Sowndharyacheliyan
Writer
நாட்கள் வேகமாய் ஓடி ஆரம்பித்திருந்தன. இன்னும் திருமணத்திற்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் அனைவரும் பரபரப்பாக சுழன்றுக் கொண்டிருந்தனர்.
வழமை போல் கார்முகிலனின் கோபத்திலும், வருணாக்ஷியின் விளையாட்டுத் தனத்திலும் அவர்கள் நாட்கள் நகர்ந்திருந்தன. காதலில் பொங்கி வழியா விட்டாலும் ஓரளவு வருணாவின் ஒன்றிரண்டு சிறுப்பிள்ளை ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தான்.
அதுவும் அவனது வேலையை தொந்தரவு செய்யாதே வகையில். சில நேரம் கடுப்பாகி வருணாவை கடிந்துக் கொள்வதும் உண்டு. முட்டலும், மோதலுமாய் அவர்களது நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன.
பிள்ளைக்கு விடுமுறை என்பதாலும், நாளை திருமணப் பட்டு எடுக்க செல்ல இருப்பதாலும், பிறந்த வீட்டிற்கு வருகை தந்திருந்தாள் மேகலா.
ப்ரிண்ட் செய்ய கொடுத்திருந்த திருமண பத்திரிக்கை வந்திருக்க, அதில் முகிலனதும் சேர்ந்து வந்திருக்க இரண்டையும் தனித்தனியாக பிரித்து பத்திரிக்கைக்கு மஞ்சள் குங்குமம் தடவும் வேலையை பெண்கள் மூவரும் செய்துக் கொண்டிருக்க,
ஆண்கள் மூவரும், உறவினர்களின் பெயர்களையும், அவர்களது முகவரியையும் சேகரிக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தனர்.
“பேச்சி, நாளைக்கு பட்டு எடுத்துட்டு அப்புடியே வெளியூர்காரங்களுக்கு பத்திரிக்கையை கொடுத்திட்டு வந்திடலாம். வெளியூர்ல கொடுத்து முடிச்சிட்டோம்னா, அப்பறம் உள்ளூர்ல ஒரு அஞ்சு நாள் போதும் பத்திரிகை கொடுக்குறதுக்கு சுளுவா இருக்கும்.” மகாலிங்கம் கூற,
“சரிங்க, இப்பவே அதுக்கான பத்திரிக்கையை தனியா எடுத்து வச்சிடுறேன். மேகலா அந்த ப்ளூகலர் பையை எடு அதுல பத்திரிகை வைக்க சரியா இருக்கும்.” என மகளிடம் கூறியவர்,
மேகலா அவர் சொன்ன பையை எடுத்து வந்ததும் அதில் பத்திரிக்கைகளை அடுக்கலானார்.
“முகிலா, யாரு பேரும் விட்டுப் போயிடாமா, நான் ஒரு லிஸ்ட் வச்சுக்கிறேன். நீ ஒண்ணு எழுது, அம்மா வேற வெளியூர்ல யாருக்கும் கொடுக்கணுமா, இந்தா இந்த லிஸ்ட்டப் பாருங்க, யாரையாச்சும் விட்டுடோமான்னு பார்த்துச் சொல்லுங்க” என பரணி பேப்பரினை நீட்ட, வாங்கிக் கொண்டார் பேச்சி.
“அக்கா! உங்க சின்ன மாமானார், வீடு அப்றம் மாமாவோட தாய்மாமா வீடு, மாமாவோட தங்கச்சி வீடு. இவுங்களை தவிர வேற யாரையாச்சும் கூப்பிடனுமா அக்கா?” தனது கையில் இருந்த பேப்பரில் அக்கா வீட்டு சொந்தங்களை எழுதியவாறு முகிலன் கேட்க,
“போதும் முகில், என் நாத்தானாரோட ஓரகத்திக்கு ஒரு பத்திரிக்கைய வச்சு விட்டுடலாம். அவுங்க வீட்டு விசேசத்துக்கு இங்க உங்களை கூப்பிட்டாங்க. நிச்சயத்துக்கு கூப்பிடலையேன்னு மொகத்தை தூக்குனாங்க” என்க,
“அவுங்க இருக்குறது திண்டுக்கல் தானே மேகலா, உங்க சின்னப் பாட்டியும் அந்த ஊரு தானே, அவுங்களுக்கு வைக்கும் போது, இவுங்களுக்கும் வச்சிட்டு வந்திடுறோம். நீ அட்ரஸ் மட்டும் கேட்டுச் சொல்லு” மகாலிங்கம் கூற,
“சரிப்பா” என்றவள் அவளின் நாத்தானாரிடம் கேட்டு முகவரியை வாங்கியிருந்தாள்.
“ஏன், மேகலா உன் சின்ன மாமியா அதுக்கப்பறம் உன்கூட சகஜமா பேசுனாங்களா?” முத்துப்பேச்சி கேட்க,
“ஹான்ம்மா ஏதோ பேசுனாங்க, முகில் நிச்சயத்துக்கு கூப்பிடாதது வேற அவுங்களுக்கு கோபம்”
“நம்ம அளவாத்தானடி செஞ்சோம்”
“அது உனக்கு எனக்கு புரியும். அவுங்களுக்கு புரியுமா? ஏற்கனவே நம்ம முகிலை அவுங்க பொண்ணுக்கு கேட்டு, அது நடக்காம போனதுலயே, வருத்தம் தான் அவுங்களுக்கு.”
“நம்ம என்னடி பண்றது? முகிலன் தான் அந்த இடம் வேண்டாம்னு சொல்லிட்டான். அந்தப் பொண்ணு இவனை விட ரொம்ப சின்னவ வேற”
“விடும்மா, அவுங்களுக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.ஏதோ நம்ம வருணாவ வசதிக் கண்டு எடுத்தோம்னு, அவுங்க வசதி கம்மியா இருந்ததால நம்ம வேண்டாம் சொன்ன மாதிரி பேசி வச்சிருக்காங்க”
“என்ன மேகலா இது? என்ன பேச்சிது?”
“ஆமாமா, நம்ம நிச்சயத்துக்கு கூப்பிடாததுக்கு என் மாமியார் கிட்ட வந்து கேட்டு இருக்காங்க, “ ஏன் எங்களை எல்லாம் நிச்சயத்துக்கு கூப்பிட்டா, நாங்க பொண்ணு வீட்டு வசதிய பாத்தோ, இல்லை பொண்ணு வீட்டுகாரங்க செய்யுற சீர்செனத்தியப் பாத்து கண்ணு வச்சிடுவோம்னு கூப்பிடலையான்னு, கேட்டு இருக்காங்கம்மா”.
“என்ன மேகலா இது? இப்புடி எல்லாம் பேசி வச்சிருக்காங்க.”
“விடும்மா, அவுங்க பொண்ணை எடுக்கலைன்ற ஆதங்கத்துல வார்த்தைகள இப்புடித்தான் வரும். இனி கல்யாணம் முடியிற வரை ஏதாச்சும் இது மாதிரி பேசத்தான் செய்வாங்க. நம்மத்தான் கண்டுக்காணாம இருக்கனும்.”
“அப்புடி இருக்கத்தானே வேணும்.ஏன்னா அவுங்க சொன்னது உண்மைத் தான?” அதுவரை அவர்களின் பேச்சினை கேட்டிருந்த சுபா வாயை திறந்தாள்.
“என்ன பேசுற சுபா, எது உண்மை?”
“இல்லத்தை பொண்ணு வீடு வசதிதானே அதை சொன்னேன்.”
“பொண்ணு வீடு வசதி தான் சுபா அண்ணி, ஆனா அதுக்கு கொஞ்சமும் கொறைச்சதில்லை எங்கப்பா வீடும். நீங்க எதை வச்சி இப்புடி பேசுறீங்கன்னு தெரியலை.”
“நம்மளும் வசதி தான் இல்லைன்னு சொல்லை. ஆனா நம்மளை விடவும் அவுங்க ஒரு படி மேலத்தானே, அதுவும் நம்ம முகில் தம்பி வெறும் வாத்தியாரு தானே, அவருக்கு இம்புட்டு சீர், செனத்தியோட பொண்ணு தராங்கன்றப்போ, எல்லாருமே இதை தானே சொல்லுவாங்க வசதியை பாத்து மயங்கிட்டோம்னு” என மெல்ல அவள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற,
அதுவரை பெண்கள் ஏதோ பேசுகிறார்கள் என அதில் தலையிடாமல் இருந்தனர் ஆண்கள். ஆனால் சுபாவின் பேச்சினை கேட்ட முகிலன் அப்படி விட முடியாது,
“ஏன் அண்ணி, வெறும் வாத்தியாரு தானேன்னு கேட்குறீங்க, வாத்தியார் தொழில்னா என்ன அவ்வளவு மட்டமா?” நேரிடையாக அவன் கேட்டிட,
இப்படி சட்டென தன்னிடம் பேசுவான் என்பதை யோசிக்காத சுபா சில நொடிகள் திகைத்து நின்றவள்,
பின் தன்னை சமாளித்துக் கொண்டு,
“மட்டம்னு சொல்லலை தம்பி, பெரிய பெரிய ஐ.டி வேலை, டாக்டர் வேலை எல்லாம் இருக்கு அதுக் கூட வாத்தியார் ஒப்பிடும் போது கொஞ்சம் கம்மியதானே தெரியும்.அதான்”
“நீங்க சொன்ன ஐ.டி வேலை, டாக்டர், இவுங்களை எல்லாம் உருவாக்குறதே நாங்க தான் அண்ணி, சொல்லப்போனா மாதா, பிதா, குருன்னு எங்களுக்கு அடுத்து தான் கடவுளையே சொல்லிருக்காங்க. வாத்தியார் வேலை ஒண்ணும் அவ்வளவு மோசமில்லை அண்ணி” என்றவனிற்கு அவன் உயிராய் நேசிக்கும் ஆசிரியர் தொழிலை மட்டமாய் நினைத்ததை தாங்கிக் கொள்ள முடியாதவன்,
“ம்மா, கொஞ்சம் தலைவலியா இருக்கு நான் ரூம் போறேன். எல்லாரோட அட்ரஸ் பேர் எழுதிட்டேன்.” என்றபடி பேப்பரினை அருகில் இருந்த பரணியிடம் கொடுத்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
ஆனால் அவனது முகமே அவனது கோபத்தை காட்டிக் கொடுத்துவிட்டது குடும்பத்தினருக்கு.
“உனக்கு அறிவே இல்லையா சுபா? என்ன பண்ணி வச்சிருக்க நீ?” பரணி அதட்டிட,
கணவனின் அதட்டலில் அவள் முகம் சுருங்கி, அதனை கவனித்த மகாலிங்கம்,
“பரணி! பேச்சை விடு” என அவனை அடக்கியவர், மருமகளிடம் “சுபா, வார்த்தைகளை பார்த்து விடணும். ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்.நாளைக்கு அந்த பிள்ளை நம்ம முகிலை கட்டிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தப் பின்னாடி, நீ இந்த மாதிரி பேசுறது நல்லா இருக்காது. பாத்துப் பேசு” என்றவர்,
“போதும், மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம். போய் தூங்குங்க” என அனைவரையும் போக சொல்லிவிட்டு தங்களது அறைக்கு சென்று விட்டார்.
இங்கே, அறையில் இருந்த முகிலனிற்கு நிலைக்கொள்ள இயலவில்லை சுபாவின் பேச்சினை நினைத்து.
‘ஒருவேளை அவளும் அண்ணி சொன்ன மாதிரி என் வேலைய மட்டமா நெனைக்கிறாளோ! நாளைப்பின்னே அண்ணி பேசுன மாதிரி அவளும் பேசுவாளோ?’என்ற கேள்வி அவனை அரித்து, தூங்கவிடாமல் இம்சிக்க,
‘எதுக்கு குழப்பம், அவக்கிட்டயே கேட்டுடுவோம்’ என நினைத்து அவளிற்கு அழைப்பை விடுத்தான் அவன்.
“ஹலோ! வாத்தி சார் என்ன ஆச்சரியம் இந்த டைம்க்கு கூப்பிட்டு இருக்கீங்க?” என்றவளின் குரலில் அவன் மணியை பார்க்க 11.30.
மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். ‘அவ இந்த டைம்க்கு மெசேஜ் போடும் போது எல்லாம், போய் தூங்குன்னு சொல்றவன், இன்னைக்கு நீ என்னடா பண்ணி வச்சிருக்க’.
“ஹலோ! ஹலோ!” அவள் மறுபுறம் கத்திட,
“கத்தாத, கத்தாத லைன்ல தான் இருக்கேன். தூங்கிட்டியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”
“இல்லை, இன்னும் தூங்கலை அத்தைங்க எல்லாம் வந்துருக்காங்க, கெளரிக் கூட பேசிட்டு இருந்தேன்.”
“ஓஹ் சரி!” என்றவன் நிறுத்த,
“சொல்லுங்க”
“ நீ ஏன் என்னை சூஸ் பண்ண?”
“புரியலை!”
“இல்லை, உனக்கு அலையன்ஸ் பாக்குறப்போ, ஐ.டி, இன்ஜினியர்னு வந்துருப்பாங்க தானே, அவுங்களை விட்டுட்டு ஏன் என்னை ஐ மீன் டீச்சர் வேலை பாக்குற என்னை?”
அவன் கூற வருவதை புரிந்துக் கொண்டவள் அவனிடம் விளையாடும் நேக்கத்துடன்,
“என்ன பண்றது, எல்லா மாப்பிள்ளையும் வந்தாங்கத்தான், ஆனா என் கெரகம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன்” என அவள் நாட்டுச் சிரிப்புடன் கூற,
அவன் முகம் அங்கே விழுந்துவிட்டது,
‘ஆக, நான் நினைத்தது சரிதான், அவளிற்கு நான் செய்யும் வேலை திருப்தி இல்லைப்போல’ என நினைத்தவன், அதற்கு மேல் அவளிடம் பேச மனமின்றி,
“ஓஹ், சரி நான் வைக்கிறேன்”. என்றவன் போனை கட் செய்துவிட்டிருந்தான்.
‘என்ன, பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டாறு? விளையாட்டுக்கு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டாரே’ என நினைத்தவள் மீண்டும் அவனிற்கு முயற்சிக்க போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும், மீண்டும் அவள் முயற்சித்தும் பயனில்லாமல் போக, தன்னையே நொந்நுக் கொள்வதை தவிர அவனிற்கு வேற வழியில்லை.
“வாத்தி, நம்ம பேசுனதுல தப்பா புரிஞ்சுகிக்கிட்டாரு போலயே, இப்போ என்ன சமாதானாம் சொன்னாலும் ஏத்துக்க மாட்டாரு. நாளைக்கு நேர்ல பார்த்து போசுனாதான் உண்டு. எனக்கு நாக்குல சனிப் போல, அந்த மனுசனே ஏதோ அதிசயமா பேச கூப்பிட்டுருக்காரு, அதை கெடுத்துவிட்டியேடி அவசரக்காரி” என புலம்பியபடி தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், நாளை அவனிடம் பேசிவிடும் முயற்சியில் கண்ணயர்ந்தாள்.
பழனியில் பிரசித்தி பெற்ற பட்டு, நகை, மாளிகையில் இருந்தனர் இருக் குடும்பத்தினரும் சில முக்கிய உறவுகளும்.
வந்தது முதலே வருணா, முகிலனை தேட, அவளின் தேடலிற்கு ஏமாற்றத்தினை பரிசளித்திருந்தான் முகிலன்.
“முகிலனுக்கு, ஏதோ அவசர வேலை வந்திடுச்சு காலேஸ்ல இருந்து கூப்பிட்டாங்கன்னு போயிருக்கேன்.சீக்கரமே வரப் பாக்குறேன்னு சொல்லிருக்கான்” மகாலிங்கம் அவன் வராததுக்கான காரணத்தை கூற, கேட்ட வருணாவின் முகம் சுருங்கி விட்டது.
‘தன் மீதிருந்த கோபத்தினால் தான் வரவில்லையோ? ச்சே ச்சே அப்புடி இருக்காது, வேலை வந்திருக்கும் வந்திடுவாறு’ என மாறி மாறி நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவளிற்கு, மனதின் ஓரம் சுருக்கென்று தைத்தது உண்மை.
“சரி, நம்ம போய் புடவை பாத்திட்டு இருக்கலாம், தம்பி வந்திடுவான்” பரணி கூற, சரியென்று அனைவரும் சென்றனர்.
“ஏண்டி வரு, உன்கிட்ட அண்ணா சொல்லலையா?” கெளரி கேட்க,
“இல்லடி சொல்லலை.” என்றவளிற்கு கெளிரியிடம் தான் பேசியதை கூறி விடாலாமா? என ஒரு நொடி யோசித்தவள், பின் அவளிடம் திட்டு வாங்க முடியாதென அமைதியாகி விட்டாள்.
நேரம் தான் சென்றதே ஒழிய முகிலன் வந்தப்பாடில்லை. எத்தனை நேரம் தான் அவர்களும் புடவையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மகாலிங்கம் மீண்டு அவனிற்கு அழைக்க, எடுத்தவன் என்ன கூறினானே! மகாலிங்கத்தின் முகம் சில நொடிகள் அதிருப்தியை காட்டி, பின் இயல்பானது.
“சரி, முகிலா நீ பாத்து வா” என அழைப்பைத் துண்டித்தவர், தன் முகம் பார்த்தவர்களிடம்,
“முகிலனுக்கு ஏதோ அவசர மீட்டிங் போட்டுட்டாங்களாம். நம்மளை தேவையான துணிமனி எடுக்க சொல்றான். மீட்டிங் முடிஞ்சதும் வந்திடுறேன் சொல்லிருக்கான்.நம்ம அடுத்து ஆக வேண்டிய வேலையை பாப்போம்” என,
அதுவரை அவன் வந்துவிடுவான் என நம்பிக்கையில் இருந்த வருணாவிற்கு, மகாலிங்கம் பேசியதை கேட்டு கண்ணில் குளம் கட்டிற்று.
‘ஆக, தன்மேல் உள்ள கோபத்தில் தான் அவன் வரவில்லை’ என இப்போது முழுமையாக நம்பியவளிற்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை.
வருணாவின் முகத்தை கண்ட கெளரிக்கு, ஏதோ சரியில்லை எனத் தெரிய,
“அத்தை, அம்மா முகூர்த்த பட்டு கடைசியா எடுத்துக்கிடலாம். நம்ம சொந்தக்காரங்க முக்கு இப்போ துணி எடுத்து முடிச்சிடுங்க, நானும் வருணாவும் போயி கொஞ்ச எங்களுக்கு தேவையானதை எடுத்துட்டு வந்திடுறோம்.” என்றவள் இன்னர்ஸ் செக்சனை கண் காட்டிட,
“சரி கெளரி நீங்க போயிட்டு வாங்க, நாங்க அதுக்குள்ள மத்தவங்களுக்கு எடுத்திடுறோம். அதுக்குள்ளயும் மாப்பிள்ளை தம்பியும் வந்திடுவாரு.போயிட்டு வாங்க” என அவர்களுக்கு விடைகள் கொடுக்க,
வருணாவை வேகமாக இழுத்து சென்றவள், ஒரு ஓரத்தில் நிறுத்தி,
“என்ன அசட்டுத்தனம் வருடா பண்ண நீ?” என அதட்டிட,
இதற்குமேல் அவளிடம் மறைக்க முடியாதென, நேற்று இரவு நடந்த உரையாடலை சொல்லிவிட்டிருந்தாள்.
“அறிவுக்கெட்டவளே! அந்த அண்ணா அவர் செய்யுற வேலைய பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு மறைமுகமா கேட்டுருக்காருடி. அதைப் புரியாம நீ என்னத்தையோ உளறி வச்சி அவரை கோபப்படுத்திருக்க?”
“இல்லைடி, சும்மா விளையாட்டுக்குத் தான் டி பேசுனேன்.இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துப்பாருன்னு யோசிக்கலை கெளரி” என மேலும் அவள் கலங்கிட,
“அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன்ல வரு? அவசரப்பட்டு வார்த்தையை விட்டுடாதா, யோசிச்சுப் பேசுன்னு. அதுவும் அந்த அண்ணா விசயத்துல அவசரத்தனமா இருக்காதுன்னு” என அவள் வாட்டி எடுக்க,
சிறியதாக தேம்பியபடி இருந்தாள் வருணா.
“அந்த அண்ணாந்து போன் பண்ணு வரு”
“பண்ணிட்டேன் டி ஸ்வீட்ச் ஆஃப்னு வருது. என்னடி பண்றது இப்போ, என்மேல உள்ள கோபத்துல தான் வராம இருக்காருப் போல”
“அதான் மீட்டிங்ன்னு சொன்னாங்கள்ளா, அதனால் போன் ஆஃப் பண்ணிருப்பாறு”
“இல்லை கெளரி நேத்து நைட்டும் என்கிட்ட பேசுன அப்றம் ஆஃப் பண்ணிதான் வச்சிருந்தாரு” என,
தலையிலடித்துக் கொண்டாள் கெளரி.
அடுத்து என்ன செய்வது என யோசித்த கெளரி, கிருஷ்ணாவிற்கு அழைத்து அவனை தாங்கள் இருக்கும் இடத்திற்கு உடனடியாக வர சொல்ல,
அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் முன் நின்றவனுக்கு தங்கையின் அழுத முகம் கண்ணில் விழ,
“வருணா! என்னாச்சு ஏன் அழுதுருக்க? ஏய் கெளரி நீ ஏதாச்சும் சொன்னியா அவளை. இவ ஏதும் திட்டுனாள வரு உன்னை?” என கெளரியையை முறைத்த வண்ணம் தங்கையிடம் பேச,
“இவ பண்ண வேலைக்கு திட்டாமா, தூக்கி வச்சு கொஞ்ச சொல்லுறீங்களா?” என்றவள் முகிலன் வராதது முதல் நேற்றைய இரவு அவன் போன் செய்தது என அனைத்தையும் அவள் கூற,
தங்கையின் சிறுப்பிள்ளை தனத்தை எண்ணி அவளை கடிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை அவனிற்கு.
“எல்லா நேரமும் அப்புடி யோசிக்காம பேசி வைக்காத வருணா, நீ விளையாட்டால் பேசுற பேச்சு எதிருல இருக்குறவங்களை காயப்படுத்தலாம். கல்யாணமாகி வேற வீட்டுக்கு போக போற, அங்கயும் போய் அப்புடி பேசி வச்சின்னா என்ன ஆகுறது?” என அவன் கடிய,
தன் தவறு உணர்ந்து மெளனமாய் கண்ணீர் வடிந்தாள் வருணா.
“விடுங்க, ஏற்கனவே அவ அழுதுட்டுத்தான் இருக்கா, மேலும் அழ வைக்காதீங்க.” கெளரி கூற,
“இப்ப என்ன பண்றது?” கேட்டது கிருஷ்ணா.
“நான் சொல்றது செய்யுங்க மாமா, நீங்க நேரா அண்ணா இருக்குற காலேஜ் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்திடுங்க?”
“விளையாடாதா கெளரி, நான் போனா என்னை தேடி மாட்டாங்களா?”
“இப்போதைக்கு தேட மாட்டாங்க, அப்புடியே உங்களை கேட்டா, ஏதோ போன் கால் வந்திச்சு பேசிட்டே வெளியே போனாருன்னு, நாங்க சமாளிச்சுக்கிறோம். நீங்க போய் அண்ணாவ பார்த்ததும்,நீங்க வருவுக்கு கால் பண்ணிட்டு அதை அண்ணாக்கிட்ட கொடுத்திடுங்க, மீதிய இவ பேசிக்கட்டும்.
இப்போதைக்கு செய்ய கூடிய வழி இதுதான். இல்லைன்னா இவ அழுதே எல்லாருக்கும் காட்டி கொடுத்திடுவா?” என்றிட கிருஷ்ணா மெல்ல அங்கிருந்து நழுவியிருந்தான்.”
நேராக ஒரு ஆட்டோவினைப் பிடித்து, முகிலனின் கல்லூரிக்கு சென்றவன் அவனை விசாரிக்க,
உள்ளே சேர்மன் சாருடன் மீட்டிங்கில் இருப்பதாக கூற,
ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவரிடம் பேச வேண்டும் மிக முக்கியமான விசயம் என கிட்டத்தட்ட கெஞ்சதா குறையாக கிருஷ்ணா கேட்டிட,
அவனை பார்த்த அந்த அட்டென்டர் என்ன நினைத்தாரே, அவனை காத்திருக்க சொல்லிவிட்டு டீயை கொடுப்பதற்காக உள்ளே சென்றவன் முகிலனின் காதில் மெல்ல விசயத்தை போட்டு விட்டு வர,
‘எல்லாரும் துணிக்கடையில் இருக்க, கிருஷ்ணா எதற்காக வந்துள்ளான். ஏதும் பிரச்சனையா’ என நினைத்தவன் அவனை சந்திக்கும் பொருட்டு,
“எக்ஸ்யூஸ்மி சார், ஷால் ஐ டேக் ஏ ப்ரேக்” என அவர்களின் வாஷ்ரூம் யூஸ் செய்ய வேண்டும் என மறைமுகமாக கேட்டு அனுமதி பெற்று அவன் வெளியேற,
அவன் வருவதை கண்ட கிருஷ்ணா, வேகமாக வருணாவிற்கு அழைத்தவன், முகிலன் வந்ததும்,
“வருணா உங்கக்கிட்ட பேசணுமாம்” என அவனிடம் போனை கொடுத்தவன் சற்று தள்ளி சென்றுவிட,
புரியாத போனை வாங்கி காதில் வைத்த
ன், அடுத்து வருணா பேசிய பேச்சில் அவளது அழுகையில், கோபமுற்றவன்,
மீட்டிங்காவது ஒன்றாவது என அடுத்த பத்து நிமிடங்களில், கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு, அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்திருந்தான்.