தயங்கியபடி விஹான் அறைவரைக்கும் வந்துவிட்டாள் பிரணவிகா. இது அவளுக்குப் பழக்கப்பட்ட விஷயம் தான் ஆனாலும் தயக்கம் அவனைத் தனிமையில் சென்று பார்க்க. டிசெக்ஸன் ஹாலுக்குள் வொயிட் கோட் இல்லாமல் சென்று முதன் முதலில் அவனிடம் வந்து நின்றாள்.
அப்புறம் காலெஜ்க்கு ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஃபிரி ஹேர் விட்டு அடிக்கடி ப்ரொபஸர்களிடம் மாட்டிக் கடைசியாக மீண்டும் விஹானிடம் வந்தாள்.
அவளது ரெகார்ட்களை ஜூனியர்களிடம் கொடுத்து எழுதவைப்பாள், அது வழக்கமாக நடப்பது தான். ஆனால் அந்த ஜூனியர் பொண்ணு ஒரு பேராசிரியர் பொண்ணு என்பதை அறியாமல் அவளை மிரட்டி ரெக்கார்ட் எழுதக்கூற, அவளோ அவள் தகப்பனிடம் கூறி மீண்டும் விஹான் அறைக்கு வந்தாள்.
இதுவே தொடர்கதை ஆனது. ஆனாலும் அவள் குறும்பு செய்வதை நிறுத்தவும் இல்லை, விஹானிடம் மாட்டாமல் தப்பிக்கும் வழியையும் அறியவில்லை, விளைவு மாதம் ஒருதரம் விஹானிடம் சென்று வாங்கிக் கட்டிக்கொண்டு வருவாள்.
என்ன தான் அவனுக்கு அவளைப் பிடிக்குமென்றாலும் கல்லூரி விஷயத்தில் தப்பு செய்தால் கண்டிக்காமல் இருக்க மாட்டான். இன்று ஒருபடி மேல் சென்று கல்லூரி பேராசியரிடமே வம்பு வளர்க்கும் நிலைக்கு வந்துவிட்டாள். அதை அப்படியே விடக் கூடாது எனத்தான் நேரில் அழைத்துவிட்டான்.
வந்துவிட்டாள்.. வாசலில் காத்திருந்தாள் ஆனால் அவனோ அவளை அழைக்கவில்லை. அவன் அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில், கண்காணிப்பு கேமரா மூலமாக அவள் வெளியில் நிற்பதை பார்த்தும் உள்ளே அழைக்கவில்லை.
அவனறைக்கு அவன் அழைக்காமல் யாரும் செல்ல முடியாது. அவன் அறை வாயிலில் காத்திருந்தால் கேமரா மூலம் பார்ப்பவன் அவனாகப் பெல் அடித்தால் மட்டுமே பியூன் மட்டும் உள்ளே செல்வார். அவரிடம் விசாரித்துவிட்டு தான் பியூன் மூலம் காத்திருப்பவர்களை உள்ளே அனுமதிக்கப்படுவார்.
அந்த சுரேகா மேடம் இன்னமும் உள்ளே அமர்ந்து இருந்ததால் பிரணவிகாவை அழைக்கவில்லை. அவரோ அவள் அன்று செய்ததை இஞ்ச் இஞ்சாக, விளாவரியாக, தெளிவாகப் படம்பிடித்து காட்டியது போலக் கூறிக் கொண்டிருந்தார். அவரைச் சமாளித்து வெளியே அனுப்பும் முன் அவனுக்குத் தான் கடுப்பாகிவிட்டது.
வெளியில் வந்த அந்த மேடமோ இவளைக் கர்வமாக ஒரு பார்வை பார்த்து முறைத்துவிட்டு சென்றார். அவர் செல்லவும் சிறிது நேரத்தில் அவனறையிலிருந்து பெல் அடித்தது. பியூன் தான் உள்ளே சென்றார், அவரிடம் பிரணவிகாவை உள்ளே அனுப்புமாறு கூறினான் விஹான்.
பின் தயங்கி தயங்கி அவன் அறைக்கதவை ஒரு முறை தட்டிவிட்டு, உள்ளே சென்றாள் பிரணவிகா. அவனோ அவன் மடிக்கணினியில் மும்மரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவளை நிமிர்ந்தும் கூடப் பார்க்கவில்லை.
அவளுக்குத் தான் படபடவென வந்தது. அவனைக் கண்டாலே பாத தூரம் ஓடுபவளுக்கு அவனுடன் ஒரே அறையில் இருவர் மட்டும் தனியாக இருக்க வியர்த்து வடிந்தது. கைக்குட்டையால் துடைத்தபடியே நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
“நகத்தைக் கடிக்காத” என உறுமலாக வந்தது வார்த்தை. பட்டெனக் கையைக் கீழே இறக்கிவிட்டாள்.
“வெல்” என லேப்டாப்பிலிருந்து கண்களை நிமிர்த்தியவன் அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். முட்டி வரைக்குமான ஒரு டாப், கீழே வழக்கம்போல ஜீன்ஸ். அவன் பார்வை போன இடத்தைப் பார்த்து மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள். அந்தக் கல்லூரியில் ஜூன்ஸ், லெக்கின்ஸ் தடைசெய்யப்பட்ட உடைகள்.
மெல்ல கண்களை மேலேற்றினான் நாகரீகமாகத் தான் இருந்தது அந்த வெள்ளை நிறத்திலான டாப் ஆனால் ஆசைகொண்டவன் கண்களுக்கு அழகான விருந்து தான், லஜ்ஜை இல்லாமல் பார்த்தான். அவன் பார்வையில் அவள் தான் நெளிந்தாள்.
மேல் வெள்ளை நிற கோட்டை இன்று மறவாமல் போட்டிருந்தாள். கழுத்தில் ஸ்தெஸ்ஸை காணவில்லை. அவன் கேட்கும் முன்பே “பேக்கில் இருக்கு” எனப் பதிலைத் தானாகவே கூறினாள். இப்போது தான் அவன் பார்வை அவள் முகத்துக்கே வந்தது.
இயற்கையாகவே சிவந்த உதடு, ஆனாலும் அதில் மெல்லிய உதடுச்சாயம் அவனைச் சுண்டி இழுத்தது. காலையில் பார்த்த தம்பியின் முத்தக்காட்சியின் தாக்கத்தால் கூடுதலாக அவனை இம்சித்தது.
கூர்நாசி, அதற்கு மேல் பட்டாம்பூச்சி போலப் படபடவெனப் பயத்தில் அடித்துக்கொண்டிருந்த விழிகள். வரைந்து வைத்தது போலப் புருவம். பிறை நெற்றியில் முத்து முத்தாக வியர்வை பூத்திருந்தது. கூந்தலை மொத்தமாக வாறி ஹைபோனிடெய்ல் போட்டிருந்தாள்.
இஞ்ச் இஞ்சாக அவளை ரசித்தான். எதுவுமே பேசவில்லை. அவளுக்கும் என்னவெனக் கேட்கத் தயக்கம். சுரேகா மேடத்தைப் பார்த்ததிலேயே அவளுக்குத் தான் தெரியுமே எதற்காக அழைத்தானென, அதனால் தானாக வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டாமல் அமைதியாய் நிற்க, அவன் பார்வை வேறு அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.
மெதுவாக எழுந்து வந்தான். அவன் எதாவது கேட்டால் கூடச் சமாளித்து விடலாமென நினைத்தவள் அவன் எழுந்து வரவும் அடித்துவிடுவானோ எனப் பயந்து பின்னாலே செல்ல அவனும் முன்னேறிக்கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்துவிட அவளை நெறுங்கி நின்றான். நூலளவு தான் இடைவெளி இருக்கும். அவன் தோள் அளவுக்கு இருப்பவள் கொஞ்சம் பலமாக மூச்சுவிட்டால் கூட அவள் மார்பு அவன் வயிற்றை தீண்டிவிடும்.
ஆசைப்பட்டவளுடன் இத்தனை நெருக்கம் அவனைப் பாடாய் படுத்தியது. அதுவும் அவளின் கண்கள் பட்டாம்பூச்சிக்கு போட்டி தான். சாதரணமாக ஒரு நிமிடத்தில் 15 முறை சிமிட்டும் கண் இப்போது 30முறை சிமிட்டும் போல. படபடத்தது அவளின் கண். அதில் முத்தமிட துடித்தது அவன் இதழ்.
சுதாரித்து மெல்ல குனிந்து அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றவன் “சுரேகா மேடம் கிட்ட என்ன சொன்ன?” எனக்கேட்டான்.
“அ.. அது தெரியாம”
“என்ன சொன்ன?” என மீண்டும் கேட்க, பதிலில்லை அவளிடம்,
“என்னை கரெக்ட் பண்ணிட்டனு சொன்னியாமே? எப்படி கரெக்ட் பண்ணுன?” எனக் கேட்க, அதிர்ந்து விட்டாள்.
“இல்ல நான் அப்படி சொல்லல” என்றாள் பதட்டமாக, அவள் பதட்டத்தை ரசித்தவன், மீண்டும்
“எப்படி கரெக்ட் பண்ணுனனு சொல்லு”
“நிஜமா அப்படி சொல்லல” எனக்கூறினாள். அவனுக்குத் தான் அவள் என்ன கூறினாள் என்று தெரியுமே ஆனாலும் வேண்டுமென்றே தான் இப்படி கேட்டான்.
“பொய் சொல்லாத.. என்னை எப்படி கரெக்ட் பண்ணினனு.. இப்போ திரும்ப கரெக்ட் பண்ணி காட்டு” எனக்கேட்க, அவளுக்குக் கை, கால் எல்லாம் வெட வெடவென நடுங்கியது.
“கம்மான் எப்படி கரெக்ட் பண்ணுன? நீ எப்படி என்னை கரெக்ட் பண்ணினனு தெரிஞ்சா தான இனிமேல் யாரும் என்னை கரெக்ட் பண்ணிடாம என்னை ப்ரட்டெக்ட் பண்ணிக்க முடியும்” என்றான் வெகுசீரியஸாக.
“அய்யோ! அப்படிலாம் நான் சொல்லவே இல்ல”
“அப்போ எப்படி சொன்ன?” எனக்கேட்க,
“அது.. அவங்க தான் நான் உங்கள கரெக்ட் பண்ண அடிக்கடி உங்க ரூம்க்கு வரேனு சொன்னாங்க”
“உண்மை தான நீ தான் அடிக்கடி என் ரூம்க்கு வர”
“இல்ல நான் கரெக்ட் பண்ணலாம் வரல.. மாட்டிக்கிட்டு திட்டுவாங்க தான் வரேன்” என்றாள் ஸ்ருதியை குறைத்து.
“சரி. அத விடு. அதுக்கு நீ என்ன சொன்ன?”
“அது.. அது எ.. எனக்கு உ.. உங்களை க.. கரெக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லனு சொன்னேன்”
“ஓஹ் அப்புறம்?”
“முடிஞ்சா உங்கப்பாவ கரெக்ட் பண்ணுங்கனு.. ஸாரி தெரியாம அப்படி சொல்லிட்டேன். மாமாகிட்டயும் சாரி சொல்லிட்டேன்”
“ஓஹ்.. அப்போ என்ன கரெக்ட் பண்ணனும்னு உனக்கு அவசியம் இல்ல.. அப்போனா என்னை ஏற்கனவே கரெக்ட் பண்ணிட்டனு மீனிங்ல தான சொல்லிருக்க? ரைட்..” என்றானே பார்க்கலாம்.
“அச்சோ இல்ல”
“அப்போ நிஜமாவே உனக்கு என்னை கரெக்ட் பண்ணனும்னு அவசியம் இல்லையோ?”
“ம்ம்”
“அதெப்படி நீ சொல்லலாம்? இப்போ நீ என்னை கரெக்ட் பண்ற” எனக்கூற ஞே என முழித்தாள்.
“எப்படி கரெக்ட் பண்ணுவ என்னை? கட்டிப்பிடிப்பியா?” எனக்கேட்டு இறுக அணைக்க, அரண்டுவிட்டாள்.
“முத்தம் கொடுப்பியா?” எனக்கேட்டு அவள் உதட்டை நோக்கிச் செல்ல, சுதாரித்தவள் அவனைத் தள்ளிவிட்டாள். அவளைச் சீண்டுவதற்காகத் தான் உதட்டருகில் சென்றான் ஆனால் முத்தமிட்டுருக்க மாட்டான் தான் ஆனால் அவளாகத் தள்ளிவிட்டதும் சட்டெனக் கோபம் வந்துவிட்டது.
கோபத்திற்கான காரணம் அவனுக்கே தெரியவில்லை. சாதாரணமான எந்த ஒரு பெண்ணும் தன்னிடம் இப்படி அத்துமீற வருபவனிடம் செய்யும் செயல் தான் இது. ஆனால் அதை அவள் தனக்கு செய்தது கோபம்.
அவள்மேல் அவனுக்கு மலையளவு காதல் உள்ளது தான் ஆனால் அதை அவன் முறையாக அவளிடம் ஒருமுறை கூட வெளிப்படுத்தவில்லையே! அப்படியிருக்க அவள் மனம் என்னவெனத் தெரியாமல், அவன் மனதையும் அவளுக்குத் தெரிவிக்காமல் இப்படி செய்தது அவன் தவறு தான். ஆனால் மனித மனம் தன் தவறை என்றுமே உணராதல்லவா! அதனால் அவள்மேல் தான் கோபம் வந்தது அவனுக்கு.
அதில் கோபமாக “இடியட்” எனக்கூறி அவன் இடத்தில் சென்று அமர்ந்தான். அவளோ வெளவெளத்து போனாள்.
“இப்போ தெரியுதா? வாயில வந்ததெல்லாம் பேசினா என்ன நடக்கும்னு.. ஒழுங்கா போய் அந்த மேம் கிட்ட சாரி சொல்லு.. இனிமேல் எதுலயாவது சிக்கி என் ரூம் குள்ள வா மொத்தமா முடிச்சுவிட்டுருவேன் பார்த்துக்கோ” எனக்கூற சளேரென நிமிர்ந்தாள்.
“டி.சிய கிழிச்சு கொடுத்துருவேனு சொன்னேன். அவுட்” எனக்கத்த தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மூச்சுவாங்கினாள். அவளுக்கு ஆசுவாசமாக நேரம் தேவைப்பட்டது.
அவள் வெளியேறி வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்து படபடவெனத் துடித்த இதயத்தின் மீது கையை வைத்துப் பிடித்திருப்பதை பார்த்தவனுக்கு தன் தவறு கொஞ்சமேனும் உரைக்கவும் ‘அதிகமாக சீண்டிவிட்டோமோ’ என நினைத்து ‘கூப்பிட்டு சாஃப்ட்டா சொல்லலாம்’ என நினைத்தவன் மீண்டும் மணியை அடித்தான்.
இங்கு அமர்ந்திருந்தவளோ எங்கே அவன் திரும்ப அழைத்து விடுவானோ எனப் பயந்து எழுந்து ஓட்டம் பிடிக்கலானாள் அதில் சிரித்துக்கொண்டிருக்கும்போது பியூன் வந்தார். அவன் சிரிப்பதை அதிசயமாகப் பார்த்தவரிடம் “தண்ணீ கொண்டுவாங்க” எனக்கூறி அனுப்பிவிட்டவன் அவன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
பின்னங்கால் பொடனில அடிக்க கேண்ட்டீன் நோக்கி ஓடிவந்தாள் அங்கு அவளுக்காகவே காத்திருந்தாள் சாத்விகா.
“ஏண்டி இப்படி ஓடி வர?”
“ஒன்னுமில்லடி சும்மா தான்”
“லூசு.. சரி.. சார் எதுக்கு கூப்பிட்டார்?” எனக்கேட்க, ஒட்டிப்பிறந்தவளாகவே இருந்தாலும் அவளுடன் இதைப் பகிற விரும்பவில்லை. எப்படி பகிர்வாள்? திடீரென அவன் கட்டிப்பிடித்து, முத்தமிட வந்தது அவளுக்கே அதிர்ச்சி தான்.
“ஒன்னுமில்ல எப்பவும் போல தான் திட்டினார்”
“நீயும் திருந்த மாட்ட.. அவரும் விட மாட்டார்.. என்னண்டோ போங்க” என வாங்கிவச்ச டீயைக் குடித்தாள். இவளும் டீயைக் குடிக்க, பல குழப்பம் அவளுள்.
‘எப்போதும் திட்டுவார் ஆனால் இப்படி பண்ண மாட்டாரே ஆனா ஏன் இன்னைக்கு இப்படி பண்ணிட்டார்? கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ? போவோம் என்னப் பண்ணிடுவார்’ என நினைத்தவள் மீண்டும் ‘ம்கூம் வேணாம் வேணாம் அடக்கியே வாசிப்போம். இன்னைக்கே இதயம் வெளிவந்து லப்டப்புனு அடிச்சுச்சு.. இன்னொருக்கா இப்படி நடந்தா வெடிச்சிடும்’ என நினைத்தவளுக்கு ஒன்று மட்டும் தோனவே இல்லை.
தனக்கு உரிமையானவள் என்ற எண்ணத்தால் மட்டுமே விஹான் அவளிடம் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறான். ஏன் சாத்விகாவிடம் கூட அவன் எட்ட தான் நிற்கிறான். தன்னிடம் மட்டும் அவன் காட்டும் நெருக்கம் அவன் காதல் என்பதை மட்டும் உணரவில்லை.. இல்லை இல்லை உணர மறுக்கிறாள். அவனைக் காதல் என்னும் வட்டத்திற்குள் கொண்டு வர அவள் மனம் அனுமதிக்கவே இல்லை.
காரணம் அவள் எதிர்பார்ப்பு. அவள் எதிர்ப்பாப்போ கதைகளில் வரும் கனவு நாயகன்.. பிரின்ஸ்.. அவளை இளவரசியாக நினைத்துத் தலையில் தூக்கி அமர்த்த வேண்டும் என்ற நினைப்பு. ஆனால் நிதர்சனம் வேறு என்பது அந்தச் சின்ன சிண்டுக்கு புரியவில்லை. கனவுலக நாயகனைத் தேடி கண்முன் நிற்கும் நிஜத்தை காண மறுக்கிறாள்.. உணர மறுக்கிறாள்.. ஏற்க மறுக்கிறாள்.
அவனுக்கோ வெளிப்படையாக அவன் காதலை உணர்த்த தெரியவில்லை. வார்த்தைகளில் தேன் தடவி, நிகழ்வுகளில் வண்ணம் பூசி, அவளைக் கொண்டாட தெரியவில்லை. அவளை இராணியாக நடத்த தெரியவில்லை ஆனாலும் அவன் காதலும் குறைந்ததில்லை. என்றாவது ஒரு நாள் அவனின் காதல் அவளுக்குப் புரியும்.. எல்லா நாட்களும் ஒன்றுப்போல் இருக்காதல்லவா!
ஆனால் அந்த நாளில் இவன் காதலை அவள் உணரும்போது எந்த நிலையில் இருப்பாளோ? உணர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பாளோ? சிறகை விரித்துப் பறந்து இன்றைய கனவைத் தேடி அலையும் இந்த கிளி நிஜத்தை கிரகிக்க முடியாமல் சிறகு ஒடிந்து வீழ்ந்து விட்டால்? தன் இரட்சக கரங்களால் அணைத்து பிடித்துக் காப்பானா? இல்லை ராட்சசனிடம் தவறவிட்டு துடிப்பானா?
*******
தன் முன்னால் இருந்த போட்டாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யான்ஷ்.
“இது தான் அவன் குடும்ப போட்டோ சார். இது பெரியப்பா சி.எம்”
“தெரிஞ்சதயே சொல்லாத.. அதுக்கா இவ்ளோ காசு கொடுத்து உன்னை இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண சொன்னேன்?”
“சாரி சார். இது அவனோட பெரியம்மா. இவங்க பேர்ல தான் ஷரா காஸ்மெடிக்ஸ் இருக்கு. விஹான் ஜஸ்ட் ஆக்ட்டிங் ஃபவுண்டர்”
“வாவ்..” எனக் கல்பனாவின் முகத்தில் வட்டமிட்டான்.
“இது விஹான் அம்மா. பேமஸ் அட்வகேட்”
“ஓஹ் வீட்டுலயே வக்கீல் வச்சிருக்கானுங்களா!”
“இது அண்ணன் உங்களுக்குத் தெரியும் கடலூர் கலெக்டர் இது அவர் வைஃப் சென்னை கலெக்டர் இப்போ மெட்டர்னிட்டி லீவ்ல இருக்காங்க. இது விஹான் அப்பா. இது தம்பி.. பெரியப்பா கூட இருக்கார்”
“உஸ்.. ஒரு சி.எம், ஒரு வக்கீல், இரண்டு கலெக்டர்னு வீட்டுலயே அத்தனை பேர் இருக்குறதால தான் அவனுக்கு அவ்ளோ திமிரு.. நெக்ஸ்ட்” எனக்கேட்க,
“அவனுக்குத் தாய்மாமா இருக்கிறதா சொன்னாங்க ஆனா அவங்க வேற வேலை, வேற இடம், ரொம்ப கனெக்ஷன் கிடையாது” என அவன் குடும்ப மொத்த வரலாற்றையும் சூர்யான்ஷ்க்கு முன் கடைபரப்பி வைத்தான் அந்த டிடெக்ட்டிவ்.
“கல்பனாவை தவிற ஒரு இன்பர்மேஷனும் சரியில்லையே! இன்னும் கொஞ்சம் டீப்பா இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணுங்க இன்குளூடிங் அவன் தாய்மாமா ஃபேமிலி” எனக்கூறியவன் கல்பனாவின் முகத்தைச் சுற்றி மீண்டும் மீண்டும் வட்டமிட்டுக் கொண்டே இருந்தான்.
தொழிலில் மட்டுமே நட்டத்தை ஏற்படுத்தியவனை அண்ணனும் தம்பியாகச் சேர்ந்து தூண்டி விட்டு இன்று அவன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டான். இவனால் குடும்பத்திற்கே ஆபத்தா? அல்லது கல்பனாவுக்கு மட்டும் ஆபத்தா?
அவன் வட்டத்திற்குள் இருக்கும் கல்பனாவை காப்பானா விஹான்? தன் தாயை ஆபத்தில் சிக்கத்தான் விடுவானா ஷிம்ரித்? உயிரான பெரியம்மா மீது கழுகின் பார்வை பட்டதை அறிவானா விராஜ்? பொறுத்திருந்து பார்ப்போம்.