காலங்கள் இப்படியே சென்று கொண்டிருக்க அன்றொருநாள் கனத்த மழை. நீலன் நெடுநாள் கழித்து அவனது மோட்டார் வண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு மகிழுந்து அவனை இடிக்க வந்தது. தன்னை தற்காத்துக்கொள்ள நீலன் அந்த மகிழுந்தை வெட்டி வேறுபக்கம் தன் வண்டியை செலுத்தினான்.
பின் தன்னை சமாளித்து தன்னை மோத வந்த வண்டியை பார்க்க திரும்பிய பொழுது தான் அவன் அந்த கோரக்காட்சியினை கண்டான். அவனை இடிக்க வந்த வண்டியோ வேறு ஒரு வண்டியை இடித்து மூன்று முறை பிரண்டு பின் தலை கீழேயாக நின்றது.
நீலன் அவன் வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு அந்த மகிழுந்து இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான். அவன் மருத்துவன் அல்லவே! இயல்பிலே உதவும் குணம் உள்ளவன் வேறு. முதலுதவி செய்யவே விரைந்து அங்கு சென்றான்.
ஓட்டுநர் இடத்தில உள்ளவன் முகமெல்லாம் ரத்தமாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக அவனை வாகனத்திலிருந்து வெளியே எடுத்து விட்டார்கள். உயிர் இருந்தது, வேகமாக நீலன் அவனுக்கு முதலுதவி வழங்கி கொண்டு இருந்தான்.
சரியாக அந்நேரம் மருத்துவ வண்டியும் வந்து விட்டது. உடனே அதில் அவனை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அவர்களுடன் நீலனும் சென்றான். ஏனோ தெரியவில்லை அவனுக்கு அந்த விபத்துக்குளானவரை தனியே விட்டு செல்ல மனம் இல்லை.
விரைந்து மருத்துவமனைக்கு சென்று விட்டனர். அவசர சிகிச்சை பிரிவுக்கும் அழைத்து சென்றாயிற்று. நோயாளிகளை பதிவு செய்ய வேண்டி தாதி வந்து அவரின் விபரங்களை விசாரித்தார். ஆனால் நீலனுக்கு அவர் குறித்து ஒன்றுமே தெரியவில்லை.
"சாலை விபத்து, நான் துணைக்கு மட்டுமே வந்தேன்" என தாதியிடம் கூறி கொண்டிருந்தான் நீலன்.
அப்போது சரியாக இன்னொரு தாதியர் வந்து அவனது கால்ச்சட்டை பையினுள் ஒரு அலைபேசி இருந்ததாக கூறி அவனிடம் கொடுத்து சென்றாள்.
'சரி இதனை பற்றி அவன் சொந்த பந்தம் யாருகிட்டயாவது கூறுவோம்' என அலைபேசியை உயிர்பித்தான்.
அதை ஆன் செய்தவுடன் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் திறன்பேசி திரையில் அம்மா என பெயர் வந்தது. உடனே அழைப்பை ஏற்று பேச தொடங்கினான் ஆனால் அவனை பேசவிடாமல் மறு முனையில் உள்ளவரோ பேசிக்கொண்டே சென்றார்.
"ஐயா, அம்மாவை மன்னிச்சிருப்பா. எவ்ளோ நாள்டா வீட்டுக்கு வராம இருப்ப, அம்மாக்கு உன்ன பாக்கணும் போல இருக்குப்பா. மனசு காலையில் இருந்தே சரி இல்ல, வீட்டுக்கு வாயா" என கெஞ்சி கொண்டிருந்தது எதிர் முனையிலிருந்து வந்த அந்த பெண்மணியின் குரல்.
"அம்மா! என் பெயர் நீலன், நான் மருத்துவமனையிலிருந்து பேசுறேன்”
"என்னப்பா சொல்ற, என் பையன் எங்க? நீ யாரு? என பதட்டமாக வந்தது அப்பெண்மணியின் வார்த்தைகள்.
அதற்க்கு நீலனோ "அம்மா பதட்டப்படாதிங்க. உங்க மகனுக்கு ஒரு சின்ன விபத்து நேர்ந்து விட்டது" என அவன் கூறியதுதான் தாமதம் "ருத்ரா!" என கத்தியிருந்தார் பார்வதி.
ஆம் விபத்து நேர்ந்தது ருத்ரனுக்குத்தான்.
பார்வதிக்கு முழு விவரத்தையும் கூற அவர் விரைந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டார்.
ட்ரிங்.... ட்ரிங்.... ட்ரிங்…
என உமையாளின் திறன்பேசி அவளை அழைத்து கொண்டு இருந்தது. அவளும் வந்து அதனை ஏற்று பேசினாள். எதிர்முனையில் நீலன் தான்.
"அக்கா சீக்கிரமா நம்ம வீட்டு பக்கத்துல உள்ள மருத்துவமனைக்கு வாங்க" என அவன் கூற
"என்னடா ஆச்சி?" இவளும் பதற்றமடைந்து கேள்வி கேக்க,
அதற்க்கு அவனோ "அக்கா சீக்கிரம் வாங்க ஒரு சின்ன விபத்து" என கூறியவனின் அலைபேசி அதற்குமேல் அவனை பேச விடாமல் பாட்டரி இல்லாமல் அணைந்து விட்டது.
இங்கு உமையாளுக்கோ நிலைகொள்ள முடியவில்லை. சரியாக அந்த சமயம் வீட்டிற்கு செல்ல வந்த கயல் உமையாள் கண்கள் கலங்கி இருப்பதாய் பார்த்து "ஏதும் பிரச்சனையா அக்கா?" என வினவினாள்.
கயலிடம் நீலன் அழைத்தது முதல் அவன் கூறியது வரை சொன்னவள் அவளிடம் ஒரு உதவி கேட்டாள்.
"கயல் நான் இப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். எனக்கு ஒரு சின்ன உதவி, வீட்டில் இருந்து மகிழினியை பார்த்துக்கோ. நான் சென்று அவனுக்கு என்னவாயிற்று என பார்த்துட்டு வந்திடுறேன்" என கூறினாள்.
கயலும் சரி என கூறி திறன்பேசி மூலம் தன் குடும்பத்திற்கு தகவலை தெரிவித்தாள். கயலுக்குமே நீலனுக்கு என்ன ஆனது என தெரிந்தாக வேண்டுமே. அவள் முகத்திலும் பதட்டம் தெரிந்தது.
மனதில் வந்த அனைத்து கடவுளிடம் வேண்டிக் கொண்டாள், அவனுக்கு ஒன்றும் ஆகிவிட கூடாது என்று. இத்தனை தூரம் அவள் மனம் பதறுவது அவளுக்கே ஆச்சரியம் தான். பின்னே இருக்காதா அவள் அறியாமல் அவள் மனதிற்குள் வந்தவன் தானே அவள் கள்வன். இதனை அவள் அறியும் போது என்னவாகுமோ அவள் நிலைமை.
மருத்துவமனைக்கு பதறியடித்துக்கொண்டு வந்து சேர்த்தார் பார்வதி. அவசர சிகிச்சை பிரிவுக்கு முன் வந்தவர் ருத்ரனை கண்டே ஆகவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கி விட்டார்.
அவரை நீலன்தான் எதிர்கொண்டு நடந்த விபத்தினை பற்றி விவரித்து பின் தற்போதைய ருத்ரனின் நிலையையும் கூறினான். பல வருடத்திற்கு முன் கணவனையும் மகளையும் ஒருசேர பறிகொடுத்த அந்த பெண்மணிக்கு இப்போது மகனும் இந்த நிலையில் இருப்பது மீள துயரத்தை ஏற்படுத்தியது.
கண்களில் கண்ணீர் வழிந்தோட அடுத்து என்ன என்பது கூட தெரியாது இடிந்து போய் நாற்காலியில் அமர்ந்தார் பார்வதி. அந்த சமயம் தான் அங்கு வந்து சேர்ந்தாள் உமையாள். தனது சகோதரனுக்குத்தான் விபத்தாகிவிட்டது என பதறி வந்த உமையாளோ அவன் அங்கு நன்றாக நின்றிருப்பதை கண்டவுடன் தான் நிம்மதி அடைந்தாள்.
இருப்பினும் தம்பியின் ஆடையில் ரத்த கரையை பார்த்ததும் என்ன நடந்தது என தெரியாமல் அவன் அருகே சென்றாள்.
" அக்கா!"
"என்னடா ஆனது? நீ எந்த தகவலையும் முழுதா சொல்லாமலே போனை கட் செய்துட்ட" என கேட்டாள்.
அதற்கு நீலனோ 'நான் வீட்டுக்குத்தான் அக்கா வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு விபத்து. விபத்தானவரை அப்படியே விட மனம் வரவில்லை. அதான் அக்கா அவருக்கு உதவி செய்ய அவர்கூடவே மருத்துவமனைக்கு வந்து விட்டேன்" என கூறினான் .
"அவர் குடும்பத்திடம் விஷயத்தை சொன்னாயா?" என அவள் கேக்க,
அதற்கு அவனோ "அவுங்கதான் அவரோட அம்மா" என நாற்காலியில் அமர்த்திருந்தவரை பார்த்து கை காண்பித்தான்.
உமையாளும் அவருக்கு ஆறுதல் அளிக்க பார்வதியின் பக்கத்தில் அமர்ந்தாள். பார்வதியின் கையை அழுத்தமாக பற்றினாள் உமையாள். அவரும் உமையாளை திரும்பி பார்த்தார் "ஒன்னும் ஆகாது அம்மா கவலை படாமல் இருங்க" என ஆறுதல் கூறினாள்.
ஏனோ தெரியவில்லை அவளின் வார்த்தைகள் பார்வதிக்கு பெரும் நிம்மதியை அளித்தது.
அப்போது அங்கு வந்த நீலனோ "அக்கா ஒரு உதவி, மிஸ்டர் ருத்ரனுக்கு ரத்தம் தேவை படுது. அவருக்கும் ஓ- ப்ளூட் குரூப் தான். நீ ரத்தம் தானம் செய் அக்கா" என கேட்டான்.
அப்போது பார்வதியும் உமையாளை ஒரு சின்ன எதிர்பார்ப்புடன் பார்த்தார். அதற்கு அவளும் அவரை கண்டு கண்களை மூடி திறந்து சரி என சம்மதம் தந்தாள். பின் அவள் ரத்த தானம் கொடுக்க சென்று விட்டாள்.
ரத்ததானம் செய்து விட்டு உமையாள் நீலன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். பின் நீலனிடம் "நீலா வீட்ல கயலை விட்டுட்டு வந்தேன். ஆனாலும் ரொம்ப தாமதம் ஆகிவிட்டது. நான் முதலில் வீட்டுக்கு போகிறேன் நீ அவங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்தபின் வீட்டுக்கு வா" என கூறி விட்டு வீட்டிற்கு சென்றாள்.
செல்லும் முன் பார்வதியிடம் வந்து "அம்மா கவலை படாதீங்க, உங்க மகனுக்கு ஒன்னும் ஆகாது. அந்த முருகன் நம்ம கை விட மாட்டார்" என கூறினாள்.
பார்வதியோ அதற்கு கலங்கிய கண்களுடன் "நீங்க ரெண்டுபேரும் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவ்வளவு உதவி செய்திருக்கீங்க, ரொம்ப நன்றிம்மா" என கரகரப்பான குரலில் கூறினார். .
.
"ஐயோ அம்மா, சக மனிதனுக்கு செய்யும் உதவிதான்மா. இதுல ஒண்ணுமே இல்ல. தம்பி உங்க கூடவே இருப்பான். வீட்ல என் குழந்தை இருக்கா. அதனால என்னால ரொம்ப நேரம் இங்க இருக்க முடியல" என கூறி அவரிடம் தலை அசைத்து விடை பெற்றாள்.
போகிறவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி. பின் திரும்பி நீலனை பார்த்து " தம்பி உன் அக்கா இத்தனை மணிக்கு தனியாகவா போகிறாள்? உன் மாமாவை துணைக்கு வர சொல்லலாமே" என வினாவினார்.
குழந்தை இருக்கு என்று கூறியவள் கழுத்தில் தாலி இல்லை, நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லை, ஏனோ அவளை பற்றி தெரிந்துகொள்ள மனம் அரித்தது. அதான் இவ்வாறு நீலனிடம் கேட்டார்.
ஒரு சிறு அமைதியின் பின் நீலனோ " மாமா இல்லை அம்மா, அக்கா ஒற்றையாகத்தான் மகளை பார்த்து கொண்டிருக்கிறாள்” என கூறினான். பார்வதிக்கு மேலும் விவரம் அறிய வேண்டும். ஆனால் இதற்கு மேல் கேட்டால் அது நன்றாக இருக்காது என்று எண்ணி அமைதியாகினார்.
ஏனோ அவருக்கு உமையாளை பிடித்திருந்தது. அவள் கூட இருக்கும் போது மனம் சற்று நிம்மதியாய் இருந்த உணர்வு.
தென்றல் தன் ரத்தத்தின் மூலம் நெருப்பை தீண்டிவிட்டது. ஆனால் அதுவே நெருப்பு தீண்டும் போது தென்றல் தாங்குமோ? இல்லை நெருப்பை அணைத்து தென்றல் வெல்லுமோ! பொறுத்திருந்து பார்ப்போம்.