ஜீயோனா
Moderator
அத்தியாயம் 13
காலையில் உறக்கம் கலைந்ததும் உற்சாகமாக எழுந்து வந்து பால்கனியில் நின்றாள் ப்ரியா.
கையில் மருதாணியோடு இரவு தூங்கியதால் கையில் மருதாணி உதிர்ந்து சிவப்பாக காட்சியளித்தது.
அதை ரசித்துப் பார்த்தவள் கையை கழுவிக்கொண்டு வந்து வெளிச்சத்தில் நின்று சிவந்திருந்த கைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து கௌதமுக்கு அனுப்பி வைத்தாள்.
திருமண கலை ப்ரியாவின் முகத்தில் கூடிக்கொண்டு இருந்தது.
குளித்து உடை மாற்றி கூடத்துக்கு வந்தவள் வீட்டில் மற்றவர்கள் பரபரப்பாக இருப்பதைக் கண்டு சமையலறை நோக்கி சென்றாள்.
திருமணத்துக்கு என்று தூரத்து உறவினர்கள் நெருங்கிய சொந்தம் என்று அனைவரும் வந்திருக்க வீடு முழுவதும் ஆட்களுக்கு பஞ்சம் இல்லாமல் நிறைந்திருந்தது.
சமையலறை வாசலில் அவளை கண்ட பெரியம்மா சைலஜா, “வாம்மா இந்த டீயை குடி” என்று அவள் கையில் ஒரு டம்ளரை திணித்தவர் சமையலில் கவனம் ஆகினார்.
நுரை பொங்கி இருந்த டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தவள் அலைபேசி சத்தம் கேட்கவும் அறைக்குள் சென்று அழைப்பை ஏற்றாள்.
வைத்தியசாலையில் இருந்து கௌதம் தான் அவளுக்கு அழைத்திருந்தான்.
நாளையிலிருந்து அவனுக்கு மூன்று வாரத்துக்கு விடுமுறை என்பதால் இன்று மட்டும் சிரமம் பாக்காமல் வீட்டுக்கு செல்ல தாமதமானாலும் எல்லா நோயாளிகளையும் பரிசோதித்து விட்டு செல்லுமாறு மேலிடத்திலிருந்து கூறியதால் சரி என்று ஒப்புக்கொண்டிருந்தான்.
வாட்ஸாப்பில் ப்ரியா அனுப்பி இருந்த மருதாணி புகைப்படத்தை கண்டதும் உடனே அவளுக்கு அழைத்திருந்தான்.
“மிசஸ் கௌதம் என்ன செய்றீங்க?” என்று குரலில் உற்சாகம் பொங்கிட கேட்டான்.
“ஹலோ… மிஸ் ப்ரியா சிவகுமார் தான் இன்னும் நான். கல்யாணம் நடந்து முடியல” என்றாள் அவனை சீண்டி பார்க்கும் விதமாக.
”அப்போ எதுக்கு மேடம். மருதாணியில் என் பேரை போட்டு இருக்கீங்க” என்று அவன் அவளை மடக்கி கேட்டிட பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவள், ”அது…அது நான் போடல மெஹந்தி ஆர்டிஸ்ட் கிட்ட தான் நீங்க கேக்கணும்“ என்று கேவலமாக சமாளிக்க முயன்றாள்.
”சரி சரி இந்த பஞ்சாயத்தை நாம கல்யாணம் முடிஞ்சதும் பாத்துக்கலாம். இப்போ உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் கால் பண்ணேன்” என்று பீடிகை போட்டு பேச தொடங்கினான்.
“என்னது?“ என்று அவளும் ஆர்வமாக கேட்டாள்.
“உன் வீட்டு வாசலுக்கு வா” என்று அவன் கூறியதும் அலைபேசி பேசிக்கொண்டே வாசலுக்கு ஓடினாள்.
எதிர்பார்ப்போடு வாசல் கதவை திறந்து பார்க்க அங்கே யாரையும் காணவில்லை.
“இங்க யாருமே இல்லையே” என்று கூறியவள் வீட்டின் கேட்டை தாண்டி ரோட்டுக்கும் சென்று பார்த்தாள்.
”அப்படியா? யாருமே இல்லையா? சரி என்ன பண்ணலாம். சரி அப்படியே நீ வீட்டுக்குள்ள போயிரு”என்று அவளை வெறுப்பேற்றும் விதமாக கூறினான் கௌதம்.
“என்ன விளையாடுறீங்களா? இப்ப நீங்க எங்க இருக்கீங்க”
“நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்”
“ஹாஸ்பிடல்ல இருந்துட்டு என்கிட்ட விளையாடிட்டு இருக்கீங்களா?”
”ஹலோ எனக்கு தலைக்கு மேல இங்க வேலை இருக்கும்மா. உன் கூட விளையாடுறதுக்கு எல்லாம் எனக்கு இப்போ டைம் இல்ல. மூணு வாரம் லீவு போட்டு இருக்கேன் அப்போ வேணும்னா விளையாடுவோம்” என்றான்.
அவன் கூறியதன் அர்த்தம் புரிந்ததும், “ச்சீ என்ன இப்படி பேசுறீங்க” என்று வெளியே கூறினாலும் மனதுக்குள் அவன் பேச்சை ரசிக்க தான் செய்தாள்.
“சரி பேச்ச மாத்தாதீங்க இப்போ எதுக்கு என்ன வெளில வர சொன்னிங்க?”என்று கேட்டாள்.
“இப்போ என் ஃபிரண்டு வருவான் அவன் கொடுக்கிற பார்சல் வாங்கிட்டு எனக்கு கால் பண்ணு” என்று கூறி அலைபேசியை வைத்து விட்டான்.
சொல்லி வைத்தது போல் அவன் அலைபேசியை துண்டித்த மறு நொடி வீட்டின் வாசலில் ஒருவர் பார்சலோடு நின்றார்.
அவள் வாசலுக்கு வந்ததும், “ஹாய் ப்ரியா கௌதமோட ஃபிரண்டு நான். இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னான்” என்று அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
யோசனையோடு பார்சலை அவளின் அறைக்கு தூக்கிச் சென்றவள் கட்டிலில் வைத்து அதைத் திறக்கப் போகும்போது வித்தியாசமான சத்தம் கேட்டது.
பார்சலை திறந்தவளின் கண்கள் ரெண்டும் ஆச்சரியத்தில் விரிந்தன.
பார்சல் பெட்டிக்குள் மூன்று வாரமே ஆன கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் குட்டி அப்பாவியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.
நாய் குட்டியை பார்த்த சந்தோஷத்தில் அதைத் தூக்கி முத்தமிட்டாள்.
“பாக்க எவ்வளவு க்யூட்டா இருக்கு” என்று வாய்விட்டு கூறியவள் அதை தடவி கொடுக்க தொடங்கினாள்.
அந்தப் பக்கம் இவள் அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்த கௌதம் அவள் அழைக்கவில்லை என்றதும் அவனே அவளுக்கு அழைத்தான்.
கௌதமின் நம்பரை கண்டதும் அழைப்பை ஏற்றவள், “சாரி சாரி பப்பிய பார்த்ததும் கால் பண்ண மறந்துட்டேன்” என்று மன்னிப்பு கேட்டாள்.
“நாய்க்குட்டிய பாத்ததும் என்னை மறந்துட்ட அப்படித்தானே” என்று கோபம் போல் கௌதம் கூறிட.
“கோவப்படாதீங்க. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்று அவள் கூற,
“கேவலமா சமாளிக்காத. நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண கால் பண்ணல. எனக்கு கொஞ்சம் எமர்ஜென்சி அதனால் உடனே போகணும் அதான் கிப்ட் புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுட்டு வைப்போமுன்னு எடுத்தேன்” என்றான்.
”ரொம்ப புடிச்சிருக்கு“ என்றாள் நாய்க்குட்டியைமடியில் வைத்து தடவிக் கொண்டு.
“உனக்கு நான் குடுக்குற வெட்டிங் கிஃப்ட் இதுதான். என்ன பெயர் வைப்போம்?” என்றான்
“பாக்க குக்கி மாதிரி இருக்கான். பேசாம குக்கின்னு வச்சுருவோமா?”
“உன் இஷ்டம்” என்று கூறியவன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு கூடத்துக்கு வந்தவள் தாய், தந்தை, அண்ணன், உறவினர்கள் என்று எல்லோருக்கும் குக்கியை காட்டினாள்.
தலைக்கு மேல் திருமண வேலைகள் இருப்பதால் சிறிது நேரம் குக்கியோடு விளையாடிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க ஒருவர் பின் ஒருவராக கலைந்து சென்றனர்.
நாய் குட்டியோடு தனித்த விடப்பட்ட ப்ரியா நாயின் பசியை போக்க வீட்டில் இருந்த பழைய பாத்திரத்தில் நாய் குட்டிக்கு பாலை ஊற்றி குடிக்க கொடுத்தாள்.
நாளை மண்டபத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டியிலும் புகுந்த வீட்டுக்கு என்று எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டியிலும் உடைகளையும் அடுக்குவதற்காக அவளின் பெரியம்மாவின் உதவியை நாடினாள்.
தாரணி ப்ரியாவுக்கு என்று புதிதாக வாங்கிய சுடிதார்களையும் புடவைகளையும் சைலஜா அழகாக மடித்து ப்ரியாவிடம் கொடுக்க அவள் அதைப் பெட்டியில் நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
இதில் இடைப்பட்ட நேரத்தில் குக்கி நன்றாக ஒரு உறக்கத்தை போட்டு எழுந்திருந்தது.
அந்தி சாய்ந்து மாலை ஆகிடவும் குக்கிக்கு தேவையான பொருட்களை எல்லாம் சீட்டு ஒன்றில் எழுதி வேலை செய்பவர்களிடம் வாங்கி வர சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களைத் தேட எல்லோருமே ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருக்க யாரையும் தொந்தரவு செய்யாமல் வந்துவிட்டாள்.
வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வந்த சிவகுமார் குக்கியை பற்றி ப்ரியாவிடம் விசாரிக்க, “அவனுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்பா. உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது சூப்பர் மார்க்கெட்ல டெலிவரி பண்ணுவாங்களா?” என்றாள்.
எப்போதோ தாரணி தன்னிடம் கொடுத்திருந்த சூப்பர் மார்க்கெட் விசிட்டிங் கார்டின் ஞாபகம் வர அதை அறையில் தேடி எடுத்துக் கொண்டு வந்தார்.
தானே அந்த சூப்பர் மார்க்கெட் எண்ணிற்கு வாட்சப்பில் ப்ரியா சீட்டில் எழுதி வைத்திருந்த பொருட்களை ஆடர் செய்தார்.
அரவிந்த் டெகரேஷன் சம்பந்தமாக சில சந்தேகங்களை கேட்பதற்காக தந்தையை தேடி வந்தவன் அவரை கையோடு அழைத்துச் செல்ல முற்பட மகளின் கையில் தன் அலைபேசியை கொடுத்துவிட்டு சென்றார் சிவக்குமார்.
நேரமாக குக்கி பசியில் சத்தம் போட தொடங்க வீட்டிலிருந்த பால் முடிந்து விட்டதால் என்ன செய்வது என்று யோசனையில் இருந்தவள் வீட்டின் அழைப்பு மணியின் சத்தத்தில் நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வாசல் கதவை திறந்தாள்.
வாசலில் அருண் நிற்கவும் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டவள் அன்று அவனை சூப்பர் மார்க்கெட்டில் கண்டது நினைவு வரவும் உற்சாகத்தோடு, “ஹாய் அருண், உங்களை நான் இங்க மீட் பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல. காலேஜ் டைம்ல இருந்ததை விட இப்போ ஆளே மாறிட்டீங்க. லைஃப் எல்லாம் எப்படி இருக்கு?” என்று சாதாரணமாக பேச தொடங்கினாள்.
பல நாள் ப்ரியாவை சந்திப்பதற்காகவே ஜிம்மில் நாள் முழுதும் காத்துக் கிடந்தவன் இன்று எதிர்பாராமல் சந்திக்கவும் இன்ப அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வர மறுத்தது.
அவன் அமைதியாக இருப்பதை கேள்வியாகபார்த்தவள், “ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க?அன்னைக்கு பார்த்தப்போ உங்ககிட்ட நான் எதுவும் பேசல அதனால் என் மேல ஏதாச்சு கோவமா?” என்று கேட்டாள்.
உடனே மறுப்பாக தலை அசைத்தவன் மனதுக்குள் ‘நான் எப்படி உன் மேல் கோபப்படுவேன் ப்ரியா’ என்று கூறிக் கொண்டான்.
“அப்புறம் ஏன் பேச மாட்டேன்றீங்க?” என்று கேட்டவள், “வீட்டுக்குள்ள வாங்க” என்று அவனை உள்ளேஅழைத்தாள்.
தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவன் வீடு மொத்தமும் ஆட்கள் இருப்பதை கண்டதும் யோசனையோடு அவள் பின்னே சென்றான்.
கூடத்தில் அவனை அமர வைத்தவள் சமையல் அறைக்குள் சென்று அவனுக்காக காபி தயாரித்து எடுத்து வந்தாள்.
நன்றி கூறி அதைப் பெற்றுக் கொண்டவன் மிதமான சூட்டில் இருந்த காபியை மெதுவாக குடித்தான்.
அவன் அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தவள், “எப்படி இருக்கீங்க?” என்று அவனிடம் கேட்டாள்.
“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்று கேட்டான்.
“நான் நல்லா இருக்கேன்” என்று சிரித்த முகமாக கூறியவள் அவன் மிரட்சியாக வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவள் “ஃபீல் கம்ஃபர்டபில்” என்று கூறினாள்.
சரி என்று தலையாட்டியவன், “வீட்ல ஏதாச்சும் ஃபங்ஷனா” என்று கேட்டான்.
அதற்கு ஆமாம் என்று தலையசைத்தவள், “பில் எவ்வளவு?” என்று அவனிடம் கேட்டாள்.
அவன் அதெல்லாம் வேண்டாம் என்று கூற, “பிசினஸ் வேற பர்சனல் வேற. இப்படி ப்ரியாக்கு ஃபிரியா கொடுக்க பாக்காதீங்க” என்று கூறியவள் ஆர்டர் செய்த பொருட்களுக்கான விலையை அவனை வற்புறுத்தி தெரிந்து கொண்டு பணத்தை எடுக்க உள்ளே சென்றாள்.
திரும்பி வரும்போது ஒரு கையில் பணமும் மறுக்கையில் ஒரு அழைப்பிதழோடு வந்தவள், “தப்பா எடுத்துக்காதீங்க அருண். உங்களோட கான்டெக்ட் என்கிட்ட இல்ல இருந்து இருந்தா கண்டிப்பா உங்களை இன்வைட் பண்ணி இருப்பேன். பார்த்த இடத்துல வச்சு இன்வைட் பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாளைக்கு நீங்க கண்டிப்பா வரணும்”என்று பணத்தையும் அழைப்பிதழையும் சேர்த்து கொடுத்தாள்.
மனதில் ஒரு நெருடலுடனே அழைப்பிதழை பிரித்துப் பார்த்தவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
தொடரும்...