அவள் சென்றபின் புயல் அடித்து ஓய்ந்ததை போல இருந்தது அவன் வீடு. அவள் சென்ற பின் அவனும் அவன் அறைக்கு சென்று விட்டான். பார்வதி வரவேற்பறையில் கண்களில் கண்ணீரோடு செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சாரதா அவர் உடமைகளை எடுத்து கொண்டு அவர் வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டார்.
புறப்படும் முன் பார்வதியை பார்த்து "நல்ல வேளை என் மகளை உன் மகனுக்கு கொடுக்கலை. என் மகள் வாழ்க்கை வீணாக போயிருக்கும்" என அவரை குத்தி கிழித்து விட்டே சென்றிருந்தார்.
ருத்ரனின் வீடே மயான அமைதி கொண்டது. சாரதாவின் மூலமாக பார்வதியின் குடும்ப கதை சொந்த பந்தங்களிடம் காட்டு தீபோல பரவியது. ருத்ரன் எல்லோரின் வாய்க்கும் விருந்தாகி போனான்.
அவன் ஆண்மையற்றவன் என்று எல்லோரும் அவன் அந்தரங்கத்தை விமர்சித்தனர். தாயும் மகனும் கூனிக் குறுகி நின்றனர். நாட்கள் செல்ல விவாகரத்தும் எந்த பிரச்சனையும் இன்றி கிடைத்து விட்டது.
நஷ்ட ஈடாக சுபா அவனிடம் எண்பதாயிரம் கேட்டிருந்தாள். ருத்ரனுக்கு அது மிக பெரிய தொகையே. ஆனாலும் அவளின் தொடர்பே இருக்க கூடாது என எண்ணி கஷ்டப்பட்டு அந்த தொகையை பிரட்டி கொடுத்தான்.
அதன் பின் அவனை பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவன் கேலி கூத்தானான். யாரிடமும் அவன் பேசுவதில்லை. ஏன் வீட்டை விட்டே வெளி வருவதில்லை. அவனுக்குள் உழன்று கொண்டு இருந்தான்.
வேலை செய்யும் இடத்திலும் அவனின் விஷயம் கசிய தொடங்க வேலையையும் விட்டு விட்டு வீட்டிலேயே இருந்தான். இப்படி ஒரு இழிசொல் எந்த ஆண்மகனுக்கும் அவமானமாகத்தானே இருக்கும், அதில் ருத்ரன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கல்யாணம் வேண்டாம் என்றானே, அதையும் இதையும் பேசி பேசியே அவனை சம்மதிக்க வைத்தாரே என்று பார்வதி மீதும் அவனுக்கு கோபம். இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்த தருணம் ஒருநாள் தனிமையில் இருந்த அவனோ எதோ தோன்ற வெளியே போகலாம் என பக்கத்தில் இருக்கும் பூங்கா ஒன்றுக்கு சென்றான்.
அங்கு சென்று அமைதியாக அமர்ந்து அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்தான். அது அவன் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. சூது வாது அறியாத மழலைகள். அவர்களின் சிரிப்பும் குறும்பு தனமும் அவனை அவர்கள் பால் ஈர்த்து சென்றது.
அவனுக்கும் வைணவியின் நினைவுகள் வந்தது. அப்போது அங்கு ஒரு குழந்தை தனியே ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தது. திடீரென்று அக்குழந்தை தடுமாறி கீழே விழுந்து விட்டது.
அதைக்கண்டவன் அக்குழந்தையை தூக்க முற்படும்போது அந்த இடத்துக்கு ஒரு பெண் வந்திருந்தாள். அப்பெண்ணின் முகத்தை அவனால் காண இயலவில்லை. அவள் அவனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தாள். அவள் அக்குழந்தையிடம்
" அச்சோ தங்க பொண்ணு விழுந்துட்டீங்களா?" என கேட்டாள்.
அதற்கு அக்குழந்தையும் அழுதுகொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினாள். குழந்தைக்கு அடி பலம்தான். பின் "ம்மா சிவிங்" என ஊஞ்சலை கை காட்டியது. "ஊஞ்சல்ல இருந்து விழுந்துட்டீங்களா தங்கம்?" என அவள் கேட்க, அக்குழந்தையோ "ஹ்ம்" என தலை ஆட்டியது.
அதை கேட்ட அப்பெண்மணியோ "அப்படியா பட்டு! ஓகே விடுங்க, அடுத்த தடவை விழாமல் விளையாடலாம்" என கூறிக்கொண்டே குழந்தையின் கை கால்களை பார்த்தாள். அதில் சிறு சிறு காயங்கள் மட்டுமே இருந்தன.
அதனை பார்த்து அதில் ஊதி விட்டாள். பின் மீண்டும் அந்த ஊஞ்சலிலே அமர வைத்தாள். குழந்தை எங்கே மீண்டும் நாம் விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஊஞ்சலில் அமர மாட்டேன் என அழுந்தது.
இதனை பார்த்து கொண்டு இருந்த ருத்ரனுக்குமே,
"என்ன பெண் இவள் பாப்பா அதிலிருந்துதான் விழுந்தாள், திரும்பவும் அதிலேயே அமர வைக்கிறாளே" என சற்று கோபமாக எண்ணினான்.
கட்டாயப்படுத்தி அந்த ஊஞ்சலில் அமர வைத்து பாதுகாப்பாக அந்த ஊஞ்சலை இயக்கினாள். பயந்து அழுத அந்த குழந்தை கொஞ்ச நேரத்தில் சிரிக்க ஆரம்பித்தது. அக்குழந்தையின் அழுகை முற்றிலும் நின்ற பிறகு அப்பெண் அக்குழந்தையை தூக்கிக்கொண்டாள்.
தூக்கியவள் அக்குழந்தையிடம் "ஒரு தடவை விழுந்தா மறுமுறை எழுந்து அதே இடத்துக்கு சென்று அங்கிருந்து ஓட ஆரம்பிக்கணும். அடுத்த முறை விழாமல் பாத்துக்கணும். எங்கே விழுந்தோமோ அந்த இடத்தில் விழுந்த தடயத்தை விட எழுந்த தடயத்தையும் வென்ற தடயத்தையும் இன்னும் அழுத்தமாக பதிக்கணும்.
கஷ்டம் தான், ஆனாலும் பரவாயில்லை நம்ம சோர்த்து போகாம வெற்றியை நோக்கி ஓடணும். நீ வெற்றி பெற்றால் நாடே உன் கீழ்" என கீழே விழுந்த குழந்தையிடம் குழந்தைக்கு புரியாத மொழியில் எங்கோ பார்த்து கூறிக்கொண்டிருந்தாள்.
இவ்வார்த்தைகள் குழந்தைக்காகவா இல்லை இலை மறை காயாக அவளுக்கே அவள் அளிக்கும் தைரியமா என்பது அவளுக்குத்தான் வெளிச்சம். இச்சொற்கள் யாருக்கு கூறப்பட்டதோ ஆனால் இதில் பலன் அடைத்தது என்னவோ ருத்ரன் தான். அவனுக்காகவே அப்பெண் கூறியது போல் இருந்தது.
பல வருடம் முன் அவனது தந்தை எப்படி அவனுக்கு அறிவுரை வழங்கினாரோ அதே போல் உணர்ந்தான் ருத்ரன். இவ்வார்த்தைகள் அவனுக்கும் தைரியத்தை வரவழைத்தது.
சிறிது நேரம் கண்களை மூடி ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கண்களை திறந்தான். தன் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழி காட்டிய அப்பெண்ணிற்கு நன்றி சொல்ல தேடினான். ஆனால் அவள் அங்கு இல்லை.
அந்த பெண் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டாள். அவனும் அதன் பின் வீட்டிற்கு சென்றான். அவனுக்குள் ஒரு புது தெளிவு பிறந்திருந்தது.
புதிய ருத்ரனாக மாறினான். யார் என்ன பேசினாலும் அதை அவன் கண்டுகொள்ளவில்லை. வங்கியில் சிறு தொகையை கடனாக பெற்று அவன் தொழிலை தொடங்க ஆரம்பித்தான்.
காலங்கள் செல்ல செல்ல அவன் தொழிலும் நல்ல படியாக வளர்ந்தது. வங்கி கடனை இரண்டு வருடத்தில் அடைத்துவிட்டான் அவன். அவன் அவனுக்குள் இறுகிபோனான். அவனது குரலை கேட்பதே அரிதாகி போனது. முன்பு வேலை முடிந்து வந்து கண்டிப்பாக தாயுடன் அமர்ந்து கதை பேசுவான். ஆனால் இப்போதெல்லாம் மகன் தன்னை மன்னித்து தன்னுடன் இயல்பாக பேச மாட்டானா என பார்வதி தவிக்கின்றார். பலன் தான் பூஜ்ஜியம்.
ஒழுக்கமாக இருந்து அவனுக்கு கிடைத்தது என்னவோ அவமானமும் அவச்சொல்லும் தான். அதனால் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கத்தை கை விட்டான். ராமனாக இருந்தவன், கிருஷ்ணனாக மாறினான்.
அதற்காக அவன் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கவில்லை. இனி அவன் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை என அவனே உறுதி கொண்டான்.
மது குடிக்க பழகினான். இரவு பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு செல்ல தொடங்கினான். அவனாக எந்த பெண்ணையும் தேடமாட்டான். ஆனால் அவனை தேடி வரும் பெண்களையும் அலட்சியம் செய்ய மாட்டான்.
அவன் போக்கு பார்வதிக்கு பிடிக்கவிக்கல்லை தான். ஆனால் இதனை அவனிடம் கேக்க திராணியும் இல்லை. காலங்கள் உருண்டோடி மூன்றரை வருடங்கள் கடந்து விட்டது.
இப்போது அவனுக்கு என்று ஒரு சாம்ராஜ்யம். தொழிலில் அவனின் நேர்மை, தரம் அவனை யாரும் தொட முடிய உயரத்துக்கு கொண்டு சென்று விட்டது.
புதிய நவீன வசதி கொண்ட மனை ஒன்றை சுயமாக வடிவமைத்து கட்டினான். என்னதான் தாயின் மேல் கோபம் இருந்தாலும் அவருக்கு ஏற்ப அவரது அறையை வடிவமைத்து கட்டினான்.
பெற்றவளுக்கு விருப்பமோ இல்லையோ வந்தே ஆகவேண்டும் என அவனுடைய வீட்டிற்கு அவரை அழைத்து சென்று விட்டான்.
சொந்த பந்தங்களை அவன் புறக்கணிக்கவில்லை. அவன் வீட்டிற்கு சொந்தங்கள் வந்தால் வா என்றும் அழைக்க மாட்டான், போ என்றும் துரத்தமாட்டான். சாரதாவை மட்டும் அடியோடு விலக்கியிருந்தான். இப்படியே அவன் வாழ்க்கையும் ஒரு பிடிப்பின்றியே நகர்ந்தது.
பார்வதிக்கு அவனுக்கு எப்படியாவது மறுமணம் செய்து வைக்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது. இதற்காகத்தான் பெண்கள் புகைப்படத்தை அவனிடம் காட்டியதே. திரும்பவும் திருமணமா! இன்னும் அன்று பட்ட சூடே தணியவில்லையே.
"இன்னும் நீங்க மாறவில்லை. திரும்பவும் என்னை அசிங்க படுத்த நினைக்கிறீங்களா? எதற்கு திருமணம்? அவள் சொன்னது போல் உடல் சுகத்திற்காகத்தானே. அது எனக்கு இப்போது தாராளமாக கிடைக்கிறது. அதற்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.
ஒரு அம்மாவிடம் பேச கூடாத வார்த்தைகள் தான் ஆனால் நீங்க என்னை பேசவைக்குறீங்க. இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைங்க, இல்லை என்னை வேற ஒரு ருத்ரனாகத்தான் பார்ப்பீர்கள்" என கடிந்து வார்த்தைகளை துப்பிவிட்டு சென்றிருந்தான்.
கோபத்தை குறைக்கவே ஷவரின்(shower) கீழ் நின்றிருந்தான். ஆனால் தன்னையும் மீறி அவன் நினைவுகள் கடந்த காலத்தை அசைபோட்டது. சட்டென அடுத்த வேலை கவனத்திற்கு வர கண்ட குப்பைகளை ஒதுக்கி குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டான்.
செல்லும்முன் தாயை பார்த்து "தேவை இல்லாத வேலையை பார்க்காதீங்க" என எச்சரித்துவிட்டு சென்றான்.
மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழ்பவன், திருமணமே வேண்டாம் என்று இருப்பவன் வாழ்வில் தென்றல் ஒன்று தீண்டினால் என்னவாகும் அவன் நிலைமை
…………………………………………
“ழிணி எழுந்துக்கோமா, தங்க பொண்ணுல என் பாப்பா" என மகிழினியை காலையில் எழுப்பி கொண்டிருந்தாள் உமையாள்.
"ஹ்ம்ம் அம்மா, இன்னும் ஐந்து நிமிஷம் மா" என்று அவளும் அம்மாவிடம் தூக்கத்திற்காக கெஞ்சுகொண்டிருந்தாள்.
"எத்தனை ஐந்து நிமிடம்? வி ஆர் கெட்டிங் லேட் பேபி. வேக் அப் குயிக்" என விடாப்பிடியாக எழுப்பிக்கொண்டிருந்தாள் உமையாள். அவளும் தட்டு தடுமாறி எழுந்து கொண்டாள். பின் அவளை சுத்தம் செய்து ஆடை அணிவித்து தலை வாரி என ஒரு மகளுக்கு செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் செய்தபின் உணவருந்த அழைத்து சென்றாள்.
"அம்மா மாமா எப்போ வதுவாது? ஐ மிஸ் ஹிம்" என குழந்தை சோகமாக கேட்டது.
அதற்க்கு உமையாளோ "வருவான் வருவான், அவன் வீட்ல இருந்தா அவகூட சண்டை போடுறது இல்லனா பீல் பண்றது" என போலி கோபத்தோடு கடிந்து கொண்டாள்.
நீலன் அவன் படிப்பு முடியும் தருவாயில் வேறொரு இடத்தில் மருத்துவம் செய்முறையாய் பயின்றுகொண்டு உள்ளான். அவன் வீட்டுக்கு வந்தே இரண்டு மாதம் ஆயிற்று.
"டிங் டாங்"
அழைப்பு மணி அடிக்கும் ஓசை. கதவை திறக்க சென்றால் உமையாள் வாசலில் வேறு யார்? கயல் தான் நின்று கொண்டிருந்தாள்.
"வா கயல், காலை உணவு முடிந்ததா? என கேட்டாள்.
அதற்கு கயல் "ஹ்ம்ம் சாப்பிடாச்சு அக்கா" என கூறினாள்.
"ஓகே நீ ஒர்க் ஸ்டேஷன் போ, நான் இதோ இவளுக்கு உணவளித்து வரேன்" என கூறினாள் உமையாள்.
அதற்கு அவளும் சரி என வேலை நடக்கும் இடத்துக்கு சென்றாள்.
அரை மணி நேரத்தில் உணவளித்து மீதம் உள்ள வேலையெல்லாம் செய்து விட்டு மகிழினிக்கு அவள் செய்யும் வர்ணம் தீட்டும் வேலை, அஆ எழுதும் வேலை எல்லாம் கொடுத்து விட்டு வேலை நடக்கும் இடத்துக்கு விரைந்தாள்.
அப்போது கயலோ "அக்கா மரம் போல் வடிவமைத்து நீங்க ஒரு குட்டி சாம்பிராணி பீடம் செய்தீர்களே, அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பின் அரச இலையை காய வைத்து அதில் கோல்ட் வர்ணம் தீட்டி அதன் நடுவில் பிள்ளையாரை ஓட்ட வைத்தீங்களே, அந்த கலை பொருளுக்கு டிமாண்ட் அதிகமாக வருகிறது.
புத்தக கடை ஒன்றில் இருந்து நீங்கள் வருவதற்கு சற்று முன்தான் நமக்கு அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு அந்த அரச இலை கலை பொருள் ஐம்பது வேண்டுமாம். முன் பணம் கொடுத்து விடுவார்களாம். பின் நாம் நம் பொருள்களை அவர்களிடம் கொடுத்தவுடன் மீத பணத்தையும் கொடுத்து விடுவார்களாம்" என கூறினாள்.
இதனை கேட்ட உமையாளுக்கு மிகவும் மகிழ்ச்சி.
"நம்ம கிட்ட அது மீதம் எவ்வளவு உள்ளது?" என வினவினாள்.
அதற்கு கயலோ " அக்கா அந்த பொருள் நம்மகிட்ட பன்னிரெண்டுதான் இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டும்" என கூறினாள்.
அதற்கு உமையாளோ "ஓகே மீதம் தேவையானதை நான் செய்ய ஆரம்பிக்கிறேன், ஆஹ் மறக்காமல் அவர்களிடம் நம் மின் அஞ்சல் முகவரியை கொடுத்து மேற்கோள்(QUOTATION) ஒன்றை அனுப்பிவிட சொல் " என கூறியிருந்தாள்.
கயலோ " சரி அக்கா, அவர்களுக்கு தொடர்பு கொண்டு கூறிவிடுகிறேன்" என்று கூறினாள்.