எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 01

Status
Not open for further replies.
❤️தீராத டி நான்
கொண்ட
ஏக்கம்❤️

மழைக்கால இரவு, இரயிலின் ஜன்னல் ஓர பயணம். தனிமையை மட்டும் துணையாக பற்றியவள் இவள். மெளனமான ஏகாந்தம் இயற்கையின் இதமான வருடல், அவளுடைய இதயத்தின் பக்கங்களை நினைவுகளால் திறக்க,

மழலை பருவத்தில் அவளுடைய பெற்றோர்கள் விபத்தில் இறந்த பிறகு, காப்பாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு உறவில்லாத வாழ்க்கை தான் இதுவரை,

தங்கும் மகளிர் விடுதியில் ஏசி அறை தான் அவளுக்கு, ஆனால் தீராத ஏக்கங்கள் ஏராளம்.

இறைவன் உலகை ஆட்டி வைக்கும் செல்வத்தை வாரி வழங்கிவிட்டு. அன்பை அடியோடு துடைத்து எடுத்து விட்டார் இந்த அபலையின் வாழ்வில். அவளின் பணம், அழகு வாழ்க்கையில் நிறைய நண்பர்களை உருவாக்கி தந்தது.ஆனால் உண்மையான உறவு கிடைக்கவே இல்லை.


பணத்திற்காக வரும் உறவு லாபத்தை தானே எதிர் பார்க்கும். அவளின் இதயத்தையா..அன்பால் நிறைக்கும்.எப்போதும் ஏமாற்றம் தான்.

தெரிந்தே சில நேரம் ஏமாறுவாள். "ஃபீஸ் கட்ட முடியல டி ஹெல்ப் பண்ணு"

" நாளைக்கு உன் டிரீட் தான் பிரதி "

"உன் டிரஸ் நல்லா இருக்கு. நான் யூஸ் பண்ணிக்க வா.?"


இதே போல் அவளிடம் அன்பாக உருகி வாங்கிய தோடு சரி, திருப்பி தர யாருமே முனைந்தது இல்லை.

பல சூழ்நிலைகளில் அந்த போலியான முகங்களை அடையாளம் கண்டு உள்ளம் உடைந்து நொருங்கும்.


புண் பட்ட மனதை புத்தகம் படித்து ஆற்றுவாள்.
சில நேரம் கண்ணதாசன் தத்துவ பாடல்களில் மூழ்கி தன்னையே தேற்றி கொள்வாள்.

எனக்காக என் மனதை புரிந்து கொஞ்சமே கொஞ்சம் அன்பு காட்ட ஆள் இல்லாத அனாதை நான்.

(பிரதிக்ஷா ஆதி கேசவன்.) எனக்கோ அன்பின் பற்றாக்குறை தான்.!

"துளி நேசம் வேண்டும் தினமும் என்னை நேசிக்க துணையாக நீ வேண்டும்."

அவளின் ஒரே ஒரு நம்பிக்கை.

" அவளுக்காகவே..

அவன் வருவான். அன்போடு அவளை தாங்குவான். அன்னையாக அன்பிலும் தந்தையாக அரவணைப்பிலும்,
நட்பாக கதை பேசி, புரிதலோடு வழிநடத்தி, அளவில்லாத அன்பை வழங்கி, உரிமையோடு உறவை நிலைநாட்டி, மங்கள நாண் கொண்டு மனதையும் கட்டியாள வருவான். என் காதல் கணவன். "

என்ற ஆசையோடு இல்லை இல்லை பேராசையோடு உறவை சுமக்க காத்திருக்கிறாள்.!

இது நாள் வரை வந்த உறவு எல்லாம் ஆரம்பத்திலேயே அளவில்லா அன்பை பொழிந்து, சில மாதங்களிலேயே கவரிங் நகை போல அவளை பார்த்து பல்லை இளிக்கும்.



இப்படியான உறவுகளை திரும்ப.. திரும்ப பார்த்து உண்மையான உறவும் அன்பும் அவளுக்கு எட்டாக் கனியாகி போனது. அதற்காக ஏங்கி..ஏங்கி கடைசியாக எந்த உறவும் வேண்டாம் என்ற விரக்தியில் தனிமையின் துணையை மட்டுமே நாடினாள்.

என் காதல் கணவன் மட்டும் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். என்று எண்ணிய அவளின் காதல் உறவுக்கான தேடல் தான் இந்த பயணம்.

ஜன்னல் கம்பி வழியே வழிந்தன, அவள் கண்களின் வலியால் சிதறிய இருத்துளி.!

சிறைப்பறவை போல் வாழ்ந்தவள்.சிறகை இன்று தான் விரிக்கிறாள்.!


வாழ்வின் முதல் பயணம். விடுமுறை நாட்கள் கூட வீட்டில் விஜயம் செய்தது கிடையாது. உறவுகள் யாரும் இல்லாத சிமெண்ட் மாளிகை அல்லவா அது. அங்கு சென்று தனியாக விட்டத்தை வெறிப்பதற்கு ஹாஸ்டல் வார்டன் உடனே தங்கி விடுவாள்.

இளநிலை படிப்பை முடித்த பிறகு, ஹாஸ்டலில் தங்க அனுமதி இல்லை. வீட்டில் தனிமையின் தாக்கமும் அதிகரிக்க, சுற்றுலா செல்ல எண்ணி சென்னை எழும்பூர் இரயில் நிலையம் வந்து இறங்கியதும்,

போகுமிடம் தெரியாமல்.. வேகமாக தனது டிராலியை பிரதிக்ஷா தள்ளிக் கொண்டே செல்ல,

சின்ன குழந்தை ஒன்று நடைமேடையில் இருந்து தண்டவாளம் நோக்கி செல்வதை கண்டு, அதிர்ச்சியில் தன் உடமைகளை அப்படியே போட்டு விட்டு வேகமாக அந்த குழந்தையை நோக்கி ஓடினாள்.. நொடி கூட தாமதிக்காமல் குழந்தையை தூக்கியவள், அதன் தாயை தேடி , சில அறிவுரைகள் சொல்லி ஒப்படைத்துவிட்டு கெத்தாக திரும்ப.


'வச்சான் பாரு எனக்கு ஆப்பு' என்பதைப் போல, அவளது ட்ராலி மற்றும் ஹேண்ட் பேக்கும், அதனோடு சேர்ந்து, புது ஐபோனும் வைத்த தடம் கூட இல்லாமல் காணாமல் போயிருந்தது.

போனில் உள்ள ஜிபே ஐ நம்பி கையில் பத்து ரூபாய் கூட இல்லாமல்
நவநாகரிக உடையணிந்து பிச்சைக்காரி போல நின்றாள். கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரி.!

"நல்லது பண்றது தப்பாங்க." என்று தனக்குத்தானே புலம்பியவள் பணம் என்னும் திறவுகோல் இல்லாததால்,எந்த பாதையில் செல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றாள்.

பசி வேறு வயிற்றை இறுக்கிப் பிடிக்க. அங்கு உணவுப் பதார்த்தங்களை உண்பவரை ஏக்கமாக பார்த்து வைத்தாள் இல்லை கண்ணே வைத்தாள். " எச்சில் ஊர ஏக்கமாக எல்லாரும் உண்பதை பார்த்துக் கொண்டு நடைமேடையில் நடந்தாள்.


நம்பர் தெரிந்தாலாவது யாருக்காவது போன் செய்து உதவி கேட்கலாம். நம்பரை மனனம் செய்யும் அளவு உதவிக்கு யாருமற்ற இவளோ..யாரை அழைப்பாள்?

இறைவனை மட்டும் உரிமையோடு அழைத்தால். எப்படியாவது என்னை காப்பாற்ற வேண்டும் என்று அவரோ செவி சாய்த்தாறா பார்ப்போம்.

" ஒவ்வொரு நடை மேடையும் குடமுழுக்கு காண வந்து தொலைந்து போன குழந்தை போல, பேந்த பேந்த விழித்து கடந்தாள் பிரதி. பதட்டத்தில் அவள் ஷாலின் நுனியை திருகி கொண்டே நடந்தாள்.


" ஒரு வயோதிகாரிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறி உதவி கேட்க .
" ச்சே.. ஏமாத்த நான் தான் கிடைச்சனா போறியா போலீஸை கூப்பிட வா.?" என்றதுமே


" இல்ல அங்கிள் வேணா . நானே போய்டுறேன் "
என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவளை,
புதிதாக ஒரு ஜோடி கண்கள் பின் தொடர.. யாரோ ஒருவர் பார்ப்பதை உணர்ந்தவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஓடினாள்.


எங்கிருந்தோ குறுக்கே வந்து கைகளை காட்டி அவளை வழி மறித்தான். ஒரு இளம் ஆடவன். பறட்டை தலையில் கிளி பச்சை மற்றும் ரோஸ் நிற கலரிங் செய்து கண்றாவி என்று கூறும் அளவு சம்பந்தமே இல்லாத அடிக்கும் வண்ணத்தில் சட்டை அணிந்து எதிராக நிற்பவனை பார்த்ததும், உள்ளே பயப்பந்து உருள.. நடுங்கியவாறு " யார் நீங்க.?" திக்கித் திணறி வந்தது வார்த்தைகள்.

புதியவன் " நீ யாரு மா ? நீ ஏன் ஸ்டேஷன சுத்தி..சுத்தி வர்ற, உன் பிரச்சனைய ஒரு அண்ணனா நெனைச்கிட்டு என்கிட்ட சொல்லுமா தங்கச்சி. என்று சொன்னது தான் தாமதம்.


நம் நாயகி உறவு காத்த கிளி ஆயிற்றே.! அண்ணன் என்றதும் அகம் மகிழ்ந்து நடந்ததை கூறியதும்.

" கவலை படாதிங்க சிஸ்டர். நான் இங்க பக்கத்துல வேலை செய்யுறேன். நீ என் கூட வா.. ஊருக்கு போக என் முதலாளி கிட்ட பணம் வாங்கி தர்றேன்." என பொய் சொல்லி அழைத்ததும். சரி என்று அவனோடு கிளம்பி விட்டாள். உலகம் புரியாத மழலை மனம் கொண்டவள்.

'அண்ணன் என்றும் தன் தங்கைக்கு அரண் தான். அவன் இதழ் என்னவோ தங்கை என்று கூறியது. ஆனால் ஆபாச கண்ணால் அவளை உடையோடு விழுங்கினான்.!

ஒரு பூக்கடை முன்பு அவளை நிற்க வைத்துவிட்டு, முதலாளி உடன் பேசிவிட்டு வருவதாக கூறி சென்றான். கிளி பச்சை கலர் ஹேர் ஸ்டைல் வாலிபன்.

அங்கு பூ விற்க்கும் பெண் முகம் பார்க்க, இவள் பதட்டத்தை அறிந்து.


" ஏய்...ந்.தா ஆ .. யார் நீ ? ஊருக்கு புதுசா? "

"ம்... ஆமா.. அம்மா "

என்று நடந்ததை சின்ன பிள்ளை போல பிரதி ஒப்பிக்க, என்ன நடந்தது என்று புரிந்தது . என்ன நடக்க போகிறது என்று உணர்ந்த பெண் ஐயோ.. பார்த்தா வெள்ளத்தியா.. இருக்கே என்று எண்ணி,

" அந்த பொருக்கி நாய் .. இங்க என்ன வேலை பாக்க போறான். இது லாட்ஜ் மா.. எந்த முதலாளி கிட்டயும் அவன் பணம் வாங்க போகலை. போய் மாட்டி சீரழியாத எங்கயும் தெரியாத ஆம்பள நம்பி போக கூடாது. " என்று அந்த தாய் கூறவும், அவன் வரவும் சரியாக இருக்க " போ என்று கண்களால் அந்த தாய் சைகை காட்ட.

வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல முயன்றாள் பிரதிக்ஷா. அவன் அவளை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்து சென்றான். ஓட்டமும் நடையுமாக அவள் செல்ல..பின்னால் சென்றவன் பாய்ந்து அவள் கையை பிடித்து இழுத்து வந்தான்.

" அண்ணா விடுங்க.. விடுங்க ப்ளீஸ் ... என்று பிரதி கெஞ்ச, பூக்கடையை தாண்டி லாட்ஜ் நோக்கி அவளை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றான்.

வலிய கரம் ஒன்று அவளின் மற்றொறு கரத்தை பற்றி தன் பக்கம் இழுக்க..!!

அவன் மேல சரிந்து விழுந்தால் பூ மாலை போல.!

அந்த புள்ளிங்.கோ அண்ணனோ ஜிம்பாடி வைத்து அவன் முன் நிற்பவனை பார்த்து மிரள.!

"அவனோ (ஹீரோ) ஏய் எங்க எல்லாம் உன்ன தேடுறது, இவன் யாரு டி?உன் கைய ஏன் டி பிடிச்சு இருக்கான்.? என்ன லவ் பண்ணிட்டு எவன் இழுத்தாலும் போய்டுவியா? ஏய்..தம்பி கைய விடு "என்று அவனை மிரட்ட.

அவளை விட மனமே இல்லாமல் அவள் கையை விட்டு அந்த வாலிபன் விலகி போக.

இவனோ " பேக் காணாம போச்சுனா யார் கிட்டாயாவது போன வாங்கி எனக்கு கால் பண்ண வேண்டியதுதானே வாடி" என்று தோளோடு அவளை அணைத்து அழைத்து சென்றான். ப்ரீத் குமார்

நிமிர்ந்து பார்த்து யோசனையாக ' இவன் யாரு.? ஆள்ளாலுக்கு பிடிச்சு இழுத்து விளையாட என் கை என்ன பொம்மையா.. அவனை விட்டு தள்ளி நகரப் போனவளை மேலும் இறுக்கி பிடித்து நடந்தான் அவளின் காதலன் . (காப்பாத்த காதலன் னு பொய் சொன்னதால் பொய் காதலன். )

" பதறாத நான் பூ வாங்க வந்தேன். அந்த அம்மா தான் உன்ன காப்பாத்த சொன்னாங்க, என்றதுமே திரும்பி பூ விற்க்கும் பெறாத தாயை கண்டு, விழி நீர் அரும்பியது நன்றியோடு பிரதிக்ஷா பார்த்ததும் அவரோ..சிறு தலை அசைப்போடு

" சார் கூட போ.. ரொம்ப நல்லவர். உன்ன பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்ப சொல்லி இருக்கேன்." என்று வாய் அசைவு மட்டும் தந்தார். அந்த பெண்மணி காரணம் அவர் உதவியது தெரிந்தால்.. இங்கு அவர் கடை அடித்து உடைத்து விடுவார்கள் போதை ஆசாமிகள் என்ற பயம்.!

" ப்ரீத் தன் கார் கதவை திறந்ததும், உள்ளே அமர்ந்தாள் பிரதி. இப்பொழுது தான் நிம்மதியை உணர்கிறாள். " கார் அவனது கம்பெனி வாசலில் நின்றதும் மெதுவாக கார் விட்டு இறங்கியவள்." எத்தனாவது ப்ளோர் " என்று கேட்டு எட்டு மாடி கட்டிடத்தை ஒரு விதமாக அங்கலாய்ப்போடு பார்த்து கொண்டாள். மயக்க கலக்கும், நடக்க முடியாத முதல் பசி உணர்ந்த கொடுமை அப்படிக் கேட்க வைத்தது. "லிப்ட் இருக்கு தானே.?" கேள்வி எழுப்ப.

' ஏத்தம் தான் இவளுக்கு என நினைத்தவன். "ஏன் இளவரசி நடந்து வர மாட்டிங்களோ ? " என்றான் நக்கலாக

"நான் ஒன்னும் இளவரசி எல்லாம் இல்ல" முகத்தை திருப்பினாள் பிரதி. பசி மயக்கத்தில் கண்ணை கட்டுகிறது என்று சொல்லவா.. முடியும்
அவனிடம், தன் நிலையை எண்ணி நொந்தவள்.


அவன் பின்னால் வெளிரிய முகத்தோடு நடக்க முடியாமல், சோர்வாக கால்கள் பின்ன, மெல்ல தளர்ந்து நடக்க..அவனோ சென்றே மறைந்தான்.

உடலில் உள்ள சக்தி அத்தனையும் திரட்டி வேகமாக பிரதி நடக்க முற்பட, மின் தூக்கி அருகே அவன் நிற்பதை கண்டதும் கண்கள் சுருக்கி அவன் அருகில் போய் நின்றாள்.

குறுநகை கொண்டவன் " என்னங்க நத்தை மாதிரி நடந்து வர்றீங்க " என்று கடிந்து விட்டு நான்காவது தளத்திற்கான பொத்தானை அழுத்தினான்.


மின் தூக்கியின் அதிர்வு தாழாமல் அவன் கரங்களை பிரதி அழுத்தம் கொண்டு பிடிக்க " லிப்ட் ல போறதுன்னா பயமா உங்களுக்கு. வேணும்னா அடுத்த ஃ ப்ளோர் ல இறங்கி படியில நடந்து போவோமா? என்று கேட்டு வைக்க.

இடம் வலமாக தலையை ஆட்டி.. கையெடுத்து கும்பிட்டு விட்டாள் பிரதி. என்னால முடியாது சாமி என்பதை போல், அதை கண்டதும் வாய் விட்டே சிரித்து விட்டான்..ப்ரீத்.


"ஹா.ஹா.. ஏங்க இப்படி ? "

"சிரிக்காதிங்க" என்று சிணுங்கினாள்.

" ம் " என்றவன் அவன் கையை கசக்கி பிழியும் தேவதையை ஒரு நொடி பார்வையால் அளந்தான்.


கோவில் சிற்பங்களையும் போன்ற பேரழகி அவள்.! மயில் தோகை போன்று கூந்தல், இளஞ் சூரியனின் நிறம், அடர்த்தியான புருவ வளைவு, மான் விழி, செவ்விதழ்கள். வழுவழு கண்ணம். இதற்கு கீழே ஆராய எண்ணம் இல்லை. வெண்ணையில் செய்த சிலை.. விரலின் மென்மை தனது கைகள் உணர அவளை விழியால் கூறிட்டான் வேந்தன்.

மனதிலோ " என் பவி அளவு இல்லை என்று பெருமை பீத்திக் கொண்டான்.


ஆம் பவித்ரா அழகே பார்த்து பொறாமைப்படும் அழகி. அவனின் காதலி, அத்தை மகளான அவளை அறியாத வயதில் இருந்தே காதலிக்கிறான்.

ப்ரீத் _ " மேடம்..என் கைய விடுங்க இறங்கனும்" என்று நான்காவது தளத்தில் லிப்ட் திறக்கவும் இருவருமே சேர்ந்து நடந்து மேனேஜிங் டைரக்டர் அறைக்கு செல்ல.


டேபிளில் முன் இருக்கையில் அவளை அமர செய்து. எதிர் இருக்கையில் அவன் சென்று அமர்ந்தான் ப்ரீத்.

' கம்பேனி ஒனரா இவன் என்று மனதில் கேள்வி எழ..பசியை ஈடு செய்ய
" சார் தண்ணி குடிச்சுக்க வா " என்று கை நடுங்க கண்ணாடி டம்ளரை கையில் ஏந்தி வறண்ட தொண்டையை நனைத்தாள் பிரதி.


" சின்ன குழந்தை ஜூஸ் குடிப்பது போல கடைசி சொட்டு வரை நாவை நீட்டி பருகியவளை ஆழ்ந்து பார்த்தவன்.

'ஐயோ பசியில் இருப்பாளோ?' என்று உணர்ந்து விட்டான்‌.
சிறுவயதில் பட்டினியால் தவித்தவன்.

" மிஸ் உங்களால நான் சாப்பிடவே இல்லை. உங்களுக்கு ப்ராப்ளம் இல்லன்னா பசிக்குது சாப்பிட்டுக்க வா ? " என அனுமதி பெற

" சாரி... சார் அதை ஏன் என்கிட்ட கேட்கறீங்க. சாப்டுங்க" என்று ஏக்கமாக சொன்னாள் பிரதி.


அலைபேசியை கையில் எடுத்து " இட்லி தோசை எல்லாம் வேணாம். பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் ப்ரை போதும்.
பத்து நிமிஷத்துல வரனும். சொன்ன ஐந்தாவது நிமிடம் அத்தனையும் மேசை மேல் இடம் பெற்றது.

அவளோ பூமியில் புதையலை தேட.. வாசம் நாசியில் ஏறி பசியை இன்னும் கிளப்பி விட்டது. ' ரொம்ப பசிக்குது னு சொல்லிடலாம். இல்ல தப்பா நினைப்பாங்க.' என்று எண்ணி மனதை அடக்கினாள். தன் மானம் தடுத்தது.


" இன்னைக்கு என்ன கிழமை ? " என்று அவன் தெரிந்தே வினவ.

" வியாழன்" என்று அவள் கூறியதும்.

" அச்சச்சோ.. இன்னைக்கு நான் சாய்பாபா கோவிலுக்கு போகணும். அதனால நான் அதை தொடக் கூட கூடாது.
ஒரே ஒரு உதவி நீங்களே இதை கையாள எடுத்து குப்பை தொட்டியில் போட்டுடுறிங்களா ப்ளீஸ்.

" என்னது குப்பையில போடணுமா" என்று பொங்கி எழுந்தவள். "ஏன் சார் பசி ல இருக்க யாருக்காவது கொடுக்கலாம் இல்ல. "

" அப்படின்னா நீங்களே இது சாப்பிடுங்களேன் ப்ளீஸ்.. "நயமாக பேசினான்.


" இல்ல எனக்கு பசி இல்ல.." என்று வாய் மட்டும் கூற, விரல்களால் பார்சலை தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டாள் பிரதிக்ஷா.

இருந்தும் சமாளிக்க "ஆனா சாப்பாடு வீணா போனால் எனக்கு பிடிக்காது.. " என்று வேக வேகமாக பிரித்து மேய்பவளை பார்த்து புன்னகை பூக்க தண்ணீர் பாட்டிலை திறந்து அருகில் வைத்து விட்டு நகர்ந்தான் ப்ரீத்.


கழுத்து வரை உண்டவளுக்கு கூல் டிரிங்க்ஸ் இருந்திருந்தால் இன்னுமே நல்லா இருந்திருக்கும்..என்ற அங்கலாய்ப்பு வேறு..டீ வாங்கி குடிக்க கூட வழியில்லாமல் ஸ்டேஷன் முழுக்க சுத்தியது நீதானே. என்று மனசாட்சி காரி உமிழ்ந்து.

'துப்புனா தொடச்சிக்குவோமே
என்று மனசாட்சிக்கு பதில் மொழிந்தால்..பிரதிக்ஷா.

"தேங்காய் சில்லை மட்டும் அல்ல ,தேவைப்பட்டால் பிரியாணி கொடுத்து கூட எலியை பொறியில் சிக்க வைக்கலாம்.

" யார் நீங்க ? இங்கே ஏன் வந்தீங்க ? எப்டி திருட்டு போச்சு." கேள்விகளை அடுக்க.

" நான் வெக்கேஷன்காக சென்னை வந்தேன். என் பேக் தொலைஞ்சு போயிடுச்சு. அதுல தான் என் ஏடிஎம், மொபைல், பணம் எல்லாமும் இருந்தது. இங்க யாரையும் எனக்கு தெரியாது. இரயில்வே ஸ்டேஷன்ல ரெண்டு மூணு பேர் கிட்ட உதவி கேட்டேன்.
யாரும் உதவி பண்ணல நா கூட பரவாயில்ல திட்டுறாங்க சார் "

" ஊருக்கு போக எவ்ளோ பணம் வேணும்.. நான் தர்றேன். " பர்ஸை கையில் எடுக்க.

வேண்டாம் என மறுத்தாள்
" வேலை எதாவது வேணும்.. என் உழைப்பு இல்லாத பணம் எனக்கு பிடிக்காது சார். ஒன் வீக் வொர்க் பண்றேன். படிச்சிருக்கேன் சார்.. அப்பறம் நீங்க பணம் தாங்க போதும்.

" மன்னிச்சுடுங்க மேடம் ஒரு வாரம் மட்டும் வேலை தர முடியாது..சாரி " என வாசலுக்கு வழியை காட்டினான் ப்ரீத்.

புன்னகையுடன் " இட்ஸ் ஓகே." என எழுந்து அறைய விட்டு வெளியே செல்ல முற்பட்டாள் பிரதிக்ஷா.


" மேடம். இந்த வேலை இல்லாம வேற வேலை நா செய்வீங்களா ?"

" ம்... கண்டிப்பா.. "
என்ன வேலையா இருக்கும் என்று எண்ணியவள் கேள்வியாய் அவன் கண்களை பார்த்தாள்.


ஒரு நிமிஷம் என்று தனது போனில் வீடியோ கால் செய்து. " பவி நான் சொன்னேன் இல்ல என் லவ்வர்.. இவ தான் " என்று தனது மொபைலை திருப்பி இவள் பக்கம் காட்ட .!!


" ஹாய்.. நான் பவித்ரா நல்லா இருக்கீங்களா." என்றதுமே அதிர்ச்சியில் தொண்டை வரை நிரப்பிய பிரியாணி புரை ஏற, வாயை மூடிக்கொண்டு இருமினாள் பிரதிக்ஷா.

" அய்யோ.. என்ன ஆச்சி..மாமா.. தண்ணியை குடிக்க கொடுடா " என்று அவனிடம் கட்டளையிட நீரை அவளிடம் நீட்டினான். வாங்கி பருகினாள் பிரதி.

" ஆபிஸ்ல ஏன் மீட் பண்ணுறீங்க.. வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று அழைப்பை துண்டித்தாள் பவித்ரா.


" இதுக்கு தான் எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திங்களா ? ஏன் என்ன உங்க லவ்வர் னு அந்த பொண்ணு கிட்ட சொன்னீங்க ? "

"உன்ன காப்பாத்த நான் உன்ன லவ் பண்றேன் னு பொய் சொன்னதுக்கு பதில் உபகாரமா நீங்க என்ன லவ் பண்றதா அவகிட்ட சின்னதா ஒரு பொய் சொல்லுங்க " சாதரணமாக சொல்லவும்.




உடனே "முடியாது" என்று பிரதி மறுத்துவிட்டாள்

" இந்த பொண்ணுங்களே இப்படி தான்..உதவியே நீ கேட்காத போது நான் வந்து உதவி பண்ணேன். நீ சரியான சுயநலவாதி, ஹெல்ப் கேட்டாலும் முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுற"

" ஏன் இப்படி சொல்லுறீங்க நான் ஒன்னும் சுயநலவாதி இல்லை. "
" அப்படின்னா எனக்கு ஹெல்ப் பண்ணு"

" என்ன மாதிரி ஹெல்ப். "

" நடிக்கனும் என் வீட்டுக்கு வந்து என்ன காதலிக்குற மாதிரி நடிக்கனும். ஒரு நாள் தான்." அதிர்ச்சியில் உறையும் அவளின் விழிகளை படித்தவன்.

" எனக்கு அம்மா அப்பா இல்லை.. சின்ன வயசுல இறந்துட்டாங்க, அத்தை தான் என்னை வளர்த்தாங்க,அவங்க பொண்ணு பவித்ரா.

என்ன லவ் பன்னுறேனு சொன்னா.. நான் முடியாதுனு சொல்லிட்டேன்.

ஆர்வமாய் " .ஏன்... அந்த பொண்ண உங்களுக்கு பிடிக்காதா.?

" ரொம்ப பிடிக்கும் அதனால தான் அவள வேணாம்னு சொல்லுறேன்.
 
Last edited:

Saranyakumar

Active member
அருமையான ஆரம்பம் பிரதி இவ்வளவு வெகுளியாக இருந்தா எல்லோரும் தான் ஏமாத்துவாங்க ப்ரீத் எதுக்காக அவளை நடிக்க சொல்றான்?
 
அருமையான ஆரம்பம் பிரதி இவ்வளவு வெகுளியாக இருந்தா எல்லோரும் தான் ஏமாத்துவாங்க ப்ரீத் எதுக்காக அவளை நடிக்க சொல்றான்?
ப்ரீத்.. தன்னால் ஒரு பெண் காயப்பட கூடாது.. தன் முன் கோபம் உறவை வளர விடாமல் தடுக்கும் என உணர்ந்து விலக பார்க்கிறான். (முரடன்.) போக போக புரியும்.😇😇😇😇😇😇 ❤️நன்றிகள் 🙏கோடி❤️
உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top