ஜீயோனா
Moderator
அத்தியாயம் 14
மணமகள் என்ற இடத்தில் சுதா ப்ரியா என்று இருப்பதை கண்டதுமே நெஞ்சில் ஒரு வலியை உணர்ந்தான்.
அவள் கண்களை நேராக சந்திக்க முடியாமல் தரையை பார்த்து சிறிது நேரம் யோசித்தவன் திடீரென “அப்போ நீ என்னை லவ் பண்ணுது?”என்று கேட்டான்.
முதலில் தன் செவியில் கேட்டது உண்மைதானா என ஸ்தம்பித்து நின்றாள் ப்ரியா.
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியில் நின்றவள், “அது நடந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. எனக்கு உங்க மேல கிரஷ் இருந்தது உண்மைதான். உங்களுக்கு வேறொரு பொண்ணு மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் விலகி போய்ட்டனே. இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படி கேக்குறீங்க?” என்று பயத்தோடு கூறினாள்.
“அப்போ நீ என்னை மறந்துட்டு மூவ் ஓன் பண்ணிடியா ப்ரியா” என்றான்.
“நீங்க கேக்குறது உங்களுக்கே தப்பா தெரியலையா. எனக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு சொன்னேன். உங்களுக்கு வேற யாரையோ புடிச்சிருக்குன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் நாம ரெண்டு பேருமே பேசிக்கல. இப்போ வந்து என் கல்யாணத்துக்கு கூப்பிடறப்போ, இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்றாள் எரிச்சலாக.
வியர்த்து வடிந்திருந்த முகத்தை இரண்டு கைகளாலும் துடைத்தவன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக் கொண்டான்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். எனக்கு காலேஜ் டைம்ல உன்ன தான் புடிக்கும். நீ வசதியான வீட்டு பொண்ணு நீயே வந்து என்ன புடிச்சி இருக்குன்னு சொல்லும்போது சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, உனக்கே தெரியும் நான் காலேஜ்ல அவரேஜ் ஸ்டுடென்ட். என்னால நீ எக்ஸ்பெக்ட் பண்ற லைப் ஸ்டைல் சப்போர்ட் பண்ண முடியாது. அதனால நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு என்னோட காதல உன் கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். அதுக்கு எனக்கு இந்த நாலு வருஷம் தேவைப்பட்டது. இப்ப சொல்லு உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?” என்று கேட்டான்.
கூடத்தில் இருவரும் ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் யாரும் இவர்களைப் பெரிதாக கவனிக்கவில்லை.
நெடுநாள் கழித்து சந்தித்த சொந்தங்கள் பேச்சு சுவாரசியத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததால் இவர்களின் உரையாடல் யாரின் செவியிலும் விழவில்லை.
அருண் கேட்ட கேள்வியில் கோபத்தின் உச்சிக்கு சென்றவள், “இல்லை எனக்கு புரியல. என்ன பாத்தா பொம்மை மாதிரி இருக்கா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. நான் உங்களை விரும்புறேன் என்று சொல்லும்போது எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா எனக்கு கொஞ்சம் டைம் தா அப்படி சொல்லி இருந்தா இப்படி ஒரு நிலைமைக்கு நாம இரண்டு பேருமே வந்து இருக்க மாட்டோம். உங்களுக்கும் புடிச்சிருக்குங்குற விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்ல மாட்டீங்க. ஆனா நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கணும். இது உங்களுக்கே பைத்தியக்காரத்தனமா தெரியல. நான் இப்ப சொல்றதை நல்லா மைண்ட்ல ஏத்திக்கோங்க. எனக்கு கௌதமை ரொம்ப புடிச்சிருக்கு. நான் கௌத்தமை தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க இப்ப கிளம்பலாம்” என்றாள் முடிவாக.
ப்ரியாவின் பேச்சில் அதிர்ந்தவன் அவளின் கையை பிடித்து கெஞ்ச தொடங்கினான்.
”ப்ரியா ப்ளீஸ், என்னை விட்டு போகாத. நான் உன்னை நல்லா பாத்துப்பேன். உன்ன ரொம்ப லவ் பண்றேன்” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இடியாக ஒரு கரம் அவன் கன்னத்தில் இறங்கியது.
இருவரும் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க அங்கே சிவக்குமார் ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தார்.
அவனை தந்தை அடித்த பயத்தில் அழ தயாராக இருந்த ப்ரியாவை ஆதரவாக பிடித்துக் கொண்டார் தாரணி.
“யார் வீட்டில் வந்து என்ன வேலை பார்த்துகிட்டு இருக்க” என்று மறுபடியும் அவர் கன்னத்தில் அறையசெல்ல கனவுலகில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான் அருண்.
அவள் அழைப்பிதழை கொடுத்ததற்கு பின் நடந்த அனைத்தும் அவன் கற்பனையே.
“என்ன ஆச்சு உங்களுக்கு ரொம்ப நேரமாவே அமைதியா யோசிச்சிட்டு இருக்கீங்க?
நாளைக்கு மறக்காம கல்யாணத்துக்கு வந்துருங்க” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே தாரணியும் சிவகுமார் வந்துவிட்டார்கள்.
தான் கற்பனை செய்தது போல் நடந்தாலும் பரவாயில்லை உண்மையை கூறிவிடலாம் என்று நினைத்த அருண் “ப்ரியா…” என்று அழைக்கும் போதே அந்த இடத்திற்கு வந்தாள் ஆர்த்தி.
அருணை பார்த்து அதிர்ச்சியில், “அருண் வாட் அ சப்ரைஸ் உன்னை இங்க பார்ப்பேன்னு எக்ஸ்பெக்ட்பண்ணல. எப்படி இருக்க?” என்று கேட்டாள்.
“குட்” என்று அவன் ஒரு வார்த்தையில் முடித்து கொள்ள ப்ரியாவிடம் திரும்பி, “எங்கடி கௌதம் கொடுத்த கிஃப்ட்” என்றாள்.
சைலஜா பெரியம்மாவிடம் இருந்த குக்கியை தூக்கிக் கொண்டு வந்த ப்ரியா ஆர்த்தியிடம் காண்பித்தாள்.
“சோ க்யூட்” என்று கூறிய ஆர்த்தி குக்கியை கையில் வாங்கி கொண்டாள்.
அருண் மறுபடியும் பேச முயற்சிக்கும் போது அவன் அலைபேசி இசைக்க அழைப்பை ஏற்று காதில் வைத்தவனுக்கு சுற்றி இருந்தவர்களின் பேச்சு சத்தத்தில் ஒன்றுமே கேட்கவில்லை.
அலைபேசியை எடுத்துக்கொண்டு அருண் வெளியேறவும் தோழிகள் இருவரும் குக்கியோடு அறைக்குள் நுழைந்தனர்.
வெளியே வந்தவன், “இப்ப சொல்லுங்க சித்தப்பா” என்று கூறவும் அழைப்பின் அடுத்த முனையில் கூறிய விஷயத்தை கேட்டதும் உடனே பைக்கில் மருத்துவமனை நோக்கி கிளம்பி விட்டான்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அருணின் சித்தி சுகுணா.
அருணின் பெற்றோர்கள் இருவரும் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார்கள்.
நீதிமன்றத்தில் அருண் யாரோடு இருக்க விருப்பப்படுகிறான் என்று கேட்ட பொழுது தனக்கு யாரும் வேண்டாம் என்று கூறிவிட்டான்.
சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகளை பார்த்து வளர்ந்ததால் இருவரிடமுமே அருண் விலகியே இருந்தான்.
அவர்களுமே அருணை ஒரு கடமையாக பார்த்தார்களே தவிர அவனை பாசமாக நடத்தியது இல்லை.
சிறுவயதிலிருந்தே தன்னுடைய தந்தையுடைய தம்பி திவாகரிடம் மட்டுமே இணக்கமாக நடந்து கொள்வான் அருண்.
பெற்றோரின் விவாகரத்துக்கு பின் சிறிது நாள் தந்தையோடும் சிறிது நாள் தாயோடும் வாழ்ந்து வந்தவன் காலேஜ் ஆரம்பிக்கவும் தனியாக ஹாஸ்டலில் தங்கி படிக்க தொடங்கினான்.
படிப்புக்கு தேவையான கட்டணத்தை மட்டுமே தன் பெற்றோரிடமிருந்து வாங்கினானே தவிர தன் தனிப்பட்ட செலவுகளை தானே சின்ன சின்ன வேலைகளுக்கு சென்று பார்த்துக்கொண்டான்.
திவாகருக்கும் சுகுணாவுக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் இவனை பாசமாகவே பார்த்துக் கொண்டனர்.
அருண் சின்ன வயதில் தன் பெற்றோரின் சண்டையை பார்த்து அழும் சமயங்களில் அவனை ஒரு தாயாக வந்து அரவணைத்தது சுகுணா என்பதால் அவரின் மேல் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்.
இப்படி தன் மேல் பாசம் வைத்த ஜீவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது அவனால் மட்டும் எப்படி தன் வாழ்க்கையைப் பற்றி மட்டும் சுயநலமாக யோசிக்க முடியும் அதனால் தான் உடனே கிளம்பி வந்து விட்டான்.
தோய்ந்து போய் அமர்ந்திருந்த திவாகரின் அருகில் சென்று அமர்ந்தவன், “என்னாச்சு சித்தப்பா” என்றுகேட்டான்.
“தெரியல டா. நல்லா தான் இருந்தா. திடீரென மயக்கம் போட்டுட்டா. ரொம்ப நேரமா எல்லாரும் உள்ள போறாங்க வராங்களே தவிர எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அதுதான் உன்ன கூப்பிட்டேன்” என்று கூறியவர் அருணின் தோளில் சாய்ந்துக் கொண்டார்.
தன்னுடைய பிரச்சனை எல்லாம் ஒருபுறமாக தள்ளி வைத்த அருண் தன்னை சார்ந்தவர்களுக்குதுணையாக நிற்பது முக்கியம் என முடிவு செய்தான்.
இரவே நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பதிவு செய்திருந்த அறைகளுக்கு வந்துவிட்டார்கள் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்.
ரகு ஹோட்டலுக்கு தங்க வராத காரணத்தால்
ஆர்த்தியும் ப்ரியாவும் ஒரே அறையில் தாங்கிக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆர்த்தி மெத்தையில் படுத்ததுமே உறங்கி விட்டாள். பாவம் ப்ரியா தான் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
தலையணை அருகில் இருந்த அவளின் கைபேசி வைப்ரேட் செய்ய இந்த நேரத்தில் யார் என்று எடுத்துப் பார்த்தாள்.
“தூங்கிட்டியா?” என்று கேட்டு கௌதமிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
“இல்லை” என்று பதிலளித்துவிட்டு அவனின் அடுத்த குறுஞ்செய்திக்காக காத்திருக்க தொடங்கினாள்.
“அப்போ கதவை திற” என்று ஐந்து நிமிடம் கழித்து குறுஞ்செய்தி வரவும் பதட்டமானவள் “யாராவது பாத்துட்டா பிரச்சனை ஆயிடும் நான் திறக்க மாட்டேன்” என்றாள்.
“ரூம்ல ஆர்த்தி இருக்கான்னு எனக்கு தெரியும். ஆர்த்தி இருக்கும்போது உன்னை நான் என்ன பண்ணிட போறேன்” என்றான்
சரி என்று கண்ணாடியில் முகத்தையும் உடையையும் எப்படி இருக்கின்றது என்று பார்த்துவிட்டு திருப்தியாக இருக்கவும் உடனே சென்று கதவைத் திறந்தாள்.
வாசலில் ஹூடி போட்டு தலையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தான் கௌதம்.
அறையின் வெளிச்சத்தில் அவன் முகத்தை கண்டவள், “ஏன் இப்படி கொள்ளைக்காரன் மாதிரி மூஞ்சிய மறச்சிட்டு வந்து இருக்கீங்க”என்றாள்.
“அப்ப எல்லா ரூமையும் தட்டி நான் ப்ரியா ரூமுக்கு போறேன்னு சொல்லிட்டு வரட்டுமா?” என்றான் நக்கலாக.
“எனக்கு என்ன தாராளமா சொல்லுங்க” என்று கையைக் கட்டிக் கொண்டு கூறினாள்.
“அப்படியா இரு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்” என்று அவன் போக முற்பட அவன் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்தாள்.
இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதி நின்றாள்.
இதுதான் சமயம் என்று அவனும் அவளை அணைத்துக் கொள்ள அவன் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தியவள், “ஃபிராடு” என்று கூறினாள்.
படுக்கையில் உறக்கத்தில் இருந்த ஆர்த்தி மற்ற பக்கம் புரண்டு படுக்க ப்ரியாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பல்கனிக்கு கூட்டி வந்தான்.
பதினைந்தாவது தளத்தில் இவர்களின் அறை ஒதுக்கப்பட்டு இருந்ததால் மொத்த ஊரும் அந்த இனிமையான இரவு வேளையில் அழகாய் தெரிந்தது.
கௌதமின் கைவளையத்துக்குள் இருந்துக் கொண்டு “பியூட்டிஃபுல் சிட்டி இல்ல” என்றாள்.
“ஆமா. 30 வருஷமா இதே ஊர்ல தான் இருக்கேன். அப்ப எல்லாம் விட. இப்போ இந்த நிமிஷம் உன் கூட சேர்ந்து இங்க இருந்து பாக்குறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று கூறி அவளின் செவியில் முத்தமிட்டான்.
அவன் முத்தம் தந்த குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போயிருந்தது.
கடிகாரத்தில் நேரம் பார்த்தவன் இரவு மணி பண்ணிரண்டாகவும், “ஹேப்பி வெட்டிங் டே டு அஸ்” என்று கூறி ஆத்மார்த்தமாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“குட் நைட். நல்லா தூங்கு” என்று கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
கெளதம் அறையை விட்டு சென்ற பின்பும் அவன் தந்த முத்தத்தின் குறுகுறுப்போடு மெத்தையில் வந்து படுத்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
தொடரும்...