மது அருந்திருந்தாள். அவள் பக்கத்தில் அவனால் இருக்கவே முடியவில்லை. மது வாடை அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவனுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சி தான்.
சட்டென எழுந்து மாடியின் முகப்புக்குச் சென்று விட்டான். அங்கு நின்று வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்குள் பல சிந்தனைகள். தன் தாய் அவனுக்காக பார்த்த பெண்ணா இவள்! பெண்கள் இந்த காலத்தில் மது அருந்துவதெல்லாம் இயல்பாகி விட்டதுதான். ஆனால் சுபா?
அவனுக்கு இது ஏமாற்றம்தான். சில மணி நேரங்கள் கடந்தபின் அவனது அறைக்குச் சென்றான். தனது சுய நினைவின்றி தூங்கும் மனைவியைப் பார்த்தான்.
'நாளை இவளிடம் இதைப் பற்றி பேச வேண்டும்' என நினைத்துக்கொண்டான்.
அப்படியே அவனும் உறங்கிவிட்டான். பொழுதும் விடிந்தது. சுபா கண்விழிக்க முற்பகல் பதினொன்று ஆகிவிட்டது. தலையில் கை வைத்துக்கொண்டே எழுந்தாள். தலை வலி உயிர் போனது அவளுக்கு.
சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தாள். பின் எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள். தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தவள் நேரே சமையல் அறைக்குச் சென்றாள். தனக்கு ஒரு காபியை கலந்துக்கொண்டு முன் அறை நீள்விருக்கையில் அமர்ந்தாள்.
பக்கத்து இருக்கையில் பார்வதி அமர்ந்திருந்தார். சுபா தனது மாமியாரிடம் பல கேள்விகளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆனால் பார்வதியோ அமைதியாக இருந்தார், மகன்தான் வேலைக்குச் செல்லும் முன்பே அவளிடம் எந்த கேள்விகளையும் கேட்கக் கூடாது என கூறிவிட்டு சென்று விட்டானே.
மாலையில் வேலை முடிந்து ருத்ரன் வீட்டிற்கு வந்தான். சுபா சாதாரணமாக இருப்பது போல் இருந்தாலுமே அவள் மனதுக்குள் பயப்பந்து உருண்டு கொண்டே இருந்தது ருத்ரன் என்ன கேட்பானோ என்று. குளித்து விட்டு வந்தவன் சுபாவை அறைக்குள் அழைத்தான்.
அறைக்குள் வந்தவள் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ருத்ரனே பேச ஆரம்பித்தான். "சுபா இப்படி அமைதியாக இருக்கிறது என்று முடிவு எடுத்து விட்டாயா? நான் என்ன பேசப் போகிறேன் என்பது உனக்கே தெரியும் தானே. பிறகு ஏன் இந்த அமைதி? என்றான்.
அதற்கு அவளோ "என்ன பேச சொல்றீங்க? ஆமாம் நேற்று நான் மது அருந்தினேன். நண்பர்கள் வற்புறுத்தினார்கள் அதான் குடித்தேன்" என கூறினாள்.
"நீ மது குடிப்பாய் என்பதே எனக்குத் தெரியாதே. இது எனக்கு எவ்வளவு பெரிய ஷாக் தெரியுமா?" எனக் கேட்டான் ருத்ரன்.
" நான் டிரிங் பண்ணுவேன். கல்லூரியில் பழகியது" எனக் கூறினாள்.
"ஹ்ம்ம்ம் சரி, இனி இந்த பழக்கம் வேண்டாம் விட்டு விடு" எனத் தன்மையாகக் கூறினான்.
ஆனால் அவளுக்கோ அது கட்டளையிடுவது போல் இருந்தது. எதுவுமே கூறாமல் அமைதியாக நின்றாள். ஆனால் உள்ளுக்குள் கோபத்தில் சீறிக்கொண்டு இருந்தாள்.
ருத்ரன் தன் மனைவியிடம் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை. அறிவுரையும் வழங்கவில்லை. அவளிடம் தன்னுடைய பிடித்தமின்மையை சொல்லிவிட்டேன், இனி அவள் இப்படி செய்யமாட்டாள் என நம்பினான். ஒரு வாரம் அமைதியாக இருந்தாள். அதன் பின் யாரிடமும் கூறாமல் வெளியே செல்ல தொடங்கினாள். வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த ருத்ரனின் கண்கள் தனது மனைவியை தேடியது. அவள் எங்கும் காணப்படவில்லை.
அவன் தேடுவதை பார்த்த பார்வதியோ “ஐயா, சுபா வெளியே சென்று இருக்கிறாள். உனக்கு தெரியாதா? அவள் உன்னிடம் சொல்லவில்லை?" என்று கேட்டார்.
அவனுக்கு இது அதிர்ச்சி தான் இருப்பினும் மனைவியை அம்மாவிடம் விட்டு கொடுக்க முடியாமல் “ ஓஹ் ஆமாம் அம்மா, மதியம் அழைத்து சொன்னாள். நான் தான் வேலை நினைப்பில் மறந்துவிட்டேன்” என சமாளித்தான்.
அவளும் வீட்டிற்கு இரவு பத்து மணியளவில் தான் வந்தாள். வந்தவள் அமைதியாக சென்று கை கால்களை சுத்தம் செய்து விட்டு படுத்தாள். இத்தனைக்கும் அவள் அறையினுள் வந்த நொடியிலிருந்து ருத்ரன் அவளை பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
ஆனால் அவளோ அப்படிப்பட்ட ஒரு ஜீவன் அங்கு இருப்பது அவள் கண்களுக்கு தெரியாததை போலவே இருந்தாள்.
அவனுக்குமே இதனை எவ்வாறு கையாள்வது என்றே தெரியவில்லை. சரி விட்டு பிடிக்கலாம் என முடிவெடுத்து இருந்தான்.
இப்படியே அவர்களின் வாழ்க்கை நான்கு மாதங்களை கடந்திருந்தது. சுபாவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அன்று ஒரு நாள் சனிக்கிழமை வழக்கத்தை விட முன்னதாகவே பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருந்தாள். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த பார்வதி இன்று மகனிடம் பேச வந்தார். “ஐயா உன் கிட்ட பேச வந்தேன்” என கூறி அவனின் அறை முன் நின்று கொண்டிருந்தார்.
“உள்ளே வாங்க மா" என அவனும் அவரை அழைதிருந்தான்.
அவனுக்குத்தான் தெரியுமே, அவன் அன்னை எதை பற்றி உரையாட வந்துள்ளார் என.
“சொல்லுங்கமா"
"என்ன யா சொல்வது? உனக்கே தெரியும் நான் எதை பற்றி பேச வந்திருக்கிறேன் என்று” என்றார்.
அதற்கு அவனோ “தெரியும் மா, நானும் அதை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தேன்"
"அவள் போக்கு சரி இல்லை ஐயா. நீ இப்படி கேட்காமல் இருந்தால் இது கண்டிப்பாக பிரச்சனையில் தான் முடியும்"
"புரிகிறது மா, ஆனால் எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி?”
"என்ன ஐயா கேளு"
"அம்மா பெண்ணை பற்றி நன்றாக விசாரித்து விட்டேன் என்று தானே என்னிடம் கூறினீர்கள்" என்றான்.
இப்போது பார்வதிக்கு குற்ற உணர்வு உண்டாகி விட்டது. தலையை கீழே குனிந்து விட்டார். பின் சிறிது நேரம் அவனுடன் உரையாடிவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார்.
சுபா வந்தவுடன் அவளுடன் என்ன பேசுவது, எவ்வாறு பேசுவது என்று சிந்தித்து கொண்டிருந்தான் ருத்ரன். இன்று மிகவும் தாமதமாகி விட்டது அவள் வருவதற்கு. கிட்டதட்ட நள்ளிரவு பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது. தள்ளாடிய படியே வீட்டினுள் நுழைந்தாள் சுபா.
அதீத போதையில் காணப்பட்டாள். அறையினுள் வந்தவளின் கண்கள் ருத்ரனைதான் தேடியது. அவன் பால்கனியில் நின்று கொண்டு நிலவை பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் அழகும் அவனின் ஆண்மையும் அவளை அவனிடம் ஈர்த்துசென்றது.
அவனை பின்புறமாக அணைத்துக்கொண்டாள் சுபா. அந்த அணைப்பில் அவன் தேகம் இறுகியது. அவளிடமிருந்து வந்த மது வாடை அவனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அமைதியாக அவளை அவனிடமிருந்து விலகி நிறுத்தினான். அவனது இந்த விலகலும் பாரா முகமும் அவளை மூர்க்கமாக மாற்றியது. கூடவே மது போதை வேறு. அவனிடம் வேகமாக வந்து அவன் சட்டையை இழுத்து அவன் இதழ்களில் முத்தம் கொடுத்து விட்டாள் .
அவர்களின் முதல் இதழணைப்பு அவனுக்கு இனித்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கோ அருவருத்து போனது. அவனின் முகமும் அந்த அருவருப்பை பிரதிபலித்தது. அதை பார்த்த சுபாவுக்கு கோபம் இன்னும் தலைக்கு ஏறியது.
வேகமாக சென்று மீண்டும் அவனை அணைக்க முயன்றாள். அவனின் பொறுமை காற்றில் கரைத்து போனது. முதல் முறை தன்னையும் மீறி அவளை அறைந்திருந்தான். அவன் அறைந்தபின் இன்னும் இன்னும் மூர்க்கமாக மாறினாள் சுபா. கோபத்தில் அங்காரமாக கத்தினாள்.
"ஏன் என்னை பிடிக்கவில்லை? நான் அழகா இல்லையா, இல்லை கவர்ச்சியாக இல்லையா? எனக்கு என்ன குறை?” என்று ஆவேசமாக கத்தினாள்.
"உங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்" என கூறிக்கொண்டு அவள் ஆடைகளை களைத்து அவனுடன் ஒன்றப்போனாள்.
அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் கோபமும் தலைக்கு ஏற மீண்டும் ஒரு முறை அவளை ஓங்கி அறைந்திருந்தான். அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்து அவள் ஆடைகளை எடுத்து அவள் மேல் விட்டெறிந்தான். ஆள் காட்டி விரலை அவள் முன் பத்திரம் காட்டி அறையை விட்டு வெளியேறினான்.
அவளால் இன்னமும் நிதானத்துக்கு வர முடியவில்லை. அறை வாங்கியதில் கன்னம் வேறு விண் விண்னென்று வலித்தது. அவன் அறைந்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கோபம் அவள் அறிவை மழுங்கடித்து. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து யோசித்தாள். யோசனையின் முடிவில் அவள் முகத்தில் ஒரு தெளிவும் ஒரு வன்மமும் பிறந்தது.
அமைதியாக எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள். அறை வாங்கியதில் போதையே தெளிந்து விட்டது. குளியல் அறைக்கு சென்றவள் தனது உடலை சுத்தம் செய்து கொண்டு உறங்குவதற்கு தயாரானாள். கண்ணாடியில் அவளின் முகத்தை பார்த்தாள், அவளின் முகத்தில் அவன் விரல்களின் அச்சு இருந்தது.
அவள் கண்கள் ரத்தமென சிவந்து இருந்தது. இந்த நிகழ்வு அவளிற்கு பெரும் அவமானமாக இருந்தது. சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து, படுக்கையில் படுத்து உறங்கி விட்டாள்.
ஆனால் உறக்கம் இன்றி தவித்தது என்னவோ ருத்ரன் தான்.
அறைந்து விட்டு கோபமாக அறையை விட்டு வந்தவன், அவன் மோட்டார் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். நெடு தூரம் பயணம் செய்தபின் அவன் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.
அவன் மனமோ "ச்சே என்ன காரியம் பண்ணிட்டா, அப்போ அவளுக்கு உடல் சுகம் மட்டும் தான் பெரியதா?” என மனம் குமைத்து போனான்.
நான்கு மணி நேரம் கடந்த பின் தான் வீட்டுக்கே சென்றான். சென்றவன் தனது அறைக்கு செல்ல விருப்பமின்றி வரவேற்பறை நீள்விருக்கையில் படுத்து கொண்டான். பல சிந்தனைக்கு நடுவினில் அவனை அறியாமலே கண்ணயர்ந்தும் போனான்.
சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த பார்வதி மகனை நீள் இருக்கையில் கண்டு பதறினாள். ஆனால் அனுபவமிக்கவர் ஆயிற்றே. கணவன் மனைவிக்குள் எதோ மன கசப்பு என சரியாக யூகித்து கொண்டார்.
அன்றில் இருந்து இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை. சுபாவும் அந்த நிகழ்வின் பின் ஒரே ஒரு முறை மட்டும் வெளியே சென்றாள். சென்றவள் மது அருந்தாமல் நல்ல படியே வீடு திரும்பினாள்.
அதன் பின் அவள் எங்கும் செல்லவில்லை. இரவு விருந்துகளை அடியோடு தவிர்த்திருந்தாள். அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று பார்வதிக்கு புரிந்தது. அதை கண்டறிந்து தீர்த்து வைக்க முடியும் என்று நினைத்தார்.
"கண்டிப்பாக மகன் என்ன விஷயம் என்று கூறமாட்டான், சரி நாம் சென்று சுபாவிடம் கேட்போம்" என்று நினைத்து சுபாவிடம் சென்று அமர்ந்து என்ன பிரச்சனை என கேட்டார்.
அதற்கு சுபா "ஒன்றும் இல்லை அத்தை” என பிடிகொடுக்காமல் பேசினாள்.
அவளோ அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தாள். எதற்குமே பதில் இல்லை. அவளுக்கு பார்வதி மேலும் கோபம் தான். சில சமயம் ருத்ரன் அறிய அவனை பார்த்து வன்ம புன்னகை ஒன்றை உதிர்ப்பாள்.
அவளின் திட்டம் தான் என்ன?