ஜீயோனா
Moderator
அத்தியாயம் 22
அருண் என்று சொன்னதும் ப்ரியா, “அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். அவனுக்கு எங்க அப்பாவ அசிங்கப்படுத்த என்ன மோட்டிவ் இருக்க போகுது” என்றாள்.
“நாங்களும் இப்ப அருண் பண்ணான்னு சொல்லலையே. அருண் ஓட சித்தப்பா சூப்பர் மார்க்கெட் லொகேஷன் காட்டுதுன்னு மட்டும் தான் சொன்னோம்” என்று பொறுமையாக எடுத்து கூறினான் கௌதம்.
“பேசாம நீங்க ரெண்டு பேரும் போய். பர்சனல்லா அருணை மீட் பண்ணா ஏதாச்சும் தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல” என்று யோசனை சொன்னான் ரகு.
ஆர்த்தி, “நானும் உங்க கூட வரேன்” என்று கூறினாள்.
“நீ எதுக்கு போற?” என்று ரகு கேட்க.
“எனக்கு அருண் கிட்ட கேக்குறதுக்கு ஒரு விஷயம் இருக்கு” என்று மட்டும் கூறியவள் எழுந்து சென்று தயாராக தொடங்கினாள்.
ஆதித்யனிடமிருந்து கௌதமுக்கு அழைப்பு வர உடனே ஏற்றவன், “ஏதாச்சும் அப்டேட் இருக்கா?” என்று கேட்டான்.
“இல்ல கெளதம். மார்னிங் நான் போகும்போது சூப்பர் மார்க்கெட்ல அருண் அண்ட் அவன் சித்தப்பா ரெண்டு பேருமே இல்ல. அருண் நம்பருக்கு கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன் லைனே கிடைக்கல. அவன் சித்தப்பாவை பாக்க அவங்க வீட்டுக்கு போனேன். அவர் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு சூப்பர் மார்க்கெட்டுக்கே போகலைன்னு சொல்றாரு. அருண் எங்கன்னு கேட்டப்போ வேலை விஷயமா ஏதோ ஊருக்கு போனானாம் இன்னும் ஒன் ஹவர்ல வந்துருவான்னு சொன்னாரு” என்று கூறினான்.
“தேங்க்ஸ் ஆதி. நாங்களும் இப்போ அருண மீட் பண்றதுக்காக தான் அவனோட சித்தப்பா சூப்பர் மார்க்கெட் போலான்னு யோசிச்சோம். அப்ப அங்க மீட் பண்ணலாம்”
“நான் இப்போ முக்கியமான வேலையா வெளிய போயிட்டு இருக்கேன் கௌதம். அருண் வீட்ல கான்ஸ்டபிள் ஒருத்தர இருக்க வச்சுட்டு வந்து இருக்கேன். அருண் வந்ததும் கூட்டிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு வர சொல்றேன். அங்க வச்சு பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு அழைப்பை அடுத்த முனையில் இருந்த ஆதித்யன் துண்டித்தான்.
“உங்க ஃபிரண்டு என்ன சொல்றாரு” என்று கௌதமை கேட்டாள் ப்ரியா.
“அருண் ஓட சூப்பர் மார்க்கெட்டுக்கு வர சொல்றாரு. வா நாம கிளம்பலாம். ரகு நீங்கள் வரீங்களா?” என்று கௌதம் ரகுவிடம் கேட்க,
“எல்லாரும் என்ன ட்ரிப்பா போறோம். நீங்க மூணு பேரும் மட்டும் போய்ட்டு வாங்க” என்று கூறினான்.
ஆர்த்தி, ப்ரியா, கௌதம் என்று மூவருமாக திவாகரின் சூப்பர் மார்க்கெட்டடை வந்தடைந்தனர்.
“அருண் வரதுக்கு எப்படியும் ஒரு ஹாஃப் அண்ட் ஹவர் டைம் இருக்கு. அதுவரைக்கும் என்ன பண்ணலாம். சும்மா கார்லயே இருந்துக்கலாமா” என்று சூப்பர் மார்க்கெட் வாசலில் காரை நிறுத்தி விட்டு கூறினான் கௌதம்.
“எனக்கு எப்படியும் வீட்டுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும். சோ நான் போய் உள்ள வாங்கிகிட்டு வாரேன்” என்றாள் ஆர்த்தி.
“அப்போ நீ ஷாப்பிங் பண்ண தான் வந்த எங்களோட. அப்படித்தானே” என்று ஆர்த்தியிடம் கேட்டாள் ப்ரியா.
“அதுக்கும் சேர்த்து தான் வந்தேன். நீயும் வரியா?” என்று ப்ரியாவை கேட்டாள்.
“எனக்கும் காரில் இருந்தா போர் அடிக்கும் நானும் வாரேன்” என்று அவளோடு சேர்ந்து இறங்க இருவரும்சூப்பர் மார்க்கெட்க்குள் நுழைந்தனர்.
“கீதா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் கிருஷ்ணா அவனுடன் வேலை செய்யும் பெண் ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தான்.
“சொன்னா தானே தெரியும்” என்றாள் கடுப்பாக.
“எப்ப பார்த்தாலும் என்னை பார்த்தா ஏன் கடுப்பாக பேசுற கீதா?”என்றான் பாவமாய்.
“பின்ன… வேலை செய்ற நேரத்துல கதை சொல்லிக்கிட்டு இருக்க உன்ன பார்த்தா கடுப்பு வராம என்ன வரும்” என்று கூறியபடியே சாமான்களை செல்ஃபில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவி செய்வது போல் தானும் கொஞ்சம் கொஞ்சமாக சாமானை செல்பில் எடுத்து வைத்த கிருஷ்ணா பேச்சை தொடர்ந்தான், “நேத்து ராத்திரி நான் திவாகர் சார் வீட்டுக்கு போயிருந்தேன் இல்ல அப்போ அருண் சாரும் திவாகர் சாரும் பேசுறதை நான் கேட்டேன்” என்றான்.
செல்ஃபில் அடுக்குவதை நிறுத்திவிட்டு அவனை இடுப்பில் கைவைத்து முறைத்து பார்த்தவள், “உனக்கு எப்ப தான் இந்த புத்தி போகப்போகுதோ. அவங்க என்னத்த வேணாலும் பேசிட்டு போறாங்க நீ ஏன் அத ஒட்டு கேட்டுட்டு இருக்க” என்று கேட்டாள்.
உடனே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவன், “தெரிஞ்சு வேணும்னே கேட்கல கீதா. நான் வரது தெரியாம அவங்க பாட்டுக்கு பேசிகிட்டு இருந்தாங்க. சரி அவங்க பேசுற வரைக்கும் சும்மா இருந்தேன். அப்போதான் தெரிஞ்சது நம்ம அருண் சார் சாதாரண ஆள் கிடையாது. அவருக்குள்ளேயும் ஒரு இதயம் முரளி இருந்திருக்காருனு” என்று கூறினான்.
“என்னது இதயம் முரளியா? நம்ம சாரா?அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சாருக்கு லவ் நாலே பிடிக்காது. நீ சொல்றத குழந்தை கூட நம்பாது” என்றாள்.
“இப்படி என்ன அசிங்கப்படுத்தி பேசுறதே உனக்கு வேலையா போச்சு. நல்லதுக்கே காலம் இல்ல கீதா. நான் கிளம்புறேன்” என்று சாமான்களை வைத்துத் தள்ளும் வண்டியை தள்ளிக்கொண்டு செல்லப் போனவனை வழிமறித்து நின்றாள் கீதா.
“சரி என்னமோ சொல்ல வந்தியே. அத முழுசாவாது சொல்லிட்டு போ. இல்லனா அது என்னனு யோசிச்சு யோசிச்சு ஒரு வேலையும் செய்யாம கையும் ஓடாம காலும் ஓடாமல் கிடப்பேன்” என்றாள்.
“அப்படி வா வழிக்கு. என்ன பேசிக்கிட்டாங்கன்னா நம்ம அருண் சார் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்காரு போல. அந்தப் பொண்ணுக்கு ஒரு மூணு நாளைக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆகி இருக்கு போல அந்தப் பொண்ண அவ புருஷன் கூட பாத்தாருன்னு திவாகர் சார் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. மனுஷன் என்னமா உருகி உருகி லவ் பண்ணி இருக்காரு தெரியுமா?”
“அப்படி ஒரேடியா உருகி லவ் பண்ணவரு ஏன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணல?” என்று அவனின் பேச்சில் நடுவில் புகுந்து கேட்டாள்.
“அங்கதான் ட்விஸ்ட். அந்தப் பொண்ணு காலேஜ் படிக்கிற அப்போவே அவர் கிட்ட லவ் சொல்லி இருக்கு. நம்ம சார் தான் வேணான்னு சொல்லிட்டாரு”
“ஏன் அப்படி சொன்னாரு?”
“பின்ன. நம்ம சாருக்கு படிப்பு சுத்தம்”
”டேய். பிளஸ் டூ பெயில் ஆனவனே. நீ நம்ம சாரை பத்தி பேசுறியா?”
”சரி விடு. சாருக்கு படிப்பு அவ்வளவா வரல. குடும்பம்னு பார்த்தா கூட சித்தப்பா சித்தி மட்டும் தான். அந்த பொண்ணு கிட்ட வேற பொண்ண புடிச்சிருக்குன்னு பொய் சொன்னவரு கல்யாணம் பண்ற அளவுக்கு தகுதியை சேர்த்துக்கிட்டு போய் பொண்ணு கேக்கணும் நினைச்சிருக்காரு. அதுக்குள்ள எவனோ ஒருத்தன் நடவுல வந்து அந்த பொண்ண கொத்திகிட்டு போயிருக்கான். பார்த்தியா ஒழுங்கா அந்த பொண்ணு லவ் சொன்ன அப்பவே எனக்கு உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா?” என்று கீதாவிடம் கேட்டான்.
“பாவம் இல்ல நம்ம சார்…”
“ஆமாம் கீதா. நமக்கு ஒருத்தங்கல புடிச்சிருக்குன்னா வெளிப்படையா சொல்லிரனும் அப்புறம் அம்மான்னு சொன்னாலும் வராது. ஆத்தான்னு சொன்னாலும் வராது. மனசுலாயோ” என்றான்.
“மனசுல ஆயா? மனசுல எப்படிடா ஆய் வரும்” என்று கீதா முகத்தை அருவருப்பாய் வைத்து கூற.
‘இவ்வளவு நேரம் கதையை மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுட்டு இருந்தவ. கடைசில நான் பஞ்சு போட்டதும் அப்படியே நைசா கதைய மாத்தி எஸ்கேப் ஆக பார்க்கிறாளே. இவளுக்கு நம்மள புடிச்சி இருக்கா புடிக்கலையா’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டவன், “உன் மூஞ்சி எக்ஸ்பிரஷன் பார்த்தா எனக்கு உண்மையாவே வந்துரும் போல இருக்கு” என்று கூறியவன் வண்டியை தள்ளிக் கொண்டு கிளம்ப.
“டேய், என்ன லந்தா. சரி அந்த பொண்ணு பேரு என்னன்னு சொல்லிட்டு போ” என்று கத்தி கேட்டாள்.
“அது ஏதோ சுதா ப்ரியாவோ சொதப்பிரியாவோ” என்று வண்டியை தள்ளிக்கொண்டே கூறி விட்டு சென்றான்.
அவன் முகத்தைக் கூட திருப்பாமல் கூறிய லட்சணத்தில் அவளுக்கு தெரிந்தது அவன் தன்மேல் கோபமாக இருக்கிறான் என்று.
பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் என்று வேலையை தொடர்ந்தாள்.
சூப்பர் மார்க்கெட்டில் பெரிதாக கூட்டம் இல்லாததால் இவர்கள் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கவனித்து எல்லாம் அவர்கள் பேசவில்லை.
இவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த செல்ஃபின் வளைவில் டூத் பேஸ்ட் எடுப்பதற்காக வந்த ஆர்த்தியும் ப்ரியாவும் இவர்களின் மொத்த உரையாடலையும் முழுதாய் கேட்டனர்.
அவன் பேசி முடித்து கடைசியில் பேர் சொல்லும்போது நின்ற இடத்தில் உறைந்து போய்விட்டாள் ப்ரியா.
அவள் சிலை போல் நிற்பதை பார்த்த ஆர்த்தி, “ஹே ப்ரியா, சில். அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது” என்று கூறினாள்.
“எனக்கு என்னமோ இவன் பொய் சொல்லலைன்னு தோணுது ஆர்த்தி. அப்படின்னா அருண் என்ன லவ் பண்ணி இருக்கானா? அப்போ என் கல்யாணத்த ஸ்டாப் பண்ணனும்னு தான் எங்க அப்பா போட்டோவ மார்ஃபிங் பண்ணானா” என்று கண்களில் கண்ணீர் வழிந்து ஓட ஆர்த்தியிடம் கேட்டாள்.
“ப்ரியா நீ தேவையில்லாம கற்பனை பண்ணாத. எதா இருந்தாலும் அவன் கிட்டயே கேட்டு கன்ஃபார்ம் பண்ணிப்போம்” என்றாள் ஆர்த்தி.
“சரி. அவன்கிட்ட கேட்டே நான் முடிவு பண்ணிக்கிறேன்” என்று தீர்க்கமாக கூறினாள்.
ஆதித்யன், கான்ஸ்டபிள் மற்றும் அருண் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைய அவர்களின் பின்னோடுஉள்ளே நுழைந்தான் கௌதம்.
சூப்பர் மார்க்கெட்டில் தனக்கென்று இருக்கும் அறைக்குள் அனைவரையும் அமர வைத்த அருண், “சொல்லுங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க” என்று பொதுவாய் கேட்டான்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்த ப்ரியா பொறுமை காக்க முடியாமல், “நீ என்ன லவ் பண்ணியா?” என்று அழுத்தமான குரலில் கேட்டாள்.
ப்ரியா கேட்ட கேள்வியில் முகம் எல்லாம் வேர்த்து கொட்ட பேண்ட் பக்கெட்டில் இருந்த கெற்ச்சிப் எடுத்து துடைத்தவன் அமைதியாக நின்றான்.
அவனின் அமைதியே அவளுக்கு பதிலாய் அமைந்துவிட அவன் அருகே நெருங்கி வந்தவள் ஒரு நொடியும் யோசிக்காது அவன் கன்னத்தில் பளார் என்று அறிந்திருந்தாள்.
ஆர்த்தி தவிர மற்றவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே புரியாமல் இருந்தனர்.
அவள் அருணை அறைந்ததும், “ப்ரியா ஸ்டாப் இட். என்ன இப்படி பிஹேவ் பண்ற” என்று அவளின் அருகில் வந்தான் கௌதம்.
“இவன் தான் எல்லாத்துக்கும் காரணம். இவன் தான் எல்லாம் பண்ணி இருக்கான். எனக்கு கல்யாணம் ஆகிட்டது என்ற கோவத்துல அப்பா படத்தை மார்ஃபிங் பண்ணி அனுப்பி இருக்கான் பொறுக்கி” என்று ஆள்காட்டி விரலை அருணை நோக்கி காட்டி கூறினாள்.
தொடரும்...