எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 2

Privi

Moderator

மஹாலிங்கம் - பார்வதி எனும் தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தான் ருத்ரனும் அவன் தங்கை வைணவியும். ருத்ரன் அவன் பள்ளியில் ஒரு விளையாட்டு வீரன். படிப்பிலும் கெட்டிக்காரன். அவனுக்கு தான் ஒரு தலை சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக வர வேண்டும் என ஆசை அதிகம் இருந்தது. அதற்காக பல பயிற்சிகளுக்கும் செல்வான், போட்டிகளுக்கும் செல்வான். பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்று வருவான்.​

வைணவி! தந்தை செல்லம். குறும்புக்காரி, கெட்டிக்காரியும் கூட. ஆனால் விளையாட்டில் ஈடுபாடு குறைவு தான்.​

ஒருநாள் ருத்ரனுடைய ஆசிரியர் மஹாலிங்கத்துக்கு தொடர்பு கொண்டு ருத்ரனை பற்றி கொஞ்சம் பேச வேண்டும் என்று அவரை பள்ளிக்கு அழைத்தார். அவரும் ஆசிரியரை பார்க்க சென்றிருந்தார்.​

"வாங்க சார்" என ஆசிரியர் அவரை வரவேற்றார்.​

அவரும் சிறு கலக்கம் நிறைத்த முகத்துடன் ஆசிரியர் முன் நின்றார்.​

அதை பார்த்த ஆசிரியரோ “பிரச்சனை எதுவும் இல்ல சார். ருத்ரனை பற்றி சில விஷயம் பேச தான் கூப்பிட்டேன்" எனக் கூறியவர் கோப்பு ஒன்றை எடுத்து அதிலிருந்து பள்ளி சோதனை தேர்வுகளின் அட்டையை எடுத்து அவரிடம் காட்டினார்.​

ருத்ரனின் மதிப்பெண்கள் போன தேர்வு மதிப்பெண்களை விட குறைந்திருந்தது. அதை பார்த்த மஹாலிங்கத்துக்கு புருவ மத்தியில் யோசனை முடிச்சி விழுந்தது.​

"சார் நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்கே தெரியும் ருத்ரன் எப்படி படிக்கும் பையன் என்று. அவன் இன்று இவ்வளவு குறைவா மார்க் எடுப்பதை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு. அவன் விளையாட்டில் கெட்டிதான். அதே சமயம் படிப்பும் முக்கியம். நீங்களே அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க" என கேட்டுகொண்டார்.​

ருத்ரனுக்கு எப்போதுமே அவன் தந்தைதான் ஹீரோ. அவர் நடப்பது, சிரிப்பது, அவரின் ஆளுமையான பேச்சு என அனைத்தையும் ரசிப்பான். சில வாரங்கள் கடந்த பின் அவன் பள்ளியில் இடை வருட மாதாந்திர தேர்வு வந்தது. அதற்கு சரியாக ஒரு நாள் முன் ருத்ரனுக்கு இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி ஒன்று இருந்தது. தேர்வுக்கு படிக்காமல் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து வெற்றி பெற பயிற்சிகள் செய்து கொண்டு இருந்தான். அதனை பார்த்த மஹாலிங்கம் அவனை அழைத்தார்.​

"ருத்ரா நாளை மறுநாள் இடை வருட மாதாந்திர தேர்வு ஆரம்பம் ஆகுதல்லவா? படிக்காம என்னப்பா செய்ற?" என கேட்டார்.​

அதற்கு அவனோ “அது ப்பா, எனக்கு நாளைக்கு ஓட்டப்பந்தய போட்டி இருக்கு. அதற்கு பயிற்சி எடுக்குறேன்" என கூறினான்.​

மஹாலிங்கமோ "அது சரிதான் ருத்ரா. ஆனால் படிப்பும் முக்கியம் தானே. நீ நன்றாக தானே ஓடுவே. பயிற்சி கொஞ்சம் செய்து விட்டு தேர்வுக்காகவும் படிக்கலாமே" என கூறினார்.​

அவன் முகம் போன போக்கை பார்த்து தாம் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை என கண்டுகொண்டார்.​


உடனே அவரோ “ருத்ரா ஒரு நல்ல வீரன் சத்திரியனா மட்டும் இருந்தா பத்தாது. சாணக்கியனாவும் இருக்கணும். நீ சத்ரியனா இருக்க ஆசை படுற, நான் என் மகன் சாணக்யனாகவும் இருக்க வேண்டும் என ஆசை படுறேன். நீ சத்ரியனா இருந்தால் சாணக்கியன் உன்னை தோற்கடிப்பான். சாணக்கியனா இருந்தால் சத்ரியன் உன்னை தோற்கடிப்பான். நீயே சத்ரியனாவும் சாணக்யனாவும் இருந்தால் உன்னை வெல்ல ஆள் இல்லை இப்புவியில். நீயே முடிவு எடு நீ எதுவாக இருக்க போகிறாய் என்று” என கூறி அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.​

அவனும் கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்தான். பின் விட்ட பயிற்சியை தொடர சென்றான். மூன்று மணிநேர கடுமையான பயிற்சிக்கு பின் வீட்டிற்கு சென்றவன் அலுப்பு நீங்க குளித்து விட்டு, இடை வருட மாதாந்திர தேர்வுக்கு படிக்க தொடங்கி விட்டான்.​

இதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்த மஹாலிங்கத்துக்கு இதழ்களுக்குள் ஒரு சிறு புன்னகை. மஹாலிங்கம் எப்போதுமே அப்படிதான். உனக்கு என்ன தேவை என்பதற்கு அறிவுரை கூறி விட்டு முடிவையும் உன்னிடமே கொடுத்து விடுவார், உனக்கானதை நீ முடிவு செய் என்பது போல்.​

மறுநாள் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துக்கொள்ள தயார் ஆகி கொண்டிருந்தான் ருத்ரன்.​

அப்போது பார்த்து அங்கு வந்தாள் வைணவி.அவளை கண்டவுடன் அவன் அவளை வம்பிழுக்க ஆரம்பித்தான்.​

"வைனு பாரேன், ஐயா இன்று ராஜ தோரணையில் கழுத்தில் பதக்கத்தை அணிந்து கொண்டு வருவேன். அம்மா! நான் வீட்டுக்கு வரும்போது குடம் நிறைய தண்ணீர் பிடிச்சி வைங்க. இங்க ஒருத்தியோட வயிறு எரிச்சலை அணைக்கணும்" என ஓரப்பார்வைவை வைணவிமேல் வைத்து கூறிக்கொண்டு இருந்தான்.​

அதற்கு வைணவியோ,​

"தங்கப்பதக்கத்தையே வாங்குவேன். நீ வெறும் பதக்கம் தானே அதுக்கா இவ்வளவு பெருமை பேச்சு” என அவனை சீண்டி விட்டாள்.​

"உன் பெருமை தாங்கலை. நான் அத்லெடிக்(Athletic), எனக்கு படிப்பிலும் ஆர்வம் உண்டு, விளையாட்டிலும் ஆர்வம் உண்டு" பதிலுக்கு பதில் பேசினான்​

இதை கேட்டுக்கொண்டே வந்த பார்வதியும் "போதும் போதும் இருவரும் சண்டையிட்டு கொண்டது. முதலில் சாப்பிடுங்கள்" என கூறினார்.​

சாப்பிட்டு முடித்தவுடன் "அம்மா பள்ளி பேருந்து வந்திடும். நான் முதல்ல போறேன்" என்று கூறினாள் வைணவி.​

அதற்கு பார்வதியும் "எத்தனை தடவை சொல்வது போயிட்டு வரேன்னு சொல்லு என்று" என்று அவர் கடிந்துகொள்ள தாயின் அருகில் வந்தவளோ,​

"சாரி மா" என்று அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தாள்.​

பார்வதியும் சட்டென இளகி, "போக்கிரி என்னை சமாளிக்கிற வித்தையை நல்லா கத்து வச்சிருக்க" என்று அவள் கன்னத்தை கிள்ளினார்.​

"சரி சீக்கிரம் போ, பேருந்து சென்று விட போகிறது" என்று கூறினார்.​

அவளும் சிரித்த முகமாகவே சென்றாள். சென்றவள் ஒருகணம் வாசல் கதவில் நின்று "அண்ணா!" என அழைத்தாள்.​

அவள் அழைத்த திசையை நோக்கி ருத்ரனும் திரும்பினான் அவளோ அவனை பார்த்து "வாழ்த்துக்கள்" என கூறினாள்.​

"நன்றி" என முறுவலித்துக் கொண்டு கூறினான்.​

தன் முழு வேகத்தையும் தன் திறமை மேல் வைத்து அதிவேகமாக பந்தயத்தில் ஓடினான். மின்னல் வேகம் கொண்டு ஓடியவனை அங்கு உள்ளோர் கைகளை தட்டி உற்சாக மூட்டினர். அவன் நினைத்தது போலவே அவன்தான் முதலாவதாக வந்தான். வந்தவன் தங்கையிடம் சொன்னது போலவே அவனுக்கு பதக்கத்தை அணிவித்தனர். அதனை பெற்றோருடனும் தங்கையுடனும் பகிர்ந்துகொள்ள ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்தான். வந்தவனை வரவேற்றது என்னவோ அவன் தாயின் கண்ணீர் விழிகள் தான்.​

 
Last edited:
Top