ஜீயோனா
Moderator
அத்தியாயம் 15
மகேஷும் அஸ்வினும் கௌதம் அறையில் இருந்து அவன் தயாராகுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
ஆள் உயர கண்ணாடி முன் நின்று தலைக்கு ஜெல் தடவி நேர்த்தியாக முடியை சீப்பை கொண்டு வாரினான் கௌதம்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரம் பொருந்தி ஆறடி ஆண்மகன் அவன் கிரேக்க சிற்பமாக காட்சியளித்தான்.
புகைப்படக் கலைஞரும் அவன் தயாராகுவதை கேண்டிட் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தார்.
கௌதம் தாடியை சவரம் செய்து இருந்ததால் ஐந்து வயது குறைந்தது போல் தெரிந்தான்.
அவன் கையில் விலை உயர்ந்த ரோலெக்ஸ் வாட்ச் அணிவதையும் அறையில் இருந்த அலங்கார சோபாவில் தோரணையாக அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போது அறைக்குள் நுழைந்த ஈஸ்வரி, “கௌதம் ஐயர் கூப்பிடுறார்” என்று கூறி அனைவரையும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.
கௌதம் வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் தான் ப்ரியாவிடம் முகூர்த்த புடவை கொடுத்து ஐயர் மாற்றி வரும்படி கூறியிருந்தார்.
இரு விட்டாரின் அழைப்பினை மதித்து திருமணத்துக்கு வந்த சொந்தங்கள் மண்டபத்தையே நிறைத்தனர்.
ஐயர் சொன்ன மந்திரங்களை நாதஸ்வர சத்தத்திலும் ஓம குண்டத்தில் வந்த புகையிலும் சிரமப்பட்டு உச்சரித்துக் கொண்டிருந்தான் கௌதம்.
பெண் வரவேற்புக்கு என்று பிரத்தியேகமாக நாதஸ்வர குழு வைத்திருந்த பாடலை வாசிக்க நிமிர்ந்து ப்ரியாவை கண்டவன் அவளுடைய அழகில் மயங்கித்தான் போனான்.
மந்திரம் உச்சரிப்பதை விட்டுவிட்டு அவளைப் பார்த்து அவன் கண்ணடிக்க மண்டபத்துக்குள் நுழைந்ததில் இருந்து அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் செய்கையில் வெட்கம் பிடுங்கி திண்ணதலையை குனிந்து கொண்டாள்.
அவளை அழைத்து வந்த ஆர்த்தியும் ஆராதனாவும் கௌதமின் அருகில் அவளை அமர வைத்து விட்டு பின்னால் நின்று கொண்டனர்.
மேடையில் கௌதமின் பக்கம் அவனின் பெற்றோரும் உறவுகளும் நின்றுக்கொள்ள ப்ரியாவின் பக்கம் அவளின் பெற்றோர் மற்றும் சொந்தங்கள் நின்று கொண்டனர்.
மாங்கல்யத்தை வந்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி ஐயரிடம் ஆராதனா ஒப்படைக்க ஐயர் தாலியை கௌதமிடம் நீட்டி“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”என்று மந்திரம் கூறிகொண்டு இருக்கும் வேளையில் கையில் தாலியை வாங்கியவன் திரும்பி ப்ரியாவை காண அவளோ மகிழ்ச்சியில் ஆனந்தமாய் பார்த்து சிரித்தாள்.
கண்ணாலே அவளிடம் தாலி கட்டுவதற்கு சம்மதம் கேட்டவன் அவளின் சம்மதம் கிடைத்ததும் இரண்டு முடிச்சை போட்டுவிட்டு கையெடுத்திட மூன்றாவது முடிச்சை ஆராதனா போட்டுவிட்டாள்.
தாரணியும் சிவகுமாரும் தங்கள் செல்ல மகளின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறியதும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
நல்ல நேரத்தில் இனிதே திருமணம் நடந்து முடிந்திட மாலை வரவேற்பிற்கு அனைவரும் தயாராகினர்.
அருணையும் திவாகரையும் இரவு முழுவதும் பயத்திலேயே இருக்க வைத்த சுகுணா அதிகாலையில் கண் விழித்துக் கொண்டார்.
அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியவும் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினார் மருத்துவர்.
அவரை வார்டுக்கு மாற்றியதன் பின்னரே அருண் நிம்மதியாக மூச்சு விட்டான்.
பெற்ற தாயே தன்னை ஒதுக்கி நடந்தபோது ஆதரவாய் இருந்து தாயின் அன்பை அவனுக்கு காட்டியவர் சுகுணா என்பதால் அவர் கண்விழிக்கும் வரை ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல் பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல் அவர் கண் விழிக்கும் வரை காத்திருந்தான்.
அவரும் கண்விழித்ததுமே கட்டிய கணவரை கூட கவனிக்காமல் கலைந்து போன கேசத்தோடு கசங்கிய சட்டையுமாக நின்ற அருணை பார்த்ததும் அவர் முதலில் கேட்டது, “ஏதாச்சும் சாப்பிட்டியா?” என்று தான்.
அவர் கண்விழித்த சந்தோஷத்தில் அவன் கண்கள் கலங்கிட சீலேன் குத்தி இருந்த கையை உயர்த்தி அவனை அருகில் வருமாறு செய்கையால் அழைத்தார்.
சுகுணாவின் அருகில் சென்றவன் அவர் பேசுவதை கேட்பதற்கு ஏதுவாக குனிந்து நின்று கொண்டான்.
வரண்டு போன தொண்டையில் எச்சிலை விழுங்கிக் கொண்டு, “பயப்படாதே உன் கல்யாணத்தை பாத்துட்டு உன் குழந்தைய கொஞ்சிட்டு தான் நான் செத்துப் போவேன்” என்றார்.
அவரை கோபமாக முறைத்துப் பார்த்தவன் , “எனக்குன்னு ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைச்சதில்லை. எனக்கு இருக்கிறது நீங்க ரெண்டு பேர் மட்டும் தான். உங்களைத் தவிர என் வாழ்க்கையில வேற யாரும் வரதை நான் விரும்பல” என்று கூறியவனின் குரலில் விரக்தி நிறைந்திருந்தது.
அவன் கூறியது மயக்கத்தில் இருந்தவருக்கு சரியாக கேட்கவில்லை என்றாலும் அவன் அருகில் நின்று கொண்டிருந்த சித்தப்பா திவாகருக்கு தெளிவாக கேட்டது.
குழப்பமாய் பார்த்த மனைவியை ஓய்வெடுக்கும் படி கூறிவிட்டு அருணை வெளிய அழைத்து வந்தவர், “என்னடா பைத்தியக்காரத்தனமாக பேசிக்கிட்டு இருக்க. என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?” என்று கேட்டார்.
தலையை குனிந்து நின்று கொண்டிருந்தவன், “எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்” என்றான்.
என்ன தெரிஞ்சு பேசுற, “ப்ரியா விஷயத்த மறந்திட்டியா?” என்று கேட்டார்.
“மறக்கத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றவனின் குரல் கோபமாக ஆரம்பித்து ஏக்கமாக மாறியது.
நிமிர்ந்து அவரை நேருக்கு நேராக பார்த்து, “அவளுக்கு இன்னைக்கு கல்யாணம்” என்று கூறியவன் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவரைக் கடந்து சென்றான்.
மனைவிக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில் அவரை தனியாக விட்டுவிட்டு அருணின் பின்னால் சென்று ஆறுதல் கூட அவரால் சொல்ல முடியவில்லை.
வேக நடைப்போட்டு வந்தவன் மருத்துவமனை வாயிலை அடைந்ததும் அடக்கி வைத்திருந்த அழுகையை கதறி அழ தொடங்கினான்.
அவன் கோபம் எல்லாம் அவனைப் படைத்து கடவுளின் மேல் தான் வந்தது.
அவனுடைய பெற்றோரை அவனுக்கு மிகவும் பிடிக்கும் இருந்தும் அவர்களோடு இருக்க மறுத்ததற்கான காரணம் அவர்கள் இருவருக்குமே அவனை தங்களோடு வைத்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை. இருந்தும் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அவனுக்கு 18 வயது வரும் வரை மாறி மாறி கடமைக்காக பார்த்துக்கொண்டனர்.
சுகுணாவும் திவாகரும் வாரி வாரி அன்பை கொடுத்தாலும் அவன் அவர்களை அவனின் பெற்றோரை நேசிக்கும் அளவிற்கு நேசிக்க முயற்சித்தும் முடியவில்லை.
பல வருடங்கள் கழித்து அவன் பெற்றோருக்கு பின் ஆத்மார்த்தமாக ஒரு ஜீவன் மேல் அவன் அன்பு செலுத்தினான் என்றால் அது ப்ரியா மீது மட்டுமே.
தன்னுடைய துரதிஷ்டத்தை வாழ்க்கை முழுதும் அனுபவித்ததால் என்னமோ அவனால் அவள் காதலை ஏற்று அவளையும் கஷ்டப்பட வைக்க விரும்பவில்லை.
கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு கடுமையாக உழைத்து முன்னேறியவன் ஒரு கட்டத்தில் அவள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்று யாரையாவது திருமணம் செய்து இருப்பாள் என்று நினைத்து அவளை மறக்க முயற்சித்தான். ஆனால்,அவனை மீண்டும் ப்ரியாவை சந்திக்க வைத்து மறுபடியும் சோதித்தார் அந்தக் கடவுள்.
குழந்தையின் கையில் விளையாட்டு பொருளை கொடுத்துவிட்டு பிடுங்குவது போல் ப்ரியாவை அவன் பார்வையில் விழ வைத்து அவனுக்கு அவளை கிடைக்க விடாமல் சதி செய்த கடவுளிடம் அவனால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்.
அவன் கதறி அழுவதை பாவமாக பார்த்துவிட்டு பல பேர் கடந்து செல்ல அங்கேயே நிற்க முடியாமல் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
அடர் நீல நிறத்தில் லெஹங்கா அணிந்து இருந்தாள் ப்ரியா.
ஆடை வடிவமைப்பாளரிடம் ஒரு மாதத்திற்கு முன்பே சென்று ஆராதனாவின் உதவியோடு தேர்ந்தெடுத்த உடை அது.
பார்ப்போரின் கண்ணை பறிக்கும் விதமாக லேஹங்கா முழுவதும் டைமண்ட் போன்ற கற்களால் அழகாக வடிமமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு பொருத்தமான நெக்லஸ் ஜிமிக்கி வளையல் கூட டைமண்டில் அணிந்து இருந்ததாள்.
ஆனால், அவளின் முகப் பொலிவுக்கு முன் இவை அனைத்தும் தோற்றுப் போய் இருந்தது.
ப்ரியாவின் லேஹங்காவுக்கு பொருத்தமாக அடர் நீல நிறத்தில் கோட் சூட் அணிந்து உள்ளே வெள்ளை ஷர்ட் அணிந்திருந்தான் கௌதம்.
இருவருமே ஜோடியாக டிஜே இசைக்க செய்து கொண்டிருந்த பாடலுக்கு நடந்து வர அந்தக் காட்சியே பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
இருவரும் தங்களுக்கு என்று மேடையில் அலங்கரித்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்
சொந்தங்கள் அனைவரும் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து வாழ்த்து கூறி மணமக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.
அதில் இருவரும் சந்தோஷமாக பிடித்த கொண்ட கையை விடாமல் இருந்தனர்.
சக்கரவர்த்தி மற்றும் விஷ்வா இருவரும் தங்கள் தொழில் துறை நண்பர்களையும் உறவினர்களையும் கவனித்துக்கொள்ள அருணாவும் ஈஸ்வரியும் மாப்பிள்ளை பொண்ணுக்கு துணையாக மேடையின் அருகிலேயே நின்று அவர்களை கவனித்துக் கொண்டனர்.
தாரணியும் சிவகுமாரும் தங்கள் உறவினர்களை கவனிப்பதில் கவனமாக இருக்க இளைய தலைமுறையான அரவிந்த் மற்றும் அஸ்வின் அவர்களின் நண்பர்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக மது விநியோகிக்கும் பாரில் நின்று கொண்டனர்.
ஆராதனா ஸ்ரேயாவின் குழந்தையோடு விளையாடியபடி ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள ஸ்ரேயா மூத்த மருமகளாக தன் கடமைகளை செய்து கொண்டிருந்தாள்.
ஆர்த்தி தன் கணவரோடு மேடை ஏறி பரிசை ப்ரியாவின் கையில் கொடுத்தவள், “ஹாப்பி மேரீட் லைஃப் டி” என்று வாழ்த்திவிட்டு மேடையிலிருந்த இறங்கிட, ரகு ஆர்த்தியிடம் பாருக்கு செல்வதாக கூறிவிட்டு அரவிந்த் நண்பர்களோடு இணைந்து குடிக்க தொடங்கினான்.
பாட்டு டான்ஸ் கொண்டாட்டம் என அந்த இடமே கலை கட்டிக் கொண்டது.
சிவக்குமார் அவர் வேலை செய்யும் வங்கியில் பணி புரியும் நண்பர்களையும் வயது வித்தியாசம் பார்க்காமல் அழைத்திருந்தார்.
மணமக்கள் சிவக்குமாரின் வங்கியில் வேலை செய்யும் அவர்களோடு புகைப்படம் எடுக்கும் போது அவரும் இணைந்து கொள்ள கடைசியாக நின்ற கேஷியர் பூஜாவின் அருகில் நின்று கொண்டார்.
பூஜா அடக்கமும் அழகும் சேர்ந்த அருமையான பெண்.
பாரில் மது அருந்திக் கொண்டிருந்த அஸ்வினின் நண்பர்கள் சிலர் மேடையில் நின்று கொண்டிருந்த பூஜாவை பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
“ஆளு செம ஃபிகரா இருக்கா” என்று ஒருவன் கூறிட அவன் அருகில் அமர்ந்த இன்னொருவன், “யார்டா மச்சான் அது” என்று அஸ்வினிடம் கேட்டான்.
சிவக்குமார் அவளின் அருகே நிற்பதை கண்டவன், “அது கௌதமோட மாமா வொர்க் பண்ற பேங்க்ல கூட ஒர்க் பண்றவங்களா இருக்கும்” என்று கூறியவன் கிளாசில் இருந்த மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தான்.
அஸ்வின் நண்பர்கள் இருவரும் பூஜா மேடை விட்டு இறங்கியதும் அவளின் பின்னால் செல்வதை கண்ட ரகு ஏதோ தவறாக நடக்கப் போவதை உணர்ந்து உடனே சிவகுமாரிடம் சென்று விஷயத்தை பகிர்ந்தான்.
கால் போன போக்கில் எங்கெங்கோ நடந்து சென்ற அருண் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றான்.
சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஊழியன் கடையின் அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு மற்ற வேலையை கவனிக்க செல்ல அலைபேசியில் யாருக்கோ ஏதோ ஒரு புகைப்படத்தை தேடி எடுத்து அனுப்பிவிட்டு அலைபேசியை வைத்தான் அருண்.
ஒன்பது மணி ஆகவும் கடையை மூடிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.
தொடரும்...