எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 3

zeenath

Active member

அத்தியாயம் 3

அண்ணன் மகளின் பதிலில் அதிர்வாகச் சில நொடிகள் நின்ற நிவிதா,

"என்னடி சொல்ற? நடக்காத கல்யாணமா? "

எனக் கேட்டதையே திரும்பக் கேட்க,

"ஆமா அத்தை எனக்கு அப்படி தான் தோணுது"

என்றாள் இவளும் சஞ்சலமாக,

"உனக்கு ஏன் அப்படி தோணுது?"

"இல்ல அத்தை, ஏனோ அவரும் சரியா பேச மாட்டேங்கிறாரு, நானே ரெண்டு முறை பேச முயற்சி செய்தேன், அப்பவும் சரியான பதில் சொல்ல மாட்டேங்குறாரு, நான் கேக்குறதுக்கு பதில் சொல்றாரு, என்னைப் பத்தி எதுவும் கேட்கல, சரி தான் அவருக்கு ஏற்கனவே என்னைப் பத்தி தெரியும்னு நானே நினைச்சுகிட்டேன், இருந்தாலும் பேசும்போது ஒரு ஆர்வமோ? ஆசையோ? அவருக்கு இருக்கிற மாதிரி தெரியல, எனக்கு ஏதோ மனசுக்குள்ள சஞ்சலமாக இருக்கு, இந்தக் கல்யாணம் சரி வராது அப்படின்னு"

என்று கூறியவளிடம்,

"அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, நீ மனசை போட்டுக் குழப்பிக்காத, நான் வேணா அந்தப் பையனுக்குப் போன் பண்ணி பேசிப் பார்க்கவா?

"வேணாம் த்தை, வேணாம், வேணாம்"

என்றாள் வேகமாக, பின் பெருமூச்சை இழுத்து விட்டவளாக.

"நடக்கிற படி நடக்கட்டும், விடு!"

என்றவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவளுக்கு என்ன சொல்லுவது என்பதே புரியாத நிலை.

"உனக்குப் பிடிச்சிருக்கு தானே! நீ விருப்பப்பட்டு தானே சம்மதிச்சே"

எனக் கேட்டவரிடம்.

"எனக்குப் பிடிச்சிருக்கு! பிடிக்கல! அப்படி எதுவும் தோணல அத்தை, தாத்தா என்கிட்ட கேட்டாங்க அதனால நான் சரின்னு சொன்னேன்"

என்றவளை ஆயாசமாகப் பார்த்தவள்.

"அவங்க கேட்டாங்க டி, ஆனா உனக்குப் பிடிச்சிருக்கா? இல்லையா?"

"அப்படி எனக்கு எதுவும் தோணலையே"

எனப் பாவமாகக் கூறியவளிடம்,

"அப்போ எந்தத் தைரியத்தில் நீ சரின்னு சொன்ன?"

எனக்குக் கோவமாக கேட்டவரிடம்

"வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, அதனால எனக்குச் சரின்னு தோணுச்சு, விடு அத்தை பார்த்துக்கலாம், இப்ப என்ன?"

என்றபடி கண் சிமிட்டி சிரித்தவளை பார்த்தவளுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது, இது எங்கே சென்று முடியுமோ என்று.

அத்தையின் பயந்த முகம் பார்த்தவள் தன் சஞ்சலத்தை அவருக்கும் ஏற்றி விட்டதை உணர்ந்து,

"நீ ஒன்னும் பயப்படாத அத்த, அதெல்லாம் நான் சூப்பரா வாழ்வேன்! கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும்"

என அவருக்கு மட்டும் அல்லாமல் தனக்குமே தைரியத்தை கூறிக் கொண்டாள்.

மனதில் பலம் ஏற்பட்ட அதே நேரம் பலவீனமும் ஏற்பட்டது அத்தைக்கு காட்டாமல் அதைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டாள்.

அகிலா வந்து, சாப்பிடுவதற்கு பாட்டி அழைப்பதாகக் கூறியபோது தான் சுயம் உணர்ந்தார்கள் இருவரும், இவர்கள் இருவரும் கீழ இறங்கி செல்ல அங்கு அரிசி மில்லில் இருந்தும் சர்க்கரை ஆலையில் இருந்தும் அப்பாவும் இரு அண்ணன்களும் வந்ததைப் பார்த்த நிகிதா அவர்கள் அருகே செல்ல அவர் பின்னோடு வந்து கொண்டிருந்த வினிக்கா அத்தையின் கைபிடித்து இழுத்து,

" எதையாவது உளறி வைக்காத அத்த"

என்றாள் அவசரமாக,

"எல்லாம் தெரியும் டி வா"

எனத் தந்தையை நோக்கிச் செல்ல இருந்தவளை, அவரே எதிர்கொண்டு வந்து

" வாம்மா"

என்றபடி தலையசைத்து டைனிங் டேபில் நோக்கிச் சென்றார்.

அவர் பின்னோடு சென்ற தன் வாரிசான இரு பெண்களையும் தன் இரு அருகிலும் அமர்த்திக் கொண்டு அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு, தனக்கு பரிமாற மனைவியைக் கண்களால் அழைக்க,

"ம்கும்ம் பேத்திக்கும், மகளுக்கும் பரிமாறினவருக்கு, தனக்கு பரிமாறிக்க தெரியாது"

என நொடித்துக் கொண்டே கணவனுக்குப் பரிமாறினார் சிவகாமி.

இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மகன்கள் இருவரும் தங்களுக்கு பரிமாற வந்த மனைவிகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இவர்களோடு சாப்பிட அமர்ந்த அகிலாவும்,

"என்ன ஒரே இருட்டா இருக்கு?"

என அவளின் கேள்வியில்,

" என்னடி இருட்டா இருக்குங்குற! பட்ட பகல்ல, நல்ல வெளிச்சமா தானே இருக்கு...இன்னும் வெளிச்சம் வேணுமாக்கும் உனக்கு, ஏம்மா சின்னவள, அந்த விளக்கைக் கொஞ்சம் பத்தி விடுமா"என

"ஆமா பாட்டி, இங்க பாருங்க, டேபிள்ல, சாம்பார்,ரசம்,பொரியல், கூட்டு, தயிர் என்று ஒரே இருட்டா இருக்கு, சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டுன்னு வெளிச்சமா ஒண்ணுமே இல்லையே"

என்றாள் சோர்வாக.

இவளின் பதிலில் வெடித்து சிரித்தார்கள் ஆண்கள்.

பெண்களும் தங்கள் சிரிப்பை அடக்கிக் கொள்ள.

"அடிப்போக்கத்தவள! இதத்தான் வெளிச்சமா இல்லங்குறியா நீ"

என்றபடி அவள் தலையில் குட்டியவர்,

"அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் கறி, மீன் கவுச்சி சேக்க கூடாது"என்றார் கராராக.

குட்டியதில் தலையைத் தடவிக் கொண்டவள்

"முட்டை சாப்பிடலாம், அதுதான் இப்ப வெஜிடேரியன் ஆக்கிட்டாங்கல்ல?"

என்ற இவளின் வாதத்தில் சிரித்த நிவிதா,

"ஹேய் சாப்பிடு டி! சும்மா வம்பு வளர்க்காம"என, அத்தையின் பேச்சுக்கு மறு வார்த்தை பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள் அகிலா.

"பத்தியா இந்தச் சின்னதை, இவ்வளவு நேரம் என் கிட்ட வழக்காடிட்டு அத்தகாரி சொன்னவுடனே அமைதியா சாப்பிடுறதை"

எனப் பெரிய மருமகளிடம் குசு குசுத்தவர்.

பேத்தியின் அருகில் வந்து இன்னும் கொஞ்சம் அவள் தட்டில் பொரியலை வைக்க, அவரை முறைத்துக் கொண்டே உண்டவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து முன் அறையில் சென்று அமரப் பெண்களும் சாப்பிட்டு முடித்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டனர்,

எப்பொழுதும் போலப் பாட்டியே முதலில் ஆரம்பித்தார்,

"என்னப்பா பெரியவனே, எல்லா வேலையும் சிறப்பா நடக்குதா?"

"ஆமாமா எல்லாம் போய்கிட்டு இருக்கு "

"ஏம்பா அந்தச் சாப்பாட்டுல இன்னும் ரெண்டு மூணு வகைகள் சேக்கணும்னு சொன்னிங்களே, சமையல்காரர் கிட்ட சொல்லிட்டீங்களா?" எனத் தாத்தா கேட்க,

"ஆமாம்பா சொல்லிட்டோம்"

என்றார் சின்னவர்,

சாப்பாடு என்றதும் ஆர்வத்துடன் அருகில் வந்த அகிலா, "என்ன எல்லாம் லிஸ்ட்ல இருக்கு அப்பா எனக் கேட்க..?"

"எல்லாமே இருக்குமா, உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு? அதையும் சேர்த்துடலாம் மெனுல"

என்ற பெரிய தந்தையை பார்த்தவள்.

"பறக்கிறது, குதிக்கிறது, ஓடறது எல்லாம் இருக்கா?"

"அது என்னடி? பறக்கிறது, ஓடுறது, குதிக்கிறது!"

"அதான் பாட்டி, இந்த ஆடு, கோழி, மீன் இப்படி"

"அடியே இப்ப தானே, சொன்னேன் கவுச்சி ஆகாதுன்னு"

"ஐயோ போங்க பாட்டி, இப்படித்தான் என் ஃப்ரெண்டோட அக்கா கல்யாணத்துல மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, பெரிய பெரிய மீன் வருவல் எல்லாம் வச்சிருந்தாங்க தெரியுமா, அவ்வளவு சூப்பரா இருந்துச்சு, நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் போய்ச் செம கட்டு கட்டுனோம்"

"அடியாத்தி! என்னடி சொல்ற? கல்யாணத்துலயா இப்படி அசைவம் போட்டாங்க? இது எங்கேயாவது நடக்குமா டி"

என்ற படியே மூக்கில் விரல் வைத்து அதிசயிக்க

"ஆமாம் பாட்டி, ஊரே வந்து கொண்டாடி சாப்பிட்டு போனாங்க தெரியுமா!"

"அடப்பாவமே ஒருத்தர் கூடவா சொல்லல, கல்யாணத்துல அசைவம் சேர்க்க கூடாதுன்னு"

"அது எப்படி சொல்லுவாங்க..?. அது என் ஃப்ரெண்ட் பானு விட்டுக் கல்யாணம் ஆச்சே"

"பானு வா? அடியே! அந்த முஸ்லிம் பொண்ணு அந்தப் பிள்ளை வீட்டு கல்யாணத்தை பத்தியா சொல்ற, அவங்க வீட்ல அசைவம் போடலனா தான டி அதிசயம்,

போடி போக்கத்தவளே"

என்ற படியே முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு திரும்ப, இவர்களின் சம்பாஷனை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.

"அடடே..! என்ன ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு..?" எனக் கேட்ட படியே உள் நுழைந்தார்கள் மோகனின் தாய் ரஞ்சிதம் மற்றும் தந்தை அண்ணாமலை...

அண்ணன், அண்ணியை கண்டதும் மகிழ்வுடன் எழுந்த பார்கவி இன்முகத்துடனேயே வரவேற்றாலும்

'இப்போது இவர்கள் வந்ததற்கான காரணம் என்ன?' என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது அவர் மனதில்.

வீட்டின் வருங்கால சம்பந்திகளை வரவேற்கும் விதமாகத் தாதா செல்லதுரை முன் வந்து,

" வாங்க! வாங்க! உள்ள வாங்க! நல்லா இருக்கீங்களா?

என வரவேற்க, அவரைத் தொடர்ந்து மருது பாண்டியும், முத்துப்பாண்டியும் சிவகாமி பாட்டியும், சுசிலாவும், நிவிதாவும் முறையே வரவேற்றார்கள்.

இவர்களோடு ரஞ்சிதத்தின் அண்ணா அவரின் மனைவியும் அக்கா மற்றும் அவரின் கணவரும் வந்திருந்தார்கள்.

இவர்கள் வருவதைப் பார்த்த நிவிதா அண்ணன் மகள் வினிகாவுக்கு கண் காட்ட, அகிலாவையும் இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள் அவள்.

வந்தவர்களைப் பெண்கள் உபசரிக்க,

ஆண்கள் அனைவரும் சோபாவில் உட்கார பெண்கள் மூவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

பார்க்கவின் எண்ணத்திற்கு தப்பாமல் ஆரம்பித்தார் ரஞ்சிதத்தின் அண்ணி,

"என்னம்மா? கல்யாண வேலை எல்லாம் நல்லபடியா போகுதா?

பொண்ணுக்கு நகை எல்லாம் செஞ்சாச்சா?

என்ற படியே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

இவர்களின் வசதி அறிந்து பெண்ணுக்கு எவ்வளவு நகை போடப் போகிறார்கள் சீர்வரிசை என்ன தரப் போகிறார்கள் என எந்தக் கேள்வியும் கேட்காமல், சம்பந்தம் அமைந்ததே பெரிது என அனைத்துக்கும் ஒப்புக்கொண்ட ரஞ்சிதத்திற்கு இப்போது மெதுவாக, என்னென்ன செய்வார்களோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை கேட்டறிந்துக் கொள்ள தன் அன்னியையும் அக்காவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். சம்பிரதாயம் எனக் கனவனிடம் கூறிவிட்டு.

பார்கவிக்கு தன் அண்ணியின் புத்தி தெரிந்ததால் அவ்வளவு கோபம் வந்தது.

துடுக்காகப் பேச முனைந்தவரின் கைகளைப் பிடித்து அமைதியாக இருக்கும் படி கண்ணைக் காட்டிய சுசீலா, அனைத்தும் தங்கள் மாமியார் பேசிக்கொள்வார் என்பது போல ஜாடை காட்டினார். அவரின் செயலால் அமைதி அடைந்த பார்க்கவியும் என்ன நடக்கிறது? என்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இவரின் ஆசைகளைப் பற்றி அவரின் அனுபவத்தால் ஏற்கனவே தெரிந்திருந்தது பாட்டிக்கு,

"என்னம்மா இப்படி கேட்டுட்ட? எங்க பேத்திக்கு எல்லாமே நாங்க நிறைவா தான் செய்வோம், நீங்க எதையுமே சந்தேகப்பட வேண்டாம், நீங்கக் கேட்கிற அளவுக்கு நாங்க எதையும் குறையா செய்திட மாட்டோம்"

என நறுக்கென்று பதில் கூற, எங்கே தன் பேச்சு வேறு விதத்தில் சென்று விடுமோ எனப் பயந்த ரஞ்சிதம்,

"அய்யய்யோ! அப்படிலாம் இல்லமா, எங்க அண்ணி எதார்த்தமா தான் கேக்குறாங்க"

என்றார் சமாளிப்பாக

"சரிதாமா அவங்க கேட்ட எதார்த்தத்துக்கு நானும் எதார்த்தமா தான் பதில் சொன்னேன்"

என்றார் இவரும் பொடி வைத்தே,

இதற்கு மேல் இருந்தால் வேறு எதுவும் பேச்சு வந்து விடுமோ எனப் பயந்த ரஞ்சிதம்

"சரிமா இந்தப் பக்கமா வந்தோம், அப்படியே பொண்ண பார்த்துட்டு போலாம்னு வந்தோம்"என்றவர்

"எங்கே எங்க வீட்டு மருமகளை காணோம்?"

எனக் கேட்க,

பார்க்கவியும் அண்ணியின் அந்தர்பல்ட்டியில் சிரித்தபடியே "இதோ நான் போய் அழைச்சிட்டு வரேன்!"

என்ற படியே வினிகாவின் அறையை நோக்கிச் சென்றார்.

வந்தவர்களை இரு கரம் கூப்பி வரவேற்று

"வாங்க"

என மெதுவாகக் கூறிய வினி தன் அத்தையின் அருகில் சென்று நின்று கொண்டாள். ஏனோ ரஞ்சிதத்தை கண்டால் மிகவும் பயந்து வந்தது பெண்ணுக்கு.

வந்தவளை தன் அருகில் அமர வைத்துச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்,

'இவளை வைத்துத் தான் தன் அந்தஸ்தும் அதிகாரமும் உயரப் போகிறது'

என மனதில் எண்ணி மகிழ்ந்த படி விடை பெற்றார்கள்.

தன் அறையில் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்த விஜயராகவனுக்கு மனது முழுவதும் வலி, வலி மட்டுமே,

மனதில் பதிந்து விட்டவளை மறக்க முடியுமா என்பது சந்தேகம் தைரியமாக நண்பனிடம் கூறிவிட்டு வந்துவிட்டாலும் ஏன் இப்படி என்று நினைக்காத நேரமில்லை அவன்.

காலதாமதம் செய்து விட்டோமோ? அவளிடம் தன் மனதை விருப்பத்தைக் கூறி இருக்கலாமோ? என மனதில் மருகியபடி படுத்திருந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து சென்று தலையணையை நனைத்தது.

அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாமென யோசிப்பது இனி எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லை என்ற உண்மை புரிப்பட, பெருமூச்செறிந்தபடி உறக்கம் கொள்ள முற்பட்டான்.

ஆனால் எங்கோ தூரம் சென்று விட்ட உறக்கத்தை கட்டி இழுக்க தான் முடியவில்லை அவனுக்கு.

 
Top