priya pandees
Moderator
அத்தியாயம் 1
"யாரும் பாத்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு குடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பணியும் பத்திக்கிச்சே. கண் மொறச்சி போறபுள்ள, முன்னழச்சது யாருமில்ல உன்மனசில் தான் விழுந்தேன் நானும் தங்கிடவே"
அந்த உடற்கூறு வகுப்பறையில், இளைய மருத்துவர்கள் சுற்றி நிற்க, நடுவில் இறந்த உடலை வைத்து, அதன் முன் நின்று, "த்ரி டிஸ்லொகேஷன்ஸ், தேட்டிஸ் ப்ராக்சர்ஸ், ரிசெங்க்சன்ஸ், டேமேஜஸ்" என கையில் கத்தியோடு பாடமெடுத்துக் கொண்டிருந்தவனின் குரலை மீறிக் கொண்டு அலறியது அவன் மாமன் மகளின் கைபேசி.
பல்லை கடித்து, கத்தியை நங்கென்று பக்கத்திலிருந்த ட்ரேயில் வைத்தவன், முன்னிருந்த பிணத்திலிருந்து பார்வையை திருப்பாமலே, "வருணி!" என அவள் பெயரை கடித்து குதறினான். அவனுக்கு தெரியுமே, அவன் முன் அவளை தவிர இவ்வளவு அலட்சியமாக செயல்பட இங்கு யாருக்கும் வராது என்று.
"எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக" என அது இன்னும் பாடிக் கொண்டிருக்க, எங்கிருந்து அது கத்துகிறது என மாட்டியிருந்த மருத்துவ பயிற்சி அங்கி குள்ளெல்லாம் பரபரப்பாக தேடிக்கொண்டிருந்தாள் அந்த வருணியாக அழைக்கப்பட்ட யாஷின் மாமன் மகள், தற்போதைய தற்காலிக மனைவி. அதாவது, சுருக்கமாக இந்திய பிரதமர் ஆரோனின்(கரைவேட்டிக்காரனின்) மகள்.
"இடியட் வருணி!" என அவன் இன்னும் பல்லை கடிக்க, அங்கிருந்த ஆங்கிலேய மாணவர்கள் வருணியின் செயலில் யாஷிற்கு பயந்து சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு நின்றனர். அவர்களும் ஆறு மாதங்களாக இவ்விருவரையும் பார்த்து கொண்டு தானே இருக்கின்றனர். அவர்கள் வகுப்புகளில் இவள் ஏதாவது செய்வதும் அதற்கு அவன் கெட்டவார்த்தை இல்லாத குறையில் திட்டுவதும் தானே நடக்கிறது.
அதுமட்டுமின்றி அவர்களின் டாக்டர் யாஷ் கோவம் கொண்டு நிற்கும் ஓரே இடம் என்றால் அது வருணியாக தான் இருக்கும். அது அவர்களுக்கு மட்டுமில்லாமல் அந்த மருத்துவமனை வளாகத்திற்கே தெரியும். மற்ற எல்லோருக்கும் யாஷ் மென்மையானவன், அன்பானவன், திறமையானவன் என்றால் வருணிக்ஷாவிற்கு மட்டும் கொடுமைக்காரன், அகம்பாவம் பிடித்தவன், திமிரெடுத்தவன், ஆணவம் பிடித்தவன் என நிறையவே அடுக்குவாள் அவள்.
"சாரி சார் எப்டி ஆன் ஆச்சுன்னு தெரியல" என நிஜமாகவே பதறி தான் பையினுள் துலாவி தேடிக்கொண்டிருந்தாள். அவள் மட்டும் வேண்டுமென்றேவா அவனிடம் வம்பிழுக்கிறாள்! அவள் கிரகம் தானாகவே அவளை அவனிடம் எவ்வாறேனும் கோர்த்துவிட்டு விடுகிறது.
"தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்த திக்குதம்மா
நெஞ்ச பூட்டி வச்சத
வந்து ஒடச்சிக்கமா"
"உன் பல்லத்தான் உடைக்க போறேன். ஷட் யுவர் ப்ளடி ஃபோன்" என கண்ணை இறுக மூடி திறந்து, "ஜஸ்ட் அவுட் வருணி" என்றான் அவ்வளவு அரட்டலுடன். இன்னும் அவள் முகம் பார்க்க திரும்பவில்லை. திரும்பி பார்த்தால் திட்டும் மனநிலை சென்றுவிடும் என நினைத்தானோ என்னவோ. அவனுக்கு பின் நின்றவளை தலையை மட்டுமே ஒருபக்கம் பார்த்தவாறு தான் திட்டிக்கொண்டிருந்தான். அப்படியிருந்தும் அவளின் சுருட்டை முடி அவனை 'வா வா' என்று தான் அழைத்தது.
"ப்ளீஸ் மாமா! இதோ ஆஃப் பண்ணிட்டேன்" என்றவள் மேலும் அது பாடும் முன் கைபேசியை எடுத்து அணைத்திருந்தாள். அவள் வகுப்பு துடங்கும் முன்னர் ரீல்ஸ் பார்த்துவிட்டு வைத்திருக்க, இவன் வரவும் அப்படியே அணைத்து தோளில் மாட்டியிருந்த பையினுள் போட்டிருந்தாள். இப்போது பேனாவை தேடி பையினுள் கைவிட்ட பொழுது அவள் பெருவிரல்ரேகை பட்டு அது தன்னை திறந்து கொண்டது. ஏற்கனவே பாதியில் நின்றதால் தொடர்ந்து கத்தவும் தொடங்கி விட்டது.
அவள் மாமாவில் தான் பட்டென்று திரும்பி அவளை முறைத்து பார்த்தான், "வெளியே போன்னு சொன்னேன் வருணி. டிஸ்பிளின்னா என்னன்னு கத்துக்கிட்டு இனி என் செஷனுக்கு நீ வந்தா போதும். உனக்கு ஒவ்வொரு தடவையும் அதுக்கும் சேர்த்து என்னால க்ளாஸ் எடுக்க முடியாது. யூ ஆர் ஸ்பாய்லிங்க் அவர்ஸ் டைம்ஸ் ஆல்சோ. கெட் அவுட்" என்றான் இன்னுமே அழுத்தமாக யாஷ்.
அதற்கு மேல் நிற்காமல் ஒரு நொடி தன் பார்வையை சுருக்கி அவனை மட்டும் முறைத்தவள், வாயை கோனித்து காண்பித்து வெடுக்கென்று வெளியே வந்தாள், "ட்ரென்டுலயும் இருக்குறது கிடையாது, இருக்கவங்களயும் கண்டாலே ஆகாது. சரியான காட்டுவாசி. ஈசியா எடுக்குற விஷயத்துக்கு தான் ஆ, ஊன்னு பேசி சீன் போடுவாரு டாக்டர் தொரை. இவங்க டைம்ம நாங்க அப்படியே சாக்கடைல கொட்டி வேஸ்டாக்கிட்டோமாம். எங்கையோ வேற கிரகத்துல பிறந்துருக்க வேண்டியதெல்லாம் இங்க வந்து பொறந்துட்டு நம்ம உசுர வாங்குது. இப்ப பாரு நாந்தான் மாட்டிட்டு அவஸ்த படுறேன்? இங்க ஒரு மூஞ்ச காட்றது வீட்ல வந்து ஒரு மூஞ்ச காட்றது, சரியான கேமீலான். உன்ன யாரு எனக்கு மாமனா என் வீட்ல வந்து பொறக்க சொன்னது. போடா இவனே" என திட்டிக்கொண்டே அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீன் வந்து தொப்பென்று அமர்ந்தாள். அவனுக்கு பின் பத்து ஆண்டுகள் கழித்து அவனுக்காகவே அந்த வீட்டில் பிறந்தவள் அவள். அதை அவளுக்கும் அவனிடம் புரிய வைக்க தெரியவில்லை, அவனும் புரிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை. ஆனாலும் இன்று இருவருக்கும் இடையில் ஒரு பலமான உறவு, அதில் பின்னி பிணைந்து இருந்தாலும் முட்டலும் மோதல்களும் கூட ஏராளமே!
அவளின் பனிரெண்டு வயது வரை, அவளது உடன்பிறப்புகளும் அவனது உடன்பிறப்புகளும் என எல்லோரும் ஒரே அறைக்குள் கொட்டம் அடித்தவர்கள் தான். இவர்களுக்கு தலைமையே யாஷ் தான். இப்போது வரையிலும் சிறுவர்களுக்குள் பஞ்சாயத்து என்றால் அவனுக்கு தான் அழைப்பு வரும், பொறுமையாகவே எடுத்து பேசி புரியவைத்துவிடுவான். அவனது பொறுமையை சோதிக்கும் ஒரே ஆள் அவன் மனைவி மட்டுமே. அதனால் அவனது சோதனை முழுவதும் அவளிடம் மட்டுமே.
எதையும் அவள் நினைத்து விட்டால் அது அப்படியே நடந்துவிட வேண்டும் என அடம்பித்து சாதித்து கொள்ளும் வருணி. சேட்டை, குறும்பு, கலகலபேச்சு என அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் யாஷ். இவர்கள் இருவருக்கும் சிறுவயதிலிருந்தே ஏகத்துக்கும் முட்டிகொள்ளும்.
அவன் மேல்படிப்பிற்கு வெளிநாடு சென்றபிறகே அவர்கள் சண்டை கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தது.
வருணி, அருணேஷ், லெனின், மான்வி, யுவன், ஷபானா இவர்கள் அனைவரும் தான் அவ்வீட்டின் இளைய வாரிசுகள். இவர்களுக்கு அதிக இடைவெளியில், அதாவது மூத்தவர்கள் வருணி, அருணேஷ் இருவருக்கும் கூட பத்து வருடங்களுக்கு மூத்தவன் என அவ்வீட்டின் மூத்த வாரிசு தான் யாஷ்.
ஆரோன் நான்சி பிள்ளைகள் நால்வர். வருணி, அருணேஷ் இரட்டையர்கள். அடுத்து இரண்டு வருட வித்தியாசத்தில் லெனின் அடுத்த இரண்டு வயது வித்தியாசத்தில் மான்வி.
யுவன், ஷபானா இருவரும் ஆரோனின் தங்கை, ப்யூலா சலீம் பிள்ளைகள். யாஷின் தம்பி மற்றும் தங்கைகள்.
யாஷின் மருத்துவ பட்டபடிப்பு கல்லூரி இறுதிவரை இவர்களை மேய்க்கும் பொறுப்பு யாஷினுடையதாக இருந்தது. வருணியின் பனிரெண்டு வயதின் பின் மேல்படிப்பிற்காக அமெரிக்கா வந்த யாஷ் நான்கு வருடங்களுக்கு மேலாக அங்கேயே இருந்துவிட்டான். அதில் வருணியின் ஆதிக்கம் இங்கு வீட்டினுள் அதிகம் தான் ஆகியிருந்தது.
அவளின் பதினாறு வயது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவன் இந்தியாவிலேயே வேலை பார்க்க துவங்கியிருக்க, அவனை அதிகம் கவர்ந்தாள் வருணி. கடந்த நான்கு வருட இடைவெளி இல்லாமல் இருந்திருந்தால் அவன் மாமன் மகள் பெரிதாக அவன் கண்ணை கவர்ந்திருக்க மாட்டாளோ என்னவோ, முக்கிய பருவ வயதில் காணாமல் இருந்து விட்டு மீண்டும் காணவும், அவன் கண்ணில் குளிர்ச்சியாக தான் விழுந்தாள். அவன் வயதும் பெண்களை கண்டு மயங்கும் வயது தானே! ஆனால் வீட்டினுள் இருக்கும் மாமன் மகளை பார்ப்பது அவனுக்கே தவறாக பட்டது. மனம் அல்லோலப்பட படிப்பிற்காக அமெரிக்கா கிளம்ப இருந்தவளை அவனே பெரிய கல்லாக போட்டு நிறுத்தி வைத்தான்.
அவன் தெற்கே என்றால் இவள் தென்மேற்கு என்பாள். அவளை செய்ய வைக்க வேண்டியதை கணித்து அதற்கு எதிர்ப்பதமாக செய்ய சொல்லி ஏற்றிவிட்டு தங்களுக்கு ஏதுவாக செய்ய வைத்து கொள்வதில் வல்லவர்கள் இருவர் மட்டுமே. முதலில் அவள் அப்பா அடுத்ததாக அவள் மாமன் யாஷ். பதினெட்டு வயதில் அவளை மருத்துவ படிப்பில் சேர வைக்க வேண்டும் என ஆரோன் நினைத்து, "உனக்கு டாக்டர்லாம் சரிபட்டு வராதுடா, நீ பேசுற வாய்க்கு லா படி, அப்பாக்கும் ஹெல்ப்பா இருக்கும்" என சொல்லிவிட,
"நோ ப்பா. ஏன் என்னால டாக்டர் ஆக முடியாது? அந்த சிடுமூஞ்சியே டாக்டரா உக்காந்துருக்கும் போது, பேஷன்டோட இயல்பா பேச முடியுற நா ஆக முடியாதா? நா டாக்டர் தான் ஆகுறேன்" என கூறிவிட்டாள்.
அவளை ஆரோன் அமெரிக்கா அனுப்பி படிக்க வைக்க நினைக்க, யாஷ் அப்போது இந்தியாவில் தானே இருந்தான், அவள் போவதை தடுக்க நினைத்தவன், "இங்க இருந்தா மாமா சப்போர்ட்ல நீ பரீட்சையே எழுதாம பாஸாகிடலாம் அங்க போனா படிக்கணும். கஷ்டப்பட்டு படிக்கணும் யோசிச்சுக்கோ. ஆனாலும் அமெரிக்கா மாதிரி வராது என்ஜாய் பண்ணு" என்றுவிட,
"நா இந்தியால தான் படிக்கிறேன். நா ஒரு இந்திய ப்ரஜை. இந்தியால தான் படிப்பேன். சொந்தமா படிச்சு டாக்டராகி உன் மகன் மூஞ்சில முன்ன நீட்டிட்டு நிக்கிற அந்த மூக்குக்கு ஆப்ரேஷன் பண்ணி, பொடப்பா இருக்குறத மொத வேலையா குறைக்கிறேன் அத்த. அப்றம் சப்ப மூக்கு டாக்டர்னு கிண்டல் பண்றாங்கன்னு வந்து என்ட்ட புலம்ப கூடாது நீ. அதான் முதல்லயே சொல்லிட்டேன்" என ப்யூலாவிடம் வீரவசனம் எல்லாம் பேசி தான் அங்குள்ள கல்லூரியில் சேர்ந்தாள். ஆனால் பரீட்சைக்கு முந்தைய நாள் புத்தகத்துடன் அவன் முன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமரும் பொழுதுகளில், பாவமே பார்க்காமல் வறுத்தெடுத்து பலிவாங்கிவிடுவான் அவன்.
இதில் அவள் கல்லூரி சென்றபிறகு அவள் இளமையாக இன்னும் அழகாக அவன் கண்களுக்கு தெரிய துவங்க, மிரண்டு மீண்டும் அமெரிக்கா சென்று அமர்ந்து கொண்டான் யாஷ். அவளிடம் இருக்கும் போது பார்வையை சும்மா எனினும் கூட வேறு பக்கம் திருப்ப முடியாது போனது அவனுக்கு. மற்ற பெண்களை பார்ப்பதை போல இது இல்லை என புரிய துவங்கவுமே அடித்து பிடித்து ஓடிவிட்டான் அமெரிக்காவிற்கு.
மறுபடியும் மூன்று வருடங்களுக்கு ஊர் பக்கம் வராதவனை, அவள் தான் வரவழைத்ததும், ஆறு மாதத்திற்கு முன்பு அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதும். திருமணம் செய்த கையோடு அவன் மீண்டும் கிளம்ப, "நானும் வருவேன்" என உடன் கிளம்பி வந்ததோடு, அங்கு மருத்துவராக பணி செய்ய வாங்க வேண்டிய சான்றிதழுக்காக அவன் கீழேயே இப்போது ட்ரைனியாக இருக்கிறாள். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்கு இருவரும் முட்டி கொள்வதும் முகத்தை திருப்பி கொள்வதும் தொடர்ந்தவண்ணமாக தான் இருக்கிறது.
ஏதேதோ யோசிக்க துவங்கிய மனதை இழுத்து நிறுத்தி தலையை தாங்கி அமர்ந்தவள், அடுத்த நொடி எழுந்து சென்று சாப்பிட ஆர்டர் கொடுக்க நின்றாள். ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும் அவள் கோபத்தை உணர்ந்தவன் போல் சரியாக அழைத்துவிட்டான் அவளுடன் ஒட்டி பிறந்தவனான அருணேஷ். கடந்த ஆறுமாதமாக இந்திய அமெரிக்க தூதுவனாக இருப்பவன் அவனே!
அவன் அழைப்பை ஏற்றவாறு, "ஒரு ஃபுல் பார்பிக்யூ" என இங்கு ஆர்டர் கொடுத்து விட்டு, "சொல்லு அரு" என்றாள் அங்கு ஃபோனில் எரிச்சலோடு.
"ரொம்ப நல்ல மூட்ல இருக்கன்னு தெரியுது. மாமாக்கு சேதாரம் கம்மி தான?" என்றான் அவன்.
"ஹேரு! ஏன்டா என் வாய கிளறுர? அந்த காட்சில்லாக்குலாம் இந்த ஜென்மத்துல எந்த சேதாரமும் வராது. அவர்ட்ட திரும்ப திரும்ப போய் முட்டி முட்டி மோதுறேன்ல இங்க முகர வீங்குறதெல்லாம் எனக்கு தான்டா எரும" என கத்தினாள்.
"காட்சில்லா தான் வேணும்னு போய் அவர் இடுப்புல ஏறி உக்காந்தது நீ தான?"
"நாந்தான் நாந்தான்! இப்ப அத சொல்லி காட்டத்தான் ஃபோன் பண்ணியா நீ?" அவள் கத்தியதை, பிரதமர் மாளிகையில் மாடி பால்கனியில் மொத்த குடும்பமும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். ஆரோனும் அமைதியாக மகளின் குரலையும் பதிலையும் தான் கேட்டிருந்தார்.
இதற்குள் அங்கு அவள் ஆர்டர் செய்த உணவு வந்துவிட, வாங்கிக் கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தவள் வேகமாக உண்ண துவங்கிவிட, அந்த பக்கம் அருணேஷ் அவன் போக்கில் அவளை கலாய்த்து பேசி மனநிலையை சரிசெய்ய முயன்று கொண்டிருந்தான். அதிக கோபம், அதை காட்ட முடியாத நேரத்தில் இவ்வாறு பிடித்ததை வாங்கி உண்டு அதை சமன்செய்து கொள்வது அவள் பழக்கவழக்கங்களில் ஒன்று.
"நீ அங்க ஹை ப்ரஷர்ல போறனாலே எனக்கு இங்க மணி அடிச்சு தொலைச்சுடுது உன்ன யாரு என் கூடவே பிறந்து தொலைய சொன்னது? லெவின் மான்வி மாறி லேட்டா பொறந்துருக்கலாம்ல?" என அப்பாவின் மீது பார்வையை வைத்தே வளவளத்துக் கொண்டிருந்தான் அருணேஷ்.
"நீ கேர்ளா பிறந்து நா பாயா பிறந்து உன்ன இந்த மாமன்ட்ட அல்லோல பட விட்ருக்கணும்டா அப்ப தெரிஞ்சுருக்கும் என் கூட பிறந்ததோட அருமை என்னன்னு" என்றவள், "ஆனா ரெண்டு என்ன நாலஞ்சு வருஷம் கூட லேட்டா பிறந்துருந்தா நல்லாத்தான் இருந்துருக்கும்" என பெருமூச்சோடு சொல்ல,
"கூடவே தான்டா பொறப்பேன் என்னடா பண்ணுவன்னு சண்டைக்கு வர்ற ஆளுட்ட இவ்வளவு மாற்றமா? அடேங்கப்பா தாலி கட்டின கணவர் மேல ஓவர் லவ்ஸாகி போச்சு போலயே? சரி அது அவர் விதின்னு விடுறேன். இப்ப அங்க என்ன பிரச்சினை?"
"தெரிஞ்சு? வந்து தீத்து வைக்க போறியா?"
"தீர கூடியதா அது? ஆறுமாசமா தீராமலே தான இருக்கு? நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்னுன்ற மாதிரி, திடீருன உனக்கு ஏன் அவர்மேல லவ் வந்தது, அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஏன் நின்ன நீ?" என்றான் ஆர்வமாக. அவனும் எப்படி எப்படியோ கேட்டு தான் பார்க்கிறான் யாஷ் மேல் கடுப்பில் இருக்கும் போது கூட வாயை திறந்து காரணத்தை துப்ப மாட்டேன் என்கிறாள் அவன் உடன்பிறப்பு.
"போடா இப்ப ரொம்ப முக்கியமா அது?" என அவள் கடுப்பாக சொல்லவும்,
"அப்பா இனியும் வெயிட் பண்ண முடியாதுன்னு சொன்னாரு. மாமாவ உன்னால சரி சொல்ல வச்சிட முடியுமா முடியாதா?"
"ரொம்ப பண்றாருடா அவரு"
"அப்ப வேணாம்னு விட்டுடேன். பிடிக்காத மனுஷன ஏன் போட்டு தொங்குற?"
"அவருக்கு பிடிக்கலன்னு உனக்கு தெரியுமா?" காட்டமாக ஆரம்பித்தவள், "உங்கட்ட சொல்ல மாட்டேங்குறாரு அரு" என்றாள் பாவமாக.
"ஏன் சொல்ல மாட்டேங்குறாரு? நீ தான் இதையே சொல்ற. ஆனா அவர்ட்ட அப்பா கேட்டதுக்கு. நீங்க அவள கூட்டிட்டு போங்க, என் கமிட்மென்டயும் சேர்த்து கெடுக்குறான்னு சொல்லிருக்காரு"
"அப்பாட்டயே சொல்லிட்டாராமா?" என வெகுண்டாள்.
"ஆமா அதான் அப்பா உன்ட்ட பேசணும்னு சொன்னாங்க. உன் டாக்டர் லைசன்ஸ் ப்ராக்ரெஸ் ஆகிடுச்சுல்ல? ட்ரைனிங் போனா போகுதுன்னு அப்பா சொல்லிட்டாரு. இனி நீ எங்க வேணா வேலை பாக்கலாம். அங்கேயே தான் பாக்கணும்னு கட்டாயம் இல்லையாம். சோ உன்ன இந்தியா கூப்பிட்டுக்க ப்ளான் பண்றாங்க"
"அப்போ மாமா?"
"லூசு அவர உன்ட்ட இருந்து காப்பாத்த தானே இவ்வளவும்?"
"வந்தேன்னா விஷ ஊசி தான்டா உடன்பிறப்பே?" என அவள் கத்த,
"அவருக்கு ஜாப் அங்க தான? எப்டி வருவாரு? நீ இங்க வந்துரு தூரத்துல இருந்தா மனைவி மேல பாசம் பொங்கி அவருக்கும் உன் மேல லவ் மூட் ஸ்டார்ட் ஆனாலும் ஆகிடும்" என உடனே மாத்திக் கொண்டான்.
"லூசாடா நீ? அந்த மனுஷன கிட்ட இருந்தே கரெக்ட் பண்ண முடியல அங்க வந்து காக்கா விரட்டவா நானு?"
"நீ என்னத்த வேணாலும் விரட்டு ஆனா இங்க வந்து விரட்டு. மாமாக்கு ப்ரைவசி வேணுமாம். அவங்க ஃப்ரீடம் போகுதாம் நீ அங்க கூடவே இருந்து டார்ச்சர் பண்றியாம். அவர் லைஃப்ப அவரு பீஸ்ஃபுல்லா வாழணுமாம்"
"அவரே சொன்னாரா இதெல்லாம்?" என்றவளுக்கு அழுகையை கஷ்டப்பட்டே அடக்க வேண்டியிருந்தது. சிக்கன் கண்ணாபின்னாவென வாயில் அறைபட்டது.
"அவர் இன்னும் டார்க்கா சொன்னாரு. நா டிசென்டா உனக்கு அத கன்வே பண்ணிட்ருக்கேன்" என்றான் நக்கலாக அருணேஷ்.
"அரு!" என அதட்டினார் நான்சி.
"அப்பாட்ட பேசுனது உனக்கெப்டி தெரியும்?" என்றாள் நான்சியின் குரலும் கேட்பதால், அப்பா நிச்சயம் அங்குதான் அமர்ந்திருக்கிறார் என புரிந்தே.
"ஹால்ல உட்கார்ந்து ஸ்பீக்கர்ல தான் பேசுனாரு. எல்லாருக்கும் தெளிவா கேட்டுச்சு"
"இப்பவும் எல்லாரும் கேட்டிட்டு தான இருக்கீங்க?" என இன்னும் சூடானாள்.
"வருணி?" என்றார் ஆரோன்.
"நோப்பா. மாமாவ விட்டுட்டு வரமாட்டேன் விட்டும் குடுக்க மாட்டேன். ப்ளீஸ் என்ட்ட அத மட்டும் சொல்லாதீங்க" ஆரோன் ஆரம்பிக்கும் முன்பே முந்திக்கொண்டாள்.
மெல்ல சிரித்து தாடியை கோதி கொடுத்த ஆரோன், "ரைட். உன்னோட ப்ராக்டீஸ் செஷன் முடிய இன்னும் டூ மந்த்ஸ் இருக்கு, அதுக்குள்ள அவன உன்ன அக்ஷப்ட் பண்ண வைக்கிற, இல்லனா அவன டிவோர்ஸ் பண்ணிட்டு வேற லைஃப்புக்கு நீ ரெடி ஆகணும்"
"அப்ப மாமா?"
"அவனுக்கு அவன் லைஃப்ப வாழ்ந்துக்க தெரியும் வருணி. ஃப்ரம் பெர்த் யாரையும் டிப்பன்ட் பண்ணாம வாழ பழகிட்டவன் அவன். அவன அவனே பாத்துப்பான். உனக்கு அவன் வேணும் நீ சொல்ற மாதிரி அவனும் நீதான் வேணும்னு சொல்லணும் வருணி. லைஃப் நீங்க ரெண்டு பேரும் விளையாண்டு பாக்றதுக்கில்ல" என முடித்துவிட்டு எழுந்துசென்றுவிட,
"கிளம்பி வா வருணி. மாமாக்கு வேற ஒரு பொண்ண புடிச்சுருக்காம். நீ தான் அவர விடாம டார்ச்சர் பண்ணுறியாம் அதனால அவர் லவ்வர் கூட ஒரு அவுட்டிங் கூட போக முடியாம கஷ்டப்படுறாராம்" என்றான் லெனின் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
மற்றவர்களும் ஆளுக்கொன்றை சொல்லி அவளை உசுப்பேற்றிவிட்டே அழைப்பை நிறுத்தினர். இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும் அமெரிக்காவில் பயிற்சி பெற்ற சான்றிதழ் வாங்கினால் மட்டுமே அங்கு பணிபுரிய முடியும். அந்த பயிற்சியில் தான் வருணி தற்போது அங்கிருக்கிறாள். பரீட்சை எழுதிவிட்டால் சான்றிதழ் கிடைத்துவிடும். அதை வாங்கி கொண்டு வேலையில் சேர்ந்து விடலாம்.
வருணி அந்த முயற்சியில் இருக்க, அவளை இந்தியாவிற்கே கிளப்பும் முயற்சியை விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவள் மாமன் யாஷ்.