மறுநாள் அலுவலகத்திற்கு வந்த ருத்ரன் விமலை அழைத்து அந்த கைவினை பொருட்கள் செய்யும் பெண்ணின் தொடர்பை, திரு கண்ணன் கொடுத்த படவரி இணையின் மூலம் அவர்களின் எண்ணை பெற்று அவர்களிடம் எத்தனை விதமான கைவினை பொருட்கள் உள்ளது, அந்த பொருட்களின் படங்கள் என அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொள்ள சொன்னான்.
முடிந்தால் அவர்களின் அலுவலக முகவரியை பெற சொன்னான். பின் அவர்களின் மற்ற இரு வாடிக்கையாளர்களை பற்றியும் சில குறிப்புகளும் தகவல்களும் கொடுத்து விட்டு கட்டுமான தளத்தில் வேலை இருப்பதாக கூறி சென்று விட்டான். விமலும் அவனின் மற்ற வேலைகளில் அந்த கைவினை பொருட்கள் செய்யும் பெண்ணிடம் பேசுவதை பற்றி மறந்தேவிட,
ருத்ரனும் பெரியதாக அதை பற்றி அதற்கு பிறகு அவனிடம் கேட்கவில்லை.
திரு கண்ணன் வீடு முடியும் தருவாய்க்கும் வந்து விட்டது.
வீட்டிற்கு சாயம் தீட்டும் வேலை மட்டுமே மிச்சம் இருந்தது. இதற்கிடையில் திரு கண்ணன் குடும்பத்தினரும் என்ன வடிவில் எப்படிப்பட்ட கைவினை பொருட்கள் வேண்டும் என்று கலந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
சரி ருத்ரனிடம் அவர் தேர்தெடுத்ததை பற்றி கேட்கலாம் என நினைத்து கண்ணன் ருத்ரனுக்கு அழைத்திருந்தார். ருத்ரன் ஒரு மீட்டிங்கில் இருந்ததால் அவனால் அவரது அழைப்பை ஏற்க முடியவில்லை. பின் தனது செயலாளரான விமலிடம் அந்த அழைப்பை மாற்றி இருந்தான்.
அழைப்பை ஏற்ற விமலும் கண்ணன் கேட்ட கேள்வியில் முழி பிதுங்கி நின்றான். ஆம் அவன்தான் இந்த வேலையை மறந்து விட்டானே. இந்த விஷயம் மட்டும் ருத்ரனுக்கு தெரிந்திருந்தால் அவ்வளவுதான் அவன் நிலைமை.
கண்ணனை அழைப்பில் சமாளித்து விட்டு, உடனே கண்ணன் அனுப்பிய படவரி இணைப்பின் மூலம் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று அவர்களின் பொருட்களை பார்வை இட்டான். சொன்னது போலவே அழகாகவும், தனித்துவமாகவும் இருந்தது.
அவர்களின் தொடர்பு எண்ணை பெற்று, அவர்களுக்கு தொடர்பு கொண்டான். அழைப்பை ஏற்றது கயல் தான். அவர்களின் கைவினை பொருட்கள்தான் திரு கண்ணனை ஈர்த்தது.
"வணக்கம் ழிணி ஹேண்ட் க்ராஃப்ட்(Handcraft)"
"வணக்கம் என் பெயர் விமல்"
"வணக்கம் விமல் சார், உங்களுக்கு என்ன கைவினை பொருள் வேண்டும்?"
“சிஸ்டர் நாங்கள் கட்டுமான தொழிலில் உள்ளோம். இப்பொழுது ஒரு வீடு கட்டிக்கொண்டு உள்ளோம். முடியும் தருவாயில் உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு அவர் வீட்டை கைவினை பொருட்களை கொண்டு அலங்கரிக்க வேண்டுமாம். அவர்தான் உங்களை எங்களுக்கு அறிமுக படுத்தி உள்ளார்.
உங்களுடைய படவரி இணையத்தின் மூலம் உங்கள் கலை பொருட்களையும் கைவினை பொருட்களையும் பாத்தேன். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதனை நேரில் பார்த்து தேர்வு செய்தால் இன்னும் திருப்தியாக இருக்கும். உங்கள் வியாபார முகவரி கொடுத்தால் நான் வந்து உங்கள் பொருட்களை நேரிடையாக பார்வையிட்டு தேர்வு செய்வேன்" என அவன் பேச்சை முடித்திருந்தான்.
" சரி சார் எனக்கு ஒரு ஐந்து நிமிடம் கொடுங்கள் நான் உங்களை திரும்பவும் அழைக்கிறேன்" என கூறி அழைப்பை துண்டித்தாள். பின் உமையாளிடம் சென்று விமல் தொடர்பு கொண்டதை பற்றி விவரித்தாள். உமையாளோ "அவர்கள் சொல்வதும் சரிதானே!
ஆனால் வீட்டிற்கு எப்படி அழைப்பது? சரி அவருக்கு முகவரியை குடு, வரும் வாடிக்கையாளரை விட்டு விட வேண்டாம். இப்படியே நம் வியாபாரம் நல்லவிதமாக சென்றால், இன்னும் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் வந்தால், வெளியே கடை ஒன்று பார்த்து வியாபாரத்தை இன்னும் கொஞ்சம் பெரியதாக செய்வோம்” என கூறினாள்.
உடனே கயல் பகிரி மூலம் அவர்களின் முகவரியை அனுப்பினாள். பின் அவருக்கு தொடர்பு கொண்டு
"வணக்கம் சார் நான் பகிரி மூலம் எங்கள் முகவரியை பகிர்ந்துள்ளேன். இது எங்கள் வீட்டின் முகவரிதான். வீட்டில் தான் இந்த கைவினை பொருட்களை செய்து விற்பனை செய்கிறோம்” என கூறினாள்.
அதற்கு விமல் "சரி நான் நண்பகல் ஒன்று முப்பதுக்கு போல் அங்கு வருகிறேன்" என கூறினான். அவளும் சரியென தொடர்பை துண்டித்தாள். பின் இந்த தகவலை உமையாளிடம் கூறினாள்.
உமையாளோ அந்த நேரத்தில் தனக்கு ஒரு வேலை உண்டு அதனால் அவளையே இந்த வாடிக்கையாளரை பார்த்துக்கொள்ள சொன்னாள். மதியம் ஒன்று முப்பதுக்கு விமல் உமையாள் இல்லத்தை தேடி வந்துவிட்டான்.
அவன் வந்த நேரம் உமையாள் சொன்னது போல் வீட்டில் இல்லை. கயல் தான் அவன் கேட்ட கைவினை பொருட்களையும் கலை பொருட்களையும் காட்டிக்கொண்டு இருந்தாள். விமலுக்கு அவர்களின் கைவினை பொருட்கள் மீது தனி ஆர்வம் வந்து விட்டது.
அவர்களில் ஒவ்வொரு கைவினை பொருளும் ஒரு வித தனித்துவம் வாய்ந்ததாய் இருந்தது. அதில் அவனை ஈர்த்தது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி.
கண்ணாடி என்னவோ சின்ன அளவு தான் ஆனால் கண்ணாடியை சுற்றி பிளாஸ்டிக் கரண்டிகளால் ஒரு அழகிய வேலைப்பாடு ஒன்று செய்து அதற்கு தங்க நிற வர்ணம் கொடுத்து, ஒவ்வொரு கரண்டி ஓரத்திலும் வெள்ளிநிறத்தில் பார்டர் லைன் கொடுத்து அதன் பின் பக்கம் கருப்பு அவுட் லைன் கொடுத்து பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.
அதனை யார் பார்த்தாலும் கண்டிப்பாக அவர்களை ஈர்த்துவிடும். அது மட்டும் அல்லது சுவர் கடிகாரம், மலர் குவளை, அரச இலை பிள்ளையார், கோன் சாம்பிராணி வைப்பதுற்கு வித விதமான ஸ்டாண்ட் என கண்ணை கவரும் வண்ணன் எல்லாமே அழகாகவும் தனித்துவமாகவும் இருந்தது.
அதில் அவனுக்கு தேவையானதை அது எத்தனை வேண்டும் என்றும் தேர்வு செய்து கூறினான். ஒரு வார கால அவகாசத்தில் அவன் பட்டியலிட்ட கைவினை பொருட்கள் அவனுக்கு வேண்டும் என கூறி ஆர்டர் கொடுத்து விட்டு சென்று விட்டான்.
அவன் செல்வதற்கும் உமையாள் வீட்டிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது. வந்தவள் நேரே அலுவலக அறைக்கு சென்றாள்.
"எங்கே வாடிக்கையாளர் ஒருவர் வருவதாக கூறினார், வந்து விட்டாரா?"
அதற்கு கயல் "வந்து ஆர்டர் கொடுத்து விட்டார் அண்ணி, ஏழு நாட்கள் கெடுவில் ஆர்டர் கொடுத்துள்ளார் என கூறினாள்.
பட்டியலை பார்த்த உமையாளோ "நல்ல தேர்வு ஆனால் கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஆர்டரை முடித்து கொடுக்க வேண்டும் அவ்வளவே" என கூறி சென்றாள், இப்படியே நாட்கள் கடந்து அவர்கள் ஆர்டர் குடுத்து ஐந்து நாட்கள் கடந்து இருந்தது.
திரு கண்ணன் ருத்ரனுக்கு அழைத்திருந்தார்.
"வணக்கம் கண்ணன்"
"வணக்கம் ருத்ரன் வேலையெல்லாம் எப்படி போகுது? நானும் வீட்டை சென்று பார்த்து ஒரு வாரம் கடந்து விட்டது, கொஞ்சம் வேலை பளு, இப்போது எந்த நிலையில் உள்ளது வீடு? கைவினை பொருட்களை எல்லாம் ஏற்பாடு செய்து விட்டீர்களா? கைவினை பொருட்களின் டிசைன் பார்த்துட்டேன் என்றால் கொஞ்சம் திருப்தியாக இருக்கும்" என கேட்டார்.
அதற்கு ருத்ரன் " வீடு முதல் மாடியில் வர்ணம் தீட்டி முடித்து விட்டது இன்னும் கீழே மட்டும்தான். ஒரு வாரத்தில் வீடு முழுமையாக முடிவடைந்து விடும். வீட்டிற்கு தேவையான கைவினை மற்றும் கலை பொருட்களை ஆர்டர் செய்து விட்டோம். அதன் புகை படம் என்னுடைய தனி உதவியாளரிடம் உள்ளது. அவரிடம் கூறி பகிரி மூலம் அதனை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்"
"அந்த பொருட்கள் எல்லாம் எப்போது நமக்கு விநியோகம் (Delivery) செய்வார்கள்?"
கண்ணன் இந்த கேள்வியை கேட்ட பின் தான் அன்று விமல் ஒரு திகதி சொன்னானே என யோசித்தான் ருத்ரன். சிந்தனையில் மூழ்கி அவனுக்கு நினைவு வந்ததோ இன்றைய திகதிதான்.
கண்ணனிடம் இன்று என்று கூறாமல் நாளை என்று கூறி அவருடைய இன்னும் சில கேள்விகளுக்கு பதில் அளித்து தொடர்பை துண்டித்தான். இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் அந்த கைவினை பொருட்கள் செய்பவர்களிடம் இருந்து வரவில்லையே அப்படியே வந்திருந்தால் கண்டிப்பாக தன்னிடம் பகிர்ந்திருப்பான் என அவனுக்கு தெரியும்.
இன்று விமல் விடுமுறை. அதனால் கைவினை செய்யும் இடத்திற்கு அவனே செல்ல முடிவெடுத்தான். அவன் நல்ல நேரத்திற்கு அவன் அங்கு சென்ற பொது கயல் மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.
" டிங் டோங்..... டிங் டோங்.... டிங் டோங்…” என மூன்று முறை கதவின் அழைப்பு மணியோசை கேட்டது. வேலை செய்யும் இடத்திலிருந்து கயல் கதவை திறக்க ஓடினாள். கதவின் முன் நின்றது என்னவோ ருத்ரன் தான்.
"சார் நீங்கள்?"
"வணக்கம் நான் ருத்ரன்! இது ழிணி ஹேண்ட் கிராப்ட் தானே" என கேட்டான் ருத்ரன்.
"ஆமாம் சார். என்ன விஷயமா இங்கு வந்துள்ளீர்கள்? நாங்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே எங்கள் பொருட்களை விற்பனை செய்கிறோம். எதுவாக இருந்தாலும் நீங்கள் படவரி மூலம் அல்லது டிக் டொக் மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்" என கண்ணியமான முறையில் கூறினாள்.
அதற்கு ருத்ரன் "மிஸ் நான் ஆர் கண்ஸ்டருக்ஷனிலிருந்து வந்துள்ளேன். மிஸ்டர் விமல் ஆர்டர் கொடுத்த கைவினை பொருட்கள்?" என இழுத்தான். உடனே கயலுக்கு ஞாபகம் வந்து விட்டது.
"அன்று வந்தவர்..." என்று இழுத்தாள்.
உடனே ருத்ரனோ "அவர் வரவில்லை இன்று நான் தான் வந்துள்ளேன். உள்ளே வரலாமா" என கேட்டார். ஒரு நிமிடம் யோசனை செய்தபின் உள்ளே அனுமதித்தாள் கயல். உள்ளே வந்தவன்
"ஆர்டர் எல்லாம் தயாரா பார்வை இடலாமா?" என கேட்டான்.
"சார் இன்னும் கொஞ்சம் வேலைதான் உள்ளது சொன்னது போல் இன்னும் இரண்டு நாட்களில் உங்களுக்கு டெலிவரி செய்திடுவோம் என கூறினாள் கயல்.
"வாட் இன்னும் இரண்டு நாளா? என்ன விளையாடுறீங்களா? இல்லை என்னை பார்க்க கிறுக்கன் மாதிரி இருக்க?" என கத்த ஆரம்பித்து விட்டான்.
கயலுக்கு ஒன்றுமே புரிய வில்லை. " "சார் எனக்கு நீங்க கூற வருவது புரியவில்லை. உங்களுடன் நான் ஏன் சார் விளையாட வேண்டும்?" என அவனிடம் சொல்லி மனதிற்குள் பார்க்க கொஞ்சம் கிறுக்கன் மாதிரிதான் இருக்கு என நினைத்து கொண்டாள்.
"மேடம் நீங்கதானே நான் குடுத்த ஆர்டர்களை இன்று டெலிவரி பண்ணுவதாக சொன்னிர்கள்"
"சார் நீங்க தவறுதலாய் புரிந்து வைத்துள்ளீர்கள், டெலிவரிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளது அன்று வந்தவரிடம் இதனை கூறி விட்டோமே" என கூறினாள் கயல்.
"அதே அவர் தான் என்னிடம் இன்று டெலிவரி திகதி என கூறினார். உங்க இஷ்டத்துக்கு உங்க வசதிக்கும் எங்களால் ஆட முடியாது. சொன்ன திகதிக்கு சொன்ன நேரத்திற்கு டெலிவரி நடந்தே ஆகணும்" என கூச்சலிட்டு கொண்டிருந்தான்.
கயலுக்கோ ஐயோ என இருந்தது.
"சார் நீங்க ஒரு முறை அன்று வந்தவருக்கு தொடர்பு கொண்டு கெள்ளுங்கள். நாங்கள் என்ன திகதி கூறினோம் என்று" என மன்றாடி கேட்டாள். அவளை முறைத்து விட்டு விமலுக்கு தொடர்பு கொண்டான்.
பொதுவாக விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்ய ருத்ரன் விரும்ப மாட்டான். இப்போது வேறு வழியும் இல்லை. அழைப்பு போய்க்கொண்டே இருந்தது விமல் எடுத்தபாடில்லை
அவன் அழைப்பை ஏற்காதது ருத்ரனுக்கு இன்னும் கோபத்தை அதிகரித்தது, அந்த கோபம் திரும்பியது என்னவோ கயல் மீது தான்.
"இதோ பாருங்க மிஸ் அவர் இன்று விடுமுறை. பொதுவாக விடுமுறையில் இருக்கும் என் ஊழியரை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் இருக்காது. அவனும் அழைப்பை ஏர்க்கவில்லை. ஆனால் இப்பொழுது அது பிரச்சனை இல்லை சொன்ன திகதியில் உங்களால் பொருட்களை தயார் செய்ய முடிய வில்லை. நீங்கள் எல்லாம் எதற்கு வியாபாரம் செய்கிறீர்கள்?" என அவன் விருப்பத்துக்கு பேசிக்கொண்டே சென்றான்.
கயலுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ரசீது சீட்டு நோட்டை உமையாள் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய சென்றபோது எடுத்து சென்று விட்டாள் உமையாள். இல்லையேல் அந்த ரசீது சீட்டை ருத்ரனிடம் காண்பித்திருப்பாள் கயல்.
அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
"சார் ஓர் நிமிடம் இருங்க என்னுடைய முதலாளியை அழைக்கிறேன்" என கூறி அவளின் திறன் பேசி மூலம் உமையாளுக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்ற உமையாளோ என்ன விஷயம் என கேட்க நடந்த கலவரத்தை கயல் விவரித்தாள்.
"அக்கா அந்த ஆள் ரொம்ப பேசுறார். தாங்கவே முடியவில்லை”
"என்ன விளையாடுறாரா? நாம் தான் அன்னைக்கே ஏழு நாட்கள் ஆகும் என்பதை கூறி விட்டோமே. இன்னமும் என்ன பிரச்சனை?"
"அக்கா அன்று வந்தவர் அல்ல இவர் வேறு ஒருவர்”
"கடவுளே இவர்கள் மாறி மாறி வந்து நம் உயிரை தான் எடுப்பார்கள். சரி அவரை ஒரு பத்து நிமிடம் காத்திருக்க சொல்லு, நான் வருகிறேன்" என கூறி தொடர்பை துண்டித்தாள் உமையாள்.
இரண்டாவது சந்திப்பும் மோதலில்...