எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 8

subasini

Moderator
பகுதி – 8



மரத்தின் நிழலில் சில்லென்று குளிர்ந்தக் காற்றை வீச, மலர்களின் மணம் தந்தச் சுகந்தத்தில் மனம் லேசாகியது மதுமிதாவிற்கு.



மௌனத்தைக் கலைத்து அன்றைய தினம் நடந்ததெல்லாம் வார்த்தைகளாக் கோர்த்துச் சமர்ப்பித்து, தன் தோழியிடம் சரணடைந்தாள்…



இப்பொழுது இருக்கும் சூழலில் அவளின் ஒரே ஆறுதல் ரேணுகா மட்டுமே…

குழப்பமான மனநிலையில் பேசியதெல்லாம் அவள் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுப் பண்ணியது...





"அப்பாவின் மறைவிற்குப் பின், தனிமை ரொம்பவும் என்னை வதைத்தது, அந்த நேரத்தில், அவருடைய காதலை என்னிடம் கூறுவதற்குப் பல முறைச் சந்திக்க முயற்சி செய்தார் கதிர் வேந்தன்.



நான் அதெல்லாம் தவிர்த்து வந்தேன்… அவருடைய காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை விட, எப்படி என்னிடம் காதல் தோன்றலாம் என்ற கோபம் இருந்தது, இதெல்லாம் என் மனதிற்குள் பயத்தை உண்டாக்கியது" என்றாள் மதுமிதா.



"மாமா உன்னிடம் அவர் காதலைச் சொல்வதில் உனக்கு ஏன் டி, பயம் வரணும்" என்று கேட்டாள் ரேணுகா.



"அது" என்று வார்த்தைகளை இழுத்த மதுமிதா மெல்ல "நான் தான் அவரைத் தப்பா நினைச்சிருந்தேனே" என்றாள் உள்ளே போன குரலில்…



"என்னது, தப்பா நினைச்சிருந்தியா? எனக்குப் புரியவில்லை,கொஞ்சம் தெளிவாகச் சொல்லு" என்றாள் ரேணுகா.



"அது தான் சொல்ல வரேன் ரேணு. கொஞ்சம் பொறுமையாகத் தான் கேளேன். என் வேதனையைப் புரிந்துக்கொள்ளாமல், நீயும் என்னைச் சோதிக்காதே" என்று அழும் குரலில் கூறினாள் மதுமிதா…



"சரி சரி… நான் எதுவுமே சொல்லவில்லை , நீ சொல்லு" என்றாள் ரேணுகா…



"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்… நீயும் கதிர்வேந்தன் மாமாவும் தான் காதலிக்கிறீர்கள் என்று நான் தவறாக நினைத்து

விட்டேன், உன்னுடைய காதலன் கதிர்வேலன் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. இது தான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு " என்றாள் மதுமிதா.



மேலும் "அவரு என்கிட்ட வந்து காதலைச் சொல்லும் போதெல்லாம், அவரை நான் தவறாக நினைத்து விட்டேன், உன்னைக் காதலிக்கிறதாகச் சொல்லிட்டு , என்னையும் தப்பா நினைக்கிறாரு என்று நினைத்தேன்" …



"தப்பா நினைச்சியா அப்படின்னா அவர" என்று வார்த்தைகளை முடிக்காமல் தன் தோழியே பார்த்தாள் ரேணுகா.



ஆம் என்று மெல்ல, தலையாட்டிக் கண்கள் கலங்கி நின்றாள் மதுமதி.



"எவ்வளவு பெரிய தப்புப் பண்ணி இருக்கத் தெரியுமா? மது … அவர் உன்னை மட்டும் தானே காதலிச்சாரு, அதெப்படி, தப்பாக நினைக்கத் தோனுச்சு உனக்கு" என்று கேட்டாள் ரேணுகா.



"தப்புதான்… ஆனா அது நீ கதிர் கதிர் என்று சொல்லும்போதெல்லாம்… நான் உன் கதிர்வேந்தன் மாமாவை யோசிச்சேன் தவிர... கதிர்வேலனை, பற்றி நான் யோசிக்கவே இல்ல... தப்பு என்னுடையது தான்… நான் என்ன பண்ண அந்தச் சூழ்நிலை அப்படித்தான் எனக்குப் புரிந்தது" என்றாள் மதுமிதா …



"தப்பாக நினைத்து விட்டதெல்லாம் சரி, இதை நீ ஒன்னு என்னிடம் கேட்டு இருக்கலாம், இல்ல மாமாவிடமாவது கேட்டு இருக்கலாம், இரண்டுமே பண்ணாம நீ மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு, ஏன் இப்படித் தப்பான முடிவை எடுத்தாயடி" என்று கேட்டாள் ரேணுகா.



ரேணுகாவின் கேள்வியில் இருந்து நியாயமும், தன் தவறு எங்கே என்பதும் தெளிவாகப் புரிந்தது மதுமிதாவிற்கு ..‌.



தனக்குத் தவறான எண்ணம் தோன்றி இருக்கிறது, அந்த எண்ணத்தைக் கதிர்வேந்தனிடம் சண்டையிட்டியாவது கேட்டு, சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்யாமல், கதிர்வேந்தனைக் குறித்துத் தவறான எண்ணங்களை மனதில் விதைத்ததின் காரணமாக அவனைத் தவறாகப் பேசி விட்டாள் மதுமிதா.



"இதைத்தான் சொன்னேன், தப்புப் பண்ணிட்டேன்" என்று அழுதாள் மதுமிதா.

"செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்படி அழுதால் எல்லாம் சரி ஆகிவிடுமா? … நீ முதலில் அழுவதை நிறுத்துடி" என்று ஆறுதல் படுத்தியவள் பின் மெதுவாக, "அப்படி என்ன தான் நடந்தது என்று கொஞ்சம் தெளிவாகச் சொல்லு" என்று கேட்டாள் ரேணுகா…



"நான் இங்க இருந்து வேலைக்குக் கிளம்பறதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கதிர்வேந்தன் சொன்னாரு… அப்பவே எனக்குள்ள ஒரு பயம் மற்றும் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் மனசுல இருந்துச்சு… ரொம்ப நாளா அவர் என்னைப் பார்க்கிறது, எனக்குத் தப்பாவே பட்டுச்சு, நான் தான் அவர் உன்னைக் காதலிக்கிறார் என்று தவறாக நினைச்சுட்டு இருந்தேனே, அதனால அவர் என்னை அப்ரோச் பண்றது எல்லாமே தப்பாவே பட்டுச்சு,



அவர் வந்து என்னிடம் ஏதாவது சொல்வதற்கு முன்னாடியே நாம் இங்கிருந்துக் கிளம்பிப் போய்விடும் முடிவில் இருந்தேன். அதனால நான் எல்லாமே பேக் பண்ணிட்டு இருந்தேன், அந்த டைம் தான் எதிர்பாக்காத நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்தாரு, என்கிட்ட ஒன்னுச் சொல்லணும் சொன்னாரு, எனக்கும் உனக்குமான வாழ்க்கைக்குச் சரி வராது என்று புரிஞ்சுது, உன்னுடைய வாழ்க்கையில ஏதாவது என்னால் பிரச்சனை வந்துருமோ என்ற பயம் மட்டும் தான் என் மைண்டுக்குள்ள அப்போது ஓடிக்கிட்டே இருந்தது.



அதனால அவர் சொல்லறது எதுவும் கேட்கும் மனநிலையிலேயே நான் இல்லை. அவர்கிட்ட என்னுடைய எதிர்ப்பைக் கோபமாகப் பதிவு செய்ய ஆரம்பிச்சேன். என் வெறுப்பையும் கோபத்தையும் என்னை மீறி வார்த்தைகளாக அவரிடம் காட்டிட்டேன், ஆனால் அவர் பொறுமையாக, எதையுமே பெருசா நினைக்காம என்னிடம் பேச முற்பட்டார்.



என்னைக் காதலிக்கிறதாவும் கல்யாணம் பண்ணிக்கறதாகவும் சொன்னாரு, அப்போ எனக்கு ரொம்பக் கோவம் வந்துச்சு, ஏன்னா உன்னைக் காதலிக்கும் அதே நேரத்தில் என்னையும் காதலிக்கிறேன் சொல்லறாரு, என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்காரு, என்ற எண்ணம் ரொம்ப வேதனையும் வலியும் தந்தது, அந்தக் கோபத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் வார்த்தைகள் சிதறி விட்டுட்டேன்.



என் வார்த்தைகள் எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல அவரால் பொறுத்துக்கொள்ள முடியாமல், மிகுந்த கோபத்தில் என் கழுத்தில் தாலிக்கட்டிட்டாரு" என்றாள் மதுமிதா.



"கோவம் வந்தா யாராவது தாலிக்கட்டுவாங்களாடி, இல்ல எனக்குப் புரியலை ,வேற ஏதாவது என்கிட்ட இருந்து மறைக்கிறாயா?" என்று கேட்டாள் ரேணுகா…



தங்களுக்கு இடையே நடந்த மிகவும் அந்தரங்கமான விஷயத்தை யாரிடமும் பகிர அவளுக்கு மனம் வரவில்லை... தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மரத்தின் மறைவுக்குப் பின்னே இருந்து தருணும் கதிர்வேந்தனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.



அப்பொழுது மெல்ல, கதிர்வேந்தனைத் திரும்பிப் பார்த்தவன், " உன்னோட பொண்டாட்டி என் தங்கச்சியிடம் எப்படி மறைக்கிறாள் என்று பாரு, ஆமா அப்படி என்னதான்டா நடந்தது" என்று நேரடியாகவே கதிர்வேந்தனிடம் கேட்டான் தருண்.



"அதுதான் எல்லாமே என் பொண்டாட்டி உன் தங்கச்சியிடம் சொல்லிட்டு இருந்ததைக் கேட்டதுக்கப்புறம் என்ன ஒரு கேள்வி" என்று அவனும் தன் நண்பனிடம் பகிர மறுத்தான்.



"ஏதோ நடந்திருக்கு… இரண்டு பேரும் சொல்ல மறுக்கிறீங்க, சரி நீயே சொல்ற வரைக்கும் நானா எதுவுமே கேட்க மாட்டேன், ஆனா ஒன்னு உங்க வாழ்க்கைகுள்ள இருக்கும் சின்னப் பிரச்சனை… இது சரி பண்ணப்பாருங்க" என்று கூறி அங்கிருந்து சென்றான் தருண் ...



மதுமிதா, கூறிய அனைத்தையும் கேட்ட ரேணுகா



"இப்போ நீங்க இரண்டுப் பேரும் தம்பதியர்கள். முறைப்படிக் கோயில்ல வச்சி எல்லாமே நடந்துருச்சு, இனி உங்க வாழ்க்கையே நீங்க சரி பண்ணிருங்க …மாமா மேல எந்தத் தப்பும் இருக்கிற மாதிரித் தெரியவில்லை, நம் சைடில் தான் தப்பு இருக்கு மது… அதனால அவர்கிட்ட ஈகோ பார்க்காமல் கொஞ்சம் இறங்கிப் போய், பேசிப் பாரு… உன் மனசுல என்ன இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லு… அதுக்கப்புறம் எல்லாமே சரியாயிடும் என்று நினைக்கிறேன்.



எதையுமே மனதில் போட்டுக் குழப்பிக்காத, உனக்கு யாருமே இல்லன்னு வருத்தமும் படாதே…

சரியோ தப்போ நான் இருக்கிறேன் உன் கூட… எப்பவுமே என்றைக்குமே என்று தோழியை அணைத்து ஆறுதல் கூறினாள் ரேணுகா…



ரேணுகாவின் இந்த அணைப்புத் தேவையாக இருந்தது மதுமிதாவிற்கு... தோழியின் கரங்களில் அடைக்கலம் ஆனதும் மனதில் இருந்த பயம், வேதனை, வலி எல்லாம் மடைத்திறந்த வெள்ளமாய்ப் பாய, மனமுடைந்து அழுதுத்தீர்த்தாள்… அவள் அழுகையில்... தன் கணவனை எவ்வளவு கீழ் தரமாகப் பேசி இருக்கோம், எந்தத் தவறும் செய்யாமலேயே அவரை அசிங்கப்படுத்தி இருக்கோமே, எப்படி மன்னிப்புக் கேட்க... மன்னிப்புக்கேட்பதற்கு முன், எப்படி அவர் முகம் பார்த்துப்பேச என்று பல எண்ணங்கள் அவளைப் போட்டு வதைத்தது… எல்லாம் கண்களில் நீராக வெளியேறியது.. அவள் துயர், பயம், தயக்கம் எல்லாம் கண்ணீராக வழிய விட்டாள் பெண்ணவள்…



தோழியின் கண்ணீரின் பின் இருக்கும் அவள் வேதனையை உணர்ந்தவள் …எதுவும் பேசாமல் அவளுக்கு ஆறுதல் மட்டுமே தன் அணைப்பில் தந்துக்கொண்டிருந்தாள்….



சிறிது நேரம் அழ விட்டவள் மெதுவாக.. "போதும் மது… இனி நீ அழக்கூடாது… அவர் உன் மேல் உயிரே வச்சு இருக்கார்… நானும் என் முட்டாள் தனத்தினால் அவரைக் காயப்படுத்த இருக்கேன்…அது உங்களோட திருமண வாழ்க்கையைப் பாதிக்குமோ என்ற பயம் இருக்கு எனக்கு" என்றாள் ரேணுகா...



எதுவுமே புரியாததால் கண்களில் நீரோடு குழப்பமான பார்வையைப் பதித்தாள் ரேணுகாவின் மேல்….



"நான் என் திருமணத்திற்கு உன்னை அழைக்க முக்கியக் காரணம்… மாமா வாழ்க்கையில் நல்லது நடக்கனும்… என்னால அவருக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சரி பண்ணணும் என்று தான், உன்னால் மட்டும் தான் முடியும் என்ற அவர் சொல்லாமல் சொல்லி இருக்காரு என்னிடம்" என்றாள் ரேணுகா…



"இப்பொழுது நீ தான் புரியாத புதிர் போலப் பேசிட்டு இருக்க" என்றாள் மதுமிதா…



"உனக்குப் புரியும் படிச்சொல்கிறேன்… வீட்டில் மாமாக்குக் கல்யாணம் பண்ணலாம் என்ற பேச்சு வந்துச்சு… நமக்குப் பிரச்சனைத் தருவதற்கு என்று இருப்பாங்க, சில சொந்தங்கள்… அப்படியான அத்தை, சொந்தத்தில் இருக்காங்க.. அவங்க, சும்மா இருக்காமல், எனக்கும் மாமாக்கும் கல்யாணம் பண்ணற யோசனையைக் குடுத்தாங்க.



நம் பெரியவங்க எள் என்றால் எண்ணையாகச் செயல்படுவாங்களே! அந்த அத்தை, சொன்ன உடனே நேரடியாக என்னிடம் கேட்டுட்டாங்க, எனக்குத் தான் அவர் காதலைப் பற்றித் தெரியுமே… அதனால் பதட்டத்திலே யாரைக் கல்யாணம் பண்ணினாலும், அவரால் சந்தோஷமாக வாழ வைக்க முடியாது சொல்லிட்டேன் … என்னடி, சொல்லற என்ற எங்க அம்மா கத்த… உன்னை மனதில் நினைத்து நான். ‌. எந்தப் பெண்ணோடும் அவரால் சந்தோஷமாக வாழ முடியாது என்பதை மாத்தி அவரால் எந்தப்பெண்ணையும் சந்தோஷமாக வாழவைக்க முடியாது என்று சொல்லிட்டேன், அதை எல்லோரும் தப்பா நினைச்சுட்டாங்கடி…நான் சொல்ல வருவது புரியுதா" என்று கேட்டாள் ரேணுகா…

இல்லை என்று தலையாட்டினாள் மதுமதி…



"புரியவில்லை தானே.. ஆனால் அந்த அத்தைத் தப்பாகப் புரிஞ்சுட்டு … என்ன கதிர்வேந்தனுக்குக் குடும்பம் நடத்த முடியாத … அந்தத் தகுதி அவனுக்கு இல்லையா! என்று சொன்னவங்க, கடைசியாக அவன் ஆம்பளை இல்லையா என்று கேட்டுட்டாங்கடி…. எனக்கு அந்தச் சூழ்நிலை என்ன சொல்ல எனத் தெரியவில்லை… நான் சொல்ல வருவது புரிஞ்சுக்காம அவங்களாக எல்லாம் முடிவுப் பண்ணிப் பேசிட்டாங்க …



அவர் கல்யாணம் வேண்டாம் சொல்லக் காரணம் உங்களுக்கு ஏற்கனவே ரகசியத் திருமணம் ஆனது தான்… அவர் உன்னைக் காதலிப்பது எனக்குத் தெரியும், அது தான் அவரைக் கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னேன். அது மட்டும் இல்லாமல் எனக்குத் தான் கதிர் வேலன் மேல் லவ் ஆச்சே… இந்தக் குளறுபடியால் என் அண்ணன் என் மேல் கோபம் வந்து இப்ப வரைக்கும் என்னிடம் பேசிறதில்லை….



அதற்குப் பின்னர் வீட்டில் பழைய படி எதுவுமே இல்லை மது…..இனி எல்லாம் சரி ஆகிறணும் அது மட்டும் தான் என்னுடைய ஆசை…. இதில் மித்ரா, தன் வாழ்க்கையை இழந்து நிற்கிறாள்…



அவளைப் பார்க்கும் போது வேதனை உயிர் வரை சென்று கொல்கிறது தெரியுமா, எவ்வளவு துடிப்பான பெண் அவள் சிறகினை இந்தக் காதல் வெட்டி விட்டதே" என்று தன் குடும்பத்தில் நடந்தது எல்லாம் சொல்லிப் புலம்பினாள் ரேணுகா…



மதுமிதாவிற்கு இப்பொழுது, புகுந்த வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் தெளிவாகப் புரிந்தது… அவளுக்கு இருக்கும் கடமையும் உணர்ந்துக்கொண்டாள்… இதெல்லாம் சரி செய்ய முதலில் தனக்கும் கணவனுக்கும் இடையே இருக்கும் பிளவினைச் சரி பண்ண வேண்டும் என்பது தான் முதலில் நின்றது அவளுக்கு… எல்லாம் அவளுக்குச் சோர்வைத் தந்தது.



பெரியவர்கள் அனைவரும் ஓய்வாகக் கோயில் திண்ணையில் அமர்ந்து இருந்தனர்… மதுமிதா மரத்தின் அடியில் இருக்கும் பெரிய கல் மீது அமர்ந்தாள்…. அவள் விழிகளை அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்து தன் கணவனைத் தேடியது…



கதிர்வேந்தனோ அங்கே தன் தாயின் அருகில் அமர்ந்து அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இருந்தான்…

தாயிடம் கொஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.. தன்னிடம் பேசும் படி… அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது…. முதல் முறையாகக் கதிர் வேந்தனைக் கணவனாகப் பார்க்கிறாள்…. இத்தனை காலமும் ரேணுகாவின் காதலன் என்ற எண்ணம் மாறி என் கணவன் என்ற உரிமையோடு பார்த்தாள்.



அந்தப் பார்வையில் காதல் மட்டுமே இருந்தது.



எவ்வளவு பெரிய பழிச் சொல்லைச் சுமந்து கொண்டு நடக்கிறான், அதைப்பற்றி எண்ணம் மனதில் தோன்றியதும் மீண்டும் கண் கலங்கியது அவளுக்கு, இதை எப்படிச் சரிசெய்வது என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது மதுமிதாவிற்கு.



திருமணம் நல்லவிதமாக முடிந்ததில் பெரியவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் மட்டுமே இருந்தது.



தன் மனைவியிடம் வந்த பாலமுருகன்,"பானு, நம் பூர்வீக வீட்டிற்குப் போயி இன்னைக்கு அங்க தங்கிவிட்டு நாளைக்குப் போகலாமா?…ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்திருக்கோம், குழந்தைகள் எல்லாம் ஒவ்வொரு மனநிலை இருக்காங்க, அவங்களுக்கும் கொஞ்சம் ரிலக்ஸான மாதிரி இருக்கும் என்ன சொல்லற" என்று தன் எண்ணத்திற்கு அபிப்பிராயம் கேட்டார் மனைவியிடம்.



தன் கணவனின் இந்த யோசனை நன்றாக இருந்ததால் அருகில் இருக்கும் மகனிடம் "ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல யோசனைச் சொல்லி இருக்காரு உன் அப்பா" அவனிடம் தன் சண்டையை மறந்து பேசிவிட்டார், பானுமதி.



கணவன் மேல் இருந்த சினத்தின் நிழல், மகனிடம் இருந்த சண்டையை‌ மறைத்துவிட்டது.

அன்னையின் கோபம் மறந்துத் தன்னிடம் பேசிய சந்தோஷத்தில், அவரை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு மன்னிப்பைக் கேட்டான் கதிர்வேந்தன்.



தன் மகனின் கன்னத்தைப் பற்றிய பானுமதி," இங்கே பாரு வேந்தா, உன்னோட பொண்டாட்டிக்கு அம்மா பாசம் என்ன என்றே தெரியாது, அப்பாவையும் இழந்துத் தனியாக நிற்கிறாள், நீ தான் அவளுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும், நம்ம ரேணுகா போல் தான் அவளும், நீ இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், உங்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கோங்க" என்ற அறிவுரை வழங்கினார் நல்ல தாயாக.

தன் மனைவியின் நிலை நன்றாகப் புரிந்தப் போதும், தன் காதலின் வலி அவனை வாட்டியது, அதில் அவள் மருந்தாக இருப்பாளா இல்லை, அவளைத் தன் வலிக்குப் பலியாக்கி விடுவானா என்று காலம் சொல்லும்.



மூன்று முட்டியிட்டு

பிணைக்கும் உறவில்

இதயங்கள் ஒன்றாகி

மெய்யிணைந்து

அன்பு மட்டுமே உறவாட

சிறு ஊடலும் கூடலின்

ஆரம்பமாக இருவரும்

சேர்ந்திருப்பது தாம்பத்தியமானால்

சந்தோஷம் இழையோடுவது

குடும்பத்தில் உள்ளவர்களின் மனதில்…

தொடரும்…
 
Top