Kiruthika_Jayaseelan
Moderator
அத்தியாயம் 1
வெய்யோன் அவனின் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தான்.
அவளும் எழுந்து அமர்ந்தாள். ஆயிற்று, அகல்யா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆயிற்று!
எழுந்து அமர்ந்தவள், நேரத்தை பார்க்க, அதுவோ ஒன்பது மணி காட்டியது.
"ஐயோ இன்னைக்கும் லேட்டா", என்று புலம்பிக்கொண்டே, எழுந்து குளித்து விட்டு, அவளின் சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். அவளுக்கு புடவை அணிய தெரியாது. ஆனால் இங்கு அவளுக்கு பிடித்த ஜீன்ஸ் போடவும் முடியாது என்று அவளுக்கு தெரிந்து தான் சுடிதாருக்கு மாறி விட்டாள்.
குளித்து விட்டு வெளியே வந்தவளின் முன் அங்கே அமர்ந்து இருந்த காத்யாயனி தான் தென்பட்டார்.
"அத்தை என்ன எழுப்பிருக்கலாமே", என்று சொல்லிக்கொண்டே அவள் வர, "இதுல என்ன இருக்கு கண்ணு.. நீயே ராத்திரி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்க... காலைலயாவது தூங்குவேன்னு தான் விட்டுட்டேன்", என்றதும் அவளுக்கு உண்மையாகவே அவ்வளவு மகிழ்ச்சி.
கொற்றவை, வித்யா, வைஷ்ணவியை விட மிக மிக நல்ல மாமியார் தான் காத்யாயனி.
இது அவரது மகள் யாழ் அங்கு வாழ்வதால் மட்டும் அல்ல என்று அவள் வந்த நாளே புரிந்து கொண்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன் வந்த பெண் ஒருவர், "ஏனுங்க அண்ணி, உங்க மருமக புடவை எல்லாம் கட்டாதோ?", என்று நக்கலாக கேட்க, "என் மருமக என்ன வேணா போடுவா, நீ எவ டி அது கேட்குறது? நானே என் மருமகளை ஏதும் சொல்லல வந்துட்டாளுக, புடவைய கட்டு, கோமணத்தை கட்டுனு", என்று அந்த பெண்மணிக்கு பதில் அடி கொடுக்க, அந்த பெண்மணியோ ஓடியே விட்டார்.
ஆனால் அகல்யா தான், "நான் வேணா புடவை கட்டுறேன் அத்தை", என்கவும், "அட நீ ஏன் கண்ணு இதெல்லாம் பெருசா எடுடுக்குற? பேசுறவளுங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க... யாழை கூட இப்படி தான் பேசுவாங்க.. இதெல்லாம் கண்டுக்காத.. ஏவலாச்சு ஏதாச்சு சொன்னா சொல்லு, நானே அவளுங்க கழுத்தை சீவி புடுறேன்", என்று சொன்ன கிராமத்தின் மாடர்ன் மாமியார் தான்.
அவளை இங்கு வந்த முதல் நாள் முதல், சாப்பிட்ட தட்டை கூட எடுக்கவில்லை அந்த அளவுக்கு, அவளை தாங்கு தாங்கு என்று தாங்கி கொண்டு இருந்தார்.
"நீங்க ரொம்ப நல்லவங்க அத்தை", என்று அவள் சொல்ல, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கண்ணு... அவளோ நல்லவளா இருந்தா என் பொண்ண என் குடிகார தம்பிக்கு கட்டி தர ஒத்துக்கிட்டு இருப்பேனா?" என்று அவர் கண்களை துடைத்து கொள்ள, "ஐயோ அத்தை அதையெல்லாம் விடுங்க.. எனக்கு பசிக்குது", என்று அவள் சொல்லவும் தான் அவள் சாப்பிடவே இல்லை என்பது அவருக்கு உரைத்தது.
"ஐயோ நான் ஒரு கிறுக்கச்சி உனக்கு சாப்பிட தரமா உட்காந்துகிட்டு இருக்கேன்", என்றவர், அவருக்கு கிச்சடியும், சாம்பார், சட்னி, வடை மற்றும் ஒரு சிறு சொம்பில் கூழும் எடுத்து வந்து கொடுத்தார்.
"எப்படி தான் எல்லாத்தையும் நீங்க தனியா செய்யுறீங்களோ அத்தை", என்று கேட்டுக்கொண்டே அவர் கொடுத்த உணவை சுவைக்க துவங்கினாள்.
உண்மையை ஒப்புக்கொள்ள தான் வேண்டும், கொற்றவையை விடவே நன்றாக சமைத்தார் காத்யாயனி.
"ரொம்ப நல்லா சமைக்கிறீங்க அத்தை", என்று இப்போதும் அவள் சொல்ல, "நீயும் வந்த நாள்ல இருந்து இத சாப்பிடும் போதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கியே மா", என்றவர் சொல்லவும், "உண்மைய தானே சொல்றேன்", என்றவளை பார்த்து, "ராணி மாதிரி உன்ன கட்டிக்கொடுக்கணும்னு உன் அம்மா அப்பா ஆசைப்பட்டு இருப்பாங்க... நீ இந்த கிராமத்துல வந்து கஷ்ட படுற", என்றவரை பார்த்து, "என் வீட்ல இருக்கவங்க பார்த்து இருந்தா பணக்காரனா கிடைச்சிருப்பான் ஆனா இப்படி பாசமான மாமியார் கிடைச்சி இருக்க மாட்டங்களே", என்றவள் சொல்லவும், "ஐஸ் வெக்குற", என்றதும், "ச்ச உண்மையா சொல்றேன். உங்களுக்கு ஐஸ் வச்சி எனக்கு என்ன ஆக போகுது, வேணும்னா ஐஸ் வாங்கி தரேன்", ,என்று கண்களை சிமிட்டி கொண்டாள்.
அப்போது தான் வீட்டில் யாரும் இல்லை என்பதை பார்த்தவள், "வெற்றி, மாமா, மாறன்லாம் எங்க அத்தை?", என்று கேட்டவளிடம், "வெற்றியும் மாமாவும் இன்னைக்கு சனிக்கிழமைனு வயல்ல வேலை செய்றவங்களுக்குலாம் கூலி கொடுக்க போயிருக்காங்க... இந்த மாறன் பின்னாடி தலைக்கு குளிக்க என்னை தேய்ச்சிகிட்டு இருக்கான்", என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "அத்தை", என்று உள்ளே நுழைந்தாள் அழகு மயில்.
"என்ன மயிலு இன்னைக்கு காலைலயே விஜயம்?", என்று கேட்கவும், "வீட்ல நிறைய மல்லி பூத்திருச்சு அத்தை, அம்மா உளுந்தங்களி வேற செஞ்சி இருந்தாங்க அதான் அக்காக்கு கொடுத்து விட்டாங்க", என்று அழகு சொல்லவும், "கிளிம்மாக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு", என்று அகல்யா சொல்லவும், "ம்கூம் ஏன் நான் வாங்கி கட்டிக்கவா? எத்தனை தடவை சொல்லிருக்காங்க தேங்க்ஸ்லாம் சொல்ல கூடாதுனு... நீங்களும் அவங்களுக்கு பொண்ணு தான் அக்கா", என்று சொன்னவள், "எங்க வீட்ல யாரையும் காணோம்?", என்றதும், "நீ யாரை பார்க்க வந்தியோ அவன் பின்னாடி இருக்கான்", என்று சொல்லி அவள் கொண்டு வந்ததை எடுத்து சென்று விட்டார் காத்தியாயனி.
அவளும் மாறனை பார்க்க பின்னே சென்றாள்.
அதே சமயம் மாறனோ, "டேய் வேலா", என்று அவன் அழைக்கவும், அவர்களின் வீட்டு வேலைக்காரன் வேலன் வந்து நின்றான்.
"இன்னைக்கு எண்ணெய் தேச்சி தலைக்கு குளிக்கணும்... உடம்பு சூடாகிருச்சு போல வந்து எண்ணை தேச்சி விடு", என்று சொன்னதும் அவனும் எண்ணை எடுத்து வர, அவனிடம் இருந்து எண்ணையை பாரித்தது அழகு மயில் தான்.
அவனின் கண்கள் விரிய, அவனை அங்கிருந்து கண்களாலேயே அங்கிருந்து நகர சொன்னாள்.
பின்பு அவனின் பின்னாடி போய் நின்றவளிடம், "டேய் வேலா இன்னும் என்ன நல்லா தேய்ச்சி விடு", என்று சொல்லவும், அவளின் மென்மையான கரங்கள் அவனின் வன்மையான உடலை பற்றியது.
அவனுக்கோ உடலுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
"என்ன டா உன் கை இவளோ மிருதுவா இருக்கு?", என்று அவன் சொல்லவும், அவளால் என்ன சொல்ல முடியும்?
அவனின் முதுகு எங்கும் படிந்த அவளின் கரங்கள், எத்தனை நாட்கள் ஏங்கிருக்கிறாள் அவனை தொடுவதற்கு!! அவன் தான் அவளை கிட்டயே நெருங்க விடுவதில்லையே!
ஆறடிக்கும் மேல் வளர்ந்த திடகாத்திரமான ஆண்மகன் அவன். இந்த வீட்டின் விஷ்வாமித்ரன் என்று கூட சொல்லலாம்.
வெற்றியிடம் புன்னகைத்து பேசுபவர்கள், மாறனை கண்டால் மிரண்டு ஓடிவிடுவார்கள்.
அவனுக்கு நெருங்கி இருப்பது வெற்றி, அவிரன், அர்ஜுன், யாழ் மட்டும் தான். அவனின் சித்தப்பா பெண் மதுவிடம் கூட என்னனென்றால் என்ன என்கிற அளவிற்கு தான் பேசுவான்.
இப்போது தான் அகல்யாவிடம் கொஞ்சம் பேச ஆரம்பித்து இருக்கிறான்.
நல்லவன் தான், ஆனாலும் முரடன் அவன். இன்று வரை பெண்கள் அவன் ஒரு பார்வைக்காக ஏங்க, அவனோ தவத்தில் வாழ்கிறான்.
அவனின் தவவாழ்வை முறியடிக்க தான் முயற்சித்து கொண்டிருக்கிறாள் அழகு மயில்.
"டேய் அப்படியே கொஞ்சம் கையையும் பிடிச்சி விடு", என்று சொல்லவும், அவளின் இரு கைகளினால் கூட அவனின் கரங்களை பற்ற முடியவில்லை.
மல்யுத்த வீரனவன், இவளோ மலரிலும் மெலியவள்! வானிற்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் தான்.
"சரி அப்படியே வந்து முன்னாடி தேச்சி விடு", என்று சொன்னதும் தான் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
அவளின் கைகள் அந்தரங்கத்தில் நின்று விட்டது.
"டேய் முன்னாடி வா", என்று அவளின் கரங்களை பற்றி இழுக்க, அவளோ அவனின் மடியின் மீதே சரிந்து விழுந்தாள்.
விழுந்ததில் அவளின் மாராப்பு விலகி அவனுக்கு விருந்தாகி கொண்டு இருந்தது.
அவனோ கோவத்தில் சிவந்து அவளை கீழே தள்ளி விட்டு விட்டான்.
"அம்மா", என்று அவன் கத்திய கத்தலில், சாப்பிட்டு கொண்டிருந்த அகல்யாவும், காத்யாயணியும் பின்னே ஓடி வர, அவனோ சாபம் கொடுக்க தயாராக இருக்கும் முனிவன் போல காத்து கொண்டு இருந்தான்.
அழகு மயிலோ அப்போது தான் எழுந்து நிற்க, "இவ எதுக்கு இங்க வரா?", என்று பற்களை கடித்து கொண்டு கேட்க, "ஏன் வரக்கூடாது? இது என் தாய்மாமன் வீடு, நான் எப்போ வேணா வருவேனாக்கும்", என்று எகத்தாளமாக அவள் பேச, "வந்தா உன் மாமா, அத்தைய பார்த்திக்கிட்டு போ.. எதுக்கு என் கிட்ட வர?", என்று அவன் எகிறிக்கொண்டு வரவும், "டேய் மாறா விடு டா சின்ன பொண்ணு அவ", என்று காத்யாயனி மருமகளுக்காக பரிந்து பேச, அவ்வளவு தான், "அவ அடுத்த தடவ வந்தா, அவ இடுப்பு எழும்ப உடைச்சி போற்றுவேன் பாத்துக்கோங்க", என்று அவளை முறைத்து கொண்டே கூறினான்.
"நீ எப்போ இடுப்பு எலும்பை உடைப்பெனு தான் காத்துகிட்டு இருக்கேன் டா மாறா... ஆனா நீ அதுக்கு லாயக்கு இல்ல", என்றவள் சொல்லவும், அருகில் இருந்த கர்லாங் கட்டையை எடுத்து விட்டான்.
பயத்தில் அவள் ஓடி விட, "இவளை உள்ள விடாதீங்க", என்று சொன்னவன் குளிக்க சென்று விட்டான்.
"ஏன் டி அவன் கிட்ட எப்போ பாரு வம்பு இழுத்துகிட்டு இருக்க?", என்றவரை பார்த்து, "நீங்க எதுக்கோ உங்க மகனுக்கு செக் பண்ணிக்கோங்க அத்தை, பொண்ணுங்க மேல வேற விருப்பமே இல்லனு சொல்லறாரு... உங்களுக்கு மருமகள் வருவாளோ இல்ல மருமகன் வருவானோ யாருக்கு தெரியும்?", என்று அழகு மயில் சொல்லவும், அவளின் முதுகில் ஒரு அடி போட்டவர், "என் மகனுக்கு நீ வாக்கப்பட்டு வரும் போது உன்ன மாமியார் கொடுமை பண்றேன் பாரு", என்றதும், "அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது அத்தை! ஆகுற கதையா சொல்லுங்க", என்று விட்டு, அகல்யாவை பார்த்து, "அக்கா நீங்க பிரீனா சொல்லுங்க நம்ப வயலுக்கு போய்ட்டு வருவோம்", என்றவளை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தாள் அகல்யா.
சாப்பிட்டு முடித்து விட்டு, அவளும் அழகு மயிலும் போக, "வெற்றி சம்சாரம் தானே", என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.
அவள் இங்கு வந்தது முதல் இது தான் முதல் முறை வயலுக்கு வருகிறாள்.
அங்கோ சிதம்பரம் அமர்ந்து மற்றவர்களுக்கு கூலி கொடுத்து கொண்டிருக்க, "மாமா எங்கன்னு தெரியலையே", என்று சொன்ன அழகு மயில், "அதோ", என்று சொல்லவும், அவளின் கண்களும் திரும்ப, வெற்றியை பார்த்தவளாது கண்கள் விரிந்தன.
Last edited: