எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 8

Privi

Moderator

மகிழினி அருகில் கயல் படுத்திருந்தாள். அவளுக்கு தூக்கம் தான் வரவில்லை. நீலன் நலமாக உள்ளான் என்று தெரிந்தால் கூட போதுமே எனும் நிலைதான் அவளுக்கு.​

வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டது எழுந்து சென்று அவளே கதவினை திறந்து விட்டாள். உமையாள் தான் நின்று கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் எந்த வித பதட்டமும், வருத்தமும் இல்லை.​

அப்போதே அனுமானித்துவிட்டாள் நீலன் நலமாக உள்ளான் என. இருப்பினும் அவள் வாய்மொழியாய் அறிந்தால் இன்னும் நல்ல இருக்குமே என எண்ணி உமையாளிடம் அவனை பற்றி விசாரித்தாள்.​

" அக்கா.. அவரு.. நீலன் எப்படி இருக்காரு? ஒன்னும் ஆபத்து இல்லையே?"​

உமையாள் "அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகவே இல்ல. வேற ஒருத்தருக்கு தான் விபத்து ஏற்பட்டிருக்கு, இவன் முதல் உதவி செய்து அவரை மருத்துவமனை அழைத்துச்சென்று அட்மிட் செய்துருக்கான். நாம்தான் தேவை இல்லாம பயந்துட்டோம்” என கூறினாள்.​

அப்போதுதான் கயலுக்கு முழு நிம்மதி வந்தது. “அப்போ இன்னும் ஏன் அக்கா வீட்டுக்கு வரல?" என கேட்டாள்.​

அதற்கு உமையாள் “நான் தான் அவனை மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய சொன்னேன். வயதான அம்மா மட்டும் தான், பார்க்கவே பாவமா இருந்தது” என கூறினாள்.​

பின் "மகிழ் தூங்கிட்டாளா?” என கேட்டாள்.​

அதற்கு கயல் “தூங்கிட்டாக்கா" என்றாள்.​

“சரி ரொம்ப தாமதமாகி விட்டது. நாளைக்கு வேலை அதிகமாகவும் இருக்கும், போ போய் தூங்கு" என கூறி அவளை உறங்க செல்ல சொன்னாள்.​

பார்வதி காலையிலே கோவிலுக்கு சென்று ருத்ரன் பெயரில் அர்ச்சனை ஒன்றை செய்து விட்டு முருகனிடம் தன் மகன் நலமாக இருக்க வேண்டும் என மனம் உருகி வேண்டிகொண்டார்.​

பின் ருத்ரனை காண மருத்துவமனைக்கு சென்றார். நீலன் மருத்துவமனை நாற்காலியில் அமர்ந்த வாக்கிலேயே தூங்கி கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் பார்வதியின் முகம் கனிந்தது.​

"யார் பெற்ற மகனோ நமக்காகவும் நம் மகனுக்காகவும் இவ்வளவு செய்றான். அவன் மட்டுமா? அவன் அக்காவும் தான் நம் மகனுக்காக ரத்ததானம் எல்லாம் செய்துள்ளாள். இவர்கள் நன்றாக இருக்க வேண்டும்" என கடவுளிடம் திரும்பவும் ஒரு வேண்டுதலை போட்டு விட்டு நீலன் அருகில் சென்றார்.​

"தம்பி.. தம்பி" என அவனை எழுப்பினாள்.​

"அம்மா! சாரி மா கொஞ்சம் அசந்தாப்புல தூங்கிட்டேன்"​

“அதற்கென்னபா பரவாயில்ல. இரவிலிருந்து இங்கேயே இருக்கியே பா. வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்துட்டு வாப்பா" என கூறினார் பார்வதி.​

" சரிமா, இதுல என் திறன்பேசி எண் உள்ளது. எதாவது தேவை என்றால் தயங்காமல் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள்" என கூறி பார்வதியிடம் இருந்து விடைபெற்று சென்றான்.​

செல்லும் முன் மருத்துவரை சென்று பார்த்து ருத்ரனின் நலனை பற்றி விசாரித்தான். மருத்துவரும் ருத்ரனின் நிலையை அவனுக்கு விளக்கி சொன்னார்.​

ருத்ரன் ஆபத்தான நிலையை கடந்து விட்டான். மயக்க நிலையில் தான் இருக்கிறான். அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் மயக்கம் தெளியலாம். இதனை கேட்ட பிறகுதான் நீலனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.​

பார்வதிக்கும் அவன் மருத்துவர் என்ன சொன்னார் என்று சொன்ன பிறகுதான் மனசு கொஞ்சம் நிம்மதி அடைத்தது. இவை அனைத்தையும் பார்வதியிடம் கூறிவிட்டே வீட்டிற்கு சென்றிருந்தான்.​

கயல் உமையாளின் வீட்டிலே இருந்ததால் காலையில் எழுந்து அவளது தினசரி வேலைகளை செய்து விட்டு அரக்க பறக்க வேலைக்கு செல்லும் அவளது தினசரி வாடிக்கை இல்லாமல், பொறுமையாக எழுந்து காலை கடன்களை முடித்து உமையாள் குடுத்த உடையை அணிந்து, காலை சிற்றுண்டியையும் முடித்து விட்டாள்.​

அப்பொழுது சரியாக வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது. உமையாள் மகிழினிக்கு உணவளித்து கொண்டு இருந்தாள்.​

"இருங்க அக்கா நான் யாரென்று பார்க்கிறேன்" என கூறி வாசல் கதவை திறக்க சென்றாள். வாசலில் நின்றது என்னவோ நீலன் தான்.​

நீலனை ஒருகணம் நுணுக்கமாக மேலிருந்து கீழ் பார்வையாலேயே அளவெடுத்து கொண்டு இருந்தாள். அவனும் அவளின் பார்வையை பார்த்துவிட்டு, "அளவு எடுத்தாச்சா?" என்றான்.​

அதற்கு கயலோ அவன் என்ன பேசுகிறான் என்று புரியாமல் முழித்து கொண்டு நின்றிருந்தாள். அதற்கு அவன்,​

"இல்லை பார்வையாலேயே அளவெடுத்துட்டு இருந்தியே. அதான் கேட்டேன் அளவெடுத்தாச்சான்னு. எடுத்துட்டா கொஞ்சம் சொல்றியா?” என்று கூறினான்.​

அதற்கு அவள் "ஏன்"? என்று கேட்டிருந்தாள்.​

அதற்கு அவனோ “அளவெடுத்து முடிஞ்சதுனா நான் வீட்டுக்குள் போகலாம்ல. அதான் சொல்ல சொன்னேன்” என்றானே பார்க்கலாம்.​

கயல் முகத்தில் அசடு வழிந்தது. சட்டென்று வாசலை விட்டு நகர்ந்து அவனுக்கு வழி விட்டு நின்றாள். அவனும் உள்ளே சென்றான். சென்றவன் ஒருகணம் நின்று அவளை திரும்பி பார்த்து,​

"எனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாக உள்ளேன்" என கூறி சென்று விட்டான்.​

அவளுக்கோ இது ஆச்சரியமாக இருந்தது. அவள் நினைத்ததை அவன் கூறி விட்டானே. அவனுக்கு அவள் கண் ஒன்று போதுமே அவள் மனதை திரை போட்டு காட்ட.​

"ஹே மாமா! மாமா வந்துட்டாரு. அம்மா சி மாமா இஸ் ஹியர். யாஹூ!" என மாமனை பார்த்த மகிழ்ச்சியில் மகிழினி உற்சாகமாக கத்திக்கொண்டு இருந்தாள்.​

உமையாளும் நீலனும் அவளின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து புன்னகைத்து கொண்டனர்.​

நீலன் "இரு அக்கா குளிச்சிட்டு வரேன்" என கூறி குளிக்க சென்றான்.​

குளித்து முடித்து முன் அறைக்கு வந்தவன் மகிழினியை தூக்கி செல்லம் கொஞ்சினான். பின் உமையாளை பார்த்து " அக்கா மிஸ்டர் ருத்ரன் இப்போ நல்ல இருக்கிறார். நான் அங்கிருக்கும் வரை மயக்கத்தில்தான் இருந்தாரு. எப்போ வேண்டும் என்றாலும் அவருக்கு நினைவு திரும்பலாம் என்றார் மருத்துவர்" என மருத்துவர் கூறியதை உமையாளிடம் கூறினார்.​

அதற்கு உமையாளும் "எப்படியோ அவரு நல்லபடியான சரி. பாவம் அந்த அம்மா! முகத்தை பார்க்கவே தெரிந்தது அவர்களின் பையனை நினைத்து எத்தனை தூரம் வருந்துறாங்கனு" என்றாள்.​

"அக்கா இன்று என்ன சமையல்"? என கேட்டான் நீலன்.​

"ரசம் செய்து, கிழங்கு வறுவல் செய்து புடலங்காய் கூட்டு செய்ய போறேன்" என்றாள் உமையாள்.​

"சரி அக்கா இவை அனைத்தையும் எனக்கு கட்டி கொடு. நான் அந்த அம்மாவுக்கு குடுத்துட்டு வரேன்" என கூறினான் நீலன்.​

அவளும் ஆமோதிப்பதாக தலை அசைத்து உணவுகளை தயார் செய்ய சென்றாள். நீலன் மகிழினியுடன் விளையாட தொடங்கி விட்டான். கயலோ அவர்கள் வேலை நடக்கும் இடத்திற்கு சென்றிருந்தாள்.​

*****************​

மூடியபடியே கண் விழிகளை அங்கும் இங்கும் அசைத்து, கண்களை திறப்பதற்கு ஆயுதமானான் ருத்ரன். அவன் கண்களை திறக்க போகிறான் என உணர்ந்து பார்வதி அவன் பக்கத்தில் கண்ணீருடன் வந்து நின்றார். அவரால் அவனை இப்படி கட்டுகளுடன் பார்க்க முடியவில்லை.​

அவனும் மெல்ல கண்களை திறந்து பார்த்தான். அவன் தாய் கண்ணீர் விழிகளுடன் இருப்பதை பார்த்தவனுக்கு மனதில் பாரம் ஏறி போனது. என்னதான் தாயின் மீது கோவம் இருந்தாலும் அவர் மீது அலாதி அன்பு வைத்திருப்பவன் அல்லவா!​

" நான் நல்லாத்தான் இருக்கேன். இப்போ ஏன் அழுது கொண்டு இருக்குறீங்க? எனக்குதான் ஒன்றும் ஆகலையே" என்றான்.​

அதற்கு பார்வதியோ "உன்னை இப்படி அம்மானால பார்க்க முடியல ஐயா. எப்படி இருக்குற ஆள் நீ. மனசு கஷ்டமா இருக்குப்பா. நீலன் தம்பி வந்து நீ நல்ல இருக்கனு சொல்ற வரைக்கும் என் உயிர் என் கிட்டயே இல்ல" என கைக்குட்டையில் அவரது கண்களை துடைத்து கொண்டே கூறினார்.​

"நீலன்?" என்று அவனும் வினா எழுப்புவது போல் கேட்க,​

"அது.. டாக்டர் தம்பி ஐயா" என பதில் குடுத்தார் பார்வதி.​

அவனும் அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் என்றே நினைத்தான். அவனுக்கு மிகவும் அசதியாக இருந்தது. அதனால் கண்களை மூடி ஓய்வெடுக்க முடிவு செய்தான். அவன் விழித்திருந்தால் அவன் தாய் அழுதுகொண்டே இருப்பார் என்று அவனுக்கும் தெரியும். அதனால்தான் கண்களை கொஞ்ச நேரம் மூட நினைத்தான்.​

மருத்துவர் சற்று நேரத்தில் வந்து அவனை பரிசோதித்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றலாம் என சொன்னார்.​

"நீலன் சாப்பாடு எல்லாத்தையும் கட்டி வைத்து விட்டேன், நீ எடுத்துட்டு போ. ஆஹ் அப்பறம் சொல்ல மறந்துட்டேன். சிக்கன் சூப் செய்து வைத்துருக்கேன் மிஸ்டர் ருத்ரனுக்கு குடுக்க சொல்லு" என கூறினாள் உமையாள்.​

நீலனோ "நீயும் வாயேன் அக்கா கூட" என சொன்னதுக்கு "வேலை நிறைய இருக்குடா. நானும் சென்று உதவி செய்தால் தான் சீக்கிரம் முடிக்க முடியும். இன்று கயலை கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு விடலாம் என நினைத்தேன்" என கூறினாள்.​

அவனும் சரி என தலை அசைத்து மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டான். அவன் சென்ற நேரத்திற்கும் ருத்ரனை வேறு வார்டுக்கு மாற்றல் செய்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.​

பார்வதி அருகில் சென்றவன் அவருக்காக அவன் கொண்டுவந்த உணவுகளை கொடுத்து விட்டு அதில் இருக்கும் சிக்கன் சூப் பற்றியும் சொன்னான். “மிஸ்டர் ருத்ரன் கண் விழித்து விட்டாராமா? இப்பொழுது அவர் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவர்கள் வந்து பரிசோதித்தார்களா? ஐசியுவிலிருந்து நோர்மல் வார்டுக்கு மாற்றம் செய்றங்களா?" என கேள்விகளை அடுக்கினான்.​

அவரும் அவனிடம் சிறு புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அவன் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்தார். "உனக்கும் உங்க அக்காவுக்கும் ரொம்ப நன்றி பா" என மனதார நன்றி உரைத்தார் பார்வதி.​

"நன்றி எல்லாம் எதற்குமா? சக மனிதனுக்கு செய்யும் உதவிதானே" என கூறினான் நீலன்.​

"சரி மா கொஞ்சம் வேலை இருக்கு. நான் முதலில் புறப்படுறேன், மிஸ்டர் ருத்ரனுக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை" என பார்வதியிடம் கூறினான்.​

அவன் சென்ற பின் ருத்ரனின் அறைக்கு சென்ற பார்வதி அவனுக்கு உணவளிக்க தொடங்கினார். உமையாள் செய்த சிக்கன் சூப்பைத்தான் அவனுக்கு ஊட்டிவிட்டார் பார்வதி. அவனுக்கு அந்த உணவின் சுவை மிகவும் பிடித்திருந்தது.​

" நீங்க சமைத்ததா?" என வினவினான்.​

" இல்லை ஐயா, நீலனுடைய அக்கா செய்தது" என கூறினார்.​

'ஒரு மருத்துவர், அவருடைய அக்கா நமக்கு சமைத்து குடுக்கிறாரா' என யோசித்து குழம்பினான். பின் பார்வதியிடமே இதனை பற்றி விசாரித்தான். அதற்கு அவரோ​

“அப்படி இல்லை ஐயா” என ஆரம்பித்து நீலன் மற்றும் உமையாள் அவர்களுக்கு செய்த உதவிகள் அனைத்தையும் பற்றி விவரித்தாள். இவை அனைத்தையும் கேட்ட ருத்ரனுக்கு இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா என்றே யோசித்தான். அதன்பின் அமைதியாக உணவு உண்டு முடித்து ஓய்வெடுக்க தொடங்கினான்.​

 
Top