என் புருஷனோட உணர்வுகளோட விளையாடிய உன்னை, சாகு வரைக்கும் மன்னிக்க மாட்டேன். நீ நினைக்கலாம், உலகம் முழுக்க அவருக்கு நீ தண்டோரா போட்டு வாங்கி வச்ச இந்த பேரு அவரையும், என்னையும் சிதைச்சிடும்னு. எங்க ஒத்த முடியக் கூட அது அசைக்காது.
இந்த உலகம் சொல்லத் தேவையில்லை. அவர் என்னோட வாழ்கிற வாழ்க்கை போதும், எங்க காதலைச் சொல்ல. இதுக்கு மேலயும் இதோ நிற்கிறாரே, இவருக்காக நான் உன்கிட்ட பேசினாலோ, இல்ல எங்க காதல உன் கிட்ட சொன்னாலும், அந்த காதலுக்கே மதிப்பில்லை.” என்றதும்,
அதுவரை அமைதியாகக் கேட்டவள் ரௌத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லையை கடக்க, சாத்வியைத் தாக்க..
“ஏய்ய்...!” என்று அருகே நெருங்கவும் அரவிந்தன் மீண்டும் ஒரு அறை விட்டான். அந்த அறையில் அவளை இருகரம் தாங்கியது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியில், சயத்தா இங்கே வருவதற்கு முன் கொடுத்த தகவலின் பெயரில், உள்ளே வந்து அவளைத் தாங்கிக் கொண்டாள், வர்ஷா.
அவள் தோற்றத்தை முன்பு அவர்கள் கண்ட சர்வாவின் தோற்றத்துக்கு இணையாகக் கண்டதும், வீட்டில் இருந்தவர்களின் முகம் அருவருப்பை பிரதிபலித்தது.
அதை எல்லாம் சட்டை செய்யாது, சாத்வியைப் பார்த்தவள்...
“உங்கள நான் பாராட்டுகிறேன். அது எதுக்குனா? எவன் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். என் புருஷன பத்தி எனக்கு தெரியும்னு சொன்னீங்க பார்த்தீங்களா, அந்தக் காதலுக்கு. ஆனா.. என்னோட சாயா மேல கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. சீ இஸ் மை கேர்ள்.”
“பாவா!” அவள் கதறவே, அவளை கையணைப்பில் வைத்தவள்...
“தப்பு தான், என் தப்பு தான்! உன்னை கம்பெல் பண்ணி குழந்தைக்காக இங்க அனுப்பி வச்சது என் தப்பு தான். இப்ப சொல்றேன், பேபி. இனி நமக்கு இவங்க யாருமே தேவையில்லை.
எனக்கு என் ஃபேமிலியும், உனக்கு உன் ஃபேமிலியும் தேவையில்லை. நாம இங்கேயும் இருக்க வேணாம். இந்தியாவிலும் இருக்க வேணாம். இந்த நாட்டை விட்டே போயிருவோம்.”
அங்கிருந்தவர்கள் யாரும் தடுக்கவும் இல்லை. அவளோடு வாதம் செய்யவும் இல்லை. ஏனெனில் அங்கு பேச வேண்டிய அத்தனையையும் சாத்வி பேசி விட்டாள்.
தன் சகோதரனுக்காக ஆத்விக்கால் கண்ணீர் வடிக்கவே முடிந்தது.
ராகவியோ துவண்டு போனாள். அத்தனை பேரும் ஒவ்வொரு எண்ணத்தில் நொடிந்து போக. வர்ஷா சயத்தாவோடு வெளியே செல்ல, எத்தனிக்கவும்.
அவர்களைத் தடுத்த அரவிந்தன்...
“சயத்தா, போகும்போது உங்க அம்மாவையும் உன்னோட கூட்டிட்டு போ.”
“அர்வி!” அவள் திகைத்துப் போய்...
“நான் எப்படி என்னை, என்னை நீங்க.” திணற.
“நீதான் அவளோட போகணும். அவளோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம். சர்வாவோட இந்த நிலைமைக்கும், நீ தான் காரணம். அன்னைக்கு சொன்னியே, தாலியை கழட்டிட்டு என் பொண்ணோட போயிருவேனு. ஆனா, நான் தாலியை கேட்க மாட்டேன். உன் பொண்ணோட போக தான் சொல்றேன். எப்ப என் மனசு உன்ன மன்னிக்கணும்னு தோணுதோ, எப்ப என் மனசு உன் தவறுகளை சகிக்கணும்னு தோணுதோ, அப்போ உன்ன அழைச்சிக்கிறேன்.”
“அரவிந்தா, இது பெரிய முடிவு.”
“அகி, அவ தப்பு செஞ்சுட்டா தான். அதுக்கு இந்த முடிவு சரி இல்ல.. இல்லனு நீ நினைக்கலாம். பட் சில காயங்களுக்கு மருந்துண்டு. சில காயங்களுக்கு மருந்து இல்லை. சில காயங்களுக்கு வலிக்க, வலிக்க தான் மருந்து போடணும். தவறு செய்யும் போது, அவ மகளுக்கு வலிக்கல. மகளுக்கு துணையாக இருக்கும் போது அவளுக்கு வலிக்கல, ஆனா.. இப்ப மட்டும் கஷ்டமா இருக்கா. அனுபவிக்கட்டும் அகி. அப்போதுதான் மத்தவங்களோட துன்பம் என்னன்னு அவளுக்கும் தெரியும்.”
என்றவன் மனைவியை கண்டால் உடைந்து விடுவோமோ என்று அஞ்சி, திரும்பி நின்று கொண்டான். தான் செய்த தவறுக்கு, இதுதான் தண்டனை என்று எண்ணியவள், சயத்தாவோடு அவ்விடம் விட்டு அகல நினைக்க,
அவர்களை தடுத்து நிறுத்தியது..
“சயத்தா!” சர்வேஷின் அழைப்பில், அத்தனை பேரும் அதிர்ந்து பார்க்க,
சயத்தாவை நோக்கிச் சென்றவன்...
“விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.”
அவள் திகைத்து அதிரவும்...
“நீ எனக்கு செஞ்சது பாஸிங் க்ளவுட்ஸ். இதுல என்னோட ஈகோ என்னோட மனசு எல்லாமே அடிபட்டுச்சு தான். ஆனால், என் பொண்டாட்டியோட லவ்வுக்கு முன்னால, அதெல்லாம் பெருசா தோணல.
அதேசமயம் நீ கொடுத்த அசிங்கங்களை மறக்க முடியாமல், நானும் தவறு செய்தேன். என்னோட பிழைகளோட தான் என்னை பிடிச்சிருக்குன்னு என் பொண்டாட்டி சொன்னா. அப்படிப்பட்ட அவளோட காதல் பெருசுனா, உன்னோட காதலுக்காக நீ எனக்கு செஞ்சத நான் மன்னித்து விடுறேன்.
இனி துரோகம் செய்யாத. எஸ் எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் தான்! பட் அந்த லவ் ட்ரு லவ்வா இருக்கணும். இனி, நீ வாழு உனக்காக வாழு. உன் காதலுக்காக வாழு. உங்க ரெண்டு பேரையும் உங்க காதலையும் ஏற்றுக் கொள்கிற இடத்தில, உங்களுக்கான ஒரு வாழ்க்கை வாழுங்க.”
சயத்தா வெட்கித் தலை குனிய, சாத்வியின் கண்களில் கணவனின் குணத்தைப் பார் என்ற கர்வம் துளிர்த்து நின்றது என்றால்,
அத்தனை பேரும் அரக்கனென்று எண்ணியவனின் இனிய குணத்தில் திகைத்தனர்.
அக்கண்யனுக்கோ, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இவன் என் மகன் என்று உரக்கக் கத்தத் தோன்றியது. வந்தவளோ.. சயத்தாவோடும் கவிதாவோடும் அங்கிருந்து செல்ல..
அவர்களை நெருங்கிய ஜனனி, அவன் முகத்தை மெதுவாக வருடிக்கொண்டு...
“எனக்கு மிகப்பெரிய கர்வம் உண்டு சர்வா! உங்க அப்பாவ என்னளவுக்கு யாரும் காதலிக்க முடியாதுனு, உங்க அப்பாவோட காதல விட, பெரிய காதல் உலகத்திலேயே இல்லைனு, எங்கள மாதிரி ஒரு காதலர்கள் இருக்கவே மாட்டாங்கன்னு மிகப்பெரிய கர்வம் உண்டு.
ஆனா.. அந்தக் கர்வம் இன்னைக்கு என் புள்ள கிட்ட, என் மருமகள் முன்ன உடைஞ்சிடுமோனு பயமா இருக்கு.
உங்க அப்பா சொல்லுவாரு. அப்போ, அப்போ நீ அக்கண்யனோட ஜனனினு. அப்போ எல்லாம் திமிரா நெஞ்ச நிமிர்த்திக்க தோணும். ஆனா இப்ப தோணுது, இந்த சர்வேஷோட அம்மானு ரொம்ப, ரொம்ப திமிராச் சொல்லணும்னு தோணுது.”
சாத்வியின் முகத்தை வருடியவள், “என்னோட... ரெண்டு பிள்ளைகளையும் வேற வீட்டுக்கு கொடுத்தேன். ஆனால், கடவுள் அந்தக் குறையை ஆயிரம் மடங்கா நிவர்த்தி செய்ய, மூனு தேவதைகளை கொடுத்திருக்கிறார். அதோ அங்க நிற்கிறாளே.”
ஆத்விக்கின் கையணைப்பில் அழுது கொண்டிருந்த ராகவியைக் காட்டி..
“அவளோட குடும்பமே தவிச்சுகிட்டு இருந்துச்சு. அப்பக் கூட நியாயம் இந்தப் பக்கம்னு நினைத்து எங்க கையை இறுக்கிப் பிடிச்சுகிட்டு நின்னா.. இதோ என் பிள்ளைக்கான நியாயத்தை மூன்று வருஷம் கழிச்சு நீ செஞ்சிட்ட. ஒரு அம்மாவா இன்னைக்கு தான், எனக்கு நிஜமா பெருமையா கர்வமா இருக்குடா.”
அவள் நெற்றியில் முத்தமிட்டு...
“என் பிள்ளைங்க எல்லாம் நல்லா இருப்பீங்க.”
அரவிந்தனும் அவர்களை நெருங்கி...
“அப்பவும் சரி இப்பவும் சரி, இந்த சர்வேஷை நான் சந்தேகப்படவில்லை. ஏன்னா... நீ என் அக்கண்யனோட புள்ளடா. அவன் இரத்தம் தப்பு செய்யாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீ இனியாவது இந்த மாமாவோட பேசுவியா...”
உருகிப் போய் கேட்ட அரவிந்தனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான், சர்வேஷ்.
அக்கண்யனோ...
“அரவிந்தா, கவிதா விஷயத்துல யோசிக்கக் கூடாதா?”
“இல்லடா! என்னோட இத்தனை வருஷக் காதல, இத்தனை வருஷ திருமண வாழ்க்கை தந்த அழகான உறவை உடைச்சுட்டா. அவ தப்பு பண்ணும் போது, என்னை ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சி இருக்கணும். யோசிக்கல. அப்போ.. என் மேல அவ வச்சிருக்க நேசத்திற்கு என்ன மதிப்பு. அவளை பிரிந்து இருக்கிறது, எனக்கும் வலி தான். ஆனால் என் மகளோட கொஞ்ச நாள் இருக்கட்டும். அந்த மகள் வாழ்கிற வாழ்க்கையைப் பார்க்கட்டும்.
அப்போதான் இப்படி ஒருத்தனுக்கு துரோகம் செஞ்சத நினைச்சு, நினைச்சு அவ வருந்துவா. என்னாலையும் அவ இல்லாம ரொம்ப நாள் இருக்க முடியாது. கண்டிப்பா என்கிட்ட கூப்பிடுவேன். அதுவரைக்கும் வருண் பார்த்துக்குவான்.”
“நான் பார்த்துகிறேன், மாமா. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. எதுவும்னா உங்களத்தானே தேடி வர போகிறோம்.”
அவனும் சாத்வியின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்துவிட்டு அரவிந்தனோடு அகல,
அக்கண்யன் மகனின் தோளில் தட்டி விட்டு, அவனும் ஜனனியை தன்னோடு கூட்டிச் சென்றான்.
சர்வேஷூம் சாத்வியை மெதுவாக அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தவன், எதுவும் பேசாது அமைதியாக அமர...
“என்ன புருஷ்!”
“வலிக்கனும்டி.”
அவன் கண்களில் தோன்றிய பரிதவிப்பை... அவள் நேசத்தோடு பார்க்க...
“ஹூம்.. வலிக்க, வலிக்க வேணும்.”
அவள் இரு கரங்களை விரிக்க, அந்த கரங்களுக்குள் புகுந்தவன், அவளது வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு மௌனம் காத்தான். சில துளிகளை மௌனத்தில் கரைத்தவன்.
“நீ என் உயிருனு சொல்ல மாட்டேன். ஆஃப்டர் ஆல் ஒரு ஹார்ட் அட்டாக் வந்தா போகக்கூடிய இந்த உயிர் தானா என்னோட காதல். ப்ச்.. இந்த உயிர் கூட என் காதலை, உன்னோட காதலை அளக்க முடியாது.
“சரி..”
“ உனக்கு ப்ரபோஸ் பண்ணத் தோணல.”
“பண்ணாதீங்க. யாருக்கு வேணும் அந்த ப்ரபோசல்.”
இதழ் பெரிதாக விரிய, சிரித்துக் கொண்டே..
“அப்படியே இந்த நெஞ்சக் கிழிச்சு உன்ன வச்சுக்கிட்டா என்னனு தோணுது.”
“ம்ச்.. வாய்ப்பில்லை புருஷ். இப்போ, நான் கொஞ்சம் பெரிய உருவம்.”
“இப்படி குதர்க்காமல் பேசுற வாயக் கடிச்சு வைக்கணும்னு தோணுது.”
“அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு, புருஷ்!”
அவனும் அவளோடு சேர்ந்து சிரிக்க, கணவனை ஆழமாகப் பார்த்த சாத்வி.
“வலிக்க வைக்கணுமா.”
“ஹம்..”
“வைச்சுங்கோங்க.”
முகம் நிறைந்த பரவசத்தோடு, அவளை கைகளில் ஏந்தியவன் மஞ்சத்தில் கிடைத்தி, பெண் மலரில் மது உண்ணத் தொடங்கினான்.
கண்ணீர் காதலின் முதல் அங்கீகாரம், என்றோ ஒருநாள் கவிஞன் சொன்னதை நிஜமாக்கிக் காட்டினான். அவன் கண்ணீர் துளிகள் கர்ப்பிணியின் வெற்று மேனி எல்லாம் தீர்த்தமாகத் தெளிக்க முத்தமிட்டான். பெண்ணில் முக்குளித்தான், அவளை துளி வருத்தவில்லை, துளி அழுத்தவில்லை. அவள் பெண்மேனி சுமை தாங்கி விடாதவாரு, அவளையும் மஞ்சத்தில் தாங்கினான்.
“காதலை எப்படி காட்டணும்னு தெரியாது. காதலை எப்படி சொல்லணும்னு தெரியாது. காதலை எப்படி கையாளனும் தெரியாது. ஆனா காதலிக்கத் தெரியும். வலிக்க, வலிக்க காதலிக்க தெரியும். எதையும் புரிய வைக்க தோணல. எதையும் புரிஞ்சுக்க தோணல. இனி தவறே செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணவும் தோணல. நான் இப்படித்தான், இப்படியே தான்!
கர்வம் பிடிச்சவனா, திமிர் பிடித்தவனா, ஆணவம் பிடித்தவனா, ஆறடி உருவத்துல டேட்டுவும், பிடரி முடியும், தாடி மீசையும், முரட்டு, மூர்க்கனா தான் இருப்பேன். என்னை மாத்திக்கணும்னு தோணல. மாத்திக்கவும் நினைக்கல. நீ சொன்ன மாதிரி, நம்ம பசங்க கேட்டா மாத்திக்கிறேன். அதுவும் கொஞ்சமா. இப்ப சொல்லு, இந்த ராட்சச ராவணனே தான் வேணுமா?”
அவன் முதுகில் தன் விரல்கள் கொண்டு காயம் வடித்தவள்...
“முரடா! முசுடா! அப்பப்போ எனக்கே தெரியாம ரெண்டு விரலுக்குள்ள மூன்றாம் வரல வைச்சு ஊதி தள்றவரா, டெரஸ்ல வச்சு திருட்டுத்தனமா குடிக்கிறவரா, அதை மறைப்பதற்கு என்கிட்ட முழிக்கிறவரா, இருந்தா ஏத்துக்கிறேன்..!”
அவள் நக்கலோடு முடிக்க...
“மாத்திக்கணும்னு நினைக்கிறியா?”
“மாற்றங்களை நேசிக்கிறது ஒருவகை காதல்னா, மாறாத சுயத்தை சுயம் இழந்து காதலிக்கிறது, இன்னொரு வகை காதல். ம்ச்.. நான் சுயம் இழந்துக்கிறேன், ராவணா!”
“என் மண்டோதரி!”
அவளில் கலந்து கார்கூந்தல் கலைத்து, கருங் கூந்தலில் புதைந்து, காதலின் இமயம் தொட்டு முக்தி பெற்றான். அவளிடம் வலியைக் கேட்டவன், வலியைத் தருவேன் என்றவன், நேசித்து வலிக்க வைக்கின்றேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டான்.
கலைத்து கலைந்தவன், அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் இதழ்கள்..
“காதலடி நீயெனக்கு,
காந்தமடி நானுனக்கு!
வேதமடி நீயெனக்கு,
விந்தையடி நானுனக்கு!”
மெதுவாக அசைந்து இசைக்க..
“வீசு கமழ் நீயெனக்கு
விரியுமலர் நானுனக்கு!
பேசுபொருள் நீயெனக்கு,
பேணுமொழி நானுனக்கு!”
பதிலுக்கு சாத்விகாவின் இதழ்கள் நெளிந்து, வளைந்து சர்வேஷின் இதழ்களோடு இணைந்து கொண்டது.
சாத்விகா சர்வேஷின் வாழ்வில் புது வேதமானாள்!
சர்வேஷ் என்பவன் சாத்விகாவின் விந்தையாகினான்!
வேதமாகி விந்தையாகி காதலாகியது!