" அம்மா! என்ன நடந்தது? ஏன் அழுதுட்டு இருக்குறீங்க?" என்று பதட்டத்துடன் கேட்டான்.
அவனை கண்ட பார்வதியோ அவனை இறுக கட்டி அணைத்து கதறி விட்டார்.
"ஐயா! எல்லாம் போச்சி யா.. அப்.. அப்..அப்பாவும்.. பாப்.. பாப்பாவும் நம்மள விட்டு போய்ட்டாங்க ஐயா. ஐயோ! இனி வர முடிய இடத்துக்கு போய்ட்டாங்க யா. உன்னையும் என்னையும் விட்டுட்டு போய்ட்டாங்க யா" என வெடித்து அழுதார்.
ருத்ரனுக்கோ ஒருகணம் ஒன்னும் புரியவில்லை. பின்பே தாய் கூறிய வார்த்தைகள் நெற்றி பொட்டில் அறைந்தது. ஏதோ சொல்ல முடியா உணர்வு. அழவேண்டும், கத்திக் கதறி அழ வேண்டும். இல்லை! இவை யாவும் மாயை. இதோ நம் கண்கள் திறந்துவிட்டது. 'அப்பா.. அப்பா..' என விழிகள் வீட்டை வட்டமடித்தது.
"பாப்பா, இதோ பார் பதக்கம்" என தான் வென்ற பதக்கத்தை அவளுடன் பகிர மனது அலை மோதியது. ஆனால் இல்லையே! இருவருமே இல்லையே! அவனை விட்டு சென்று விட்டனர். கண்கள் இடுங்கியது, உள்ளம் சோர்வடைந்தது. சட்டென தன் மேல் சாய்ந்திருக்கும் அன்னையை பார்த்தான். மனதை கல்லாக்கிக்கொண்டான் அந்த பதின் வயது ஆண் மகன்.
அம்மாவுக்கு அரணாகவும், சடங்கு சம்ப்ரதாயம் செய்வதில் பெரிய மனுஷனாகவும் உருமாறினான். எல்லா காரியங்களையும் சரியாக செய்து இறந்தவர்களை அடக்கம் செய்தான். சொந்த பந்தங்களும் காரியங்கள் முடிந்தவுடன் வந்த வழியை பார்த்து சென்று விட்டனர்.
ருத்திரன் வீடு எப்போதுமே கூச்சலும் சிரிப்புமாக தான் இருக்கும். ஆனால் இன்றோ பேரமைதியாக இருந்தது. இந்த அமைதி ருத்ரனுக்கு பயத்தை கொடுத்தது. மறுபக்கம் பார்வதியோ எதையாவது வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பார். இல்லையெனில் திடீர் என்று சுயமாக பேசிகொன்டு இருப்பார்.
இவன் அவர் பக்கத்தில் அமர்ந்து "யாருகிட்ட அம்மா பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்டால், "உன் அப்பாவிடம்தான்" இல்லையென்றால் பாப்பா கிட்ட "ஐயா குறும்பு பண்றா பாரேன்" என கூறுவார்.
அன்னையின் நிலையை நினைத்து சோர்ந்து போனான். அன்னையை தேற்றி எடுக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அவனிடம். பள்ளி முடிந்து வந்து பெரும்பாலான நேரத்தை அவருடனே செலவிட்டான். காலங்கள் செல்ல செல்ல பார்வதியிடமும் முன்னேற்றங்கள் காணப்பட்டது. அவர்களின் தினசரி வாழ்விற்கு, மஹாலிங்கத்தின் ஊதிய சேமிப்பு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை மாதம் ஒருமுறை பார்வதியின் வங்கி எண்ணுக்கு வந்துவிடும்.
அதனை வைத்துதான் இவர்கள் இருவரின் வாழ்க்கையும் சென்று கொண்டு இருந்தது. தேவையற்ற செலவுகளை குறைத்திருந்தான் ருத்ரன். பார்வதியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருந்தார். அவனும் தாயின் முன் இயல்பாய் இருந்தான். அவனின் கண்ணீரை உணர்ந்தது என்னவோ அவனது தலையணை தான்.
என்னதான் பெரிய மனிதன் போல் காட்டிக்கொண்டாலும் அவனும் பதின் வயது பையன் தானே.
அதுவும் அவர்கள் இருவரும் தங்கையின் பள்ளி முடிந்து அவனை பார்த்து உற்சாக படுத்தலாம் என நினைத்து அவனுக்கு போட்டி நடத்தும் இடத்திற்குத்தான் வந்துகொண்டிருந்தனர். அப்போதுதான் லாரி ஒன்று வேகமாக வந்து அவர்களை மோதியது. இருவருமே அடிபட்ட அடுத்த நொடி இறந்திருந்தனர். அவனுக்கோ இந்த விஷயம் பெரும் குற்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. தன்னை பார்க்க வந்துதான் தங்கைக்கும் தந்தைக்கும் விபத்து ஏற்பட்டு விட்டது என தன்னை தானே சாடிக்கொள்வான்.
எட்டு மாதம் கழிந்து பார்வதியிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட சமயம் சரியாக ருத்ரனுக்கு வேறு மாநிலத்தில் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது.
தாயை ஒருகணம் அழுத்தமாக பார்த்து, வந்த வாய்ப்பை நிராகரித்தான். தந்தை சொல் அவன் செவிமடத்தில் வந்து சென்றது.
மகாலிங்கத்தின் புகைபடத்தின் முன் நின்று "அப்பா நான் சாணக்கியனா மட்டும் இருக்க முடிவெடுத்து விட்டேன். எனக்கு அம்மா முக்கியம். நானும் இல்லை என்றால் அம்மா உடைந்து விடுவார்கள். இப்போதுதான் கொஞ்சம் நல்லபடியாக இருக்கிறார்கள். தனிமை மீண்டும் அவர்களை நிலைகுலைய செய்துவிடுமோ என்று எனக்கு பயமாக உள்ளது. அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என மானசீகமாக அவன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தான்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் உழைத்தான். விளையாட்டு தனத்தை விட்டு படிப்பில் கவனத்தை செலுத்தினான். கணவன் மற்றும் மகளின் மறைவுக்கு பின் பார்வதி மிகவும் அமைதியாகி விட்டார் . இப்படியே காலங்கள் சென்று படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று படித்து முடிந்தவுடன் ஒரு நல்ல தனியார் அலுவகத்தில் வேலையிலும் அமர்ந்து விட்டான்.
பணியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு இரண்டு வருடத்திற்குள் ருத்திரன் மேனேஜராக பதவியேற்றான். ருத்ரனின் வாழ்க்கை அவனுக்கு பொறுப்பானவான, அன்பானவனாக, அமைதியானவனாக இருக்க கற்றுக்கொடுத்து உள்ளது. அவனும் வாழ்க்கையுடன் ஒன்றி போய் தான் உண்டு, தன் வேலை உண்டு தன் தாய் உண்டு என வாழ்த்து வருகிறான்.
ருத்ரனுக்கு தொழில் தொடங்க வேண்டும் என ஒரு கனவு உள்ளது அதற்காக அவன் உழைக்க ஆரம்பித்த சமயம் பார்வதி அவன் திருமண பேச்சை ஆரம்பித்தார். இப்படியே காலங்கள் கடந்து ருத்ரன் அவனின் இருபத்து ஏழு வயதை அடைத்தான். அவனுக்கு வரன் பார்த்து வந்தார் பார்வதி. அவனுக்கு கல்யாணத்தில் பெரிய நாட்டம் இல்லை. உழைக்க வேண்டும், சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும், தாயாய் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவன்.
"காலாகாலத்தில் ஒரு கால்கட்டு போட்டாத்தானே அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும். நான் என் கண்ணா மூடுறதுக்குள்ள உன் பிள்ளைகளை பாத்துரணும்டா கண்ணா. அம்மாவும் இன்னும் எவ்ளோ நாள் இருப்பேன்னு தெரியல" என்று அவனை நச்சரிக்க தொடங்கினார் பார்வதி.
அவனும் செவிடன் காதில் ஊதும் சங்குபோல் எதையும் கண்டுகொள்ளாமல் அவன் பணிகளை செய்துகொண்டிருந்தான். இப்படியே ஒருவருடம் கழிந்தது.
ஒருநாள் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்தவன், வீட்டில் விளக்கு தட்டாமல் இருப்பதை பார்த்தான். என்ன ஆனாலும் சரி மாலை ஆறுமணிக்குமேல் விளக்கு போடாமல் இருக்கமாட்டார் பார்வதி. ஒரு நிமிடம் முகத்தில் பயம். எட்டிப்பார்க்க அவரின் அறைக்கு வேகமாக சென்றான். அங்கு அவன் அன்னையோ போர்வையை போர்த்தி படுத்திருந்தார்.
“என்னமா?" என அவர் தோளைத் தொட்டான். அப்போதுதான் அவர் மேல் அனல் அடிப்பதை அவனால் உணர முடிந்தது. அவர் சுகவீனத்தில் இருப்பதை அறிந்தவனோ அவரை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். வைத்தியரோ மருத்துவம் பார்த்து அவருக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்தார். அதனை அனைத்தையும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அவன் மருந்து தர சென்றபோது அதை வாங்க மறுத்து கனல் காக்கும் பார்வையை அவனிடம் வீசினார். பின் வழக்கமான அவர் புலம்பல்களை புலம்ப தொடங்கினார்.
"இதே உன் அப்பா இருந்திருந்தா நீ இப்படி இருக்க விட்டிருப்பாரா?" என புலம்பினார்.
"பாப்பா இருந்துருந்தா அவளுக்கே முதல்ல கல்யாணத்த பண்ணி வைத்திருப்பேன்” என்றும் கூறினார்.
அவனை இவ்விரு வார்த்தையும் சரியாக சென்று தாக்கியது. சிறிது சிறிதாக அவனை கரைத்து கல்யாணத்திற்கு சம்மதமும் வாங்கினார். எங்கே சம்மதம் சொன்னவன் தாமதம் செய்தால் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடுவானோ என்று பயந்து அவசரமாக பெண்ணை பார்த்து கல்யாணத்தையும் முடித்து வைத்தார் பார்வதி.
இக்கல்யாணத்தினால் மகனின் வாழ்வும் தலை கீழாக மாறப்போவதை முன்னமே அறிந்திருந்தால் சற்று அமைதி காத்திருப்பாரோ என்னவோ. விதி யாரை விட்டது?
அவர் பார்த்த பெண் தான் சுபா. அழகான பெண் அவள். ஒப்பனைகள் மூலம் தன்னை இன்னும் அழகாக மாற்றக்கூடியவள். அவளை பார்த்ததும் ருத்ரனுக்கு ஈர்ப்பொன்றும் ஏற்படவில்லை. அவனுக்கு எளிமைதான் எப்போதுமே பிடிக்கும். ஆடம்பரத்தை அவ்வளவாக ஆதரிக்க மாட்டான். அதில் அழகும் அடக்கம்தான். இயற்கையான அழகை ரசிக்க தெரிந்தவன் அவன். 'அம்மா சொல்றாங்க கல்யாணம் கட்டலாம்' எனும் எண்ணம் தான் அவனுக்கு.
அவர்கள் திருமணமும் உறவினர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்தது. பெண் அழைப்பு, பெண் வீட்டுவிருந்து, என எல்லா சடங்கும் முடிந்து அவர்களுக்கான முதலிரவு நாளும் வந்திருந்தது. முதலிரவை பற்றி எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் தான் அவளுக்கும் இருந்தது.
பல கனவுகளோடு கணவனை நோக்கி அவன் அறைக்குள் நுழைந்தாள் வந்தவுடன் பால் இருக்கும் டம்ளரை அவனிடம் நீட்டினாள். அவனும் அதனை வாங்கி அங்கு இருக்கும் சிறிய மேஜை மீது வைத்து அவளை பக்கத்தில் அமர சொன்னான். அவளும் அவன் காட்டிய இடத்தில அமர்ந்தாள்.
"என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்று கேட்டான் அவளிடம்.
அவளோ "இல்ல பெருசா ஒன்னும் தெரியாது. தெரிஞ்சிக்க அவகாசமும் நமக்கு இல்லையே" என்று பதிலளித்தாள்.
"ஹ்ம்ம் உண்மைதான், பெண் பார்த்த கொஞ்ச நாளிலே கல்யாணம் ஏற்பாடு பண்ணிடாங்க. நாம் ஏன் நம்மிடையே நல்ல ஒரு புரிந்துணர்வு வந்த பின் நம் வாழ்க்கையை தொடங்க கூடாது?" என வினவினான்.
அதற்க்கு அவளோ அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபின் சரி என சம்மதித்தாள்.
ஆனால் அவளின் அந்த பார்வைக்கு அர்த்தம் அவளுக்கே வெளிச்சம். அதன் பின் அவர்கள் வாழ்க்கை வழக்கம் போல் சென்றது. அவளை பற்றி புரிந்துகொள்ள ருத்ரன் எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால் அவள் தான் பிடி கொடுக்கவில்லை. தன்னிடம் பேச கூச்ச படுகிறாள் என்றே ருத்ரன் நினைத்தான். அவளுக்கான கால அவகாசத்தை அவளுக்கு தருவதாக நினைத்து அவனும் அதன் பின் அவளிடம் இருந்து விலகி இருந்தான்.
இப்படியே ஆறு மாதங்கள் கடந்து இருந்தது சுபாவுக்கு தான் வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் இருப்பது போல் ஒரு எண்ணம். வெளியே செல்லலாம் என நினைத்து அவள் தோழனுக்கு திறன்பேசி மூலம் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்றவனோ அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தனக்கு ஒரு பார்ட்டி இருப்பதாகவும் அதற்கு அவன் புறப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தான். இதை கேட்ட சுபாவுக்கும் தானும் அந்த நிகழ்ச்சிக்கு போனால் என்ன என்ற எண்ணம் வர உடனே ருத்ரன் முன் தான் நின்றாள் நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி கோரி .
சுமாராக இந்த ஆறு மாதத்தில் இதுதான் அவள் முதல் முறை அவனிடம் ஒன்று கேட்பது. அதனால் அவனும் அவளுக்கு அனுமதி வழங்கிருந்தான். அவள் சென்ற பின் பார்வதி கூட " என்னப்பா பழக்கம் இது பொழுது சாய்ந்த பின் வெளியே செல்வது?" என கேட்டார்.
அதற்கு அவனோ "அம்மா இப்போதான் முதல் முறை என்கிட்டே ஒன்று கேக்கிறாள். எப்படி முடியாது என சொல்வது? பிறகு அம்மா இப்போ காலம் ரொம்ப மாறிபோச்சு. பெண்கள் விண்வெளிக்கு சென்று பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். நீங்கள் என்ன என்றால் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே" என அவனும் இப்போ உள்ள நிலவரத்தை அவருக்கு புரிய வைத்து கொண்டு இருந்தான்.
நேரம் செல்ல செல்ல பார்வதிக்கு மனது பிசைய ஆரம்பித்தது. "ஐயா மணி பத்தரை தொடுது, இன்னும் இந்த பெண்ணை காணலையே" என கவலை கொண்டு பேசினார்.
அவனும் "வந்திடுவாமா இருங்க" என கூறினான்.
பின் பார்வதியின் நச்சரிப்பு தாங்காமல் அவளுக்கு அழைத்தான். "எங்கம்மா இன்னும் வரலையா?" என கேட்டான்.
அதற்கு அவளோ "இன்னும் ஒரு அரைமணி நேரத்தில் வருவேன்" என கூறினாள்.
இவன் "சரி பார்த்து கவனமா வீட்டுக்கு வா" என கூறியவன் அழைப்பை துண்டித்து பார்வதியிடமும் அவள் கூறியதை சொன்னான். பின் வற்புறுத்தி அவரை தூங்க செல்ல சொன்னான். அவரும் முனங்கி கொண்டே அவர் அறைக்கு சென்றார்.
தனது வேலைகளை முடித்துவிட்டு அவனும் படுக்கைக்கு சென்றான். சென்றவன் ஒருநிமிடம் கடிகாரத்தை நோக்கினான். அவள் சொன்ன நேரத்திற்கும் அரை மணி கூடிப்போயிருந்தது. இன்னும் அவள் வரவில்லை.
அவளுக்கு அழைக்கலாம் என நினைத்து திறன்பேசியை எடுத்தவன் அப்படியே வைத்து விட்டான். அவனுக்கு அவளை தொந்தரவு செய்ய இஷ்டமில்லை. சரி இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் பாப்போம் என நினைத்து சும்மா கண்களை மூடி படுக்கையில் படுத்தான் அப்படியே அவனையும் அறியாமல் உறங்கி விட்டான்.
திடீரென யாரோ வந்து பக்கத்தில் தடுமாறி படுத்தது போல் இருந்தது. சட்டென முழித்து யாரென்று பார்த்தான் வேறு யாரும் இல்லை அவன் திருமதி தான். அவள் இருந்த நிலைதான் அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.