காலையிலேயே விஹான் அறையின் வாயிலில் 15பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. சாத்விகாவும், பிரணவிகாவுக்கும் பயத்தில் கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிடும் போல அப்படி நின்றனர்.
“சொன்னேனே வேணாம் வேணாம்னு கேட்டியா கேர்ள்? இப்போ விஷயம் அம்மாவுக்குப் போகப் போகுது.. நம்ம முதுகுல அம்மா டின்னு கட்ட போகுது” எனப் புலம்ப ஆரம்பித்தாள் சாத்விகா.
“இருடி! நானே சிங்கத்து குகைக்குள்ள போய்ட்டு எப்படி உயிரோட திரும்பப் போறோம்னு பீதில இருக்கேன். நீ வேற” என நகத்தைக் கடித்து, கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் பிரணவிகா.
“இப்படி மாட்டி விட்டுருச்சே அந்த ஆண்ட்டி மேடம்.. என்ன பண்ண போறானுன்கனு தெரியலயே” என ஆளாளுக்கு ஆளுக்கொரு புலம்பலாக வெளியே நிற்க, அவனோ பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேலையில் மட்டும் கவனமாக இருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்த பிறகே உள்ளே அனுமதித்தான் விஹான்.
“வாங்க! வாங்க! வருங்கால டாக்டர்ஸ்.. பேஷண்ட் உயிரெல்லாம் விட உங்க ஜாலி தான முக்கியம் வாங்க.. உங்க எல்லாரையும் போலத் தான் டாக்டர்ஸ் எல்லாம் இருக்கனும்.. நமக்கு நம்ம எஞ்சாய்மெண்ட் மட்டும் தான முக்கியம்.. யார் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன?” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
கோரஸாக “சாரி சார்” என்ற பதில் தான் வந்தது. விஹானின் கண்களளோ அவனவளைத் தேட, அவளோ அவன் வாணரப்படையின் பின்னால் மறைந்து நின்றாள்.
“சாரி சொன்னா சரி ஆகிடுமா? நேத்து உங்களால எத்தனை பேஷண்ட்ஸ் சஃப்பர் ஆனாங்க தெரியுமா? எத்தனை டாக்டர்ஸ் அண்ட் ஸ்டூடெண்ட்ஸ் கிரவுட் ஜாஸ்தி ஆனதுல கஷ்டப்பட்டாங்க தெரியுமா? ஆனா நீங்க ஊர் சுத்த போயிருக்கீங்க ரைட்?”
“சாரி சார்” மீண்டும் கோரஸாக,
“நீங்க எல்லாம் ப்ரோஃபெஸ்னல் தான? உங்க மோட்டோ என்னனு உங்களுக்குத் தெரியும் தான? அப்படியும் டியூட்டிய கட் பண்ணினா என்ன அர்த்தம்?”
“சாரி சார்” மீண்டும் கோரஸாக,
“சாரி.. சாரி.. இந்த சாரி எதை சரி பண்ணும்னு நினைக்கிறீங்க? நேத்து அத்தனை பேஷண்ட்ஸ் முடியாம க்யூல ரொம்ப நேரம் வெயிட் பண்ணாங்களே.. அத மாத்த முடியுமா? அவங்க டியூட்டியும் உங்க டியூட்டியும் சேர்த்து அத்தனை மணிநேரம் வொர்க் பண்ண கஷ்டப்பட்டாங்களே உங்க கோ-ஸ்டூடண்ட்ஸ்.. அத தான் மாத்த முடியுமா? எத மாத்த முடியும் உங்க சாரி?”
அந்தப்பக்கம் அமைதி.. அவர்களது தவறு கண்முன் நிற்க மீண்டும் பேச முடியாத நிலையில் அனைவரும் நின்றனர் என்றால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றனர் இரட்டையர்கள்.
“இப்படி பங்க் பண்ணினதுக்கு சஸ்பெண்ட் கூடப் பண்ணலாம் ஞாபகம் இருக்கு தான?”
“சார்.. சார்.. நோ சார்.. சாரி சார்”
“ஜஸ்ட் ஸ்டாப்பிட்.. எல்லாம் பண்ணிட்டு சாரி. தெரியாம பண்ணினா தான் சாரி கேட்கனும். பிளான் பண்ணி பண்ணினதுக்கெல்லாம் சாரி அவசியமில்லாதது”
“சாரி சார் இனி பண்ண மாட்டோம் சார். சாரி சார்”
“ஒஹ்! இனிமே திரும்பவும் பண்ற ஐடியா வேற இருந்துச்சா?”
“அய்யோ இல்ல சார். சாரி சார்”
“நீங்க எல்லாம் டாக்டர்ஸ். ஒரு உயிரைக் காப்பாத்துற டாக்டர்ஸ். நானே நினைச்சா கூட என்னால ஒரு உயிரைக் காப்பாத்த முடியாது. உங்களால அது முடியும்னா அது எவ்ளோ பெரிய விஷயம்? அத இப்படி சில்லி ரீசன்க்காக ஸ்பாயில் பண்றீங்களே! நேத்து நீங்க இல்லாததால எதாவது அசம்பாவிதம் எதுவும் ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்? இனியாவது யோசிச்சு ஒரு டாக்டர்ஸ் மாதிரி பிகேவ் பண்ணுங்க”
“சூயர் சார். தங்க் யூ சோ மச் சார். ஒன்ஸ் அகென் சாரி சார்”
“இனி உங்க பேர்ல எந்தக் கம்ப்ளைண்ட்ஸூம் வரக் கூடாது. காட் இட். போங்க” எனக்கூற அனைவரும் செல்லும்போது மறைந்துகொண்டே இருவரும் செல்ல,
“பிரணவிகா, சாத்விகா நீங்க மட்டும் நில்லுங்க” எனக்கூற,
‘மாட்டினோம் திரும்ப இந்த சிடுமூஞ்சிட்ட மாட்டிட்டோம்.. சிங்கத்து குகையிலருந்து எப்படியாவது தப்பிக்க வச்சிடு உன்னை எவ்ளோ கும்பிட்டேன்.. கை விட்டுட்டியே கடவுளே! இனி வச்சி செய்வானே!’ என மனதில் நினைத்துத் திருதிருவென முழித்தபடி நின்றாள் பிரணவிகா.
சாத்விகாவுக்கு உயிரே இல்லை. இவனிடமும் வசவு வாங்கி, அது கார்த்திகாவுக்கு தெரிய வந்தா அவ்வளவு தான். ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு அம்மா கையால் அடி வாங்குவது உறுதி என்ற எண்ணத்தில், அவளது கண்களோ நீர்வீழ்ச்சியானது.
இவர்கள் இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஏனையவர்கள் வெளியேற,
“சாத்வி என்ன பழக்கம் இது?” என்றான் கடுமையான குரலில். அதிலே அவளுக்குச் சர்வமும் அடங்கிவிட்டது.
“சாரித்தான். இனிமே அப்படி செய்யமாட்டேன்” என அழுதபடி கூற,
“அவ தான் வாலில்லாம ஆடுறானா.. நீயும் இப்போ அவளோட சேர்ந்துட்டியா? உன்ன பார்த்து அவ திருந்துவானு பார்த்தா.. நீ அவள பார்த்துக் கெட்டுக்கிட்டு இருக்க..”
“சாரித்தான்”
“இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங். கிளம்பு”
“அம்மாக்கிட்ட சொல்ல வேண்டாம்த்தான்”
“அந்த பயம் எல்லாம் தப்பு செய்ற முன்னாடி தெரியலயோ?”
“சாரித்தான்” என்றாள் சாத்விகா அழுதபடி, அவள் பின்னால் மறைந்தபடி நின்றிருந்தாள் பிரணவிகா.
“சொன்னா தான் பயம் இருக்கும்.. ஆனா எப்போ சொல்லுவேனு தெரியாது.. இனி ஒரு கம்ப்ளைண்ட்ல உன் பேர் வந்தா நீ அத்தை கூடத் தான் காலேஜ் வரனும்”
“தப்பு பண்ண மாட்டேன் த்தான்”
“சரி. கிளம்பு” எனக்கூற, இருவரும் வாயிலை நோக்கிச் செல்ல,
“நான் சாத்விய மட்டும் தான் போகச் சொன்னேன். நீ நில்லு” எனக்கூற,
‘சிக்கிட்டோம்.. தனியா சிக்கிட்டோம்.. இனி இந்தக் காண்டாமிருகம் வார்த்தையால சுழட்டி சுழட்டி அடிக்கும்.. அடியேய் சாத்வி விட்டுட்டு போய்டாத டீ’ என மனதில் நினைக்க, அவளோ இவளைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள்.
‘போய்ட்டா.. சண்டாளி தனியா விட்டுட்டு போய்ட்டா.. இருடீ இன்னைக்கு உனக்குப் பேதி மாத்திரையைப் பால்ல கலக்குறேன்’ என வன்மமாக நினைக்க, அவனோ அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் அமைதியாக நிற்க,
“இந்த வாய் என்கிட்ட மட்டும் தான் இப்படி கம் போட்டு ஒட்டினமாதிரி இருக்குமோ? மத்த நேரமெல்லாம் நிக்காத ரோடியோவாட்டம் வாய் லொடலொடனுட்டே இருக்குமோ?”
அந்தப்பக்கம் எங்கிருந்து பதில் வர, தலைவர் சின்சான் போல அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதினு நின்றிருந்தாள் அந்த இரட்டை வால் குரங்கு.
“பதில் வரனும்..”
“ஹ்ங்” என்றாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லனும்”
“சரி”
“ம்ம் சொல்லு”
“என்ன சொல்லனும்?”
“பதில்” என அவன் கேட்ட கேள்விக்கு பதிலை அவளிடம் கேட்க அவளோ,
“பதில்” என்றாளே பார்க்கலாம். அவனுக்கோ அடக்கிவைத்திருந்த கோபம் கண்மண் தெரியாமல் ஏற,
“ஏய்! என்னடி நக்கலா பண்ற?”
“ஐயோ இல்ல” என்றாள் பதறியபடி,
“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுன்னா பதில்னு சொல்ற”
“என்ன கேட்டீங்க?” என ஏகத்துக்கும் அவன் இரத்த அழுத்தத்தை ஏற்றினாள். எத்தனையோ பேரைத் தொழிலில் சமாளித்திருக்கிறான் ஆனால் அவளோ அவனுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறாள்.
“ஆமா பிரின்ஸ்னா யாரு?” எனக்கேட்க விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
“பிரின்ஸ்னா இளவரசன்”
“சாவடிச்சிருவேண்டி.. கடுப்ப கிளப்பாத”
“பிரின்ஸ்க்கு தமிழ்ல இளவரசன் தான.. அத தான் சொன்னேன்.. ஏன் மிரட்டுறீங்க?” என்றாள் முற்பாதி சத்தமாகவும் பிற்பாதி முனங்கலாகவும்.
“இங்க வாடி..” என்றான்.
“இல்ல.. இங்கயே நிக்கிறேன்” என்றாள் முந்தைய சந்திப்பின் அனுபவத்தால். அவன் அன்று கட்டி பிடித்ததையும், முத்தமிட வந்ததையுமே இன்னும் அவள் மூளை மறந்து தொலைக்கவில்லை.
“வான்றேன்ல” எனக்கடுமையாகக் கூறவும், மெல்ல ஆமைபோல் நடந்து வந்தாள்.
“வா.. உன் வீடியோ ஒன்னு இருக்கு வா..” எனச் சாதாரணமாகக்கூற, அவளுக்கோ பகீரென்றானது. இப்போதெல்லாம் உன் வீடியோ பார்த்தேன் எனக்கூறினாளே பயமாகத்தான இருக்கிறது.
“என்ன வீடியோ? எங்க எடுத்தீங்க?” என அடுத்த நொடி அவனை இடித்துத் தள்ளியபடி அவன் மடிக்கணினி அருகில் வந்து அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள். அதிலோ சற்று நேரத்திற்கு முன் அவனது அறை வாயிலில் நடந்தது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
சாத்வி “எல்லாம் உன்னால தான் கேர்ள்.. நான் ஒழுங்கா காலேஜ் வரலாம்னு தான சொன்னேன்.. என்னென்னமோ சொல்லி என் மனச மாத்தி இப்போ இங்க வந்து நிக்க வச்சிட்ட கேர்ள்”
“அட இவ வேற புள்ளத்தாச்சியாட்ட பினாத்திட்டே இருக்கா.. நானே அந்தக் காண்டாமிருகம் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசனையில இருக்கேன்” எனத் தான் கூற, பயந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவளுக்குக் கேமரா இருக்கு என்பது தெரியும் ஆனால் மைக்கும் சேர்த்து இருக்கு என்பது இப்போது தான் தெரியவர, மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இதுக்கே என்ன பார்வை? மொத்தமா பாரு அப்புறம் என்ன சைட்டடிச்சுக்கலாம்” எனக்கூற,
‘அய்யய்யோ நான் வேற வாயில வந்ததெல்லாம் பேசினேனே! போச்சு இந்தக் காண்டாமிருகம் இன்னைக்கு நம்மள உப்புக்கண்டம் போடப் போவுது. பிரணி இன்னைக்கு உன் பிராணன வாங்க போறோன் போ’ என நினைத்தபடி மீண்டும் கணினியைப் பார்க்க, அவள் அருகில் நின்ற சிவா என்பவனோ,
“ஏய் பிரணி.. உன் பிரின்ஸ் இப்போ எதுக்கு எங்களயும் சேர்த்து கூப்பிட்டு இருக்கார்?” எனக்கேட்க,
“ஏய் யார் டா என் பிரின்ஸ்.. இவரா.. இவருக்குச் சிரிக்கவே தெரியாது.. இவர போய் என் பிரின்ஸ்ஸோட கம்பேர் பண்ற.. கொன்றுருவேன் ஓடிரு”
“சும்மா நடிக்காத.. நம்ம எல்லாரும் தான் தப்பு பண்றோம் ஆனா உன்னை மட்டும் குறிப்பா ரூம்குள்ள கூப்பிட்டு அப்படி என்ன பேசுவார்?”
“இப்போ மொத்தமா கூப்பிட்டுருக்கார்ல.. உள்ள போய் என்ன பேசுவார்னு பாரு”
“என்ன பேசுவார்னு தெரிஞ்சா பிரிப்பேரா இருக்கலாம்ல”
“எனக்கு என்னடா தெரியும்.. நானே கடுப்புல இருக்கேன்”
“என்ன உன் பிரின்ஸ்ஸ தனிமையில காண முடியாத கடுப்பா?”
“பிரின்ஸ் பிரின்ஸ்னு இவர சொல்லாதடா காண்டாவுது”
“நீ என்னவும் சொல்லு நான் பிக்ஸ் ஆயிட்டே. இவர் தான் உன் பிரின்ஸ்” எனக்கூற, அவன் முதுகிலேயே பளார் பளார்னு விட்டுக்கொண்டிருந்தாள் வீடியோவில்.
மெல்ல கண்களை நிமிர்த்தி அவனைப் பார்க்க, “இப்போ சொல்லு பிரின்ஸ் யாரு?”
“அது சும்மா விளையாட்டுக்கு”
“என்னை வச்சு தான விளையாடுறீங்க.. அப்போ எனக்கு ரீசன் தெரிய வேண்டாமா?”
“உங்கள வச்சு எல்லாம் இல்ல” என்றாள் பயந்து கொண்டே,
“வீடியோவ பார்த்த தான?”
“இல்ல அது சிவா தான்.. நான் இல்ல”
“சரி பிரின்ஸ்னா யாரு அத சொல்லு?”
“அது சும்மா என் பியான்ஸ்ஸிய பிரின்ஸ்னு சொல்லுவேன்.. அத அவங்க கிண்டல் பண்றாங்க”
“ஓஹ்! அப்போ நான் உன் பியான்ஸியா?”
“ச்சீ இல்ல இல்ல..” எனக்கூற அதிலும் ‘ச்சீ’ கூறியதும் சினத்தைக் கிளப்ப,
“என்னது ச்சீயா? அதெப்படி சொல்லுவ இல்லனு.. நான் தான் உன் பியான்ஸி.. இனி நீ என்னை பிரின்ஸ்னு தான் கூப்பிடனும்.. எங்க கூப்பிடு” என்று கூறி அவள் தலையில் பெரிய பாராங்கல்லை தூக்கிப் போட்டான்.
அவள் அதிர்ந்து போய் நிக்க, அவள் கண்களைப் பார்த்தவன், ‘எப்பா இந்தக் கண்ணைப் பார்த்தாலே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடிய மாட்டிங்குது.. இப்படி வாய பொழந்து கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்கா பாரு.. ஒன்னும் தெரியாத அப்புராணி மாதிரி.. ஆனா செய்றதெல்லாம் அறுந்தவாலு செய்யுற வேலை’ என அவளை மனதோடு திட்டுவதாக எண்ணிக் கொஞ்சிக் கொண்டாலும், முகத்தைக் கடுமையாகவே வைத்திருந்தான்.
அவள் இன்னும் தெளியாததைக் கண்டு, மனதுக்குள் குறும்பாகச் சிரித்துக்கொண்டு,
“இப்படி வாய பொழந்து என்னை சைட் அடிச்சீனா.. எனக்கு என்னென்னமோ எல்லாம் தோனுதே” எனக்கூறிக்கொண்டே அவளருகில் செல்ல,
“ஐயோ இல்ல” என வெளியில் செல்லப் போனாள்.
“இன்னும் நான் உன்னைப் போகச் சொல்லல” எனக்கூறவும் அவள் கால்கள் தானாக நின்றது.
“சாரி.. இனி இப்படி பேசமாட்டேன்.. தப்பு பண்ண மாட்டேன்.. இந்த ஒரு தட மன்னிச்சிடுங்க.. நான் போகட்டா?”
“நான் என்ன ஆடா? மாடா? ஒன்னு சார்னு சொல்லு, இல்ல அத்தானு சொல்லு இல்ல உனக்குப் பிடிச்ச மாதிரி பிரின்ஸ்னு சொல்லு”
“இல்ல இல்ல சார்.. சார் தான்”
“ம்கூம் பிரின்ஸ். எனக்கு அதான் பிடிச்சிருக்கு.. என்னை இனி அப்படித்தான் கூப்பிடுற” எனப் பேசிக் கொண்டே அவளை நெருங்கிவிட்டான். அவள் முன்னரே சுவரருகில் நிற்க, இப்போது அவனும் அவளை ஒட்டியும் ஒட்டாத நிலையில் நின்றான்.
அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை ஒதுக்கிக் காதோரம் சொறுக, அவளால் நிற்கவே முடியவில்ல. கால், கை எல்லாம் நடுக்கி, முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் வெளிவர,
“என்னடி ஏசி ரூம்ல இப்படி வேர்க்குது உனக்குனு” எனக் கூறிக் கொண்டே, அவன் கைக்குட்டையால் மெல்ல ஒற்றி எடுத்தான். அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. வாசனை திரவியத்தின் நறுமணமும், அவனின் மணமும் சேர்த்து அவளை என்னவோ செய்துவிட்டது.
கிட்டத்தட்ட அவனின் இந்த அருகாமை, அவன் மணம் எல்லாம் சேர்ந்து அவளை எங்கோ இழுத்துக்கொண்டு தான் சென்றது. சராசரி பெண்ணாக இருந்தால் இதை இன்றே அவன்மேல் உள்ள ஈர்ப்பு, அல்லது காதல் என்றே கணித்திருப்பாள் ஆனால் இவளோ அதைப் பயம் என்று கணித்து தவறிழைத்துவிட்டாள்.
“நா.. போகனும்” என வார்த்தை தந்திஅடிக்க, கண்களிலோ கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது அவளுக்கு, மோகநிலையில் இருந்தவனுக்கு அவளைவிட மனமில்லை, அவ்வளவு நெருக்கத்தில் அவன் மனம் தடுமாறவே செய்தது.
அவள் கண்ணீர் கூட அவன் மனதில் படவில்லை, தன் கைகளால் அவள் கண்ணத்தை இறுக பிடித்து, அவள் இதழுடன் தன் இதழை அழுத்தமாக ஒற்றினான். அவனளவில் முதல் முத்தம் தித்திப்பானது. ஆனால் அவளுக்கோ அது அத்துமீறல். தன் முழு பலத்தையும் உபயோகித்து அவனைத் தள்ளிவிட்டுப் புயல் போல அறையை விட்டு அழுது கொண்டே வெளியேறினாள்.
அங்கு அவளுக்காகவே காத்திருந்த அவள் வாணரப்படை, அவ்வளவு நேரமும் அவள் அவனுடன் ரொமான்ஸ் செய்கிறாள். அவனைத்தான் விரும்புகிறாளென ஆளுக்கொண்றாகக் கூறிக்கொண்டிருக்க, அழுகையுடன் வந்தவளைக் காணவும் பதறிவிட்டனர்.
ஆளாளுக்கு என்ன என்னவெனக் கேட்க, அவளோ யாருக்கும் பதிலளிக்காமல், கிட்டத்தட்ட ஓடினாள் என்றே சொல்லலாம். சாத்வி தான் அவளைப் பிடித்து நிறுத்தி என்னவெனக் கேட்க, அவளிடம் மட்டும் அவன் முத்தமிட்டதைக் கூறிவிட்டாள் அழுகையுடன்.
சாத்விக்கும் முத்த அனுபவம் இருக்கிறது ஆனால் அது இருமனமும் சம்மதித்து நடந்த பரஸ்பரமான முத்தம். ஆனால் இங்கு நடந்தது அவளுக்கும் அத்துமீறலாகவே பட்டது. சாத்விக்கு விஹான் இவள் மீதுள்ள காதல் தெரியும் ஆனாலும் பிரணியிடம் அவன் காதலை வெளிப்படுத்தி அவள் சம்மதத்துடன் நடக்க வேண்டியதை இப்படி தடாலடியாகச் செய்தது அவளுக்கும் வருத்தமே!
இனி பிரணவிகா எடுக்கப் போகும் முடிவு என்ன?