ஜீயோனா
Moderator
அத்தியாயம் 21
“வாங்க கௌதம். இப்படி உக்காருங்க” என்று கூறி அவனை சோபாவில் அமர செய்தான் ரகு.
“ஹாய் ரகு எப்படி இருக்கீங்க?” என்று அவனோடு உரையாட ஆரம்பித்துவிட்டான் கௌதம்.
தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அவனுக்காக கெஸ்ட் அறையை சுத்தப்படுத்தி கொண்டு இருந்தனர்.
கௌதமிடமிருந்த ப்ரியாவின் அலைபேசியில் அழைப்பு வர, “ப்ரியா அத்தை கால் பண்றாங்க”என்று அறையில் இருந்தவளை அழைத்தான்.
அவன் அழைத்ததும் ஓடி வந்தவள் அலைபேசிக்காக கை நீட்ட அதை தர மறுத்தவன், “நீ இன்னைக்கு என் கூட இங்க தான் தங்குற. உங்க அம்மா கிட்ட ஆர்த்தி கூட தங்கறேன்னு சொல்லிடு” என்றான்.
அவனை முறைத்து பார்த்தவள், “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. கண்டிப்பா விட மாட்டாங்க” என்றாள்.
அவளிடம் இருந்து பார்வையை விலக்கி ஆர்த்தியின் பக்கம் திரும்பியவன், “ஆர்த்தி நீங்களே அத்தை கிட்ட அவளை இன்னைக்கு இங்க தங்க வச்சுக்கிறேன்னு சொல்லிடுங்க” என்று சொன்னதும் அவள் சரி என்று தலையாட்ட அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.
“போச்சு போ. அம்மா திட்ட போறாங்க” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் கௌதமை கடுமையாக முறைக்க தொடங்கினாள்.
அவளின் முறைப்பெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாதவன் ஒன்றுமே நடவாதது போல் ரகுவின் அருகில் அமர்ந்து பேச்சை தொடர்ந்தான்.
அலைபேசியை எடுத்துக்கொண்டு பல்கனி பக்கம் சென்று பேசத் தொடங்கினாள் ஆர்த்தி.
அலைபேசியில் தாரணியிடம் அவள் பேசிவிட்டு உள்ளே வந்திட ‘என்ன என்பது போல்’ எல்லோரும் அவளை ஆர்வமாக கண்டனர்.
அழைப்பை மியூட் செய்துவிட்டு, “ப்ரியா ஆன்ட்டி ஓகே சொல்லிட்டாங்க. ஆனா, உன்கிட்ட பேசணுமாம்” என்று கூறி அலைபேசியை அவளிடம் கொடுத்தாள் ஆர்த்தி.
அன்னையிடம் பேசிவிட்டு வந்த ப்ரியா எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, “தங்க ஒகே சொல்லிட்டாங்க” என்றாள்.
“அப்புறம் என்ன கௌதம். ரெண்டு பேரும் பிரெஷ் ஆகி டிரஸ் மாத்திட்டு வாங்க” என்று கூறினான் ரகு.
“ஆர்த்தி உன்னோட நைட்டி ஏதாவது தா” என்று அவளிடம் கேட்டு வாங்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் குளித்து வந்ததும் கௌதமும் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.
ஆர்த்தி ஒரு கிளாஸ்சில் பாலை ஊற்றி ப்ரியாவிடம் கொடுக்க, “நான் இப்ப என்ன ஃபர்ஸ்ட் நைட்டா கொண்டாட போறேன். ஏன் இப்படி எல்லாம் பண்ற” என்று நண்பியிடம் கேட்டாள்.
அவளை ஒரு நமபட்டு சிரிப்போடு பார்த்த ஆர்த்தி, “இல்லடி எதுக்கும் இருக்கட்டுமேன்னு தான் கொடுத்தேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஒன்னும் வேணாம்” என்று மேசையில் கிளாசை வைத்துவிட்டு அறைக்கு சென்றாள் ப்ரியா.
ஆர்ம்கட் டிஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து கிடந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
அவனை கண்டதும் கையில் கிடைத்த ஒரு சின்ன தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தவள், “எதுக்கு இப்படி பண்ணீங்க?” என்று கேட்டாள்.
தன் மீது அவள் எறிந்த தலையணையை எடுத்து ஓரமாக வைத்தவன், “ஓ வந்துட்டியா” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தப்படி கூறியவன் அவளைக் கடந்து சென்று கதவை அடைத்தான்.
அவன் கதவை மூடும் வரை இருந்த தைரியம் இப்பொழுது அவளிடம் காணாமல் போயிருந்தது.
அவள் சின்ன குழந்தை போல் பயத்தில் விழிப்பதை கண்டவன் மேலும் அவளிடம் விளையாடும் பொருட்டு, “அப்போ ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.
வார்த்தைகள் வர சிரமப்பட்டு ஒரு வழியாய், “என்னது?” என்று கேட்டாள்.
சிரித்துக் கொண்டே, “ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தான்” என்றான்
விட்டா அழுது விடுவேன் என்பது போல் அவள் இருக்க விளையாட்டை நிறுத்தியவன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருந்துச்சு. அதுதான் உன்னை இங்க தங்க வைச்சேன். வா தூங்கலாம்” என்று கூறி அவன் பெட்டில் ஒரு பக்கம் படுக்கவும் அவள் அடுத்த பக்கம் படுத்துக் கொண்டாள்.
அவள் முகம் பார்த்தபடி படுத்து கிடந்தவன் மெல்ல அருகே சென்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, “தூங்கு” என்று கூறி அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் அப்படியே உறங்கிப் போனாள்.
கணவனின் நெஞ்சத்தை மஞ்சமாக மாற்றி உறங்கிக் கொண்டிருந்தவள் அதிகாலையில் கைபேசியின் சத்தத்தில் கண்விழித்தாள்.
கௌதமும் அதே நேரம் கண் விழிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தவர்கள் ஒருவருக்கொருவர் “குட் மார்னிங்” என்று கூறிக்கொண்டனர்.
அலைபேசியில் சத்தம் வந்த வண்ணமே இருக்க அதை எடுத்து பார்வையிட்டவள் தந்தை மற்றும் அண்ணன் என இருவரும் மாறி மாறி அழைத்திருப்பதை கண்டு உடனே அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
“ஹலோ அண்ணா. என்ன ரெண்டு பேரும் மாறி மாறி கால் பண்ணி இருக்கீங்க. ஏதாச்சும் பிரச்சனையா?” தந்தையின் கைபேசியில் அண்ணனின் குரல் கேட்டதும் பதட்டமாகி கேட்டாள்.
“அது பூஜா…” என்று அரவிந்த் இழுக்க
“பூஜா வா…பூஜாக்கு என்ன ஆச்சு?” என்றாள் பதட்டமாக.
“அது அவ மயக்க மருந்து சாப்பிட்டு சூசைட் அட்டெம்ப்ட் பண்ண ட்ரை பண்ணி இருக்கா. எல்லாரும் ஜிஎச்ல இருக்கோம்” என்றான்.
“அப்ப நானும் உடனே வாரேன்” என்று அழைப்பை துண்டித்தவள் கௌதமிடம் விஷயத்தை சுருக்கமாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்று உடை மாற்றிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள் ப்ரியா.
பூஜாவின் பெற்றோர் இருவரும் அழுது கொண்டு சிவகுமாரிடம் பேசுவதை கண்டு அவர்களை நெருங்கினாள்.
“அப்பா, இப்ப எப்படி இருக்கா?” என்று எடுத்த உடனே பூஜாவின் உடல்நிலை பற்றி தான் விசாரித்தாள்.
“மயக்க மருந்து சாப்பிட உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்ததால ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்ப மயக்கத்துல இருக்கா. சூசைட் அட்டம்ப்ட்னு ஸ்டேஷன்ல இருந்து போலீஸ் வந்து இருக்காங்க. அவ கண்ணு முழிச்சதும் தா என்ன நடந்துச்சுன்னு கேக்கணும்” என்றார்.
அந்தப் பிரச்சினை நடந்த பின் கூட சிவகுமாரோடு நன்றாக உரையாடி, வங்கிக்கும் விடுமுறை எடுக்காமல் வந்த பூஜா இப்பொழுது தற்கொலை செய்ய முயற்சித்ததை யோசித்து அனைவரும் குழம்பிப் போயினர்.
பூஜாவின் அப்பாவி பெற்றோருக்கு பாவம் நடந்த ஒன்றுமே தெரியாததால் சிவகுமாரை உதவிக்கு அழைத்திருந்தனர்.
பூஜா தினமும் சிவக்குமாரின் புராணம் தான் வீட்டில் பாடுவாள். அவரை போல தானும் ஒரு வங்கியில் மேனேஜராக வேண்டும் என்று அவரையே தனது ரோல் மாடல் ஆக எடுத்துக்கொண்டவள் தான் பூஜா. சிவகுமார் மேல் பூஜாவின் பெற்றோருக்கும் இதனால் அவரின் மேல் நல்ல மரியாதை இருக்கிறது.
பூஜாவின் பெற்றோர் இருவரும் பயந்தவர்கள். ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் அதனால் வரும் விளைவுகளை நினைத்து வருந்துவார்கள்.
இப்படி இருப்பவர்களுக்கு தன் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது மற்றும் தன்னிடம் தவறாக சிலர் நடக்க முயற்சி செய்தார்கள் என்று அவள் கூறியிருந்தால் கண்டிப்பாக அவளை வேலையில் இருந்து நிறுத்தி இருப்பார்கள்.
அவள் எதையும் கூறாமல் மறைத்ததால் இப்பொழுது எந்த காரணத்துக்காக மகள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள் என்று தெரியாமல் கதறி கொண்டு இருந்தனர்.
சிவகுமாரும் தானே அவர்களிடம் உண்மையை சொல்லி விடலாமா என்று யோசித்தவர் உண்மை தெரிந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக மாறினால் என்ன செய்வது என்று இப்போதைக்கு பூஜா கண் விழிக்கும் வரை அமைதியாக இருக்க முடிவெடுத்தார்.
எல்லோரையும் பயமுறுத்திவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் பெற்றோரை கண்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள்.
அவர்களுக்கு அருகில் சிவகுமாரின் குடும்பமும் பின்னால் போலீசும் இருப்பதை கண்டாள்.
உண்மை தெரிந்து விட்டதா என்பது போல் அவள் சிவகுமாரை கலக்கமாக பார்க்க நான் எதையும் கூறவில்லை என்ற செய்தியை சிவகுமார் அவளுக்கு கூற முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில். “சொல்லுமா ஏன் சூசைட் அட்டெம்ட் பண்ண” என்று போலீஸ் அதிகாரி விசாரணையை தொடங்கியிருந்தார்.
இதற்குப் பின் நடந்ததை மறைத்து எந்தப் பயனும் இல்லை இன்று முடிவெடுத்தவள் என்ன நடந்தது என கூற தொடங்கினாள்.
அவள் கூற தொடங்கும் வேளையில் சிவகுமாரின் குடும்பத்தை வெளியே அனுப்ப முயற்சித்த போலீசை தடுத்து நிறுத்தியவள் ப்ரியாவின் திருமணத்தில் இருந்து ஆரம்பித்து இரவு நடந்தது வரை கூறினாள்.
நடந்த பிரச்சனை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து நிம்மதியாக நடமாட தொடங்கியவளின் நிம்மதியை குலைக்க செய்ய அவளுக்கு ஒரு மெசேஜ் நேற்று இரவு அனுப்பப்பட்டது.
ஒரு பிரைவேட் நம்பரில் இருந்து அவளின் மார்ஃபிங் செய்த ஆபாச படத்தை நெட்டில் போடப் போவதாக ஒருவன் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
பூஜா கெஞ்சி வேண்டாம் என்று கூறவும் பணம் தர சொல்லி மிரட்டினான். கையில் அவன் கேட்ட அவ்வளவு பெரிய தொகை இல்லாததால் என்ன செய்வது என்று விடிய விடிய யோசித்தவள் தற்கொலை தான் ஒரே வழி என்று நினைத்து தாயின் தூக்க மாத்திரையை எடுத்து மொத்தமாக வாயில் சரித்திருந்தாள்.
பூஜாவை எழுப்ப அவளின் அறைக்கு வந்த அவளின் தாயார் இந்த நிலைமையில் அவளை கண்டதும் பதறிப்போனவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
“சார், அவதான் சின்ன பொண்ணு. நீங்களாவது எங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாமா?” என்று சிவகுமாரிடம் கேட்டார் பூஜாவின் தந்தை.
“அவர்கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம். நம்ம பொண்ணுக்கு நம்ம தானே பாதுகாப்பு. அம்மா அப்பா கிட்ட தான் சொல்லணும்னு அவளுக்கு தோன்ற அளவுக்கு நம்ம நடந்து கொள்ளல போல” என்றார் பூஜாவின் தாயார் சேலையால் கண்களை துடித்துக் கொண்டு.
பூஜா, “அப்படி இல்லம்மா” என்று அவர் கையைப் பிடிக்கவும், “அப்புறம் ஏண்டி இப்படி பண்ண” என்று ஆதங்கப்பட்டார் அவர்.
“எனக்கு பயமா இருந்துச்சு மா. நான் பிரச்சினையை சொன்னா நீங்க என்ன வேலை விட்டு நிக்க சொல்லுவீங்கன்னு” அழுதுக்கொண்டே கூறினாள்.
“இதுல உன் மேல தப்பு இல்லாதபோது நாங்க ஏன்மா அப்படி பண்ண போறோம்?”
“சின்ன வயசுல கிளாஸ்ல ஒரு பையன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு சொன்ன உடனே என்னை தானே நீங்க கிளாஸ் விட்டு நிறுத்துனீங்க. நான் அந்த கிளாஸ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் தான் மேத்ஸ்ல மார்க்ஸ் அதிகம் வாங்கினேன். என்னோட பிரச்சனையை சரி பண்ணுறேன்னு நினைச்சு எனக்கு வாழ்க்கையில் பயந்து ஓட தான் மா கத்து கொடுத்தீங்க. அதுல இருந்து உங்க கிட்ட நான் என்ன நடந்தாலும் சொல்றதுக்கு பயப்படுவன்”
“என்ன மன்னிச்சிடு மா. நாங்க அந்தப் பையன் கிட்ட இருந்து உன்னை எப்படி காப்பாத்தணும்னு யோசிச்சுமே தவிர, அதனால உன் மனசுல இவ்வளவு பெரிய ஆழமான பாதிப்பை ஏற்படுத்திட்டோம்னு எனக்கு இப்பதான் தெரியுது இனிமேல் எதுனாலும் அம்மா அப்பா கிட்ட சொல்லு உனக்காக நாங்க எப்பவும் இருப்போம்”
“நீங்களும் என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்ன நடந்தாலும் இனி உங்க கிட்ட தான் நான் முதல்ல சொல்லுவேன்” என்று தாயின் கையை இறுகப் பற்றி கொண்டு கூறினாள் பூஜா.
மகள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாள் என்று கலங்கியவர் இவ்வளவு பிரச்சனையிலும் தங்களிடம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை என்றதும் அவள் மேல் கோபம் கொள்ளாமல் நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுக்க தவறிவிட்டோமே என்று கண்கலங்கிய தாய் இனி என்ன ஆனாலும் எங்களிடம் சொல் என்ற நம்பிக்கையை அவளுக்கு ஊட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
இனிமேல் பூஜாவுக்கும் வாழ்க்கையில் இனி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தனக்கு ஆதரவாய் தன் பெற்றோர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வந்தது.
போலீஸ் சிவகுமாரிடமிருந்தும் சில விவரங்களை சேகரித்துக் கொண்டு கிளம்பிட சிவகுமாரின் குடும்பத்தினரும் பூஜாவும் பூஜாவின் பெற்றோரிடமிருந்தும் விடைபெற்றனர்.
மாலை ஆர்த்தி இல்லத்துக்கு மறுபடியும் வந்த ப்ரியா கௌதமை தேடிச் சென்றாள்.
விருந்தினர்கள் அறையில் கௌதம், ஆர்த்தி, ரகு மூவரும் இருந்து தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
“என்ன எல்லாரும் ரொம்ப யோசனையில் இருக்கீங்க. என்ன ஆச்சு?” என்று கேட்டாள் ப்ரியா.
“அஸ்வினுக்கு மெசேஜ் பண்ணதும் இப்போ பூஜாவுக்கு மெசேஜ் பண்ணதும் சேம் நம்பர்”என்றான் கௌதம்.
“ஆமா. அதுக்கு என்ன?” என்று கேட்டாள்.
“அந்த சிம்ம ஃபேக் டீடைல்ஸ் கொடுத்து வாங்கி இருக்காங்க. அதனால ஆள் யாருன்னு கண்டுபிடிக்க முடியல. ஆதித்யன் அவருடைய அதிகாரத்தை யூஸ் பண்ணி நம்ம கல்யாணம் அன்னைக்கு சிம் எந்த லொகேஷன்ல இருந்ததுன்னு கண்டுபிடிச்சிட்டாரு. ஆனா அது ஒரு சூப்பர் மார்க்கெட் சோ நோ யூஸ்”
“சரி இப்ப எதுக்கு நீங்க எல்லாரும் சேர்லொக்ஹோம்ஸ் மாதிரி யோசிச்சிட்டு இருக்கீங்க. அதெல்லாம் போலீஸ் பாத்துப்பாங்க” என்று கூறினாள்.
“அந்த சூப்பர் மார்க்கெட் யாரோடதுன்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்ட. அந்த சூப் மார்க்கெட் அருண் சித்தப்பாவோடது” என்று கூறினான் கௌதம்.
தொடரும்...