எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 17

அத்தியாயம் 17

கௌதமின் கர்ஜனையான குரலை கேட்டு அனைவரும் அவனின் பக்கம் திரும்பினர்.

தந்தை மற்றும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்படாமல் எகிறிக்கொண்டிருந்த அஸ்வின் கூட அமைதியாக நின்றான்.

“என்ன நடக்குது இங்க?” என்று அவன் கேட்டதும் அனைவரையும் முந்திக்கொண்டு அஸ்வின், “கௌதம் அவசரப்பட்டு இந்த கேவலமான குடும்பத்துல உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம் டா. இந்த விஷயம் மட்டும் எனக்கு முதல்ல தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்தை எப்பயோ நிப்பாட்டி இருப்பேன்” என்று கூறினான்.

அஸ்வின் கூறியதை கேட்டதும் பொறுக்க மாட்டாமல், ”எக்ஸ்க்யூஸ் மீ. மைண்ட் யூர் வோர்ட்ஸ். யாரைப் பார்த்து கேவலமான குடும்பம் சொல்றீங்க” என்று அஸ்வினை முறைத்துப் பார்த்துக் கொண்டு கேட்டாள் ப்ரியா.

“உங்க அப்பன் பண்ண காரியம் ஊருக்கு தெரிஞ்சுச்சுனா எல்லாரும் உங்களை இனி அப்படி தான் சொல்லுவாங்க” என்று மறுமொழியாக கூறிய அஸ்வின் கௌதமின் அருகில் வந்து தன் கைபேசியில் உள்ள புகைப்படத்தை ப்ரியாவுக்கும் கௌதமுக்கும் சேர்த்து காண்பித்தான்.

புகைப்படத்தை பார்த்து முகம் சுளித்த ப்ரியா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளின் முகத்தில் வந்த அருவருப்பை கண்ட அஸ்வின், “இப்ப சொல்லு உங்க அப்பா பொம்பள பொறுக்கியா? இல்லையான்னு?”என்று கேட்டான்.

அஸ்வினை வெறுப்பாய் பார்த்தவள், “நீங்க படிச்சவர் தானே. இந்த காலத்துல யாரை வேணாலும் கேவலமா மாஃபிங் பண்ண முடியும்னு உங்களுக்கு நல்லா தெரியும் தானே” என்று தைரியமாக பேசினாள்.

புகைப்படத்தை மகள் கண்டதும் அவளின் முக பாவனையை கவனித்தவர் அதில் இருப்பது அவர்தான் என்று நம்பி தன்னை பார்த்து கேள்வி கேட்பாளோஎன்று நினைத்த சிவகுமார் ப்ரியா பேசியதை கேட்டதும் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு வேலை ப்ரியா அந்தப் புகைப்படத்தை நம்பி சிவகுமாரை ஒரு சந்தேக பார்வை பார்த்திருந்தாலும் அந்த இடத்திலேயே தன்னுயிரை துறந்து இருப்பார் சிவகுமார்.
தன் மனைவி மக்கள் தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தனக்காக பேசுகிறார்கள் என்றதிலேயே புது தெம்பு கிடைத்தது போல் உணர்ந்தவர் இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என சிந்திக்க தொடங்கினார்.

அஸ்வின் ப்ரியாவின் பதிலை கேட்டதும் கோபம் கொண்டவன், “உங்க அப்பா பெரிய ஆக்டரோ செலிபிரிட்டியோ இல்ல, அவர் படத்தை மாஃபிங் பன்றதுக்கு” என்றான் குத்தலாக.

அவன் குத்தல் பேச்சுக்கு பதிலடியாக, “மாஃபிங் பண்றதுக்கு செலிபிரிட்டியா இருக்கனும்னு அவசியம் கிடையாது. உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருந்தா புரிஞ்சிருக்கும். இப்படி ஒரு படத்த உங்களுக்கு யார் அனுப்பினதுன்னு முதலில் பார்த்தீர்களா” என்று பாயிண்டாக பேசினாள் ப்ரியா.

புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சியில் அதை யார் அனுப்பியது என்று சிந்திக்காமல் விட்ட அஸ்வினின் மடத்தனத்தை கோடிட்டு காட்டினாள் ப்ரியா.

வார்த்தைகள் தடித்து நிலைமை கை மீறி போகக் கூடாது என்று நினைத்த கௌதம் தங்களை சுற்றி கூடியிருந்த அனைவரையும் பொதுவாய் பார்த்து, “எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க, ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு. அதை எங்களுக்குள்ள பேசி தீர்த்துக்கணும். தப்பா எடுத்துக்காம எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு போங்க” என்று கூறியவன் தன் வீட்டினரையும் ப்ரியாவின் குடும்பத்தாரையும் தனியாக ஹோட்டலில் இருந்த அறைக்கு அழைத்து வந்திட அதில் கூடவே பூஜாவும் இருந்தாள்.

சிவக்குமார் மற்றும் பூஜா ஒன்றாக இருக்கும் ஆபாச படத்தை தான் யாரோ அஸ்வினின் கைபேசிக்கு அனுப்பி இருந்தார்கள். அதனால் தான் அவளையும் சேர்த்து அழைத்து வந்திருந்தான் கௌதம்.

இவ்வளவு பிரச்சனையிலும் அஸ்வின் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் சிவகுமாருடன் புகைப்படத்தில் இருந்த பெண் யார் என்பதை வெளியில் சொல்லாதது தான். கூட்டத்தில் அருகில் நின்றவர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்ன என்று ஓர் அளவுக்கு தெரியும் மற்றபடிஅவர்கள் யாருக்கும் அந்த புகைப்படம் தெளிவாக தெரியாததால் பூஜாவின் பெயர் அதில் அடிப்படவில்லை.

பூஜாவை தன் பெறாத மகள் போல் பாவித்து கரிசனையுடன் அவளுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார் சிவக்குமார். இது அவரின் குடும்பத்தார் அனைவருக்குமே நன்றாக தெரியும்.

பூஜா கண் கலங்கி கொண்டு நிற்பதை பார்த்த தாரணியும் ப்ரியாவும் அவளை ஆறுதல் படுத்த முயற்சித்தனர்.

அஸ்வினை தவிர மற்ற அனைவருமே அது மாப்ஃ செய்யப்பட்ட புகைப்படம் என்று ஏற்றுக்கொண்டனர்.

இருந்தாலும் அஸ்வின் பேசிய பேச்சைக் கேட்டு கடும் கோபத்தில் இருந்த சிவகுமாரின் குடும்பத்தார் அது போலியான புகைப்படம் என்று நிரூபிப்பதற்கானவேலையில் இறங்க அவர்களை தடுத்தான் கௌதம்.

அஸ்வின் சின்ன வயதில் இருந்தே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நடந்து கொள்பவன். ப்ரியாவின் குடும்பத்தார் அவர்களுக்குத் தெரிந்த நபரை வைத்து அதை நிரூபித்தாலும் அவன் வீம்பாக ஒத்துக் கொள்ள மாட்டான் என்று கௌதமுக்கு தெரியும்.

அதனால் கௌதம் தானே அவனுக்கு தெரிந்த போலீஸ் நண்பன் ஆதித்யனுக்கு அழைத்து விடயத்தை சுருக்கமாக கூறினான்.

மாஃபிங் படங்களை கண்டுபிடிப்பதற்காகவே இருந்த சாப்ட்வேர் கொண்டு பூஜா சிவக்குமார் ஒன்றாக இருப்பது போல் இருந்த ஆபாச புகைப்படம் போலி என்று ஆதித்யன் தன்னுடன் அழைத்து வந்த ஐடி நபரை வைத்து நிரூபித்தான்.

பூஜாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்ட ப்ரியா, “இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அந்த போட்டோல இருக்குறது நீ இல்லன்னு எங்க எல்லாருக்குமே தெரியும். இப்ப அதை ப்ரூப்வும் பண்ணிட்டோம். பின்ன எதுக்கு அழுதுகிட்டு இருக்க” என்று கூறினாள்.

அவள் எதிரே நின்று கொண்டிருந்த அரவிந்த், “அவ அதுக்காக அழுகல. இந்த நாசமா போன ரெண்டு நாதாரிங்க அவ கிட்ட தப்பா நடக்க பார்த்தாங்க” என்று அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இருவரையும் காட்டி கூறினான்.

தொடர்ந்து அவனே, “இவங்க ரெண்டு பேரும் மிஸ்டர் அஸ்வின் ஓட ஃப்ரெண்ட்ஸ் தான்” என்று மேலும் சில விவரத்தையும் சேர்த்து கூறினான்.

நடந்த பிரச்சனையில் அஸ்வின் மேல் இருந்த கோபம் இப்பொழுது பல மடங்காக பெறுக அவனை முறைத்துப் பார்த்தவள், “எங்க குடும்பத்துக்கு கேவலமான குடும்பம்னு சொன்னிங்களே. இப்போ இதுக்கு என்ன சொல்ல போறீங்க” என்றாள்.

“இவங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சிக்கிறேன்” என்று ஆதித்யன் பூஜாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவர்களை இழுத்துக் கொண்டு சென்றான்.

இரவு நேரம் என்று பாராமல் தான் அழைத்த ஒரே காரணத்துக்காக வந்து பிரச்சினையை தீர்த்து வைத்த நண்பனுக்கு நன்றி சொல்லி வழி அனுப்பி வைத்து விட்டு அறைக்குள் மறுபடியும் கௌதம் நுழைந்த நேரம் சக்கரவர்த்தி அஸ்வினை அடிக்க கை ஓங்கிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டு, “அப்பா என்ன செய்றீங்க? அவன விடுங்க?” என்று கூறினான்.

இதுவரை கஷ்டப்பட்டு இழுத்து வைத்திருந்த பொறுமையை காற்றில் விட்ட ப்ரியா, “அவர் பண்ண தப்புக்கு அவருக்கு தண்டனை கிடைத்தே ஆகணும். எங்க அப்பாவை தப்பா பேசினதுக்காக அவர் எங்க அப்பா கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்” என்று உறுதியான குரலில் கூறினாள்.

கௌதம் ப்ரியாவின் அருகில் வந்தவன், “ஏதோ சின்ன மிஸண்டர்ஸ்டாண்டிங். நம்ம எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க போறோம் இப்படி பிரச்னையை பெருசு பண்ணாத. எல்லாத்தையும் மறந்துடு ப்ரியா” என்று கூறி சமாதானப்படுத்த முயற்சித்தான்.

“அவ்ளோ பேர் முன்னாடி எங்க அப்பா சட்டையை புடிச்சு அவரைப் பத்தி கேவலமா பேசி இருக்காரு. இவரை நான் சும்மா விட மாட்டேன். இவர் எங்க அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டே ஆகணும்” என்றாள் முடிவாக.

அஸ்வினோ, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் யாரு கால்லையும் விழ மாட்டேன்” என்று கூறியவன் அறையை விட்டு வெளியேறினான்.

அஸ்வின் இறங்கி வந்து யாரிடமும் இதுநாள் வரையும் மன்னிப்பு கேட்டதே இல்லை. அப்படி இருக்கையில் நண்பர்களை போலீஸ் பிடித்துக் கொண்டு போன கோபத்திலும் இதுநாள் வரை தன்னை கை நீட்டி அடித்திறாத தந்தை இன்று கை ஓங்கி அடிக்க வந்த கோபத்திலும் இருந்தவன் ப்ரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிட அதைத் துளியும் ஏற்றுக்கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

ஈஸ்வரியும் ஸ்ரேயாவும் சிவகுமாரின் அருகே வந்து “அவன் பேசுனதுக்கு எல்லாம் நாங்க மன்னிப்பு கேட்கிறோம்” என்று கூறி அவரின் காலில் விழ சென்றனர்.

உடனே பதறிய சிவகுமார் இரண்டு அடி பின்னால் வைத்து, “ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க. அதெல்லாம் நான் மறந்துட்டேன் விட்டுடுங்க. அடுத்து என்னனு பார்க்கலாம்”என்று கூறினார்.

அவரின் தன்மையான பேச்சில் சந்தோஷம் அடைந்த சக்கரவர்த்தியின் குடும்பத்தார் இயல்பாகினர்.

நடந்த கலவரத்தில் நேரம் எப்படி சென்றது என்றேதெரியவில்லை. நேரம் கடந்து இரவு இரண்டு மணி என்று கடிகாரத்தில் காட்டியது.

“அப்போ.நாங்க ப்ரியாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்” என்று ஈஸ்வரி கூற, “நான் எங்கேயும் வரமாட்டேன்”என்று கூறினாள் ப்ரியா.

பிரச்சனை முடிந்தது என்று நிம்மதியில் இருந்தவர்கள் ப்ரியாவின் பேச்சில் குழம்பினர்.

ப்ரியாவின் அருகில் நின்ற கெளதம் “என்ன பேசுற, வரமாட்டேன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

அவன் கண்ணோடு கண் பார்த்து,“வரமாட்டேன்னா வரமாட்டேன்னு அர்த்தம்” என்று ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்புக்கு தனி தனியாக அழுத்தம் கூட்டி கூறினாள்.

“ப்ரியா ஒரு பிரச்சனை இப்பதான் முடிஞ்சிருக்கு மறுபடியும் இன்னொன்னை ஆரம்பிக்காத”

“பிரச்சனை இன்னும் முடியவே இல்லை. நீங்க முடிஞ்சுச்சுன்னு சொன்னா முடிஞ்சதுன்னு அர்த்தமாயிருமா”

“மாமாவே அத பெரிசு படுத்தல இப்போ எதுக்கு நீ மறுபடியும் இந்த பிரச்சனையை ஆரம்பிக்கிற. வா வீட்டுக்கு போலாம்” என்றவன் அவள் கையை பிடித்தான்.

“உங்க அண்ணன் தப்பா பேசினது என் அப்பாவை. எங்க அப்பா வேணும்னா உங்க அண்ணன மன்னிச்சிடலாம். ஆனா நான் மன்னிக்க மாட்டேன். உங்க அண்ணன் வந்து எங்க அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குற வரைக்கும் நான் உங்க வீட்டுக்கு வரப் போறது கிடையாது” என்று கூறி அவன் கையை உதறிவிட்டாள்.

“ப்ரியா புரிஞ்சு தான் பேசுறியா?”

“இதுவே உங்க அப்பாவை பத்தி என் அண்ணன் தப்பா பேசிருந்தா நீங்க எல்லாம் இப்போ இப்படித்தான் நடந்திருப்பீங்களா. குடும்பமாக இந்த பொண்ணே வேணாம்னு என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டீங்க?நான் என்ன பெருசா கேட்டேன் அவர்”பேசின பேச்சுக்கு மன்னிப்பு தானே கேட்க சொல்றேன்”

“புரிஞ்சுக்கோ. அவ மன்னிப்பு கேட்க மாட்டான்”

“அப்போ நானும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். வாங்க எல்லாரும் வீட்டுக்கு போவோம்” என்று அவள் முன்னே நடக்க ப்ரியா கூறுவது சரிதான் என்று தாரணியும் அரவிந்தும் அவள் பின்னால் செல்ல சிவகுமாரும் வேறு வழி இல்லாமல் அவர்களைப் பின் தொடர்ந்தார்.

ப்ரியா கதவின் பிடியில் கைவைத்து திறக்கும் முன் அவள் கையைப் பிடித்த கௌதம், “ப்ரியா, அப்போ நான் உனக்கு வேண்டாமா?” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

“எனக்கு எங்க அப்பா அவரோட கௌரவத்துக்கு முன்னாடி யாருமே முக்கியம் இல்ல” என்று கலங்கிய கண்களோடு கூறியவள் அந்ந பைவ் ஸ்டார் ஹோட்டலை விட்டு குடும்பத்தோடு வெளியேறினாள்.

தொடரும்...
 
Top