவேன்” என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றான்.
***
கையில் பியர் பாட்டிலோடு பால்கனியில் நின்று கொண்டிருந்தான் அருண்.
அவன் அருகில் நின்று கொண்டிருந்த அவனதுசித்தப்பா, “என்னடா சித்தி இல்லை என்ற சந்தோஷத்துல பியர் குடிக்கிறியா?” என்றார்.
“இல்ல சித்தப்பா. ரொம்ப வருஷம் கழிச்சு என் தேவதையை பார்த்தேன்” என்றான் வானத்தில் இருக்கும் நிலவை பார்த்துக் கொண்டு.
“தேவதையா? ஓ அந்த பொண்ணா…பேசுனியா?” என்றார் ஆர்வமாக,
“பேசுறதுக்கு எங்க டைம் இருந்துச்சு. அவள ஜிம்ல பாப்பேன்னு சத்தியமா எக்ஸ்பெக்ட் பண்ணல. பேசறதுக்குள்ள பறந்து போய்ட்டா”
“பறந்து போய்ட்டாளா. ரொம்ப ஓவரா போற டா”
“ஓல்ட் மேன், உனக்கு எங்க என் ஃபீலிங் புரிய போது. ஆனா, சித்தப்பா ப்ரியா கூட ஒரு பையன பார்த்தேன்” என்றான் யோசனையாக,
“பார்த்துடா அவ புருஷனா இருக்க போறான்” என்றார் நக்கலாக,
“யோவ் என்ன லந்தா. அவளுக்கு ஒரு அண்ணன் இருக்குன்னு எப்பயோ என் கிட்ட சொல்லி இருக்கா அவனா தான் இருக்கும்”
“டேய், அவ உன்கிட்ட அவளுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு சொல்லும்போதே ஓகே சொல்லி இருந்தா இப்படி அவன் யாருன்னு நெனச்சு புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது இல்ல”
“எப்படி சித்தப்பா. அப்போ என்கிட்ட ஒண்ணுமே இல்ல. அவ வசதியான வீட்டு பொண்ணு சித்தப்பா. நான் அப்போ அவளுக்கு ஓகே சொல்லி இருந்தா ரொம்ப தப்பா இருந்திருக்கும். பணத்துக்காக அவள நான் ஒத்துக்கிட்டது போல இருந்திருக்கும். அவகிட்ட உண்மைய சொல்லி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு எனக்காக வெயிட் பண்ணுன்னு கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு. எனக்கு லக் இருந்தா கண்டிப்பா நான் நல்ல நிலமைக்கு வர்ற வரைக்கும் அவ கல்யாணம் பண்ண கூடாதுன்னு வேண்டிகிட்டேன். கடவுள் என் பிரார்த்தனைக்கு பலன் தந்த மாதிரி தான் எனக்கு தோணுது.
கஷ்டப்பட்டு எனக்குன்னு ஒரு வேலையை தேடி இந்த பிளாட் ஒரு கார் வாங்கி கரெக்டா நான் செட்டில் ஆகியிருக்கிற டைம்ல என் கண்ணுல அவள மறுபடியும் காட்டுறான்னா என்ன அர்த்தம்?”
”என்ன அர்த்தம்?“ என்று அவனின் அப்பாவி சித்தப்பா கேட்க,
”மங்குனி சித்தப்பா… அவ எனக்காக பொறந்திருக்கான்னு அர்த்தம்”
“சரி அடுத்து என்ன பண்ண போற” என்று அவர் ஆர்வமாக கேட்டதும்,
“அது சஸ்பென்ஸ் வெயிட் பண்ணி பாருங்க” என்று கூறி தூங்க சென்று விட்டான்.
ப்ரியாவின் வாழ்க்கையில் மறுபடியும் அருண் வந்தால் தென்றலாக வீசுவானா? இல்லை புயலாக அடிப்பானா?
தொடரும்...