எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 11

அத்தியாயம் 11

“என்னடி சொல்ற?” என்று ஆச்சரியமாக கேட்டாள் ஆர்த்தி.

வீட்டுக்கு வந்ததுமே முதல் வேலையாக ப்ரியா ஆர்த்திக்கு அழைத்து அருணை கண்டதாக கூறிவிட்டாள்.

“ஆமாண்டி. அது அருண் தான். காலேஜ்ல பார்த்த மாதிரி இல்ல. இப்ப பிட்னஸ் எல்லாம் பண்ணி ரொம்ப ஹாண்ட்ஸாமா இருக்கான்” என்றாள் ப்ரியா.

“ஹண்ட்ஸாமா.. பார்க்க எப்படி இருந்தான் போட்டோ ஏதாவது எடுத்தியா?” என்று ஆர்த்தி கேட்டதும், “எங்க, நானே ஷாக்ல இருந்தேன். அவங்கிட்ட என்ன பேசறதுன்னு கூட தெரியல ரொம்ப அக்குவடா(awkward) போயிடுச்சு. இதுல அம்மா வேற பக்கத்துல இருந்தாங்க. சோ, ஒன்னுமே பேசாம வந்துட்டேன்” என்றாள்.

“அவன் உன்கிட்ட எதுவும் பேச ட்ரை பண்ணலையா?”

“இல்ல. ஆனா ஒரு மாதிரி என்னையே பார்த்துட்டு இருந்தான். கொஞ்சம் அன்கம்ஃபர்டபுளா இருந்துச்சு. ஏன் அப்படி பார்த்தான் என்று தெரியல”

ப்ரியா குழப்பமாக பேசவும், “அவன் உன்னோட பாஸ்ட். திடிருன்னு பாத்ததுல கொஞ்சம் ஷாக் ஆகிட்ட அவ்ளோ தான். சரி அதெல்லாம் விடு டாக்டர் என்ன சொல்றாரு” என்று பேச்சை மாற்றினாள் ஆர்த்தி.

கௌதமை பற்றி பேசியதும் தன் சோக கதையை தானாக சொல்ல தொடங்கினாள்.

“நீ அன்னைக்கு நான் ரொம்ப லக்கினு என்ன நேரத்துல சொன்னியோ தெரியல அது அன்லக்கி ஆயிடுச்சு”

“என்னடி சொல்ற?” என்று விவேக்கின் பானியில் ஆர்த்தி கேட்டாள்.

“அவருக்கு டே அண்ட் நைட்னு வொர்க் போயிட்டு இருக்கு டி. தூங்குறதுக்கு கூட டைம் இல்லாம சுத்திக்கிட்டு இருக்காரு. இதில் எங்க நாங்க ரெண்டு பேரும் பேசுறது” என்று சலிப்பாக பதில் கூறினாள்.

“என்னடி இப்படி சலிச்சுக்கிற. கல்யாணத்துக்காவது மாப்பிள்ளை வருவாரா?”என்று ஆர்த்தி கேட்டதும் கௌதம் ஹனிமூன் பற்றி பேசியது ஞாபகம் வந்ததும் வெட்கத்தோடு “அதெல்லாம் வருவாரு” என்றாள்.

“அப்போ கவலையை விடு பாத்துக்கலாம்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஆர்த்தி.

தோழியிடம் அருணை பற்றி பகிர்ந்து கொண்ட பின்பும் அவனிடம் பேச எது தன்னை தடுத்தது என்ற சுய ஆலோசனையில் இறங்கியவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.

சூப்பர் மார்க்கெட்டை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அருண் தன் சித்தப்பாவிடம் ப்ரியாவை சந்தித்தது பற்றி பேச தொடங்கினான்.

“சித்தப்பா, ப்ரியா நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கு அவ அம்மாவோட வந்து இருந்தா” என்று சந்தோஷமாக கூறியவனுக்கு அவளின் முகம் பயத்தில் இருந்தது போல தோன்றவும் அவனின் நேற்றியில் சிந்தனை கோடுகள் விழ தொடர்ந்து பேச தொடங்கினான், “ஆனா, அவ என்ன பாக்குற பார்வையே கொஞ்சம் அந்நியமா இருந்துச்சு. ஒரு மாதிரி பயந்த மாதிரியே பேசினா.

அப்போ எல்லாம் எப்பவுமே அவ என்ன பார்க்கும்போது அதுல ஒரு நேசம், காதல் எல்லாம் கலந்து அழகா ஒரு பார்வை பார்ப்பா. ஆனா, இன்னைக்கு என்னை பார்த்ததும் சந்தோஷப்படலைன்னா கூட பரவால சாதாரணமா கூட பேசல சித்தப்பா” என்றான் வருத்தமாக.

”டேய், கடைசியா உன்ன காலேஜ்ல பார்த்திருப்பா.அதுக்கப்புறம் இப்பதான் பாத்திருப்பா இல்லையா?” என்று அவன் சித்தப்பா கேட்டதும் ‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்தான்.

“அப்போ எடுத்தவுடனே அந்த பொண்ணு எப்படிடா உன் கிட்ட சிரிச்சு பேசும். உன்ன பார்த்த உடனே அந்த பொண்ணுக்கு என்ன பேசுறதுன்னு தெரிஞ்சு இருக்காது. ஷாக் ல இருந்து இருப்பா. அடுத்த வாட்டி பார்க்கும்போது சரியாயிருவா.

அது மட்டும் இல்லாம சார் அந்த பொண்ண பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்த்து வச்சிருக்க. அப்ப பயப்பட தானே செய்யும்” என்று கூறினார்.

“அப்போ அவ கடைக்கு வந்தது என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியும். இருந்தாலும் நானே சொல்லணுமுன்றதுக்காக எதுவுமே கேட்காம இருந்த அப்படித்தானே?” என்று கேட்டான் அருண்.

அவர் “ஆமாம்” என்று கூற அவரை முறைத்து பார்த்தவன், “உன்கிட்ட நானே சொல்லணும் னு ஆசையா இருந்தேன் சித்தப்பா. ஆனா எல்லாம் தெரிஞ்சும் எதுக்கு அமைதியா கேட்ட?” என்றான்.

அருணின் அருகில் வந்து ஆதரவாக அவன் தலையை தடவியவர், “என்னதான் நான் உனக்கு அப்பா மாதிரி இருந்தாலும். நீ எனக்கு ஒரு ஃபிரண்ட் மாதிரி டா. உனக்கு என்கிட்ட என்ன வேணும்னாலும் பேசலாம் என்று தைரியத்தை நான்தான் முதல்ல கொடுக்கணும். அதனால தான் நான் உன்கிட்ட எதுவுமே தெரிஞ்ச மாறி காட்டிக்கல” என்று அவர் சொன்னதுமே தாமாக அருணின் விழிகள் லேசாக கலங்கத் தொடங்கின.

சித்தப்பா கவனிப்பதற்கு முன் கண்களை துடைத்துக் கொண்டவன், “யோ சித்தப்பா இப்படி சென்டிமென்ட்டா பேசாத. உனக்கு சுத்தமா செட்டே ஆகல” என்று அவரை நக்கல் அடித்தான்.

இருவருமாக சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டை அடைத்து விட்டு வீட்டை நோக்கி பயணித்தனர்.

கௌதமின் தாயார் ஈஸ்வரி தாரணிக்கு அழைத்து அவர்கள் வீட்டு வாரிசுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அழைத்தார்.

சிவகுமாருக்கு வேலை இருந்த காரணத்தால் அவரை தவிர ப்ரியாவின் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் காலையிலேயே தயாராகி கௌதமின் இல்லத்துக்கு சென்றனர்.

மூன்று மாடி கொண்ட ஓர் அழகிய பெரிய வீடு அது. சக்ரவர்த்தியும் விஷ்வாவும் ஒரே போல் வீட்டை எதிரெதிரே கட்டிக் கொண்டனர். உறங்குவதை தவிர பெரும்பாலான நேரங்களில் அனைவரும் சக்கரவர்த்தி அவர்கள் வீட்டிலேயே நேரத்தை செலவு செய்வார்கள்.

வீட்டையே கல்யாண வீடு போல் அலங்கரித்து இருந்தார்கள் சக்கரவர்த்தியின் குடும்பத்தினர். பின்ன இருக்காதா அவர்களின் முதல் பேரனின் பெயர் சூட்டும் விழா அல்லவா.

வாசலிலே பத்து கார் விலாசமாக நிற்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தது.

அவர்களின் நெருங்கிய சொந்தத்துக்கும் தொழில் நண்பர்களுக்கும் தங்கள் வருங்கால மருமகளை அறிமுகப்படுத்துவதற்காக விழ ஆரம்பிப்பதற்கு முன்னரே ப்ரியவை கூட்டி வர சொல்லி கூறி இருந்தார் ஈஸ்வரி.

வெளியே கேட்டில் நின்று வீட்டின் பிரம்மாண்டத்தை காண ப்ரியா தன் அன்னையின் கரங்களை பயத்தில் இருக்கி பிடித்துக் கொண்டாள்.

அவர்கள் செல்வ நிலையை பார்த்து தாரணியும் கூட சற்று மிரண்டு தான் போனார்.

அஸ்வின் வாசலிலேயே வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்று கொண்டு இருந்தவன் இவர்களைக் கண்டதும் கையோடு உள்ளே அழைத்து வந்தான்.

வீட்டின் பெண்கள் அனைவரும் ஒப்பனையாளர்களின் உதவியோடு பளிச்சென்று சுற்றிக் கொண்டிருந்தனர்.

ஈஸ்வரியும் அருணாவும் தாரணியுடன் தங்கள் நல விசாரிப்புகள் நடத்தியவர்கள் சாதாரணமாக பேச தொடங்கவும் தனித்து விடுபட்ட ப்ரியா அண்ணனை கண்களால் தேட அவனோ அஸ்வினோடு கார்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்.

இருவரும் இன்றி தனியாக நின்று கொண்டிருந்தவளை நெருங்கிய ஆராதனா “எப்படி இருக்கீங்க?” என்று பேசத் தொடங்கினாள்.

ஈஸ்வரி ஆராதனாவை பார்த்து, “அரு அண்ணிக்கு வீட்ட சுத்தி காட்டுமா” என்று கூறிட அவளும் வீட்டை சுற்றிக் காட்ட தொடங்கினாள்.

இரண்டாம் மாடியில் இருக்கும் கௌதமின் அறை வந்ததும் ப்ரியாவை உள்ளே அழைத்துச் சென்றாள். கௌதம் குளியலறையில் இருப்பது தெரிந்ததும் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவனுக்காக காத்திருக்க தொடங்கினர்.

மனோஜ் ஆராதனாவின் அலைபேசிக்கு அழைத்து அவளை ஏதோ வேலையாக கீழே வர சொல்லவும், “அண்ணி நீங்க எங்கயும் போகம இங்கயே இருங்க. நான் இப்போ வந்துருவேன்” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

தனியாக அறையில் இருந்தவள் அறையை சுற்றி பார்த்தாள்.

கௌதமின் அறை டிவி, பிரிட்ஜ் என அனைத்து வசதிகளோடும் காணப்பட்டது.

விழாவுக்கு அவன் அணிய வேண்டிய குர்தா ஹங்கரில் மாட்டி கட்டிலில் மற்ற பக்கம் கிடப்பதை கண்டவள், ஓ… இவர் இன்னும் ரெடி ஆகலையா. இப்பதான் குளிக்கிறார் போல இருக்கு. அப்போ என்ன டிரஸ் போட்டு வருவாரு’ குர்தாவைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றான் அவள் எண்ணத்தின் நாயகன்.

இடையில் டவலை கட்டிக் கொண்டு வெறும் மேலோடு இருந்தவனை பார்த்ததும் சங்கடமாக தலை குனிந்து கொண்டவள், “சாரி உங்க பெர்மிஷன் இல்லாம ரூமுக்குள்ள வந்துட்டேன். அது ஆராதனா தான்” என்று பேசிக் கொண்டிருந்தவளின் முன் நெருங்கி வர தொடங்கினான்.

அதில் அவள் பேச்சு நின்று போகவும், “சொல்லு ஆராதனா தான்..” என்று அவன் எடுத்துக் கொடுக்கவும் வெட்கத்தில் நெளிந்தாள்.

நிமிர்ந்து அறையின் கதவு திறந்திருப்பதை பார்த்தவள் பெருமூச்சு விட, அவளின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் அவளை நெருங்கி வருவதை விட்டுவிட்டு கதவை நோக்கி சென்றான்.

‘இவன் எங்கே போகிறான்’ என்று பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கதவைத் தாழ்ப்பாள் போடவும் அச்சத்தோடு “ஏன் கதவை மூடுனீங்க யாராவது பார்த்தா தப்பா எடுத்துக்க போறாங்க”என்றாள்.

“அது கொஞ்சம் டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு”அதுக்குத்தான் என்று கூறியவன் அவள் அருகே வந்து நின்றான்.

அறையின் வெளியே நின்று ஆராதனா ப்ரியாவை கூப்பிடவும் நிம்மதி அடைந்தவள், “நான் கிளம்புறேன்” என்று கூறி கதவை நோக்கி செல்ல,

அவள் கையைப் பிடித்தவன் சத்தமாக , “அவ கொஞ்சம் பிஸியா இருக்கா. நான் கூட்டிட்டு வரேன் நீ கிளம்பு” என்று தங்கைக்கு குரல் கொடுத்தவன், “வெயிட் பண்ணு ஒன்னா போலாம்” என்று அவளிடம் கண்ணடித்து கூறினான்.

அண்ணன் கூறுவதை கேட்டதும் சிரிப்பு சத்தத்தோடு “சரி” என்று கூறிவிட்டு சென்றாள் ஆராதனா.

“ஒன்னாவா” என்று வாயை பிளந்து ஆச்சரியமாக கேட்டவளை கண்டுகொள்ளாமல் உடையமாற்றத் தொடங்கினான்.

அவன் உடை மாற்றுவதை கண்டதும் கையை பிசைந்து கொண்டு மற்ற பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

தயாராகி முடித்தவன் ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் தலைவாரிய வண்ணம், “டிரஸ் எல்லாம் மாத்திட்டேன்,திரும்பி பாரு” என்று அவளிடம் கூறினான்.

ஓரக்கண்ணால் பார்த்தே அவன் உடை மாற்றி விட்டான் என்று தெரிந்ததும், “சரி, நான் அப்போ கீழே போறேன்” என்று கிளம்புவதிலேயே இருந்தவள் அவசரமாக கூறினாள்.

“என்ன அவசரம் மெதுவா போலாம்” என்று கூறியவன் அவள் அருகில் வந்து கைபேசி எடுத்து இருவரையும் விதவிதமாக சுயப்படம் எடுக்க தொடங்கினான்.

அவள் சிரிக்காமல் இருப்பதைக் கண்டவன் சிரி என்பது போல் செய்கை செய்ய அவளும் அவனுக்கு ஒத்துழைத்து இதழ் பிரித்து சிரிக்க மேலும் இரண்டு, மூன்று சுயப்படம் எடுத்தவன் விழா ஆரம்பிக்கும் நேரம் நெருங்கவும் அவளைக் கீழே அழைத்து சென்றான்.

தொடரும்...
 
Top