எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 18

அத்தியாயம் 18

திருமணத்துக்கு முதல் நாள் இரவு வீட்டில் இருந்து கிளம்பும்போது இருந்த சந்தோஷம் இப்பொழுது யாரிடமும் துளியும் இல்லை.

யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் அறையில் சென்று அடைந்து கொண்டாள் ப்ரியா.

அவள் இதுபோல் எந்த விடயத்திலும் இதுவரை பிடிவாதம் பிடித்து வீட்டினர் யாருமே கண்டதில்லை.

அவர்களுக்குமே அவள் பேசியது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ப்ரியா கலகலப்பான பெண் என்றாலும் தனக்கு ஒன்று வேண்டுமென்றால் கூட அதை அமைதியாகவே கேட்டு பெற்றுக் கொள்வாளே தவிர இப்படி அடம் பிடித்ததில்லை.

அவள் அஸ்வினை மன்னிப்பு கேட்கக் கூறியது கூட வீட்டினர் யாருக்குமே தவறாக தோன்றவில்லை. அவளின் வேண்டுகோள் நியாயமானது என்று அனைவருக்கும் தெரிந்ததால் பிரச்சனையை எப்படி சுமூகமாக முடிப்பது என்ற கவலை அனைவருக்கும் வர ஆரம்பித்தது.

கோபத்தில் கதவடைத்துக்கொண்ட ப்ரியா கதவின் மேலே சாய்ந்து கொண்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். எதற்காக அழுகிறாள் ஏன் அழுகிறாள் என்ற கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.

கௌதமை பார்த்தவுடனே எல்லாம் காதல் வந்துவிடவில்லை அவளுக்கு. ஒவ்வொரு சந்திப்பிலும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக பேச்சிலும் செயலிலும் அவன் பால் சாய வைத்தான் அவளின் மாயக்கண்ணன்.

அவன் தனக்கானவன் என்ற எண்ணமே அவளை அவனோடு மனதளவில் நெருக்கமாக்கிவிட்டது.

இந்தப் பிரிவு தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற கேள்வி தான் அவளின் கலக்கத்திற்கு காரணமோ என்னவோ.

காதல் கணவனுக்காக தவறே செய்யாத தந்தையின் கௌரவத்தை பலி கொடுக்க முடியவில்லை பேதைப் பெண்ணாள்.

முழு அலங்காரத்தில் இருந்தவள் முகம் கூட கழுவாமல் அப்படியே படுக்கையில் சரிந்து அழுது அழுதே உறங்கிப் போனாள்.

சிவகுமாரின் குடும்பம் கிளம்பியதும் கௌதமை எதைக் கூறி சமாளிப்பது என்று யோசனையில் இருந்தவர்கள் அவன் அறையின் உள்ளே கண்களில் உயிர்ப்பே இல்லாமல் நுழையவும் ஈஸ்வரியே அவனிடம் பேசத் சென்றார்.

கௌதமின் விழிகள் இரண்டும் சிவந்து இருந்தன. ப்ரியா அவனை விட்டு சென்றதில் கோபமா அல்லது கவலையா என்று விளங்கவில்லை. ஆனால், அது பயங்கரமாக அவன் மனதை தாக்கியருப்பதை உணர்ந்தார் ஈஸ்வரி.

பெற்ற தாயாக அவனை அரவணைத்து ஆறுதல் கூற நெருங்கி வந்தார்.

அன்னையின் வதனத்தை கண்டதும் ஒன்றுமே யோசிக்காது குழந்தையைப் போல ஈஸ்வரியை கட்டிக்கொண்டு அழுதான் கௌதம்.

கௌதம் எதற்கும் கலங்கி அவனின் வீட்டினர் இது நாள்வரை பார்த்ததே இல்லை.

மகன் அழுவதை பொறுக்க மாட்டாமல் அவனின் முதுகையும் தலையும் வருடிய ஈஸ்வரி, “கௌதம் நான் இருக்கும் போது நீ எதுக்கும் அழக்கூடாது. நான் பேசி ப்ரியாவை கூட்டிட்டு வரேன். இப்ப வாடா வீட்டுக்கு போயிடலாம்”என்று கூறினார்.

அவரை பார்த்து இல்லை என்று தலையாட்டியவன், “நானே பாத்துக்குறேன்”என்று அழுத்தமாக கூறினான்.

11 மணிக்கு கண்விழித்த ப்ரியா முதல் வேலையாக கனமான உடையை களைந்து குளித்து உடைமாற்றி கூடத்துக்கு வந்தாள்.

கல்யாண வீடு மயான அமைதியில் இருந்தது.

நடந்த பிரச்சனையில் வீட்டில் தங்கி இருந்த சொந்தங்கள் மண்டபத்தில் இருந்து இரவே அவரவர் ஊர்களுக்கு சென்றனர்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து பச்ச தண்ணி கூட அருந்தாமல் இருந்த அனைவருக்கும் காலையிலேயே சமைத்த சைலஜா அனைவரையும் வற்புறுத்தி உண்ணவைத்திருந்தார்.

சாப்பிட்டதுமே அவரவர் தங்களின் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டனர்.

தாமதமாக எழுந்து வந்ததால் யாரையும் காணாமல் குழம்பிய ப்ரியா சைலஜா தந்த காலை உணவை உண்டவள் ஆர்த்தியோடு பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவளுக்கு அழைக்க கைபேசியை எடுத்தாள்.

அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் இருக்க அதை எடுத்து சார்ஜில் போட்டு அவள் உயிர்ப்பிக்க விடாமல் கௌதமிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

அவன் குரலைக் கேட்க ஆசையாய் இருந்தாலும் தன்னிடம் அவன் பேசி மனதை மாற்றி அவன் இல்லத்துக்கு அழைத்து சென்று விடுவானோ என்று சிந்தித்தவள் அலைபேசியை சைலன்டில் போட்டாள்.

அவனை தவிர்க்கும் அளவிற்கு பெரிய தவறு எதுவும் கெளதம் செய்துவிடவில்லை என்றாலும் பாவம் அவளுக்கும் இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.

தவறு செய்யாத இரு உள்ளங்களை தண்டனையை அனுபவிக்க வைத்தது காலம்.

நண்பியின் வாழ்க்கையை எண்ணி இரவு முழுவதும் உறங்காமல் ரகுவிடம் புலம்பிக் கொண்டிருந்த ஆர்த்தி அவன் எவ்வளவு எடுத்துக் கூறியும் வீட்டில் இருக்க முடியாமல் ப்ரியாவை பார்க்க மதியம் வந்து விட்டாள்.

அவள் எப்போது வந்தாலும் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும் வீடு நிசப்தமாக இருக்க கவலையோடு ப்ரியாவின் அறையை நோக்கி சென்றாள்.

ப்ரியாவின் அறையின் வாசலில் மதிய உணவோடு நின்ற சைலஜா கதவை தட்டுவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆர்த்தி அவரைக் கண்டதும், “ஆன்ட்டி ஏன் வாசல்லே நிக்கிறீங்க. உள்ள போக வேண்டியது தானே” என்றாள்.

“இல்லம்மா. காலைல ப்ரியா தானாவே வந்து சாப்பிட்டா அத பாத்து நானும் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன். ஆனா அதுக்கப்புறம் ரூமுக்கு அவ போனதிலிருந்து ஒரே அழுகை சத்தமாவே கேட்டுகிட்டு இருந்துச்சு. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. இப்போ சாப்பாடு கொடுக்கணும் ஆனா அவ கதவு திறப்பாளா மாட்டாளான்னு தெரியலையே” என்றார் கவலையாக.

அவரின் கையில் இருந்த தட்டை வாங்கி எடுத்த ஆர்த்தி, “நீங்க போங்க, நான் சாப்பிட வைக்கிறேன்” என்று கூறி அறையின் கதவில் கை வைக்க போக கதவு திறந்து இருந்தது.

நேர்த்தியாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சுத்தமாக இருக்கும் அறை இன்று கலைந்து கிடந்தது.

கட்டிலில் படுத்து மறுபடியும் அழுகையுடன் உறங்கி விட்டிருந்தாள் ப்ரியா.

அழுதழுது வீங்கி இருந்த முகத்தை கண்டதும் ஆர்த்தி தோழியின் அருகில் அமர்ந்து அவளின் தலையை மெதுவாக தடவி விட்டாள்.

ஆர்த்தியின் தொடுகையில் உறக்கம் கலைந்தவள் நிமிர்ந்து பார்த்து, “நீயா எப்ப வந்த?”என்று கேட்டாள்.

“இப்போதான். நேத்து நடந்ததெல்லாம் பாத்து மனசே பொறுக்கல அதான் உன்னை பாக்க வந்துட்டேன். சரி முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்” என்றாள்.

அறைக்குள்ளேயே இருந்த ஓய்வறைக்கு சென்ற ப்ரியா முகத்தை நீர் கொண்டு அடித்து கழுவியவள் தன் வதனத்தை கண்ணாடியில் பார்த்தாள்.

அழுததால் கண்கள் இரண்டும் சிவப்பேறி, முகம் வீங்கி, மூக்கு சிவந்து காட்சியளித்தாள்.

முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டு ஆர்த்தியின் அருகில் வந்து அமர்ந்தவள், “எனக்கு இப்ப பசி இல்லை. நான் அப்புறமா சாப்பிடுகிறேன்” என்று கூறினாள்.

சாப்பிட மாட்டேன் என்று கூறியவளை வற்புறுத்தி உணவை ஊட்டி விட்ட ஆர்த்தி, “யார் மேலயோ இருக்க கோவத்தை சாப்பாட்டில் காட்டாத” என்றாள்.

இரவு அறைக்கு வந்ததிலிருந்து அவளை விடாது மூளைக்குள் குடைந்து கொண்டிருந்த ஒரே விஷயம் தான். ‘தவறான முடிவை எடுத்து விட்டேனோ அல்லது வீண் பிடிவாதம்
பிடிக்கிறேனோ, என்று அவளுக்குள்ளையே ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டாள் ப்ரியா.

மூளையும் மனதும் மாறி மாறி ஒரு கருத்தை சொல்ல எதை எடுத்துக் கொள்ள எதை விட என்று தெரியாது இருந்தவள் ஆர்த்தியிடம் கேட்டிட நினைத்தாள்.

கலங்கிய கண்களோடு ஆர்த்தியை திரும்பி பார்த்தவள், “நான் ரொம்ப குழப்பமா இருக்கிறேன். எனக்கு நான் பண்ணது சரியா தப்பா என்று கூட தெரியல. எல்லாருக்கும் நான் பிடிவாதக்காரியா தெரியலாம். ஆனா, எங்க அப்பாவோட மானம் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம். நீயே சொல்லு நான் நடத்துக்குறது தப்பா” என்று கேட்டாள்.

“நீ பண்ணது எதுவும் தப்பு இல்லடி”

“அப்புறம் ஏன் யாருமே எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறாங்க. கௌதம் என்ன சமாதானப்படுத்த ட்ரை பண்றாரே தவிர அவர் அண்ணாக்கு புரிய வைக்க அவ ட்ரை பண்றாரு இல்ல. வீட்டுக்கு வந்ததுல இருந்து யாருமே என்கிட்ட இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசல. யாருமே என் நிலைமையில் இருந்து ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்க”

அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் நியாயமாக இருக்க என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவளையே பார்த்திருந்தாள் ஆர்த்தி.

தற்போது அவளை சமாதானப்படுத்துவது தான் முக்கியம் என்று ப்ரியாவுக்கு ஆதரவாக பேசி அவளை சாந்தப்படுத்தி வேலை, காலேஜ் என்று மற்ற விஷயங்களைப் பற்றி பேசி இயல்பாகினாள்.

ஆர்த்தியோடு நேரம் செலவு செய்ததில் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியவள் கொஞ்சம் தெளிவும் பெற்றாள்.

இரவு எட்டு மணி வரை இருந்தவள் ப்ரியா உறக்கம் வருவதாக கூற அவள் உறங்கும் வரை காத்திருந்து பின் கூடத்துக்கு வந்த ஆர்த்தி சைலஜாவிடம்எல்லோரையும் அழைத்து வரும்படி கூறினாள்.

சோபாவில் ஒவ்வொரு மூலையிலும் ஒருவர் அமர்ந்திருக்க அவர்களைப் பார்த்தபடி நின்ற ஆர்த்தி, “ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க. நீங்க எல்லாரும் தான் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கணும். அவ தேவை இல்லாதது எல்லாம் யோசிச்சு பீல் பண்ணிட்டு இருக்கா. போய் அவ கிட்ட பேசுங்க. அவளுக்காக நீங்க எல்லாரும் இருக்கீங்கன்னு சொல்லுங்க. உங்க எல்லாரையும் பார்த்து இப்படி ஒரு ஃபேமிலி எனக்கு இல்லையேன்னு நான் நிறைய வாட்டி ஃபீல் பண்ணி இருக்கேன். அப்படி இருக்க நீங்களே அவளை இந்த மாதிரி தனியா விடலாமா. போய் பேசுங்க” என்று கூறிவிட்டு சென்றாள்.

பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் ப்ரியாவின் மனநிலையை பற்றி சிந்திக்காமல் இருந்த மடத்தனத்தை நொந்து கொண்டு அவளைத் தேடி சென்றனர்.

எப்பொழுதுமே பெற்றோர் மற்றும் அண்ணனின்அறைகளுக்குள் ப்ரியாவே வந்து அவர்களோடு நேரம் செலவழிப்பதால் அவளுடைய அறைக்கு அவர்கள் என்றுமே வர வேண்டிய தேவை ஏற்பட்டதில்லை.

இன்று அவளைக் காண மூவரும் ஒன்றாக சேர்ந்து அவளினறைக்குள் பிரவேசிக்க ஆழ்ந்த உறக்கத்தில் நித்ரா தேவியின் பிடியில் இருந்தாள் ப்ரியா.

குழந்தை போல் அவள் உறங்கும் அழகை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டவர்கள் அவள் அருகே சென்று அமர்ந்தனர்.

அரவிந்த் ப்ரியாவின் கட்டிலின் அருகில் இருக்கும் கதிரையில் அமர்ந்து இருக்க, தாரணி அவளின் தலையை தன் மடியில் வைத்தார்.

சிவகுமார் மகளின் கால்களை எடுத்து மடியில் வைத்து மெதுவாக அழுத்தி கொடுக்க சுகமாக உறக்கத்தில் கிடந்தாள் அவர்களின் செல்ல புதல்வி.

ஆர்த்தியின் சின்ன வருடலுக்கே உறக்கம் கலைந்தவள் இப்பொழுது தந்தை கால் அழுத்தும் சுகத்தில் நன்றாக உறக்கத்தில் இருந்தாள்.

“இவ இன்னும் சின்ன குழந்தை போலவே என் கண்ணுக்கு தெரியுறா தாரணி. ஸ்கூல் படிக்கும்போது பேங்க்ல இருந்து எப்ப நான் வருவேன்னு தினமும் காத்துகிட்டு இருப்பா. நான் வந்ததும் என் மடியில கால போட்டு இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா அப்பானு ஆரம்பிப்பா அப்போ நான் இந்த மாதிரி கால் பிடிச்சு விடுவனா அப்படியே தூங்கிடுவா. இப்பவும் பாரு, அப்படியே இருக்கா” என்று கூற கணவரை ஒரு அர்த்தமான பார்வை பார்த்தார் தாரணி.

அவளின் தூக்கம் கெடாதவாறு அவளை ரசித்து பார்த்த மூவரும் அப்படியே அதே அறையிலே உறங்கிப் போயினர்.

தொடரும்...
 
Top