எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

3 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator
அத்தியாயம் 3

பௌர்ணமிக்கு செய்தியை அனுப்பும் வரை அண்டாத தூக்கம். அவளுக்கு அனுப்பியதும் அவள் அதைப் பார்த்து விட்டதும் தெரிந்த நொடி வந்து தொற்றிக் கொண்டது. மகள் அருகில் சென்று கவிழ்ந்து படுத்த குஹன் அடுத்த நிமிடங்களில் நித்திரையில் ஆழ்ந்தும் விட்டான் .

அங்கு பௌர்ணமி, அமர்ந்தது அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தாள். அவனிடம் அவள் எதிர்பார்த்தது கோவத்தை தான். எதையும் நிதானித்து யோசித்து பின் கண்டிப்பவன் இல்லை அவள் கணவன்.

"என்ன மண்ட கிறுக்கா உனக்கு?" என அவன் எப்போதோ அவளை அழைத்துக் கேட்டிருக்க வேண்டும். அந்த அழைப்பிற்கு தான் அன்று முழுவதும் காத்திருந்து, காத்திருந்து ஓய்ந்திருந்தாள்.

"சொந்த லைஃப் பத்தின ட்வீட். அது பண்ணத கூட சீரியஸா எடுக்காதளவுக்கு நா யூஸ்லெஸ்ஸா அவருக்கு?" என மனம் அவனுக்கு எதிராக தூபம் போட்டது.

இந்த பதினொரு வருட வாழ்வில் அவள் அவனைப் புரிந்து வைத்திருப்பது, குஹனுக்கு இவளிடம் எதிலும் எல்லை கிடையாது. அவன் சொன்னால் அதை அவள் கண்ணை மூடிக்கொண்டு செய்வாள் என்ற எண்ணம். அவன் பேசுவதை எல்லாம் இவள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், ஆனால் அவனோ, அவனுக்கு விருப்பமிருந்தால் கேட்பான் இல்லையென்றால் அவன் வேலை முக்கியம் என எழுந்துச் சென்று விடுவான், பிறகு அவனுக்குப் பின்னால் இருக்கும் குடும்பத்தையும் குழந்தைகளையும் அவள்‌‌ தான் அவனுக்கு ஞாபகத்தில் கொண்டு நிறுத்தவேண்டும்.

அவள் மட்டும் அவள் வேலையையும் பார்த்து, குழந்தைகளையும் பார்த்து, வீட்டையும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதிலெல்லாம் அவளுக்கு கஷ்டமும் இல்லை, தாராளமாகப் பார்த்துக் கொள்வாள். ஆனால் வெறுமையாக உணரும் மனதை அவன் தானே அருகிலிருந்து மலர வைக்க வேண்டும். அவனால் மட்டுந்தானே அது முடியும். அதை செய்ய அவன் மறுக்கும் பட்சத்தில் அவளாலும் அவன் இல்லாமல் இருக்க முடியும் என காட்ட வேண்டிய வெறி வந்து நின்றது. அதுவே விவாகரத்துக்கான முதல் அடி.

செய்தியை அறிந்ததற்குக் கண்டிப்பாக இந்நேரம் அவளை அவன் கடித்துக் குதறியிருக்க வேண்டும். அவன் குணத்திற்கு சட்டென்று எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். நேரில் வரச் சொல்வதும் அதற்காகத்தான் இருக்கும் என புரிந்தது. ஆனால் ஏதோ அதில் குறைவதாகப் பட்டது. அது அவனிடம் பேசிவிட்டால் கண்டு கொள்வாள், ஆனால் தானாக அழைக்கவும் மனம் ஒத்துழைப்புத் தர மறுத்தது.

ஈகோ என வந்து விட்டால் இருவரும் அதில் ஒருவரையொருவர் சலித்தவர்கள் இல்லை. என்ன நினைப்பில் இருக்கிறான் எனக் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தான் அவனை புரியவில்லையா, இல்லை அவன் தான் புரியவிடாத தூரத்திலேயே நிற்கிறானா, என இனிதான் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் போலும்.

"அவங்களா எப்பதான் கூப்பிடுறாங்கன்னு பாக்கணும்" என சிடுசிடுத்தாள்.

திரும்பி மகனைப் பார்த்தவள், மீண்டும் அவன் வாட்ஸ்அப் செய்தியைப் பார்த்து விட்டு மேலே ஸ்கோரோல் செய்து பார்த்தாள்.

"வீட்ல பாப்பாவ ட்ராப் பண்ணிடு, கிருத்திக் ஸ்கூல்ல இன்னைக்கு பேரென்ட்ஸ் மீட்டிங் டைமுக்கு வந்திடுங்க. பாப்பாக்கு ஃபீவர் இன்னும் குறையல. மகிமாக்கா(குஹனின் மூத்த அக்கா) வீட்டு ஃபங்ஷன் போயிட்டு வந்திடு, ஷுட்டிங் எக்ஸ்டென்ட் ஆகிடுச்சு ஒன் வீக் டிலே, ரவிஷங்கர் சார் கால் அட்டென்ட் பண்ணாத நா இப்ப கமிட்மென்ட் குடுக்க முடியாது, அமௌண்ட் க்ரிடிட் ஆகிருக்கான்னு செக் பண்ணி சொல்லு, கிருத்தி இன்னும் சாப்பிடல, நா லண்டன் கிளம்பிட்டேன். டைம் ஆகிடுச்சு வந்ததும் பார்த்துக்கோ" என இதுபோன்ற செய்திகள் தான் மேலே செல்ல செல்ல இவளிடம் இருந்து அவனுக்கும் அவனிடமிருந்து இவளுக்கும் பகிரப்பட்டிருந்தது.

அதெல்லாம் கூட அவன் இவளுக்கு அழைத்தபொழுதோ, இல்லை இவள் அவனுக்கு அழைத்த பொழுதோ அழைப்பு எடுக்கப்படாமல் போனால் அந்நேரத்தில் மறந்து விடக்கூடாது என்பதற்காக அனுப்பி வைத்துவிட்டு அடுத்து அவரவர் வேலையைப் பார்க்க சென்றிருப்பர். இருவருக்கும் அதைத் தாண்டி அவர்களைப் பற்றிப் பேச பகிர என விஷயங்கள் இல்லாமல் தான் போய்விட்டது. இப்போது அவளது பிரச்சினையும் வேறாக தான் முளைத்திருந்தது.

ஒரு நெடு மூச்சை எடுத்துக் கொண்டு கைப்பேசியை ஓரமாக வைத்தவள், தலையணையில் தலையைச் சாய்த்தாள். பிரச்சினைக்கு காரணமானவனும் அதைத் தீர்க்க வேண்டியவனும் அங்கு தூங்கிவிட்டான், பிரச்சினையை ஆரம்பித்து வைத்துவிட்டவளால் தான் தூக்கத்தை எட்டிப் பிடிக்க முடியாது போனது.

'அவனில்லாமல் வாழ முடியுமா?' என்ற கேள்விக்கு பதிலே அவள் யோசிக்கவில்லை. ஆனால் வேண்டாம் என என்ன தைரியத்தில் முடிவிற்கு வந்தாள் என்பதும் புரியாத புதிர் தான்.

இருவருக்கும் சேலம் தான் சொந்த ஊர். இருவரின் தந்தையும் அரசாங்க மருத்துவமனை சார்ந்த அலுவலகத்தில் வேலையில் இருக்க, இரண்டு குடும்பங்களும் அதன் குவாட்டர்ஸில் தங்கி இருந்தது. அப்படி பழக்கமானவர்கள்‌ தான் குஹனும், பௌர்ணமியும்.

இருவரும் சந்திக்கும் பொழுது, இவளுக்கு இரண்டு வயது அவனுக்கு ஆறு வயது. எதிர் எதிராக குடி வந்துவிட்டதால் விளையாடத் துவங்கியிருக்க, பின் பள்ளியிலும் தெரிந்தவன் என குஹன் தான் நெருங்கிய தோழன். சிலநேரம் குஹனாகவும், சில நேரம் குஹன் அண்ணாவாகவும், பல நேரங்களில் போடா மயிராண்டி'யாகவும் இருந்திருக்கிறான்.

நண்பர்களாக இருந்தவர்கள் நட்பில், குஹனின் அப்பாவிற்கு வந்த மாற்றலால் விரிசல் விழுந்தது. இருவரும் அதை முதலில் ஏற்க சிரமப்பட்டாலும், பிறகு பழகிக் கொண்டு அவரவர் படிப்பில் ஆழ்ந்துவிட்டனர். குறுகிய மூன்று வருட பிரிவு அது.

குஹனின் அப்பா இன்சூரன்ஸ் கோரிக்கை செய்ய சில ஆவணங்களை வாங்க வேண்டி மீண்டும் அதே மருத்துவமனைக்கு செல்ல வேண்டி சேலம் வர, கூடவே வந்திருந்தான் பதினொன்று முடித்து விடுமுறையில் இருந்த குஹன்.

அவன் அப்பா மருத்துவமனை வேலையைப் பார்க்க சென்றுவிட, இவனும் பழைய நண்பர்களைத் தேடிக் கொண்டு குவாட்ரஸ் வந்தவன். முதலில் சென்றது அவனது சிமியைத் தேடித்தான்.

பத்து வயதில் பார்த்தவளுக்கும் இன்று பதிமூன்று வயதில் பார்ப்பவளுக்கும் அதிக வித்தியாசம் கண்டான் குஹன். குட்டிக் குட்டி பருக்களுடன், க்ராப் முடியில் டீ ஷர்ட்டும் ஷார்ட்ஸுமாக அவள் தம்பியோடு வேர்க்க வேர்க்க டென்னிஸ் விளையாண்டுக் கொண்டிருந்தவளைக் கண்டு புருவம் உயர்த்தி அப்படியே நின்றுவிட்டான்.

அன்று விழுந்தவன் தான் இன்றும் எழவில்லை. அதன்பின் கேமராவிலும், நேரிலும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என இயக்குனராக பல கோணங்களில் பெண்களைப் பார்த்துவிட்டான். ஆனால் அன்று அவளிருந்த எழில் உருவம் எதனையும் அவனுக்கு ஈடாக்கவில்லை.

பதினேழு வயது இளைஞனான அவன் கண்களுக்கு அவள்‌ சிறு பெண்ணாகவும் தெரியவில்லை.

''வாவ்! ப்ரிட்டி!" என்பது தான் அவன் மனநிலை. சைட்டடித்தான், பின் நேரில் சென்று பேசினான், "டால் மாதிரி க்யூட்டாகிட்ட சிமி. எப்படி? அதும் டீஷர்ட்ல சும்மா அள்ளுற போ!" என அவளிடமே கேட்டு, விவரம் அறியாதவளை வாயடைத்து திருதிருக்க செய்தான். அதன்பின் 'அண்ணா' என அழைக்கவிட்டதும் இல்லை. மூன்று வருட இடைவெளி அவனை மரியாதையாக தான் அழைக்க வைத்திருந்தது.

இப்போதும் அந்நாளை நினைத்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது, "சப்புன்னு அறையாம சிரிச்சுட்டு நின்னு, முழிச்சேனே நானும். அதான் இப்ப‌வர யூஸ் பண்றாங்க போல" என தலையில் தட்டிக் கொண்டாள்.

அந்த நல்ல மனநிலையைக் கலைக்க விரும்பாமல் அப்படியே கண்ணயர்ந்தாள். மறுநாள் அவன் அங்கு அவளை வரவேண்டும் என்றதை பெரிதும் படுத்தவில்லை.

காலையில் அம்மா, மகன் இருவரும் எழுந்து கொள்ள மணி பத்து தாண்டி இருந்தது. முதல் நாள் அலுப்பில் கிருத்தியும் நன்கு தூங்கி எழுந்தான்.

சற்று நேரத்தில் வெளியே அவள் மாமியார் குரல் ஏகத்திற்கும் கேட்க, துள்ளிக் கொண்டு நின்ற மகனை முதலில் கிளப்பி வெளியே அனுப்பி விட்டு தாமதமாகவே இவள் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அவன் வெளியே சென்றதும், "என் கண்ணு! எப்படி இருக்க? பிள்ளைக்கு பரீட்சை லீவாமா? எம்புட்டு நாளு?" என அவர் கிருத்தியைக் கொஞ்சுவதும் கேட்டது.

"ஆமா அப்பத்தா. ஒரு மாச லீவு"

"எங்கூட வாரியா? லீவுக்கு தானே வர முடியும் உனக்கு"

"வரேன் அப்பத்தா‍. வினேஷ், மதுலாம் பாக்க வரேன்னு அவங்கட்டயும் சொல்லிருக்கேன்" என்றான் பெரிய மனிதனாக. வினேஷ், மதுமிதா இருவரும் குஹனின் அக்கா, அண்ணன் பிள்ளைகள்.

"அப்பத்தா உன்ன கூட்டிட்டு தான்யா போவேன். இனி அப்பத்தா கூடவே இரு நீயி" என அவர் பேசுவதை, உள்ளிருந்து பௌர்ணமி கேட்டபடி வர, அவள் அம்மா, நிலன், கௌதமி, மாமனார் விஸ்வநாதர் என அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்துக் கேட்டிருந்தனர்.

"வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள். சாப்டீங்களா?" என்றாள் நேராக அவர்கள் முன் வந்து நின்று.

"சாப்ட்டு தான்மா வந்தோம். நேத்து ஏன்மா ஃபோனே எடுக்காம இருந்துட்ட? என்னன்னு பயந்துட்டோம்ல எல்லாரும்? ஒருவார்த்தை எடுத்து இங்கன தான் வாரோம்னு சொல்லிட்டு வச்சுருக்கலாம்ல?" என்றார் விஸ்வம்.

"ஒன் வீக் அம்மா வீட்ல ஸ்டே பண்ணலாம்னு கிளம்புனேன் அங்கிள், சோ வேலைலாம் முடிச்சுட்டு கிளம்பணுமேன்னு கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். யார் ஃபோனையும் அட்டன் பண்ண முடியல" என்றாள் சாதாரணமாக.

"அம்மா சர்ப்ரைஸா வரலாம்னு வந்தாங்க தாத்தா. இங்க அம்மாச்சிட்ட சொன்னா உங்கட்ட சொல்லிடுவாங்க, உங்கட்ட சொன்னா நீங்க அம்மாச்சிட்ட சொல்லிடுவீங்க, அப்றம் மிதிலாக்கும் மாமாக்கும் சர்ப்ரைஸ் இல்லாம போயிடும்ல அதான் சொல்லல. அதே மாதிரி நாங்க அங்க வினேஷ் பாக்க வர்றப்போவும் சர்ப்ரைஸா தான் வருவோம். நீங்க சொல்லிக் குடுத்திட கூடாது ஓகேவா? ரைட் தானே ம்மா?" என எல்லோருக்கும் சொல்லி பௌர்ணமியிடம் நிறுத்த, சிரித்து தலையை அசைத்தாள் அவள்.

"நேத்து நாம வரும் போது மாமா சர்ப்ரைஸ் ஆனாங்களா? நா தூக்கிட்டேனா? நீங்க எழுப்பி விட்ருக்கலாம்லம்மா" என்றான் இவளிடமும் திரும்பி.

"தூக்கம் டிஸ்டர்ப் ஆனா உனக்கு வாமிட் வரும்ல கிருத்தி அதான் நா எழுப்பல. பட் மாமா அம்மாச்சி ரொம்ப சர்ப்ரைஸ் ஆனாங்க. நீயே கேளேன். அண்ட் பாத்தியா உன்னோட அப்பத்தாவும் அப்பா தாத்தாவும்‌ கூட அந்த சர்ப்ரைஸ்ல தான் வந்து நிக்றாங்க" என்றாள்‌ அவன்‌ தலையைக் கோதிவிட்டு.

"ஆமாவா மாமா?" என்றான் நிலனிடம்.

"ம்ம் நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்டா" என்றான் அவன் நக்கலாக.

"சரி பேசிட்ருங்க. நானும் கிருத்தியும் சாப்பிட்டு வந்துடுறோம்" என்றவள் கிருத்தியையும் தோளோடு அணைத்து நடக்க,

"ம்மா நோ. எனக்கு இன்னும் பசி வரல. மாமா மிதிலா எங்க? அவ சாப்டாளா?" என்றான் நிலனிடம்.

"அவ அஞ்சு மணிக்கே எழுந்துட்டாடா இவ்வளவு நேரமு முழிச்சு இருந்துட்டு இப்பத்தான் தூங்குறா. பனிரெண்டு மணிக்கு எழுந்துக்குவா அப்றம் விளையாடுங்க ரெண்டு பேரும்" என நிலன் சொல்லவும், அவன் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ள,

"சாப்பிட்டு ஆச்சி தாத்தா கூட கொஞ்சம் நேரம் விளையாடு. டக்குன்னு டைம் போயிடும் மிதிலா எழுந்து வந்துருவா" என கையோடு அவனை அழைத்துச் சென்று விட்டாள்.

விசாலாட்சி பார்வை மொத்தமும் அவள்‌மீது தான். அதுவரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவர், அவள் தலை தெரிந்த பின் முறைப்பு மட்டுமே என இருந்தார். அவரைத் திரும்பிப் பார்த்த நிலனுக்கு சிரிப்பாக கூட இருந்தது.

அவன் தான் காலையில் அழைத்து, அவன் அக்கா சேலம் வந்திருப்பதாக கூறியிருந்தான். அவர்கள் தற்போதைய இருப்பிடம் கோயம்புத்தூர் தான் என்பதால், அவன் ஏழு மணிக்கு சொல்லியிருக்க பத்து மணிக்கு நேரில் வந்து நின்றுவிட்டனர்.

வரும் வழியில் கூட அவனிடம் அந்தப் பேச்சுப் பேசியிருந்தார். வந்தும் அவன் அம்மாவை, "பொம்பள பிள்ளைய அடிச்சு வளத்திருக்க வேணாமா? நா அப்பவே சொன்னேன்ல, ரெண்டு வயசுல தம்மாதுண்டு அரிசி பல்ல வச்சுட்டு அந்த கடி கடிப்பா, பட்டுன்னு ஒன்னு வாயில வைங்கன்னு. கேட்டீங்களா? கேட்ருந்தா, இன்னைக்கு அவளும் நம்ம பேச்ச கேட்ருப்பாள்ல? இப்படி தான் தான்தோன்றியா‌ இருப்பாளா? நேத்து நடுசாமத்துல வந்தவள என்னமாச்சு திட்னீங்களா இல்லையா? மடில வச்சு கொஞ்சிட்டு தான் இருந்துருப்பீங்க. ஆமா எதுக்கு அப்படி ஒரு வேலைய பாத்து வச்சாளாம்? மாமியாருக்கு தான் மரியாதை இல்லைனா, இவரு அத்தன ஃபோன் போட்டும் எடுக்காம இருந்தா என்ன அர்த்தம். எங்களலாம் மதிக்கக் கூடாதுன்னு எல்லாம் செய்றாளா?" என மூச்சு விடாமல் பேசியவருக்கு, அவன் அக்காவை பார்த்த‌பின் பேச்சு மறந்து விட்டிருந்தது போலும்.

"என்னத்தே மருமகள பார்த்ததும், இனி பேச்சே கிடையாது ஒரே வீச்சு தான்ற மாதிரி உட்கார்ந்துருக்கீங்க. கேட்க வேண்டியது தான? என்னம்மா நினைச்சுட்டு இருக்கன்னு?" என அவரை நக்கலாக கேட்க.

"நையாண்டியா பண்ணுத? தொலைச்சுபோடுவேன். எனக்கென்ன அவள‌ பாத்து பயமா?" என அவர் கேட்டதும் அவன் பல்வரிசை தெரியவே சிரித்தான்.

"சும்மா இரு நிலவா" என்றார் காந்திமதி.

"ம்ச் ம்மா நா சும்மா தானே இருக்கேன். உன்ட்ட இவ்வளவு நேரமு என்ன வாங்கு வாங்குனாங்க, இப்ப அவங்க மருமகளே வந்தாச்சு. இவங்க கேட்டா அத்தனைக்கும் பதில் கிடைக்கும் நாமளும் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்கவே சொல்லுதேன்" என்றான் உண்மைபோலவே.
 

priya pandees

Moderator
"ம்க்கும்! எனக்கு வாய்ச்ச அடிமை உன் அம்மா தான்டா. உன் அக்கா நா கேட்டதும் கிளுக்குன்னு பதில் சொல்லிட்டுதாம் மறுவேலை பார்ப்பா. போவியா. எல்லாம் உன் அக்காள கட்டிருக்கான் பாரு உன் மாமேன், அவனுக்காக தான் பேசாம இருக்கேனாக்கும். நாளைக்கு வந்து என்னைய என்ன தெரியுமா‌ கேட்பான்? 'அவ என்னைய‌ தான விவாகரத்து பண்ணுதேம்னு சொன்னா உன்னையவா சொன்னா நீ ஏன் அவகிட்ட சண்டைக்கு போன'ன்னு கேட்டு எகிறிகிட்டு நிப்பான்டா. அவன கட்டி மேய்க்கான்ற ஒரே காரணத்துக்காக தான் உன் அதிகபிரசங்கி அக்காகிட்ட நா அமைதியா போறேன். இப்ப என்னன்னா அவனையும் அவுத்துவிட பாக்றா? திருப்பி இழுத்துப் பிடிக்க முடியுமா அவன? அதை யோசிச்சாளா இவ?" என்றார் உள்ளே அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்து முறைப்புடன்.

"மாமா மேல எம்புட்டு நல்ல அபிப்பிராயம் உங்களுக்கு"

"பின்ன? பெத்து வளர்த்தவளுக்கு தான தெரியும் அம்புட்டு வவுசியும். உன்ன பத்தி உங்கம்மாட்ட வேணா‌ நீயே கேளேன்"

"அதுசரி. எங்கம்மா ஒரு அம்மாஞ்சின்னு‌ தான நேத்தைல இருந்து அந்த வாங்கு வாங்கிட்ருக்கீங்க"

"வேற யார்ட்ட இறக்கி வைக்க சொல்லுற?"

"மாமாட்ட, அதாவது என் அக்கா புருஷர்ட்ட பேச வேண்டியது தான?"

"உன் ஃபோன எடுத்தானா அவன்?"

"இல்ல!"

"அதேதான் இங்கேயும்" என்றார் வெடுக்கென்று.

"அளந்து தான் பேசுவ நீ. உன் ஃபோனையே எடுக்கலனா. எங்க வீட்டுல எல்லாருக்கும் வாய் நீளம் அது நல்லா தெரிஞ்சவன் அவன். ஃபோன எப்படி எடுப்பான்?" என்றார் விஸ்வநாதர்.

"இப்ப தெரியுதா யாரு யார அடிச்சு வளத்துருக்கணும்னு?" என்றான் நிலன் மீண்டும் விசாலாட்சியை வம்பிழுத்து. அவனுக்குத் தெரியும், அவரின் செல்ல மகன் குஹன், அவனை அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மற்றவர்கள் சொல்ல பொறுக்க மாட்டார். உடன் பிறப்புகளையே அவனை எதுவும் பேசவிட மறுப்பவர், இன்று ஊரே பேசுமாறு வைத்துவிட்ட பௌர்ணமியை சும்மா வேடிக்கைப் பார்க்கக் காரணமும் அவர் மகன் மட்டும் தான் என்று.

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் மனதிற்குள் ஒரு பயப்பந்து இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு தான் இருந்தது. நேற்றைக்கு இருந்த பதட்டம், இன்று பௌர்ணமியை நேரில் கண்டபின் கொஞ்சம் குறைந்திருந்தது தான் இந்த சரளமான பேச்சிற்கு முக்கிய காரணமும்.

சாப்பிட்டு முடித்து வந்தவள், "எப்படி இருக்கீங்க அண்ணி. செக்கப்லாம் போறீங்களா?" என்றாள் மாசமாக இருக்கும் கௌதமியிடம்.

"ம்ம் போறேன். பாப்பா நல்லாருக்குன்னு சொன்னாங்க"

"சாரி நைட் ரொம்ப டயர்ட் அதான் எதுவும் கேட்டு நிக்கல"

"அச்சோ பரவால்ல அண்ணி" என்றாள் இவளும் மெதுவாக.

"உனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி. நாத்தனாராவது உன் அக்கா கொமட்டுல இடிக்குற மாதிரி அமைஞ்சுருக்க வேணாம்? எங்கிருந்து தான் தேடி‌த்தேடி உன் அம்மாவ மாதிரி பிள்ளைய புடிச்சு கட்னியோ?" என நிலன் காதில் புகைந்தார் விசாலாட்சி.

"அதெல்லாம் மாமியாருங்க குணத்துக்கு தக்கன கடவுள் தானா அமைச்சு தர்றது அத்த"

அவர்கள் இருவரும் பேச்சில் இருப்பதை அறிந்தாலும் நிதானமாக திரும்பி மாமனாரைப் பார்த்தவாறு எதிரில் மூவர் இருக்கையில் அமர்ந்தாள்.

"சொல்லுங்க அங்கிள். நேத்து கால் பண்ணேன்னு சொன்னீங்களே? எதுவும் முக்கியமான விஷயமா?" என்றும் கேட்க,

"ஏட்டி என்ன எகத்தாளமா பண்ணுத? யாரக் கேட்டு என் புள்ளைய விவாகரத்து பண்ண முடிவெடுத்த நீ?" என்றார் விசாலாட்சி பொறுமை போக.

"உங்க யார்ட்டையாவது கேட்டா சரின்னு சொல்லிருப்பீங்களா?"

"சரின்னு வேற சொல்லணுமோ உனக்கு? நீ ஏன் அப்படி சொன்னன்னு முதல்ல சொல்லு"

"அத இன்னும் உங்க புள்ளையே கேட்கல அத்த. விவாகரத்து பண்ணது அவரத்தான? இந்நேரம் வர ஏன் அப்படி சொன்னன்னு கேட்கல. முதல்ல அவர் கேட்கட்டும் அப்றம் எல்லாருக்கும் பதில் சொல்றேன் நானு"

"என்னடா சொல்லுதா இவ? அப்ப நா கேட்டா பதில் சொல்ல மாட்டாளாமா? பெரியவங்கன்னு நினைப்பு இருக்கான்னு பாத்தியா?" என்றார் நிலனிடம்.

"அத்த. நா காரணத்த அவங்கட்ட முதல்ல சொல்றேன்னு சொல்றேன். ஏன்னா இது வேற யார் மூலமாவும் அவங்களுக்கு தெரிஞ்சா தான் பிரச்சினை"

"அவன்ட்டயே கேட்காம நீ ஏன் முடிவெடுத்த?"

"ஏன்னா இது என் முடிவு. உங்க மகன் முடிவு என்னன்னு அவர் தான் இனி சொல்லணும்"

"ஏலே நிலா நா கரெக்ட்டா‌ தான கேட்கேன்? விவாகரத்துனா புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து தான எடுக்கணும்? இவ என்னவோ தனி வீட்ல வாழுதவளாட்டம் அவ‌ முடிவுங்கா?"

"மாமா கூட ஏதோ சண்டைன்னு நினைக்கிறேன் அத்த. மாமாவ வர சொல்லுங்க பிரச்சினை சரியாகிடும்" என்றான் நிலன்.

"உன் அக்காவையே அவனுக்கு ஃபோனப் போட்டு வரச் சொல்லச் சொல்லு. ஊரே பேச நாம நம்ம குடும்பத்து பேர நாறடிச்சுட்டு கிடக்க முடியாது. அவளையே ஃபோனப் போட சொல்லு"

"நா ட்வீட் போட்டதுக்கு அவர் இன்னும் என்ன ஏதுன்னு கூட பேசல நிலவா. அவர் எனக்கு பேசாம நானா கால் பண்ண மாட்டேன்"

"நேத்து நாங்க போட்ட எந்த காலையும் நீ எடுக்கலலடி?" என்றார் விசாலாட்சி.

"ஆமா அவர்ட்ட பேசாம உங்கட்ட பேச வேணாம்னு தான் எடுக்கல. ஃபர்ஸ்ட் அவர் என்ட்ட பேசட்டும்" என்றாள் பிடியை விடாமல்.

"சரி ஃபோன அப்றம் போடுவோம். அவன ஏதோ நடிகைக் கூட சேர்த்து வச்சுப் பேசுறாங்களே உண்மையா அது?" என்றார் அடுத்த கேள்வியாக.

"உங்க புள்ளைய நீங்களே அப்படிக் கேட்பீங்களா?" என்றாள் முகத்தைச் சுளித்து.

"ஊரையே கேட்க வச்சுருக்க‌ நீ? என் புள்ள பேரு அங்க அப்படி சீரழியிது. பொண்டாட்டி ஒதுங்கி நிக்கான்னா ஒன்னு புருஷன் மேல தப்பிருக்கணும், இல்ல அவ புருஷன தப்பா புரிஞ்சுருக்கணும். ரெண்டுல எது உண்மை?"

"உங்க புள்ளைய‌ எனக்கு புரியவே இல்ல அதான் உண்மை போதுமா?"

"அப்றம் என்னன்னுடி பத்து வருஷம் காதலிச்சு, பத்து வருஷம் குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளை வேற பெத்தீங்க?" என எரிச்சலாக கேட்க,

அந்த கேள்விக்கு அவளிடமும் பதில் இல்லை. 'இருபது வருடங்கள் ஒருவரை ஒருவர் என்னதான் தெரிந்து கொண்டோம்?' என அவள் யோசனையில் அமைதியாகிவிட, விசாலாட்சி மேலும் பொரிந்து கொண்டேதானிருந்தார்.

அவளை‌ப் பார்த்தவாறே, தன் மாமனான குஹனுக்கு அழைப்பெடுத்தான் நிலன். இப்போதும் அது ஏற்கப்படவில்லை. அடுத்ததாக ஹரிணிக்கு அழைத்தான்.

"குட்மார்னிங் மாமா!" என்றவள் குரலில் அவ்வளவு குதூகலம்.

"வீடியோ கால் வரவாடா?" என்றான் நிலன். அதில் அவனை அனைவரும் திரும்பிப் பார்க்க, அவன் பார்வை அவன் அக்காவிடம் தான்.

"ஓகே மாமா!" என ஹரிணி வைத்திருக்க, மீண்டும் காணொளி அழைப்பில் இணைந்தான் நிலன்.

நீச்சல் குளத்தில், தலையைக் ஸ்விம்மிங் கேப் கொண்டு கட்டியவாறு, நீரில் உடல் நனைந்த நிலையில் திண்டின் ஓரத்தில் ஃபோனை மட்டும் தண்ணீரை விட்டு தூக்கிப் பிடித்து, தெத்து பல் தெரிய பளிச்சென்று சிரித்து கை அசைத்தாள் ஹரிணி.

"ஸ்விம்மிங்கா ஹரிணி?"

"ஆமா மாமா. ஹாய் அப்பத்தா. மாமா வீட்டுக்கு வந்துருக்கீங்களா? கிருத்தி பாக்கவா?" என்றாள் திரையில் எட்டிப் பார்த்த விசாலாட்சியிடம்.

"ஆமா தங்கம். அவன கோயம்புத்தூர் கூட்டிட்டுப் போலாம்னு நானும் தாத்தாவும் வந்தோம். நீ ஈரத்துல ரொம்ப நிக்காத தங்கம். உடுப்ப‌ மாத்திட்டு கூப்பிடுதியா?" என்றார்.

"இப்பதான் வந்தோம் அப்பத்தா. ஒன்னவர் ஆகும். வெயிட் பண்ணுவீங்களா?" என்றாள் அவள்.

"அப்பா எங்கடா?" என்றான் நிலன்.

"அப்பா அதோ ஸ்விம்மிங்" என கைப்பேசியைத் திருப்பிக் காட்ட, தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தான் குஹன். அருகில் சிரித்தவாறு இரு பெண்கள் நீச்சல் உடையில் நீந்திக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு விசாலாட்சி வாயை நறநறவென அரைக்க, எட்டிப் பார்த்த காந்திமதி நெஞ்சில் கைவைத்து விட, நிலனும், விஸ்வநாதரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு எதிரில் இருந்த பௌர்ணமியைப் பார்த்தனர். நீள்விருக்கையில் சாய்ந்து அதன் கைப்பிடியில் நெற்றியைத் தாங்கி அமர்ந்திருந்தவள், அவர்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

"இதுக்குத்தான் சொன்னேன். பாத்தியா என்ன பண்றாம்னு பாத்தியா?" என்றார் விசாலாட்சி.

"இதுக்கு என் அக்கா தான் டென்ஷன் ஆகணும். இறுக்கி முந்தானைலயே முடிஞ்சு வைக்க அவரு என்ன அஞ்சு வயசு குழந்தையா?" என்றான் நிலனும்.

"யாத்தே அப்ப என் பொண்ணு வாழ்க்கை?" என காந்திமதி அழவே துவங்கிவிட்டார்.

"ம்மா. என்னாகிடுச்சு இப்போ? நல்லாத்தானே இருக்கேன் நான்? அத்த பேசுறதுக்குலாம் அழாத நீ" என அதட்டியவளிடம்,

"உண்மைய சொல்லுக்கா. இப்பதான் பிரிஞ்சீங்களா? இல்ல எப்பவோ பிரிஞ்சுட்டு இப்பதான் வெளில சொல்றீங்களா?" என்றான் நிலன்.

"உனக்கும் என்னடா இப்ப?" என்றாள் அவனிடமும் காட்டமாக.

"இங்க பாரு மாமா போஸ் குடுக்குறத" என நிலன் திருப்பி அவள் முன் அலைபேசியை நீட்ட,

அந்நேரம் அவளுக்கு அலைபேசியில் அவள் உதவியாளர் நந்தினியிடமிருந்து அழைப்பு‌ வர, "சொல்லு நந்தினி?" என ஏற்றிருந்தாள்.

"இங்க வா பாப்பா. எவ்வளவு நேரம்?" என அங்கு குஹன் ஹரிணியை அழைத்திருக்க,

"ப்பா மாமா ஃபோன். அப்பத்தா, ஆச்சி, அம்மா எல்லாரும் ஆன் லைன்" என தண்ணீருக்குள் அவனை நோக்கி நடந்து வந்து அவன் முகம் முன் நீட்டி விட்டாள்.

இந்தப்பக்கம் காதில் ஃபோனை வைத்தவாறு பௌர்ணமி இருக்க, அந்தப்பக்கம் நீரின் நடுவில், மேலாடை இன்றி வெறும் பாக்ஸரோடு இருபக்கமும் பெண்கள் நிற்க நின்றான் குஹன். அந்த இரு பெண்களும் ஹரிணிக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்க வந்தவர்கள் என்பது சேலத்தில் இருந்த ஒருவருக்கும் தெரியாது என்பது அவனுக்கு தெரியாது.

ஆனாலும் மனைவி கண்களில் இருந்த ஜ்வாலையில் புருவம் சுருக்கி மெல்ல கைப்பேசி பின் நின்ற மகளைப் பார்த்தவனுக்கு அருகில் நின்ற இரு பெண்களும் பார்வையில் விழ, புரிந்து கொண்டவனாக மீண்டும் மனைவியிடமே பார்வையைக் கொண்டு வந்தவன் திமிராகத் தான் பார்த்தான்.

"டிவோர்ஸ்னு முடிவு பண்ணப்றம் சம்பந்தப்பட்டவங்க சுதந்திரத்துல தலையிடக் கூடாது இல்லையா நிலவா?" என்றவள், "நந்தினி! ஈவன்ட் ஆர்கனைஸர பாத்து கேட்லாக் குடுத்தியா இல்லையா?" என குரலில் அவளை அதட்டியவாறு விலகி எழுந்து வெளியே வந்துவிட்டாள்.
 

Mathykarthy

Well-known member
விசாலம் நிலவன் convo 😂😂😂

ரெண்டும் வீம்பு பிடிச்சதுங்க 🤭🤭🤭

வேணும்ன்னே வெறுப்பேத்துறான் 🤣
 
Top