எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 12

Privi

Moderator

ருத்ரனும் பூரண குணமாகி, அலுவலகத்திற்கு செல்லவும் ஆரம்பித்து விட்டான். ஒரு நாள் ருத்ரனின் அலுவலகத்திற்கு அவனை சந்திக்க ராஜ் வந்தார்.​

வந்தவர், "உள்ளே வரலாமா?" என கேட்டுக் கொண்டே அவனது அனுமதி இன்றி அவனின் அறைக்குள் நுழைந்தார். அவனும் அவரை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து கொண்டிருந்தானே தவிர, ‘வாங்க’ என அழைக்க வில்லை.​

“ஹ்ம்ம்... இப்போ உள்ள இளசுகளுக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரிவதில்லை.” என கூறி கொண்டே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார்.​

அதற்கு ருத்ரனோ, "அது சரி பெருசுகளுக்கே அனுமதி இன்றி ஒருவரின் அறைக்குள் வர கூடாது, எனும் நாகரிகம் தெரியாத பொழுது இளசுகளுக்கு எங்கனம் மரியாதை தெரிவது?” என நக்கலாக பதில் கொடுத்தான்.​

அவர் வந்ததன் நோக்கத்தை அவரே சொல்லட்டும் என காத்திருந்தான் ருத்ரன். அவரும் சுற்றி வளைக்காமல்,​

"இதோ பார் ருத்ரா நமக்குள் சண்டை வேண்டாம். ஒரு வாடிக்கையாளருக்கு நீ வீடு கட்டும் வேலை செய்தால், அடுத்து வரும் வாடிக்கையாளருக்கு நான் வேலை செய்கிறேன். ஒரே துறையில் இருக்கிறோம் நமக்குள் எதற்கு இந்த போட்டியும், பொறாமையும், வெஞ்சினமும்..” என நல்லவர் போல் பேசினார்.​

அதற்கு ருத்ரனோ,​

"காரியம் ஆகவில்லை என்றவுடன் என்ன அழகா பேசுறீங்க, உங்க வாடிக்கையாளர் உங்களுக்கு. அதே போல் என்னுடைய வாடிக்கையாளர் எனக்கு. நான் யாருடைய வேலையையும் கெடுக்கவில்லை என்னுடைய வேலையை திறன்பட செய்கிறேன்.​

அதனை பார்த்து வாடிக்கையாளர்கள் என்னிடம் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. இப்படி என்னிடம் வந்து நல்லவன் வேஷம் போடுவதற்கு உங்க வேலையில் கொஞ்சம் இல்லை.. இல்லை.. அதிக கவனம் எடுத்து முறையே வாடிக்கையாளர் விருப்பப்படி வீடு கட்டி கொடுங்கள்." என திமிராக அறிவுரை கூறினான்.​

இதனை கேட்ட ராஜின் முகம் சிவந்து போனது. இருக்கையில் இருந்து எழுந்தவர், "என்னடா சின்ன பையன் தானே என்று பார்த்தால் நீ அடங்க மாட்ட போலயே... உன்னை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என பல்லிடுக்கினில் வார்த்தைகளை துப்பினார், வாசலை நோக்கி வெளியே செல்ல திரும்பியவரின் காதுகளில்,​

ருத்ரனின் வார்த்தைகள், "என்ன செய்வீர்கள் போன முறை போல் கொலை முயற்சியா? நூலிழையில் தப்பி விட்டேன் இல்லையா?" என கேட்டானே பார்க்கலாம்,​

மிஸ்டர் ராஜின் முகம் நொடி பொழுதில் குப்பென வியர்த்தது.​

"என்ன உளர்ர? முட்டாள் தனமா எதையும் பேசாதே..” என வெளறி போன முகத்துடன் பதட்டமாக பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார். பின்னே பதட்டம் இருக்காதா? யாருக்கும் தெரியாது என நினைத்த விஷயம் உரியவனுக்கே தெரிந்திருக்கிறது அல்லவா.​

சென்றவரையே ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். பின், உடனடியாக அவன் தனிப்பட்ட உதவியாளர் விமலை அழைத்தான்.​

"விமல் நேற்று நமக்கு மிஸ்டர் கண்ணன் என்பவர் அவரின் புது வீடு கட்டுவதற்கு மேற்கோள் படிவம் ஒன்றை கேட்டுள்ளார் அல்லவா? அவருக்கு நல்ல விலையில் தரமான வீடு ஒன்றை கட்டி தர வேண்டும். இது வரைக்கும் நாம் செய்ததில் இதுவே சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் ஒரு மேற்கோள் படிவம் ஒன்றை தயார் செய்.” என கூறினான்.​

“அந்த வேலை நம்மை விட்டு வேறு யாரிடமும் போக கூடாது முக்கியமாக மிஸ்டர் ராஜ்க்கு போகவே கூடாது.” என அழுத்தி சொன்னான். விமலும் அதற்கான மேற்படி நடவடிக்கைகளை எடுக்க சென்று விட்டான்.​

ருத்ரன் முகமோ கோபத்தில் இருந்தது,​

"அன்றே உன்னை முடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இன்று என் அலுவலக படியேறி வந்திருப்பாயா? எல்லாம் அவளால், அந்த திமிர் பிடித்தவளால் வந்தது.” என இவ்வளவு கோபத்திலும் அவள் நினைப்புகள் அழையா விருந்தாளியாய் அவனுக்கு வந்து சென்றது.​

இரண்டு நாட்களுக்கு பிறகு, விமல் ருத்ரனை தேடி அவன் அலுவல் அறைக்கு வந்திருந்தான்.​

"சார் நான் நேற்று மிஸ்டர் கண்ணனை சென்று சந்தித்தேன். அவருக்கு நம்முடைய மேற்கோள் படிவத்தையும் கொடுத்து விட்டேன். அவர் அதனை பார்த்து நம்முடைய விலைக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்." என கூறினான்.​

ருத்ரனுக்கும் இது மகிழ்ச்சியே. "சரி மேற்படி என்ன செய்ய வேண்டுமோ செய்து வேலையை துவங்குங்கள்." என கூறினான் ருத்ரன்.​

"சார் அது இல்லை என்று எதோ சொல்ல வந்து தயங்கி நின்றான் விமல். அவன் தயக்கத்தை பார்த்த ருத்ரன், "விமல் என்ன விஷயம்? எதுவாக இருந்தாலும் சொல்லு..” என கேட்டான்.​

அதற்கு விமல் "சார் இவருக்கு கைவினை பொருட்கள் மீது அலாதி ஈடுபாடாம். இவர் வீட்டை கைவினை பொருட்களை கொண்டு தான் அலங்கரிக்க போகின்றாராம்.​

அதனால் நாம் தான் அழகான கைவினை பொருட்கள் செய்பவரை தேடி கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு பொருத்தமான பொருட்களை வாங்கி அழகு படுத்தணுமாம்." என்றான்.​

நெற்றியில் கை வைத்து சிறிது நேரம் யோசித்தவன்,​

"விமல் எனக்கு சரியாக தெரியவில்லை அன்று ஒரு நாள் நான் படவரியை (instagram) பார்த்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு கைவினை பொருள் செய்யும் பெண்ணை பார்த்தேன். செய்த கைவினை பொருட்களை படவரி மூலம் விற்று கொண்டிருந்தாள். அவர்களின் கைவினை பொருட்கள் நன்றாக தான் இருந்தது. நீ படவரி மூலம் அவர்களை தேடி, அவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்." என கூறினான்.​

உடனே விமலின் மனக்குரலோ​

"அடேய் படவரில எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? இப்படி கண்ணை கட்டி காட்டுல விட்டது போல் சாதாரணமாக படவரில பார்த்த கைவினை செய்யும் பெண்ணை கண்டு பிடிக்க சொல்றானே. இவனை கொண்டு போய் அமேசான் காட்டில் தொலைத்தால் என்ன?" என்று பொருமினான்.​

விமல் எப்போதுமே வெளியே சத்தமாக பேச முடியாததையெல்லாம் இப்படித்தான் மனக்குமுறலாக மனதிற்குள் பேசிக்கொள்வான்.​

விமல் மும்முரமாக அவனது படவரி மூலம் அந்த கைவினை செய்யும் பெண்ணை தேடிக்கொண்டிருந்தான். பலன் என்னவோ பூஜ்யம் தான்.​

மிஸ்டர் கண்ணனின் வீட்டை கட்ட ஆரம்பித்து விட்டனர். மிஸ்டர் ராஜுக்கு இந்த ஒப்பந்தமும் அவரை விட்டு சென்றதில் மிகுந்த கோபம் . அவனை வீழ்த்த நல்ல சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து கொண்டிருந்தார்.​

வேலைகள் பாதி முடிந்த நிலையில் ஒருநாள் ருத்ரனை, மிஸ்டர் கண்ணன் சந்திக்க சென்றார். இப்போது வரை அவர்கள் வீட்டின் கட்டுமான அமைப்பில் மனம் நிறைவாக உள்ளதாகவும் வீடு முழுமை பெற ஆர்வமாக காத்திருப்பதாகவும் கூறினார்.​

ஆனால் ஒரே ஒரு அதிருப்தி இருப்பதாக தெரிவித்தார், இன்னுமே வீட்டின் அழகிற்காக கைவினை பொருட்களை பற்றி எந்த ஒரு தகவலும் தராமல் இருக்கின்றார்கள் என கூறினார்.​

அதற்கு ருத்ரன், "சார் உங்களுக்காக தரமாகவும், அழகாகவும், நியாயமான விலையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இது போல கைவினை பொருட்கள் செய்து விநியோகம் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு அழகை மட்டும் பார்த்து வாங்க கூடாது.​

நூறு கடை ஏறி இறங்கினாலும் பரவாயில்லை சிறந்ததாக பார்த்து வாங்க வேண்டும். சாமி அறைக்கு, சமையல் அறைக்கு, ஒவ்வொரு படுக்கை அறைக்கும் என்று உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அவர்களின் மனம் திருப்தி அடைவதை போல் கைவினை அழகு பொருட்களை வாங்கி அசத்தி விடலாம்.​

செய்யுமுன் கண்டிப்பாக நான் தேர்வு செய்த எல்லாவற்றையும் உங்களிடம் காட்டுவேன்." என கூறினான்.​

"எப்படி வாடிக்கையாளரை பேசி சரி பண்ணுவது என்று நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் செல்கிறேன்." என கூறி அங்கிருந்து சென்றார்.​

அவர் சென்ற உடன் விமலை அழைத்தவன், "என்ன ஆனது வை ஸ்டில் கேன்னாட் கெட் தி ஹண்ட்க்ராஃப்ட் பிப்பில்?" (why still cannot get the handcraft people?) என்று கேட்டான்.​

அதற்கு விமல், "சார் மிஸ்டர் கண்ணன் வருவதற்கு முன்ன தான் ஒருத்தவங்கள கண்டு பிடிச்சேன். சரி அவர் போனதுக்கு அப்பறம் வந்து சொல்லலாம் என நினைத்தேன்.” என்று சமாளித்து கொண்டிருந்தான்.​

"ப்ஹஹா என்ன சமாளிப்பு, காரணம் சொல்பவன் காரியம் சாதிப்பதில்லை, இந்த இடத்துக்கு வந்துருக்கேன் என்றால் என் வாடிக்கையாளர்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான், அந்த நம்பிக்கைக்கு நானும் உண்மையா இருந்திருக்கேன்.​

அவர்களிடம் சென்று இதுவரை காரணங்கள் சொன்னதில்லை. இனி எனக்கு காரணம் வேண்டாம். சொன்ன வேலை சொன்ன மணிக்கு முடிந்து இருக்கனும்.” என்றான் அதட்டலாக.​

விமலும் “சரி” என கூறி அங்கிருந்து விடை பெற்றான்.​

கொஞ்ச நேரத்தில் ருத்ரன் திறன் பேசிக்கு மிஸ்டர் கண்ணன் அழைத்திருந்தார். "வணக்கம் ருத்ரன்!"​

“வணக்கம் சார்! சொல்லுங்க கொஞ்சம் நேரம் முன் தானே பார்த்துக் கொண்டோம், ஏதாவது முக்கியமான விஷயமா?" என கேட்டான் ருத்ரன்.​

அதற்கு கண்ணன், "ருத்ரன் நான் உங்களுக்கு ஒரு இணைப்பு (link) ஒன்றை பகிரி மூலம் அனுப்புகிறேன் அதனை பாருங்கள்.​

எனக்கு அந்த பெண்ணின் கைவினை பொருட்கள் தான் வேண்டும். உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை, அந்த பெண்ணின் கைவினை பொருட்களில் ஒரு ஆத்மார்த்தமான நிறைவு இருப்பது போல் இருக்கின்றது. அதனால் எனக்கு அந்த பெண்ணின் கைவினை பொருட்கள் தான் வேண்டும்." என கூறினார்.​

"சரி சார். உங்கள் மன திருப்தி தான் எங்களுக்கு வேண்டும். அந்த பெண்ணுடைய கைவினை பொருட்களையே வாங்கிடலாம்.” என ருத்ரனும் கூறியிருந்தான்.​

அடுத்து என்ன பிரச்சனை காத்திருக்கிறதோ?​

 
Top