ஜீயோனா
Moderator
அத்தியாயம் 12
கௌதமும் ப்ரியாவும் ஒன்றாக வருவதை கண்டு அவர்களின் ஜோடி பொருத்தத்தை மெச்சி கௌதமின் சொந்தங்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
கௌதம் ப்ரியாவை தன்னுடனே நிறுத்திக் கொள்ள அவளும் அவர்களின் குடும்பத்தில் திருமணத்துக்கு முன்பே ஒரு அங்கமாக மாறிவிட்டதை உணர்ந்தாள்.
கொழு கொழு என்று தொட்டிலில் கை கால்களைஅசைத்துக் கொண்டு படுத்திருந்த குழந்தை தன்னைச் சுற்றி நிற்கும் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா அனைவரையும் தன் பெரிய கண்களை விரித்து முறைத்தும் சிரித்தும் கை கால்களை அடித்துக்கொண்டு இருந்தான்.
“பார்க்க செம்ம கியூட்டா இருக்கான்” என்று கூறி குழந்தையின் பிஞ்சு விரல்களுக்கு முத்தமிட்டாள் ப்ரியா.
அவள் குழந்தையின் பிஞ்சு கைகளை தொட விரலை கெட்டியாக பிடித்துக் கொண்டது குழந்தை.
அதில் மகிழ்ந்து அவள் கௌதமைக் காண அதை அழகாக புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த நகையை இருவருமாக சேர்ந்து அணிவித்து விட அனைவரும் கைதட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
அரவிந்தையும் அஸ்வின் தன்னருகில் நிறுத்தி வைத்திருக்க அவனுமே குழந்தையோடு ஐக்கியம் ஆகிவிட்டான்.
அருணாவும் ஈஸ்வரியும் பேரனுக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை போட்டுவிட கூட்டத்தில் ஒருவராய் தாரணி நின்று கொண்டிருந்தார்.
இத்தனை நாள் அவர் கண்களுக்கு புலப்படாத மாப்பிள்ளை வீட்டாரின் செல்வ நிலை இன்று அவரை அசைத்துப் பார்த்திருந்தது.
அவசரப்பட்டு விட்டோமோ. இவர்கள் செல்வநிலை தங்களோடு எப்படி ஒத்து போகும். பிற்காலத்தில் குடும்பத்தில் இதனால் ஏதும் பிரச்சினை வருமோ என்று நினைத்து கலங்கிக் கொண்டிருந்தவரின் தோளில் யாரோ தட்ட திரும்பிப் பார்த்தார்.
ஸ்ரேயாவின் தாயார் ஜெயா தாரணியை புகைப்படங்களில் ஸ்ரேயா காட்டியபோது பார்த்திருந்ததால் அவரை தூரத்தில் கண்டதுமே பேசுவதற்காக வந்துவிட்டார்.
“வணக்கம், நான் ஸ்ரேயாவோட அம்மா” என்று தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தாரணியும் அவருடைய இயல்பாகப் பேச ஆரம்பித்து விட, “ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு. உடம்பு சரி இல்லையா?” என்று ஜெயா கேட்டு விட அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சமாளிக்க முயற்சித்தவரை நம்பவில்லை ஜெயா.
“உங்க நிலைமையில தான் நானும் என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது இருந்தேன். என்னடா இவ்ளோ பெரிய பணக்காரங்களா இருக்காங்களே ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்துட்டா நம்ம பொண்ண குறை சொல்லிடுவாங்களோ இல்ல நம்மை எதுவுமே பண்ணலன்னு சொல்லி குறைச்சு பேசிருவாங்களோ அப்படின்னு நிறைய தடவை கல்யாணத்துக்கு முன்னாடி வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் இதனால் வர என் பொண்ணு கண்ண கசக்கி கிட்டு வீட்டுக்கு வந்ததே இல்லை. நாங்க என்ன கொடுத்து அனுப்பினாலும் அதை சந்தோஷமா வாங்கிட்டு போவா. அவங்க வீட்டு ஆட்களும் எங்களை எதுவுமே இதுவரைக்கும் குறைச்சு பேசினதே இல்லை. இதெல்லாம் நினைச்சு தான் நீங்க இவ்ளோ நேரமா பயந்துகிட்டு இருக்கீங்கன்னா நான் சொல்றேன் ப்ரியாவை உங்கள விட அவங்க சந்தோஷமா பார்த்துப்பாங்க” என்று கூறினார் ஜெயா.
ஜெயா கூறியதை கேட்டதுமே தன் கவலைகளை போக்குவதற்கென்றே கடவுள் அவரை தன்னோடு பேச வைத்தார் என்று நினைத்துக் கொண்டார் தாரணி.
அரவிந்த் குழந்தையின் கையில் பணத்தை வைத்துவிட்டு தாரணி அருகில் வந்து நின்று கொண்டான்.
ஸ்ரேயா அஸ்வின் தம்பதியினர் தங்கள் புதல்வனுக்கு வருண் சக்கரவர்த்தி என்று பெயர் சூட்டி அதை இருவருமாக குழந்தையின் காதில் மூன்று முறை கூறினர்.
வந்தவர்களுக்கெல்லாம் வயிறு மற்றும் மனம் நிறைய உணவருந்த வைத்தே வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர் சக்கரவர்த்தியின் குடும்பத்தார்.
நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே எஞ்சி இருக்க, “அடுத்து நம்ம கௌதம் கல்யாணத்துல தான் மறுபடியும் பார்க்க முடியும்” என்றனர்.
அதுக்கு ஈஸ்வரியும், “ஆமா தலைக்கு மேல வேலை இருக்கு. இன்னும் கார்ட் கொடுக்க ஆரம்பிக்கல. நாளைக்கு குலதெய்வ கோயிலுக்கு போய் முதல் கார்டை வச்சுட்டு வந்துடனும். சம்மந்தி நீங்களும் இங்க வந்துருங்க நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து போய்க்கலாம்“ என்று தாரணியிடம் கூறிட அவரும் மறுக்க தோன்றாமல் சரி என்று கூறியவர் கணவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.
அடுத்த நாள் காலையிலேயே அனைவரும் ஒன்றாக சேர்ந்து குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்திருக்க அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே கோயிலை நிரப்பி இருந்தனர்.
மிதமான அலங்காரத்திலேயே தேவதை போல் காட்சியளித்த ப்ரியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கௌதம் அவளை இம்சை படுத்திக் கொண்டிருந்தான்.
சுற்றி ஆட்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு சங்கடமானவள் அவனிடம் பார்வையை திருப்பும் படி செய்கை செய்து விட்டு சாமி கும்பிடுவது போல் கண்களை மூடிக்கொண்டாள்.
மறுபடியும் கண்களை லேசாக அவள் திறந்து பார்க்க இப்பொழுதும் அப்படியே கௌதம் நிற்பதை கண்டதும் கோபமாய் அவனை முறைத்துப் பார்க்க முயற்சி செய்தவள் கடைசியாக பார்வையாலே கெஞ்ச தொடங்கி விட்டாள. ஆனால், அவன் கேட்பதாக இல்லை.
அனைவரும் நல்லபடியாக சாமியை கும்பிட்டு கோவிலின் வாசலுக்கு வர சக்கரவர்த்தி தன் குரலை சேருமிக் கொண்டு, “இன்னும் மூணு நாள்ல எல்லாருக்கும் டிரஸ் எடுக்க போகணும். உங்களுக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுக்க அன்னைக்கு வர முடியுமா சம்பந்தி?” என்று சிவகுமாரிடம் கேட்டார்.
“அன்னைக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாம் சம்பந்தி” என்று பதில் அளித்த சிவகுமார் அஸ்வின் கையில் இருந்த குழந்தையை கொஞ்சியவர், “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. நேத்து ஒரு முக்கியமான வேலை பேங்க்ல. அதான் பெயர் வைக்கிற ஃபங்ஷன் அன்னைக்கு வர முடியல” என்று அஸ்வினிடம் கூறிட.
“அதனால என்ன அங்கிள் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று கூறியவன் கௌதமை திரும்பி பார்க்க அவனோ ப்ரியாவை தவிர யாரையும் பார்ப்பது போல் தெரியவில்லை.
“ஆனா, கௌதம் எவ்வளவு பயபக்தியா மாமி.. ச்சி சாரி சாமி கும்பிட்டத இன்னைக்கு தான் பாக்குறேன்” என்று அஸ்வின் கூறிட அனைவரும் கௌதமை பார்த்து சிரிக்க தொடங்கினர்.
ப்ரியா வெட்கத்தை மறைக்க முடியாமல் தந்தையின் பின் ஒளிந்து கொண்டாள்.
அண்ணன் இப்படி அனைவரின் முன்னாலும் தன்னை வாரி விடுவான் என எதிர்பார்க்காத கௌதம், “சரி சரி விடு அண்ணிய கல்யாணம் பண்ணும் போது நீ பண்ணாதது என்ன நான் பண்ணிட்டேன்” என்று அண்ணனின் காதில் ரகசியம் பேசினான்.
திரும்பி சிவகுமாரை பார்த்திவிட்டு அஸ்வின், “டேய் கௌதம் உங்க மாமனார் என்ன சாப்பிடுறாருன்னு கேட்டு சொல்லு டா. உனக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு பிசிக் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்காரு” என்று கூறினான்.
“ஆமாண்ணா அரவிந்துக்கு அப்பா மாதிரி இல்ல அண்ணன் மாதிரி இருக்காரு.” என்று கூறியவன் அதன்பின் அப்பட்டமாக ப்ரியா வை சைட் அடிக்கா விட்டாலும் ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டான்.
அதுக்கு அடுத்த நாட்கள் தொடர் வேலைகளால் கௌதம் மருத்துவமனையை விட்டு நகர முடியாமல் இருக்க, அவனைத் தவிர அனைவரும் ஜவுளி கடைக்கு சென்று திருமணத்திற்கான ஆடைகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.
கௌதம் வரவில்லை என்ற கவலை ப்ரியாவிற்கு இருந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாள்.
மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் திருமண வேலைகளில் மும்முறமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அழைப்பிதழ் வைப்பது தொடக்கம் பந்தக்கால் நடுவது வரை நடந்து முடிந்து விட்டிருக்க நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில் நாட்கள் வேகமாக நகர்ந்தது.
அருண் அலுவலகத்துக்கு வந்ததிலிருந்து அவனின் வலது கண் துடித்துக் கொண்டே இருந்தது.
என்ன செய்தும் கண் துடிப்பது நிறுத்த முடியவில்லை.
உடனே அவன் சித்தப்பா விடம் இருந்து அழைப்பு வரவும் அடுத்த நொடி எடுத்து இருந்தான்.
“அருண் சித்தி காலையிலே பிரஷர் கூடி கிச்சன்ல மயங்கி விழுந்துட்டா. இப்போ ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். நீ கொஞ்சம் கடையை போய் பார்த்துக்குறியா?” என்று கேட்டார்.
உடனே லீவை போட்டுவிட்டு கடைக்கு வந்தவன் கடையில் எல்லா வேலையும் சரியாக நடக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினான்.
கடைக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் வாட்ஸாப் எண்ணுக்கு வரும் அன்றைய நாளுக்கான ஆர்டர்களை குறித்து வைத்துக் டெலிவரி செய்யும் ஆளிடம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
இடையிடையே சித்தப்பாவை அழைத்து சித்தியின் உடல் நிலையை பற்றி கேட்டு தெரிந்தும் கொண்டான்.
இரவு வீட்டுக்கு அனுப்பிடுவார்கள் என்று சித்தப்பா கூறியதும் நிம்மதி அடைந்தவன் தொடர்ந்து வேலைகளை பார்க்க தொடங்கினான்.
இரவு சரியாக கடையை சாத்தும் வேளையில் கடையின் வாட்ஸாப்ப் எண்ணில் இருந்து ஒரு ஆர்டர் வந்திருக்கவும் போனை ஆஃப் செய்ய போனவன் மெசேஜை தவறுதலாக திறந்திருந்தான்.
சிவா என்ற பெயரில் அந்த வாட்ஸாப் எண் இருக்கவும் ஆர்டரை பார்த்தவன் வீட்டுக்கு செல்லும் வழியில் இருப்பதால் டெலிவரி செய்ய எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து ஆர்டரை பார்க்கத் தொடங்கினான்.
பெடிகிரி, பால், யோகர்ட் என்று ஆடர் வந்திருக்க அந்த மூன்று பொருட்களை மட்டும் தனியாக ஒரு கவரில் எடுத்துப் போட்டுக் கொண்டவன் கவரை எடுத்துக் கொண்டு அந்த முகவரிக்கு வண்டியை செலுத்தினான்.
பைக்கில் டெலிவரி செய்ய வேண்டிய தெருவுக்குள் அருண் நுழைந்திட அந்த தெருவே பிரகாசமாக காட்சியளித்தது. அவன் பைக் நின்ற இடத்தை விட்டு இரண்டு வீடு தள்ளி கல்யாண வீடு என்று தெரிந்ததும் பைக்கில் இருந்து இறங்கினான்.
விலாசத்தில் நம்பர் பத்து என்று இருக்கவும் அது அந்த திருமண வீடு என்று புரிந்ததும் அழைப்பு மணியை அழுத்தினான்.
வாசலில் கதவை திறந்து கொண்டு கையில் நாய் குட்டியோடு நின்ற ப்ரியவை கண்டு இன்பமாக அதிர்ந்தான்.
தொடரும்..