ஜீயோனா
Moderator
அத்தியாயம் 10
“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு முகத்தை தூக்கி வச்சு கொண்டிருக்க போற” என்று ப்ரியாவிடம் கேட்டான் கௌதம்.
கௌதமின் அண்ணி மற்றும் குழந்தையை காண அவர்களின் இல்லத்துக்கு வந்தவளை வாசலிலே வைத்து அவள் வந்தது கூட யாருக்கும் தெரியாமல் மாடிக்கு கூட்டி கொண்டு வந்திருந்தான் கௌதம்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து நகை வாங்க சென்றதன் பின் இன்று தான் சந்திக்கிறார்கள்.
ப்ரியா கௌதமை அலைபேசியில் அழைக்கும் நேரமெல்லாம் ஒன்று அவன் கைபேசி அணைக்கப்பட்டு இருக்கும், இல்லை யாருடனாவது அலைப்பேசி அழைப்பில் இருப்பதாக வரும். ஒரு கட்டத்திற்கு மேல் கௌதமுக்கு அழைப்பை மேற்கொள்வதே விட்டுவிட்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன் கௌதமே அவளுக்கு அழைக்க, அழைப்பை நிராகரித்தாள்.
மாடிக்கு அவளை அழைத்து வந்ததிலிருந்து முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவளிடம் தான் அப்படி கேட்டான்.
“பின்ன கோவம் வராதா? நம்ம ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? மத்த பொண்ணுங்க மாதிரி நான் உங்ககிட்ட தினமும் மீட் பண்ணனும்முன்னா சொல்றேன். மீட் கூட இல்ல ஜஸ்ட் போன்ல பேசறதுக்கு டைம் தரீங்களா? ஒரு அஞ்சு நிமிஷம் என் கூட பேசறது கூட உன் கிட்ட டைம் இல்லையா என்ன?” என்று வருத்தத்தோடு கேட்டாள்.
அவள் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததும், “நான் வேணும்னு பண்ணல ப்ரியா. ஹாஸ்பிடல்ல எனக்கு நிறைய ஒர்க். அண்ணி நேத்து போன் பண்ணி நீ இன்னைக்கு வர போறேன்னு சொன்னதும் ஹாஸ்பிடல்ல நைட்ஷிப் முடிச்சுட்டு குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்காம உன்னை பார்ப்பதற்காக ஓடி வந்திருக்கேன். தூங்கக்கூட இல்ல” என்றான்.
அவன் கூறியது உண்மையென அவன் கண்களுக்கு கீழ் இருந்த கருவளையம் எடுத்துக் கூறியது.
எப்பொழுதுமே பளிச்சென்று இருப்பவன் தூக்கமின்மை, வேலைப்பளு காரணமாக கலையிழந்து காட்சியளித்தான்.
இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்த கோபத்தை கைவிட்டவள், “ஏன் இப்படி இருக்கீங்க? வேலை முக்கியம் தான் அதுக்காக உடம்பு கெடுத்துக்காதீங்க” என்றாள் அக்கறையோடு.
“சீனியர் டாக்டர் வெக்கேஷன் போயிருக்காரு. அவரோடு பேஷன்ஸ் எல்லாம் நான் தான் ஹேண்டில் பண்ணிட்டு இருக்கேன். அதனாலதான் இப்படி” எனக் கூறியவன் அவள் சமாதானம் ஆகி விட்டாள் என்று விளங்கியதும் தன் கை வளைவுக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றவள், “கௌதம் யாராவது பார்த்திட போறாங்க” என்றாள் வெட்கத்தோடு.
“மாடிக்கு அடிக்கடி யாரும் வர மாட்டாங்க. நீ சொல்லு ஹனிமூன் எங்க போலாம்?” என்று அவளிடம் கேட்டான்.
முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்தவள், “அப்போ ஹனிமூன் போறதுக்கு மட்டும் டைம் இருக்கு” என்று அவள் கூறிட.
“அதுக்கெல்லாம் லீவு எப்பயோ அப்ளை பண்ணிட்டேன்” என கண் சிமிட்டி கூறி அவளை வெட்கப்பட வைத்தான்.
ஸ்ரேயாவின் தாயார், “கௌதம்” என்று படியில் நின்று அழைப்பது கேட்டதும் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
ஸ்ரேயாவின் அறையில் படுக்கையில் கிடந்த குழந்தையிடம் கொஞ்சி கொண்டிருந்தாள் ப்ரியா.
அறையின் உள்ளே நுழைந்த ஸ்ரேயாவின் தாயார் ஜெயா, “ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொஞ்சுற மா. குழந்தையை தூக்கி வச்சு கொஞ்சு” என்றார்.
பிறந்து ஒரு மாதம் கூட முடியாத குழந்தையை தூக்க பயந்தவள, “இல்ல ஆண்ட்டி எனக்கு சின்ன குழந்தையை தூக்கிப் பழக்கம் இல்ல” என்றாள்.
அதுக்கு அவர், “என்னம்மா சின்னப்புள்ள மாதிரி பேசுற. உனக்கும் கௌதமுக்கும் அடுத்த வருஷம் கூட ஒரு புள்ள பிறக்கலாம் அப்போ நீ இப்படியே சொல்லிக்கிட்டு இருக்க முடியாது இல்ல” என்றார் நியாயமாக.
அவரின் கூற்றில் அவள் கௌதமை வெட்கத்தோடு பார்த்தாள்.
அவள் குழந்தையை கொஞ்சும் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் ஸ்ரேயாவின் தாயார் பேசுவதை கேட்டு, “அதுக்கு என்ன ஆண்டி. நான் குழந்தையை தூக்கிக்கிறேன் அவ குழந்தையை கொஞ்சட்டும்”என்று கூறியவன் குழந்தையை படுக்கையில் இருந்து தூக்கிக்கொண்டு அவள் அருகே அமர்ந்து கொண்டான்.
கௌதம் பேசுவதை கேட்டு “என்னமோ செய்யுங்க” என்று அறையை விட்டு வெளியேறினார் ஜெயா.
“நான் பேபிஸ் அஹ் நல்லா பத்துப்பேன். உனக்கு கஷ்டம் தர விட மாட்டேன்” என்று அவள் காதில் ரகசியம் போல் கூறி அவளை மேலும் வெட்கப்பட வைத்தான்.
“என்ன கௌதம் கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டிக்கு சப்போட்டா” என்றாள் ஸ்ரேயா.
அவளை மடக்கும் விதமாக, “ஆமா அண்ணி நானும் அஸ்வின் அண்ணா மாதிரி மாறிட்டேன்” என்றான் கௌதம்.
ஒரு மணி நேரம் எப்படி கழிந்தது என்று கூட தெரியாமல் இருவரும் இருக்க ப்ரியாவின் தாயார் அவள் அலைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு நேரத்துக்கு வரும்படி கூறி விட்டு வைத்தார். இருவரும் விருப்பமே இல்லாமல் அவரவர் வீட்டுக்கு கிளம்பினார்.
சித்தப்பாவின் சூப்பர் மார்க்கெட்டில் சோகமாக அமர்ந்திருந்தான் அருண்.
“டேய் அங்க அவ்வளவு வேலை இருக்கு. நீ என்ன டா இங்க வந்து உட்கார்ந்திருக்க” என்று அருண் ஓரமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவனிடம் கேட்டார்.
நாடியில் கை வைத்து அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டான்.
“அருண் என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டுக்கொண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தார்.
“போ சித்தப்பா. நானே செம காண்டுல இருக்கேன்” என்றான் கடுப்பாக,
“காண்டுல இருக்கியா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான்டா ஜாலியா இருந்த? அந்த பொண்ணு ப்ரியா எதுவும் உன்னை வேணாம்னு சொல்லிடுச்சா?”
“அதுக்கு முதல்ல மறுபடியும் நான் அவளை பாக்கணும். அன்னைக்கு அவள ஜிம்ல பார்த்ததோடு சரி. அதுக்கப்புறம் நானும் எத்தனையோ வாட்டி போய் ஒரு நாள் ஃபுல்லா வேலை கூட விட்டுட்டு ஜிம்ல இருந்தேன் ஆனா, அவ வரவே இல்ல” என்றான்.
“ஒருவேளை நீ வேற யாரையாவது பார்த்துட்டு ப்ரியான்னு நினைச்சிட்டயோ” என்று அவர் கூறிட எரிச்சலோடு, “சித்தப்பா என் ப்ரியாவை எனக்கு தெரியாதா?” என்றான்
“என்னது என் (N) ப்ரியா வா? அவ எஸ்(S) ப்ரியா இல்லை?” என்று கூறி அவர் நக்கல் அடிக்க,
“பெரிய ஜோக்” என்று கூறியவன் எழுந்து செல்ல முற்பட்டான்.
“டேய் மகனே கோவப்படாத. உனக்கு இப்ப அவள பாக்கணும் அவ்வளவு தானே. அவ டீடைல் சொல்லு நானே உங்க சித்திய கூட்டிக்கிட்டு உனக்கு பொண்ணு கேட்டு போறேன்” என்றார்.
“அதெல்லாம் வேணாம் சித்தப்பா. நான் முதல்ல அவ மனசுல இப்பவும் இருக்கிறேனான்னு தெரிஞ்சிக்கனும்”
அருண் இப்படி கூறவும், “அப்புறம்” என்றார் அவனின் சித்தப்பா.
“அப்புறம் என்ன. அவளும் நானும் நிறைய லவ் பண்ணனும். அதுக்கப்புறம் தான் கல்யாணம்” என்றான் கண்களில் காதல் மின்ன.
ப்ரியாவை பற்றி பேசும்போதெல்லாம் அவன் கண்களில் வெளிப்படும் காதலை பார்த்து அவரே பல நேரங்களில் வியந்து இருக்கிறார்.
அவனை பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரிடா ராஜா. நீ சொன்ன மாதிரியே பண்ணு. பில்லிங் கவுண்டர்ல ஆள் கம்மியா இருக்காங்க போயி அங்க பில்ல போடுற வேலைய பாரு” என்று அவனுக்கு வேலை சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்த்தினார்.
சலிப்பாக பில்லிங் கவுண்டரில் வந்து நின்றவன் இயந்திரம் போல கடகடவென வரிசையில் காத்து கொண்டு நின்றவர்களுக்கு பில் போடத் தொடங்கினான்.
திடீரென ஓர் அருமையான நறுமணம் அவன் நாசியை துளைக்க சுற்றி பார்வையை செலுத்தியவனின் கண் பார்வைக்குள் வந்து நின்றாள் அவனின் பிரியசகி.
அன்னையோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு வருகை தந்த ப்ரியா பொருட்களை எல்லாம் வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரிசையில் வந்து நின்றாள்.
ரொம்ப நேரமாக தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு பிரம்மைத் தோன்ற பார்வையை சுழல விட்டாள்.
பில் போட்டுக் கொண்டிருக்கும் நபர் அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு நெற்றி சுருக்கி யாராக இருக்கும் என யோசித்தாள்.
ப்ரியாவின் பில் போடும் முறை வரவும் அருகில் அவன் வதனத்தை கண்டும் சரியாக யார் என அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை.
இருந்தாலும் அவள் ஆழ்மனம் அவன் பார்க்கும் பார்வையிலேயே அவளுக்கு நிச்சயமாக தெரிந்த ஒருவராக தான் இருக்க முடியும் என்று எடுத்து கூற, “உங்களுக்கு என்னை தெரியுமா?” அவளே நேராக கேட்டாள்.
“தெரியும்” என்று கூறியவன் அவளின் தாய் அருகில் இருப்பதை கண்டதும் பில் போடத் தொடங்கினான்.
“எப்படி?” என்று அவள் கேட்டதும் இடையில் தாரணி, “யாரு ப்ரியா உனக்கு தெரிஞ்சவரா?” என்று பேச்சில் நுழைந்தார்.
அன்னையின் கேள்விக்கு தனக்கே பதில் தெரியாததால் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருக்க, “நான் ப்ரியாவோட காலேஜ் ஃபிரண்ட் அருண்” என்று கூறியதும் நம்ப முடியாமல் அவனைக் கண்டாள்.
அவளுக்கு தெரிந்த அருண் ஒருவனே. அப்படி என்றால் இவன் அவனா என யோசித்தவள் அவன் கண்களை கூர்ந்து பார்க்க அவனேதான் என புரிந்து கொண்டாள்.
அவள் கல்லூரியில் பார்த்த அருணுக்கும் இப்பொழுது அவள் கண்ணெதிரே இருப்பவனுக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது.
கல்லூரியில் மெலிவாய் இருந்தவன் இப்பொழுது கட்டுக்கோப்பான உடலமைப்போடும் சுருள் கேசத்தோடும் இருந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“அப்படியாப்பா, இங்க என்ன பண்றீங்க?”என்று தாரணி கேட்கவும்.
“இது என் சித்தப்பா கடை தான். இன்னிக்கி ஆபீஸ் சீக்கிரமா முடிஞ்சுதால அவருக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூறினான்.
நல்லது என்பது போல் கூறிவிட்டு தராணி தன் பேச்சை முடித்துக் கொள்ள அவனும் பில் போட்டு முடித்து இருந்தான்.
“ஆன்ட்டி, நாங்க ஹோம் டெலிவரி பண்றோம். உங்களுக்கு வேணும்னா எங்களை இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க” என்று கடையின் விசிட்டிங் கார்ட்டை கொடுத்தான்.
ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரியாவை ரசனையாக பார்த்தவன் அவளிடம் சாமான்கள் அடங்கிய பையை கொடுத்தான்.
அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே தன் அன்னையோடு சேர்ந்தே கடையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்...