ஜீயோனா
Moderator
அத்தியாயம் 20
இயல்பாக கௌதம் ப்ரியாவின் நண்பர்களோடு இணைந்து பேசி நகைத்து அவர்களில் ஒருவன் போல் ஆகினான்.
அவனின் நடவடிக்கைகளை கண்ட ப்ரியாவுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவ்வளவு ஏன் அருண் மற்றும் பரத்தோடு தோளில் கை போட்டு பேசும் அளவுக்கு அவர்களோடு நட்பு பாராட்டியவன் பேச்சிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டான்.
விழா முடிந்து அனைவரும் கிளம்ப ஆயத்தம் ஆகும்போது ப்ரியாவிடம் கூறி விடைபெற்றார்களோ இல்லையோ அனைவருமே கௌதமிடம் சிரித்து பேசி விடை பெற்று சென்றனர்.
கடைசியில் ஆர்த்தி, ப்ரியா, கௌதம் மேலும் விழா நிர்வாகிகள் மட்டுமே அங்கே எஞ்சி இருந்தனர்.
விழாவின் போது நண்பர்களின் முன் ப்ரியா கணவனோடு இணக்கமாக இருப்பது போல் நடித்தவள் இப்பொழுது அவனிடமிருந்து இரண்டு அடி விலகி நின்று வேறெங்கோ பார்வையை செலுத்தினாள்.
அவளின் நடவடிக்கைகள் சின்ன பிள்ளை போல் இருக்க அதைக் கண்டு நகைத்தவன் ஆர்த்தியிடம் திரும்பி, “ஆர்த்தி எங்களை ஒரு 10 மினிட்ஸ் தனியா விட முடியுமா? நாங்க பேசி முடிச்சதும் உங்களுக்கு கால் பண்றேன்” என்று கூறியவன் அவனின் கார் சாவியை அவளிடம் கொடுத்தான்.
சரி என்று தலையசைத்து விட்டு காரில் ஏரி கதவடைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
கை இரண்டையும் முன்னால் கட்டிக்கொண்டு முகத்தை சிடு சிடு என வைத்திருந்த ப்ரியா, “எது சொல்றதாஇருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும்”என்றாள்
“இங்கு ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு. நம்ம அப்படியே நடந்துகிட்டே பேசலாம்” என்று கூறி மெல்ல நடக்க தொடங்கினான்.
அவன் கூறியதை கேட்டு சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவன் கூறியது போல் தொந்தரவாக இருக்கும் அளவுக்கு பொருளோ நபரோ தென்படவில்லை.
சிறிது தூரம் நடந்தவன் அவள் பின்னால் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்த்து, “வா, அப்பதான் பேசிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போக முடியும்” என்றான்.
அவனை முறைத்து பார்த்துக் கொண்டு அருகில் வந்தவள், “சொல்லுங்க” என்றாள்.
இரவு நேரம் வீதியில் மின்விளக்குகள் எரிந்து இருள் சூழ்ந்திருந்த பிரதேசத்தை ஒளிர செய்து கொண்டிருந்தது.
சாலையோரத்தின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் வளர்ந்து அந்த வீதியை கூடாரம் போல் மூடியிருந்தது.
குளிர்ந்த காற்று ப்ரியாவின் விரித்து விட்டிருந்த கூந்தலை அங்கும் இங்கும் அசைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அதில் சில முடி அவள் முகத்தில் வந்து விழ அதை மெதுவாக தன் ஒற்றை விரல் கொண்டு அவளின் காதின் பின்னால் ஒதுக்கி விட்டான்.
அவன் விரல் கன்னத்தில் படவும் கூச்சத்தில் கண்ணை மூடியவளுக்கு ஏனோ கசப்பான நிகழ்வுகள் கண் முன் வர முகத்தை பழைய படி தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை கவனித்து கௌதம் மெல்ல அவள் கரம் பிடித்து நடக்க தொடங்கினான்.
அவனின் மென்மையான அணுகுமுறையில் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்று சாந்தம் அடைந்தவள், “சொல்லுங்க” என்றாள். இம்முறை சற்று மென்மையான குரலில்.
அவளின் குரலில் தெரிந்த மாற்றமே தனது வெற்றியின் முதல் படியாக கருதினான் கௌதம்.
“உன்கிட்ட சொல்ல நிறைய விஷயம் இருக்கு. ஆனா எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல. கோல்டன் வேர்ட்ஸ்ல இருந்து ஆரம்பிக்கிறேன். சாரி, நான் உனக்காக சப்போர்ட் பண்ணாம என்னை மட்டுமே யோசிச்சு நடந்துகிட்டேன்னு நீ நினைக்கிற. ஆனா அது உண்மை இல்லை. நம்ம ரெண்டு பேரோட பேமிலியும் நம்மளால தான் ஒன்னு சேர்ந்துச்சு அது பிரியறதுக்கு காரணமும் நாமளாவே இருக்க கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்புறம் நான் எதுக்கு சாரி சொன்னேனா உன்கிட்ட நான் தனியா பேசி இந்த பிரச்சினையை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறமா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம குடும்பத்துகிட்ட பேசி இருக்கணும். அதுக்கு மட்டும் தான் சாரி. மத்தபடி நான் பண்ணுதுல எந்த தப்பும் இல்லை” என்றான்.
அவன் மன்னிப்பு கேட்டதும் புரிந்து கொண்டானே என்று மகிழ்ச்சி அடைந்தவள் பிறகு அவன் அவனின் மீது எந்த தவறும் இல்லை என்று கூறவும்,
“நீங்க எந்த தப்பும் பண்ணலையா. உங்க அண்ணாவை நான் மன்னிப்பு கேட்க சொல்லும்போது அவர் மன்னிப்பு கேட்க மாட்டாருன்னு நீங்க சொன்னீங்களே அது தப்பில்லையா?” என்று கோபத்தோடு கேட்டாள்.
“நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட”
அவனைப் பேச வேண்டாம் என்பது போல் முகத்துக்கு நேராக கையை காட்டி, “சரியா தான் புரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு உங்க அண்ணன் கௌரவம் முக்கியம்அதானே” என்றாள்.
இல்லை என்று அவன் தலையசைக்க, “அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க” என்று கேட்டாள்.
“உனக்கு அஸ்வினை பத்தி சரியா தெரியாது. அவன் ரொம்ப ஸ்டபன். எந்த விஷயத்துலயும் அவன் எடுக்கற முடிவு தான் சரின்னு நினைக்கிறவன். அவனுக்கே அவன் பண்ணது தப்புனு தோணுச்சுன்னா கண்டிப்பா மன்னிப்பு கேட்பான். இப்போ அவனை மன்னிப்பு கேட்க சொல்லி நம்ம வற்புறுத்தினா அவனோட தப்பு உணர்ந்து மன்னிப்பு கேக்க மாட்டான் வெறும் ஒரு வார்த்தை அளவுல தான் இருக்கும். அவன் அது உணர்ந்து கேக்கணும்னு நினைக்கிறேன்” என்றான்.
“அப்போ அதுவரைக்கும் என் குடும்பம் காத்துகிட்டு இருக்கணுமா?”
“முதல்ல என் குடும்பம் உன் குடும்பமுன்னு பிரிச்சு பாக்கறது நிப்பாட்டு”
“ஏன் நீங்க பிரிச்சு பாக்கலையா?”
“இல்ல. நம்ம கல்யாணம் நிச்சயம் பண்ண நாளிலிருந்து நான் நம்ம ரெண்டு பேரு குடும்பத்தையும் பிரிச்சு பார்த்ததே இல்லை”
“அப்ப நான் பண்ணது தப்புனு சொல்றீங்களா?”
“ஆமா” என்றான் உடனே.
“என் அப்பாக்காக பேசினது தப்பா” என்றாள் காட்டமாக.
“இல்ல. என்ன விட்டுட்டு போனது தப்பு. நானும் நீயும் வாழ்க்கை பூரா சேர்ந்து சந்தோஷமா இருப்போம்னு அக்னி சாட்சியா கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்ன விட்டுட்டு போனியே அது தப்பு தானே?”
“பின்ன உங்க வீட்டுக்கு உங்க கூடவே வந்து இருக்கணும்னு சொல்றீங்களா”
”நான் உன்ன வீட்டுக்கு கூப்பிடவே இல்லையே. நமக்கு கல்யாணம் ஆகி நாலு நாள் இருக்குமா. நானே இன்னும் வீட்டுக்கு போகல. அதே ஹோட்டலில் தான் ஸ்டே பண்ணி இருக்கேன். நீயே வீட்டுக்கு போகலாம்னு சொல்லி இருந்தாலும் அவன் மன்னிப்பு கேட்கிற வரைக்கும் உன்ன கண்டிப்பா நான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்க மாட்டேன். ஏன்னு சொல்லு… எனக்கு நம்ப வீட்டு கௌரவம் ரொம்ப முக்கியம்” என்றான்.
அவள் குழப்பமாக யோசித்துக் கொண்டிருக்கவும்.
“நம்பிக்கை வரலையா. சரி நீயே நல்லா யோசிச்சு பாரு நம்ம வீட்டுக்கு போலாம்னு நான் சொன்னேனா?” என்று கேட்டான்.
அவன் அவளை “பிரச்சனை பண்ணாத” என்று கூறினானே தவிர வா வீட்டுக்கு போகலாம் என்று ஒரு தடவை கூட அழைக்கவில்லை.
“அப்போ வரமாட்டேன்னா என்ன அர்த்தம்னு கேட்டீங்களே?” என்று கேட்டாள்.
“நான் உன்ன அஸ்வின் இருக்கிற வீட்டுக்கு தான் கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னேனே தவிர. உங்க அம்மா அப்பா வீட்டுக்கு இல்ல சித்தி சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருப்பேன். நீ வர மாட்டேன்னு சொன்னதும் என் கூடவே வரமாட்டன்னு சொல்லிட்டியான்னு தான் அப்படி கேட்டேன்” என்றான்.
கணவன் கூறியதை நம்ப முடியாமல் “அப்போ உங்க அண்ணா மன்னிப்பு கேக்குற வரைக்கும் வீட்டுக்கு போக மாட்டீங்களா” என்று அவள் கேட்டதும் இல்லை என்று அழுத்தமாக தலையாட்டினான்.
தனக்காக தன் கணவன் யோசிக்கின்றான் அதை செயலிலும் உணர்த்துகின்றான் என்று தெரிந்ததும் தன் கோபத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு காற்று கூட அவர்களுக்கிடையே வராதவாறு அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
தன்னை இறுக்கி அணைத்து கொண்டிருக்கும் மனைவியை தானும் அணைத்த கெளதம், “இப்ப கோபம் போயிடுச்சா?” என்று கேட்டான்.
அவன் நெஞ்சிலே தலையை வைத்துக் கொண்டு ஆம் என்று தலையசைத்தாள்.
பேசிக்கொண்டே சிறிது தூரம் கார் இருக்கும் இடத்தை விட்டு நடந்து வந்தது புரிய மறுபடியும் இருவரும் காரை நோக்கி கைகோர்த்த படி நடந்து சென்றனர்.
கணவன் தோளில் தலை சாய்த்து கொண்டு நடந்து வர, “இந்த சாரில நீ ரொம்ப அழகா இருக்க” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்து கூறினான் கௌதம்.
“நீதான் என் மேல கோவத்துல இருந்தியே. அப்புறம் எப்படி எனக்கு புடிச்ச சாரி கட்டிட்டு வந்த” என்று கேட்டான்.
“எல்லா டிரஸ் எடுத்து பார்த்தேன் . எதுவுமே செட் ஆகற மாதிரி தெரியல. இந்த சாரி தான் கரெக்டா இருக்கும்னு தோணுச்சு. அதுதான் இதையே கட்டிட்டேன்” என்று கூறிக்கொண்டு இருந்தவள் திடீர் என, “அப்புறம் கை கழுவுற இடத்துல என்ன ஆச்சுன்னா…அது நான் தெரியாம ஸ்லிப்பாகி விழ போகும்போது அருண்…” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளின் இதழில் விரல் வைத்து பேச்சை பாதியில் நிறுத்தியவன், “எனக்கு நீ எக்ஸ்பிளைன் பண்ணனும்னு அவசியமே இல்லை. எனக்கு உன் மேல நிறையவே நம்பிக்கை இருக்கு” என்று கூறி காரை நெருங்கியதும் ஓட்டுனரின் அருகில் இருக்கும் இருக்கையின் கதவை திறந்து விட்டான்.
கணவனின் கன்னத்தில் அவசரமாக முத்தமிட்டு விட்டு எதுவுமே நடக்காதது போல் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சேலை முந்தானை எடுத்து அவளின் மடியில் போட்டு விட்டு காரின் கதவை சாற்றியவனுக்கு மனைவி தந்த முத்தத்தில் தானாக இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த ஆர்த்தி, “நான் ஒண்ணுமே பாக்கலப்பா” என்றாள் குறும்பாக.
தோழியை திரும்பி முறைத்துப் பார்த்த ப்ரியா “பார்த்தாலும் எனக்கு ஒன்னும்பிரச்சனை இல்லை. என் புருஷனுக்கு தானே கொடுத்தேன்” என்றாள்.
கௌதம் காரில் ஏறியதும் ப்ரியா ஆர்த்தியிடம் திரும்பி,“ஆர்த்தி நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்று கேட்டாள்.
“என்ன ஃபார்மலா பேசுற சொல்லுடி” என்று கூறினாள் ஆர்த்தி.
“உன் வீட்டு பக்கத்துல. ஒரு பிளாட்டு காலியா இருக்குன்னு சொன்னியே. அது இப்போ கிடைக்குமா” என கேட்டாள் ப்ரியா.
“ரெண்டு பிளாட்டுக்கு சேம் ஓனர் தாண்டி. இன்னும் வீட்டுக்கு யாரும் வரலன்னு ஓனர் சொன்னாரு. இப்போ லேட் ஆகிடிச்சு நான் நாளைக்கு பேசி பார்த்துட்டு சொல்லட்டுமா” ஆர்த்தி கூற, “எனக்கு இப்போ வேணும்டி” என்றாள்.
“யாருக்கு இவ்வளவு அவசரமா வீடு தேடிக்கிட்டு இருக்க” என்று கேட்டான் கௌதம்.
“உங்களுக்கு தான்” என்று ப்ரியா கூறிட மற்ற இருவரும் குழம்பிப் போயினர்.
“எனக்கா? ஏன்?” என்று கௌதம் கேட்க.
“ஹோட்டல்ல எத்தனை நாளைக்கு ஸ்டே பண்ணுவீங்க. சும்மா தண்டமா அதுக்கு ஏன் காசு செலவு பண்ணனும். இப்போ ஹோட்டலுக்கு நேரா கார விடுங்க. இப்பவே செக் அவுட் பண்ணி உங்க திங்ஸ் எடுத்துட்டு வரோம்” என்றாள் ப்ரியா கராராக.
“திங்ஸ் எடுத்துட்டு வந்து எங்க வைக்கிறது மேடம்”என்று பணிவாக கேட்பது போல் அவன் செய்கை செய்ய.
ஆர்த்தி, “அது என் வீடு இருக்குல்ல. ஒரு நாள் எங்க வீட்ல தங்கிக்கோங்க. அப்புறம் நாளைக்கு கி கிடைச்சதும் அந்த வீட்டுக்கு நீங்க போகலாம்” என்று ஐடியா கொடுத்தாள்.
ப்ரியாவுக்கும் அதுவே சரியாக பட அந்த யோசனைக்கு சரி என்று கூறினாள்.
கௌதம் எவ்வளவு மறுத்தும் அவனை ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்து ஆர்த்தி வசிக்கும் அபார்ட்மெண்ட்க்கு அழைத்து வந்திருந்தாள் ப்ரியா.
தொடரும்...