ஜீயோனா
Moderator
அத்தியாயம் 24
ஆதித்யன் விட்ட அறையில் மூளை கலங்க கோபாலின் கண்களுக்கு எல்லாம் இரண்டு இரண்டாக தெரிய தொடங்கியது.
அவனை இழுத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வந்து லாடம் கட்டி விசாரிக்க உண்மையை கக்க தொடங்கினான்.
சில மாதங்களுக்கு முன்..
கோபால் சிவகுமார் மேனேஜராக இருக்கின்ற வங்கியில் பத்து வருடங்களாக கேசியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
புதிதாக வேலைக்கு சேர்த்த பூஜாவுக்கு அவரை விட அனுபவமும் பக்குவமும் குறைவு என்பதால் அவள் சின்ன தவறு செய்தாலும் அதை பெரிதுபடுத்தி அவளை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்.
இது எல்லாம் சிவக்குமார் கவனத்துக்கு சென்றாலும் கோபாலிடம் அவர் சென்று இதைப் பற்றி கேட்டக்கவில்லை.
ஒரு நாள் கோபால் பூஜாவுக்கு கெட்ட வார்த்தையில்திட்ட அதை சிவகுமாரிடம் அவள் புகார் செய்து விடப்பிரச்சனை பெரிதானது.
சிவகுமார் கோபாலை கண்டித்து வைக்க அவருக்கு பூஜாவின் மேல் மேலும் வன்மம் கூட தொடங்கியது.
சரியான சந்தர்ப்பத்துக்கு காத்துக் கொண்டு கிடந்தவர் அது கிடைக்கவும் அவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டார்.
அன்று கணக்கு முடிக்கும் போது பத்தாயிரம் ரூபாய் அவளின் கணக்கில் குறைவாக இருக்கவும் அவள் தான் அதை திருடி விட்டாள் என்பது போல் கதை கட்டினார்.
சின்ன விஷயங்களை பெரிசு படுத்த வேண்டாம் என்று சிவகுமார் கோபாலிடம் கூறி பத்தாயிரம் ரூபாயை அவரே கொடுத்தார்.
இந்த சம்பவம் நடந்ததிலிருந்து சிவக்குமார் மேலும் கரை வைத்து கொண்டார் கோபால்.
அவளை ஒவ்வொரு முறையும் சிவகுமார் ஏதாவது செய்து காப்பாற்றிக் கொண்டே இருக்க அவர்கள் இருவரையும் பற்றி கேவலமாக மற்றவர்களிடம் கூற கோபாலை யாரும் நம்பவில்லை.
சிவகுமாருக்கும் பூஜாவுக்கும் கூட இப்படி அவர் மற்றவர்களிடம் கூறியது தெரியாது.
இவர்கள் வேலை செய்யும் கிளையில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் அனைவருக்குமே சிவக்குமாரின் தங்கமான குணம் தெரியும் என்பதால் இப்படி கோபால் அவரைப் பற்றி தவறாக பேசியது தெரிந்தால் வருத்தப்படுவார் என்று அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
மற்றவர்களுக்கு கெடுதல் செய்வதில் கவனமாக இருந்த கோபால் தன் வேலையில் கோட்டை விட்டார்.
ஒரு நாள் கணக்கு முடிக்கும் போது ஒரு பெரிய தொகை கோபாலின் கணக்கில் இருந்து காணாமல் போயிருந்தது.
பெரிய தொகை என்பதால் சிவக்குமாரும் சேர்ந்து எல்லா கணக்குகளையும் பொறுமையாய் பார்த்துக் கொண்டிருக்க பணம் கண்டிப்பாக இல்லை என்று தெரிந்ததும் சிவகுமார் கோபாலை எல்லோரின் முன்னாலும் வைத்து திட்டி தீர்த்து விட்டார்.
பெரிய தொகை என்பதால் மேனேஜராக சிவகுமார் கோபாலை எப்படியாவது அந்தப் பணத்தை கொடுக்க கூறினார்.
கோபால் சரியான கஞ்ச பிரபு. ஒரு ரூபாய் செலவு செய்ய ஆயிரம் முறை யோசிப்பவர் அப்படி இருக்கும்போது இந்த பெரிய தொகையை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் விழித்தார்.
வேறு வழி இல்லாமல் சிவக்குமாரின் காலில் விழுந்து, “சார் எனக்காக நீங்க இந்த பணத்தை போடுங்க சார். நான் எப்படியாவது உங்களுக்கு கொடுத்துடறேன்” என்று மன்றாடினார்.
ப்ரியாவின் திருமண செலவுகள் வேறு அதிகமாக இருக்க அதற்கு வேண்டும் என்று எடுத்து வைத்திருந்த பணத்தை எப்படி கொடுப்பது என்று யோசித்தவர், “என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல கோபால். நான் வேணா உங்களுக்கு ஒரு நாள் டைம் தரேன் அதுக்குள்ள செட்டில் பண்ண பாருங்க” என்று தன்னால் செய்ய முடிந்த உதவியை செய்துவிட்டு கிளம்பி விட்டார் சிவக்குமார்.
பூஜாவுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அதை தீர்த்த சிவகுமார் இத்தனை வருடம் தன்னோடு வேலை செய்தும் தனக்காக அவர் ஒன்றும் செய்யவில்லையே என்று கோபாலுக்கு ஆதங்கமாக இருந்தது.
ஒருவழியாக பணத்தை எப்படியோ சேர்த்து மிகப்பெரிய தொகையை சிவகுமாரிடம் கொடுத்துவிட்டார்.
பூஜா சிவக்குமார் இருவரையும் பழிவாங்க பாம்பு போல் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவன் ப்ரியாவின் திருமணத்தில் சிவக்குமார் சந்தோஷமாக இருப்பதை காண சகிக்காது வீட்டுக்கு வந்து மார்ஃபிங் செய்யும் ஒருவனை வைத்து பூஜாவும் சிவகுமாரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஆபாச புகைப்படத்தை உருவாக்கினான்.
இதை யாருக்கு அனுப்புவது என்று கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு திருமண அழைப்பிதழில் மணமகன் சார்பாக இருந்த கைபேசி எண்ணுக்கு புகைப்படம் அனுப்பு முடிவு செய்தான்.
புகைப்படத்தை அனுப்ப போனவன் கைபேசியில் இன்டர்நெட் டேட்டா முடிந்திருக்கவும் உடனே அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து இன்டர்நெட் டேட்டா போட்டுக் கொண்டவன் அங்கிருந்தே புகைப்படத்தை அனுப்பி இருந்தான்.
இதுதான் நடந்தது என்று வாயிலிருந்து ரத்தம் வடிய கூறி முடித்தான் கோபால்.
ஆதித்யன் விசாரித்ததில் நடந்த மொத்த கதையும் கேட்ட அருண் கிருஷ்ணாவை திரும்பிப் பார்த்து, “டேய் கடையில எவன் என்ன செய்றானு பாக்க மாட்டியா” என்று கேட்டான்.
“சார். வேலை செய்வதற்கு தான் சம்பளம் குடுக்குறீங்க எவன் என்ன செய்றான்னு பாக்குறதுக்கு சம்பளம் கொடுக்கவில்லை” என்றான் கிருஷ்ணா குதர்க்கமாக.
“இந்த ஈர வெங்காயம் எல்லாம் நல்லா பேசு” என்றவன் ஆதித்யனிடம் விடைபெற்று கிருஷ்ணாவோடு கிளம்பினான்.
இரவு முழுதும் உறங்காமல் அனைவருமே மருத்துவமனையே கதி என்று கிடக்க விஷயம் கேள்விப்பட்ட கௌதமின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு வந்தனர்.
அருணாவும் ஈஸ்வரியும் தாரணிக்கு தைரியம் கூற சற்று இயல்பாக மாறினார்.
கௌதம் மாமனாரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.
மன அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு என்பதால் அதற்கு மருந்து மாத்திரை மற்றும் நல்ல சுற்றுச்சூழலே குணபடுத்த போதுமானது.
அதை அவருக்கு கொடுத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று மனைவியிடமும் மாமியாரிடமும் கூறியிருந்தான்.
சாதாரணமாக மாரடைப்பு என்றாலே பயப்படுவதற்கு காரணம் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள் என்பது தான்.
ஆனால் சிவகுமாருக்கு வந்திருக்கும் மாரடைப்புக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதே அவர்களை சற்று நிம்மதி அடைய செய்தது.
அரவிந்துக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரியப்பா, பெரியம்மாவை பார்த்துக்கொள்ள வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் எற்பட்டது.
கௌதம் தனது செல்வாக்கை பயன்படுத்தி தாரணியையும் ப்ரியாவையும் மருத்துவமனையில் இருக்கும் விருந்தினர் அறையில் தங்க வைத்தான்.
அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு கிருஷ்ணாவோடு வந்தான் அருண்.
கௌதமை சந்தித்து நடந்ததை கூறினான்.
நேற்று கௌதம் சிவகுமாரின் உடல் நிலையை கவனிப்பதில் பிஸியாக இருந்ததால் யாரிடமும் அலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை.
இப்பொழுது நடந்ததை தெரிந்து கொண்டதும், “ஆனாலும் உன் ராசியை பாத்தியா. தப்பே பண்ணாம அடி வாங்கின” என்று ப்ரியா அடித்ததை பற்றி கூறி கௌதம் சிரிக்க கிருஷ்ணாவும் உதட்டில் விரல் வைத்து நக்கலாக சிரித்தான்.
“எல்லாம் என் நேரம்” என்றவன், “கிளம்புறேன்” என்று கூறி கதிரையில் அமர்ந்து இருந்தவன் எழுந்து நின்றான்.
“வந்தது வந்துட்ட. அப்படியே ப்ரியாவையும் பார்த்து பேசிட்டு போ” என்று வற்புறுத்தி அவனை ப்ரியா இருக்கும் விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.
கௌதமை கண்டு எழுந்து நின்றவள் பின்னால் வந்த அருணையும் கிருஷ்ணாவையும் பார்த்து, “இவங்க ரெண்டு பேருரையும் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க. இவன் மூஞ்சிய பாத்தாலே கோவம் தான் வருது” என்று கூறினாள்.
அருணின் அருகில் இருந்த கிருஷ்ணா அவனின் முகத்தை பார்த்துவிட்டு ப்ரியாவிடம் திரும்பி, “ஆமாம் மேம். லைட்டா அப்புடி தான் இருக்கு” என்றான்.
அவன் முதுகில் ஒரு அடி போட்ட அருண், “எவன் என்னை அசிங்கப்படுத்துவான்னு காத்துகிட்டு இருப்பியாடா?” என்று கேட்க, “பாஸ் அப்படி எல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுக்கு” என்றான்.
“ப்ரியா, உங்க அப்பா போட்டோவ மார்ஃபிங் பண்ணது இவன் இல்ல. உங்க அப்பா பேங்க்ல வேலை செய்றானே கோபால் அவன் தான்” என்று ஆரம்பித்து கெளதம் நடந்ததை கூறினான்.
ப்ரியாவுடன் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தாரணி மற்றும் பூஜாவின் குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகுமாருக்கு மாரடைப்பு வந்திருப்பது கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு சிவகுமாரை காண வந்திருந்தனர்.
“அவனை ஜெயில்ல புடிச்சு போட்டாச்சா” என்று கேட்டார் தாரணி.
“அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க அத்தை. சோ, ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றான்.
கோபாலை ஒரு நாளும் பூஜா இவ்வளவு கேவலமானவனாக இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
அவன் கொடுக்கும் இடைஞ்சல்களை கூட அவள் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டாள். ஆனால், அவனுக்குள் இவ்வளவு வன்மம் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
“கோபால் சார் இப்படி பண்ணுவார் என்று நினைச்சு கூட பாக்கலம்மா. அவருக்கு என்ன பிடிக்காது தான் அதுக்காக இவ்வளவு கேவலமா பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல” என்று கூறி அன்னையை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் பூஜா.
பூஜா அழுவதை பார்க்க அனைவருக்கும் பாவமாக இருந்தது.
“சரி அதுதான் அவனை ஜெயில்ல புடிச்சு போட்டாச்சே அதுக்கு அப்புறமும் எதுக்கு தேவை இல்லாம ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க. கெட்ட கனவா எல்லாத்தையும் மறந்துடுங்க” என்றான் அருண்.
அருணை முதல் முறை பார்ப்பதால் சிநேகமாக புன்னகைத்த பூஜா கண்ணீரை துடைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் ஃபார் யூர் ஹெல்ப்” என்று கூறினாள்.
அவள் கூறியதற்கு தலையை மட்டும் லேசாக அசைத்தான் அருண்.
பூஜாவின் குடும்பம் தாரணி மற்றும் ப்ரியாவிடம் கூறி விடை பெற வாசலை மறைத்தது போல் நின்ற கிருஷ்ணாவும் அருணும் அவர்களுக்கு வழிவிட்டு நின்று கொண்டனர்.
அருணை கடந்து செல்லும்போது பூஜா “பாய்” என்று கூறி சிரித்த முகமாக விடை பெற்றாள்.
அவன் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணா, “நானும் தான் ஹெல்ப் பண்ணினேன். எங்கள எல்லாம் யாரும் பார்த்து சிரிக்க மாட்டேங்கிறாங்க” என்று சலித்துக் கொண்டான்.
கிருஷ்ணாவை பார்த்து முறைத்த அருண், “வர வர உனக்கு வாய் கூடி போச்சு. இரு சித்தப்பா கிட்ட சொல்லி உன் சம்பளத்த கம்மி பண்றேன்” என்றான்.
வாயை சிப் வைத்து மூடுவது போல் செய்கை செய்து அமைதியாக நின்றான் கிருஷ்ணா.
“அப்போ நான் வந்த வேலை முடிஞ்சுது கிளம்புறேன்” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான் அருண்.
அருண் கிருஷ்ணாவுடன் மருத்துவமனை காரிடோரில் நடந்து செல்லும் போது, “அருண் வெயிட்” என்று கத்தும் சத்தம் கேட்டு நடையை நிறுத்தினான்.
ப்ரியா மூச்சிரைக்க ஓடி வந்தவள் அவன் முன் வந்து நின்று, “சாரி அது ஏதோ கோவத்துல தப்பா பேசிட்டேன் மனசுல வச்சுக்காத, மன்னிச்சிரு” என்று கூறினாள்.
முகத்தை கோபமாக வைத்துக் கொண்ட அருண், “எனக்கு மன்னிப்பு எல்லாம் வேணாம்” என்றான்.
அவன் கோபமாக பேசியதும் முகம் சுருங்கி போனது ப்ரியாவுக்கு.
அவளை பார்க்க பாவமாக இருக்கவும், “சார் பாவம் சார். மன்னிச்சிடுங்க” என்று கிருஷ்ணா சிபாரிசு செய்ய,
அவனை முறைத்து பார்த்து விட்டு, “எனக்கு உன் மன்னிப்பு எல்லாம் வேணாம். பிரண்ட்ஸ்?” என்று கேட்டு ப்ரியாவின் முன் கையை நீட்டினான் அருண்.
சந்தோஷத்தோடு அவனின் கையை பிடித்து குலுக்கியவள், “பிரண்ட்ஸ்” என்றாள்.
தொடரும்...