எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 3

subasini

Moderator
பகுதி – 3



கதிர் வேந்தனுக்கும் ரேணுகாவிற்கும் இடையே திருமணம் என்று தவறாக மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாள் மதுமிதா…



தன் திருமணத்திற்கு ரேணுகா அழைத்த போதும், எல்லாம் கேட்டவள் மாப்பிள்ளை யாரெனக் கேட்கத் தவறினாள்…



இதனால் தேவையில்லாமல் மனதை வருத்திக் கொண்டாள்…



அவள் நிலையைப் பார்த்து, தன் புருவத்தை உயர்த்தியவன் 'எதற்காக இப்படி நிற்கிறாள்' என அவளையே பார்ததுக்கொண்டிருந்தான் கதிர்…



அவனின் பார்வையைத் தவிர்க்கப் போராடியவளின் நிலை அங்கே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை …



அவளின் தடுமாற்றம் கண்ட ரேணுகாவின் தாயார் ராதிகா, அவர்களோடு தங்குவதற்குத் தயங்குகிறாள் என்று நினைத்து,



" மது , நீ தங்கி இருந்த வீடு காலியாகத் தான் இருக்கிறது, நம் காம்பவுண்ட் தானே … நீ‌‌ அங்கேயே தங்கிக்கலாம் டா , எங்க கூட இங்கே இருக்கத் தயக்கமாக இருக்கிறது என்றால்.. நீயும் கல்யாணப் பொண்ணும் அங்கே இருந்துக்கோங்க, ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் தோழிகளுக்குப் பேச நிறைய இருக்கும்" என்றார் …



அவள் தந்தையோடு இங்கே தங்கியிருந்த வீடு காலியாக இருக்கிறது என்றதும் , மனதில் தோன்றிய எண்ணங்களும் துயரத்தின் சாயலும் அவள் முகத்தில் வந்து போனது…



மெல்ல , தன்னை நிலைபடுத்தியவள்



"அப்படியா ஆன்டி?" என்று உயிரற்றக் குரலில் பதிலளித்தவளிடம்



"இரு மது நான் போய்ச் சாவி எடுத்து வரேன்" என்று சென்றாள் ரேணுகா …



அப்பொழுது அவளைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து உறவினர்கள் வந்தனர். இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் மதுமிதா இல்லை…



இதைப் பார்த்ததும் பானுமதி " ரேணு நீ இரு... கதிர் , நீ அவளைக் கூட்டிப் போய் ரூம் திறந்து விடுடா" என்றார்…



இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்க்காத மதுமிதா, சடாரெனக் கதிரைத்தான் பார்த்தாள்…



கடைசியாக அந்த வீட்டில் நடந்த சம்பவம் நினைவில் வர, அவள் முகத்தில் தோன்றிய எண்ணத்தின் அலைகள் யாருக்கும் புரியவில்லை கதிரைத் தவிர …



அவனோ‌ இதழில் தோன்றியப் புன்னகையை மறைத்தவாறே, சாவியை எடுத்துகொண்டு ... வா என்று கண்களால் அழைத்தவன், அவளுக்குக் காத்திருக்காமல் வேகமாகச் சென்றான்…



தயங்கியவாறே அவன் பின்னே சென்றாள் மதுமிதா.

வீட்டின் பூட்டைத் திறந்து அவளை உள்ளே போகச் சொன்னான்.



கடந்த காலம் கண் முன் காட்சியாக விரிய, அவளும் தன் வலதுக் காலை‌ வைத்து உள்ளே வந்தாள் மதுமிதா…



தன்னுடைய அறையை நோக்கியவளுக்கு, அங்கே கதிரின் கைகளில் காதலால் தன்னை இழந்துக்கொண்டிருக்கும் தன் உருவத்தைக் கண்டாள்.



அதில் தான் எத்தனை காதல்… அவனின் கைகளில் தவழ்ந்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தன் நிலை உரைக்கவும், அவனை எதிர்த்துப் போராடியதிலும் காதலே நிறைந்த இருந்ததை இப்பொழுதும் அவளால் உணர முடிந்தது.



எப்படி அவன் மேல் காதலில் வீழ்ந்தேன் என்ற அவள் மனம் கேட்கும் கேள்விகளுக்கு அன்றும் இன்றும் என்றும் அவளுக்குப் பதில் இல்லை…



தன் தோழிக்குத் துரோகம் இழைத்த கறுப்பு நாளாக அவள் வாழ்வின் ஏட்டில் பதிக்கப்பட்டது…



தோழியின் வாழ்க்கையில் ‌ பெரிய துன்பத்தை உண்டாக்க இருந்தோம் என்ற எண்ணமே அன்று அவனைத் தள்ளிவிடத் தேவையான உடல் பலத்தைத் தந்தது மதுமிதாவிற்கு…



தன் பின்னே கதவு அடைக்கும் சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள் மதுமிதா..



ஆனால் மனமோ கடந்த காலத்தில் இருந்தது…



அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று‌ யோசிக்காமல் , வேகமாக அவள் அருகே வந்தவன் அவள் பின்னால் நின்றபடி அவள் தோள் மேல் கை வைத்து,



"நான் பல முறை அழைத்தும், உன் அலைபேசியின் தொடர்புக் கிடைக்க வில்லை, உன் ஃபோனுக்கு என்ன ஆயிற்று" என்று அவளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டவனின் கேள்விகள் எதுவும் அவள் மனதில் பதியவில்லை... தன்னைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு இருப்பதாகவே அவள் உணர்ந்தாள் அவனின் அருகாமையை…



சட்டெனப் பிறந்தச் சினத்தினால் நிதானத்தை இழந்தவள், வார்த்தைகளில் அவனை வதைக்கத் தொடங்கினாள்…



" வேறொரு பெண்ணிற்குக் கணவனாகப் போகும் நேரத்தில் கூட, எப்படி உங்களால இப்படிக் கீழ் தரமாக நடந்து கொள்ள முடியுது… இது தான் ஆம்பளைப் புத்தி என்று சொல்லறதா…

அப்படி என்ன பெண் பித்துப்பிடிச்சு ஆட்டுது … இடம் பொருள் உணராமல்" … என்று ஏக வசனத்தில் பாய்ந்து வந்த அவளின் வார்த்தைகளைக் கேட்டவன் மனதில் இருந்த காதல் பாசம் எல்லாம் கடலலையை‌போல அவன் மனதில் உள்ளே இழுக்கப்பட்டு அடியாழத்தில் புதைந்தது …



சொல்லொணாத் துயரத்தில் தனித்து விடப்பட்ட கதிர் மெல்ல அவளை விட்டுப் பிரிந்து நின்றுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் முதலில்…



நீண்ட நாட்களுக்குப் பிறகு காணும் தன் சரி பாதியிடம் இன்னும் எதுவும் சரிவரப் பேசித் தீர்க்காமல் இருக்கும் தங்கள் கடந்த காலம் தடையென நிற்க, இப்போது என்ன சொன்னாலும் அவளுக்குப் புரியாது என்று உணர்நதவன் , " சாரி… நான் ஏதோ நினைவில் " என்று வார்த்தைகளை

முடிக்காமல், அவன் குரலில் கடுமை கொண்டு வந்தவன், மித்ராவை எங்கே பார்த்தாய், அவள் எப்படிஉன்னிடம் வந்து சேர்ந்தாள் ... என்று கேட்டான்.



அவன் குரலில் இருந்த அந்நியத் தன்மையா! இல்லை கடுமையான அவன் முகமா! ஏதோ ஒன்று அவன் கேள்விக்குப் பதில் அளிக்க உந்தியது அவளை.



"அவள் நிறைமாதக்கற்பினியாக இருக்கும் நிலையில் தான் நான் பார்த்தேன்" …

என்று கண் கலங்கி நின்றவளை அணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றினாலும், அதை வெளிக்காட்டாமல்… "ஒ " என்ற ஒற்றை வார்த்தை ‌மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு வேகமாகச் சென்றான் கதிர் வேந்தன்.



கடந்த ஓன்பது மாதக் காலமாகத் தான் மித்ராவைக் காணவில்லை, அவளைத்தேடுக்கொண்டு இருந்தான். அவள் கணவனோடு இருந்த இடத்தில் போய் அவன் விசாரித்ததில் வீட்டைக்காலிச்செய்து போனது தகவலாகக் கிடைத்தது …





மித்ராவின் அலைபேசியின் தொடர்பு அவனுக்கு இல்லாமல் போனது, அதற்குள் வீட்டிலும் பல பிரச்சனைகளும் தந்தையின் தொழிலையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டான்… அதுமட்டும் இல்லாமல் கடைசியாக மித்ராவை அவன் காணச் சென்ற போது தன்னை வார்த்தைகளைக்கொண்டு அவமானப்படுத்தியது மட்டும் இல்லாமல் தன் தந்தையின் சொத்தை அவளுக்குத் தாராமல் தானே கையகப்படுத்த அவன் திட்டம் போடுகிறான் என்று குற்றப்படுத்திய தன் தங்கையின் மேல் கோபம் உண்டானதில் அவளைப்பற்றி விசாரிக்காமலும் விட்டு விட்டான் கதிர்வேந்தன். ஆனால் இப்படி ஆகும் என்று அவன் நினைக்க வில்லை…

எங்கே விட்டுச்சென்றாளோ அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள் மதுமிதா. இவளிடம் தன் காதலைச்சொல்லிப் புரிய வைப்பது நடவாதக்காரியம் என்று உணர்ந்தவன், தான் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திலும், கட்டத்திலும் இருப்பது புரிந்தது ... தனக்கு உதவக்கூடியது தன் அன்னை மட்டுமே, வேகமாக அவரை நோக்கி வந்தான்.



அங்கே கண்களில் பட்டது, தந்தையிடம் அடைகலமான தங்கை , அவள் மகனை அழாமல் மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருக்கும் அத்தை, என்ன செய்ய என்று தெரியாமல் தினரும் தன் தாயின் அருகே அமர்ந்து, அவருக்கு ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் ரேணுகா...



ரேணுகாவின் அருகில் சென்றவன் அவளை அழைத்து " ரேணு , நீ கீழே உன் தோழியிடம் போ , அவள் அங்கே தனியாக இருக்கிறாள்" என்றான்.



தன் மாமன் மகனின் முகத்தில் இருந்த எதோ ஒன்று அவளைச் சரி எனத் தலையாட்ட வைத்தது..



வேகமாகத் தன்தோழியைக் காண வந்தாள் ரேணுகா...

அவன் விட்டுச்சென்றதும் , இருண்டத் தனிமை மதுமிதாவை ஆட்டிப் படைத்தது …



தன்னைச் சுற்றிக் கடந்த காலக் காட்சிகள் படமெனச் சுற்றி வந்தது…



இந்த வீட்டிற்குத் தந்தையுடன் அவள் முதன் முதலில் வந்ததும் …



பள்ளிப்பருவத்தில் இருக்கும் தனக்கான நட்பாக ரேணுகாவின் அறிமுகமும் , அவர்களின் நட்புக் கடல் நீரின் உப்பு போல என்றும் பிரித்தறிய முடியாத அளவிற்கு ஆழமானதாக இருந்தது … அதே நேரம் அழகான ஆரோக்கியமான நட்பாக இருந்தது…



இந்த வீட்டில் அவளோடு அடித்த கொட்டம்…

சமையல் செய்வதாகப் பெயர்ப் பண்ணிச் சமையலறையை நாசம் பண்ணிய நிகழ்வு இப்படி , ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நினைவலைகள் நிழலாக அவளைச் சுற்றி அலை அலையாக வலம் வந்தது…



மெல்ல இதழில் தோன்றியப் புன்னகையோடு வந்தவள், தன் ‌படுக்கையறையில் மட்டும் அவன் நினைவு மட்டுமே ‌நிறைந்து வழிவதைத் தடுக்க முடியவில்லை…அந்த நிகழ்வோ தன் வாழ்க்கையில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே இடம்பெற , அது மட்டும் அந்த அறையின் மற்ற நினைவுகளைத் துடைத்தெறிந்து இருந்தது…



மறந்துவிட்டதாக நினைத்த நிகழ்வு இன்று நடந்தது போல் பசுமையாகப் பதிந்து இருப்பது அவளுக்குத் துன்பத்திலும் தன் அந்தரங்கத்தை இன்பமாகப் பொதிந்த வைத்தாள் மனதின் அந்தக்காரத்தில்…



நினைவுகளை அசைப்போட்டவாறே இருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை …



சில மணி நேரத்திற்குப் பின் அவளைக் காண வந்தாள் ரேணுகா…



"என்ன மதி இப்படியே நின்னுட்டு இருக்க" …



என்ற ரேணுகாவின் குரலில் சுயம் வந்தவள் " வா டி என் புதுப் பொண்ணு" என்றாள் மதுமிதா…



"நான் வருவது இருக்கட்டும் … நீ எப்போ கல்யாணம் பண்ணிகிட்ட , அதுவும் என்னிடம் கூடச் சொல்லாமல்" என்று தன் தோழியை ஆழம் பார்த்தாள் ரேணுகா…



அவளுக்குத் தான் எல்லாம் தெரியுமே... தன் மாமன் மகனின் கைங்கர்யம்.



தோழியின் கேள்விக்கானப் பதிலில்லாமல் தவித்த மதுமிதாவிடம் ‌"என் கல்யாணத்துக்கு உன் அவரையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் மது" என்று சீண்டினாள் ரேணுகா…



அவளின் கேலியில் முகம் சிவப்பதற்குப் பதலாத உள்ளம் துடித்தது வலியில்.. இனி எந்த உரிமையும் இல்லாத தன் நிலையை எண்ணி…



அந்நேரத்தில்



தோழிகள் இருவரையும் தேடித் கதிர் வேந்தனுடன் பானுமதி வந்திருந்தார் …



அவரின் வரவை எதிர்பார்க்கவில்லை இருவரும்…



தோழிகளின் வியப்பைக் கண்டு…" என்ன உங்களுக்குத் தொந்தரவு ஆகிருச்சா நாங்கள் வந்தது…ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உங்களுக்குப் பேச நிறைய இருக்கும்… இல்லையா" என்றார் ரேணுகாவைப் பார்த்து…



அவர் எதற்கு வந்திருக்கிறார் என்று ஊகித்த மதுமிதா…



"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆன்டி" என்றவளை முறைத்தான் கதிர் வேந்தன் …



அவளின் ஆன்டி என்ற விளிச்சொல் அந்நியமாக இருந்தது அவனுக்கு…



காலியான வீட்டில் விஷேசம் காரணமாக இங்கே போட்டு வைத்திருந்த மெத்திருக்கையைக்காட்டி



"வாங்க ... உக்காருங்க ஆன்டி " என்றவள் ...



மெத்திருக்கையில் அனைவரும் அமர்ந்ததும்... தன் தாயின் அருகில் அமர்ந்தான் கதிர் …. அவனுக்கு நேரெதிராகப் பெண்கள் இருவரும் அமர்ந்த‌ நேரம் அங்கே வந்த தருண் மெத்திருக்கையின் பக்கவாட்டில் வந்து அமர்ந்துக் கொண்டான்…



மதுவிடம் எப்படித் தன் உரையாடலைத் தொடங்க என்று தவித்த பானுமதியின் நிலையைக் கண்டு மனதில் வேதனை வந்த போதும் அவரைச் சாதரணமாக உணர வைக்க "எப்படி இருக்கீங்க ஆன்டி… அங்கிள் உடல் நிலை எல்லாம் எப்படி இருக்கிறது?" எனறு வினவினாள் மது… அவளுக்குத் தான் தெரியுமே கதிரின் தங்கை வீடு விட்டுச் சென்றதும் அவனின் தந்தைக்கு வந்த மாரடைப்பு…



" அவர் நல்லா இருக்காரு மது … உன் அப்பா இறந்த கொஞ்ச நாளிலேயே யாரிடமும் சொல்லாமல் எங்கே போனாய் நீ" என்று கேட்டார், பானுமதி. "ஏன் மது , எங்களுக்குத் தகவல் தரவே இல்லை நீ ... அவ்வளவு அந்நியமாகிட்டோமா" என்ற பானுமதியின் வினாவிற்குப் பதிலில்லாமல் கதிரின் முகத்தை ஏறிட்டவளுக்கு, அவன் முகத்தில் தெரிந்தது எல்லாம் சினம் மட்டுமே , அதில் மனதில் பயம் பிறக்க, தன் பார்வையை மீண்டும் பானுமதியின் பக்கம் திரும்பியவள்…



" தவறு தான் ஆன்டி…



" முதலில் என்னை 'ஆன்டி' என்று கூப்பிடாமல் அழகா அத்தை என்று கூப்பிடு மதி " என்று அவளுக்கான உரிமையை அவள் கேட்காமலேயே கொடுத்தார் பானுமதி.



சரி ஆன்டி என்று வந்தவள் அத்தை என மாற்றிக்கொண்டாள் வார்த்தைகளை...



எங்கே இருந்தாய் யாருமில்லாமல் தனியாக... உன் அப்பா ஆத்மா எவ்வளவு வேதனைப்படும். நீ இப்படி யாருமில்லாமல் தவிக்கும் போது" என்றார் அவளின் மாமியார்.



"இங்கிருந்து நீ போகவேண்டிய காரணத்தை என்னிடமாவது சொல்லி இருக்கலாம்" என்று பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தைகளைக்கொண்டு அவர் கேட்டக் கேள்வியின் ஆழம் உணர்ந்தவள் சட்டெனக் கதிர்வேந்தனைத்தான் பார்த்தாள். அவன் முகத்தில் எதுவும் தெரிந்துக்கொள்ள முடியவில்லை அவளால்...



"ம்ம் சரி விடு... என் பொண்ணை எங்கே பார்த்தாய் நீ... அப்பொழுதாவது எங்களிடம் வந்து சொல்லி இருக்கலாம் தானே மது"... என்றார்.



"நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் என்ன பண்ண அத்தை... அவள் மன நிலையில் அவளை மீறி என்னால் எதுவும் பண்ண முடியவில்லை. மன்னித்து விடுங்கள். இப்போது நான் அவளை அழைத்து வர, என்ன எல்லாம் செய்து இருக்கேன் தெரியுமா? என்றாள் மதுமிதா.



தெளிவாகச்சொல் மது என்ற பானுமதியின் வார்த்தைகளைக்கேட்டு எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் மதுமிதா.



நான் இங்கே இருந்து போனது ஒரு கிராமம் போன்ற ஊருக்குத்தான் அத்தை. அங்கே ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலைக்குத் தான் போய்ச் சேர்ந்தேன்...

அங்கே தான் மித்ராவை நிறைமாதக் கற்பினியாகப்பார்த்தேன். அந்தப் பள்ளியில் வேலைச்செய்யும் ஆயாம்மா உடன் அவளும் வருவாள். அவரிடம் விசாரித்தில் அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து விட்டான் என்று கூறினார்.



ஒரு நாள் நான் அவளை நேரில் போய்ப் பார்த்து என்னோடு வா என்று அழைத்தேன்... வரவே மாட்டேன் மறுத்தவளைக் கஷ்டப்பட்டு என்னோடு கூட்டி வந்தேன் அத்தை என்றாள் மதுமிதா.

எதையும் மனம் திறந்துப் பேசவே மாட்டாள் அத்தை ... மெல்ல மெல்ல அவளிடம் எல்லாம் கேட்டுத்தெரிந்து கொண்டேன் அவள் திருமண வாழ்க்கையைப் பற்றி.அவளோட திருமண வாழ்க்கையில் பல துன்பமும் துயரமும் தான் நிறைந்தது… அவளிடம் கேட்டாலும் சொல்ல மாட்டாள் அத்தை, எல்லாம் மனதிலே போட்டுத் தன்னையே வதைக்கொள்கிறாள் " … என்றவள் .... கொஞ்ச நேரம் அமைதியானாள்…மதுமிதா…



இதைக் கேட்ட ரேணுகா "என்னடி , சொல்ற" என்றாள்…



" ஆமாம் ரேணு " என்றவள் …

மித்ரா , காதலில் ஜெயிச்சு, வாழ்க்கையில் தோற்றக் கதையைக் கூறலானாள் மது…



" மித்ரா , காதலித்தது எங்க கூடக் கல்லோரியில் படிக்கும் மாணவன் தான் … அவனை எனக்குத் தெரியும் அவள் டியூஷன் போற இடத்தில் தான் இருக்கான் ... நான் கூடச் சொல்லி இருக்கேன் அவர் கிட்ட " என்று கதிரைப் பார்த்தாள் ... 'நீ தான் என்னை நம்பாமல், தவறாகப் பேசினாய்' என்ற குற்றசாட்டும் பார்வை அது…



அவள் அண்ணாவிற்குத் தெரிந்து விட்டது என்று பயத்தில் காதலனிடம் அவள் கூற , அந்தப் பையனும் இவளிடம் கடைசிப் பரீட்சை அன்று நாம் ஒடிப் போயிடலாம் என்றும் , கையில் கொஞ்சம் பணம் எடுத்து வந்தால் போதும் சொல்லி இருக்கான் ... அவன் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் கையில் பணத்தோடு சென்று இருக்கிறாள் மித்ரா …



இருவரும் ஏதோ ஒரு கோயில் வைத்துத் திருமணச் செய்து இருக்கின்றனர் ...



கொஞ்சம் நாட்கள் இளமையின் உணர்வில் பயணித்த அவர்கள் வாழ்க்கைப் பயணம் எதார்த்தம் வரும் போது தடுமாறிக் கீழே விழத்தொடங்கியது…



அதன் ஆரம்பப் புள்ளியாக மித்ரா , கர்ப்பம் ஆனாள்... தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்குத் தினக்கூலிச் சென்றவனுக்கு வருமானம் போதியளவு இல்லாமல் பற்றாக்குறை வாழ்க்கை வாழ்ந்தனர்…



அவன் அப்பா ஆனதை உடன் வேலைச் செய்யும் நண்பர்களோடு கொண்டாடக் குடித்தவன், போதையின் பிடியில் அதீத வேகத்தில் வண்டி ஒட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டான்…

கணவனை இழந்து மித்ராவிற்குப் பொருளாதாரம் மிகப்பெரிய சவலாக இருந்தது. பள்ளிப் படிப்பு மட்டுமே அவள் தகுதி என்பதால் எங்கள் பள்ளிக்கு ஆயாம்மா வேலைப்பார்க்கும் அக்கா அவள் பக்கத்தி வீட்டில் இருப்பதால் மித்ராவின் நிலையைக் கண்டு இந்த வேலையை வாங்கிக் கொடுத்தார். கர்ப்பமாக இருந்த இந்த நிலையில் எங்கேயும் வேலைக் கிடைக்காததால் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாள்…





இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவளைச் சந்திக்க நான் போனேன்… என்னைப் பார்த்தும் அழுதவளை என்னோடு அழைத்து வந்து விட்டேன். நாங்கள் இருக்கும் பகுதியில் தேவையில்லாத பேச்சுக்கள் வரும் என்று நாங்களும் எங்கள் வீட்டை மாற்றிக் கொண்டோம் …



புதிய இடம் புதிய மனிதர்கள் என்று சென்ற வாழ்க்கையில் போய்க்கொண்டிருந்தது. நான் சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்துட்டு இருந்தேன்... மித்ராவை இங்கே அழைத்து வர... அப்போது தான் இந்த ஊரில் இருக்கும் அரசுப்பள்ளியில் எனக்கு ஆசிரியர் பணிக் கிடைத்தது... இதைக் காரணம் சொல்லி அவளை அழைத்து வர ஏற்பாடு செய்துவிட்டேன் அப்போது தான் ரேணு என்னை அழைத்ததும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கிட்டேன்" என்று ஒருவாறு எல்லாம் சொல்லி முடித்தாள் மதுமிதா…



மதுமிதா , கூறிய அனைத்தையும் கேட்டவர்களுக்கு மித்ராவின் காதலினால் ஏற்பட்ட துன்பமும் இந்தச் சிறு வயதிலேயே கைம்பெண்ணாகப் பிள்ளையோடு நிற்பதும் மனவேதனை உண்டாக்கியது…



பானுமதிக்கு , தன் மகளின் வேதனையைக் கேட்டு உயிர் போகும் வலியை உருவாக்கியது…

தன்னிலை இழந்து அவர் அழுத அழுகையில், தாயின் நிலைக்கண்டு அவளைக் கதிர் அணைக்கவும் மதுமிதாவும் வேகமாக வந்து பானுமதியை அணைத்திருந்தாள்…



இருவரும் பானுமதியை அணைத்ததில் கதிரின் கைகளில் உள்ளே தாயும் தாரமும் அடைகளமாயினர்…

இந்த நிலையில் கொஞ்சம் நேரத்திற்கு அமைதியானது அந்த வீடு…



வேதனையின் அமைதி

அறையின் சுவற்றில்

தெறித்துக் கண்ணீராக

எதிரொளித்தது தாயின்

கண்களில்…

தாயின் வேதனையை மட்டுமே கதிரின் கவனத்தில் வர, தன் நண்பன் தருணைக் கவனிக்காமல் விட்டு விட்டான்…



தருண் வந்ததில் இருந்து அவனையும் கவனித்த ரேணுகாவிற்கு , அவன் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள் அவதானித்தவள் அருகில் வந்து அமர்ந்து, அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஆறுதலாக…



தங்கையின் கைகளில் ஆறுதலை உணர்ந்தவன் , சட்டென்று எழுந்து அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றான் தருண்…



தன் காதலை யாரிடமும் பகிர்ந்திடாதவனுக்கு ரேணுகா , தன் உணர்வுகளைப் படித்ததில் தடுமாற்றம் எற்பட அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்…



பானுமதியை அணைத்தவாறே " நீங்களே இப்படி உடைஞ்சுப் போன எப்படி அத்தை ... அவளை நாம் தான் வாழ்க்கையில் அடுத்த நிலைக்குக் கூட்டிப் போக உதவணும்" என்றவள்…



அவள் பாதியில் நிற்கும் படிப்பைத் தொடர்ந்து படிக்கச் சொல்லி இருக்கேன் அத்தை, அதற்கு வேண்டிய எல்லாம் ரெடிப் பண்ணியிருக்கேன் ரேணுவோட உதவியால்… நாம் தான் அவள் அடைந்து இருக்கும் கூட்டிலிருந்து, அவளை வெளியே கொண்டு வந்து பறக்கச் சொல்லணும்" என்றாள் மதுமிதா..



அவளின் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஆழமாகப் பதிந்தது பானுமதிக்கு…



" நீ சொல்லறதும் சரி தான் மது " என்றவர் " உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை … அவள் கூடப்பிறந்தவள் போல உதவி இருக்கிறாய் என் பொண்ணுக்கு" என்று அவரின் மருமகளை அணைத்து இருந்தாள் பானுமதி…

என் கடமையாகத் தான் பார்க்கிறேன் அத்தை என்ற அவள் வார்த்தையின் அர்தத்தை உணர்ந்தக் கதிர்வேந்தன் அவளைப்பார்த்தப் பார்வையில்தொக்கி இருந்த கேள்விக்கு வரும் நாட்களில் பதில் சொல்லிச் சொல்லிச் சோர்ந்துப்போவாள் மதுமிதா.



தொடரும்...
 
Top