அத்தியாயம் - 5
வேலைகளுக்கு நடுவே வயிறு தன் இருப்பை உணர்த்த, உணவு அறையை நோக்கிச் சென்றவன் நாசியை நிறைத்தது, மனைவி தனக்காக அனுப்பி வைத்த பகலுணவு..
பெண்ணவளின் கைமணத்தில் தனக்குப் பிடித்த மிளகு ரசத்தில், கொத்தமல்லி இலைகளின் தூக்கலான வாசனை அவன் பசியை மேலும் தூண்டியது.
ஆம்! அவள் வந்த பின் உணர்ந்தது, தனக்கு உணவில் விருப்பு, வெறுப்புகள் உண்டு என்பதை…!
காரணம்… அவன் அன்பால் பரிமாறும் உணவை உண்பதே திருமணத்திற்குப் பின்பு தான்.
தாய் இருப்பின், அவனது வயிற்றுப் பசியோடு சேர்த்து, மனப்பசியையும் போக்கி இருப்பார். பதின்மவயதில் தாயை இழந்த துரதிர்ஷ்டசாலி அவன்!
ஒருவனின் வயிற்றுப் பசியைப் போக்குபவனை தெய்வம் என்பர். அதனாலேயே அன்னையரும் தெய்வங்களே... பிள்ளையின் பசியை அன்னையைத் தவிர உணர உலகில் ஓர் அரிய பிறப்பு இல்லை.
ஆனால் அவன் விடயத்தில், அவன் பசியைப் போக்கிய தாரமே, அவனது இன்னொரு தாய்.
ஆம்! தாய் தான்... மனைவி மீது அலாதி பிரியம் கொண்டவன். ஆனால் அவன் நெஞ்சை உறுத்தும் ஒரு விஷமுள் அதை வெளிப்படுத்த அஞ்சுகிறது.
அது அவன் இறந்த காலம் செய்த கோலத்தின் வினைப்பயன்…
வயிற்றின் வழியே கணவனின் இதயத்தை அடையும் சூத்திரத்தை ஜனனி அறியாமல் அறிந்திருந்தாள். வயிறு நிறைய உண்டவன் மனம் முழுவதும் கொண்டவளே…
அந்தத் தேக்குமர ஊஞ்சலில் பள்ளிகொண்டவளின் நினைவும் கணவனைப் பற்றியே...
அருளானந்தன், விஜயாவின் செல்வப் புதல்வனே ‘அக்கண்யன்’...
மேலைத்தேய நாடுகள் இலங்கை நாட்டை ஆக்கிரமிக்க இரு காரணங்கள் பிரதானமாய்க் காணப்பட்டது. ஒன்று வாசனை திரவியங்கள், மற்றொன்று பருத்தி நெசவு ஆடை கைத்தொழில்…!
இந்த ஆடை கைத்தொழிலை ஜீவனோபாயமாக ஏற்றவரே அருளானந்தனின் தந்தை சிவானந்தன். அவர் உருவாக்கியதை அவர் மகன் மலரச் செய்தார் எனில், அக்கண்யன் விருட்சமாக்கினான் என்பதே உண்மை.
சிவானந்தன் ராஜதந்திரத்தை அறிந்தவர் என்றால் அருளானந்தனும் அகிம்சையைக் கொண்டவர். ஆனால் அக்கண்யனோ, இவர்கள் அத்தனை பேரையும் அசர அடிக்கும் அசகாய சூரன்.
புத்திக் கூர்மையும், எதையும் எதிர்த்து நிற்கும் தைரியமும், பதின்மவயதில் ஏற்பட்ட விளைவுகள் தந்த பக்குவமும்… தொழிலில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி, அவனை வெற்றியின் சிகரத்தைத் தொட்டு வரச் செய்தது.
அருளானந்தனின் இருபத்தைந்தாவது வயதில் அவர் தாய் தந்தையின் சொல்படி மணந்த மணவாட்டியே விஜயா.
மத்தியவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அது வெளிநாட்டு மோகம் மக்கள் மனதில் இடம் பிடித்த காலம்.
இதே மோகம் விஜயாவின் மனதிலும் வேரூன்றியிருந்தது. மகள் விருப்பப்படி வெளிநாட்டு வரனிற்கு... வரதட்சனை கொடுக்க முடியாத சூழலில், அருளின் பெற்றோர் விஷ்ணு கோயிலில் நடைபெற்ற உற்சவத்தில் கண்ட விஜயாவின் அழகில் மயங்கி, தன் மகனுக்கு, தெரிந்தவர் மூலம் விசாரித்து மணமுடித்து வைத்தனர்.
அமைதி பதுமையாக வலம் வந்த விஜயா, திடீரெனக் கிடைத்த வைரங்கள், விலை உயர்ந்த ஆடை அணிகலன், சொகுசு வாழ்க்கையும் அவரை டாம்பீகவாதியாக மாற்றியது.
ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட அருளின் பெற்றோர்களின் மறைவுக்குப் பின், கட்டுப்பாடற்ற வாழ்க்கை அவரைச் சுதந்திரமாகச் செயல்பட வைத்தது. வளர்ந்து வரும் தொழிலில் கவனம் செலுத்திய அருளானந்தன் இதைக் கண்டிக்கவில்லை. காரணம்… மனைவியின் பதின்மவயது ஒருபுறம் என்றால், மனைவியின் மீது கொண்ட எல்லையற்ற காதல்…
அச்சமயம் தாய்மை அடைந்தவரை, தாங்கினார் என்பதே நிஜம்!
மகனின் பிறப்பிற்குப் பின், இயல்பிலேயே பெண்மையின் தாய்மை விழிப்படைய, மகனைத் தாங்கும் மனைவியைப் பற்றிய கவலையை மறந்தவராய், தன் தொழிலை வளர்ப்பதில் ஆர்வமானார்.
ஆனால், மனைவியின் மனதில் வெளி நாட்டு வாழ்க்கையைப் பற்றிய விஷ முள்ளுள்ளதை அறியாது போனார்.
அந்த விஷம், ஒரு நாள் தன் மனைவியின் இழப்பையும், மகனின் வாழ்வில் பத்து வயதிலேயே முரட்டுக் குணத்தையும் ஏற்படுத்த போவதை அவர் அறியவில்லை.
இங்கு ஜனனியின் எண்ணத்திலோ, தன்னவனைக் கைப்பிடித்த நிகழ்வு…!
ஜனனி தன் மூன்று வயதில் பெற்றோரை இழந்தவள். நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக, மூன்று வயதேயான மகளைத் தன் தமையனிடம் விட்டு… ஜனனியின் தந்தையான ஜெகனும், அவர் மனைவி சுமித்ராவும் கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட அரசியல் கோஷ்டிகளின் தகராறில், தன் காதல் மனைவி சுமித்ராவை, சம்பவ இடத்திலேயே இழக்க நேர்ந்தது.
மகளின் எதிர்காலத்தை எண்ணி உயிரைப் பிடித்து வைத்திருந்தவர், தன் நிலையை மருத்துவமனை உதவியுடன் தம்பிக்குத் தெரிவித்தார்.
அமரனும், அவர் மனைவி தனம் மற்றும் அண்ணன் மகள் ஜனனியுடன் வைத்தியசாலையை அடைய, ஐசியூவில் அனுமதிக்கப் பட்டவர், வைத்தியர் அனுமதியோடு... தம்பியையும், தன் மகள் ஜனனியையும் கண்டவர், தம்பியை நோக்கி…
“அமர்! ஜானுமா இனி உன் பொறுப்பு. நான் என் சுமிகிட்ட போகிறேன்.
இவள் வளர்ந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு. இது இந்த அண்ணாவின் ஆசை கண்ணா”
“அண்ணா! அப்படிச் சொல்லாதீங்க. ஜானு என் பொண்ணு. உங்களைக் காப்பாற்றலாம்..”
“இ...ல்ல அமரா... என் உயிர் என்னை விட்டுச் சென்று அதிக நேரமாயிற்று. எனக்காக உ..ங்கள் அண்ணி கா...த்திருக்கிறாள்.
என் மகளுக்காகத் தான் இவ்வளவு நேரம் என் உயிரைக் கையில் பி..டித்து வைத்திருந்தேன். இனி...மேல் அவளை நீ பார்த்துக்கோ...”
குழறியபடியே கூறியவர், தன் சொத்து பற்றிய விபரங்களையும், மகளுக்குத் தான் சேமித்து வைத்த சேமிப்பு பற்றிய விபரங்களையும், தமையனிடம் ஒப்படைத்தவர்…
இரத்தம் தோய்ந்த விரல்களால் தன் அன்பு மகளின் கன்னத்தை வருடி…
“க..ண்ணம்மா! நீ நல்ல பொண்ணா எப்பவும் இருக்கணும்…”
என்று கூறியவர், மகளின் கன்னத்தில் முத்தமிட்ட அடுத்த நொடி, அந்த அன்புத் தந்தையின் உயிர், தன்னுயிரை தேடிச் சென்றது.
ஆனால் தந்தை இறந்ததைப் பற்றிக் கூட அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை…
தன் சிறிய தகப்பனின் கையிலிருந்து எக்கிக் குனிந்து தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு…
“அப்பா! வா வீத்துக்குப் போக… பாபாக்கு சாக்கி எங்க? அம்மா குப்புது… வா. . வா...”
என்று தன் தந்தையை உலுக்கிக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிட்டை இறுக்கி அணைத்த வண்ணம் கதறி அழுதார்.
தன் சிறிய தந்தை ஏன் அழுகிறார் என்று அறியாத அம்மழலை தானும் அழுதது.
அக்குழந்தை அறியவில்லை! தன் தந்தை மீளா துயிலுக்கு நீண்ட தூரம் சென்று விட்டார் என்று.
அதனாலேயோ என்னவோ, அவள் தன் கணவனிடத்தில் தன் தந்தையின் அன்பைக் காண ஏங்கினாள்.
ஒரு பெண்ணவள் அன்பையும், பாதுகாப்பையும் உணரும் ஒரே இடம், அவள் தந்தையிடம் மட்டும் தான்!
ஜனனியும், கணவன் தன் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தா விட்டாலும், அவனிடம் அன்பையும், பாதுகாப்பையும் உணர்ந்திருந்ததால் தான், அவன் மௌனத்தைத் தாங்கிக் கொண்டாள்.
தன்னிடம் பாராமுகம் காட்டும் கணவன் மகனிடத்தில் கொள்ளை அன்பு கொண்டவன்.
தன் மகனை அவன் கொஞ்சும் போது அவள் உள்ளத்தில் எழும் வரிகள் இவை…
“ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்...
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை…”
ஆனால் அந்தப் பாவை அறியவில்லை! இவ்வரிகளை விட ஆத்மார்த்தமானது அவன் அவள் மீது கொண்ட நேசமென…
அந்த நேசத்தை நெஞ்சம் முழுவதும் கொண்டவனும் அறியவில்லை! அது கடலினும் பெரிது, ஒரு நாள் தன்னை ஆழிப்பேரலையாகச் சுருட்டிக் கொள்ளப் போகின்றது என்பதையும்!
அதன் பின்பு வந்த காலங்களில் தன் ராட்சஸ மனைவியின் பிக்கல், பிடுங்கல் மத்தியிலும், கொடுமைகளின் மத்தியிலும், தன் அண்ணன் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பைக் கடினத்துடன் முடித்தார்.
ஆனால், சிறுவயதிலேயே பொறுப்பு மிக்க அந்த அன்பு குழந்தை...
“அமர்பா... சித்தியிடம் எனக்காகச் சண்டையிடாதீர்கள். நீங்க ஹாப்பியாயிருந்தா நானும் ஹாப்பியாயிருப்பேன். எனக்காக பீல் பண்ணாதீங்க...”
அந்த நொடியும் தன் சிறிய தந்தையின் கவலையைப் போக்க விளைந்தது அந்தப் பிஞ்சு.
சித்தியின் தீராத தொல்லைகளுக்கு நடுவே, BA டிகிரியை முடித்தவள், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருந்த சமயம்.
ஒருநாள் அவளைத் தனிமையில் சந்தித்த அவளுடைய சிறிய தந்தை ஜனனியை அழைத்து...
“சித்தப்பா ஒன்னு சொன்னா கேப்பியா...”
“கண்டிப்பா நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்” என்றால் இதழ் பிரியா மென்நகையோடு…
“கண்ணம்மா! என் முதலாளி அருளைய்யா தெரியும் தானே? அவர் மகனுக்கு உன்னைத் திருமணம் செய்ய அவருக்கு விருப்பமுள்ளதாக தெரிவித்தார். மிகவும் குணசாலி, நம்ம கம்பெனி ஆண்டுவிழாவில் உன்னைப் பார்த்திருக்கிறார்.
நான் உன்னிடம் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாகச் சொல்லி இருக்கிறேன். நீ என்னம்மா சொல்ற?”
“எனக்கு இப்ப திருமணம் வேண்டாம். முதலில் நான் எனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொள்கிறேனே…”
“இல்லடா… நான் நல்லா இருக்கும் பொழுதே உனக்கு ஒரு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுறேன். என்னுடைய காலத்திற்குப் பின்பு நீ அனாதையாகவோ, தனி மரமாகவோ இருக்கக் கூடாது.”
“ஏனப்பா… என்னால உங்களுக்குத் தொல்லையா? நான் உங்களுக்குச் சுமையாய் இருக்கனா?”
தன் பாசமிகு மகளின் தலையைக் கோதிய வண்ணம்...
“இல்ல கண்ணம்மா… உன்ன இந்த நரகத்தில் இருந்து வெளியே கொண்டு வரத்தான் இந்த முயற்சி.
சின்னதம்பி ரொம்ப நல்லவருடா. நீ நல்லா இருப்பமா. உனக்கான இடம் அதுதான்!’’ (ஆமா ரொம்ப நல்லவரு…)
சிறு யோசனைக்குப் பின்…
“அப்பா! அவங்க பணக்காரங்க, சுயமா தொழில் செய்பவர். என்னை ஏத்துப்பாரா?”
தொடர்ந்து அவரே…
“ஜனனிமா… ஐயா ரொம்ப நல்லவரு. உன்ன பத்தி எல்லா விஷயமும் தெரியும். உங்க சித்தி உன்னைப் படுத்துற பாடும் தெரியும். அதனால நீ தயங்காத…
நீ கோபுரத்தில் இருக்க வேண்டியவள். இந்தக் குப்பை மேட்டில் இருந்து போயிருமா. இல்லன்னா, உங்க சித்தி அவனோட அண்ணன் மகன், அந்தக் குடிகாரப்பயலுக்கு, உன்ன கல்யாணம் பண்ணி வச்சுருவா. இந்த அப்பாவுக்காகச் சரின்னு சொல்லும்மா…”
கண்களில் நீர் தேங்க... உறவுகளற்ற தனிமையில் நின்ற தன்னைச் சித்தியின் கடும் ஆதிக்கத்திற்கு மத்தியில் தாங்கிய தன் அமரப்பாவிற்காக…
“சரிப்பா… நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்கிறேன்.”
“ரொம்ப நன்றிம்மா… நான் ஐயா கிட்ட பேசுறேன்…”
அதன் பின் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டதே அவள் திருமணம்...
திருமண மேடை வரை, அவள் மனம் கவர்ந்த மணாளனை ஒருமுறை கூடச் சந்திக்கவில்லை.
அதற்கான வாய்ப்பை அவள் மணாளனும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
அதே சமயம் அக்கண்யனின் வீட்டிலோ, மைல்ட் அட்டாக்கால் இன்னலுற்ற தன் தந்தையின் இயலாமையின் பொருட்டு, அவரை மேலும் நோகடிக்க விரும்பாமல் திருமணத்திற்குச் சம்மதித்தான்.
ஆனால், அவர் தந்தை மட்டுமே அறிந்த உண்மை... தன் மகன் எந்தக் காலத்திலும் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பவனல்ல, ஒன்றை கொடுத்தால் அதை முடித்து விடுவான்.
இந்நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில், கொழும்பிலுள்ள கதிரேசன் கோவிலில், இவர்களின் திருமணபந்தம் உறவுகளும், நட்புகளும் சூழ, இறைவன் மத்தியில் இணைத்து வைக்கப்பட்டது.
திருமணத் தினத்தன்று அடர் சிவப்பு பட்டுடுத்தி, தங்க நகைகள் ஜொலிக்க, சர்வ மணப்பெண் அலங்காரத்தோடு, மூக்கில் மின்னும் மூக்குத்தியுமாக, மென்நடையோடு மணமேடையை அடைந்தவளை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.
மந்திரங்கள் ஒலிக்க, மங்கள நாண் சூடி, குங்குமமிட்ட பொழுதே தன் மனைவியைக் கண்ணுற்றான்.
நெற்றியில் திலகமிட்ட அந்த ஓர் நொடியில் தன் கண்களை நிமிர்த்தி…
தன் விழியோடு விழி கலக்க, தன்னை நோக்கிய பெண்ணின் விழியில் விழுந்து, அவள் உள்ளக் கமலத்தில் அவன் இதயம் நனைந்து போனது என்பதே உண்மை!
அருளானந்தனின் யாருக்கும் தலை வணங்கா தனையன் தான் அவன்…
ஆனால் அந்த ஆறடி ஆண் மகனின் தலை வணங்கியது ஒரு பெண்ணின் முன்னே...
அதைக் காதல் என்பதா அல்லது காலம் என்பதா?
“மாப்பிள்ளையாண்டா, இங்கே வாங்கோ, பொண்ணுக்கு காலில் மெட்டி அணிவிக்கணும்.” என்று அவன் திருமணத் தினத்தில் அய்யர் அழைத்த போது, முறுக்குடன் ‘மாட்டேன்’ என்று நிமிர்ந்து நின்றான்.
அவனின் தந்தையோ…
“டேய் அர்வி... அகி கண்ணா கிட்ட போய்ச் சொல்லு, கண்ணா ஐயர் சொல்றத கேட்கச் சொல்லி...”
“ஏன்பா நீங்க சொல்ல வேண்டியது தானே?”
அவனை ஒரு முறை முறைத்தார்.
‘ஆனா, ஊனா அப்பாவும், பிள்ளையும் அப்படியே முறைச்சி முறைச்சிப் பார்ப்பாங்க’
“செல்ல கண்ணால… போய்ச் சொல்லுப்பா அவன் கிட்ட...”
“ஏம்பா நீங்க வேற… இருக்கும் கோவத்திற்குக் கிட்டே சென்றால் கடித்தாலும் கடித்து வைபப்பான்”
அவரோ, “அகி கண்ணா… இதெல்லாம் சாஸ்திரம். ஐயர் சொல்றதைக் கொஞ்சம் கேளு கண்ணா…”
“என்ன பிள்ளையாண்டான் இப்படி நிற்கிறேள்? வந்து செய்யுங்கோ…”
ஆனால் அந்த அகம்பாவி சிறிதும் அசையவில்லை.
ஜனனியும் மனதுக்குள்...
‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்? இவங்க சொல்வதில் இவருக்கு விருப்பம் இல்லையோ?’
அக்கணம்... பகலவன் ஒளியில் மலரும் தாமரை மலர் போல், தன் இரு விழிகளையும், ஆறடி உயரத்தில் வளர்ந்து இருக்கும் தன் ஆடவனை நோக்கி உயர்த்திப் பார்த்தாள்.
அவ்விழியில் அவன் கண்டது… காதலையா, நேசத்தையா அவன் அறியான்!
ஆனால், அவள் நயனங்கள் கூறுகின்ற ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டு, மெட்டி அணிவிக்க அவள் பாதத்தின் அருகே மண்டியிட்டான். தன் இடக்கரத்தால் அவள் வலப்பாதம் பற்றி, தன் வலது கையின் இரு விரல் கொண்டு, அவள் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்க…
அந்தப் பொழுது அவன் இடக்கரத்தின் முதல் மூன்று விரல்களும், அவள் இரண்டாம் விரலை அவன் அறியாமலேயே வருடியது.
கணவனின் சில்மிஷத்தில் நாணத்தில் முகம் சிவக்க…
அவனின் காதல் ததும்பும் வதனத்தைக் காணப் பார்வையைத் தாழ்த்தினாள்.
அவள் கண்டதோ, எரிந்தும் எரியாமலும் இருக்கும் ஓமகுண்டத்தை வெறித்து நோக்கிய, அவன் உணர்வு தொலைத்த முகத்தையும், அதிலே தோன்றிய செந்தணலையும்… பெண்ணவளோ மலைத்து நின்றாள்.
அந்த மனம் கவர் கள்வன் அவளைக் கண்ட பொழுதே, அவள் கண்களின் வழியே தன் இதயத்தில் நுழைந்தாள் என்பதை, அறியாமல் போனது அவன் மடமையே!
உழுத நிலம் போல்
உடல் பழுத்தாலும்…
வெண்ணிற மேகம் போல்
கூந்தல் வெளுத்தாலும்…
அங்கங்கள் ஒடுங்கி
தளிர்நடை நடந்தாலும்…
என் உயிர் உள்ளவரை
நிலைத்திருக்கும்…
உன் மீது நான் கொண்ட காதல்...