கல்லூரிக்கு எப்போதும் செல்லும் பஸ்நிலையத்தில் இருந்தனர் சாத்விகாவும், பிரணவிகாவும். கல்லூரி பேருந்து வருவதற்கு முன்னே ஒரு அரசாங்க பேருந்து வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் குறும்புச் சிரிப்பு ஒன்றை சிரித்துவிட்டு அந்தப் பேருந்தில் ஏறிவிட்டனர்.
இருவரும் சென்று இறங்கியது என்னவோ பிரபலமான ஒரு மால் இருக்கும் பகுதிக்கு. இறங்கியவுடன் தன் கைப்பேசியை எடுத்த பிரணவிகா,
“ஏய் நீ சொன்ன ஸ்டாப்க்கு வந்தாச்சுடி. இனி எங்க வரனும்?”
அழைப்பில் அந்தப் பக்கம் இருந்தளோ “அப்படியே ஸ்டெயிட்டா நடந்து வா. அங்க ஒரு காபி ஷாப் இருக்கு பாரு அங்க தான் இருக்கோம் வா” எனக்கூற, அவள் கூறிய கடைக்குச் சென்றனர் சாத்விகாவும், பிரணவிகாவும்.
சாத்விகா “இது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சது நம்ம செத்தோம்”
பிரணவிகா “உன் ஓட்ட வாய தைச்சா எதுவும் அம்மாவுக்குத் தெரியாது. இத்தனை வருஷத்துல இந்த மாலுக்கு தனியா நம்ம வந்துருக்கோமா? இப்போ பாரு தனியா பஸ்ஸூல வர வழியாவது நமக்கு தெரியுதா? இப்படி இருந்தா நம்ம எப்படி வாழ்க்கைய படிக்க? எஞ்சாய் பண்ண?”
“எஞ்சாய் பண்றத விட எனக்கு மாட்டிக்கிட்ட என்ன பண்றதுனு தான் யோசனையா இருக்கு”
“அதெல்லாம் கார்த்திகாவ கவின வச்சு சமாளிச்சுடலாம்”
“ஒருத்தருக்கும் மரியாதை குடுக்காத.. அம்மா அப்பானு சொன்னா என்ன கேர்ள்?”
“அடி போடி.. என் டார்லிங்ஸ்ல நான் பேர் சொல்லிக் கூப்பிடாம யாரு சொல்லுவா?”
“என்னண்டோ போ. இந்த காபி ஷாப்பா பாரு கேர்ள்?”
“இது தானு நினைக்கிறேன். வா உள்ள போய் பார்ப்போம்” என இருவரும் அங்குச் செல்ல அவர்களுடன் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பலரும் அங்குத் தான் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தனர். இவர்களைக் கண்டதும் “ஹாய்” என அனைவரும் பொதுவாகக் கைக்காட்ட, இவர்களும் கைகாட்டிக்கொண்டே அவர்களுடன் சென்று ஐக்கியமாகினர்.
“என்னடி கூண்டுக்கிளிகளா? எப்படி உங்கம்மா விட்டாங்க?” என ஒருத்தி கேட்க,
“யாரு நம்ம பிரணியா அவ அம்மாட்ட பெர்மிஷன் கேட்குறது.. நம்புற மாதிரி இல்லையே?” என ஒருவன் கூற,
“கரெக்டா மடையா.. நான் பெர்மிஷனே கேட்கல.. காலேஜ் பையோட வந்துருக்கேன் பார்த்தா தெரியல” என்ற பிரணவிகா அவனுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டே சிரித்தாள்.
“பிரணி வருவாளாண்ணே எங்களுக்கு டவுட்.. சாத்வி வந்தது சர்ப்ரைஸ் தான்” என்றாள் ஒருத்தி.
“ஏய்.. நானே பயந்துட்டு இருக்கேன் கைஸ்.. அம்மாட்ட மாட்டுனோம் அவ்ளோ தான்” எனச் சாத்விகா பயந்து கொண்டே கூற,
“இதுக்கு மட்டும் பயப்படுவா? ஆனா லவ் பண்ண மட்டும் பயம் வராது” என ஒருத்திக்கூற, அவள் கையில் நறுக்கெனக் கிள்ளினாள் சாத்விகா.
“லவ் மட்டும் இல்ல.. அதுக்கு மேலயும் ஒரு மேட்டர் இருக்கு.. அது எனக்கு மட்டும் தான் தெரியும்” என ஒருவன் கூற, அனைவரும் அவனை என்ன என்னும்விதமாகப் பார்க்க, சாத்விகாவுமே அப்படி தான் பார்த்தாள்.
“என்னடா புது விஷயம்? கூடவே இருக்க எனக்கு தெரியாம?” எனப் பிரணவிகா கேட்க, அவனோ
“என்ன சாத்வி.. நான் பார்த்தத சொல்லவா?” எனக் கேட்டான். அவளுக்கு அப்போதும் புரியவில்லை.
“என்னடா எனக்கு புரியவே இல்ல.. என்னத்த பார்த்த?”
“அதுவா லிப்-லாக்” எனக்கூற அதிர்ந்து விழித்தாள் சாத்விகா. அவள் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவருமே!
“என்ன!” என ஆளாளுக்கு கேட்க, அவளோ அசையாமல் சிலையாகிவிட்டாள், அவள் தெளிவதற்குள் அவன் பார்த்த காட்சியைத் திரையே இல்லாமல் அனைவருக்கும் ஒளிப்பரப்பு செய்துவிட்டான்.
பிரணவிகா “அடியேய் கள்ளி! என்கிட்ட கூட சொல்லல” என அவளை இடிக்க,
“சும்மா இரு கேர்ள். எனக்கே எம்பேரைஸ்ஸிங்கா இருக்கு..” என்றவளுக்கு அங்கு உட்காரவே முடியவில்லை. அதைவிட அதற்குக் காரணமானவன் மேல் இன்னும் இன்னும் கோபம் தான் வந்தது. அவளும் அதில் லயித்து இருந்தாள் என்பதை மட்டும் அவளுக்குச் சாதகமாக மறந்துவிட்டாள்.
அனைவரும் அதை வைத்தே அவளைக் கிண்டல் செய்யவும் “பிரணி வீட்டுக்கு இல்ல காலேஜ்க்கு போலாமா?” எனக்கேட்டு எழுந்தேவிட்டாள்.
“இருடி” என அவளை அமரவைத்தவள் “ஏய்! எல்லாரும் சும்மா இருங்க.. ஏன் அவள கிண்டல் பண்றீங்க? இன்னைக்கு நாங்க வந்ததே அபூர்வம் அதையும் கெடுத்து விட்றாதீங்க.. எல்லாரும் என்னா ஒழுங்கு.. எல்லார் மேட்டரும் எனக்கு தெரியும்.. எடுத்து விடுவா?” எனக்கேட்க,
“எங்க விஷயம் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.. சாத்வி விஷயம் கூட இப்ப எல்லாருக்கும் தெரியும். ஆனா பிரணி நீ மட்டும் எப்படி இப்படி சிங்கிளா சுத்துற? இல்ல எங்க கிட்ட இருந்து மறைக்கிறியா?” என ஒருத்தன் கேட்க,
“நான் எதுக்கு மறைக்கனும். நான் ஒருத்தனை விரும்பினா ஊருக்கே மைக் போட்டுச் சொல்லுவேன். ஆனா அப்படியான ஒருத்தனை தான் இன்னும் பார்க்கல”
“ஏய் போன வருஷம் அந்த ப்ரோஃபஸர் கலையரசன் உன்னையே சுத்தி சுத்தி வந்தாரே.. அவர கூடவா பிடிக்கல?”
“கலை அவன் பேருல தான் இருக்கு.. முகத்துல இருக்கா? நல்லா சொட்டையும், தெந்தியுமா.. உவ்வேக்.. எனக்கு பிரின்ஸ் மாதிரி ஒருத்தன் வேணும்”
“எப்பா ஆரம்பிச்சுட்டா பிரின்ஸ் கதைய.. இனி முடிக்க மாட்டா.. கிளம்புங்க எல்லாரும்” என ஒருவன் கூற,
மற்றொருவனோ “நல்லா கவனி ராஜ் இவ சொல்ற பிரின்ஸ்ஸோட பிஸிக்கல் அப்பியரென்ஸ் எல்லாம் நம்ம விஹான் சாருக்கு தான் இருக்கு.. இவ அவரத்தான் நமக்கு தெரியாம ரூட் விடுறா.. அடிக்கடி அவர் வேற கூப்பிட்டு விடுறாரு” எனக்கூற எங்கிருந்து வந்ததோ அந்தக் கோபம் கையிலிருந்த புத்தகத்தால் அத்தனை அடி அவனுக்கு.
“இனி எவனாவது அவர் பேர சொன்னீங்க நான் கொலைகாரியா மாறிடுவேன். போங்கடா நான் எங்கயும் வரல.. வீட்டுக்குப் போறேன்” எனக் கிளம்பியவளை பிடித்து, சரிக்கட்டி மாலுக்கு அழைத்து வந்தனர் அவளின் நட்பு பட்டாளங்கள்.
*******
இங்குக் கல்லூரிக்கு வந்துவிட்டான் விஹான். எப்போதும் வரும் நேரத்திற்கு வந்துவிட்டான். அவனது தினசரி வழக்கமாகக் காலை முதன் முதலில் கல்லூரிக்கு வருவதை பழக்கப் படுத்தி இருந்தான் காரணம் அவனவள். அவளைப் பாராமல் அவன் தினமே அவனுக்கு ஆரம்பமே ஆகாது.
வழக்கமாகக் காலை வேகமாக வந்து அவன் காரை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்திருப்பான். சரியாக அவன் பார்க் செய்யும் இடத்திலிருந்திலிருந்து பார்த்தால் பிரணவிகா பேருந்திலிருந்து இறங்குவது சரியாகத் தெரியும்.
காரில் அமர்ந்தபடியே அவளை முதலில் பார்த்துவிட்டுத் தான் அவனது தினசரி வேலையே ஆரம்பமாகும். அதே போல் இன்றும் காத்திருக்க அவள் வரும் பேருந்து வந்ததேயொழிய அவள் வரவில்லை.
‘எங்க இந்த சண்டிராணிய இன்னைக்கு காணோம்? சாத்வியும் வரலயே! என்னாச்சு?’ என நினைத்தவன், நொடியும் தாமதிக்கவில்லை அழைத்துவிட்டான் கவினுக்கு.
“ஹலோ மாப்பிள்ளை”
“ஹலோ மாமா! எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. என்ன காலையில கூப்பிட்டு இருக்கீங்க.. எதுவும் அவசரமா?”
“இல்ல மாமா சாத்வி பிரணி இன்னைக்கு காலேஜ் வரலயா?”
“இல்லையே மாப்பிள்ளை இரண்டு பேரும் கிளம்பிட்டாங்களே! என்னாச்சு” என அவர் பதறவும்,
“இல்ல மாமா ஒன்னுமில்ல.. இரண்டு பேரும் இன்னைக்கு பஸ்ஸூல வரல அதான் கால் பண்ணேன். இன்னைக்கு காலேஜ் பஸ் கொஞ்சம் சீக்கிரமா வேற வந்திருச்சு.. அதான் இரண்டு பேரும் பஸ்ஸ மிஸ் பண்ணிட்டாங்க போல.. வந்துருவாங்க நீங்கப் பதறாதீங்க” என அவருக்கு ஆறுதலுக்கு பதில் கூறினாலும் அவனுக்கு இங்கே அமர முடியவில்லை.
மீண்டும் காரை எடுத்து அவர்கள் வரும் வழியில் செலுத்தினான். இருபுறமும் கவனம் வைத்தே சென்றான். ஆனால் காணவில்லை. அவர்களின் பேருந்து நிறுத்தகமே வந்துவிட்டது அங்கும் இல்லை. மீண்டும் கல்லூரிக்கு வந்துவிட்டான்.
இவன் சென்ற இடைவெளியில் அவர்கள் கல்லூரி வந்துவிட்டனரா எனப்பார்க்க பியூனை அழைத்துப் பிரணவிகாவை அழைத்து வரும்படி கூற, வந்தது என்னவோ அவர்களுக்குப் பாடமெடுக்கும் பேராசிரியர் சுரேகா.
அவரைப் பார்த்ததும் எரிச்சல் வேறு வந்தது அவனுக்கு.. ஆனாலும் தன்னை பார்க்க வேண்டி வெளியில் நிற்க, வேறு வழி இல்லாமல் அவரை அழைத்துவிட்டான்.
“குட் மார்னிங் சார்”
“குட் மார்னிங் மேடம். என்ன விஷயம்?”
“சார் பிரணவிகா அவங்க கேங் ஒரு 15 பேர் மொத்தமா இன்னைக்கு கிளாஸ் பங்க் பண்ணிருக்காங்க சார். பசங்க கிட்ட விசாரிச்சதுல அவங்க பங்க் பண்ணிட்டு எதோ அவுட்டிங் பிளான் பண்ணிருக்காங்கனு மட்டும் தெரிஞ்சது சார். இன்னைக்கு அவங்களுக்கு எல்லாம் டியூட்டி வேற இருக்கு சார். இவங்க இப்படி செஞ்சதுல ஹாஸ்பிடல்ல ரொம்ப ரஸ்ஸா இருக்கு” எனப் போட்டுக்கொடுத்து விட்டுச் சென்றார்.
அவனுக்கோ இரத்தம் கொதிநிலையில் இருந்தது. அவளைக் காணாமல் அவள் பேருந்து நிறுத்தகம் வரைக்கும் சென்று அவளைத் தேடி இங்குத் தவித்திருக்க, அவளோ அவள் வாணர பட்டாளங்களுடன் கும்மாளம் அடிக்கச் சென்றிருக்கிறாள் அதுவும் டியூட்டியை விட்டுவிட்டு.
அதற்குள் மீண்டும் கவின் அழைத்தார். “மாப்பிள்ளை பிள்ளைக வந்துட்டங்களாப்பா?” எனப் பதட்டமாகக் கேட்க, அவரையும் பதட்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன்,
“வந்துட்டாங்க மாமா. அவுட்பஸ்ல லேட்டா வந்தாங்க. இப்போ தான் கிளாஸ்ஸூக்கு போனாங்க. நானே கால் பண்ணனும்னு இருந்தேன் நீங்க கால் பண்ணிட்டீங்க” எனப் பேசி வைத்தவனுக்கு இன்னமும் ஆத்திரம் அடங்கவில்லை.
பியூனை அழைத்து “இன்னைக்கு பங்க் பண்ண எல்லாரும் நாளைக்கு என்ன மீட் பண்ணனும். என்னைப் பார்க்காம எந்த கிளாஸூம் அட்டன் பண்ணக்கூடாதுனு அவங்க ஃபேகல்ட்டிக்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுங்க” எனக்கூறிவிட்டு, கிளம்பிவிட்டான். அடுத்த பிஸ்னஸைப் பார்க்க.
நாளைக்கு அவனிடம் சிக்க போகும் பிரணியின் நிலை என்னவோ!
*******
இங்குச் சூர்யான்ஷ்ஷோ தீவிரமாகத் தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். விஹானிடம் விட்ட தன்னுடைய தயாரிப்புகளின் விற்பனையை மீண்டும் பிடித்து மீண்டும் முதல் தரவரிசையில் அமர்ந்து விஹானை பலிவாங்க வேண்டுமென்பதில் குறியாய் இருந்து தீவிரமாக வேலையும் பார்க்க ஆரம்பித்தான்.
முதலில் அவனின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அழகுசாதன பொருட்களின் முக்கிய குறியே கல்லூரிப் பெண்கள் தானே! அவர்களிடத்தில் தன் தங்களுடைய தயாரிப்புகளை முதலில் கொண்டு செல்லத் தீவிரமாக யோசித்ததன் விளைவு இலவசம்.
ஆம்! மால்களில் அவன் தயாரிப்புகளைக் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டினால் ஏதேனும் ஒரு பொருள் இலவசமாகக் கொடுக்கும் முடிவு எடுத்திருந்தான். அதன் மூலம் கல்லூரி பெண்கள் கண்ணில் அவனது தயாரிப்பின் பெயரான லாரா அடிக்கடி படும் அதனால் தனது மார்க்கெட் மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டம் தீட்டி அதை அமல் படுத்தினான்.
போக அவனே தினமும் ஒரு மாலுக்கு சென்று தங்கள் விற்பனையகத்தை நேரடியாகப் பார்வையிடவும் ஆரம்பித்தான். எந்த மாலுக்கு செல்கிறானோ அங்கு அன்றைக்கு பொருட்களை வாங்கியோர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, ஒரு முழு அழகுசாதன பெட்டகத்தையே பரிசளித்தான்.
தன்னால் முடிந்த அளவுக்கு மார்க்கெட்டிங்கில் என்னனென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான். ஆனால் செய்ய வேண்டியதோ தாயாரிப்புகளின் தரம். அதைச் சரியாகச் செய்தால் விற்பனை சரியாக நடக்கும் என்பதை விஹான் சரியாகப் புரிந்து வைத்துள்ளான். சூர்யான்ஷ் அதில் தவற விட்டுவிட்டான்.
அன்றும் ஒரு மாலுக்கு கிளம்பிவிட்டான். அது அன்று பிரணவிகா வந்துள்ள மால் தான். அவனுக்குமே அவள் இங்கு வருவாளெனத் தெரியாது தான். இருவரும் சந்திக்கும் நேரம் வாய்க்குமா?
அவளோ அவள் நண்பர்கள் பட்டாளத்துடன் அங்குள்ள திரையரங்கில் விசிலடித்து படம் பார்த்துக்கொண்டிருந்தாள். படம் முடிந்து அனைவரும் அங்குள்ள உணவுவிடுதி சென்று திரும்பும்போது தான் அங்குள்ள விளம்பர பதாகையில் “கல்லூரி மாணவிகளுக்கு இலவச அழகுசாதன பொருளுடன் இன்றைக்கு குலுக்கலும் உள்ளது” எனத் தெரியவர அவள் வாணர பட்டாளம் அங்கு படைஎடுத்தது.
இவளும் அங்குச் செல்லப் பார்த்துவிட்டான் சூர்யான்ஷ். வேலை விஷயமாக வந்தவனுக்கு அதிர்ஷ்டவசமாகப் பிரணவிகாவின் தரிசனம் காணக்கிடைத்தது. அழகான மஞ்சல் நிற டாப், நீல நிற ஜீன்ஸ் அணிந்துருந்தாள். கழுத்தில் ஷால் எல்லாம் பேருக்குக் கூட இல்லை.
படபடக்கும் இமை, மைபூசிய விழி, கூர் நாசி, ரோஜா இதழ், சங்கு கழுத்து என வரிசையாகப் பார்த்தவனுக்கு அடுத்து வந்த வேகத்தடையிலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. பல பெண்களிடம் சல்லாபித்தவனிடம் இதைத் தவிற வேறு என்ன எதிர்பார்த்திட முடியும்?
வஞ்சனை இல்லாமல் அவள் மேடு பள்ளங்கள், வளைவு சுழிவுகள் அத்தனையையும் இரசித்து பார்த்தான். இதை அறியாதவளோ அங்கு ஆண் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தாள். அவளருகில் கடனேயென நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாத்விகா.
இவர்கள் இருவரைத் தவிற அத்தனை பெண்களும் இலவச அழகு சாதனங்களை அலசி ஆராய, இவளோ அந்தப் பக்கமே திரும்பாமல் இருந்தது அவனுக்குச் சுணக்கமே!
‘ஓஹ் இலவசமா கொடுத்தா கூட என் பொருளை வாங்க மாட்டாளா?’ என நினைக்கும் போதே ஆண்கள் அனைவரும் அங்கிருந்த ஆடையகத்திற்குள் நுழைய, சாத்விகா சில பெண்களுடன் இணைந்து கழிவறைக்கு செல்ல, தனித்து நின்றாள் பிரணவிகா. யோசிக்காமல் அவளிடம் சென்றான் சூர்யான்ஷ்.
“வாவ் பியூட்டி” என்ற முதல் அஸ்திரத்தை அவள்மீது பாய்ச்ச, திரும்பியவள் அவன் தோற்றத்தில் கிறங்கினாள் என்று தான் கூற வேண்டும். விஹானுக்கு சற்றும் குறையாத வனப்பு, கம்பீரம், அழகு கூடுதலாக முதத்தில் குடியிருக்கும் புன்னகையும், வசீகர பார்வையும்.
அவளது எதிர்ப்பார்ப்பு அத்தனையும் அவனிடம் இருந்தது. அவள் நினைத்தது போல புன்னகை முகம், வசீகர பார்வை. அவளை பார்க்கும் போது அவன் கண்களில் வந்த மயக்கமும் சேர்த்து அவளை மயங்கத்தான் வைத்தது.
அவள் மயக்கத்தில் உள்ளூர மகிழ்ந்தவன், “பியூட்டி குயின்! நீங்க எங்க மாடலிங் பண்றீங்க?” என வேறு கேட்டு, அவளை மழையில் நினைத்தான்.
“அய்யோ இல்லை. நான் காலேஜ் ஸ்டூடண்ட்” என்றாள். என்ன தான் மயக்கம் என்றாலும் பெண்ணுக்கே உள்ள பாதுகாப்பு உணர்வு வேலை செய்தது.
“ஓஹ்.. காலேஜ் ஸ்டூடண்ட்டா.. இன்னைக்கு எங்க ப்ராடக்ஸ் ஃப்ரீ ஆஃபர் இருக்கே! வாங்கலயா?”
“இல்ல வேண்டாம்”
“பியூட்டி குயின்னுக்கு மேக்கப் தேவையில்ல தான், ஆனா எங்க ப்ராடெக்ட் போட்டா இன்னும் க்ளோவா இருக்கும்”
“ம்ச்ச் வேணாம்”
“ஏன்? ஃபிரீ தான. டிரை பண்ணலாமே” என அவள் கேட்க, அவளுக்கோ அவள் அத்தை கல்பனா தேவைக்கு அதிகமாகமே மாதா மாதம் வீட்டுக்குக் கொடுத்துவிடுவார். அதைப் பழகியவளுக்கு அடுத்த தயாரிப்பை வாங்கி முகத்தைப் பாலாக்க விருப்பமில்லை. அவன் மீண்டும் மீண்டும் கேட்க, அவள் குறும்பும் தலை தூக்க,
“எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல. முகத்துக்கு பயத்தமாவு, உடம்புக்கு கடலைமாவு, தலைக்கு சீகக்காய். அவ்வளவுதான்” என ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் போலப் பேச, வாய்விட்டுச் சிரித்தவன்,
“யூ கொயட் சம்திங்க்” என மீண்டும் சிரிக்க, அவன் வசீகரமான சிரிப்பை வியந்து பார்த்தாள். ஆனால் அவன் பார்க்கும் முன் அதை மறைத்தவள் வேறு புறம் திரும்ப, அவளையே கழுகாய் நோட்டமிடும் அவன் கண்களுக்கா அவளின் மயக்கம் தெரியாது. கண்டு கொண்டான். அவளுக்குத் தன்னிடம் தோன்றிய மயக்கத்தை. அவனுக்குமே முதலில் அவளின் அழகு தான் கவர்ந்தது இப்போது அவளின் துடுக்கு தனமும் சேர்ந்து கவர்ந்தது.
இவளின் மயக்கம் என்ன விளைவை ஏற்படுத்துமோ! காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் தட்டிக் கொள்வானா? தன்னவளைத் தான் விட்டுவிடுவானா விஹான்? பொறுத்திருந்து பார்க்கலாம்.