பார்வதிக்கும் மருமகளின் மன மாற்றம் பிடித்திருந்தது. அவள் நல்லபடியாக மாறி மகனுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆசை. அரும்பாடுபட்டு மகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தார் அல்லவா.
சரியாக இரண்டரை மாதம் கடந்த நிலையில், அன்று வெள்ளிக்கிழமை பார்வதி கோவிலுக்கு சென்றிருந்தார். ருத்ரனும் வேலைக்கு புறப்பட்டு சென்றிருந்தான். அறைக்குள் இருந்த சுபாவின் விழிகளில் அனல், இதழின் ஓரத்தில் வன்ம புன்னகை. கணவனின் வருகைக்காக காத்திருந்தாள். பார்வதி கோவிலுக்கு சென்று வீட்டை அடைந்த தருணம் சரியாக வீட்டு வாசலில் வாடகை வண்டி ஒன்று வந்து நின்றது. அது வேறு யாரும் இல்ல மஹாலிங்கத்தின் தங்கை சாரதாவும் அவர் மகன் மற்றும் மகளும்.
"அண்ணி! வாங்க வாங்க, என்ன இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க!" என வினவினார் பார்வதி.
அதற்கு அவரோ "சின்னவளுக்கு கல்லுரி கிடைத்து உள்ளது. அதான் அவளை அங்கு சேர்த்து விட வந்தேன்" என கூறினார்.
"உள்ளே வாங்க அண்ணி, வாசலுல நின்று பேசிட்டு இருக்கோம்" என உள்ள அழைத்து சென்றார் பார்வதி.
"ஹ்ம்ம், அவ்ளோதா நீ எனக்கு குடுக்குற மரியாதை. என்ன பண்ண? அண்ணா இல்லனாலும் அண்ணா பையன் இருக்கானே சொந்தம் விட்டு போகுமா?அதான் மரியாதை கிடைக்கலனாலும் தேடி தேடி வரேன்" என அங்கலாய்த்து கொண்டார்.
உள்ளே வந்தவரை பார்த்தவுடன் சுபா மனமோ குதூகலித்தது. மகாலிங்கத்தின் தங்கை ஊர் வம்பை கடலையை மெல்வது போல் மென்று எடுப்பார். அதுவும் அவருக்கு பார்வதி என்றால் ஆகவே ஆகாது. பார்வதியை குறை சொல்வதே தனது தலையாய வேலையாக பார்த்து கொண்டிருப்பார்.
அவர் முன் பிரச்சனையை அரங்கேற்றினால் அது கண்டிப்பாக காட்டு தீ போல ஊரெங்கும் பரவும் என மனதில் கணக்கு போட்டாள். இப்போதெல்லாம் சுபாவின் நடவடிக்கைகள் நல்ல விதமாக இருப்பதால் அவள் மனம் மாறி உள்ளது என நினைத்தான் ருத்ரன். அந்த பிரச்சனைக்கு பிறகு இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை தான். ஆனால் ருத்ரனின் பார்வை எப்போதுமே அவள் மேல்தான் இருக்கும்.
அதனால்தான் அவளின் மாறுதல்களை அவனால் விரைவில் கண்டறிய முடிந்தது. இன்று வேலை முடிந்து அவளிடம் தங்கள் வாழ்வை பற்றி பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும், முடிந்தால் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துதான் அவன் வேலையை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றான்.
வீட்டினுள் வந்ததுமே அவன் அத்தைதான் அவனை வரவேற்றார்.
" வாங்க அத்தை எப்பொழுது வந்திங்க?" என வினவினான்.
அதற்க்கு சாரதாவோ “மதியம் ஒன்றரை போல் வந்தேன் மருமகனே. நீங்க எப்புடி இருக்கீங்க? உங்களைத்தான் பார்க்கவே முடியல. அப்பவே என் பொண்ண உங்களுக்கு கட்டி தர கேட்டா உங்க அம்மா தான் ஒத்துக்கல. சீமையிலே இல்லாத மருமவள கூட்டியாதுட்டா” என அங்கலாய்த்து கொண்டார்.
"சரி உங்க பொஞ்சாதி கிட்ட பேசலாம்னா அவள் அறையை விட்டு வெளியே வந்தா தானே" என அவனிடம் குற்ற பத்திரிக்கை வாசித்தார்.
பின் பெருங்குரல் கொடுத்து " சுபா! சுபா! அடியே" என கத்தி சுபாவை அழைத்து கொண்டிருந்தார்.
அவளுக்கே சற்றே எரிச்சல் எட்டி பார்க்க முகத்தை கடுகடு என வைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் ருத்ரனை கண்டவுடன் மகிழ்ச்சி அடைத்தாள்.
அவ்வளவு நேரம் எள்ளும் கொள்ளும் வெடித்த முகம் இப்பொழுது சந்தோஷமாக மாறியது. இதை ருத்ரனும் அவதானித்தான். அவனுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அதன் பின் இருக்கும் சூழ்ச்சி அவன் கண்டறியான்.
"புருஷன் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்துருக்கான். போ.. போய் அவனுக்கு சூடா காபி கலந்து எடுத்து வா" கூறினாள் சாரதா.
அவளும் சரி என விரைந்து சென்று அறைக்குள் நுழைந்தாள். அதை பார்த்த சாரதாவோ,
"ஹே இந்தா பொண்ணு! சமையல் அறை அங்க இருக்கு” என கத்தி கூறினாள்.
ஆனால் பயன் தான் பூஜ்ஜியம். போன வேகத்தில் திரும்பி வந்த சுபாவோ ருத்ரன் கையை திருப்பி அவன் உள்ளங்கையினுள் எதையோ திணித்தாள் அவன் கண்களை பார்த்துக்கொண்டே.
“உங்களுக்குத்தான், உங்களுக்குத்தான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளேன்" என கூறினாள்.
அவனும் ஆர்வமாக கைகளை நோக்கினான். சுற்றி உள்ள அனைவருக்குமே ஒரு வித குறுகுறுப்புதான். அவன் உள்ளங்கையை பார்த்தவர்கள் அனைவரும் மனமகிழ்ந்து போனார்கள். பார்வதியோ மகிழ்ச்சியின் உச்சியில் நின்றிருந்தார் ஆனால் உரியவனோ அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டான்.
ஆம்! அவன் கையில் அவள் திணித்தது கற்பத்தை உறுதி செய்யும் கருவி (Pregnancy Test Kit). அதில் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என இருகோடுகள் இருந்தன. அவனை பார்த்து ஒரு குரூர புன்னகையை சிந்தி விட்டு திரும்பவும் அறையினுள் சென்றாள். அவன் திக் பிரம்மை பிடித்தவன் போல் அப்படியே நின்றிருந்தான். சென்றவள் கையில் அவளது உடை பெட்டியினை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவளை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியே. பார்வதியோ " என்னமா பெட்டியோட எங்க போற? உன் தாய் வீட்டுக்கு போக இன்னும் நேரம் இருக்கு. அதுவரை நான் உன்னையும் என் பேரக்குழந்தையையும் நல்லபடியா பார்த்துக்குவேன்” என கூறினார்.
அவரை இளக்காரமாக பார்த்து விட்டு “உங்க பேரக்குழந்தையா? அப்படினு யார் சொன்னா?” என நக்கலாக கேட்டாள்.
“ஆண்மை அற்ற மகனை என் தலையில் கட்டி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்கல” என பொறுமினாள்.
அவளின் வார்த்தையின் வீரியத்தால் அங்கு உள்ள அனைவருமே உறைந்து போயினர். சாரதாவுக்கோ அனைத்தையும் பார்த்து சுவாரசியம் கூடி போனது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா நம் மக்கள். அதுவும் சொந்த பந்தம் என்ற போர்வையில் சிலர் இருப்பார்கள். நாம் எப்போது சறுக்குவோம் என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பின் நம் சறுக்கலை கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அப்படி ஒரு உறவுதான் சாரதாவும்.
பார்வதியோ ஆத்திரத்தில் உச்சத்தில் இருந்தார். தன் மகனை பற்றி என்ன ஒரு வார்த்தை கூறிவிட்டாள். கண்கள் சிவக்க "யார பாத்துடி ஆண்மையற்றவன்னு சொன்ன?" என்று அவர் எகிறி கொண்டு வர அதற்க்கு அவளோ சற்றும் சளைக்காமல்,
"உங்கள் மகனை பார்த்துதான் சொன்னேன். உங்கள் மகனை கல்யாணம் கட்டி என் வாழ்க்கையே பாழா போச்சி. இனி உங்கள் மகனுடன் என்னால் வாழ முடியாது. டிவோர்ஸ் பைல் பண்ணிருக்கேன். எல்லாத்துக்குமே நல்ல விதமா ஒத்துழைப்பு கொடுப்பிங்கன்னு எதிர்பார்க்குறேன். அதே போல தயாரா இருங்க அலும்னி கொடுக்க, என வாழ்க்கையை உங்க மகனுடன் பத்து மாதம் வீணடித்ததற்கு நஷ்ட ஈடு நீங்கள் தந்தே ஆக வேண்டும்" என மிரட்டினாள்.
அவளின் இந்த முகம் புதியது. 'சுபாவா இப்படி?' என நினைத்தனர். ஆனால் உண்மையில் சுபாவிற்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது மிகவும் மோசமான முகம்.
சுபாவுக்கு தன்னில், தன் அழகில் அதிகமான கர்வம் உள்ளது. யாராக இருந்தாலும் தன் அழகில் மயங்கி விடுவார்கள் என்றே நினைத்திருந்தாள். அவளின் தாய் ருத்ரனின் புகைப்படத்தைக் காட்டும்போது அவனின் அழகிலும் ஆளுமையான தோற்றத்திலும் ஈர்க்கப்பட்டுதான் கல்யாணத்திற்குச் சம்மதித்தாள்.
சுபாவிற்கோ கட்டுப்பாடின்றி வாழும் வாழ்க்கையின் மேல் தான் அதிக மோகம். அவள் கல்லூரி படிக்கும் காலத்தில் நிறைய ஆண்களைக் காதலித்து இருக்கிறாள். அதில் இருவருடன் எல்லைமீறியும் இருக்கிறாள். அவளைக் கட்டுப்படுத்தினாலோ இல்லை கேள்விகேட்டாலோ அவளுக்குப் பிடிக்காது. உடனே அவர்களை வேண்டாம் என்று கூறிவிடுவாள். இவை அனைத்துமே வீட்டிற்கு தெரியாமல் பார்த்து கொண்டாள்.
சுபாவும் ருத்ரன் புகைப்படத்தை பார்த்து மயங்கினாலும் அவனை பற்றி தெரிந்து கொள்ள முகநூல், படவரி(instagram) மூலம் அவனை பற்றி அறிந்து கொள்ள தேடினாள். அப்போதுதான் முகநூலில் சக நட்பு வட்டத்தில்(mutual Friend List) அவளின் தோழன் ஒருவன் இருப்பதை கண்டறிந்தாள்.
அவனிடம் ருத்ரனை பற்றி விசாரித்தாள்.
"ராஜ் உன்னோட முகநூல்ல ஒரு பையன் இருக்கான். பேரு ருத்ரன் உனக்கு ஸ்கிரீன் ஷாட்(screen shot) செய்து அனுப்பியுள்ளேன். அவனை பற்றி தெரிந்தால் சொல்லேன்" என கேட்டாள்.
அதற்கு அவனும் "தெரியுமே என் அண்ணாவோட ப்ரெண்டு தான் டி. கூட வேலை செய்றாரு. ரொம்ப நல்ல டைப். அவருக்கு சொந்தமா ஒரு தொழில் தொடங்க ஆசை இருக்கு. இப்போ அவர் வேலை செய்யும் இடத்தில கூட அவருக்கு நல்ல பெயரே" என அவனும் அவனுக்கு தெரிந்தவற்றை அவளிடம் கூறினான்.
இதனை எல்லாம் கேட்டுத்தான் கண்டிப்பாக இவனை தான் கல்யாணம் கட்ட வேண்டும் என உறுதி எடுத்தாள். வீட்டில் அவன் மட்டும் தான், கூட பிறந்தோர் என யாரும் இல்லை. தாய் மட்டுமே அதுவும் வயதானவர். சிறிது காலம் மட்டுமே மாமியாரை பொறுத்துக்கொண்டால் பின் ருத்ரன் அவள் வசம் ஈர்க்கப்பட்டு அவள் பேச்சினை கேட்கும் ஒரு தலையாட்டி பொம்மையாக மாற்றி மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து தனி காட்டு ராஜாவாக இல்லை இல்லை, தனி காட்டு ராணியாக வாழ வேண்டும் என்பதே அவளின் திட்டம்.
எப்படியும் முதல் இரவில் அவள் அழகிலும் அவள் உடல் அமைப்பிலும் ருத்ரன் விழுந்து விடுவான். பின் அவள் ஆதிக்கம் தான் என எண்ணியவளுக்கு முதல் இரவில் ருத்ரனின் வேண்டுகோள் அவள் தலையில் இடியாய் இறங்கியது. எதுவும் சொல்லாமல் படுத்துகொண்டாள். பின் வரும் நாட்களில் அவன் அவளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான் தான். ஆனால் அவள் அதற்க்கு ஒத்துழைக்கவில்லை. அவன் பேச முயற்சி செய்யும் போதெல்லாம் இவள் முகம் கொடுத்து கூட பேச வில்லை. ஏனென்றால் அவனை அலைய விடவேண்டும் என நினைத்தாள். ஆனால் ஒன்றை மறந்தாள் அவன் ருத்ரன்.
வீட்டில் இருப்பவர்களை பொறுத்தவரை இவள் தாய் தந்தை சொல்லை கேட்கும் நல்ல பிள்ளை. ஆனால் வெளி உலகத்தில் இவளுக்கு வேறு முகம் இருப்பது அவள் பெற்றோருக்கு தெரியாது.
அன்றைய அவர்களின் சண்டைக்கு பின் சுபா தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
'என்னை பார்த்து இவன் மயங்கவில்லை என்றால் அப்போ இவனுக்கு ஆண்மை இல்லை. அந்த குறையோடுதான் என்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இல்லையேல் எப்படி ஒருவனால் பக்கத்தில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு இவ்வளவு கட்டுக்கோப்பாக இருக்க முடியும்?
இவன் குறையை மறைக்க என்னை அறைந்திருக்கிறான். இனி இவனுடன் வாழ்ந்து நம் வாழ்வை கெடுத்துக்க கூடாது. இவனை விட்டு பிரிய வேண்டும்' என எண்ணிக்கொண்டாள்.
ஆனால் நல்ல முறையில் அல்ல. அவனை அவமான படுத்த வேண்டும், அசிங்க படுத்த வேண்டும் என அப்போதே முடிவெடுத்து விட்டாள்.
இந்த திட்டத்தின் அமலாக்கம் தான் இன்று அரங்கேறி கொண்டு இருக்கிறது.
இதனை அனைத்தையும் கேட்ட சாரதாவுக்கு மனது குளுகுளு வென இருந்தது. பார்வதியோ ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றிருந்தார். அவருக்கு குற்ற உணர்வாய் இருந்தது. அப்படியே விட்டிருந்தாலும் மகன் சந்தோஷமாக இருந்திருப்பான். அவனுக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து நாமே அவன் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என மருகினார்.
ருத்ரனிடமோ எந்த ஒரு அசைவும் இல்லை. அமைதியாக நின்றிருந்தான். அவனது கண்கள் கலங்கி இருந்தது. அவனால் மனைவியின் துரோகத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் மீது காதல் எல்லாம் இல்லை. ஆனால் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது சில்லு சில்லாக உடைந்து விட்டது. அவளும் என்ன என்ன பேச முடியுமோ அத்தனையும் பேசி ருத்ரனை அசிங்க படுத்தினாள்.
ஒருவழியாக புறப்படுவதற்கு வாசல் வரை சென்றவளை ஒரு குரல் தடுத்தது, அது ருத்ரனுடையதுதான். அவன் கேட்ட ஒற்றை கேள்வி அது யார் குழந்தை என்பதே.
அதற்கு அவள் " என்னோட காதலன் சுதீப்போட குழந்தை. ரொம்ப ஆண்மையானவர்(manly) உருவத்தில் மட்டும் இல்லை செயலிலும்" என்று கூறி தன் வன்மத்தை அப்போதும் வெளிப்படுத்தினாள். சொல்லிவிட்டு சென்று விட்டாள்.