ஜீயோனா
Moderator
அத்தியாயம் 19
ப்ரியாவுக்கு பின் தூங்கியவர்கள் அவளுக்கு முன் அதிகாலையிலேயே எழுந்து அவரவர் அறைகளுக்கு சென்றனர்.
ஆர்த்தியிடம் மனசு விட்டு பேசியதால் சற்று லேசான மனநிலையோடு காலையில் எழுந்து கூடத்துக்கு வந்தவளை டீ கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் தாரணி.
சிவகுமார் காலையிலேயே சமையலறையை தன் செல்ல மகளுக்காக இரண்டாக மாற்றி விதவிதமான உணவு பதார்த்தங்களை சமைத்து அடுக்கி வைத்தார்.
அரவிந்தும் தன் பங்குக்கு அவளுக்கு பிடித்தமான உணவை செய்ய, வீடே கலகலப்பாக இருப்பதை நம்ப முடியாமல் ப்ரியா பார்த்தாள்.
மூவரையும் உலக அதிசயம் போல் அவள் காண, “என்ன அங்கேயே நின்னுட்ட. இங்க வா அப்பா உனக்காக என்ன எல்லாம் சமைச்சிருக்கேன் வந்து பாரு” என்று மகளை அழைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் அமர வைத்தவர் தானே பரிமாறினார்.
இரவு சரியாக உண்ணவில்லை என்பதற்காக அதிகாலையில் எழுந்து தனக்கு பிடித்ததாக சமைத்த உணவுகளை எந்த மறுப்பும் இன்றி உண்டு ருசித்தாள்.
பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு மகளை கவனிப்பதே தலையாய கடமை என்று இரவே தாரணியும் சிவகுமாரும் முடிவெடுத்து விட்டனர்.
நடந்ததைப் பற்றி யாரும் பேசாமல் சாதாரணமான பேச்சுவார்த்தைகளே அங்கு நடைபெற்றது.
எப்பொழுதும் சாப்பிடுவதை விட சற்று அதிகமாகவே உண்ட ப்ரியா தந்தையை நிறைவான பார்வை பார்த்தாள்.
மகளின் தலையை ஆசையாய் வருடியவர், “நீ என்ன பண்ணாலும் அது சரியா இருக்கு பட்சத்துல உன் கூட நாங்க எப்பவுமே இருப்போம் ப்ரியா. நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துவிடு. இனி என் பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாது. வீட்ல எப்பவும் இருக்குற போல கலகலன்னு இருக்கனும். வீட்ல இருக்க பிடிக்கலையா ஆர்த்தி கூட வெளியில போ. சும்மா உன்னையே நீ ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. புரிஞ்சுதா?” என்று அவர் கேட்டிட சரி என்று தலையாட்டி தந்தையைகட்டிக்கொண்டாள்.
”தேங்க்ஸ் ப்பா ஃபோர் ஆண்டர்ஸ்டாண்டிங்” என்று அவரின் அணைப்பில் இருந்தபடியே கூறினாள்.
“சாரிமா. இனிமே எந்த கஷ்டத்திலும் உன்னை தனியா அப்பா விடவே மாட்டேன்” என்று கூறினார்.
நேற்று கஜேந்திரனுக்கும் சைலஜாவுக்கும் இருந்த கவலை இந்த காட்சியை கண்டதும் பனிப்போல் உருகி விட்டது.
“தம்பி சாப்பாடு எனக்கெல்லாம் கிடையாதா?”என்று சாப்பாடு மேசையில் வந்தமர்ந்து கொண்டு அவர்களும் இவர்களோடு அய்கியம் ஆகி இணைந்திட அந்த இடமே கலகலப்பானது.
இரண்டு மூன்று நாட்களில் எல்லோரும் அவர்களின் வேலைக்கு செல்ல ஆயத்தமாக, தாரணியும் ப்ரியாவும் வீட்டில் ஒன்றாய் நேரம் செலவழித்தார்கள்.
இருவருமாய் சேர்ந்து வீட்டை அழகு படுத்துவது என்று முடிவெடுத்தவர்கள் அதற்கு தேவையான ஏற்பாட்டு செய்தனர்.
ப்ரியா அலைபேசி பயன்படுத்துவதே விட்டு விட்டதால் அவளின் வீட்டின் லேண்ட்லைனுக்கு அழைத்திருந்தாள் ஆர்த்தி.
“ஹே ப்ரியா இன்னைக்கு ஈவ்னிங் காலேஜ்ல பங்க்ஷன் வரியா?” என்று கேட்டாள்.
எந்த விழா என்று ப்ரியாவுக்கும் நன்றாக தெரியும். பழைய மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அவரவர் பேட்ச்களுக்கு ஏற்ப தங்களுக்கென்று ஒரு நாள் தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லோரும் சந்திப்பதற்காக ஒரு விழாவை நடத்த தீர்மானித்தனர்.
படிப்பு வசதி குறைவாக இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவித்தொகை செய்ய இப்படி ஒரு விழாவை கொண்டு வந்தனர் பழைய மாணவர்கள்.
டிக்கெட் போன்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வரும் பணத்தை சேர்த்து கஷ்டப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு உதவி செய்யலாம் என்று வசதி குறைந்து காணப்படும் பத்து பாடசாலைகளை தேர்தடுத்தனர்.
யாருக்கும் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதற்காக விழாவுக்கு ஆகும் செலவையும் அதிலேயே சேர்த்திட முடிவெடுத்தார்கள்.
திருமணத்துக்கு அருண், பரத் மற்றும் ஆர்த்தியை தவிர வேறு காலேஜ் நட்புக்களை அவள் அழைத்திருக்கவில்லை.
பரத் முக்கியமான வேலையாக வெளியூர் சென்றிருந்ததால் ப்ரியாவின் திருமணத்திற்கு அவன் வரவில்லை. இந்த நேரத்தில் அவர்களை சந்தித்தால் கண்டிப்பாக கௌதம் பற்றி கேட்பார்கள்.
பிரச்சனையின் காரணமாக கணவனை பிரிந்திருக்கும் சமயத்தில் நண்பர்களை சந்திப்பது சங்கடமாக இருக்கும் என்று யோசித்தவள்,
“தெரியலடி. நானும் அம்மாவும் வீட்ட கொஞ்சம் மாத்தி அரேஞ்ச் பண்ணலாம்னு யோசிச்சோம்”என்றாள்.
அவள் பேசுவதை கேட்டதும் கோபமுற்ற ஆர்த்தி, “காலேஜ் முடிஞ்சதும் எல்லா பிரண்ட்ஸ் சேர்ந்து எத்தனை வாட்டி மீட் பண்ண ட்ரை பண்ணினோம். ஒருவாட்டி கூட சக்ஸஸ் ஆகல. இப்படி ஒரு லட்டு மாதிரி சான்ஸ் கிடைச்சிருக்கு எல்லாரும் மீட் பண்ண. மரியாதையா வா. நானே வந்து உன்ன பிக் பண்ணிட்டு போறேன்” என்று கூறியவள் ப்ரியா வருகிறாளா இல்லையா என்று கூட கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.
கண்டிப்பாக ஆர்த்தி தன்னை வற்புறுத்தியாவது பங்ஷனுக்கு அழைத்து செல்வாள் என்று புரிந்து கொண்ட ப்ரியா தானே அவள் வரும் முன் தயாராகலாம் என்று முடிவெடுத்தாள்.
குளித்து முடித்து அறையில் இருந்த அலமாரியை திறந்தவள் என்ன உடை அணிந்து செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் கண்ணில் பட்டது அந்த லாவண்டர் புடவை.
ஆம். அதே புடவை தான் ஆராதனா மனோஜ் திருமண ரிசப்ஷனுக்கு அணிந்த புடவை.
அவர்கள் திருமணத்திற்கு சேலை வாங்கும்போது கூட கௌதம் அவளை இரண்டாம் முறை சந்தித்தபோது அணிந்திருந்த லாவண்டர் சேலையை போல அல்லது அதே கலரில் வாங்க சொல்லி கூறியது எல்லாம் ஞாபகம் வர அந்த சிந்தனைகள் எல்லாம் ஒரு பக்கம் தள்ளி விட்டு உடையை தேடுவதில் கவனத்தை செலுத்தினாள்.
ஆனால் அவளின் எந்த உடையும் அந்த விழாவிற்கு பொருத்தமாக இருப்பது போல் தெரியாததால் ஓரமாக எடுத்து வைத்திருந்த லாவண்டர் புடவை எடுத்து உடுத்த தொடங்கினாள்.
ப்ரியா தயாராகி முடியவும் ஆர்த்தி அவளின் வீட்டுக்கு வரவும் நேரம் சரியாக இருக்க காரில் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
விளையாட்டு பயிற்சிகள் நடைபெறும் மைதானம் ஒன்றை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அந்த இடத்தை தலைகீழாக மாற்றியிருந்தனர் விழாவின் நிர்வாகிகள்.
பந்தல் போல் விளக்குகளை மைதானம் முழுவதும் போட்டிருந்தனர்.
ஒரு மேசையில் பத்து பேர் அமரக்கூடியது போல் அமைத்து சுற்றி அந்த இடத்தையே அலங்காரத்தில் வண்ணமயம் ஆக்கியிருந்தனர்.
லேசாக இருட்ட ஆரம்பித்ததால் விளக்குகள் ஒளிர அந்த இடத்தின் அழகு மேலும் கூடியது.
ப்ரியாவும் ஆர்த்தியும் அவர்களின் நண்பர்களோடு ஐக்கியம் ஆகினர்.
மேசையில் அமர்ந்து ப்ரியா அவளின் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென யாரோ அவள் கண்களை ஒற்றைக் கையால் பொத்தி மறைக்க, “யாரது?”என்று கூறி கையை தொட்டுப் பார்த்தவளுக்கு யார் என்று விளங்கியது.
“டேய் பரத்” என்றவள் அவளின் கண்ணை மறைத்துக் கொண்டிருந்த கையை அகற்றினாள்.
அவளின் தலையின் மேல் கையை வைத்து “பரவாயில்லையே நான் கூட என் ஃபிரண்ட் கல்யாணம் பண்ணிட்டா என்ன எல்லாம் மறந்துடுவா என்று நினைத்தேன். அவ்ளோ மோசம் இல்ல நீ” என்று கூறி அவன் கிண்டல் அடிக்க,
“ஏய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“எப்ப ஆச்சு?”
“ஏன் எங்களை யாருமே கூப்பிடல?”
என்று ஒவ்வொரு நண்பர்களாக அவளைக் கேட்க தொடங்க பரத்தை முறைத்துப் பார்த்தவள், “வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா?” என்று கூறி அவனின் மண்டையில் குட்டினாள்.
தலையில் கையை வைத்து தேய்த்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன், “அவங்க கேக்குறது நியாயமான கேள்வி தானே” என்று கூறி அவளை மேலும் வெறுப்பேற்றினான்.
“உன்ன” என்று அவனின் கழுத்தை நெரிப்பது போல் வந்தவள் விழாவை நடத்தும் அவளின் உடன் பயின்றவர்கள் அவர்களின் மேசைக்கு வரவும் அமைதியாகினாள்.
“காய்ஸ், எல்லா இடமும் ஃபுல் ஆயிடுச்சு. இங்கதான் ஒரு சீட் மிச்சம் இருக்கு. யாராவது வந்து உட்கார்ந்தா உங்களுக்கு ஒன்னு இஷு இல்லையே” என்று அவர் கேட்டிட,
”நோ இஸ்யூஸ்“ என்று கூறினான் பரத்.
”இவன் இன்னும் மாறவே இல்லை. அப்படியே தான் இருக்கான். உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கா காலேஜ் கடைசி டே ப்ரியாவுக்கு அவன் என்ன பண்ணான்னு” என்று அவர்களின் நண்பி கல்யாணி கூறிட.
”ஞாபகம் இருக்கு. அருண் தான் இப்போ என்ன பண்ணுறான் எங்க இருக்கான்னு தெரியல. அவன பாத்து தான் ரொம்ப நாளாச்சு” என்றாள் இன்னொருத்தி.
இப்படி அவள் கூறிக் கொண்டிருக்கும் வேளையிலேயே, “ஸ்பீக் ஆஃப் தி டெவில்” என்று கூறி அவளின் முகத்தை பரத் திருப்ப அங்கே அருண் வந்து கொண்டு இருந்தான்.
அவர்களை நெருங்கி வந்த அருண், “காய்ஸ் கேன் ஐ சிட் ஹியர்” என்று கேட்டு அமர்ந்து கொண்டான்.
அமர்ந்த பின் தான் அங்கே அவர்களோடு அமர்ந்து இருந்த ப்ரியாவை கவனித்தான்.
அருண் வந்ததிலிருந்து அருணையும் ப்ரியாவை தான் மற்ற நண்பர்கள் சுவாரசியமாக பார்த்தனர்.
சாதாரணமாக இருந்த ப்ரியா, “ஹாய் அருண் ஹவ் ஆர் யூ” என்று கேட்டாள்.
அவளை சினேகமாக பார்த்து புன்னகைத்தவன், “ஐ அம் ஃபைன். சாரி கல்யாணத்துக்கு வர முடியல” என்றான்.
ஆர்த்தியை தவிர மற்ற எல்லோரும் ‘என்னடா நடக்குது இங்க’ என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“ஹே நீங்க ரெண்டு பேரும் டச்ளையா இருக்கீங்க” என்று கேட்டான் பரத்.
ஆமாம் என்று கூறிய அருண் அவர்கள் எப்படி சந்தித்தனர் என இருவரும் கூறினர்.
“அப்புறம் உன் ஹஸ்பண்ட் பெயர் என்ன எங்க ஒர்க் பண்ணுறாரு” என்று கல்யாணி கேட்க.
“அவர் பெயர் கௌதம் கார்டியாலஜிஸ்டா இருக்காரு” என்று பதில் கூறினாள் ப்ரியா.
நண்பர்களுக்குள் நலன் விசாரிப்புகளும் பழைய சந்தோஷமான நிகழ்வுகளை பற்றி பேச்சுக்கள் என தொடர்ந்தது.
கேலியும் கிண்டல்லும் என்று நேரம் போனதே தெரியாமல் இருந்தவர்கள் பஃபே திறந்து விட்டார்கள் என்றதும் சாப்பிடுவதற்காக சென்றனர்.
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து வயிறார உணவருந்தினார்கள்.
ப்ரியாவும் அருணையும் தவிர மற்ற அனைவரும் சாப்பிட்டுவிட்டு கை கழுவி டெசர்ட் எடுக்க செல்ல மெதுவாக சாப்பிட்டு முடித்த இருவரும் ஒன்றாக கை கழுவ சென்றனர்.
மைதானம் என்பதால் கை கழுவும் இடத்தை சுற்றி சேறு போல் இருக்க பார்த்து மெதுவாக சென்று கை கழுவிக் கொண்டனர்.
சேலையை கையில் பிடித்துக் கொண்டு பிடிமானம் இல்லாமல் வழுக்கி கீழே விழப்போன ப்ரியாவை அவள் இடையில் கை வைத்துப் பிடித்துக் கொண்டான் அருண்.
விழப்போகும் பயத்தில் கண்ணை இருக்கி மூடிக்கொண்டவள் யாரோ தன்னை இடையில் பிடித்து இருப்பது தெரியவும் மெல்ல கண் திறந்தாள்.
அருணின் பிடியில் இருந்தவள் பக்கத்தில் ஆர்த்தியின் குரல் கேட்கவும் அவசரமாக அவனின் கை வளையத்துக்குள் இருந்து வெளிய வந்தவள் மறுபடியும் வழுக்கி விழ இந்த முறை அவளின் இடையே அருண் இறுக்கி பிடித்தான்.
பொறுமையோடு மெதுவாக அவளை நிற்க செய்தவன் இடையில் இருந்து மெல்ல கையெடுத்தான்.
“தேங்க்ஸ்” என்று அவனிடம் சொல்லிவிட்டு திரும்பியவள் ஆர்த்தியின் அருகில் நின்று தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த கௌதமை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
தொடரும்...