ஜீயோனா
Moderator
அத்தியாயம் 25
அவர்களின் பின்னால் நின்று கொண்டிருந்த கௌதம் வந்து சந்தோஷமாக அருணை கட்டிக்கொண்டு, “நடந்ததெல்லாம் மறந்திடு. இனிமேல் நம்ம எல்லாம் பிரெண்ட்ஸ் ஓகேவா” என்று கேட்டான்.
“அப்ப நானு?” என்று இடையில் புகுந்தான் கிருஷ்ணா.
“நீயும் தாண்டா” என்று கௌதம் கூறிட, “இவன்தான் யாரோ ஒரு பொண்ணு கிட்ட அருண் என்னை லவ் பண்ண ஸ்டோரிய சொல்லிட்டு இருந்தான்” என்று கூறி கிருஷ்ணாவை மாட்டி விட்டாள் ப்ரியா.
“உங்களுக்காக கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சார் கிட்ட கெஞ்சினேனே. இப்படி என்ன மாட்டி விட்டுட்டீங்களே சிஸ்டர்” என்று ப்ரியாவை பார்த்து கூறினான் கிருஷ்ணா.
“டேய். உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று கிருஷ்ணாவை பார்த்து கேட்டான் அருண்.
“அது சார்” என்று தலையை சொரிந்து கொண்டு, “ஒட்டு கேட்டேன்” என்று கிருஷ்ணா கூறிட அவன் மண்டையிலேயே ஒரு கொட்டு வைத்தான் அருண்.
இவர்களின் கலாட்டாவில் அந்த இடமே சிரிப்பில் நிறைந்திருந்தது.
கணவரின் உடல்நிலை சரியாகும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார் தாரணி.
கௌதம் ஆர்த்தியின் வீட்டில் இருந்த தன் பொருட்களை எடுத்துக் கொண்டு பக்கத்து அப்பார்ட்மெண்டில் வைத்தவன் குளித்து உறங்க மட்டுமே வந்து சென்று கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நாளும் ப்ரியா தாரணிக்காக சமைத்து மூன்று வேலையும் மருத்துவமனைக்கு எடுத்து வந்து விடுவாள். சைலஜாவையும் கஜேந்திரனையும் அவ்வப்போவது தன்னோடு சேர்த்து கூட்டிக் கொண்டு வந்து சிவகுமாரை காட்டுவாள்.
அரவிந்தின் நாட்கள் வேலையும் மருத்துவமனையும் என்று சென்று கொண்டிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின் சிவகுமாரின் மருத்துவமனை வனவாசம் முடிவுக்கு வந்தது.
இந்த இரண்டு வார காலத்தில் அவருமே வாழ்க்கையின் முக்கியமான படிப்பினையை கற்றிருந்தார்.
உடலை மட்டும் கட்டுக்கோப்பாக வைத்து எந்தப் பயனும் இல்லை மன ஆரோக்கியமும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டார்.
சிவகுமாரை டிஸ்சார்ஜ் செய்வதற்கான வேலையில் அரவிந்த் அலைந்து கொண்டிருந்தான்.
இந்த இரண்டு வாரத்தில் அஸ்வினைத் தவிர மற்ற அனைவருமே சிவகுமாரை பார்க்க வந்து நலம் விசாரித்து விட்டு சென்றிருக்க அதை ப்ரியாவின் வீட்டார் பெரிது படுத்தவில்லை.
சிவகுமாரின் அறையில் வெளியில் சக்கரவர்த்தியின் முழு குடும்பமே கூடி இருக்க அவ்வழியாக வந்த கௌதம், “நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?” என்று முழு குடும்பத்தினரையும் பார்த்து கேட்டான்.
“அவங்கள நான் தான் வர சொன்னேன்” என்று அவனின் பின்னால் அஸ்வினின் குரல் கேட்டது.
“நீயா… எதுக்கு வர சொன்ன?” என்று கேட்டான் கௌதம்.
“காரணமா தான்” என்று கூறி அனைவரையும் அறைக்குள் அழைத்து சென்றான்.
அவர்களுடன் சேர்ந்து கௌதமும் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ள அறைக்குள் நுழைந்தான்.
திடீரென அனைவரும் வந்திருப்பதை கண்ட தாரணி, “வாங்க” என்று மரியாதையாய் அழைத்தார்.
ப்ரியாவும் எல்லோரையும் பார்த்து, “வாங்க மாமா, வாங்க அத்தை” என்று கூறியவள் அஸ்வினை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வீட்டுக்கு செல்ல தயாராகி கட்டிலில் அமர்ந்திருந்த சிவகுமார் மட்டும் அஸ்வினை பார்த்து, “வா ப்பா” என்றார்.
அவரை பார்த்து லேசாக புன்னகை சிந்தியவன், “எப்படி இருக்கீங்க அங்கிள்” என்று கேட்டான்.
“இப்ப பரவால அஸ்வின். நல்லா இருக்கேன்” என்று கூறினார்.
அறையை சுற்றி ஒரு பார்வை பார்த்த அஸ்வின் “அரவிந்த் எங்க?” என்று தாரணியை பார்த்து கேட்டான்.
எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என்று
அஸ்வின் கையைப் பிடித்த கௌதம், “இப்ப என்ன பண்ண போற. அரவிந்த எதுக்கு தேடுற?”என்று கேட்டான்.
“அவன் டிஸ்டார்ஜ் பண்ற ஃபார்மாலிட்டி செய்ய போயிருக்கான்” என்று கூறினார் சிவகுமார்.
தாரணி அவனிடம் பேசவில்லை என்றதும் தானே பதில் கூறியிருந்தார் அவர்.
“ஏன் ஆன்ட்டி என்கிட்ட பேச மாட்டீங்களா” என்று அஸ்வின் கேட்டதும், “இல்ல தம்பி அப்படியெல்லாம் இல்ல” என்றார்.
“அப்போ உங்களுக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லை. அப்படித்தானே” என்று கேட்டான்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தாரணிக்கு உண்மையிலேயே விளங்கவில்லை.
ப்ரியாவின் பக்கம் திரும்பியவன், “ப்ரியா வேலை எல்லாம் எப்படி போகுது” என்று கேட்டான்.
அஸ்வினின் அருகில் ஒரு பக்கம் ஆராதனா இன்னொரு பக்கம் ஸ்ரேயா நின்றிருந்தனர்.
இருவரின் முகத்திலும் கலவரம் தெரிய தன்னால் பிரச்சனை வந்ததாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தவள், “நல்லா போகுது”என்று கூறினாள் ப்ரியா.
அஸ்வின் அறைக்குள் நிற்பதை கண்ட அரவிந்த் உள்ளே நுழைந்து, “இப்ப என்ன பிரச்சனை பண்ண வந்திருக்க?” என்று கேட்டான்.
“பிரச்சனை பண்ண வரல. மன்னிப்பு கேட்க வந்து இருக்கேன்” என்று தன்மையாக சொன்னான் அஸ்வின்.
அவனை நம்பா பார்வை அரவிந்த் பார்க்க “நீ வர வரைக்கும் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று கூறியவன் சிவகுமாரை நெருங்கி வந்தான்.
நொடியும் யோசிக்காமல் அவரின் காலில் விழுந்து, “என்னை மன்னிச்சிடுங்க அங்கிள். உங்களை தப்பா பேசினதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்”என்று கூறினான்.
அவன் காலில் விழுந்ததுமே பதறிய சிவகுமார், “தம்பி நான் அதெல்லாம் எப்பயோ மறந்துட்டேன் எலும்புங்க” என்று அவனை எழுப்ப அவர் முயற்சி செய்ய அவனே எழுந்து நின்றான்.
“அன்னிக்கு ஏதோ புத்தி இல்லாம பண்ணிட்டேன் அங்கிள். அதுக்காக நீங்க என்னை அடிச்சா கூட நான் வாங்கிக்கிறேன். என்னை மன்னிச்சிடு ப்ரியா. அரவிந்த் நீயும் என்னை மன்னிச்சுடு” என்று ஒவ்வொருவரையும் பார்த்து கூறினான்.
அஸ்வின் பேச்சிலேயே தெரிந்தது அவன் ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்கிறான் என்று.
“நான் மன்னிப்பு கேட்க நினைக்கும் போது தான் அங்கிளுக்கு ஹார்ட் அட்டாக் என்று சொன்னாங்க. அவர் சரியாகுற வரைக்கும் வெயிட் பண்ணி மன்னிப்பு கேட்கலாம் என்று நினைச்சேன். மத்தபடி நான் என் தப்ப எப்பயோ ரியலைஸ் பண்ணிட்டேன்” என்று தன் கரங்கள் இரண்டையும் கூப்பி சிவகுமாரையும் அவரின் குடும்பத்தையும் பார்த்து கூறினான்.
ப்ரியாவால் உடனே அவனை மன்னிக்க முடியவில்லை. ஆனால், அரவிந்த் அஸ்வினை கட்டியணைத்து, ”பரவால்ல. நானும் என்ன விட வயசுல மூத்தவர சட்டைய புடிச்சு சண்டைக்கு போய் இருக்க கூடாது” என்று கூறினான்.
சொந்தங்கள் சேரும்போது மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏது?
அரவிந்த் கார் ஓட்ட அவன் அருகில் அமர்ந்திருந்தான் கௌதம். பின் சீட்டில் ப்ரியா தாரணி சிவக்குமார் அமர்ந்திருந்தனர்.
மருத்துவமனையில் இருந்து கார் வெளியே விதிக்கு வந்ததும் சிவக்குமார், “அரவிந்த், கார சம்பந்தி வீட்டுக்கு விடு. ப்ரியாவை நம்மலே அவ புகுந்த வீட்ல விட்டுட்டு வந்துடலாம்” என்று கூறினார்.
தாரணிக்கும் அதுவே சரி என்று பட, “ஆமாங்க நல்ல முடிவு எடுத்தீங்க” என்றார்.
ப்ரியா அதற்கு ஏதோ கூற வரவும் அவளை முந்தி கொண்ட கௌதம், “இப்ப எதுக்கு மாமா. நீங்க சரியானதும் பாத்துக்கலாம்” என்று அக்கறையோடு கூறினான்.
“எடுக்க வேண்டிய ரெஸ்ட் எல்லாம் எடுத்துட்டேன் மாப்பிள்ளை. இனிமே தான் எனக்கு நிறைய கடமைகள் இருக்கு. அதை நான் சரியா செய்யணும்னு நினைக்கிறேன். நீங்க இதுக்கு எந்தமறுப்பும் சொல்லாதீங்க, ப்ளீஸ்” என்று கூறியதும் அதற்குப் பின் யாரும் வாய் திருக்கவில்லை.
வாசலில் ஈஸ்வரி அருணாவோடு ஆராத்தி எடுத்து தன் சின்ன மருமகள் ப்ரியாவையும் செல்ல மகன் கௌதமையும் உள்ளே அழைத்து வந்து சாமி அறையில் ப்ரியாவை விளக்கேற்ற வைத்தனர்.
மாலையில் எல்லாருடைய கண்ணிலும் மண்ணைத் துவி விட்டு மனைவியை தனியாக கடத்திக்கொண்டு வந்துவிட்டான் கௌதம்.
அறையில் அவனின் அணைப்பில் இருந்த ப்ரியா, “அரேஞ்ச் மேரேஜ்லயே இவ்வளவு பிரச்சனை வருதே… அப்போ லவ் மேரேஜ் பண்றவங்க எல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ” என்று கூறினாள்.
“இப்போ லவ் மேரேஜ், அரேஞ்ச் மேரேஜ் பத்தி பட்டிமன்றமா நடத்த வந்தோம். கல்யாணமாகி மூணு வாரத்துக்கு மேல ஆச்சு. இப்படி தனியா கூட்டிட்டு வந்தது உன் கூட பேச்சு வார்த்தை நடத்தறதுக்கா” என்று கூறியவன் அவளின் இதழை முற்றுகை யிட்டான்.
அங்கே முத்த யுத்தம் தொடங்க மெல்ல இருவரும் இல்லற வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைத்தனர்.
காதல் கடல் அலைகள் போன்றது எல்லா அலைகளும் கரையை சேர்வது இல்லை.
வாழ்வில் இருவரும் தங்களுக்கான துணையை தேடும் பயணத்தில் உள்ளங்கள் அலைபாய்ந்திருந்தாலும் கடைசியில் தங்களுக்கான கரையை கண்டடைந்து விட்டார்கள்.
முற்றும்