நேரே வீட்டிற்கு வந்தவன் மகிழினியுடன் விளையாட ஆரம்பித்து விட்டான். மாலை நான்கு மணியளவில் உமையாள் கயலை வீட்டிற்கு செல்ல அனுமதித்திருந்தாள்.
கயல் வீட்டிற்கு செல்ல முற்படும் போது "கயல் நான் உன்னை ட்ரோப் பண்றேன்” என கூறினான் நீலன். கயலோ தயங்கி நின்றாள். உமையாளுக்கு எதோ புரிவது போல் இருக்க அவளும் சிரித்து கொண்டே,
"சரி சரி சீக்கிரம் சென்று விட்டுட்டு வா” என கூறி, "அவன் கூடவே போ கயல்” என கயலிடமும் கூறியிருந்தாள் உமையாள்.
கயல் அவன் மோட்டார் வண்டியில் அமர்ந்து அவள் வீட்டிற்கு செல்ல தயாரானாள். அவனும் மோட்டார் வண்டியை இயக்கி அவளை அழைத்துக்கொண்டு சென்றான். போகும் வழியில் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி அவளை கீழே இறங்க சொன்னான்.
அவளும் கீழே இறங்க வண்டியை அனைத்தவன் அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான். எப்பொழுதுமே அவளால் அவன் கண்களை பார்க்க முடியாது. இன்றும் அதேபோல் கண்களை பார்க்க முடியாமல் தலையை குனிந்திருந்தாள். அவள் மனசுக்குள் ரயில்வண்டி ஓட ஆரம்பித்தது.
அவள் முகத்தில் வேர்வை துளிகள் எட்டிப்பார்த்தது.
"எவ்வளவு நேரம் இப்படியே இருக்கலாம்னு நினைக்கிற? நீ என்னை பார்த்தால் தான் நான் உன்னிடம் பேச ஆரம்பிப்பேன். நான் நினைத்ததை பேசாமல் உன்னை உன் வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டேன், உன்னையும் இங்கிருந்து செல்ல விடமாட்டேன்" என கூறினான்.
இதனை கேட்ட கயலின் மனதில் மெதுவாக சென்ற ரயில் வேகம் எடுத்து செல்ல ஆரம்பித்தது. பின் ஒரு வழியே கண்களை மூடி ஆழ்ந்த ஒரு மூச்சை எடுத்து விட்டு தன்னை ஒரு நிலை படுத்தி நீலனை நிமிர்ந்து பார்த்தாள்.
"என்ன பேசணும்?" மிக மெல்லிய குரலில் வினவினாள்.
"சோ இப்போ நான் என்ன பேச போறேன்னு உனக்கு தெரியாது அப்படித்தானா"? என கேட்டான் நீலன்.
அவளோ உதட்டினை கடித்து அமைதியாக இருந்தாள். பின் மெல்ல அவன் முகத்தை நோக்கினாள் ஆனால் அவளால் அவன் கண்களை பார்க்க முடியவில்லை. மீண்டும் தலையை குனிந்துகொண்டாள்.
"இப்படியே பதில் சொல்லாமல் எவ்வளவு நேரம் நிற்பதாக உத்தேசம்?" என்றான் அவன்.
"இதோ பார் எனக்கு சுத்தி வளைத்து பேச வராது. நேராகவே விஷயத்தை சொல்றேன்" என கூறி அவள் முகவாயை பிடித்து முகத்தை அவனை பார்க்குமாறு உயர்த்தினான்.
அவள் கண்களை பார்த்து "யெஸ் ஐ லவ் யு" என கூறினான்.
"நான் உன்னை கல்யாணம் கட்ட ஆசை படுகிறேன்” என கூறினான். இதனை கேட்ட அவள் விழிகள் அகலமாக விரிந்தது.
சட்டென்று அவன் கைகளை தட்டி விட்டு “இல்லை இது தவறு எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை” என அவனை பார்க்காமல் கூறினாள்.
" ஒஹ் அப்போ உனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. நான்தான் தேவை இல்லாமல் எனக்குள்ள உன்மேல் ஆசையை வளர்த்துகிட்டேன் அப்படித்தானா?" என கேட்டான் நீலன்.
இவளோ என்ன சொல்வது என தெரியாமல் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.
பின் “நீங்களே யோசிச்சு பாருங்க இது சரிவருமானு. நீங்க டாக்டர் ஆனால் நான் அப்படியா? உயர்நிலை பள்ளி படிப்பு மட்டும்தான். நீங்களே சொல்லுங்க எப்படி நமக்குள்ள பொருந்தும்? இது சரிப்பட்டு வராது. இந்த எண்ணத்தோட என்கிட்டே பேசாதீங்க" என கூறினாள்.
அவள் பேச பேச அவளையே ஆழ்ந்து பார்த்தவன் அவள் அருகில் சென்று அவள் சுதாரிக்கும் முன் அவளை இழுத்து அவள் இதழில் தன் இதழை பொருத்திக்கொண்டான். அவனிடம் இருந்து விடுபட போராடினாள். ஆனால் காளையவன் விட்டால் தானே!
அவள் மனதிலும் அவன் மேல் காதல் கொட்டிக்கிடக்கிறது அல்லவே! அதனால் ஒரு கட்டத்தில் அவனின் முத்தத்திற்கு அடங்கி விட்டாள் பாவையவள்.
அவள் மூச்சி விட சிரமப்படும் வேளையில்தான் அவளை விட்டு விலகினான். அவள் கண்ணீர் மல்க அவனை ஏறிட்டு பார்த்தள். அவளுக்கும் அவனை பிடித்திருப்பதை அவன் கண்டுகொண்டானே.
"இதற்கு மேலும் காதல் இல்லைனு மறுப்பியா என்ன?" என்றான் அவள் கண்களை துடைத்து விட்டு கொண்டே.
அவள் கண்ணீருடன் மௌனமாக நின்றிருந்தாள். "சரி உன்கிட்ட காதலை சொல்லி உன் சம்மதம் வாங்குன அப்புறம் உன் வீட்ல பேசலாம்னு நினைத்தேன். ஆனால் நேரடியா உன் வீட்லதான் அக்காவா அழைத்து வந்து பேசணும் போல" என கூறினான்.
அதற்கு அவள் "ஏன் இப்படி பண்றிங்க? அக்காக்கு தெரிந்தால் என்னை தப்ப நினைப்பாங்க" என்றாள்.
"அக்காவுக்கு எப்போவோ தெரியும்" என்று அவள் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான்.
அவனை அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருந்தாள் கயல். அவனோ "கயல் எனக்கு ஏன்னு தெரியல, உன்னை பார்த்ததுமே பிடித்து விட்டது. அப்போ அது காதல் அப்படினு நான் நினைக்கவில்லை. பிடிக்கும் அவ்வளவுதான்.
உன்னை பார்க்க பார்க்க இங்க (அவனது நெஞ்சம்) என்னமோ பண்ணும். அப்போ நான் டாக்டர்லாம் இல்ல பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன்தான். காதல் தகுதி, அந்தஸ்து பார்த்து வராதுடி.
அப்படிதான் என்னையே அறியாமல் என் மனம் உன் பால் சாய ஆரம்பித்தது. ஒருவேளை நீ என்னிடம் எல்லோரிடமும் பேசுவதை போல் பேசிருந்தால் எனக்கு வித்தியாசம் தெரிந்திருக்காதோ என்னவோ.
என்னிடம் உனக்கு இருந்த தயக்கம், ஒதுக்கம் இவை எல்லாமே உன் மேல் ஒரு ஆர்வம் வர தூண்டியது. அந்த ஆர்வம் பிடித்தமா மாறியது. எனக்கு அக்கா மிகவும் முக்கியம். யாருக்காகவும் நான் அவளை விட்டு தர மாட்டேன். அக்கா வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை பார்த்திருக்கா.
அது மட்டும் இல்ல மகிழ் என்னோட உயிர். என்னுடைய மனைவி இவங்க இருவரையும் போலித்தனம் இல்லாமல் பாசமா பார்த்துக்கணும். நீ பார்த்தப்ப. எனக்கு தெரியும் பலதடவை நீ அக்காவை அக்கறையா பார்க்கிறதா நான் பார்த்திருக்கேன். மகிழ் கூட விளையாடுறத பார்த்திருக்கேன்.
அப்போதெல்லாம் எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். இந்த எல்லா பிடிக்குமும் சேர்த்துதான் இப்போ காதலா மாறி இருக்கு. எனக்குள்ள பல சந்தேகங்கள் இது காதல் தான இல்லை வயது கோளாறா என்று. சில நாட்களிலே எனக்கு அதற்கும் விடை கிடைத்தது
உனக்கு நினைவிருக்கா ஒருநாள் உனக்கு டெங்கு காய்ச்சல் ரொம்ப மோசமா மருத்துவமனையில் அட்மிட் பண்ற அளவு இருந்த அந்த சமயம் நான் துடித்தது எனக்கு தான் தெரியும். அப்போதான் எனக்கே நான் உன் மேல் எவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் என்பது புரிந்தது. புரிந்த அடுத்த நொடியில் நான் நின்றது என்னவோ என் அக்காவின் முன் தான்.
அவளிடம் அனைத்தையும் கூறி விட்டேன். கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த பின் 'எனக்கு சம்மதம் தான் ஆனால் உன் முடிவில் உறுதியாக இருந்தால் மட்டும் அவளிடம் கூறு' என்று கூறிவிட்டாள்.
இப்பொழுது கூட அவள் யூகித்திருப்பாள் நான் உன்னிடம் என் காதலை கூறத்தான் அழைத்து செல்கிறேன் என்று” என அவன் சொல்ல வேண்டிய அனைத்தையும் கூறி முடித்தான். அவன் பேச பேச இவளுக்குதான் மலைப்பாக இருந்தது.
அவன் அவள் பதிலைத்தான் எதிர்பார்க்கிறான் என அவளுக்கு தெரிந்தும் இப்போதும் அமைதியாகவே இருந்தாள். இவனுக்குதான் காண்டானது.
மனதில் '' என நினைத்து “எவ்வளவு நேரம் கேட்கிறேன் ஏதாவது சொல்றியா?” என கத்தினான்.
"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை" என கூறினாள்.
"குழப்பமே வேண்டாம் எனக்கு தெரியும் நீ என்னை காதலிக்கின்ற என்று. எதுவோ உன்னை தடுக்குது. நல்ல சிந்திச்சிட்டு எனக்கு பதில் சொல். ஆனால் அந்த பதில் ஆமாம் என்பதாக தான் இருக்கணும். சரி வா உன் வீட்ல கொண்டு போய் விடுறேன்" என அவளிடம் கூறினான். இருவரும் புறப்பட்டனர்.
செல்லும் வழியெல்லாம் சிந்தித்தாள். ஆம் அவளும் அவனை காதலிக்கிறாள் அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பின் ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்? இது நாள் வரை அவர் தன்னை வம்பிழுக்கிறார் என்று மட்டும் நினைத்தவள் இன்று அவன் காதலை சொன்ன கணம் முழி பிதுங்கி தான் போனாள்.
இது தான் கடவுளின் திட்டம் என்றால் யார் என்ன செய்துவிட முடியும். ஒரு முடிவு எடுத்து விட்டாள். அவள் முடிவு எடுப்பதற்கும் அவள் வீடு வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது .
வீடு வந்ததும் அவள் மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி கொண்டாள். அமைதியாக அவனை பாராமல் வீட்டினுள் செல்ல திரும்பினாள். அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சட்டென்று அவனை நோக்கி திரும்பி, ரெண்டடி முன்னே வந்து அவன் கண்களை பார்த்து "எங்க அம்மா உடல் நிலை சரி இல்லாதவங்க, எனக்கு என் அம்மாவை பார்த்துகொள்ளும் கடமை இருக்கு அதனால கல்யாணத்துக்கப்புறமும் நான் என் அம்மாவை பார்த்துக்கொள்வேன், பணம் கொடுப்பேன் நீங்க ஒன்னும் சொல்ல கூடாது" என கூறிவிட்டு அவளின் சம்மதத்தை அவனுக்கு மறைமுகமாக கொடுத்து விட்டு வெக்கபட்டுக்கொண்டே அவனை திரும்பியும் பாராமல் வீட்டினுள் சென்று விட்டாள்.
அவள் சென்றபின்னும் அவள் என்ன கூறி சென்றாள் என்பது அவனுக்கு உரைக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்துதான் அவனுக்கு விளங்கியது, அவள் சொல்லி சென்ற வரிகளின் அர்த்தம்.
அவன் இதழ்களுக்குள் ஒரு சிறு புன்னகை. அவனின் திறன் பேசி சத்தம் கொடுத்தது எடுத்து பார்த்தான். அவள்தான் புலனம் செய்திருந்தாள்.
திறந்து பார்த்தான் "சுயமாக சிரித்தால் பைத்தியம் என நினைப்பார்கள். அதனால் சிரிப்பை நிறுத்திவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு போங்க" என இருந்தது.
அதற்கு அவனோ "இவ்ளோ பேச வருமா உனக்கு? பாருடா, ஓகே மேடம்" என பதில் புலனம் அனுப்பிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டு விட்டான்.
இவர்களின் காதல் கதை இனிதே தொடங்கியது.