ஜீயோனா
Moderator
அத்தியாயம் 16
ரகு கூறிய விஷயத்தை கேட்டதும் பதட்டத்தோடு, “இப்ப பூஜா எங்க?” என்று சிவகுமார் கேட்டிட அவர்கள் சென்ற திசையை கை காட்டினான்.
தனியாக கழிப்பறையை நோக்கி நடந்து சென்ற பூஜா முதலில் தன் பின்னால் வந்த இருவரையும் கவனிக்கவில்லை. அவள் பெண்கள் கழிப்பறையில் நுழைந்த பின்பும் அவர்களும் சேர்ந்து உள்ளே நுழைய பதட்டம் ஆகினாள்.
இருவரையும் பார்த்தவுடனே அவளுக்கு தெரிந்து விட்டது அவர்கள் நன்றாக மது அருந்தி இருக்கிறார்கள் என்று.
அவள் கெட்ட நேரத்திற்கு கழிப்பறையில் அவர்களை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
முகத்தில் பயத்தை காட்டாது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இது லேடிஸ் வாஷ்ரூம். மரியாதையா வெளியில போங்க” என்று கூறினாள்.
அவளின் முன் நின்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்து கொண்டு, “தெரிஞ்சுதான் வந்தோம்” என்று ஹை ஃபை அடித்தார்கள்.
மேலும் அவளை நெருங்குவதற்காக ஒவ்வொரு அடியாக அவர்கள் முன்னேற பயத்தில் சுவரோடு சாய்ந்து நின்றவளுக்கு நன்றாக இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தது.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, “ப்ளீஸ் கிட்ட வராதீங்க, என்னை உங்க தங்கச்சி மாதிரி நினைச்சு விட்டுடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு கூறினாள்.
அதிலிருந்து ஒருவன், “எனக்கு தங்கச்சி எல்லாம் இல்லையே. மச்சி உனக்கு இருக்கு?”என்று மற்றவனிடம் கேட்க அவனும் உதட்டைப் பிதுக்கி இல்லை என தலையாட்டினான்.
“பாத்தியா அவனுக்கும் தங்கச்சி இல்லையாம். தங்கச்சி இருந்தா தானே உன்னை தங்கச்சியா நினைக்க முடியும். ஒழுங்கா கோப்பரேட் பண்ணினா இந்த விஷயம் நமக்குள்ள இருக்கும். இல்லன்னு வை நாளைக்கு இதனால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல உன் மானம் தான் போகும்” என்று கூறி அவளை தொடுமளவு தூரத்தில் நெருங்கிவிட தன்னை தற்காத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தவள் அவன் கை அவள் தோள்மேல் படவும் தன் முழு பலத்தைக் கொண்டு அவனை தள்ளினாள்.
அவளின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் அவள் தள்ளிய வேகத்தில் அவன் பற்றி இருந்த சுடிதாரின் துணி கையோடு வந்தது.
அவனை தள்ளி விட்ட அடுத்த நொடி பக்கத்தில் இருந்த கழிப்பறைக்குள் சென்று கதவை தாள் போட்டவள் அப்போதுதான் சுடிதார் கிழிந்து இருந்ததை பார்த்தாள்.
அவள் உள்ளே சென்று கதவடைத்துக் கொண்ட கோவத்தில் இருவரும் சேர்ந்து, “ஏய் மரியாதையா வெளில வந்துரு. நாங்க உள்ள வந்தோம்னா நடக்கிறதே வேற” என்று சத்தம் போட்டு கத்தி கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
பயத்தில் வியர்த்து கொட்ட கழிப்பறை கதவோடு சாய்ந்து நின்றவள், “தயவு செஞ்சு என்னை விட்ருங்க” என்று கூறிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு சிவகுமாரின் குரல் கேட்டது.
“யார் நீங்க? லேடிஸ் வாஷ்ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? யார் உள்ள இருக்கா?”என்று பூஜா இருந்த கழிப்பறையை காட்டி கேட்டார்.
சிவக்குமார் வந்தது தெரிந்ததும், “சார் நான் இங்க இருக்கேன். இவங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க” என்று கழிப்பறைக்குள் இருந்து சத்தம் கொடுத்தாள்.
இருவரையும் பார்த்து கடுமையாக முறைத்தவர் பளார் பளார் என்று இருவரின் கன்னத்திலும் அறைந்தார்.
சிவக்குமார் கௌதமின் மாமனார் என்று தெரிந்ததால் இருவரும் அமைதியாக அடியை வாங்கியவர்கள், “சாரி அங்கிள். தெரியாம பண்ணிட்டோம். அந்த பொண்ண கூட்டிட்டு போங்க” என்று கூறியவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற போக அவர்களை வழிமறித்து நின்றார் சிவகுமார்.
“என்ன தெரியாம பண்ணிட்டீங்களா? இன்னும் எத்தனை நாளைக்கு இதே சொல்லிக்கிட்டு இருக்க போறீங்க?” என்று கூறி அவர்களை கேவலமாகபார்த்தவர், “வெளிய வா பூஜா” என்று கூறினார்.
சிவகுமாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெளியே வந்தவள் இருவரையும் கடந்து அவரின் பின் நின்று கொண்டாள்.
இருவரையும் பார்வையாலே எரித்தவர் திரும்பி பூஜாவிடம், “ஆர் யூ ஓகே?” என்று கேட்டார்.
ஆம் என்று தலையசைத்தவள் தன் தோள் பக்கம் கிழிந்திருந்த இடத்தை கை கொண்டு மறைத்திருந்தாள்.
அங்கே நின்று கொண்டிருந்தவர்களின் கையில் அவளின் சுடிதார் துணி இருப்பதை அவதானித்தவர் தன்னுடைய கோட்டை கழட்டி பூஜாவிடம் நீட்டி, “போட்டுக்கோ” என்று கூறினார்.
இதனிடையில் ரகுவும் அரவிந்தை அழைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அரவிந்த் தந்தையை கண்டதும், “என்னாச்சுப்பா?” என்று அழுது கொண்டு அவரின் பின் நின்ற பூஜாவையும் மற்ற இருவரையும் பார்த்துக்கொண்டு கேட்டான்.
“அரவிந்த் ரகு இவங்க ரெண்டு பேரையும் மண்டபத்தில் ஒரு ஓரமா கூட்டிட்டு போங்க. நான் அஸ்வினையும் சம்பந்தியும் கூட்டிட்டு வரேன்” என்று கூறியவர் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் பூஜாவை பத்திரமாக அவர்களின் அலுவலக நண்பர்களிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அஸ்வினை காண சென்றார்.
அலைபேசியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் சிவகுமாரை தன்னருகே கண்டும் காணாதவன் போல் அமர்ந்திருந்தான்.
அஸ்வின் முக்கியமாக வேலை செய்து கொண்டிருப்பதாக நினைத்த சிவகுமார், “அஸ்வின் தம்பி ஒரு முக்கியமான விஷயம் உங்களோட பேசணும் கொஞ்சம் தனியா வாரீங்களா?” என்று தன்மையாக பேசினார்.
அலட்சியமாக அவரை ஒரு பார்வை பார்த்தவன், “உங்க கிட்ட பேசுறதுக்கு எனக்கு விருப்பமில்லை. நீங்க போகலாம்”என்று கை அசைத்து கூறியவன் கிளாசில் இருந்த மதுவை குடித்தான்.
அவனின் நடவடிக்கையில் அவமானமாக உணர்ந்தாலும் அவனின் நண்பர்களின் செயலுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியவர் மறுபடியும், “ரொம்ப முக்கியமான விஷயம் ப்ளீஸ் வாங்க” என்றார்.
துளியும் மரியாதை இல்லாமல், “உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் என்கிட்ட பேசுற தகுதியே இல்ல மரியாதையா போயிரு இல்ல கௌதம் ஓட மாமனார்னு கூட பாக்க மாட்டேன்” என்று ஒற்றை கையால் அவரின் சட்டை இறுக்கிப்பிடித்து கொண்டு கூறினான்.
சுற்றி அனைவருமே இவர்கள் இருவரையும் கவனிக்க, “ஷர்ட்ல இருந்து கை எடுங்க அஸ்வின் நீங்க நடந்துக்கிறது ரொம்ப தப்பு”என்று பொறுமையாக அவனிடம் எடுத்துரைக்க முயற்சித்தார்.
இருவரும் இப்படி நிற்பதை கண்ட சக்கரவர்த்தியும் ஸ்ரேயாவும் அவர்கள் நிற்கும் இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சக்கரவர்த்தி அஸ்வினின் பக்கம் வந்து அவரின் கையை சிவகுமாரின் சட்டையில் இருந்து எடுத்து விட ஸ்ரேயா சிவகுமாரிடம், “அங்கிள் அவருக்கு கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு நினைக்கிறேன் தெரியாம பண்ணிட்டாரு இதை பெருசு பண்ணாதீங்க” என்று கணவருக்காக பேசினாள்.
சிவகுமார் அதற்கு பதில் கூறுவதற்கு முன்னே ஸ்ரேயாவின் கையை பிடித்து தன் அருகில் இழுத்த அஸ்வின் அவளை முறைத்து பார்த்து “அந்த ஆள் பக்கத்துல எல்லாம் போகாதடி”என்று கூறினான்.
“அஸ்வின் பார்த்து பேசு அவர் நம்ம வீட்டு சம்பந்தி” என்றார் சக்கரவர்த்தி கோவமாக.
மண்டபம் முழுவதும் இவர்களின் சண்டையை பற்றி சலசலப்பு ஏற்பட விடயம் கேள்விப்பட்ட தாரணி அவர்களிடம் விரைந்தார்.
சிவகுமாரை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அப்பா உங்களுக்கு இந்த ஆள பத்தி சரியா தெரியல. ரொம்ப கேவலமான ஆள் இவன். நம்மதான் சரியா விசாரிக்காம இந்த ஆள் கூட சம்மந்தம் வச்சுக்கிட்டோம்“ என்று தந்தையிடம் கூறியவன் அலைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை சக்கரவர்த்தியிடம் காட்டினான்.
திரையில் கண்ட புகைப்படத்தை நம்ப முடியாமல் பார்த்த சக்கரவர்த்தி மகனைப் போல் அல்லாமல் பொறுமையாக, “இது என்ன சம்பந்தி” என்று அலைபேசியை சிவகுமாரிடம் காட்டி கேட்டார்.
சக்கரவர்த்தி காட்டிய புகைப்படத்தை பார்த்ததுமே வாயடைத்து போய் நின்றார் சிவகுமார்.
கணவரை பற்றி அஸ்வின் கேவலமாக பேசுவதை அருகில் வந்ததும் அவர் காதில் கேட்டிட மனம் பொறுக்காமல் அவர்களை நெருங்கி, “தம்பி பார்த்து பேசுங்க. வாய் இருக்கின்ற ஒரே காரணத்துக்காக கண்டதையும் பேசாதீங்க” என்று கஷ்டபட்டு இழுத்து வைத்த பொறுமையோடு கூறினார்.
“ஆன்ட்டி. நீங்களே இந்த போட்டோவை பார்த்துட்டு இதுக்கு ஒரு முடிவை சொல்லுங்க”என்று சக்கரவர்த்தியின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி அவரிடம் கொடுத்தான் அஸ்வின்.
சிலை போல் நின்ற கணவரை பார்த்துக்கொண்டே அலைபேசியை கண்டவருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
கண்ணால் காண்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று கூறியதற்கு ஏற்ப கணவரின் மானமும் மகளின் எதிர்கால வாழ்க்கையும் இந்த பிரச்சனையை சுமுகமாக முடிப்பதில் தான் இருக்கிறது என புரிந்து கொண்ட தாரணி, “தம்பி இதில் ஏதோ பெரிய சூழ்ச்சி இருக்கு இவர் அப்படிப்பட்டவர் கிடையாது” என்று கூறினார்.
கணவர் அமைதியாக நிற்பதை வைத்து கதை கட்டி விடுவார்களோ என்று பயந்த தாரணி, “என்னங்க அஸ்வின் தம்பி புரியாம பேசுது நீங்க இப்படி அமைதியா இருக்கறதை பார்த்து அது நீங்க தான்னு நினைச்சுக்க போறாங்க. அது நீங்க இல்லன்னு சொல்லுங்க. எனக்கு தெரியாதா உங்கள பத்தி. இருந்தாலும் நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக ஒரு வாட்டி அதில் இருக்கிறது நீங்கள் இல்லைன்னு சொல்லிருங்க” என்றார்.
சிவக்குமார் மனைவியை பார்த்து ஒரு கசப்பான புன்னகையை சிந்தியவர், “அந்த போட்டோ பத்தி என்கிட்ட கேள்வி கேட்க வேண்டிய ஒரே ஒரு ஆள் நீதான். நீயே என்ன நம்பும்போது நான் யாருக்காக என்னை நிரூபிக்கனும் தாரணி. இருந்தாலும் நீ சொல்ற ஒரே ஒரு காரணத்துக்காக நான் சொல்றேன். அந்த போட்டோல இருக்குறது நான் இல்ல” என்று தன்னை சுற்றி இருப்போர் எல்லோருக்கும் கேட்கும் படி கூறினார்.
கொஞ்சம் கொஞ்சமாக. இவர்களை சுற்றி ஆட்கள் கூடிக் கொண்டே போக சிவக்குமாருக்காக காத்துக் கொண்டிருந்த ரகுவும் அரவிந்தும் பூஜாவிடம் தவறாக நடக்க முயற்சித்தவர்களை இழுத்துக் கொண்டு கூட்டத்துக்குள் நுழைந்து தாரணி அருகில் வந்து நின்று கொண்டனர்.
“80ஸ் படத்துல வர்ற மாதிரி ரெண்டு பேரும் பேசினா நாங்க நம்பிடுவோமா. யோவ், நீ உன் பொண்டாட்டிய வேணா ஏமாத்தலாம் எங்களை ஏமாத்த முடியாது ஒழுங்கா உண்மையை ஒத்துக்கோ இல்ல உன் பொண்ணு உன் வீட்டுக்கு வாழா வெட்டியா வந்துருவா”என்று மிரட்டலாக கூறினான் அஸ்வின்.
ஸ்ரேயாவும் சக்கரவத்தியும் அவனை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினர்.
தந்தையை அஸ்வின் மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைப்பதை கண்டு கோபத்தில் அவனை அடிக்க செல்ல தாரணி மகனை தடுக்க திமிறிக்கொண்டு அன்னையின் பிடியிலிருந்து வெளியே வந்தான் அரவிந்த்.
“என்னடா உங்க அப்பன் பெரிய நல்லவனா. இப்படி எகிறி கிட்டு வர, குடும்பமா என்னமா நடிக்கிறீங்க” என்று கூறி அவனை மேலும் மூர்க்கத்தனமாக அஸ்வின் மாற்றிவிட கழுத்தை நெறிப்பது போல் வந்தவன் அடுத்து அஸ்வின் சொன்ன வார்த்தையில் கழுத்தில் கை வைத்து அழுத்தத்தை கூட்டினான்.
நடப்பதை என்ன என்று புரியவிட்டாலும் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்ட ஆர்த்தி தாமதிக்காமல் மேடைக்கு சென்று ப்ரியாவிடம் கூறினாள்.
இவ்வளவு நேரம் சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்த ப்ரியா தந்தைக்கும் அஸ்வினுக்கும் ஏதோ தகராறு என்று கேள்விப்பட்டதும் நொடியும் தாமதிக்காமல் கௌதம் பிடியில் இருந்த தன் கையை உதறிக் கொண்டு பாரை நோக்கி ஓடினாள்.
அவள் கூட்டத்திற்கு நுழைந்ததும் அனைவரும் அவளுக்கு வழி விட, கூட்டத்தின் நடுவில் அஸ்வினின் கழுத்தை நெறித்திடுவது போல் நின்ற அரவிந்தை கண்டதும் அவர்களை நெருங்கினாள்.
“பொம்பள பொறுக்கியோட மகனுக்கு இவ்வளவு கோவம் வரக்கூடாது டா” என்ற வார்த்தையை சொன்னதும் அரவிந்த் அவன் கழுத்தை நெறித்திட, “ஷட் அப்” என்று ப்ரியா கத்துவதற்கு முன், “ஸ்டாப் இட்” என்று அந்த இடமே அதிரும் வன்னம் கத்தி இருந்தான் கெளதம்.
தொடரும்..